
*‘அம்மாவின் கதை’ இரண்டாம் பதிப்புக்கான பதிப்புரை*
‘மக்கள் எனும் கடலில் நீந்தும் மீன்கள்’ நாங்கள்!‘
சீன கம்யூனிஸ்ட்களின் புகழ்பெற்ற முழக்கம்.
மதுரை வட்டாரத்தில் தோழர் கே. பி. ஜானகியம்மாள் அவர்கள் செயல்பட்ட காலத்தில் “அம்மா கட்சி” என்றுதான் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கப்பட்டது என்கிறார் என் ராமகிருஷ்ணன்.
மக்கள் போராட்டங்களின் கூட்டுச் செயல்பாட்டிலிருந்து சிறந்த முன்னோடிகள் உருவாகிக்கொண்டேயிருப்பார்கள். சிறந்த முன்னோடிகளின் சாதனைகள் கூட்டுச் செயல்பாட்டுக்கான அடித்தளமாக மாறும். இத்தகைய இரண்டு நிகழ்வுகளும் சமூகத்தில் நடந்துகொண்டேயிருக்கும். போராட்டங்கள் எனும் உலைக்களங்கள்தான் முன்னோடிகளை பிரசவிக்கின்றன. முன்னோடிகள் போராட்டங்களை உந்தித் தள்ளுகிறார்கள். அத்தகைய சிறந்த முன்னோடியாக தோழர் ஜானகியம்மாள் இருந்துள்ளார்.
தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் மக்கள் ‘நாடகம்’ எனும் கலையை ஒரு ஆயுதமாக தங்கள் கையில் ஏந்தி நின்றுள்ளனர். அந்த வரலாற்றுப் போக்கிலிருந்து உருவான ஜானகியம்மாள் தமிழகத்திலும் இலங்கையிலும் நாடகங்களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர். ஒரு கட்டத்தில் தனது நட்சத்திர வாழ்க்கையை ஓரம் கட்டி கட்சி வாழ்க்கையை தேர்வு செய்கிறார். கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தனது கலை வாழ்வைத் தொடர்ந்திருக்கிறார். நடிகையாக தான் சம்பாதித்த சொத்துகளை மக்களின் போராட்டத் தீயை வளர்ப்பதற்கான யாகத்தில் அர்ப்பணம் செய்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்னால் சில தோழர்கள் கட்சிக் கலைஞர்களை ‘கலா கோஷ்டி’ என்பார்கள். கலைஞர்களும் ‘போராளிகள்தான்’ என்ற புரிதல் அவர்களுக்கு கம்மிதான். ஆனால் ஜானகியம்மாள் காலத்தில் நல்லவேளையாக அப்படியான சூழல் இல்லை. ஒரு நடிகையாக இருந்தவர் பெரும் மக்கள் தலைவராக வளர்ந்து ஓங்கி நின்றார் என்றால் அவர் மக்களிடமிருந்து எப்படி கற்றுக்கொண்டிருப்பார் என்பதையும் கட்சியும் அவரை எவ்வளவு அருமையாக பாதுகாத்து உயர்த்திப் பிடித்தது என்பதையும் இளம் தலைமுறையினர் இந்தப் புத்தகத்தில் அறியலாம். அந்த வகையில் ஜானகியம்மாள் தனிவகையான தலைவர்.
மக்கள் அண்ணாந்து பார்த்து வியந்த நட்சத்திரமாக ஜொலித்த அவர், ‘மக்கள் எனும் கடலில் நீந்தும் மீனாக’ பரிணமித்துள்ளார். மக்களுக்கான ‘கலையின் கர்ஜனையாக’ தொடங்கிய அவரது வாழ்வு, களத்தில் துப்பாக்கியை எதிர்கொண்ட பெண் சிங்கமாக நிறைவு பெற்றது. மக்களின் இதயமாகவும் குரலாகவும் மட்டுமல்ல, துப்பாக்கியாகவும் அவர் இருந்துள்ளார். சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்கள் அரசால் கைது செய்யப்பட்ட முதல் பெண் தலைவர் எனும் பெருமையை இத்தகைய பணிகள் அவருக்கு அளித்தன.
‘மலைவேடன்’ சமூக மக்களை ‘பழங்குடி மக்கள்’ என்று அங்கீகரிப்பதற்கான பணிகளை ஜானகியம்மாளும், என். சங்கரய்யாவும்தான் செய்தார்கள் என்கிறார் அந்த சமூகத்திலிருந்து உருவாகி சப்கலெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்ற, மலைவேடன் பழங்குடி மக்களின் மாநிலத் தலைவர் ஜெகநாதன். இந்தத் தரவுகளை அனைத்து பழங்குடி மக்களிடமும் கொண்டு போய்க்கொண்டிருக்கிறார் போயர் சமூகத்தின் தலைவர் அஜாய்கோஷ்.
ஆலைத்தொழிலாளர்கள், மனிதக் கழிவு அகற்றுவோர் உள்ளிட்ட துப்புரவு பணியாளர்கள், பழங்குடிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் அமைப்பாகத் திரட்டுகிற பெரும் அமைப்பாளராக ஜானகியம்மாள் இருந்துள்ளார். அவரது செயலாற்றலும் அதன் மீது மக்கள் சக்திக்கு ஏற்பட்ட காதலும் பின்னிப் பிணைந்து உருவான அவரது ஆளுமையின் செல்வாக்கின் உயரம் தமிழகம் முழுவதும் வீசியது.
அதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். 1975இல் மாணவராக இருந்த சவுத் விஷன் பாலாஜி நெருக்கடி நிலையை எதிர்த்து சுவரொட்டி ஒட்டியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீண்டகால சிறைத் தண்டனை பெற்றவர்களும் சிறையில் வார்டனாக இருப்பார்கள். மக்களைத் துன்புறுத்திக்கொண்டிருந்த ஒரு ரவுடியைக் கொலை செய்ததால் தண்டிக்கப்பட்டிருந்த ஒரு வார்டன் வந்து பாலாஜியை “என்ன கேஸ்?” என்று விசாரித்துத் தெரிந்துகொண்டார். “நான் ஜானகியம்மா சிஷ்யன்பா” என்று தன்னை பெருமையாகவும் பாலாஜியிடம் அறிமுகம் செய்துகொண்டார். சிறைக்குள் போகிற மாணவப் போராளிகளைப் பாதுகாக்கிற குடையாகவும் கேடயமாகவும் ஜானகியம்மாவின் செல்வாக்கு எங்கும் நிறைந்து நின்றது என்பதுதான் அத்தகைய நிகழ்வுக்கு அர்த்தம். மக்கள் விரோதிகளுக்கான தண்டனையிலும் ஜானகி கலந்து இருந்தார். மக்கள் போராளிகள் தண்டிக்கப்பட்டால் அந்த இடத்தில் அவர்களுக்கான பாதுகாப்பிலும் அவர் கலந்து இருந்தார் என்பதுதான் இத்தகைய நிகழ்வுகளின் ஆழமான அர்த்தம்.
மக்களின் துன்பங்களுக்கான போராட்டங்களாக, தீர்வுகளாக, கம்யூனிஸ்ட்டுகளின் இயல்பான செயல்பாடுகள் மாறும்போது, அவர்கள் ‘மக்கள் எனும் கடலில் நீந்தும் மீன்கள்’ ஆவார்கள். அத்தகைய தருணங்களில் பிரபஞ்சத்தின் எந்தவொரு சக்தியும் கம்யூனிஸ்ட்களை தோற்கடிக்க முடியாது. அத்தகைய அற்புதமான ஒரு தருணத்தில் உதித்த தோழர் ஜானகியம்மாளின் போராட்ட வரலாறுக்கு இந்தச் சின்னப் புத்தகம் நியாயம் வழங்காது. ஆனால் நமது மக்கள் எழுத்தாளர் தோழர் என்.ராமகிருஷ்ணன் அவர்கள் இதை எழுத வில்லை என்றால் இளம் தலைமுறையினருக்கு இதுவும் கிடைக்காமல்தான் போயிருக்கும். காரிருளிலிருந்து வெளிப்படும் கை விளக்கு இது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் ஆய்வாளர் ஒருவர் சுதந்திரப் போராட்ட பெண் தலைவர்கள் பற்றி எழுதியிருக்கிறார். இளம் தலைமுறையினர் இதில் ஆழமாக இறங்கவேண்டும். ஜானகியம்மாள் உள்ளிட்ட இத்தகைய அர்ப்பணிப்புமிக்க போராளிகளின் வாழ்வுகள்தான் இன்றைய போராளிகளுக்கான பரம்பரைச் சொத்துகள். அர்ப்பணிப்புமிக்க போராளிகளின் வாழ்வுகள்தான் இருளைக் கிழிக்கும் ஒளி தீபங்கள். அவர்களை ஏந்தி முன்னேறுவோம்.
மாணவர் பாலாஜி சவுத் விஷன் பதிப்பாளர் பாலாஜியாக பரிணமித்தபோது ஜானகியம்மாளின் புத்தகத்தை அவர் உயிரோடு இருந்த காலத்திலேயே 1990இல் பதிப்பிக்கிற அரிய வாய்ப்பும் கிடைத்தது. உலகின் எந்த மூலையில் இருக்கிற தமிழரும் ஜானகியம்மாளின் வாழ்வை வாசிக்க முடிகிறவகையில் இந்த புதிய பதிப்பு கிண்டில் புத்தகமாகவும் வெளியாகிறது.
இதற்கான தூண்டுதலை அளித்தவர் தோழர் பிரளயன் அவர்கள். 1943இல் தொடங்கப்பட்ட ‘இந்திய மக்கள் நாடக மன்றத்தின்‘ 80 ஆண்டு நிறைவுக்கான தேசிய கலைப் பயணம் தமிழகத்தில் டிசம்பர் 13 முதல் 17 வரை சுற்றுப் பயணம் வந்தது. பிரளயன் இந்தப் பயணத்துக்காக, இந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து தோழர் ஜானகியம்மாவின் வரலாறை நாடகமாக உருவாக்கியிருக்கிறார்.
சென்னை வெள்ளத்தில் ‘சவுத் விஷன் புக்ஸ்’ பாதிக்கப்பட்டதால், திட்டமிட்டபடி டிசம்பர் 13 ஆம் தேதியன்று அவர்களது நாடக விழாவில் இதனை வெளியிடமுடியவில்லை. தடைகளைத் தாண்டி தற்போது உங்களின் கைகளில் சேர்த்துவிட்டோம். படியுங்கள், பரப்புங்கள். சமூகத்தில் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கிற ‘அம்மா’வின் பணிகளைத் தேடிப் பதிவு செய்யுங்கள்.
எம் பாலாஜி
நிறுவன ஆசிரியர்
த நீதிராஜன்
முதன்மை ஆசிரியர்
31.12. 2023
கிண்டில் புத்தகம் பெற / https://amzn.eu/d/8aEYBp7


Leave a comment