எண்பதாம் ஆண்டுகளில் எழுத்துச் செயற்பாட்டைத் தொடங்கி இருந்தேன். ஒரு நிலைமாறு கட்டத்துக்கு உரிய தசாப்தமாக அது இருந்தது. முன்னதாக, இடதுசாரி இயக்கம் எழுச்சி பெற்று இயங்கிய அறுபதாம்-எழுபதாம் ஆண்டுகளின் அனுபவச் செழுமைகளை உள்வாங்கியவாறு (1974 முதல் கொம்யூனிஸ்ட் கட்சிஉறுப்பினராகச்) செயற்பட்ட எட்டு வருடங்களின் அரசியல் புரிந்துணர்வுடன் 1982 இன் “அரசியல் இலக்கியமும் பாரதியும்” எனும் முதல் எழுத்துருவை வெளிப்படுத்தினேன்; அந்த ஆக்கத்தை நெறிப்படுத்தியவரான பேராசிரியர் க. கைலாசபதி, எனது அரசியல் வழிகாட்டியாக அமைந்த தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் ஆகியோர் பணித்தத்தன் பேரில் எனது முதல் நூலாக “பாரதியின் மெயஞ்ஞானம்” எழுதப்பட்டு 1986 இல் சென்னை புக்ஸ் (பின்னர் சவுத் விஷன்) பாலாஜி வாயிலாக வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்துக்கு உட்பட்ட சமூக – பண்பாட்டு – அரசியல் களங்களின் செயற்பாட்டு அனுபவத்துடன் மலையக மண்ணில் விஞ்ஞானப் பாட ஆசிரியராக 1977 ஆம் ஆண்டு முதல் இயங்கிய பின்னர் தமிழின் முதல் தேசிய கல்வியியல் கல்லூரி தொடங்கப்பட்ட பத்தனை (கொட்டகலை) இல் 1992 தொடக்கம் விரிவுரையாளராகச் செயற்படலானேன். அந்த வருடத்தில் எனக்கு அறிமுகமானவர் தோழர் லெனின் மதிவானம். மார்க்சியரான தந்தை தனக்கு இட்ட பெயர் காரணமாக லெனின் பற்றியும் லெனினுடைய ஆக்கங்களையும் ஆழ்ந்து கற்றதன் தொடர்ச்சியாக மாஓ சேதுங் சிந்தனையை வரித்துக் கொண்டார்; தந்தையின் நண்பர்களான (தோழர்களான) இளஞ்செழியன், செ. கணேசலிங்கம் போன்றோருடனான ஊடாட்டம் காரணமாக பேராசிரியர் க. கைலாசபதியை நுணுகிப் படிக்கும் ஆர்வம் நோக்கி லெனின் மதிவானம் ஆற்றுப்படுத்தப்பட்டார். இவற்றின் நீட்சி பாரதியை ஆழ்ந்து கற்கவும் சீனப் புரட்சியைத் தொடர்ந்த புத்துலகச் செல்நெறி குறித்து ஆர்வத்துடன் தேடல்களை மேற்கொள்ளவும் தூண்டின. சீன மக்களின் சோசலிச முன்னெடுப்பு, மாஓ சேதுங் சிந்தனை, தமிழியலில் க. கைலாசபதியின் அணுகுமுறைக்கு உரிய அடித்தளம், பாரதியம் என்பவற்றுடன் மலையகத்தில் இயங்குபவனாக என்னை அறிந்து கொண்டவர் என்னுடன் ஏற்படுத்திக்கொண்ட கலை – இலக்கிய – ஆய்வியல் ஊடாட்டங்கள் பண்பாட்டுச் செயற்தளத்துக்கு உரியது என்பதையும் கடந்து மிக நெருக்கமான குடும்ப உறவாக விருத்தியாவதற்கு அவரை உந்தின. இடதுசாரியம் இறங்கு தசையடையத் தொடங்கி உலகமயமாதலின் பேரால காப்பிரேட் ஏகாதிபத்தியம் நவ காலனித்துவ நாடுகளான எமது தேசங்களை வேட்டைக்காடாக ஆக்கி ஒட்டச் சுரண்டிய சகாப்தத்தில் லெனின் மதிவானத்தின் எழுத்து முயற்சிகள் வேகம் கொள்ளத் தொடங்கின.
முன்னதாக மார்க்சிய ஆய்வு நெறியை வரித்தவர்களாகத் தமிழிலக்கியப் பரப்பில் செயற்பட்ட சிலர் புதிய மாற்றங்களை உள்வாங்க வேண்டும் எனக் கூறியவாறு தலித்திய வாதம், பெண்ணிய வாதம், குறுந்தேசிய வாதம் என்பவற்றில் மூழ்கித் தடம் புரண்டபோது ‘புதிய மதம்மாறிகளின்’ மார்க்சிய விலகலுக்கான பக்கங்களைத் தயவுதாட்சண்யம் இன்றி வெளிப்படுத்துவனவாக அவரது திறனாய்வியல் அமைந்திருந்தது. உலக, தேசிய, தமிழிலக்கியத் தளங்களின் செல்நெறிகளில் ஏற்பட்டவாறு இருந்த மாற்றங்களுக்கு உரிய காலச் சூழலிலும் மார்க்சிய அடிப்படை நிலைப்பாட்டைப் புதிய கோணங்களில் வெளிப்படுத்தும் கருத்துருவாக்கங்களைத் தொடர்ந்தும் முன்வைத்து வந்ததைப்போலத் தனது சொந்த மண்ணுக்குரிய சரியான மார்க்கம் குறித்த தெளிந்த பார்வையையும் வகுத்து வழங்குபவராக லெனின் மதிவானம் இயங்கி வந்தார்.
புதிய மிலேனியத்தில் தீவிரமாக எழுதி வந்த இளைய தலைமுறைப் படைப்பாளிகள் மத்தியில் வெளிப்பட்ட மக்கள் நலநாட்டமற்ற குணாம்சத்தை அதன்போது சுட்டிக் காட்டுகிறவராகவும் இருந்துள்ளார். மலையக மக்களுக்கான குடியுரிமை எண்பதாம் ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முழுமைபெற்ற சமூகப் படையாக்கம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து எழுச்சி பெற்ற புதிய மத்தியதர வர்க்கத்துக்கு உரியவர்களாக அந்த இளைய தலைமுறைப் படைப்பாளிகள் இருந்தனர்; எண்பதுகள் வரையான மலையகப் படைப்பாளிகள், முன்னர் வாய்க்கப்பெற்ற மிகச் சிறுதொகையான மத்தியதர வர்க்கக் குடும்பங்களில் இருந்து வந்த போதிலும் மிகப் பெரும்பான்மையினரான பெருந்தோட்டத்துறை மக்களையே பெரும்பாலும் தமக்கான அடித்தளமாக அமைத்துக்கொண்டனர். தோட்டத் தொழிலாளர்களது வாழ்க்கைக் கோலங்கள் சார்ந்த விமரிசனபூர்வமான கருத்துகளை வெளிப்படுத்த நேர்ந்த சந்தர்ப்பங்களில் கூட அவர்களது போர்க்குணமிக்க பக்கங்களைக் கவனத்தில் கொள்பவர்களாக முந்திய தலைமுறை எழுத்தாளர்கள் பெரும்பாலும் இருந்துள்ளனர். மலையகத்துக்கான தனித்துவப் பண்பாக அந்த அம்சம் இருந்து வந்தது!
குடியுரிமை பெற்ற பின்னர் மத்தியதர வர்க்க வாழ்நிலைக்குப் பலரும் மாற்றம்பெற இயலுமான சூழலில் மலையக மண்ணிலேயே தமக்கான அடித்தளங்களை அமைத்துக்கொள்ளக்கூடிய சமூக கட்டமைப்புகளைக் கட்டியெழுப்ப வேண்டியவர்களாகப் புதிய மலையகப் புத்திஜீவிகள் இருந்தனர். காடழித்துப் பாதைகள் அமைத்துப் பெருந்தோட்டத்துறையை உருவாக்கிய முதல் தலைமுறையினர் போல தமக்கான மத்தியதர வர்க்க வாழ்நலையை இந்த நான்காம் தலைமுறையினரும் தாமே தான் உருவாக்க வேண்டி இருந்தது. அதன் விளைவாகத் தோட்டத் தொழிலாளர்களான பெற்றோர்களது நலன்களை விடவும் தமக்கான கோரிக்கைகளையே முனைப்புடன் வெளிப்படுத்துகிறவர்களாக இருந்தனர். இருப்பினும், மலையக மக்களின் பலமான பக்கங்களை விட்டு விலகி மத்தியதர வர்க்கச் சிந்தனைச் சிதைவுகளுக்கு ஆட்படாதவாறு நெறிப்படுத்தும் தேவை இருந்த சூழலில் அவர்களது பிரதிநிதிகளாக வெளிப்பட்ட படைப்பாளிகளின் பலவீனமான பக்கங்களைத் தொட்டுக்காட்டும் அவசியங்கள் இருந்தன; மலையகத்தின் முன்னோடிப் படைப்பாளிகள், விமரிசகர்கள் பலரும் இந்தப் பணியை மேற்கொண்டு வந்த சூழலில் லெனின் மதிவானமும் அதனைச் சிறப்பாக மேற்கொண்டார். இந்த விடயத்தில் அவரது கருத்துரைகள் மிகக் காத்திரமானவையாக அமைந்தன.
புதிய வாழ்நிலை வலுப்பட்ட பின்னர் இந்த மூளை உழைப்பாளர் குடும்பங்கள் மத்தியிலிருந்து உருவாகும் அடுத்தடுத்த தலைமுறையினர் தமது முன்னோடிகளான மலையக மக்களின் பலமான பக்கங்களைத் தமது பெற்றோர்களைக் காட்டிலும் மிக அதிகளவில் கையேற்பவர்களாக வெளிப்படுவர். மிக மோசமாக வஞ்சிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு நாதியற்றவர்களாகச் சுரண்டப்பட்ட மலைகத் தொழிலாளர்களின் விட்டுக்கொடுப்பற்ற போராட்டங்கள் வாயிலாகவே தமக்கான வழ்வாதாரங்கள் சாத்தியப்பட்டன எனக் காணும் வகையில் விடுதலைத் தேசிய விழிப்புணர்வு மேலெழத்தக்க நிலைமாறு கட்டம் இப்போது ஏற்படத் தொடங்கி உள்ளது.
மலையக மக்களைத் தாம் வஞ்சித்ததுடன் சுதந்திர இலங்கையின் பேரினவாத சக்திகளும் துரோகமிழைக்க ஏற்ற வெளிகளை ஏற்படுத்திச் சென்ற பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத் தலைமையைக் கையகப்படுத்தி இருந்த ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியம் நேற்று வரை முதல் நிலை வல்லரசாகக் கோலோச்ச இயலுமாயிற்று; அதன் போட்டியாளராகச் சமவலுவுடன் இயங்கிய சோவியத் ருஷ்யா 1991 ஆம் ஆண்டில் தகர்ந்து போன பின்னர் மேற்கொள்ளப்பட்ட உலகமயமாதலின் முனைப்பில் நவகாலனித்துவ நாடுகளை வற்றடித்துச் சுரண்டிய வாய்ப்பு இப்போது கைநழுவிச் செல்கிறது. சோசலிசத்தைக் கைவிட்ட பின்னர் படுபாதாளம் நோக்கி வீழ்ந்த ருஷ்யா இன்று மீட்சிபெற்று எழுந்து அமெரிக்க டொலரின் உலக ஆதிக்கத்துக்கு முடிவுகட்டத் தொடங்கி உள்ளது. அதைவிடவும் முன்னாள் காலனித்துவச் சுரண்டலுக்கு ஆட்பட்டிருந்த நாடுகளான சீனாவும் இந்தியாவும் பொருளுற்பத்தி – ஏற்றுமதி என்பவற்றில் முன்னேற்றம் அடைந்துவிட்ட சூழலில் உலகமயத்தை முடித்து வைத்துவிடரவேண்டுமென ஐக்கிய அமெரிக்கா அபாய எச்சரிக்கை எழுப்பும் நிலை; பொருளாதார உறவில் அதனது தேச எல்லைகளை மூடும் எத்தனிப்பில் இன்று ஐக்கிய அமெரிக்கா!
தமது அரசியல் – பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க உதவுமெனக் கருதி ஏகாதிபத்திய அணி (திணை) தொடக்கிவைத்த உக்ரேன் – ருஷ்ய யுத்தம், இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான பலஸ்தீன மக்களின் விடுதலைப் போர் என்பன ஐக்கிய அமெரிக்காவின் உலகத் தலைமையைத் தகர்த்து முன்னர் ஒடுக்கப்பட்டு இருந்த சீனா, இந்தியா, ருஷ்யா போன்ற நாடுகளை வளர்ச்சி பெற்ற வல்லரசுகளாக முன்னிலைப்படுத்தி வருகின்றன. இந்த மூன்று நாடுகளில் ஒன்றோ அல்லது வேறொரு வல்லரசோ ஒற்றை மேலாதிக்க வாய்ப்பைக் கையகப்படுத்தும் சூழல் இப்போது இல்லை. டொலரைப் பரிவர்த்தனை மைய ஊடகமாக ஆக்கிக்கொண்ட அரசியல் – பொருளாதார வாய்ப்புடன் ஐக்கிய அமெரிக்கா மேற்கொண்டு வந்த மோசடிகளில் இருந்து உலக நாடுகள் பாடம் கற்றுக் கொண்டுள்ளன. மேலாதிக்கத்தின் முதல் நிலையை ஏகாதிபத்தியத் திணையின் தலைமைக் கேந்திரமான ஐக்கிய அமெரிக்கா ஓரிரு ஆண்டுகளில் பூரணமாக இழந்துவிடவுள்ளது; அதன் பின்னர் பன்முகப்பட்ட உலக மையங்கள் சாத்தியப்படும்; தேசங்கள் இடையே சுதந்திரமானதும் ஓரளவு சமநிலைப்பட்டதுமான ஊடாட்டத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் சாத்தியங்களே மேலோங்கி வருகின்றன!
இவ்வகையில் உலகச் சமநிலை மாற்றம் ஏற்படத் தொடங்கி விடுதலைத் தேசிய உணர்வுகள் மென்மேலும் வலுப்படவுள்ள இன்றைய சூழலில் என்னோடு உடன் இயங்குபவராகச் செயற்பட்டு வந்த தோழர் லெனின் மதிவானம் இல்லை என்பது மிகப்பெரும் துயர். நம்பிக்கை வறட்சிகள் நிலவிய காலத்திலேயே மிகுந்த உற்சாகத்துடன் இயங்கியவர் இன்றைய மாறிவரும் எழுச்சிக்கு உரிய சூழலில் எத்தகைய வலுவுடன் செயற்பட்டு இருப்பார் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட பேராற்றல்!
அவருடைய செயல் வேகத்தையும் உள் வாங்கியவர்களாக எதிர் காலத் தேவைகளை இனங்கண்டு இயங்க முற்படுவோம். இதுவரை இயக்கம் கொண்ட வரலாற்றுத் தொடர்ச்சியே நாளைக்கு உரிய பணியின் பரிமாணங்களை வடிவப்படுத்தும் என்ற வகையில் அவை குறித்து அலசிய பின்னர் இன்றைய இருப்பை மதிப்பிட்டு அவற்றின் திசைமுகப்படுத்தலுடன் எதிர்காலப் பாதை குறித்த தேடலை மேற்கொள்வோம்!
ஏகாதிபத்திய எதிர்ப்பு
நவீன தமிழ் இலக்கியத் தொடக்குனராக சுப்பிரமணிய பாரதி முன்னிறுத்தப்படுகிறார். அதற்குரிய அடிப்படை, அதுவரை நிலவிய நிலப்பிரபுத்துவத் தளைகளுக்கு மக்கள் சமூகமும் கலை – இலக்கிய – பண்பாட்டுக் கூறுகளும் கட்டுப்பட்டு ஆதிக்கத் தரப்பாருக்குச் சேவகம் செய்வனவாக இருந்த சூழலைத் தகர்த்து மக்கள் விடுதலைக் குரலாகத் தமிழை வடிவப்படுத்தினார் பாரதி என்பதில் அடங்கி உள்ளது. நிலப்பிரபுத்துவப் பிடிப்பைத் தகர்க்க வேண்டியதாக மட்டும் அன்றைய வரலாற்றுப் பணி அமைந்து இருக்கவில்லை; அதனுடன் கூட்டமைத்துக் கொண்டு இந்திய உப கண்டம் முழுமையையும் ஒட்டச் சுரண்டி வற்றடித்துக் கொண்டிருந்த பிரித்தானிய ஏகாதிபத்திய நுகத்தடியைத் தூக்கியெறிந்து சுதந்திரம் எட்டப்பட வேண்டிய காலகட்டமாகவும் அது இருந்தது. ஏகாதிபத்தியம் – நிலப்பிரபுத்துவம் எனும் இரட்டை நுகத்தடியை உடைத்தெறிவதன் மூலமாக எமக்கான தேச விடுதலை முழு நிறைவானதாக்கப்பட வேண்டும்; அதன் வாயிலாகவே எமக்கான உற்பத்தி சக்தியின் விருத்தியைக் கட்டுப்படுத்தும் தளைகள் நீக்கப்பட்டு வளப்பெருக்கமும் புதிய பண்பாட்டுத் தள விரிவாக்கமும் பூரண ஜனநாயகமும் வாழ்வியல் செழிப்பும் ஏற்பட இயலும் என்ற நிலை!
ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்ப்பதன் வாயிலாக காலனித்துவ அடிமை மனோபாவத்தையும், நிலப்பிரபுத்துவத் தளைகளைப் பூரணமாகக் களைந்து எறிவதனூடாகச் சாதியப் பிளவாக்கங்களை ஒழித்துக்கட்டல் எனும் இரு பணிகளையும் முன்னிறுத்த வேண்டி இருந்த போதிலும் அன்றைய இந்தியச் சிந்தனை – செயற்பாடு என்ற தளங்களுக்கு உரியோராக வெளிப்பட்டவர்களில் பெரும்பாலோர் இவற்றில் ஏதாயினும் ஒன்றுக்கு அதீத முக்கியத்துவம் வழங்கி மற்றைதைக் கவனம் செலுத்தாது ஒதுக்கிவிடும் (அல்லது இரண்டாம மூன்றாம் பட்சத்துக்கு உரியதாகக் காட்டும்) நிலை இருந்தது. இலக்கியப் படைப்புகள் அனைத்தும் அத்தகைய ஒருமுனைவாதத் தவறுடனேயே அமைந்தன. எமக்கான தேசிய எழுச்சிக்கு உரிய இரண்டு அம்சங்களையும் முழுதாகக் கவனத்தில் எடுத்தவராக பாரதி திகழ்ந்தார்; மனுக்குல விடுதலைக்கு உரிய எமது களத்துக்கான இந்த இரு முனைப் பணிகளில் மக்களைக் கிளர்ந்தெழத் தூண்டுவதன் ஊடாக ‘மக்கள் யுகம்’ எனும் முழுமைப் பரிமாணத்தையும் அதனது பன்முக எழுத்துத் தளங்கள் வாயிலாக பாரதி வெளிப்படுத்தினார். இவை சார்ந்த பாரதியின் கருத்தியல் தளம் மிகுந்த கவனிப்புக்கு உரியது; தேச விடுதலை என்பதைக் கடந்து பூரண பொதுவுடமைச் சமூக உருவாக்கத்துக்கான புதிய பண்பாட்டு இயக்கத்தைக் கட்டியெழுப்ப ஏற்ற அடித்தளம் ‘பாரதியம்’ எனத்தக்க அந்தக் கருத்தியலின் பால் காணப்பட்டது!
ஐம்பதாம் ஆண்டுகளில் ஏகாதிபத்தியப் பிணைப்பை ஒட்டுமொத்தமாகத் தகர்த்தவாறு பூரண பொதுவுடமைச் சமூகத்தை வென்றெடுக்கும் இலக்குடன் இலங்கை முற்போக்கு இலக்கிய இயக்கம் செயற்படத் தொடங்கிய போது பாரதியை முன்னோடி ஆளுமையாக வரித்துக் கொள்வதற்கு பாரதியத்துக்கான இந்த அம்சம் வலுவான காரணியாக அமைந்தது. முற்போக்கு இலக்கிய இயக்கம் இரண்டாம் உலக யுத்தச் சூழலில் பாசிசத்தை முறியடிக்கும் இலட்சியத்தின் பொருட்டு தேசப்பற்று மிக்க பல்வேறு வர்க்கங்களை ஐக்கியப்படுத்துதல் என்ற வரலாற்றுப் பணியுடன் உலக நாடுகள் பலவற்றிலும் முன்னரே தோற்றம் பெற்று இயங்கி வந்தது. இந்தியாவிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு – பாசிச முறியடிப்பு என்பவற்றில் ஐக்கியப்படும் பல்வேறு வர்க்கங்களை ஒன்றுதிரட்டிய முற்போக்கு இலக்கிய அமைப்புகள் முப்பதாம் ஆண்டுகளில் இருந்தே இயக்கம் பெற்றிருந்தன.
அவ்வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பலை காலனித்து நாடுகள் இடையே பேரெழுச்சியாக முனைப்படைந்து இருந்த அந்தக் காலத்தில், ஒடுக்கப்பட்ட தேசங்களைத் தொடர்ந்தும் தங்களது ஆளுகைக்குள் வைத்துக்கொள்வதற்கு எத்தகைய சீர்திருத்தங்களை அனுமதிப்பதன் மூலமாக ஏகாதிபத்திய நலன் பாதிக்கப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது எனக் கண்டறிவதற்கான ஆய்வுத் தளமாக இலங்கையைப் பிரித்தானிய ஏகாதிபத்தியம் பயன்படுத்தி வந்தது; இங்கு அரசியல் ஆர்வலர்கள் எந்தவொரு கோரிக்கையை முன்வைப்பதற்கும் முன்னரே கூடுதலான சலுகைகள் கிடைத்து வந்தமைக்கு இந்த ஆய்வுத் தள நோக்கம் காரணமாக அமைந்தது – முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் சிலவற்றில் கூடச் சாத்தியப்பட்டிராத (பெண்கள் உள்ளிட்ட அனைவர்க்குமான) சர்வஜன வாக்குரிமை இலங்கையில் முப்பதாம் ஆண்டுகளில் இருந்தே நடைமுறைப்பட்டமைக்கு இதுவே வழிகோலி இருந்தது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியின் காரணமாக முப்பது, நாற்பதாம் ஆண்டுகளில் ஏனைய நாடுகளில் போன்று முற்போக்கு இலக்கிய எழுச்சி இலங்கையில் ஏற்பட்டு இருக்கவில்லை.
