…எனும்போது அந்தப் பெருந் தத்துவத்தை சோழப் பேரரசின் வெளிப்பாடென எவ்வாறு கூற இயலும் என்ற கேள்வி எழுப்பப்படுவதுண்டு.
சோழப் பேரரசு வீழ்ந்து விஜயநகரப் பேரரசு எழுச்சியுறத் தொடங்கிய போது தான் இந்தப் பெரும் த த்துவம் முழு நிறைவாகத் தொடர் சந்தான குரவர்களால் விளக்கம்பெற்றது!
அது ஒருசில தசாப்த இடைவெளி உடையது; அவ்வாறு இருக்க இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே உச்ச நிலை நோக்கி சோழ சாம்ராச்சியத்தை விரிவுபடுத்தத் தொடங்கிய இராஜராஜ சோழனுடன் இந்தப் பெருந் தத்துவத்தை எப்படி முடிச்சுப்போட இயலும்?
‘பதி’ எனும் இறை வடிவே முழுமுதற் பரம்பொருள் என்பது சைவசித்தாந்தத்தின் அடிப்படை!
அந்தப் பதிக்கு வழங்கப்படும் அதியுயர் மேலாதிக்க இருப்பு பேரரசன் சமூகத்தில் வகிக்கும் சர்வவல்லமையை நிகர்த்தது!
சரி,
அதனை அப்போதோ அவர் மறைந்து இன்னும் பேரரசு விரிவாக்கம் பெற்றவாறு இருந்தபோதோ வெளிப்படுத்தி இருக்க வேண்டியதுதானே; தமிழரல்லாத (தெலுங்கு மொழி சார்ந்த) விஜயநகரப் பேரரசு எழுச்சி பெற்றபோது ஏன் வெளிப்படுத்த வேண்டும்?
இதற்கு அடிப்படையான இரண்டு காரணங்கள் உள்ளன:
1. பேரரசானது மிகுந்த ஆளுமையுடன் சமூகத்தினுள்ளேயும் பிறர் மீதும் நிலவுடைமையாளர்களான தமிழ் வெள்ளாளர் மேலாதிக்கம் பெற்றவாறு உச்ச நிலை அடைந்து கொண்டிருந்த போது அதனை நிலைநிறுத்த ஏற்ற கருத்தியலை வழங்கும் பிராமணரைத் தமக்குச் சமமான சமூக சக்தியாக்க வேண்டி இருந்தது.
குலோத்துங்க சோழன் காலத்துப் “பெரிய புராணத்தில்” தம்மிலும் மேலான ஆன்மீகப் புனிதம் உடையோராகப் பிராமணரைக் காட்டும் தேவை வெள்ளாளக் கவியான சேக்கிழாருக்கு இருந்தது.
பிராமண மேலாதிக்கம் ஓரிரு நூற்றாண்டுகளில் வலுப்பட்டுத் தாம் (கருவறைக்கு வெளியே நிறுத்தப்பட்டதைப்போல) ஆன்மீகத் தளத்தில் இரண்டாம் தரமாக ஆக்கப்பட்டமை உறைத்த போது தான்
பிராமணியத்தால் போற்றப்படும் பிரமத்திலும் மேலான கடவுளாக ‘பதி’ யை நிலைநிறுத்தும் அவசியம் வலுப்பட்டது.
பதியைக் கண்டு காட்ட பிராமணரல்ல, குருவே (குரு – பதியின் பிரதி) போதும்; அத்தகைய குருவாகிய சந்தான குரவர்கள் வெள்ளாளர்களாக இருந்தமை தற்செயலானதல்ல (தில்லைவாழ் அந்தணரான உமாபதி சிவாசாரியார் அந்தப் பட்டயத்தை விட்டொழித்து வெள்ளாளக் குரு வாயிலாக பதியை உணர்ந்து தெளிந்தார்).
2. வெள்ளாளருக்கான மேலாதிக்கத்தை விடவும் தெலுங்கு நிலவுடைமைச் சாதிக்கு விஜயநகரப் பேரரசின் ஆட்சியியல் மேலாதிக்கம் கூடுதல் அங்கீகாரத்தை வழங்கிய போது தெலுங்கு (ஐயங்கார்) பிராமணரது ஆதிக்கமும் வலுப்பட்டு இருந்தது. அத்தகைய சூழலில் வேத, வேதாந்தத்திலும் மேலான தமக்கான தத்துவத்தை உருவாக்கவும் அதற்கான மடங்களை உருவாக்கிப் பரவலாக்கவும் வேண்டி இருந்த போது சைவசித்தாந்தமும் ஆதீனங்களும் அவசியப்பட்டன!