இரண்டாம் உலக யுத்தத்துடன் பலவீனமடைந்துவிட்ட பிரித்தானியா இந்தியாவுக்குத் தவிர்க்கவியலாத நிலையில் சுதந்திரத்தை வழங்கிய போது இலங்கையை விட்டும் வெளியேறி இருந்தது; முடிக்கு உரிய குடியரசு என்ற வடிவில் தொடர்ந்தும் பிரித்தானிய அரசுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் நெருக்கடி இங்கு நிலவியது. கூர்மையான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் வாயிலாக விடுதலையை வெற்றிகொண்ட இந்தியா ஐந்து வருடங்களில் பூரண குடியரசாக மாறியது போல இலங்கையில் ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்த்தல் இலகுவானதாக அமையவில்லை. ஏகாதிபத்திய நலன்களைத் தொடர்ந்து பேணும் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து வெளியேறிய எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க உருவாக்கிய சிறீலங்கா சுதந்திரக் கட்சி (எஸ்.எல்.எஃப்.பி.) ஊடாக ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுடைய தேசிய முதலாளி வர்க்கத்தையும் விவசாயி வர்க்கத்தையும் அணிதிரட்டியதன் வாயிலாக சிங்கள இனத் தேசிய இயக்கத்துக்கான தலைவராகப் பரிணமித்தார். முப்பது, நாற்பதாம் ஆண்டுகளில் இருந்தே ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்து வந்த மார்க்சியர்கள் விவசாயி வர்க்கத்தை முழு அளவில் அணிதிரட்டுவதற்கான ஸ்தாபன முறையைக் கையாளத் தவறி இருந்தன.
பண்டாரநாயக்க தலைமையில் தேசிய முதலாளி வர்க்க அணி 1956 இல் பதவிக்கு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததில் மார்க்சியர்கள் முன்னெடுத்த முற்போக்கான செயற்பாடுகளின் அரசியல் – கலை – இலக்கிய – பண்பாடு ஆதிய தளங்களுக்குரிய இயக்கங்கள் பாரிய பங்களிப்பை நல்கி இருந்தன. இருப்பினும் வரலாற்றைக் கைநழுவ விடும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டது. மார்க்சியத்தை வெறும் வர்க்க வாதமாகப் புரிந்துகொண்டு பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டுவதில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியவாறு உரிய வகையில் விவசாயி வர்க்கத்தை அணி திரட்டாது இருந்ததைப் போலவே இனத்தேசிய எழுச்சி குறித்த புரிதலின்மை காரணமாகவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை மக்கள் விடுதலைத் திசை மார்க்கம் நோக்கி வளர்த்தெடுக்க இயலாத நெருக்கடிக்கு மார்க்சிய அணிகள் உள்ளாகி இருந்தன.
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை அனைத்து ‘இலங்கைத் தேசியமாக’ மார்க்சியர்கள் அணுகிய போது தேசிய முதலாளித்துவ சக்திகள் இனத் தேசியங்களின் எழுச்சிக்கு உரியனவாக அவற்றை வடிவப்படுத்திக் கொண்டன. சிங்களத் தேசியத்தை வடிவப்படுத்தும் வகையில் 1956 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த பிரதமர் பண்டாரநாயக்க ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்கள மொழியை அரசகரும மொழியெனப் பிரகடனப்படுத்திக் கொண்டார்; அதன் போது, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆதியன சிங்களம் மட்டுமன்றித் தமிழ் மொழியையும் இணைத்தவாறு இரு மொழிகளும் அரச கரும மொழிகளாக்கப்படுவதன் வாயிலாக மட்டுமே வல்லமை மிக்கதான ஒரு தேசமாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புள்ளது என வலியுறுத்தி வலுமையான போராட்டத்தை முன்னெடுத்தனர்; அந்தப் போராட்ட வீறின் ஒரு அடையாளமாக, “ஒரு மொழி இரு நாடுகள், இரு மொழிகள் ஒரு நாடு” என்பதாக கொல்வின் ஆர் டி சில்வா முன் வைத்த தர்க்கம் அமைந்திருந்தது. அப்போது கற்பனையிலும் தமிழ்த் தலைவர்கள் எவரிடமும் தனியொரு நாடாகப் பிரியும் எண்ணம் இல்லாத சூழலில் இவ்வகைக் கருத்தை அவர் முன்வைத்தார் என்பது கவனிப்புக்கு உரியது!
பிரித்தானிய ஏகாதிபத்தியம் முன்னெடுத்த பிரித்தாளும் இராஜதந்திரத்தின் மும்முனைத் தாக்குதல்களில் முதன்மையானதாக யாழ்ப்பாணத்துக்கு மிக அதிகளவு கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அங்கிருந்து அரச உத்தியோகத்தர்களை அதிகளவில் உற்பத்தி செய்வதான நடைமுறை அமைந்து இருந்தது (ஏனைய இரண்டு கையாளுகைகளுக்கு உரியனவாக, விகிதாசாரத்துக்கும் அதிகமாக அரசியல் அதிகாரத்தைச் சிங்களத் தரப்புக்கு வழங்கியமையும் சிங்களத் தேசியத்தை இந்திய எதிர்ப்புடன் வளர்ப்பது என்பதாகவும் அமைந்திருந்தன). பிரித்தானியர் வெளியேறியவாறு இருந்த சூழலில் அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த உயர் பதவிகளையும் யாழ்ப்பாணத் தமிழர்களே பெற்றுக்கொள்ளும் வகையில் ஆங்கில வழிக் கல்விக்கான வளம் பிரயோகம் யாழ்ப்பாணத்துக்கு அதிகளவில் ஏற்படுத்தித் தரப்பட்டு இருந்தது. தவிர, கல்வியில் முதலிட்டுப் பொருளாதார விருத்தியை வளர்க்க ஏற்ற வகையில் யாழ்ப்பாணத் தட்பவெப்ப – புவியியல் – இயற்கைச் சூழல் – வரலாற்றுப் பின்னணி என்பன அமைந்திருந்தன; ஏனைய பகுதிகளின் விவசாய வாய்ப்பு அளவுக்கு யாழ்ப்பாணத்தில் இல்லை, காலனித்துவக் காலத்தில் போர்த்துக்கேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட பணப்பயிரான புகையிலையுடன் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் கடல் கடந்து இந்தியா, பர்மா, மலேசியா போன்ற நாடுகளுக்கும் பயணிப்பவர்களாக இருந்த சமூகத்தினருக்கு கல்வி வாயிலாக குமாஸ்தா வேலையைப் பெற்று ஆங்கிலேயரின் ‘கோட் பாக்கட்டினுள்’ எடுத்துச் செல்லப்படுவதற்கு இணக்கமாகும் வாழ்முறை ஏற்புடையதாக இருந்தது; ஏனைய பிரதேசத்தவர்கள் குடும்பங்களை நீங்கி இடப்பெயர்வு உத்தியோகங்களை அத்தனை ஆர்வத்துடன் நாடுகிறவர்களாக இருந்திருக்கவில்லை. நாடு பூராகவும் பலவேறு அரச உத்தியோகங்களை வகித்து வந்த வாய்ப்புடன் வாழைப் பழக் கடை, வெத்திலை பாக்குப் புகையிலைக் கடை, பலசரக்குக் கடை, மலிவான மசாலா தோசை-வடை எனப் பலரும் விரும்புகிற சாப்பாட்டுக் கடை …. என்றவாறு பலதும் பத்துமான வர்த்தக நலன்களையும் யாழ் குடா கடந்து கையகப்படுத்திக் கொண்டவர்களாக இருந்த சூழலில் தனிநாடு கோரும் எந்தத் தேவையும் ‘யாழ் தேசத்துக்கு’ அப்போது ஏற்படவில்லை!
இருப்பினும் ‘தமிழரசுக் கட்சி’ என்ற பெயருடன் அரசியல் அணி 1949 ஆம் ஆண்டிலேயே உருவாக இயலுமாக இருந்துள்ளது; “ தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என முழங்கித் தமிழுணர்வை மூலதனமாகக் கொண்டு வாக்குப் பெற்று அரசியல் நடாத்தும் மேட்டுக் குடியினரின் ‘அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி’யை முறியடித்து வளர்வதற்கு அந்தப் பெயர் அவசியப்பட்டது. அந்தக் கட்சியை விட்டு நீங்கி அடிநிலைத் தமிழ் மக்களை அணி திரட்ட வேண்டி ஏற்பட்ட போது வெறும் உதட்டளவுக் கோசமாக அல்லாமல் தமிழ்த் தேசியத்தை அரசியல் உணர்வுடன் முன்னெடுக்க விரும்பிய தரப்பினர் ‘தமிழரசுக் கட்சி’ என்ற பெயரைத் தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருந்துள்ளது. மக்களிடம் தமிழ்த் தேசிய உணர்வை விதைப்பதற்கு மட்டுமேயான பெயர் தான் தமிழசுக் கட்சி என்பதே அல்லாமல் தனித் தமிழரசு ஒன்றை ஏற்படுத்தும் அரசியல் கோரிக்கைக்கு உரியதல்ல அந்தப் பெயர்; கிழக்கும் வடக்கும் இணைந்தோ, தனித்தனியானதாகவோ சமஷ்டி அமைப்பு அவசியம் என்பது அந்தக் கட்சிக்கு உரிய அரசியல் கோரிக்கையாக இருந்தது. அதன் காரணமாக ஆங்கிலத்தில் ‘சமஷ்டிக் கட்சி’ என்பதாகவே பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே, நாற்பதாம் ஆண்டுகளில் பண்டாரநாயக்க இலங்கைக்கான அரசியல் நிர்வாக அலகாக சமஷ்டி முறை (கரையோரச் சிங்களவர், மலைநாட்டுச் சிங்களவர், வடக்கு-கிழக்கு தமிழர் என்போர்க்கு உரியனவாக) ஏற்படுத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்திருந்தார். கரையோரச் சிங்களவரால் (பெரும்பாலும் கராவ சாதியினரால்) மலைநாட்டுச் (பிரதானமாக கொவிகம சாதி) சிங்களவர் பாதிக்கப்படுவதனைக் கட்டுப்படுத்தவும் யாழ்ப்பாணத் தமிழரே நிர்வாக அதிகாரங்களை நிறைத்திருப்பதை அகற்றிக் கொள்வதுடன் சிங்களத் தேசியம் தனக்கான நிர்வாக அலுவலர்களைத் தாமே ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதனாலும் அத்தகைய மூன்று சமஷ்டி அலகுகளுக்கான கோரிக்கையை எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க முன்வைத்திருந்தார்.
பிரித்தானியர் ஆட்சி நிலவிய நாற்பதாம் ஆண்டுகளில் சிங்களத் தேசியத்தின் ஒரு கோரிக்கையாக சமஷ்டி முறை முன்வைக்கப்பட்ட போது இலங்கை தமிழ் தரப்பினரால் அது முற்றாக நிராகரிக்கப்பட்டு இருந்தது. ஆட்சியாளரது அனுசரணையுடன் முழு நாட்டிலும் நிர்வாக அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு இருந்த வாய்ப்பை பிராந்தியங்களின் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் எல்லைப்படுத்துதல் மட்டுப்படுத்தி விடும் என்பதனால் அன்றைய ‘தமிழ் குரலாக’ அமைந்த அதிகாரத் தரப்பு சமஷ்டிக் கோரிக்கையை எட்டிக்காய் போலப் பார்த்து ஒதுக்கித் தள்ளியது. சுதந்திரம் எட்டப்பட்ட கையுடன் மலையகத் தமிழ் மக்களுடைய பிரஜாவுரிமை மறுக்கப்பட்ட நிலை ஏற்பட்டுவிட்டமையும் அன்றைய பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் ஐ.தே.க. அரசு கல்லோயாத் திட்டத்தின் வாயிலாக கிழக்கு மாகாணத்தில் ‘சிங்களக் குடியேற்றத் திட்டத்தை’ ஆரம்பித்துள்ளார் என்ற ஆக்கிரமிப்பின் தொடக்க அடையாளமும் எச்சரிக்கையாக அமைந்த போது இலங்கைத் தமிழரின் அதிகாரத் தரப்புக்கு உரிய ஒரு பகுதியினர் விழித்துக்கொண்டனர். சிங்களப் பேரினவாதம் எதிர்காலத்தில் தமிழர் பிரதேசங்களில் குடியேற்றங்களை விஸ்தரிக்கவுள்ள வாய்ப்பு மட்டுமன்றித் தமது பிரதேசத்தில் பேரினவாத நிர்வாக ஊடுருவல்களுக்கும் சாத்தியம் இருப்பதனை உணர்ந்து தமக்கான அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த அவசியம் உள்ள காரணத்தால் சமஷ்டி அரசியலை 1949 ஆம் ஆண்டு முதலாக அவர்கள் மேற்கொள்ளத் தொடங்கினர்; அப்போது கூட உயர் கல்வி, உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் நீடித்த காரணத்தால் (1972 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தரப்படுத்தல் வாயிலாக அதற்கும் ஆப்படிக்கப்பட்டு, யாழ்ப்பாணத்தவர்களே உயர் பதவிகளை அதிகம் பெற்று வந்த சந்தர்ப்பங்கள் எல்லைப்படுத்தப்பட்ட வரை) பிரிவினை எண்ணம் தமிழரசுக் கட்சியாருக்கு ஏற்பட்டதில்லை.
தரகு முதலாளித்துவ நிலைப்பாட்டுடன் ஐ.தே.க. அரசு ஏகாதிபத்திய நலனைத் தொடர்ந்து ஆதரித்து வந்தபோது அ.இ.த. காங்கிரஸ் கட்சி அதனை ஆதரித்து வந்தது; அதனின்றும் வெளியேறிய தமிழரசுக் கட்சியிடம் தமிழ்த் தேசிய நலனை வென்றெடுக்கும் குறிக்கோள் ஓரளவேனும் இருந்த காரணத்தால் ஐ.தே.க. அரசை எதிர்க்கும் இடதுசாரிகளுடன் ஐக்கியப்பட்டு இயங்கினர். அந்த அரசுக்கு எதிரான நாடு பரந்த மாபெரும் ஹர்த்தால் போராட்டம் (ஆகஸ்ட், 1953) நடந்த போது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போராடியது தமிழரசுக் கட்சி. அவர்களது அரசியல் கூட்டங்களைத் தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி காடைத்தனத் தாக்குதல்களை மேற்கொண்ட போதிலெல்லாம் கம்யூனிஸ்டுகளே அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கிக் கூட்டங்களைத் தொடர வழியேற்படுத்திக் கொடுத்திருந்தனர். அந்த நட்புணர்வுடன், அரசுக்கு எதிராக இடதுசாரிகள் முன்னெடுத்த போராட்டங்களில் இணைந்து பங்கேற்றனர் தமிழரசுக் கட்சியினர்.
ஆயினும், அப்போதிருந்தே அவர்களிடம் துளியளவு கரிசனையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் இருந்ததில்லை. தேசிய மயமாக்கல்கள் ஊடாக ஏகாதிபத்தியப் பொருளாதாரப் பிடிகளைத் தகர்க்கும் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களாகவே தமிழரசுக் கட்சியினர் இருந்தனர். சிங்களப் பேரினவாத அரசை நம்ப இயலாது என்ற தர்க்கத்தை முன்னிறுத்தி ஏகாதிபத்தியப் பிணைப்புகள் இலங்கையினின்றும் முழுமையாக விலக்கப்பட்டுவிடலாகாது என்றனர்.
தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தித் தமக்கான அரசியலை ஆரம்பித்து இயக்கிய ஐம்பதாம் ஆண்டுகளில் இடதுசாரிகளுடன் இணைந்து சில போராட்டங்களில் பங்கேற்ற காரணத்தால் படிப்படியாகத் தமிழ் மக்கள் மத்தியில் அவர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் பெருகி வந்தன. அறுபதுகளின நடுக்கூறில் அவர்களே பெரும்பான்மையைப் பெற்று விட்ட சூழலில் மேலாதிக்கத் தமிழ் தேசியத் தரப்பாரும் காங்கிரசைக் கைகழுவி விட்டு தமிழரசுக் கட்சியையே தமக்குரிய தளமாக ஆக்கிக் கொண்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு இல்லாமல் தனியே பேரினவாத எதிர்ப்பை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு அணி விடுதலைத் தேசிய நாட்டம் கொள்ள இயலாமல் மேலாதிக்கத் தேசியத்துக்கு ஆட்பட்டு சிதைவுறும் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தமிழரசுக் அமையாயிற்று!
அந்தக் கட்சி ஆரம்பம் முதலாகவே ஏகாதிபத்திய ஆதரவுடையது என்பதனை மட்டும் கவனம் கொள்பவர் அது எப்போதுமே ‘பிற்போக்கான’ தமிழ்த் தேசியத்தையே முன்னெடுத்தது எனக் கணிப்பார்; மேட்டிமைத் தமிழரது கட்சியான காங்கிரசை எதிர்த்து ஐதேக அரசுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஆதரித்தவாறு தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்த ஆரம்ப காலத்தில் அவர்களிடம் ‘முற்போக்கு’ குணாம்சம் இருந்ததெனக் கணிக்க இயலுமா? அதே சமகாலத்தில் தானே ஏகாதிபத்திய எதிர்ப்பற்ற ‘பிற்போக்கு’ பண்பும் அந்தக் கட்சியிடம் குடிகொண்டு இருந்தது? ஒரே சமயத்தில் பேரினவாத எதிர்ப்பில் ‘முற்போக்கும்’ ஏகாதிபத்தியச் சாய்வில் ‘பிற்போக்கும்’ நிலவ இயலுமாக உள்ள தேசியப் பிரச்சினையை வர்க்க அரசியலுக்கு உரிய முற்போக்கு – பிற்போக்கு அளவீட்டைக் கொண்டு விளங்கிக் கொள்ள இயலாது என்பது தெளிவு!
ஏகாதிபத்தியம் :
மற்றுமொரு வரலாற்றுச்
செல்நெறிக்கான தொடக்கம்
வர்க்க அரசியலுக்கு வேறாக மற்றொரு அரசியல் இயக்கப் போக்கு செயற்பட்டு வந்துள்ளது. வர்க்கப் பிளவுறாத இன மரபுக் குழு எனும் முழுச் சமூக சக்தி (திணை) நெல்லுற்பத்திப் பெருக்கத்தின் பேறாகப் படை நடாத்திச் ஆக்கிரமிக்கும் வாய்ப்புச் சாத்தியப்பட்ட சூழலில் மேலாதிக்கம் பெற்று ஒடுக்குகின்ற ஆதிக்க சாதியாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டு தோற்கடிக்கப்பட்ட இன மரபுக் குழுக்களைப் படி நிலை இறக்கத்துக்கு உரிய தராதரப்படுத்தலின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகள் என ஆக்கிக் கொண்டது; இதன் வாயிலாக இயக்கம் பெற்ற திணை அரசியல் செல்நெறி தனித்துவப் பண்புடன் சமூக மாற்றங்களையும் சாத்தியப்படுத்தி வந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே துலக்கமுற வெளிப்பட்ட இந்தத் திணை அரசியலின் வாயிலாகவே தேசியப் பிரச்சினையை விளக்கம் கொள்ள இயலும். இரண்டாயிரத்து இருநூறு வருடங்களின் முன்னர் விவசாய வாய்ப்புடன் திணை மேலாதிக்கத்தை மேற்கொண்ட மருதத் திணையானது ஒடுக்கும் – ஒடுக்கப்படும் சாதிகள் என்பவற்றை ஏற்படுத்திக் கொண்டது.
மூலதன வாய்ப்புடன் ஏகாதிபத்தியமாக வளர்ச்சி பெற்ற மேலைத் தேசங்கள் திணை மேலாதிக்க ஒடுக்குமுறையை ஒடுக்கப்பட்ட தேசங்கள் மீது மேற்கொள்வதாக இன்றைய வரலாறு அமைந்துள்ளது. பூரண சமத்துவ முறைமையை உலகு வந்தடையாத வரை (தேசியக் கட்டமைப்புச் செயற்படுகிற வரை) தேசங்கள் மேலாதிக்கத்துக்காக அல்லது விடுதலைக்காக இயங்கியாக வேண்டி இருக்கும்; தேசங்கள் இடையே சமத்துவம் நிலவாது என கார்ல் மார்க்சும் வலியுறுத்தி இருந்தார். சாதிகள் இடையேயும் தேசங்கள் இடையேயும் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டங்கள் ஊடாகவே இறுதியான பொதுவுடமை அமைப்பை வெற்றி கொள்ள ஏற்றதான வரலாற்று மாற்றம் ஏகாதிபத்திய உருவாக்கத்துடன் ஏற்பட்டுள்ளது. சாதியக் கருத்தியலும் காலனித்துவக் கருத்தியலும் ஒடுக்கும் திணைகளுக்கு (ஆதிக்க சாதிக்கும் ஏகாதிபத்தியத்துக்கும்) சாதகமாக அமைந்து ஒடுக்கப்பட்டோரின் மனங்களை வசப்படுத்திச் சுரண்டலை மேற்கொள்ள வாய்ப்பினை அளிப்பனவாக அமைந்துள்ளன!
நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பில் அதி உச்ச நிலையை வந்தடைந்த தமிழகத்தால் அதனை உடைத்துக் கொண்டு புதிய உற்பத்தி சக்தியை விருத்தி செய்து உருவாகி வந்திருக்க வேண்டிய முதலாளித்துவத்தை வெளிக்கொணர இயலவில்லை. மூலதனத் திரட்சியில் சாதனை படைத்து நவீன உலகை வெற்றி கொண்ட மேலைத் தேசத் திணை ஏகாதிபத்தியத்தை எட்டிய வரையான மூன்று, நான்கு நூற்றாண்டுகளாக கூர்மையான வர்க்கப் போராட்டங்கள் வாயிலாக வரலாறு படைத்த அதி உச்ச நிலையுடன் இருந்தது. முதலாளித்துவ அமைப்பைத் தகர்த்துப் பூரண சமத்துவத்தை வென்றெடுக்கும் புதிய உலகுக்கான மார்க்சியம் எனும் சிந்தனை ஆயுதம் முதலாளித்துவ உச்சத்தை எட்டிய மேலைத் தேசத் திணை வாயிலாகவே கிடைத்துள்ளது. நிலப்பிரபுத்துவ உச்சம் தொட்ட வரலாற்றுச் சாதனைக்கு உரிய எமது மண் அடுத்த மாற்றத்தைச் சாதிக்க இயலாமல் போனதைப் போன்றே ஏகாதிபத்திய வாய்ப்பில் சிதைவுகளுக்கு உள்ளான மேலைத் தேசத் திணையாலும் மார்கசியம் வழிப்படுத்திய சோசலிசத்தை வென்றெடுத்துக் காட்ட இயலவில்லை.
ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகள் வர்க்க அரசியல் முனைப்புடன் இயங்கியதன் வாயிலாகப் பெறப்பட்டிருந்த மேலைத் தேசத் திணையின் அனுபவத் தொகுப்பு சோசலிசம் படைப்பதற்கான கருத்தியலை வெளிப்படுத்திய போதிலும் தானே அதனைச் செயல்படுத்த இயலாத பின்னடைவைச் சந்தித்துவிட்டது. வரலாற்று இயக்கப் போக்கை மீண்டும் வர்க்கப் போராட்ட வடிவமன்றி முழுச்சமூக சக்தியாக இயங்கும் திணை அரசியல் செயலொழுங்கு மேற்கொள்ள இருப்பதன் மாற்றப் போக்குக்கு உரிய வரலாற்றுச் சந்தியாக ருஷ்ய ஒக்ரோபர் புரட்சி (1917) அமைந்தது. அந்த மாற்றம் பற்றிய தெளிவு எட்டப்படாமல் வர்க்க அரசியலுக்கு உரிய ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ தொடர்ந்து சோவியத் ருஷ்யாவில் பிரயோகிக்கப்பட்ட பொருந்தாமை காரணமாக ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு நிலைபெற்றுச் சாதனைகள் பலவற்றைப் படைத்த சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் தகர்ந்து போய் ருஷ்யாவும் பதினைந்து தனி நாடுகளும் என்று 1991 ஆம் ஆண்டில் தகர்வுக்கு உள்ளானது. இதனை நுணித்து நோக்கும் பட்சத்தில் 1917 இல் ஒக்ரோபர் புரட்சி பாட்டாளி வர்க்கத்துக்கு உரியதாக மட்டும் அல்லாமல் ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கும் உரியதாக அமைந்து இருந்தமையைக் கண்டிருக்க இயலும். ஒக்ரோபர் புரட்சிக்குப் பின்னரான வரலாறு பாட்டாளி வர்க்கப் புரட்சியால் அன்றி ஒடுக்கப்பட்ட தேசங்கள் விடுதலைத் தேசிய முன்னெடுப்பு வாயிலாகச் சோசலிசத்தை வென்றெடுத்தல் என்பதான வடிவ மாற்றத்தை முழு அளவில் பெற்றுவிட்டது. ருஷ்யப் புரட்சி இரு வடிவங்களது இணைப்பிலும் சாத்தியப்பட்டு இருந்தது என்பதும் வரலாற்று இயங்கு முறை வடிவத்தில் ஏற்பட்ட இத்தகைய மாற்றப் போக்கின் தாற்னரியங்களும் கவனங்கொள்ளப்படாமல் மார்க்சியர்களால் புதிய வரலாறு படைக்கும் ஆற்றலைக் கைவசப்படுத்த இயலாது.
மார்க்சிய முன்னோடிகள் வர்க்கம் குறித்துக் கறாரான அழுத்தங்களைப் பிரயோகித்து இருந்தனர் என்பது மெய். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூர்மையான வர்க்கப் போராட்டம் இடம்பெற்று வந்த சூழலில் அவ்வகையிலான வற்புறுத்தல் அவசியப்பட்டது. புதிய சமூகம் பற்றிய முன்னேறிய சிந்தனையாளர்களது கருத்துகள் சகல ஒடுக்குமுறைகளையும் களைந்து சமத்துவம் படைக்கும் என நம்பப்பட்டவாறு இருந்த நிலையில் நடந்தேறி வரும் கூர்மையான வர்க்கப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை வெற்றிகொண்டு, முதலாளித்துவ மீட்சியைத் தடுக்கும் வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பிரயோகிப்பதன் வாயிலாகவே சமத்துவ சமூகம் படைக்கப்பட இயலும் என்பதனை மார்க்ஸ் ஆணித்தரமாக வலியுறுத்தி இருந்தார்; அந்தத் தீர்க்கதரிசனம் சரியானது என்பதனை 1917 ஒக்ரோபர் புரட்சி ஊடாக இளமைத் துடிப்புடன் அப்போது தான் எழுச்சி அடைந்து வந்த ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் மெய்ப்பிக்கும் வகையில் மார்க்சியத்தை லெனின் வளர்த்தெடுத்துப் பிரயோகித்து இருந்தார்!
முதலாளித்துவ வளர்ச்சியின் உயர் கட்டத்தை எட்டி முதிர்ச்சி அடைந்துவிட்ட மேற்கு ஐரோப்பாவில் முன்னதாகப் புரட்சி ஏற்படுவதன் வாயிலாகவே சோசலிசம் சாத்தியப்படும் என்ற மார்க்சின் முன்னனுமானத்துக்கு மாறாக, முதலாளித்துவத்தின் ஆரம்பப் படிநிலையில் உள்ள ருஷ்யாவின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியே நடந்தேறாத சூழலில், முன்னெடுக்கப்படும் ஜனநாயகப் புட்சியை இடையீடின்றி சோசலிசப் புரட்சிக்கு வளர்த்தெடுக்க இயலும் என வலியுறுத்தினார் லெனின்; ஒரு நாட்டின் புரட்சி அலை ஐரோப்பா முழுவதும் பரவி உலகப் புரட்சியாக வியாபிக்கும் என்ற மார்க்சின் எதிர்கூறுகைக்கு மாறாகத் தனியொரு நாட்டில் முன்னதாகப் புரட்சியை வெற்றிகொண்டு சோசலிச மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உரியதாக ஏகாதிபத்தியக் கட்டம் எட்டப்பட்டுள்ளது என வலியுறுத்திய வகையிலும் லெனினிசம் வளர்ச்சிக்கு உரியதாக அமைந்தது!
இவ்வாறு தனியொரு நாட்டில் சோசலிசம் சாத்தியம் என்ற முடிவுக்கு லெனின் வரக் காரணமாக அமைந்தது, மார்க்சின் மறைவை அடுத்து ஏகாதிபத்தியக் கட்டத்தை மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவம் வந்தடைந்துவிட்டமையே என்பது மிகுந்த கவனிப்புக்கு உரிய ஒன்று. முதலாளித்துவத்தின் சமவீனமான வளர்ச்சி நிலை காரணமாக பலவீனமான ஏகாதிபத்தியக் கண்ணியாக உள்ள ருஷ்யாவில் முன்னதாகப் பாட்டாளி வர்க்கப் புரட்சி சாத்தியப்பட்டு அங்கே சோசலிசத்தை நிர்மாணிக்க இயலும் என்பதை அவர் எடுத்துரைத்தார். ஜாரிஸ ருஷ்ய ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்டிருந்த தேசங்கள் புரட்சியின் பின்னர் விரும்பும் பட்சத்தில் பிரிந்து தனி நாடாகச் சென்றுவிட இயலும் என வலியுறுத்திய லெனினிசத்தின் சுயநிர்ணய உரிமைப் பிரயோகம் காரணமாக ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்துடன் தோளோடு தோள் சேர்ந்த ஒடுக்கப்பட்ட தேசங்களின் புரட்சியும் கைகொடுத்த காரணத்தால் ஒக்ரோபர் புரட்சி வெற்றியைத் தொடர்ந்து தக்கவைத்துப் பேணியவாறு தனியொரு நாட்டின் சோசலிச நிர்மாணச் சாத்தியத்தை நிரூபணம் செய்திருந்தது.
ஏற்பட்ட சகாப்த மாற்றமாகிய ஏகாதிபத்தியத்தை, அதன் தோற்றுவாய்க்கு உரிய நாட்டு முதலாளித்துவம் வந்தடைந்த உச்சக் கட்டம் என லெனின் வரையறுத்திருந்தார். முதலாளித்துவம் இதற்கு மேல் சோசலிசத்துக்கு இடமளித்தாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு லெனினிடம் இருந்தது; அதற்கு உரிய மேற்கு ஐரோப்பாவில் புரட்சி விரைவில் சாத்தியப்பட்டு சோவியத் ருஷ்யப் புரட்சி பெற்றிருந்த அதீத முக்கியத்துவத்தைப் பின்னடைய வைக்கும் என்பதாகவும் லெனின் கருத்துரைத்து இருந்தார். ஆயினும், முதலாளித்துவம் முடிவைச் சந்திக்கும் வரலாற்றின் உச்சக் கட்டமாக அது இருக்கவில்லை என்ற வகையில் அவரது எதிர்பார்ப்பு சித்திக்கவில்லை. மாறாக, ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட தேசம் ஒன்று விடுதலையை வென்றெடுக்கும் போது முதலாளித்துவ மாற்றி அமைத்தலுக்காக காலந்தாழ்த்த அவசிமின்றி நேரடியாக சோசலிசத்துக்குச் செல்ல இயலும் வகையில் ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் சோசலிச அரசொன்று நிலைபெற்று இருக்கிறது என வலியுறுத்திய மற்றொரு எதிர்பார்ப்பு நடைமுறைச் சாத்தியமானதாக ஆகியிருந்தது.
லெனின் எதிர்பார்த்ததைப் போல முன்னேற்றம் அடைந்து முதிர்ச்சி நிலையை எட்டிவிட்ட முதலாளித்துவ நாட்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சி சாத்தியப்படாத போதிலும் மற்றைய தீர்க்கதரிசனப்படி ஒடுக்கப்பட்ட தேசங்கள் விடுதலை பெற்று நேரடியாகச் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதாகவே தொடர் வரலாறு அமைந்தது என்ற விடயம் மிகுந்த கவனிப்புக்கு உரியது!
மார்க்ஸ் எதிர்நோக்கிய வடிவில் சோசலிச மாற்றி அமைத்தலைச் சோவியத் யூனியனில் மேற்கொள்ள இயலவில்லை. ருஷ்யா முதலாளித்துவத்தின் ஆரம்பப் படிக்கட்டில் இருந்த ஒரு தேசம் என்ற அம்சத்தை லெனின் கவனத்திலெடுத்து ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ என்பதனை முன்வைத்தார். விருத்தி பெற்றிருந்த முதலாளித்துவ நாட்டில் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதைப் போலப் பின்தங்கிய ருஷ்யாவுக்கான செயலொழுங்குகள் அமையவியலாது என்பதனைக் கடந்து ஒடுக்கப்பட்டிருந்த தேசங்களுக்கான மாற்றியமைத்தல் என்ற அம்சத்துக்கும் லெனின் அழுத்தம் கொடுத்திருப்பின் ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ மற்றொரு கோட்பாட்டு உருவாக்கத்துக்கு ஆற்றுப்படுத்தி இருந்திருக்கும். அந்தப் பிரயோகத்தின் போதே சில தொழிற்சாலைகளைத் தொடர்ந்தும் முதலாளிகளிடம் விட்டுவைக்கும் நடைமுறை இருந்தது; ஒடுக்கப்பட்டிருந்த தேசத்தின் சோசலிச மாற்றியமைத்தல் எனும் அம்சத்தைக் கவனம் கொண்டிருப்பின் அங்கே முதலாளிகளது வகிபாகம் குறித்து இன்னொரு பரிமாணத்தை லெனின் வந்தடைந்திருக்கச் சாத்தியம் உண்டு!
ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் என்பதாக மட்டும் இல்லை; வர்க்கப் புரட்சி வாயிலாகச் சமூக மாற்றம் ஏற்படுவதாக இருந்த வரலாற்றை மாற்றி அதனது ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டுள்ள தேசங்கள் விடுதலை பெறுவதன் மூலமாகச் சோசலிசத்தை வென்றெடுத்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ள சகாப்தமும் கூட. ஏகாதிபத்திய சகாப்தம் என்பது முன்னேறிய முதலாளித்துவ நாட்டின் பாட்டாளி வர்க்கப் புரட்சி சாத்தியமில்லை என்பதனையும் ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைத் தேசியப் புரட்சிகள். ஆயிலாகவே எதிர்கால சோசலிசம் வெற்றிகொள்ளப்பட இயலும் என்ற வரலாற்று மாற்றத்தை முற்று முழுதாக உலகச் செல்நெறி வந்தடைந்துவிட்டது என்பதனையும் வெளிப்படுத்தி உள்ள வடிவ மாற்றத்துக்கானது எனும் நிதர்சனத்தை மேலும் சில வருடங்கள் வாழ்ந்திருந்தால் லெனின் கண்டுணர வாய்ப்பு இருந்திருக்கும்; அவர் முன்னிறுத்திய புதிய பொருளாதாரக் கொள்கையும் இன்னொரு பரிமாணத்தைப் பெற்றிருக்கும்!
பாட்டாளி வர்க்கச் சிந்தனை முறைமையாகிய மார்க்சிஸ – லெனினிஸத்தை ஒடுக்கப்பட்ட தேச விடுதலையின் விவசாயி வர்க்கப் புரட்சிச் சிந்தனை வடிவமாகப் பரிணமிக்கச் செய்வதாக மாஓ சேதுங் சிந்தனை அமைந்திருந்தது. சீனப் புரட்சி 1949 ஆம் ஆண்டில் வெற்றி பெற்று 1956 ஆம் ஆண்டு வரை புதிய ஜனநாயகப் புரட்சிக்கான முன்னெடுப்பில் முதலாளித்துவ மாற்றியமைத்தல் நிறைவாக்கப்பட்டது; அதுவரை மாஓ சேதுங் சிந்தனை முன்னிறுத்திய ‘மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்’ என்ற வடிவமே அரசியல் பிரயோகக் கருவியாக அமைந்திருந்தது. சோசலிச மாற்றியமைத்தலுக்கான கட்டம் 1956 இன் பின்னர் முகங்கொள்ளப்பட்ட போது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற புதிய அரசியல் ஆயுதம் கையேற்கப்பட வேண்டும் என்ற ஐரோப்பிய அனுபவப் பிரயோகம் தலைதூக்கியது. குறிப்பாக 1966 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘கலாசாரப் புரட்சி’ இதனை முனைப்பாக்கியதன் மூலமாக ஏற்பட்ட அனர்த்தங்களை முகங்கொண்ட பின்னர் கலாசாரப் புரட்சியைத் தொடக்கி வைத்த மாஓ சேதுங் அதனை முடிவடைந்துவிட்டதாக அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார். ஐரோப்பியச் சமூக முறைமைக்கு மாறாக விடுதலைத் தேசியச் சிந்தனைத் தெளிவான மாஓ சேதுங் சிந்தனை வழிகாட்டலின் வளர்த்தெடுக்கப்பட்ட பிரயோகமே மக்கள் சீனத்தின் சோசலிச நிர்மாணத்தையும் முன்னெடுக்க உதவ இயலுமாக அமையும் என்ற தெளிவு இன்று ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்டுணர்ந்த இன்றைய தலைமை பிரயோகித்து வரும் சந்தைச் சோசலிச முறை வாயிலாக மகத்தான சாதனைகளின் களமாக சீனா வளர்ந்து வருகிறது!
சந்தைச் சோசலிசப் பொருளாதார முன்னெடுப்பு என்பது வர்க்க அரசியலுக்கு உரிய ‘முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டல்’ என்ற நடைமுறைக்கு உரியதைப் போன்றதல்ல; வீழ்த்தப்படும் சக்தியின் அரசியல் அதிகாரத்தை மறுத்து அதனுடன் முரண்படும் அதன் இன்னொரு தரப்போடு ஐக்கியப்பட்டவாறு புதிய சமூக மாற்றத்தைச் சாதிப்பதாகிய திணை அரசியல் செயலொழுங்குக்கு உரிய பிரயோகத்தின் வாயிலாக ஆற்றல் பெற்று இன்றைய ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிக்குத் தலைமை தாங்கும் வகிபாகத்தை மக்கள் சீனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இத்தகைய வரலாற்று மாற்றப் போக்கை அனைத்து மார்க்சியர்களும் சரியான வகையில் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்கில்லை. கடந்த காலத்திலும் பல முனைகளில் பிளவுபட்டு மார்க்சியத்துக்கான வெவ்வேறு விளக்கங்களே முன்வைக்கப்பட்ட அனுபவங்கள் உள்ளன; இன்று சீனாவும் கூட தனக்கான பிரயோகம் திணை அரசியல் எனும் மற்றொரு சமூக மாற்றச் செயலொழுங்குக்கான மார்க்சிய வடிவம் என விளக்க இயலாமல் உள்ளது. முந்திய வர்க்க அரசியல் நீட்சியில் தேசிய விடுதலைக்கெனப் பிரயோகிக்க ஏற்றதாக மார்க்சிஸ – லெனினிஸத்தை வளர்த்தெடுத்துப் பிரயோகிக்கப்பட்ட அரசியல் செயற்பாடே மாஓ சேதுங் சிந்தனை என்ற புரிதலே இருந்து வந்தது.ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டிருந்த, பின்னடைவுக்குரிய தேசத்தின் சோசலிச முன்னெடுப்பானது – ‘சீனாவின் பிரத்தியேக நிலைக்கான மார்க்சியப் பிரயோகம்’ என்ற வகையில் – முதலாளித்துவத்துடன் ஐக்கியப்பட்டவாறு ‘சந்தைச் சோசலிச முறை’ பிரயோகிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டிருப்பதாக கருத்துரைக்கப்படுகிறது. ‘இறுக்கமாக மார்க்சியப் புனிதத்தைப்’ பேண விரும்புகிற, செயற்பாடற்றுத் திண்ணை ‘வேதாந்தம்’ பேசுகிற வறட்டுவாதியின் நிலைப்பாட்டை இந்த விளக்கத்தால் வாயடைக்கச் செய்ய இயலாது; ‘வர்க்க வாத வாய்ப்பாடுகளின்’ மூலமாக இதனைத் திரிபுவாதம் என்று கொச்சைப்படுத்திவிட இயலும். அத்தகைய இயக்க மறுப்புப் புத்தகவாதிகள் வர்க்கப் புரட்சியை எதிர் பார்த்தபடி இருக்கும் இலவுகாத்த கிளிகளாகக் காலம் கழிப்பதற்காக ஏகாதிபத்திய எதிர்ப்புக்குரிய பரந்த ஐக்கிய முன்னணியைச் செயல்பூர்வமிக்க ஒரு சோசலிச நாடு முன்னெடுக்காது இருக்க இயலாது!
சாதியத் தகர்ப்புப் போராட்ட
அனுபவமும்
பேரினவாத ஒடுக்குமுறையும்
வர்க்கங்களாகப் பிளவடைந்த ஐரோப்பியச் சமூகத்தின் இயங்கு முறை பற்றிய ஆய்வுகள் நிறையவே உள்ளன. இன மரபுக்குழு முழுமையாகவே மேலாதிக்கம் பெற்று ஆதிக்க சாதியாகத் தன்னை ஆக்கிக் கொண்டதுடன் தோற்கடிக்கப்பட்ட இன மரபுக் குழுக்களை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளாக வடிவப்படுத்திக் கொண்ட இந்தியச் சமூகத்தின் இயங்கு முறை வேறுபட்ட வடிவில் அமைந்து வந்துள்ளது. உலகில் இன்னொரு வடிவத்துக்கு உரியதான வரலாற்று இயக்கு விசையாகச் சாதி அமைப்புத் திகழ்ந்துள்ளது என்ற புரிதலுடன் ஆய்வுகள் இடம்பெறவில்லை. வேண்டாத ஒன்றாகச் சாதியைப் புறமொதுக்கி இங்கேயும் வர்க்கங்கள் இருந்து வந்ததான தேடல்களில் ஈடுபடும் அவலம் நீடிக்கிறது. எமக்கான சமூக அமைப்பானது பிரத்தியேகத் தன்மைகளை உடைய சாதிகளின் ஊடாட்டத்துக்கு உரியது என்ற வகையில், அதன் தனித்துவப் பண்புகளைப் புறநிலை ரீதியாக ஆய்வுக்கு உள்ளாக்காமல் மார்க்சியத்தைக் கையேற்றவர்கள் இந்தியச் சமூக வரலாற்றில் முன்னர் இருந்ததாகத் தாம் கருதிய (கண்டுபிடித்த) வர்க்கப் போராட்டங்களை நுண்ணாய்வுகளால் வெளிப்படுத்திக் காட்ட முற்பட்டனர். அவ்வாறு காட்டிய ‘வர்க்கப் போராட்டம்’ எதுவும் சமூக மாற்றம் எதையும் ஏற்படுத்தி இருந்ததாக மட்டும் ஒருபோதும் வெளிப்படுத்த இயலுமாக இருக்கவில்லை.
மாறாக, சமூக மாற்றப் புரட்சி ஒன்றைத் தெளிவுற எடுத்துக் காட்டுவதாகத் தமிழகத்தின் பக்திப் பேரியக்கம் அமைந்திருந்தது. வணிகச் சமூகத்தினது அதிகாரத்தை வீழ்த்தி வெள்ளாளர் சாதி அதிகாரத்தை வென்றெடுத்த பண்பாட்டுப் புரட்சியே பக்திப் பேரியக்கம் என்பதனை க. கைலாசபதி தெளிவுற எடுத்துக் காட்டி உள்ளார். எமக்கான சமூக மாற்றப் புரட்சியின் இந்த அம்சத்தை அவர் வெளிப்படுத்திய பின்னரும் கூட தமிழக மார்க்சியர்களால் முக்கியத்துவம் மிக்க இந்தப் பங்களிப்பை அதற்குரிய குணாம்ச வீச்சுடன் உள்வாங்க இயலவில்லை. மிகப் பெரும் ஆய்வுக் களங்களைத் தமிழகத்தில் தொடக்கி வைத்து விரிவுபடுத்தியவரான வானமாமலை, க. கைலாசபதியின் “பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்” நூல் குறித்த கருத்துரையில் பக்திப் பேரியக்கம் பற்றிய கைலாசபதியின் அடிப்படையான இந்த நிலைப்பாட்டை மறுத்து விவாதித்து இருந்தார்.
உலகின் வேறுபட்ட சமூக அமைப்பு ஒன்றின் உருவாக்கம் திணை மேலாதிக்கத்தின் வாயிலாக கிமு 3 ஆம் நூற்றாண்டு முதலாக நடந்தேறியமையை தெளிவுற எடுத்துக் காட்டிய தமிழகம் பின்னரான வேகப்பட்ட வளர்ச்சியில் கிபி 7 ஆம் நூற்றாண்டு முதலாக பக்திப் பேரியக்கம் எனும் திணை அரசியலுக்கான சமூக் மாற்ற வடிவத்தைத் தெளிவுற வெளிப்படுத்தி இருந்தது; இதனைத் தமிழக மார்க்சியர்களால் கண்டு காட்ட இயலாதிருந்தது ஏன்? இத்தகைய பண்பாட்டுப் புரட்சி வடிவத்தின் இயங்கு முறை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரதி முதல் காந்தியின் ‘அரசியல் அதனிலும் அறம்’ பேணிய ஆன்மீக அரசியல் பிரயோகம் வரையில் செல்வாக்குச் செலுத்தியிருந்தது; இருந்த போதிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதனது கருத்தியலிலும் நடைமுறையிலும் வர்க்கப் போராட்டம் பற்றியே குறியாக இருந்து எமக்கான வேறுபட்ட சமூக முறைமையைப் புரிந்து கொள்ளாததைப் போலவே இதற்கான சமூக மாற்றப் பிரத்தியேகச் செயலொழுங்கையும் கவனங்கொள்ளாது இருந்துள்ளது. கட்சி பண்பாட்டு இயக்கத்துக்கான அவசியத்தை வலியுறுத்தாது இருந்த போதிலும் சொந்தமாகப் பெற்ற அருட்டுணர்வின் உந்தலுடன் பண்பாட்டுக் களச் செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்ட ஆளுமைகளும் கூட கட்சி நிலைப்பாட்டை மதித்து வர்க்கப் புரட்சிக்கு உதவும் கருவியாகத் தமது பண்பாட்டுச் செயற்படுகளை மட்டுப்படுத்திக் கொண்டனர்.
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை மந்தப்படுத்தித் திசை திருப்பும் உத்தியாக ஆரியர் – திராவிடர் மோதலுக்கு உரிய கோட்பாடுகள் தூண்டப்பட்டன; தேசிய உணர்வைத் தூண்டுவதில் ‘முன்னரிருந்த உன்னத நிலை’ என்ற இந்துப் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் இஸ்லாமியர்களிடம் இந்து விரோதம் வளர்க்கப்பட்டது. பொதுவான விடுதலையின் பகுதியாக அன்றித் தனி வழியில் இயங்கும் வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுகான தலித் அரசியல் செல்நெறி வடிவம் பெற ஏற்றதாக ஆற்றுப்படுத்தப்பட்டது. இவ்வகையில் ஏகாதிபத்தியத்தால் தூண்டப்பட்ட இன, மத, சாதி வாதங்களை நிராகரித்துக்கொண்டு அவற்றுள் பொதிந்துள்ள அவசியங்களான எதிர் தேசிய வடிவங்களது கோரிக்கைகளையும் இணைப்பதற்கு மாறாக மேலாதிக்கத் தேசியப் பண்புடன் இயங்கிய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்பதே முன்னுரிமைக்கு உரியது என மார்க்சியர்கள் கருதினர்; சுதந்திரம் எட்டப்பட்ட பின்னரான வர்க்கப் போராட்டத்தின் நீட்சியாக இன, மத, சாதி, பாலின எனவாக உள்ள பல வகைப் பேதங்களையும் களைந்தெறியும் பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடாத்த இயலும் என்பது மார்க்சியர்களது நிலைப்பாடாக இருந்தது.
இலங்கையைக் கையாள்வதில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் சுயநிர்ணயம் இன்னொரு வகையில் அமைந்திருந்தது. அகண்ட பாரதக் கனவுடன் மேலாதிக்கத் தேசிய நாட்டத்துக்கு உரியதாக இந்தியாவில் இயங்கிய ஒரு தரப்பினரைக் காட்டி இந்திய விரோத்தைச் சிங்களத் தேசியத்திடம் அவர்களது விகிதாசாரத்துக்கும் அதிகமான அரசியல் உரிமையைச் சிங்களத் தேசியத்துக்கு வழங்கிய அதேவேளை நாட்டு நிர்வாகத்தில் மிகப் பெரும்பான்மையை யாழ்ப்பாணத் தமிழர்களிடம் பிரித்தானிய ஆட்சியாளர்கள் வழங்கி இருந்தனர் என்பது பற்றிப் பார்த்திருந்தோம். சிங்கள – தமிழ் இனத் தேசிய மோதல்களுக்கான வெளிகளை அமைத்துக்கொண்டதைப் போல தமிழ் பேசும் மக்களில் முஸ்லிம், மலையக மக்கள் எனும் பிரிவினரும் இலங்கைத் தமிழ் மக்களிடமிருந்து வேறுபடுவதற்கான இடங்களை வலப்படுத்துகிற கைங்கரியங்களைக் காலனித்துவ வாதிகளின் செயற்பாடுகள் மேற்கொண்டு இருந்தன (இலங்கை பூராகவும் நிர்வாக மேலாதிக்க வெளி ‘யாழ்ப்பாணிகள்’ கைவசம் என்ற அம்சம் அதற்குப் போதுமானதாக இருந்தது).
அத்தகைய இனத் தேசியப் பேதங்களைக் கையாளுவதே போதுமானதாக அமைந்த காரணத்தால் சாதியப் பிளவை வலுப்படுத்தும் வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களை ஏகாதிபத்தியத் திணை உருவாக்கிக்கொள்ளாது இருந்தது. சாதி பேதம் கடந்து ஏற்படவல்லரசியல் செல்நெறி வீச்சின் தாற்பரியத்தை ஆய்வுக்கு உள்ளாக்கும் தேவையை உணர்ந்தும் இந்தப் பாராமுகம் அமைந்திருக்கலாம். சர்வஜன வாக்குரிமை காலனித்துவத்துக்கு ஆட்பட்டிருந்த நாட்டில் எத்தகைய தாக்கங்களைச் சாத்தியப்படுத்தும் என்ற பரீட்சார்த்தம் போல சாதி வேறுபாடுகளைக் கடந்த ஒன்றுபடலின் பெறுமானத்தைச் சிறு தொகையினரைக் கொண்டுள்ள யாழ்ப்பாணத்தில் கண்டறிவதற்கு அவசியம் இருந்தது; மிகப் பெரும் மக்கள் சக்தியான இந்திய மண்ணில் சாதி பேதங்களை வளர்ப்பதன் வாயிலாகச் சமூக மாற்றச் சாத்தியங்களைப் பின்போட வாய்ப்புள்ளது என்பதன் அவசியத்தைத் தமக்குள் மீள வலியுறுத்திக் கொள்ள இங்கு இந்தப் பரீட்சார்த்தம் அனுமதிக்கப்பட்டது!
இந்தியாவின் இன, மத, சாதிய வேறுபடுத்தல்களின் பேறாக ‘திராவிடரிய மார்க்சியம்’, பார்ப்பனிய மார்க்சியம்’, ‘தலித்திய மார்க்சியம்’, ‘வர்க்க வாத மார்க்சியம்’ என்பனவே இன்றுவரை இயக்கம் கொள்ளக் காண்கிறோம்; தனி நபர்களாகச் சிலரிடம் வரலாற்று – பொருள் முதல்வாத நிலைப்பட்ட மார்க்சிய நோக்கு சாத்தியப்படுகிறதே அன்றி இயங்கு நிலை அணிகளில் மேற்படி ‘முடக்குவாத மார்க்சியங்களே’ செயலுருப் பெற்றுள்ளன. திணை மேலாதிக்கம் வாயிலாக இயங்கும் எமக்கான தனிவகைத் திணை அரசியல் பற்றி இரண்டு தசாப்தங்களாகப் பேசப்பட்டு வந்த போதிலும் அதனைத் தமக்கானதாக வளர்த்தெடுத்துப் பிரயோகிக்க முற்படாமல் திராவிட, பிராமணிய, தலித்திய, வர்க்க வாத முடக்கங்களுடன் மார்க்சியச் சொல்லாடல்கள் இடம்பெறும் நிலை இன்றும் கூட நிலவுகிறது. ஆறேழு தசாப்தங்களுக்கு முன்னர் பக்திப் பேரியக்கம் சமூக மாற்றக் கருவியாக அமைந்தது என்பது பற்றி கைலாசபதி முன் வைத்த கருத்தை ஏற்கவியலாது இருந்த பின்னணி புரிந்து கொள்ளத் தக்கதே.
அரசியல் விழிப்புணர்வு பெற்று 1925 இல் சுவாமி விபுலாநந்தர் தலைமையேற்ற மாநாடு ஒன்றினை யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் கீரிமலையில் நடாத்தி இருந்தது. பாரதியின் கருத்தியல் தாக்கத்துடன் ‘பூரண சுதந்திரம், பெண் விடுதலை, சாதியத் தகர்ப்பு’ என்பவற்றை அதனது பிரகடனமாக இந்த மாநாடு முன்னிறுத்தி இருந்தது. முப்பதாம் ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்தவர்களாக வளர்ந்துவிட்ட முன்னாள் மாணவர்கள் தமது அமைப்பை ‘யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்’ என மாற்றி இயங்கியதோடு, அப்போது உருவாகி இயங்கிய மார்க்சியர்கள் ஒன்றிணைந்து ஏற்படுத்திய “சம சமாஜக் கட்சி” இன் செயற்பாட்டாளர்களாகவும் திகழ்ந்தனர். தமக்கு அடித்தளமிட்ட விடுதலைத் தேசியத்தின் முழுமைப்பட்ட (பிளவுபடாத) சுதந்திரக் குறிக்கோளை மார்க்சியக் கண்ணோட்டத்தில் மேலும் வளர்த்தெடுத்த வண்ணமாகச் சாதியத் தகர்ப்புக்கெனத் தொடர்ந்தும் உளப்பூர்வமாகச் செயலாற்றினர்.
பூரண விடுதலையை நேசித்த முற்போக்கான (ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த) இளைஞர்களது தொடர் இயக்கத்தை நாற்பதாம் ஆண்டுகளின் நடுக்கூறில் இருந்து தனித்து இயங்கிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் கையேற்று இருந்தது. நாற்பதாம் ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீறுகொண்ட எழுச்சியும் ஏற்படத் தொடங்கி இருந்தது; அதுவரை இருந்த நடைமுறையாகிய சாதிக்கு ஒரு சங்கம் என்பதைக் கைவிட்டு அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரும் இணைந்த “சிறுபான்மைத் தமிழர் மகா சபை” உருவாகியது. ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுபட்ட அமைப்பாகத் திரண்டெழுந்து தமக்கான நலன்களையும் உரிமைகளையும் வென்றெடுக்க எனச் செயலுருப்படுத்திய போராட்ட அனுபவங்களின் நீட்சி அறுபதாம் ஆண்டுகளின் முடிவில் ஆதிக்கச் சாதியினர் உட்பட அனைத்துச் சாதியினரும் ஒன்றிணைந்து சாதியத் தகர்ப்புக்கான “தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்” தோற்றம் பெற வழிப்படுத்தி இருந்தது. சாதி அமைப்புக்கு எதிரான போராட்ட உணர்வுடன் இத்தகைய அமைப்புகளில் செயற்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகப் போராளிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இணைந்து மார்க்சியத்தை விருத்தி செய்யும் படைப்பாக்கங்களையும் வெளிப்படுத்தினர்.
சாதியத்தின் ஒரு அடிப்படையாக அமைவது வேறுபடுத்தலை வெளிப்படுத்துகின்ற தீண்டாமை – புனிதம் என்ற தகுதிப்பாடுடைய சாதிகள் உள்ளன எனும் பேதப்படுத்தல் ஆகும். அத்தகைய சாதி பேத த்தைத் தகர்த்து, சாதிகள் இடையே சமத்துவத்தை வென்றெடுப்பதற்குத் தீண்டாமைக்கு உரிய சாதிகள் என வகைப்படுத்துகின்ற முறைமையை ஒழித்துக்கட்டுதல் அவசியப்படும் ஒரு முன்தேவை; அந்தக் குறிக்கோளுடன் “சாதி அமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்” என்ற பதாகையின் கீழ் புரட்சிகர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியால் 21 எழுச்சி மார்க்கம் (1966) தொடர்ந்து வீறுடன் செயற்பட்டதன் பேறு அனைத்துச் சாதிகள் மத்தியிலும் இருந்து செயற்குழு உறுப்பினர்களை உள்வாங்கித் தோற்றம் பெற்ற “தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்”. ஒக்ரோபர் 21 எழுச்சிப் போர்க்களச் செயற்பாடுகள் ஐந்து வருடங்கள் நீடித்ததன் பேறாக, பொது இடங்களில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக அதுவரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைக்கு முடிவுகட்டப்பட்டது. தீண்டாமையின் பேரால் பொது இடங்களில் சாதி பார்ப்பதனை இல்லாமல் ஆக்குதல் (சாதியை ஒழித்தல் அல்ல, தீண்டாமையை ஒழித்தல்) என்ற அன்றைய போராட்ட இலக்காக வரையறுக்கப்பட்ட குறிக்கோள் இவ்வகையில் வெற்றி கொள்ளப்பட்டது.
விடுதலைத் தேசியச்
சுயநிர்ணய உரிமையும்
ஏகாதிபத்தியச் சுயநிர்ணயமும்
நாற்பதாம் ஆண்டுகளில் இருந்து மூன்று தசாப்தங்களாக நீடித்த சாதியத் தகர்ப்புக்கான எழுச்சியின் பேறாக சமூக ஒடுக்குமுறைகளைத் தகர்க்கும் ஆற்றலை இலங்கை மார்க்சியர்களும் கொண்டுள்ளார்கள் என்பது நிரூபணம் ஆகியிருந்தது. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் வீறுமிக்க போராட்டங்கள் போலித்தனமாகத் தமிழ்த் தேசியம் பேசியபடி ஏகாதிபத்திய நலன்களைத் தொடர்ந்து பேண முயன்ற வலதுசாரித் தலைவர்களை அச்சப்படுத்தி இருந்தது. வுடுதலைத் தேசியப் பண்பற்ற தமிழ்த் தேசியர்கள் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட சாதியத்தகர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய தமக்குரியதான தேசிய அரசியல் கடமையிலிருந்து விலக்குப் பெற்றுக்கொண்டனர்; அதேவேளை, பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இளம் பிரச்சினைத் தீர்வான சுயநிர்ணய உரிமை குறித்த கற்றலுக்குத் தூண்டுவதாக அமைந்திருந்தது. சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி அந்த இளையோரை ஈர்க்கும் வகையில் தேசிய இனப் பிரச்சினைத் தீர்வுக்கான போராட்டங்களைத் திறக்கக் கூடும் – அவ்வாறு நேரும் பட்சத்தில் இளைஞர்கள் அவர்களைப் பின்பற்றக் கூடும் என்பதோடு தமது இருப்புக் கேள்விக்கு உள்ளாகும் என அஞ்சிய மேலாதிக்கத் தமிழ் தேசியத் தலைமை அதிதீவிரமான பிரிவினைக் கோசத்தை முன்வைத்து “ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை” என்று தமிழீழப் பிரகடனத்தை (வட்டுக்கோட்டைத் தீர்மானம் – 1976) முன்வைத்திருந்தது.
தேசிய இனப் பிரச்சினைத் தீர்வுக்கு மார்க்சியம் எவ்வகையில் வழிகாட்ட இயலும் என மார்க்சியத்தைக் கற்க முயற்சித்த இளம் தலைமுறையினர் ‘தமிழீழப் பிரிவினையை வெற்றிகொள்ள மார்க்சியம் எப்படி வழிகாட்ட இயலும்’ என்று தான் தேட முற்பட்டார்களே அல்லாமல், தேசிய இனப் பிரச்சினைக்கான மார்க்சிஸ – லெனினிஸ வழிகாட்டல் எத்தகையது என்பதனைப் புறநிலை ரீதியாகக் கற்பதற்கோ ஆய்வு செய்யவோ முற்படவில்லை; அவர்களில் பலரிடம் விடுதலைத் தேசிய நாட்டம் இருந்த போதிலும் தவறான முன் முடிவுக்கு ஆட்பட்ட காரணத்தால் இல்லாத ஊரைக் காட்டி சுயலாபம் தேட முயன்ற மேலாதிக்கத் தமிழ்த் தேசியத்தின் வாலாக அமைந்து அதன் ஆயுதப் பிரிவால் காணாமல் ஆக்கப்பட்டனர். மேலாதிக்கத் தேசியத்தின் அரசியல் அணிக்குரிய கபடத்தனத்தைப் புரிந்து கொள்ளாமல் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டமும் 2009 ஆம் ஆண்டில் நிர்க்கதிக்கு உள்ளாகி மௌனிக்க வைக்கப்பட்டது. அந்த மேலாதிக்கச் சுயநிர்ணயம் என்பது ஏகாதிபத்திய நலன் சார்ந்தது என்ற வகையில் தமிழ்த் தேசிய விடுதலைக்கென ஆகுதியான உயிர்த் தியாகங்கள் உள்ளிட்ட அனைத்து அர்ப்பணிப்புகளும் அந்நிய மேலாதிக்க சக்தியால் அறுவடை செய்யப்பட்டன. எவரோ ஆதாயம் பெற எமது சக்திகள் அனைத்தையும் வீணடித்தமையை உணராமல் (அது பற்றிய புரிதல் இருப்பினும் அதனை மூடி மறைத்த பொய் முகத்துடன்) ‘விட்டுக்கொடுப்பற்ற போராட்டத்தை முன்னெடுத்தனர்’ எனப் புகழ் மாலை சூட்டுவது எதனை வெளிப்படுத்துகிறது? கழித்தல் பெறுமானத்தில் எமது அரசியல் இருப்பை நகர்த்தவே இத்தனை பெரிய அர்ப்பணிப்புகளும் வழிகோலின என்றால் முன்னெடுக்கப்பட்ட நடைமுறைச் செயலொழுங்குகளில் உள்ள தவறு தானே பட்டவர்த்தனம் ஆகின்றது? அழிவுகரமான தோல்விகளுக்குக் காரணமான எமது பக்கத் தவறுகளைச் சுய விமரிசனத்துக்கு உட்படுத்தாமல் அன்றைய யுத்த முன்னெடுப்பில் ‘வீரதீரச் சாகசங்கள்’ புரியப்பட்டதாகக் கூறி, ‘அழித்தல் கடவுளுக்கான வழிபாடு’ போன்ற அவலங்களையே இன்றும் தொடர்வதான அரசியல் முன்னெடுப்பு, இன்னமும் அதளபாதாளத்தை நாடி நிற்கிறோம் என்பதைத் தானே உணர்த்தி நிற்கிறது?
இத்தனை அழிவுகளுக்கும் அரசியல் பின்னடைவுகளுக்குமான பழியைத் தனியே வலதுசாரிகளின் தலைமேல் மட்டும் போட்டுவிட்டு இடதுசாரிகளான நாம் வாழாதிருந்துவிட இயலாது; ‘அடைந்தால் தமிழீழம், இல்லையேல் வீர மரணம்’ என்று முன்கூட்டியே (எழுப்புகிற கோசத்திலேயே) சயனைட்டைக் கட்டி முன்னெடுக்கப்பட்ட ‘தீர்க்கதரிசனக்’ கெடு வழிக்கு அவசியம் இல்லை என்று காட்டும் வகையில் தேசிய இனப் பிரச்சினைத் தீர்வுக்கான போராட்டத்தையும் கையேற்றிருக்க வேண்டிய இடதுசாரித் தலைமைகளும் சுயவிமரிசனத்தை மேற்கொள்ள அவசியம் உள்ளது. ‘பிரிவினை நாட்டம் என்பது அந்நிய சக்திகள் இங்கே ஊடுருவ வழிகோலுகின்ற கேடான அரசியல் தீர்மானம்’ என்று நாங்கள் அப்போதே சொல்லி இருக்கிறோம் எனக் கூறுகின்ற இடதுசாரிகள் சிலர் அதன்போது தாம் முன்னெடுத்திருக்க வேண்டிய அரசியல் பணியைச் செய்யத் தவறியது குறித்து எதுவும் பேசாமல் இருக்கிற அவலமும் உள்ளது. ஏகாதிபத்தியத்திக்குக் காட்டிக்கொடுக்கின்ற பெரும் தவறை வலதுசாரிகள் பிரிவினைக் கோசத்தின் வாயிலாக முன் வைக்கிறார்கள் எனும் எச்சரிக்கையை இடதுசாரிகள் காத்திரமான முறைகளில் வெளிப்படுத்தி இருந்தார்கள் என்பது மெய். அதேவேளை இனப் புறக்கணிப்புகளுக்கு ஆட்பட்ட காரணத்தால் செய்யத் தகாத செயல்களில் முனைப்புக் காட்டிய இளம் தலைமுறையினரான பலரிடம் வெளிப்பட்ட மார்க்சிய நாட்டத்தையும் விடுதலைத் தேசிய உணர்வையும் சரியான திசைமுகப்படுத்தலுக்கு ஆட்படுத்தவல்ல செயல் திட்டங்களை இடதுசாரிகள் முன்னெடுக்காது இருந்தார்கள் என்பதும் மற்றொரு உண்மை!