பிராமண-வெள்ளாள (வேதாந்த-சைவசித்தாந்த) முரண் பகைமை சார்ந்தது அல்ல; நட்பு முரணாக ஐக்கியமும் போராட்டமும் என்பதாக இயங்கி வந்தன!
இரண்டும் இந்து சமயத்தின் கூறுகளே!
இராஜராஜ சோழன்
சைவனா,
இந்துவா
– (இல்லையில்லைத்) தமிழனா
என்பதான விவாதங்கூட இன்று எழுப்பப்படக் காண்கிறோம். வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து அணுகத் தவறி, இன்றைய சமூகத் தேவையில் அவரைப் பிளவாக்கம் செய்கிற கேள்விகள் இவை!
தமிழ் வெள்ளாள மேலாதிக்கம் மேலோங்க உழைத்த
அதற்கான கருத்தியலான சைவசித்தாந்தம் மேலெழ இடமளிக்கத்தக்கதான சைவநெறிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த
இவற்றை வலுப்படுத்த அவசியப்பட்ட சமூக-பண்பாட்டுத் தளமான பிராமணியத்துடன் ஒன்றுபடுதலை இறுக்கமுடையதாக ஆக்கிய
வரலாற்றுப் பாத்திரம்
இராஜராஜ சோழன்!
அவர்
தமிழன்,
சைவன்,
இந்து சமயி!
இந்து சமயம் பற்றிய தெளிவீனத்துடன் தலித்திய, திராவிடரியச் சிந்தனையாளர்கள் இன்று இயங்கிக்கொண்டு இருக்கின்றனர். தமக்கான பிளவாக்கச் சிந்தனையுடன் இராஜராஜ சோழனைக் காணும்போது
தமிழனா, சைவனா, இந்துவா என்று கூறுபோடுகின்றனர்;
அல்லது, பிராமணியத்துக்கு அதீத இடங்கொடுத்த குற்றச் சாட்டில் கர்ணகடூரமாகத் தாக்குகின்றனர்.
அன்றைய வரலாற்று முன்னெடுப்பில்
மேலாதிக்கத் திணை அரசியல்
அவசியத்துடன்
அனைத்து சக்திகளையும் ஒன்றுபடுத்தித் தலைமைதாங்கி வலுமிக்க வரலாற்றைப் படைத்த தலைவர் இராஜராஜ சோழன்!
பிரமணிய (இந்து) மேலாதிக்கத்தை எதிர்க்கிறோம் என முனையும் திராவிட, தலித் அணியினர்
தமக்கான மேலாதிக்க நாட்டம் காரணமாக பிராமண (இந்து மத) எதிர்ப்பை முதன்மையாக்கிப் பிளவாக்கும் சிந்தனைக்கு ஆட்படுகின்றனர்.
இந்துமதம் என்பது வேறெந்தச் சமயங்களில் இருந்தும் வேறுபட்டது; முரணபட்ட பலதையும் ஒன்றுபடுத்தும் ஆற்றல் உடையது.
சைவருக்கு சிவன்,
வைணவருக்கு விஷ்ணு,
சாக்தருக்கு சக்தி
இவற்றை விடவும் நாட்டார் வழிபாடே பெரும்பான்மை மக்களுக்கானது
– என்றால்,
இவற்றை எல்லாம் இணைத்து இயங்குவது இந்துமதம்!
ஒரு பரம்பொருளும் (சிவன், விஷ்ணு, சக்தி, குலதெய்வம்)
அதற்குக் கட்டுப்பட்டு இயங்கும் பரிவாரத் தெய்வங்களும்
என்பதாக இயங்குவதே இந்து மதம்!
(இவற்றுக்கும் முந்திய இயற்கை வழிபாட்டையும் அது தன்வசப்படுத்தும்).
இதற்கான வடிவத்தைக் கடவுளின் பூலோகப் பிரதிநிதியாகத் தன்னைக் கருதும் வகையில் இயங்கிய இராஜராஜ சோழன்
மேலாதிக்கத் திணை அரசியலின் மிகச் சிறந்த பிரதிநிதி!
அந்த வரலாற்றைக் கற்று,
அனைத்து மேலாதிக்கங்களையும்
தகர்த்துச் சமத்துவ சமூகம்
படைக்கும்
விடுதலைத் திணை அரசியல்
கோட்பாட்டைக்
கண்டடைவோம்!


Leave a comment