இது சிங்கள் இடதுசாரிகளது சதியின் பாற்பட்ட செயற்பாடாக அமைந்ததல்ல; அன்றைய மிகப் பெரிய இரண்டு தொழிற்சங்கங்களின் தலைவர்களாக நா. சண்முகதாசன் (சண்), அண்ணாமலை ஆகிய இரு தமிழர்களே இருந்தனர். அப்போது தோழர் சண் தலைமையிலான புரட்சிகர் கம்யூனிஸ்ட் கட்சியில் மிகப் பெரும்பான்மையினரான சிங்கள விவசாயிகள் – தொழிலாளர்கள் – மாணவர்கள் – ஆசிரியர்கள் ஆகியோர் அணிதிரண்டு இருந்தனர். சாதியத்துக்கு எதிரான போராட்டம் யாழ் மண்ணில் இடம்பெற்ற போது தோழர் சண் அதனை உறுதியாக ஆதரித்துத் தலைமைப் பண்பை வெளிப்படுத்தி இருந்தமையால் அங்கும் அவரது கட்சியே வலுவுடையதாக இருந்தது. சிங்கள மக்கள் உறுதியுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த அதேவேளை தமிழ் தலைமைகள் ஏகாதிபத்தியத்தை விடாப்பிடியாக ஆதரித்து வந்த காரணத்தால் தமிழ் மார்க்சியர்களும் தமிழ்த் தேசியத்தின் நியாயமான கோரிக்கைக்கு உரிய பக்கங்களைப் பார்க்கத் தவறினர். தமிழின் பேரால் முன்னெடுக்கப்பட்ட ஏகாதிபத்தியச் சார்பை எதிர்த்தபோது அதனுடன் ஒட்டியுறவாடிய அவர்களின் குறுந்தேசிய வாதத்தை நிராகரிக்கும் சரியான நிலைப்பாடு வெளிப்பட்டது; தமிழ்த் தலைவர்களைக் கடந்து புறநிலை நிதர்சனங்களைக் காணத்தவறியதில் வரலாற்றுத் தவறு நேர்ந்தது. தேசிய இனப் புறக்கணிப்புகள் வளர்வதும் பேரினவாத அச்சுறுத்தல் வலுப்பட்டு வருவதும் குறித்துத் தமிழர்கள் மத்தியில் இயங்கிய இடதுசாரிகள் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுப் புறக்கணிக்கத் தக்கதல்ல.
சிங்களம் மட்டும் அரசகரும மொழி என ஆக்கப்பட்ட போது அத்தகைய இனவாதச் செயற்பாட்டுக்கு எதிராகப் போராடிய சிங்கள இடதுசாரிகள் தமிழீழக் கோரிக்கை எழுந்த சூழலில் தமிழ் இனவாதத்துக்கு எதிராகப் போராடினரே அல்லாமல் அதற்குரிய பின்புலமாக அமைந்த பேரினவாதப் புறக்கணிப்புக்கு எதிராக உறுதியாகப் போராட வேண்டிய தமது வரலாற்றுக் கடமையைக் கண்டுகொள்ளவில்லை. இடதுசாரிகளது ஐக்கியத்துடன் ஆட்சி அமைத்த 1970 – 1977 காலகட்டத்தின் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டரசாங்கம் சுயசார்புப் பொருளாதார முன்னெடுப்பில் இலங்கையை ஆளுமைமிக்க நாடாகக் கட்டியெழுப்புவதற்கு இடதுசாரிகளது பங்களிப்பு அடிப்படைக் காரணி; தவிர்க்கவியலாமல் 1972 ஆம் ஆண்டு உயர் கல்வியில் தரப்படுத்தல் கொண்டு வரப்பட்ட போது, இன விகிதாசாரமாக அல்லாமல் மாவட்ட அடிப்படையில் அது முன்னெடுக்கப்பட வேண்டும் என இடதுசாரிகளே சரியான வகையில் கையாளுவதற்கு ஆற்றுப்படுத்தி இருந்தனர். அத்தகைய மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலினால் யாழ்ப்பாண மாவட்டம் மட்டும் பாதிக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்களுக்கான ஏனைய மாவட்டங்களில் இருந்து தமிழ் மாணவர்கள் அதிகமாகப் பல்கலைக் கழக வாய்ப்பைப் பெற அது உதவியிருந்தது. அதேவேளை, அரசியல் ரீதியான தமிழர் புறக்கணிப்புகளில் அந்தக் கூட்டரசாங்கம் தவறுகள் பலவற்றை மேற்கொள்வதற்கு இடதுசாரிகள் எதிர்ப்புக் காட்டாதது மட்டுமன்றி, ஏகாதிபத்திய எதிர்ப்பின் பேரால் அவர்களும் காரணிகளாக அமைந்திருந்தனர். அவர்களது இனப் புறக்கணிப்புப் பக்கத்துக்கு அப்பாலான ஏனைய தவறுகளும் இணைந்த நிலையில் அதுவரை – மூன்று தசாப்தங்களாக – சோசலிச மாற்றத்தை வேகமாக நாடத்தக்க இனத் தேசியமாகத் திகழும் வகையில் சிங்களத் தேசியத்தை வழி நடாத்திய தலைமைப் பாத்திரம் இடதுசாரிகளின் கைகளை விட்டு நீங்கிப்போனது. அதனை வாய்ப்பாக்கி (அதன்பொருட்டுத் தமிழ் இனவாதிகளுடன் கைகோர்த்துப் பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வந்ததன் வாயிலாக கூட்டரசாங்கம் இன வாதத் தவறுகளை மேற்கொள்ள ஏற்ற சந்தர்ப்பங்களைத் துரிதப்படுத்தி) 1977 ஆம் ஆண்டில் அதிகாரத்துக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன வகுத்த பேரினவாத மேலாதிக்க அரசியல் பொறியைத் தகர்க்க இயலாத பலவீன நிலைக்கு அன்று மட்டுமன்றி இன்றைய வரையிலும் சிங்கள இடதுசாரிகள் ஆட்பட்டுள்ளனர். அதன் மறுபக்கமாக தமிழ்த் தேசியத்தின் மேலாதிக்க வாதப் பாசிசத்தால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களது விடுதலைத் தேசியத்துக்கான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை மீளெழுச்சி பெற இயலாமல் இன்று வரை முடங்கிப் போயுள்ளது. ஏகாதிபத்தியச் சுயநிர்ணயத்தையே தமது ‘விடுதலைக் குரல்’ எனத் தமிழ் மக்கள் மயங்கித் தவறுகளின் மேல் தவறுகளை வளர்த்து முற்றாகவே தமக்கான சுயத்தைப் பறிகொடுக்கும் நிலைக்கு ஆட்படுவதற்கு இடதுசாரிகளின் இந்தத் தவறு அடிகோலிவிட்டு உள்ளது.
ஆக, தேசியம் என்பது வரலாற்று இயக்கப் போக்கின் குறித்த ஒரு பொருளுற்பத்தி உறவுக்கான வடிவம்; மூலதன அபகரிப்புக்கு வாய்ப்பைப் பெறும் மேலாதிக்கத் திணையும் அதனுள் இயங்கும் முதலாளித்துவ வர்க்கமும் அபகரிப்பை மேற்கொள்ள ஏற்றதாக வரையறுத்த ஒன்று என்ற வகையில் என்றென்றைக்குமான புனிதப் பொருளல்ல. அதன் இயல்பிலேயே மேலாதிக்கத் தேசியமாக, அல்லது ஒடுக்கப்பட்ட தேசமாக அமைந்துள்ள வடிவமே தேசியம். அதன் காரணமாகச் சுயநிர்ணயமும் அப்படியொன்றும் புனிதப் பொருளல்ல; மேலாதிக்கத் திணையின் சுயநிர்ணயத்துக்கும் இடம் உள்ளது – ஒடுக்குமுறையைத் தகர்க்க ஓர்மம் கொண்ட விடுதலைத் தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அதனின்றும் வேறுபடுத்த ஏற்ற அரசியல் விழிப்புணர்வு இயங்கத் தவறும்போது ஏகாதிபத்தியச் சுயநிர்ணயமே ஆதிக்கம் புரிய இடமளிப்போம்.
தேசிய எழுச்சியும்
மக்கள் இலக்கியமும்
நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஐரோப்பிய நாடுகளின் காலனித்துவ ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டிருந்த இலங்கை மண்ணில் மூன்று தசாப்தங்களாக (சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகள் முதல் எழுபதாம் ஆண்டுகள் வரை) காலனித்துவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான விட்டுக்கொடுப்பற்ற போராட்டங்களை முன்னெடுக்க இயலுமாக இருந்தது. தமிழ் – சிங்கள – முஸ்லிம் – மலையக இனத் தேசியங்களுக்கு உரிய மக்களும் பறங்கியர், மலேயர் உள்ளிட்ட பிற சிறுபான்மைச் சமூகத்தவர்களும் இணைந்து ஒன்றுபட்டு இயங்கிப் புதிய பண்பாட்டு எழுச்சியைக் கட்டியெழுப்புவதன் ஊடாக விருத்தி பெற்ற ஒரு நாடாக இலங்கையை வளர்த்தெடுக்க இயலும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அன்றைய முற்போக்கு இயக்க எழுச்சியின் வீறுமிகு செயற்பாடுகள் அமைந்திருந்தன.
அதன்போது கவனங்கொள்ளத் தவறிய சுயநிர்ணய உரிமைப் பிரச்சினைக்கு உரிய பக்கத்தின் செயலொழுங்குகளது செல்நெறி காரணமாக, இன்று எமது இலங்கைத் தேசம் அதனது ஆளுமை-சுயாதிபத்தியம் என்பவற்றை இழந்து தவிப்பதற்குக் கால்கோளாக அமைந்தது. இன்னமும் அதே மேலாதிக்கத் தேசியவாத முடக்குவாதத்தின் பாற்பட்ட இனவாத அரசியலே அனைத்து இனத் தேசியங்கள் மத்தியிலும் இயங்கு நிலையில் தொடர்வது என்பது எமது சுதந்திரத்தையும் கையகப்படுத்துவதற்கு ஏகாதிபத்தியச் சுயநிர்ணயம் தொழிற்பட இடமளிக்கிறோம் என்பதன் வெளிப்பாடே.
முன்னதாக, ஒன்றுபட்ட உழைக்கும் மக்களது போராட்டங்களை அனைத்து இனத்தேசியங்களையும் ஐக்கியப்படுத்தி முன்னெடுத்துத் தலைமையேற்றிருந்த மார்க்சியர்கள் வர்க்க அரசியலுக்கு வேறாகத் திணை அரசியல் செயலொழுங்குடனான வரலாற்று இயங்குமுறை ஒன்றின் இருப்பைக் கவனங்கொள்ளாது இருந்ததன் பேறாக ஏற்பட்ட தவறுகளுக்கான இடைவெளி ஊடாக ஏகாதிபத்தியச் சுயநிர்ணயம் எமது நாட்டைப் பிரித்தாளும் வாய்ப்புக்கு இடமேற்படுத்திக் கொடுத்துள்ளனர். எழுபதாம் ஆண்டுகள் வரையும் வர்க்க அரசியலானது உலகளவில் தீர்க்மான பங்குப் பாத்திரத்தை வகித்து வந்த காரணத்தால் எமது முன்னோடிகளும் வரலாற்று மாற்றப் போக்கைக் கவனங்கொள்ளாது இருந்தனர்; முன்னதாக, திணை அரசியல் ஊடாகவும் (விடுதலைத் தேசியப் புரட்சி ஊடாகவும்) பழைய சமூக அமைப்பைத் தகர்க்கும் மாற்றப் போக்குக்கு உரிய சந்தியாக 1917 ஒக்ரோபர் புரட்சியே இருந்துள்ளது (அது தனியே பாட்டாளி வர்க்கப் புரட்சி அல்ல) என மேலே பார்த்துள்ளோம். இத்தகைய முழுச் சமூக சக்தி ஊடாக (விடுதலைத் தேசியத்தின் ஊடாக) சமூக மாற்றம் எட்டப்படுவதற்கு ஏற்புடையதாய் மார்க்சிஸம் – லெனினிஸம் விருத்தி செய்யப்பட்டு பிரயோகிக்கப்பட்ட புதிய வடிவமே மாஓ சேதுங் சிந்தனை; அதனை வழங்கிய மக்கள் சீனமும் கூட, புதிய ஜனநாயக மாற்றியமைத்தல் நிறைவடைந்த உடன் பாட்டாளி வர்க்க அரசியல் முறைமையைப் பிரயோகிக்க முற்பட்டு அதனது வளர்ச்சிக்குத் தடையை ஏற்படுத்திக் கொண்டது; அவ்வகையில் ஏற்பட்ட ஒரு முறிவுக்குப் பின்னரே விடுதலைத் தேசியச் சிந்தனை முறைமையாக வளர்த்தெடுக்கப்பட்டுப் பிரயோகிக்கப்படதான (திணை அரசியலுக்கு உரிய) மாஓ சேதுங் சிந்தனையே தேசிய விடுதலை வாயிலாக எட்டப்படும் நாடொன்றின் சோசலிச மாற்றி அமைத்தலுக்கும் வழிகாட்டவல்ல அரசியல் நெறி என்ற தெளிவுக்கு வந்து சேர்ந்தது. திணை அரசியல் வடிவம் என்ற புதிய வரலாற்றுச் செல்நெறி மாற்றத்தின் பேறு அது என மக்கள் சீனத்தால் இன்னமும் தெளிவுபடுத்த இயலாதுள்ளது.
அத்தகைய முழுச் சமூக சக்தி (திணை) பிரத்தியேகம் உடையதான ஒரு அரசியல் இயங்கு முறையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் செயலாற்றி வந்த தமிழகத்தின் மார்க்சியர்கள் அதனைக் கண்டு காட்டி இருக்க வேண்டும். அவ்வாறு செயற்பட இயலாத வகையில் ஏகாதிபத்தியச் சுயநிர்ணயம் இங்கே செயற்பட்டது; பல ஏகாதிபத்திய நாடுகள் சீனாவைத் துண்டாடிக் கையாண்டதைப் போலன்றி, ‘இந்தியத் தேசியத்தைக்’ கட்டமைத்த பிரித்தானிய ஏகாதிபத்தியம் நூற்றாண்டுக்கு மேலாகச் செயற்படுத்திய நடைமுறைப் பிரயோகம் வாயிலாக அடையாள அரசியலின் சகதியாக ஆகியிருந்தது. அவ்வகையில் ஏற்பட்ட எதிர் தேசியப் புகாரானது திணை அரசியல் களமாக எமது சமூகத்தைப் புரிதல் கொள்ள இடமளிக்காது தடுத்தது. தமிழக மார்க்சியர்களின் பார்வைக்குத் துலக்கமாக வெளிப்படாமல் போயிருப்பினும், அவர்களது (மற்றும் கேரள) அனுபவங்களையும் உள்வாங்கி யாழ்ப்பாண மண்ணில் முன்னெடுக்கப்பட்ட ஒக்ரோபர் 21 எழுச்சி (1966) மார்க்கத்தின் அனுபவத் தொகுப்பானது மார்க்சியத் திணை அரசியல் வடிவத்தை வெளிப்படுத்தித் தந்துள்ளது. அந்த மார்க்கத்துக்கு நேரடியாகத் தலைமை ஏற்று வழிநடாத்தியதோடு அதன் செயலொழுங்குகள் அனைத்துக்குமான தெளிந்த பார்வையை வழங்கும் கருத்தியலை வடிவப்படுத்தியவரான தோழர் கே.ஏ. சுப்பிரமணியம், தமிழக கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட பிரசுரங்கள் வாயிலாகவே அந்தக் கருத்தியலைத் தான் வந்தடைய இயலுமாக அமைந்தது எனத் தெளிவுபடுத்தி உள்ளார்; குறிப்பாக, கேரளத்தில் ஏ.கே. கோபாலன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சாதியத் தகர்ப்புப் போராட்ட அனுபவங்களே தனக்கான உந்துசக்தியாக அமைந்திருந்தது என்பதனை அவர் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளார்.
முன்னதாக நாற்பதாம் ஆண்டுகளில் இருந்தே இலங்கை மார்க்சியர்களால் சாதியத்துக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் திணை அரசியலின் அடிநாதம் அப்போதே இயக்கம் பெறத் தொடங்கி இருந்தது. அவ்வகையில் செயலுருப்படுவது சமூகத் தளத்துக்கு உரியதாக தொடக்கம் பெற்றபோதிலும் அரசியல் களத்தில் தேசிய எழுச்சி வீறுபெற்று இயங்குவதாக இலங்கையின் அன்றைய இருப்பு அமைந்திருக்கவில்லை. இந்திய சுதந்திரப் போராட்டம் இரட்டைத் தேசியப் பிளவாக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டு இருந்த போதிலும் தாராளவாத அரைப் பிராமணத் தேசியத் தலைமை 1947 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கான விடுதலையைச் சாத்தியமாக்கி இருந்தது. அதன் பேறாக இலங்கையும் சுதந்திரத்தை எட்டிய பின்னரே இங்கு அரசியல் ரீதியிலான தேசிய விழிப்புணர்வு வெகுஜனத் தளத்துக்கு உரியதாக முனைப்படையத் தொடங்கியது. கல்வி, சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, பெருந்தோட்டம் என்பவற்றில் உள்ள ஏகாதிபத்தியத்தினதும் தனியாரதும் சொத்துகளைத் தேசவுடைமை ஆக்கும் அரசியல் இயக்கங்கள் சுதந்திரத்தின் பின்னரே இங்கு வலுப்பெற்றன. எழுச்சிகரமான அந்த வாழ்வியலுக்கு உரிய பண்பாட்டு இயக்க அமைப்பாக “இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்” 1954 ஆம் ஆண்டில் தோற்றம்பெற்றது!
இந்திய சுதந்திரப் போராட்டம் வீறுபெற்று எழுந்த சென்ற நூற்றாண்டின் இருபதாம ஆண்டுகளின் நடுக்கூறில் தோற்றம் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அடுத்த தசாப்தத்தில் இருந்து காத்திரமிக்க போராட்டங்களை முன்னெடுத்தது. உலகின் மிகப் பெரும் கட்சிகளில் ஒன்றாக மதிப்புறும் வகையில் மக்களைத் தலைமை தாங்கி நடாத்திச் சென்ற அதன் அனுபவச் செழுமைகளையும் உள்வாங்கி ஐம்பதாம் ஆண்டுகளின் வளர்ச்சி பெற்ற மார்க்சியத்தைக் கையேற்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னணித் தளகர்த்தர்கள் தமது செயல் வேகத்துக்கான கோட்பாட்டு உருவாக்கத்தை ஏறபடுத்திக் கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்க்கமான போராட்ட அனுபவங்களைக் கொண்டிருந்த போதிலும் இரட்டைத் தேசியப் பிளவாக்கத்தைக் கண்டுகொள்ளாமல் இயங்கி வந்தது; எமக்குரிய சமூக இருப்பின் முழுமைப் பண்பை உள்வாங்காத அந்த இடைவெளி பாதிக்காத வகையில் இலங்கையின் முற்போக்கு இயக்கம் காவாந்து பெற இயலுமாக இருந்ததற்கான அடிப்படை எமக்குரிய வரலாற்றுக் கட்டத்துக்குப் பொருந்தும் வகையில் பாரதியின் கருத்தியலைக் கையேற்று வளர்த்தெடுத்துப் பிரயோகித்த பாங்கில் அமைந்திருந்தது.
அவ்வகையில் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளாக தேசிய இலக்கியம், மக்கள் இலக்கியம் என்பன அமைந்தன. பெண் ஒடுக்குமுறை, சாதி பேதம், பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பவற்றைத் தகர்த்தெறிந்து சமத்துவ நெறியுடன் இலங்கையைக் கட்டியெழுப்புதல் தேசிய இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படை; இந்தக் குறிக்கோளில் ஒன்றுபடத் தக்கவர்களை அணிதிரட்டும் வெகுஜன மார்க்கத்துக்கு உரிய வேலைத் திட்டங்களை முற்போக்கு இயக்கம் தொடர்ச்சியாக முன்வைத்து இயங்கி வந்தது. பலரும் இணைந்து வலுவான அமைப்பாக செயல் வேகப்பட்ட காரணத்தால் சமூக மாற்றத்தை முழு அளவில் விரும்பாதவர்கள் கூட தமது படைப்புகளில் முற்போக்கு இயக்கம் முன்னிறுத்திய குறிக்கோள்களை ஏதோவொரு வகையில் வெளிப்படுத்த வேண்டியவர்களாக இருந்தனர்!
மாற்றத்தை விரும்பாத பிற்போக்காளர்கள், எமது இலக்கிய மரபுக்கு விரோதமானவை இவை என்று புலம்பியபோது முற்போக்கு இயக்கத்தின் வாயிலாக ‘மரபுப் போராட்டம்’ முன்னெடுக்கப்பட்டது; தேங்கிப்போன குட்டை அல்ல மரபு, மாற்றங்களை உட்செரித்து முன்னேறும் அதற்கே உரிய பண்புக்கூறின் பிரகாரம் மக்கள் யுகத்துக்குரிய புதிய மரபின் தேவையை நவீன தமிழியல் உள்வாங்காமல் இயங்க இயலாது என மரபுப் போராட்டம் வலியுறுத்தியது. தமிழர் உரிமைகளைச் சிங்கள அரசுக்குக் காட்டிக் கொடுக்கிறீர்கள் என்ற போர்வைவைக்குள் மறைந்து இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு உதவுகிறவர்கள் ‘தமிழகத்தின் நீடிப்பாக எமது தமிழ் இருந்தால் போதும்’ என வாதிட்டனர். எமது சமூகத்தில் புரையோடிப்போய் இருக்கும் ஒடுக்குமுறையின் வெளிப்பாட்டுக்குரிய பண்பாட்டு அசிங்கங்களைப் பேசாப்பொருள் ஆக்கும் உத்தியாக ‘இந்தியா தாய் தாடு, ஈழம் சேய் நாடு’ என்ற மத வழிப்பட்ட புனிதங்களை முன்னிறுத்தினர். ‘எங்கும் ஒரே தமிழ்’ என்ற பிற்போக்கு சக்திகளின் முழக்கத்தினுள் உழைப்பை அபகரிக்கும் கபட நோக்கங்கள் உள்ளடங்கி உள்ளன என்பதும் அம்பலப்படுப்படுத்தப்பட வேண்டி அமைந்திருந்தது. எமது படைப்புகள் எமக்கேயுரியதாக உள்ள பிரச்சினைகளை, அவை எவ்வகையில் முகங்கொள்ளப்படுகின்றன என்பதனை, தீர்வுக்காக முன்னெடுக்கப்படும் எத்தனங்களை, முரண்பாட்டு மோதுகைகளின் தனித்துவங்களை, அதன்போதான போராட்டங்களை – எனவுள்ள முழுமைப் பரிமாணங்களின் ஊடாக எமக்கான வாழ்க்கைக் கோலங்களின் அடிநாதங்கள் வெளிப்படுத்தப்படுவது இன்றைய வரலாற்று அவசியம்; இவற்றில் ஓரிரு அம்சங்களுக்கு உரிய ‘இயற்பண்பு வாதப்’ படைப்புகள் ஏற்கனவே உருப்பெறத் தொடங்கி இருந்தன. அவற்றின் போதாமையைச் சுட்டிக்காட்டி, மேற்படி அனைத்துக் கூறுகளையும் உட்படுத்திய ‘யதார்த்த வாதப்’ பண்புக்கு உரியதான ‘மண்வாசனை இலக்கியம்’ மட்டுமே மக்கள் விடுதலைக்குப் பயன் விளைக்கும் என்ற புரிந்துணர்வுடனான படைப்புகள் வெளிப்பட வேண்டும் என்ற காத்திரமிக்க விவாதம் முற்போக்காளர்களால் முன்வைக்கப்பட்டு இருந்தது.
இந்தியப் பெருங்குடைக்குள் நிழல் தேட வேண்டும் என்ற கருத்துடன் இயங்கியவர்களுக்கு மண்வாசனைக்கு உரிய ‘தேசிய இலக்கியம்’ என்பதே ஒவ்வாமைக்கு உரிய கருத்தாகப் பட்டது. மண்வாசனை என்பது விவசாயத்துக்கு உகந்ததாகலாம், இலக்கியப் புனிதத்துக்கு அடுக்காத விவகாரம் அது என்றனர். அவர்களது விருப்புறுதிகளை மேவி, மண்வாசனை இலக்கிய எழுச்சி ஏற்படுத்திய தாக்கத்துடன் கனதிமிக்க – காத்திரமான படைப்புகள் வெளிப்பட்டு, அவையே மக்கள் இலக்கியம் என்ற சமூக அங்கீகாரம் வலுப்பட்ட பின்னர் தாமும் மக்களையே இலக்கியம் ஆக்குகிறோம், அவ்வகையில் நாற்பதாம் ஆண்டுகளில் இருந்தே மண்வாசனையை எமது ஆக்கங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வந்துள்ளோம் எனத் தர்க்கித்தனர்.
அவர்களுக்கான குறைப்பிரசவ ‘மக்கள் இலக்கியம்’ என்பது ஏற்கத்தக்க வகைப்பாடு தான் என்பதான திறனாய்வுகள் வெளிப்படும் சூழல் எண்பதாம் ஆண்டுகளில் இருந்து மேலெழத் தொடங்கின. அது, முற்போக்கு இயக்க வீறு தணிந்து இன வாதங்களது பேரிரைச்சல் எக்காளமிடத் தொடங்கிய நெருக்கடி தோற்றுவித்த அறிவுச் சிதைவு. இலங்கையின் அனைத்து மக்களும் சாதி, மத, இன, பாலின வேறுபாடுகள் களைந்து உழைக்கும் மக்கள் தலைமையில் சோசலிச இலங்கையை விரைவில் வென்றெடுக்கும் உத்வேகம் வளர்ந்து வந்துள்ளதெனக் கண்ட பிற்போக்காளர்கள் இனக் குரோதங்களை வளர்த்துப் பிரிவினை வாதப் போராட்டத்துக்குக் கால்கோள் இட்டனர்; முன்னர் பெரும் எழுச்சிக்கு உரியதாக இருந்த ‘இலங்கைத் தேசியம்’ காணாமல் ஆக்கப்பட்டுக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது. ‘தேசியம்’ என்ற குரலையே நாராசமாக உணர்ந்து காத தூரம் ஓடியவர்களின் வாரிசுகள் இன்று புனிதமிக்க மந்திரமாக அதனைக் கொண்டாடி ‘தமிழ்த் தேசியம்’ மட்டுமே நிதர்சன உண்மை என ஆக்குரோசத்துடன் முழக்கமிடுகின்றனர்.
இந்தக் குழறுபடியுடன் நாற்பதாம் ஆண்டுகளில் வெளிப்பட்ட இலங்கைத் தமிழ் படைப்புகளும் மக்கள் இலக்கியங்களே, தேசிய இலக்கியப் பண்புக்கு உரியனவே என்ற ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்றன. தேசிய இலக்கியத்துக்கு உரிய அடிப்படைப் பண்புகளான சமூக இயங்கு தளம், முரண்பாட்டின் சிறப்பியல்பு, மோதலின் தனிப் பண்பு, மாற்றச் செல்நெறி என்பன இடம்பெறாமல் வெறும் ஊர்ப் பெயர் இருந்தாலே எமக்கான மண்வாசனை கொண்ட தேசிய இலக்கியம் என மதிப்பிட முனைவது வரலாற்று மாற்றங்கள் எவ்வகையில் இலக்கிய வடிவத்தை நிர்ணயிக்கின்றன என்பதனைப் புரிந்து கொள்ள முற்படாமல் வெளிப்படுத்தப்படும் வெறும் விருப்பங்கள் மட்டுமே!
மக்கள் இலக்கியம் என்பதும் தேசிய இலக்கியத்தின் அடிப்படைப் பண்புகள் பலவற்றை உடையன. இவை இரண்டும் யாதார்த்த வாதப் படைப்பாக்கங்களே. தேசிய இலக்கியத்தில் பெரிதும் வெளிப்பாடு கொள்கின்ற சமூக முரண்கள் சார்ந்த ஊடாட்டங்கள் அதிகம் இடம்பெறா வகையில் ஆக்கப்படுகின்ற மக்கள் இலக்கியத்துக்கு உரியவை, முரண்பாடுகள் – அவற்றின் கூர்மைப்படல் – மோதல் – அதன் பேறான மாற்றங்கள் என்பவற்றை வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கும்; அந்தவகையில் யதார்த்த வாதமாக அமைவனவே மக்கள் இலக்கியம் என வரையறுக்கத்தக்கன. சமூக இருப்பு, குடும்ப உறவுகள், தனி மனித ஊடாட்டங்கள் என்பன அவையவை அமைந்த வண்ணமாக அப்படியே காட்டுகிற ஆக்கத்தில் முரண் – மோதல் – மாற்றம் என்பவை ஊடாடினால் கலைத்துவம் கெட்டுவிடும் என்ற எச்சரிக்கையுடன் ஆக்கப்படும் போது அழகியல் வாத அக்கறை மேற்கிளம்புகிறது; இத்தகைய படைப்பு இயற்பண்பு வாத வகைக்கு உரியது. புதுமைப்பித்தன், இலங்கையில் முப்பதாம் நாற்பதாம் ஆண்டுகளில் வெளிப்பட்ட படைப்பாளிகள், தன்னுடையதும் மண்வாசனை இலக்கியமே எனக் கருத்துரைத்த வ.அ. இராசரத்தினத்தின் படைப்புகள் என்பன யாவுமே இயற்பண்பு வாத இலக்கியங்களே (முற்போக்கு இயக்கம் முன்னெடுத்த ‘மண்வாசனை இலக்கியம்’ எதிர்வுகூறிய யதார்த்த வாத வடிவத்துக்கு உரியனவல்ல). இவை யதார்த்த வாதப் படைப்பாக அமையவிலாத இடங்கள் குறித்த தெளிவீனம் காரணமாக இதற்கும் இயற்பண்பு வாதத்துக்கும் இடையே வேறுபாடுகள் கிடையாதெனக் கருத்துரைப்பவர்களும் உள்ளனர்; அந்த நிலைப்பாட்டின் காரணமாக ‘சோசலிச யதார்த்த வாதம்’ , ‘விமரிசன யதார்த்த வாதம்’ என்பவை பற்றிப் பேச நேர்ந்த சந்தர்ப்பங்களும் ஏற்பட்டிருந்தன. இயற்பண்பு வாதம் இருப்பை உள்ளவாறே காட்ட, யதார்த்த வாதம் சமூகத்தை விமரிசன பூர்வமாக அணுகி, நிலவுகிற விமரிசனத்துக்குரிய அம்சங்களது மோதுதல்களின் ஊடாக இயக்கம் பெறும் மாற்றங்களானது அனைத்து வகைப் பேதங்களையும் தகர்த்துச் சமத்துவத்தைப் படைக்கும் அவசியத்தை உணர்த்த வல்லது!
தேசிய இலக்கியம், மக்கள் இலக்கியம் என்பவை குறித்துப் பலரும் தத்தமது கருத்துகளை முற்போக்கு இயக்க காலத்தில் வெளிப்படுத்தி உள்ளனர். மரபுப் போராட்டம், தேசிய இலக்கியம், முற்போக்கு இலக்கிய இயக்கம் என்பனவாக அந்த அனுபவங்களைத் தொகுத்து வழங்கிய பல நூல்கள் வெளிவந்துள்ளன. இயற்பண்பு வாதம், யதார்த்த வாதம் என்பன குறித்து விளக்கங்களை மிகத் தெளிவாக வரையறுத்துத் தனது ஆய்வுப் படைப்புகளையும் திறனாய்வு வெளிப்பாடுகளையும் முன்வைத்த க. கைலாசபதி மக்கள் இலக்கியம் குறித்துத் தீர்க்கமான பார்வையை வழங்கி உள்ளார். முற்போக்கு இயக்கத்தின் வீச்சு வெளிப்பட்டு இருந்த (சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகள் முதல் எழுபதாம் ஆண்டுகள் வரையான) மூன்று தசாப்தங்களில் வலியுறுத்தப்பட்ட அந்த மக்கள் இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படைகளை இன்று நாம் முகங்கொள்ளும் மாற்றக் காலகட்டத்துக்கு அமைவாக வளர்த்தெடுத்துப் பிரயோகிக்கும் சமூகப் பொறுப்பு எம்முன்னால் உள்ளது!
மக்கள் இலக்கிய நிலைப்பாட்டை வந்தடையாதவர் எனக் கூறி எவரையும் விலக்கி வைக்கும் தவறினை முற்போக்கு இயக்கம் ஒருபோதும் மேற்கொள்ளவில்லை; சமூக – கலை – இலக்கிய – புதிய பண்பாட்டு அக்கறையுள்ள அனைவரையும் ஒன்றுபடுத்தும் வேலைப் பாணி பின்பற்றப்பட்டது. அன்று வ.அ. இராசரத்தினம், கனக செந்திநாதன், சொக்கன், மஹாகவி போன்ற மக்கள் நலநாட்டமிக்க பலரையும் இ.மு.எ.ச. தனக்குள் உட்படுத்தி இயங்கும் முயற்சியை முழு அளவில் மேற்கொண்டது. யதார்த்த வாதப் பண்பைக் கவிதைக்குள்ளும் கைவசப்படுத்த முயற்சித்தவரான மஹாகவி முற்போக்கு இயக்கத்தில் சேர்ந்து இயங்குவதற்கான கோரிக்கை தனக்கு வழங்கப்பட்ட போதிலும், ஒரு படைப்பாளிக்கு எந்தவொரு அமைப்பும் உகந்ததல்ல என முடிவு செய்து எதனுடனும் இணைந்து செயற்படாது இருந்ததாகக் கூறி இருந்தார் என்பதனை அறிவோம்; அதேவேளை முற்போக்கு இயக்கக் கவிஞர்களான முருகையன், சில்லையூர் செல்வராசன் போன்றோருடன் நெருக்கமான ஊடாட்டத்தை மஹாகவி கொண்டிருந்தார்.அமைப்புக்குள் வராதிருந்த போதிலும் முற்போக்கு இயக்கச் செயற்பாடுகளுக்கு வலுச் சேர்ப்பனவாகவே அவரது படைப்புகள் வெளிப்பட்டு இருந்தன!
புதிய பண்பாட்டு
இயக்கம்
அமைப்புக்குள் மஹாகவி வர மறுத்ததற்கான அடிப்படைக் காரணமாக படைப்பூக்கத்தை இழக்க நேரிடும் என்ற தயக்கம் இருந்துள்ளதெனக் கருத இடம் இருக்கவில்லை; ஆற்றல்மிக்க பலரும் அமைப்பில் செயற்பட்டவாறே தொடர்ந்து இலக்கியத் தளத்திலும் சமூகத்திலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளனர். மகாகவி பாரதி அந்த அம்சத்திலும் கூட முன்னோடியாகத் திகழ்பவர். முப்பதாம் ஆண்டுகளில் பாரதி (1882 – 1921) தொடர்ந்தும் வாழ்ந்திருந்தால் எந்தவொரு அமைப்பிலும் இணைய மறுத்துச் சுதந்திரக் கவியாக இயங்க நேர்ந்திருக்கலாம். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முதலாவது எழுச்சி அலை (1906 – 1908) தமிழகத்தில் வீறுபெற்று எழுவதற்கு பாரதியின் பங்களிப்பும் உந்து சக்தியாக அமைந்து இருந்தது; தீவிரவாதக் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இயங்கிய போது அவரிடம் இருந்த முழுமைப்பட்ட விடுதலைத் தேசியக் கருத்தியல் (நாட்டு விடுதலை, சாதியத் தகர்ப்பு-பெண் விடுதலை என்பவற்றை உள்ளடக்கிய சமூக நீதி, பொருளாதார ஏற்றத் தாழ்வை இல்லாது ஒழிக்கும் வகையில் பொதுவுடைமையை வெற்றிகொள்ளல்) பற்றிய அதனது நிலைப்பாட்டை அவரது அமைப்பு முழுமையாக அப்போது வெளிப்படுத்தி இருக்கவில்லை. முப்பதாம் ஆண்டுகளில் நாட்டுக்கான சுதந்திரமே முன்னுரிமைக்கானது எனும் தேசிய இயக்கம் (காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி) – சமூக நீதியை வென்றெடுத்த பின்னரே நாட்டு விடுதலை சாத்தியம் என்ற எதிர் தேசிய இயக்கம் (திராவிடர் கழகம்) என்பன களத்தில் இயக்கம் கொண்டிருந்தன. நாட்டு விடுதலை பற்றி மட்டுமே காங்கிரஸ் கட்சி அக்கறை கொண்டிருந்தது; சமூக நீதி வென்றெடுக்கப்படாமல் எட்டப்படும் சுதந்திரத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டை பெரியாரியம் வெளிப்படுத்தியது; தேச விடுதலையைப் பெற்ற பின்னர் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் சோசலிசத்தை வெற்றி கொள்வதன் ஊடாகச் சமூக நீதி சாத்தியமாகும் என்ற நிலைப்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருந்தது. இவ்வகையில் விடுதலையைப் பிளவுபடுத்தியவாறு இயங்கிய எந்தவொரு அமைப்புடனும் இணைந்து இயங்கவியலாத நிலை பாரதிக்கு ஏற்பட்டு இருப்பதற்கு வாய்ப்புள்ளது (பாரதியின் சமகாலத்தில் மக்கள் விடுதலைக்கான தேடல்களில் ஈடுபட்டவாறு இருந்த தோழர் சிங்காரவேலர் பாரதியிடம் காணப்பட்டது போன்ற பிளவுபடாத கருத்தியலுடன் செயற்பட்டு வந்தவர். முன்னதாக காங்கிரஸ் கட்சி தனக்கான கருத்தியல் தெளிவைப் பெறவில்லை என்ற போதிலும் பாரதி அதனுடன் இணைந்து இயங்குவதற்குப் பிரதான முரண்பாட்டுத் தீர்வு குறித்த அக்கறை காரணமாக அமைந்திருந்தது; அதேபோலச் சமத்துவ சமூகத்தை வென்றெடுத்தல் பிரதான அம்சம் என்ற வகையில், தனக்கான கருத்தியலில் உள்ள சமூக நீதியையும் இணைத்தல் என்பது கம்யூனிஸ்ட் கட்சியில் இடம்பெறாத போதிலும் அதனைத் தொடக்கி வைத்தவர்களில் ஒருவரான சிங்காரவேலர் தொடர்ந்தும் அந்தக் கட்சியில் இயங்கி வந்துள்ளார். அதைப்போல முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தாத போதிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் கூடுதலான அபிமானத்தை பாரதி வெளிப்படுத்தி இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது).
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் வழிகாட்டலில் இயங்கிய வெகுஜன அமைப்பான முற்போக்கு இயக்கமும் இரட்டைத் தேசியப் பிளவுக்கு இடம் கொடுக்காமல் இலங்கைத் தேசத்தின் சுதந்திரம் – இறைமை என்பற்றுக்கு முன்னுரிமை வழங்கிய அதே பெறுமானத்துடன் சாதியத் தகர்ப்புக்கான தொடர் போராட்டங்கள் வாயிலாக சமூக நீதியை வென்றெடுப்பதனையும் அதனது குறிக்கோளாக முன்னிறுத்தி இயங்கி வந்தது. இந்த அம்சங்களில் பூரண உடன்பாடு இருந்த காரணத்தால் முற்போக்கு இயக்கப் படைப்பாளிகளுடன் நெருக்கமான நட்புறவைப் பேணி வந்தவரான மஹாகவிக்கு மற்றொரு விடயம் நெருடலாக அமைந்த காரணத்தாலேயே அமைப்புக்கு வெளியே இருந்துவிடும் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தி இருக்க இயலும் எனக் கருத இடமுள்ளது. மகாகவி பாரதியைக் கட்டமைத்திருந்த கருத்தியலின் முழுமைப்பட்ட கூறுகள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிடமும் வந்தமையவில்லை; இந்தியத் தேசத்தினுள் தமிழ் மக்களுக்கான இனத்தேசியச் சுயநிர்ணய உரிமைக் கூறுகளும் உட்படத் தக்கதான பார்வை வீச்சு பாரதிக்கு வாய்த்திருந்தது. வங்காளக் கவி ரவீந்திரநாத்தாகூரின் கவிதையே இந்தியாவுக்குத் தேசிய கீதமாக அமைந்து இருப்பதைப் போல அவரது மற்றொரு கவிதை பங்களாதேசுக்குத் தேசிய கீதமாகி உள்ளது; ‘பாரத தேசம்’ பாடிய பாரதி ‘செந்தமிழ் நாடு’ எனும் கீதத்தையும் வெளிப்படுத்தியவர் என்ற வகையில் பாரதியும் நாட்டுக்கு மட்டுமன்றி இனத் தேசியத்துக்கும் தேசிய கீதத்தைப் படைத்தவரே!
ஐம்பதாம் ஆண்டுகள் வரையில் இனத் தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி வந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பின்னர் இலங்கைத் தேசத்துக்கு வழங்கிய அதீத முக்கியத்துவத்தைப் புறக்கணிக்கப்படும் இனத் தேசியங்களுக்கு வழங்கவில்லை. ஆரம்பம் முதலாக தேசிய இனப் பிரச்சினைத் தீர்வுக்காக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியால் பிரதேச சுயாட்சி அமைப்பாக்கம் வலியுறுத்தப்பட்டு வரப்பட்டாலும் அதனைச் சாத்தியப்படுத்துவதற்கான எந்தவொரு களச் செயற்பாட்டையோ போராட்டங்களையோ முன்னெடுத்திருக்கவில்லை. இனத் தேசிய உரிமையைப் பாதுகாக்கும் வகையில் வெற்றிகொள்ளப்பட வேண்டிய செயலொழுங்குகளைக் கம்யூனிஸ்ட் கட்சியும் முற்போக்கு இயக்கமும் கொண்டிருக்காத நிலையில் மஹாகவி தீக்காய்வார் போல ஒட்டியும் விலகியும் ஊடாடியமை புரிந்து கொள்ளத் தக்க ஒன்றே!
அவர் வாழ்ந்த 1971 ஆம் ஆண்டுக்கு முந்திய காலம் வரை, மேலே நாம் பார்த்தது போல இலங்கை பூராவும் வர்த்தகத் தளத்திலும் நிர்வாகத் துறையிலும் யாழ்ப்பாண மேலாதிக்கம் மிகையாக இருந்த காரணத்தால் அதிகாரத்துக்கு வந்த சிங்களத் தேசியம் அதனால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த இடங்களைக் கையகப்படுத்தும் வகையில் (எழுபதாம் ஆண்டுகளின் ஆரம்பம் வரை அத்தகைய தேவை இருந்தது; பின்னரான சிங்களப் பேரினவாதக் கொடூரத்தின் கெட்ட அம்சத்தில் இருந்து இதனை வேறுபடுத்திப் பார்க்க இயலாத நெருக்கடி இன்றைய தலைமுறைக்கு உள்ளது) இனப் புறக்கணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட அளவு மாற்றங்கள் கவனிப்புக்கு உரியன. இடதுசாரிக் கட்சிகளது ஆதரவுடன் சிங்களத் தேசியம் மேற்கொண்ட சிங்கள மக்களின் நலன்களை வென்றெடுப்பதற்கான முயற்சியும் எழுபதாம் ஆண்டுகளுக்குப் பின்னரான சிங்களப் பேரினவாதம் “போரென்றால் போர்” எனக் கூறி முன்னெடுத்த யுத்தத்துக்கான அரசியலும் பண்பு ரீதியிலான வேறுபாட்டை உடையன.
கைவிட்டுப் போகும் மேலாதிக்க வாய்ப்பை உதறியவாறு வாழ்வியலுக்கான மாற்று வழியைத் தமிழ் தேசியம் தேட முற்படவுமில்லை, உரிமைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலான நியாயமான போராட்டங்களை முன்னெடுக்கவும் இல்லை; மேலாதிக்கத் தேசிய மனப்பாங்கையே எப்போதும் வெளிப்படுத்தி வந்த தமிழ்த் தேசியத்தை நிராகரித்தபடி விடுதலைத் தேசிய எழுச்சி எதுவும் ஏற்படவில்லை என்ற சூழலில் மஹாகவியால் அன்றைய தமிழ்த் தேசியத்துடனும் உடன்போக்கை மேற்கொள்ள இயலவில்லை.
முற்போக்கு இயக்கம் வலிந்து தன்னை உறுப்பனராக்கிக் கொண்டது எனக் கூறி அதனைவிட்டு விலகிச் செயற்பட்ட வ.அ. இராசரத்தினம் வேறொரு காரணத்தால் அந்த நிலைப்பாட்டை மேற்கொண்டார். மக்கள் நலநாட்டம் அவரிடம் முனைப்புடன் இருந்தபோதிலும் யதார்த்த வாதப் படைப்பை வெளிப்படுத்தும் பட்சத்தில் பிரசாரமாக முத்திரை குத்தப்பட வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கை உடன் தனது எழுத்துப் பணியை வ.அ. முன்னெடுத்தார். அவரால் திட்டமிட்டு இவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதைவிட அவரது இயல்பால் தானாக வந்தமைந்த பண்பு என்பதே சரியான கணிப்பாக அமையும். முனைப்புடன் கூர்மையடைந்த முரண்பாடுகளைக் கொண்டு இயங்குவதாக அவர் வாழ்ந்த சமூகச் சூழல் அமைந்திருக்கவில்லை; அவரிடம் வெளிப்பட்ட இயற்பண்பு வாத படைப்பாக்கமே கூட அவரது வாழ்வியல் களத்துக்கு களத்துக்கு அதிகபட்ச மனித நலநாட்டத்தை வெளிப்படுத்திய உள்ளடக்க வீச்சுத் தான். கூரிய சமூக மோதல்கள், வர்க்கப் போராட்ட வெளிப்பாடுகள் என்பவற்றைக் கொண்டிருந்த யாழ்ப்பாண மாவட்டம், மலையகம், கொழும்பு போன்ற பிரதேசங்களில் களமாடிய மனமாக அமைந்திருப்பின் வ.அ. ஐக் கட்டமைத்த படைப்பூக்கம் யதார்த்த வாத இலக்கியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்க வாய்ப்புள்ளது!
தன்னளவில் அழகியல் வாதியாக வ.அ. இல்லாதபோதிலும், அவரது வாழ்வியல் சூழலின் வரையறை ஏற்படுத்தித் தந்த வாய்ப்புடன் வெளிப்பட்ட இயற்பண்பு வாதப் படைப்புகளுக்கு அழகியல் வாதிகளின் (அன்றைய காலப் பின்னணியில் இரசனை வாதிகளின்) அங்கீகாரம் பேருதவியாக அமையும் எனக் கருதிச் செயற்பட்டார். அதன் பொருட்டு முற்போக்கு இயக்கத்தினின்றும் தனக்கான விலகலை வ.அ. பிரகடனப்படுத்திய போதிலும் எதிர் நிலைப்பாட்டை அவர் ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. க. கைலாசபதி தன்னுடன் கடிதத் தொடர்பை எப்போதும் கொண்டிருந்தார் என்பதனை நேரடி உரையாடலின் போது எடுத்துரைத்து இருந்தார். மக்கள் இலக்கியத்துக்கு அவசியப்பட்டதான யதார்த்த வாதப் படைப்பாளி என அவர் வெளிப்பட இயலாமல் போனமைக்கு, கூர்மையான முரண்பாடுகள் நிறைந்ததாக அவரது வாழ்புலம் அமையவில்லை என்பதே காரணம் எனக் காட்டி எழுதிய எனது கட்டுரையை அவருக்கு அனுப்பிய உடன், அது குறித்து அற்புதமான பதில் கடிதம் ஒன்றை எனக்கு எழுதி இருந்தார். மூதூரின் தனது கிராமச் சூழலானது அனைத்துச் சமூகப் பிரிவினரும் கொண்டும் கொடுத்தும் சுமுகமான உறவைப் பேணும் வகையில் இயற்கை வளம் உடையது, இனப் போராட்டத்துக்கு முன்னரான தனது வாழ்நாளில் ஒரேயொரு கொலைச் சம்பவத்தையே தான் அறிந்ததாகவும் சிறப்பான உணவைத் திருகோணமலை அகதி முகாமிலேதான் அனுபவம் கொள்ளக் கூடியதாக இருந்தது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதன் வாயிலாக இயற்கையுடன் இயைந்த இயல்பான வாழ்வுக் கோலத்தை உணர வைப்பதற்கு முயற்சித்து இருந்தார் வ.அ. இராசரத்தினம்!
தனக்கான அரசியல் அபிலாசையாகச் சமூக மாற்றத்தை நேசித்த போதிலும் படைப்பு முயற்சியில் அதனை உட்படுத்தாமல் ரசனை (அழகியல்) வாதத்துக்கு முன்னுரிமை வழங்கும் படைப்பாளியாக புதுமைப்பித்தனையும் தமிழிலக்கிய வரலாறு ஏற்கனவே வெளிப்படுத்தி இருந்தது. இரட்டைத் தேசியப் பிளவாக்கம் கூர்மைப்படத் தொடங்கிய முப்பதாம் ஆண்டுகளில் கல்கி போன்றோர் தாராளவாத அரைப் பிராமணத் தேசியத்துக்கு வலுச் சேர்க்கும் படைப்பாளிகளாக அமைந்தனர்; பார்ப்பன மேலாதிக்கத் தகர்ப்புடன் சமூக நீதிக் குரலாக பாரதிதாசனின் கவி மனம் வெளிப்பட்டது. இத்தகைய சமூகச் சச்சரவுகளை இலக்கியத்தில் வெளிப்படுத்த விரும்பாமல் தம்மைத் தாமே சமூகப் பிரஷ்டம் செய்துகொண்டோர் ‘கலை, கலைக்காக’ என்ற கோட்பாட்டுக்குள் சரண் புகுந்தனர். மணிக்கொடிக் குழுவினராக அறியப்படும் அத்தகையோரில், பிச்சமூர்த்தி போன்றோர் அரசியல் நீக்கத்துடன் ஆன்மீகக் கலை வெளிப்பாடாகத் தமது இலக்கியத்தை அமைத்துக்கொண்டனர்; கு.ப.ரா. போன்றோர் தனிமனித உள்மன யாத்திரைகளாகத் தமது படைப்புகளை வடித்தனர். சமூக-அரசியல் பிரஷ்டம் மேலோங்கி ரசனை (அழகியல்) வாதம் வலுப்பட்ட அன்றைய சூழலில் ஏனைய மணிக்கொடி சகபாடிகள் போலன்றி, மக்களுடைய வாழ்வியல் நெருக்கடிகளைப் படைப்பாக்க முயன்றவர் புதுமைப்பித்தன். அன்றைய வரலாற்றுப் பின்னணியின் வரையறை காரணமாக புதுமைப்பித்தனும் கூட அரசியல் நீக்கத்துடன் இயற்பண்பு வாத நிலைப்பாட்டை நாடினார். பிளவுபடாத வகையில் முழுமைப்பட்ட சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கு எனப் போராடுகின்ற மக்கள் விடுதலைக்கான நம்பிக்கையை ஏற்படுத்தவல்ல அமைப்பு எதனையும் அவரால் இனங்காண இயலாமல் போன காரணத்தால் ‘இலக்கியம் வாயிலாக சமூகத்தைத் திருத்திவிடவோ மாற்றிவிடவோ இயலாது’ என்ற கருத்து நிலைக்கு புதுமைப்பித்தன் வந்து சேர்ந்தார்.
படைப்புக் கோட்பாட்டில் அழகியல் வாதத்தை ஆதரிக்கின்ற நிலை புதுமைப்பித்தனில் வெளிப்பட்ட போதிலும் சமூக நோக்கில் சமத்துவ சமூகத்தை வென்றெடுக்கும் பொதுவுடமைக் கோட்பாடும் விடுதலைத் தேசிய அரசியலும் அவருக்கான அத்திவாரங்களாக அமைந்திருந்தன. “ஹிட்லர் தர்பார்”, “ஸ்டாலினுக்குத் தெரியும்” என்ற புதுமைப்பித்தனின் இரண்டு சிறு நூல்கள் சமகால உலகச் செல்நெறி பற்றிய அவரது தீர்க்கமான அரசியல் பார்வையின் வீச்சை வெளிக்காட்டுவனவாக அமைந்துள்ளன. அவருடைய அந்தத் தெளிவுடன் வெளிப்பட்ட படைப்பாக்கம் என்னதான் அழகியல் வாத அணிசேர்க்கைக்கான விட்டுக்கொடுப்பை மேற்கொண்ட போதிலும் அந்தத் தரப்பு புதுமைப்பித்தனை எச்சரிக்கை உணர்வுடனேயே அணுகியிருந்தது. அவரது நணபரும் தமிழக முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவருமான தொ.மு.சி. ரகுநாதன் இது குறித்து “புதுமைப்பித்தன்: விமர்சனங்களும் விசமத்தனங்களும்” என்ற நூலில் விரிவாக விளக்கி உள்ளார்.
சமூக அக்கறையும் மக்கள் நலநாட்டமும் உடையவர்களான புதுமைப்பித்தன், மஹாகவி, வ.அ. இராசரத்தினம் ஆகியோரது படைப்புகள் யதார்த்த வாதத்தை நெருங்கி வரத்தக்க பண்புக் கூறுகள் சிலவற்றை உடையனவாயினும் இயற்பண்பு வாத வரையறைக்கு உள்ளேயே கட்டுப்பட்டனவாகத் தான் அவை அமைவாக்கம் பெற்றுள்ளன. அவர்களது சமூகப் பார்வை, அரசியல் உணர்வு என்பன சுரண்டல் அமைப்பைத் தகர்த்துப் பொதுமைச் சிந்தனை மேலோங்க வேண்டும் என்ற விருப்புணர்வுடன் கட்டமைக்கப்பட்டு இருந்த போதிலும் படைப்புக் கோட்பாட்டில் அரசியல் நீக்கம், கருத்து வெளிப்பாட்டை முழுமையாகப் பூடகமாக்க முற்படல், சாதி வாதம் – இனத் தேசிய வாதம் – மத வாதம் என்பவற்றில் ஏதேனும் ஒன்றால் ஏற்படும் கருத்தியல் எல்லைப்பாடு, வாழ்வியல் அனுபவம், வர்க்க நலன் என்பன (இவற்றில் ஒன்றோ சிலவோ) சார்ந்த காரணி(கள்) ஏற்படுத்தும் வரையறையினால் யதார்த்த வாதப் படைப்பை வெளிப்படுத்த இயலாத தடை அவர்களிடம் ஏற்பட்டுள்ளது. சமூக மாற்றம் அவசியம் என்ற கருத்து இவர்களிடம் முனைப்பாக வெளிப்பட்ட போதிலும் கலை – இலக்கியத்தைச் சமூக மாற்றக் கருவியாக்க வேண்டியதில்லை என்ற எடுகோள் காரணமாக யதார்த்த வாதப் படைப்பாக்கத்தில் நாட்டம் கொள்ளாது அமைந்தனர்!
இயற்பண்பு வாதம், யதார்த்த வாதம் என்பவற்றிடையே பெரிதாக வேறுபாடு கிடையாது என்ற கருத்து அவர்களிடமும் அவர்களது படைப்புக் கோட்பாடே சரியானது, போதுமானது, ஏற்புடையது எனக் கருதுவோரிடமும் உள்ளன. அவர்களிடம் மட்டுமன்றி வர்க்க வாதமாக மார்க்சியத்தைக் கருதிச் செயற்பட்டோரிடமும் இதே கருத்து நிலை தான் உள்ளது. சோவியத் சோசலிசக் கட்டுமான விருத்தியைத் துரித கதியில் வளர்த்த ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியக் கோட்பாடாக ‘சோசலிச யதார்த்த வாதம்’ முன்வைக்கப்பட்டதில் யதார்த்த வாதம் குறித்த தெளிவீனம் அடிப்படைக் காரணியாகும். ‘சோசலிச நாடொன்றில் சோசலிச யதார்த்த வாதம் சரியானது, நாங்கள் விமரிசன யதார்த்த வாதம் பற்றியே பேசியிருக்க வேண்டும்’ என கா. சிவத்தம்பி எண்பதாம் ஆண்டுகளில் இருந்து பேச நேர்ந்தமைக்கும் வர்க்க வாத வரையறையே காரணமாகும். இயற்பண்பு வாதத்தைக் கடந்து யதார்த்த வாதம் நோக்கி மாற்றம் பெறுதல் என்பது, சமூகம் மீதான கறாரான விமரிசனத்துடன் இன்றைய சமூக அமைப்புத் தகர்க்கப்பட்டு சமத்துவம் நோக்கிய மாற்றத்துக்கு உதவும் வகையில் படைப்பாக்க ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனும் உந்துதலினாலே தான்!
நிதர்சன உலகை – சமூகத்தை – வாழ்வியல் இருப்பை வெளிப்படுத்துவதாக மட்டுமன்றி மக்கள் விடுதலைக்கு உதவும் வகையில் அவற்றின் இடையே இயங்கும் உள்ளார்ந்த மோதல்களின் தாற்பரியங்களை வெளிப்படுத்துவதே யதார்த்த வாதத்தின் பாற்பட்ட ‘மக்கள் இலக்கியம்’; முன்னதாக, சமூக மாற்றத்தை வென்றெடுப்பது பாட்டாளி வர்க்கம் என அமைந்த வரலாற்று நிலையில், அதற்கு உதவும் வகையிலான ‘கட்சி இலக்கியம்’ எனப் பேசப்பட்ட போது யதார்த்த வாத இலக்கியத்தின் ஒரு கூறாகவே அது கருதப்படலாயிற்று. ‘ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளும் நிலவும் சகாப்தத்தின் மார்க்சியமே, லெனினிஸம் ஆகும்’ என வரையறுக்கப்பட்ட அந்தக் காலத்துக்கு உரிய எதிர்பார்ப்பாக அமைந்தது ‘கட்சி இலக்கியம்’!
ருஷ்யப் புரட்சியின் பின்னர் பாட்டாளி வர்க்கப் புரட்சி அற்றுப் போகும் வகையிலான ஏகாதிபத்தியச் செயலொழுங்குகள் மேலெழுந்துள்ளன; ருஷ்யப் புரட்சி சாத்தியப்பட்ட பின்னர் வர்க்க அரசியலே சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்த முந்திய நிலையை மேவியதாக முழுச் சமூக சக்தியான (திணைக்கு உரியதான) விடுதலைத் தேசியங்களே வரலாறு படைப்பதாகிய இன்றைய கட்டத்துக்கான தொடக்கத்தில் “உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்” என்ற பதாகையை லெனின் முன்னிறுத்தினார். அதன் கீழ், சமூக மாற்றத்துக்கு உரியனவாக பாட்டாளி வர்க்கமும் ஒடுக்கப்பட்ட தேசங்களும் எனும் இரு சக்திகளும் திகழ்கின்றன எனும் அன்றைய நிதர்சனத்தை லெனின் வெளிப்படுத்தினார். அவ்வகையில் இரண்டினது இணைவுடன் சமூக மாற்றப்பேறினைச் சாத்தியப்படுத்தும் சகாப்த மாற்றத்துக்கு உரிய மார்க்சியப் பிரயோகமாய் விருத்தி பெற்று வந்தமைந்ததே லெனினிஸம். சமூக மாற்றச் சக்தியாக விடுதலைத் தேசியம் மட்டுமே அமைந்ததான புதிய நிலையில், அதனூடாகச் சமத்துவ சமூகம் படைப்பதற்குப் பாட்டாளி வர்க்க நிலைப்பாடு அவசியம் என்ற வகையில் மார்க்சிஸம் – லெனினிஸத்தைக் கையேற்று வளர்த்தெடுத்துப் பிரயோகிக்கப்பட்டதன் பேறு மாஓ சேதுங் சிந்தனை.
முன்னதாக இயங்கிய வர்க்க அரசியலில் உழைக்கும் பெரும்பான்மையினருக்கு எதிராக சிறு தொகையினராகிய சுரண்டும் வர்க்கம் பிரயோகிக்கும் வன்முறைக் கருவியாக அரசு அமைந்திருந்தது. நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கான முடியாட்சி அரசு தகர்க்கப்பட்டு முதலாளித்துவ வர்க்கத்துக்குப் பொருத்தமுடைய ஜனநாயக – குடியாட்சி முறைமை கொண்ட அரசு தோற்றம்பெற்ற போது அவற்றின் சுதந்திரத்தையும் இறைமையையும் வலியுறுத்தும் தேசிய அரசுகளாக வடிவம் பெற்றிருந்தன. முதலாளித்துவத் தேச அரசுகளைத் தகர்ப்பதன் ஊடாகச் சர்வதேச உணர்வை வளர்த்தெடுத்து அரசு தானாக உலர்ந்து உதிரும் வகையில் அமையும் பாட்டாளி வர்க்க அரசு அதற்குரிய பண்புக்கு மாறான அரை – அரசு ஆகும் (மிகப்பெரும்பான்மையினரை ஒடுக்குவதற்கு அவசியப்பட்ட வன்முறை வடிவம் அல்ல பாட்டாளி வர்க்க அரசு. முதலாளித்துவ நலனுக்கு உரியதான தேச எல்லைகளைத் தகர்ப்பதும், முதலாளித்துவ வர்க்க மீட்சியை நாடும் மிகச் சிறுபான்மையினரது முயற்சியைத் தடுப்பதற்கும் அவசியம் உள்ளது; அதன்பொருட்டு, மிகப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதோடு மிகச் சிறுபான்மையினரான சுரண்டலாளர்களது மீட்சிக்கு எதிரான சர்வாதிகாரப் பிரயோகத்தை மேற்கொள்வதாகப் பாட்டாளி வர்க்கத்தின் அரை – அரசு செயற்படும்). பாட்டாளி வர்க்கம் கையேற்றுள்ள அரை – அரசு முன்னெடுக்கும் செயலொழுங்குகள் வாயிலாக சமத்துவ சமூக நியதிகள் வளரும் போது எவருக்கு எதிராகவும் ஒடுக்குமுறைக்கான அவசியம் அற்றுப் போகும் நிலை ஏற்பட்டு வர, அரசு தானாக உலர்ந்து உதிர்ந்துவிடும்; அரசின் அவசியமின்றிச் சமூகம் தனக்கான ஒழுங்குகளைத் தானே கட்டமைத்து நடைமுறைப்படுத்தும்!
விடுதலைத் தேசியத்தின் வாயிலாக கட்டமைக்கப்படும் சமத்துவ சமூக உருவாக்கத்தில் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பல்வேறு வர்க்க ஒன்றிணைவுக்குரிய ‘மக்கள் அரசு’ அமைந்திருக்கும்; பலவேறு வர்க்கங்களது ஒன்றுபடல் வாயிலாகவே ஏகாதிபத்தியப் பிடியை முற்றாகத் தகர்த்து விடுதலையை எட்டவும் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் இயலும் என்ற வகையில் விடுதலைத் தேசிய அரசு தனியொரு வர்க்கத்துக்கானது அல்ல. அதன் இயக்கம் விடுதலைத் தேசியச் சிந்தனைக்கு உரியது; பாட்டாளி வர்க்கச் சிந்தனை முறைமையில் இருந்து வேறுபட்டது; வர்க்க சமூக முறையூடாக நவீன வரலாறு கண்டடைந்த ‘மக்கள் யுகம்’ என்பதை விடவும் விடுதலைத் தேசியம் வாயிலாக சமத்துவச் சமூகம் படைக்க முற்படும் திணை அரசியல் செயலொழுங்குக்கு உரியதான ‘மக்கள் யுகம்’ இன்னும் பரந்த ஜனநாயகப் பண்புடையது; அங்கே ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ அவசியப்பட்டது; மாறிய புதிய கட்டம் ‘மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை’ பிரயோகிப்பது!
இத்தகைய பரந்த ஒன்றுபடல் புதிய பண்பாட்டு எழுச்சிக்கு உரியது. மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம், புதிய ஜனநாயகம், புதிய பண்பாடு என்பவை குறித்த மாஓ சேதுங் சிந்தனையின் பங்களிப்பைக் கையேற்கும் ஒருவர் வர்க்க வாதங்களைக் கடந்து ‘மக்கள் விடுதலைச் சிந்தனை முறைமையை’ கண்டடைய இயலுமானவராக இயங்குவார்!
இத்தகைய புதிய பண்பாட்டு இயக்கத்துக்கு உரியது ‘மக்கள் இலக்கியம்’. வர்க்க விடுதலை என்பதைக் கடந்து, ஏகாதிபத்தியச் சகாப்தத்தைத் தகர்க்கும் வண்ணம் ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படுகிற ‘மக்கள் விடுதலை’ வென்றெடுப்பதனைச் சார்ந்த வரலாற்றுத் தேவையுடன் தோற்றம் பெற்ற புதிய வடிவத்துக்கு உரியது ‘மக்கள் இலக்கியக் கோட்பாடு’. யதார்த்த வாதப் பண்பை முழு அளவில் உள்வாங்கும் பட்சத்திலேயே மக்கள் இலக்கியம் சாத்தியமாக இயலும்; அவ்வாறு இல்லாத அழகியல் வாத முடக்கங்களுக்கு உரியவை வெறும் இரசனைத் திருப்திக்கு இடமளிக்குமே அல்லாமல் மக்களின் முழு நிறைவான வாழ்வியலுக்கு உரியதாக அமையாது!
முடிவுரை
பதினைந்தாம் நூற்றாண்டு வரையில் ‘இருண்ட யுகத்தில்’ இருந்த ஐரோப்பா 1453 ஆம் ஆண்டில் கொன்ஸ்தாந்திநோபிளை அரேபியர்கள் கைப்பற்றிய புண்ணியத்தில் மிக வேகமான விஞ்ஞானத் தேடல்களுக்குள் மூழ்கும்படி உந்தப்பட்டனர்; அதுவரை உலகத் தலைமையை அரேபியர் – இந்தியர் – சீனர் வகித்து வந்தனர். அந்தவகையில், மத்திய காலம் ஆசியாவுக்கு இருண்ட காலமாய் இருந்திருக்கவில்லை என்பது தெளிவு. இஸ்லாம், இந்து, பௌத்தம் எனும் மேற்படி சமூகங்களுக்கான மதங்கள் விஞ்ஞானத் தேடல்களை நிலப்பிரபுத்துவ நலனுக்கு ஆட்பட்ட வகையில் (தமக்குரிய மதச் செயற்பாடுகளுக்கு தீங்கற்ற எல்லைக்குள்) மேற்கொள்வதனைத் தடை செய்ய அவசியம் ஏற்பட்டதில்லை. அவற்றுக்கான சமூக முறைமை, மதம் என்பவற்றுக்கு இணக்கமான வகையில் வணிக சக்தி ஆளுமையுடன் செயற்படுவதனை மூன்று சமூகங்களும் அனுமதித்தது மட்டுமன்றி அனுசரணையாகவும் இயங்கின (மத்திய காலத்தின் மிகப் பெரும் கடற் படையைக் கொண்டிருந்த சோழப் பேரரசு இந்தோனேசியா வரை அதனது ஆக்கிரமிப்பை மேற்கொண்டதன் காரணியாக வணிக நலனே அமைந்திருந்தது). இன மரபுக் குழுக்கள் வர்க்கப் பிளவுறாமல் முழுச் சமூக சக்தியாக (திணை) மேலாதிக்கம் புரிந்து சுரண்டல் அமைப்பைக் கட்டமைத்திருந்த ஆசிய உற்பத்தி முறைக்கு உரிய பண்பு, வணிக சக்தியுடன் பூரண இணக்கத்தை வளர்த்தவாறு இயங்கிய நிலப்பிரபுத்துவ முறைமை; வணிகத்துக்கு வழங்கப்பட்ட மத அங்கீகாரம் மிகுந்த கவனிப்புக்கு உரியது!
இன மரபுக் குழுக் கட்டமைப்புத் தகர்க்கப்பட்டதன் வாயிலாக உருவான வர்க்க சமூக அமைப்பைக் கொண்டிருந்த ஐரோப்பாவில் முந்திய அதிகார வர்க்கத்தை அழித்து, தனக்கான வர்க்க நலனை முழு நிறைவாக நிலை நிறுத்தும் பண்பு காரணமாக அதற்குரிய மதமான கிறிஸ்தவம் வணிகத்தைப் பாவச் செயலாக விலக்கி வைத்துக்கொண்டது. வணிக நலனுக்கு அவசியப்பட்ட விஞ்ஞானத் தேடல்களும் தடை செய்யப்பட்டு இருந்தன. அன்றைய உலக வணிகத்துக்கு உரிய அரபு, இந்திய, சீன பொருட்களை அவர்கள் வாயிலாக ஐரோப்பாவினுள் பெற்று மக்களுக்கு கிடைப்பதற்கு ஏற்ற உள்ளூர் வணிகத்தை மேற்கொள்பவர்களாக யூதர்கள் இருந்துள்ளனர். ஐரோப்பாவினுள் முதலாளித்துவம் எனும் புதிய சமூக சக்தி 15 ஆம் நூற்றாண்டில் உருப்பெற்று விருத்தியடைய ஆரம்பித்த போது, ஐரோப்பியர்களே வணிகத்தின் பொருட்டு உலகைக் ‘கண்டறியப் புறப்பட்ட’ நிலையில் அதுவரை இருந்த தரை வழி அவர்களுக்குத் தடைப்படும் வகையில் கொன்ஸ்தாந்திநோபிள் அரேபியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. ‘நாடுகாண் வீரர்களாக’ கடல் வழிப் பயணங்கள் மேற்கொள்ளும்போது எதிர் நோக்கிய நெருக்கடிகளுடன் கைகோர்த்த காரணிகளால் முடுக்கிவிடப்பட்ட விஞ்ஞானத் தேடல் – ஜனநாயக மயப்பட்ட கல்வி விருத்தி – அரசு என்பன முற்றாகவே மதத்துடன் கொண்டிருக்கும் பிணைப்புகளைத் துண்டித்துக்கொண்டு முதலாளித்துவம் வளர்ச்சி பெற்று ஐரோப்பிய நாடுகளில் ஆளும் வர்க்கமாக 18 ஆம் நூற்றாண்டின் முடிவில் (1789 ஆம் ஆண்டு பிரான்சியப் புரட்சியைத் தொடர்ந்து) வர இயலுமாயிற்று; 19 ஆம் நூற்றாண்டில் முழு உலகையும் அதனது ஆளுகைக்குள் கொணரும் வளர்ச்சியைச் சாத்தியமாக்கி இருந்தது. உலகின் மிகப் பெரும் நிலப்பரப்பு ஐரோப்பாவின் காலனி நாடுகளாக மாறியிருந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாளித்துவத்தின் உச்சக் கட்டமான ஏகாதிபத்திய அமைப்பு முறை முழுமைப்பட்ட வடிவத்தைப் பெற்றிருந்தது!
ஏகாதிபத்திய விருத்தியில் ஐரோப்பா வரலாறு படைக்கும ஆற்றலை இழக்கும் கால கட்டமாக இருபதாம் நூற்றாண்டு அமைந்த போதிலும், அதன் ஆரம்பக் கட்டத்தில் (1917 இல்) உலகைக் குலுக்கிய ஒக்ரோபர் புரட்சி வர்க்க அரசியலின் உச்சப் பங்களிப்பாக அமைய இயலுமாயிற்று. பின்னரான ‘ஏகாதிபத்தியத்தினதும் விடுதலைத் தேசியப் புரட்சி வாயிலாக சோசலிசத்தை வென்றெடுப்பதற்கு உரிய சகாப்தத்தின் மார்க்சிஸ – லெனினிசமாகிய மாஓ சேதுங் சிந்தனை’ வெளிப்படக் களம் அமைத்த மக்கள் சீனம் 21 ஆம் நூற்றாண்டை மீண்டும் (மத்திய காலத்தினைப் போல) திணை அரசியல் முதன்மை பெறுவதற்கான ஆசிய எழுச்சிக்கு வழிகோலி உள்ளது!
முன்னதாக வர்க்க அரசியலின் போது மேலோங்கி இருந்த நடைமுறையான ‘பழைய வர்க்கத்தை அழித்தொழித்து’ புதிய வர்க்கம் ஒன்று மற்றமடைந்து வெளிப்படும் புதிய சமூக அமைப்பைக் கட்டியெழுப்புவது போல அமைவதல்ல; அதிகாரத்தைப் பறிகொடுத்த திணையின் (சமூக சக்தியின் – சாதியின்) மீளெழுச்சியைத் தடுக்கும் அதேவேளை மாற்றத்தை அனுசரிக்கும் அதனொரு பகுதியினரைத் தனது அதிகாரத்தின் கீழ் ஒன்றுபடுத்திப் புதிய சமூக அமைப்பாக்கத்தை உருவாக்கிக் கட்டியெழுப்புவதாகத் திணை அரசியல் செயலொழுங்கு அமைந்துள்ளது. இன்று உலகளவில் நிலவும் திணை மேலாதிக்கங்களாக ஏகாதிபத்தியம், பேரினவாதம், சாதியம், ஆணாதிக்கம், நிறவாதம் போன்றன இயக்கம் கொண்டுள்ளன; ஏகாதிபத்தியத்துடனான (உலக முதலாளித்துவத்துடனான) ஒடுக்கப்பட்ட சமூக சக்திகளுக்கான முரண்பாடு அடிப்படையானதாக அமைந்து, ஒவ்வோர் இடங்களிலும் இயக்கம் பெறும் பிரதான முரண்பாடு மற்றும் முரண்பாடுகளது இயக்கங்களைக் கையாள்வதாக ஏகாதிபத்திய முறைமையே செயலாற்றுகிறது. வர்க்க முரணை விடவும் அடிப்படை முரண்பாட்டின் இடத்தில் திணை முரண்பாடு வந்துள்ள இன்றைய சூழலிலும் வர்க்க அரசியல் செயலொழுங்குகளை மேற்கொள்ளுதல் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலாத நெருக்கடியாக உள்ளது. ஒவ்வொரு தேசத்திலும் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைப் பெறுவதற்கான இயக்கம் அல்ல, விடுதலைத் தேசியத்துக்காக ஒன்றிணைக்கப்பட வேண்டிய, அதனூடாக உருவாக்கப்படும் சோசலிச சமூக அமைப்பாக்கத்தை ஏற்று இயங்கவல்ல பலவேறு வர்க்கப் பிரிவினரும் ஐக்கியப்படுத்தப்பட்ட ‘மக்கள் அரசு’ வெற்றிகொள்ளப்பட வேண்டிய வரலாற்றுக் கடமை எம்முன்னால் உள்ளது. ஏகாதிபத்திய நாட்டினுள் கூட இன்றைய நிலையில் வர்க்கப் போராட்டம் வாயிலாகச் சமூக மாற்றம் ஏற்படப் போவதில்லை; அங்கேயும் ஏகாதிபத்திய நாட்டத்தை ஒழித்துக்கட்ட ஏற்ற மக்கள் அரசு ஏற்படுவது கூட ஒடுக்கப்பட்ட தேசங்களைச் சுரண்டும் வாய்ப்பை அந்த நாடு இழக்கும் அளவில் தங்கியுள்ளது!
திணை மேலாதிக்கங்களை முற்றாக ஒழித்துக்கட்டிச் சமத்துவத்தை வெற்றிகொள்ளும் விடுதலைத் திணை அரசியலின் அவசியத்தின் பேறாக ‘மக்கள் இலக்கியம்’ எனும் ‘புதிய பண்பாட்டு’ வடிவம் மேலெழுந்து வந்துள்ளது!
சாதியத் தகர்ப்புக்கான திணை அரசியல் முன்னெடுப்பை மேற்கொண்ட இலங்கை முற்போக்கு இயக்கம் மக்கள் இலக்கியக் கோட்பாட்டை வடிவமைத்து இருந்தது. அதன் எழுச்சியில் மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் எதிர் நிலையில் இயங்கிய காரணத்தால் விடுதலைத் தேசியக் கடமையை மார்க்சியவழிகாட்டலுடன் முற்போக்கு இயக்கம் கையேற்க இயலாமல் போனது. ஏகாதிபத்தியச் சுயநிர்ணயம் வகுத்த அரசியல் நெறியில் மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் இயங்குவதனை முறியடித்து விடுதலைத் தேசியச் சுயநிர்ணய உரிமைப் பிரயோகத்தை மார்க்சியர்கள் கையேற்காமல் போனதன் காரணமாக மக்கள் விடுதலைக்கான அணி இன்றுவரை பின்னடைவை அனுபவிக்க நேர்ந்துள்ளது.
இந்தப் பின்னடைவு இலங்கைக்கானது மட்டுமல்ல; உலக அளவில் முகம் கொள்ளப்படும் ஒரு நெருக்கடி. மார்க்சியர்களின் துரோகங்களோ மார்க்சியத்தின் போதாமையோ இதற்கான அடிப்படைக் காரணங்களாக அமைந்தன அல்ல. வரலாற்று இயக்கச் செல்நெறியில் ஏற்பட்டுவிட்ட மாற்றத்தைக் கவனங்கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய கோட்பாட்டு உருவாக்கம் உரியவகையில் முன்னுரிமை பெறவில்லை. அவ்வகையில் எழுச்சி கொள்ள வேண்டிய திணை அரசியல் செயலொழுங்குகளுக்கு உரிய வெகுஜன மார்க்கமும் வேலைத் திட்டமும் மேலெழுந்து வராத வரையில் மீண்டும் மார்க்சியம் வையத் தலைமை கொள்வதும் பின்தங்கிச் செல்லும்.
நடைமுறையில் சோசலிசக் கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கும் மாஓ சேதுங் சிந்தனையைப் பிரயோகிக்க முற்படுகிற மக்கள் சீனம் திணை அரசியல் செலொழுங்கை மேற்கொண்டு வருகிற போதிலும் வர்க்க அரசியலுக்கு வேறான முழுச் சமூக சக்திக்கு (திணைக்கு) உரிய பிரத்தியேக வடிவம் என்பதற்கு உரிய கோட்பாட்டை முன்வைக்க இயலாது உள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூர்மையான வர்க்கப் போராட்டங்களது நீடிப்பு நிலவிய சூழலில் மூலதன உருவாக்கத்தின் அடிப்படைகளை நுண்ணாய்வுக்கு உட்படுத்திய கார்ல் மார்க்ஸ், மூலதனத்தைப் படைத்தளிக்கும் பாட்டாளி வர்க்கத்தின் பங்குப் பாத்திரத்தை வெளிப்படுத்தினார். பாட்டாளிகளது உபரி உழைப்பின் பேறானது மூலதனம் என்ற வகையில் சமூக உடைமையான அதனை அபகரித்து வைத்திருக்கும் முதலாளிகள் இடமிருந்து மீட்டெடுத்துச் சமூகவுடமையாக்கும் வரலாற்றுப் பொறுப்பைப் பாட்டாளி வர்க்கம் கையேற்கும்; அதன் வாயிலாகக் கட்டியெழுப்பப்படும் சோசலிச சமூகச் செயலொழுங்குகளின் நீடிப்பில், இறுதியாகப் பூரண பொதுவுடமை முறைமையை முழு உலகும் வந்தடைய வழிவகோலும் என்ற கோட்பாட்டை முன்வைத்தார் மார்க்ஸ்!
அவர் காலத்திலேயே முதலாளித்துவ நாடொன்றில் போட்டியிட்டவாறு இயங்கிய பெரு மூலதனங்கள் சில இணைந்து ஏகபோக மூலதனமாக வடிவம் பெற்று ஏனைய சிறு மூலதனங்களை அழிவுக்கு உட்படுத்தும் செயலொழுங்கு ஏற்படத் தொடங்கி இருந்தது. லெனின் காலத்தில் அந்த ஏகபோக மூலதனம் காலனி நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஏகாதிபத்தியம் என்ற மற்றொரு வடிவ மாற்றத்துக்கு உலகம் உள்ளாகி இருப்பது பட்டவர்த்தனமாக வெளிப்பாடு அடைந்து இயக்கம் கொண்டிருந்தது. ஏகாதிபத்தியக் கட்டத்தில் உலக மூலதனமாகிவிட்ட ஏகபோக மூலதனத்துக்கு எதிராகப் பாட்டாளி வர்க்கமும் விடுதலைத் தேசியம் எனும் முழுச் சமூக சக்தியும் (திணையும்) சமூக மாற்றக் கருவிகளாக செயற்படுவன என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி ஒக்ரோபர் புரட்சி (1917) வாயிலாக அதனை ருசுப்படுத்திக் காட்டிய லெனினிசம் மேலெழுந்து வந்தது.
விடுதலைத் தேசியம் நேரடியாக சோசலிசத்தைப் படைக்க ஏற்றதாகப் பாட்டாளி வர்க்க அரசு உருவாகிவிட்டது என்ற வரலாற்றுச் செல்நெறி மாற்றத்தை லெனின் முன்வைத்திருந்தார்; அதனைக் கையேற்றுச் சீனத்தில் பிரயோகித்த மாஓ சேதுங் சிந்தனை என்பது அதுவரை இயக்கம் கொண்டிருந்த மார்க்சிஸ – லெனினிஸ இயங்கு முறைகளில் இருந்து பல வகைகளிலும் அடிப்படை வேறுபாடுகளை உடையது. கூட்டரசாங்கக் கோட்பாட்டை நிராகரித்துப் பாட்டாளி வர்க்க அரசே நிதர்சனமாக இயலும் என்ற லெனினது நிலைப்பாட்டை சீனத்தில் பிரயோகிக்க இயலாது எனக் காட்டிய மாஓ சேதுங் கூட்டரசாங்கமாக இயங்கும் மக்கள் அரசு என்பதன் அவசியத்தை உணர்த்தினார். இந்த மாற்றப் போக்கின் வாயிலாகத் தனியொரு வர்க்க இயங்கு முறைக்கு மாறாக முழுச் சமூக சக்தியின் விடுதலைக் குணாம்சம் மேலெழுந்துள்ளமை கவனங்கொள்ளப்படுதல் அவசியம்!
இவ்வகையிலான முழுச் சமூக சக்திக்கான இயங்குமுறை ஒன்றைத் தமிழகம் மட்டுமே பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி வந்திருந்தது. சமத்துவ ஊடாட்டத்துடன் மூன்று நூற்றாண்டுகளாக (கிமு 6 முதல் கிமு 3 ஆம் நூற்றாண்டு வரை) இயங்கிய தமிழகத் திணை வாழ்வியலை விவசாய வாய்ப்பில் பெரும்படை நடாத்த இயலுமான விருத்தியைப் பெற்ற மருதத் திணை தகர்க்கும் வரலாற்றுக் கட்டம் கிமு 3 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டதில் இருந்து எமக்கான ஏற்றத்தாழ்வுச் சமூக முறைமை தோற்றம் பெற்றது. முந்திய சமத்துவ வாழ்வுடன் இயங்கிய இன மரபுக் குழுக்களுக்கு உரிய வாழ்வியல் ஊடாக உயர் பண்பாட்டை கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் பெற இயலுமானது தமிழகப் புவிச் சூழல், வரலாற்றுக் காரணி என்பவற்றால் ஏற்பட்ட வாய்ப்பு; சமத்துவ வாழ்வுக்கு உரிய இன மரபுக் குழுக்களே மூன்று நூற்றாண்டுகளாக உயர் பண்பாட்டை எட்டி இலக்கியம் படைத்துப் பின்னரும் அவை நிலைபெற இயலுமாகி இருந்த காரணத்தால், அவை வாழ்ந்த புவி அமைப்புக்களைத் திணைகள் என வகைப்படுத்தி இலக்கியத்திலும் ‘திணைக் கோட்பாடாக’ இலக்கணத்திலும் (தொல்காப்பியம் வாயிலாக) பதிவைப் பெற இயலுமாயிற்று. ‘திணை’ என்பது இனம், குடி என்பனவற்றையும் குறிக்கும் என இலக்கணம் வரையறுத்து உள்ள அம்சம் கவனிப்புக்கு உரியது.
வீர யுகமாகக் கொள்ளப்படும் வகையில் மருதத் திணை மேலாதிக்கத்தை நிதர்சனமாக்கிய யுத்த முன்னெடுப்புகள் தமிழிலக்கிய வரலாற்றுத் தொடக்கம் என்பதனை க. கைலாசபதி உட்படப் பலரும் எடுத்துக் காட்டி உள்ளனர். அதன் வாயிலாக ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுச் சமூக முறைமையை மட்டுமன்றி பக்திப் பேரியக்கம் வாயிலாக வணிகச் சக்தியின் மேலாதிக்கத்தைத் தகர்த்து வெள்ளாளர் அரசதிகாரத்தை வென்றெடுத்தமை பற்றியும் க. கைலாசபதி எடுத்துக் காட்டி உள்ளார்.
திணை அரசியல் பண்புடன் சாதியத் தகர்ப்புப் போராட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வந்த அனுபவச் செழுமையை உள்வாங்கியவாறு பழந்தமிழ் வரலாற்றை மறுவாசிப்புக்கு உட்படுத்திய காரணத்தாலேயே க.கை. அவர்களால் எமக்கான சமூக மாற்றத்தில் சமூக சக்திகளது அதிகாரக் கைமாறுகையை இடம்பெற்றிருப்பதனை இனங்கண்டு காட்ட இயலுமாக இருந்தது!
தமிழ்ப் பண்பாட்டு வரலாறு குறித்த தெளிவு மட்டுமன்றி, அவற்றைக் கண்டறிந்து எமக்கான விடுதலை வென்றெடுக்கப்பட ஏற்றதாகக் கையேற்றுப் பிரயோகிக்க முற்படும் மார்க்சியம் தேங்கிப்போன குட்டையல்ல என்ற தெளிவைப் பெறுவதும் அவசியம். மார்க்சியத்தில் ஏற்பட்டு வந்த பரிணமிப்புகளை ஐயம் திரிபறத் தெளிவாகப் புரிந்து கொண்டால் மட்டுமே திணை அரசியல் பற்றிய புரிதலைப் பெறக்கூடியவர்களாவோம்!
இந்தக் கற்றலை மேற்கொள்வதன் ஊடாக இன்றைய மேலாதிக்கத் திணையாக உள்ள ஏகாதிபத்தியத்தை முறியடித்து விடுதலைத் தேசங்கள் தமக்கான சுதந்திரத்தையும் சுயநிர்ணய உரிமையையும் முழுமைப் பண்புகளுடன் வெற்றி கொள்ள ஏற்ற அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள ஏற்றதாக மார்க்சிஸ லெனினிஸ – மாஓ சேதுங் சிந்தனையைக் கையேற்று விருத்தி செய்ய வேண்டியது அவசியமாகும். அவ்வகையில் கண்டடையும் மார்க்சியத் திணை அரசியலானது புதிய பண்பாட்டு இயக்கமே எமக்கான சமூக மாற்றத்தின் முதன்மைக் கருவி என வலியுறுத்தப்படுவதனைக் காண்போம்!
வர்க்க அரசியலில் கூர்மையான வர்க்கப் போராட்டத்தின் பேறான அரசியல் புரட்சி ஊடாகவே சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. சாதியம், காலனித்துவம் போன்ற கருத்தியல் ஒடுக்குமுறை பெறும் முக்கியத்துவம் காரணமாகத் திணை மேலாதிக்க ஒடுக்குமுறைகளைத் தகர்க்க வேண்டுமாயின் அரசியல் புரட்சிக்கு முற்பட்டதாகப் பண்பாட்டுப் புரட்சி மேற்கொள்ளப்படுவது அவசியமானது; பக்திப் பேரியக்கத்தின் வாயிலாக ஏற்பட்ட சமூக மாற்றம் ஒரு முன்னுதாரணம்!
அதற்குரியதாக மக்கள் இலக்கிய எழுச்சி குறித்த அக்கறை வளர்க்கப்பட வேண்டும். தேசங்கள், இனத் தேசியங்கள், சாதிகள் அனைத்தும் தம்மிடையே சமத்துவத்தை ஏற்படுத்தும் அரசியல் முன்னெடுப்பின் வாயிலாகவே சமூக, பொருளாதாரச் சமத்துவங்களை வெற்றிகொள்ள இயலும். அதன் பொருட்டு சுயநிர்ணய உரிமை குறித்த தெளிந்த பார்வையை எட்ட வேண்டியதும் முன்னுரிமைக்கு உரியது!
எந்தவொரு புனிதங்களுக்கும் ஆட்பட்டுத் தேங்கிப் போகாமல், மக்கள் விடுதலையை வென்றெடுக்க வழிகாட்டும் மார்க்சியத்தை இன்னொரு மதமாக ஆக்கிவிடாமல், இன்றைய மற்றும் எமக்கான பிரத்தியேகச் சூழல்களுக்கு அமைவாக மார்க்சியத்தை வளர்த்தெடுத்துப் பிரயோகிக்கும் பொறுப்பு எம்மனைவருக்கும் உள்ளது!
மனங்களைத் திறந்து வைப்போம்!
Sent from my iPad


Leave a comment