
ந.இரவீந்திரனின்
‘ஏகாதிபத்தியம், சுயநிர்ணய உரிமை, மக்கள் இலக்கியம்’ நூல் தொடர்பான அறிமுகக் குறிப்பு.
ந.பார்த்தீபன்.
மேனாள் உபபீடாதிபதி
தேசிய கல்வியியல் கல்லூரி
வவுனியா.
ந.இரவீந்திரனின்
‘ஏகாதிபத்தியம், சுயநிர்ணய உரிமை, மக்கள் இலக்கியம்’ நூல் தொடர்பான அறிமுகக் குறிப்பு.

இந்நூலின் முன் பக்கத்திலேயே ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக எழுத்தின் அளவை ஏறுவரிசையாக ஏகாதிபத்தியத்தை சிறிதாகவும் மக்கள் இலக்கியத்தைப் பெரிதாகவும் காட்டியிருக்கிறார் எழுத்தாளர்.
அட்டைப்படமும் இருளினுள் இருந்து பல கைகள்ர விரல்களை விரித்தபடி ஒளியை நோக்கி உயர்த்தப்படுவதாகவும் அவை கம்பிகளுக்கு இடையிலிருந்து எழுவதாகவும் காட்டப்படுகிறது.
ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு(இருண்ட பகுதி)எதிராக சுயநிர்ணய உரிமையைப் பெற( ஒளியை நோக்கி), மக்கள் இலக்கியத்தை (ஒரே கருவி) அந்தக் கைகள் எழ வேண்டும் என்பதை அட்டைப்படம் ஆழமான கருத்தோடு எடுத்துக் காட்டுகிறது.
பின்னட்டையில் தீட்சண்யமான பார்வையுடன் நூலாசிரியரின் படமும் இ.இராஜேஸ்கண்ணனின் சிறு குறிப்பும் இடம்பெற்றிருக்கிறது.இந்தக் குறிப்பு” மாற்றுக்களைக் கண்டடையும் இயங்கியது க்கான சுயவிமர்சன நோக்காக ‘ஏகாதிபத்தியம்- சுயநிர்ணய உரிமை – மக்கள் இலக்கியம்’ என்ற தலைப்பில் அணிந்துரையில் எழுதப்பட்டதன் ஒரு பகுதியாகும்.
நூலின் முன்னட்டையில் நீ.இரவீந்திரன் என்றும் பின்னட்டையில் இ.இராஜேஸ்கண்ணன் என்றும் மட்டுமே இருந்தது.ஆனால் ந.இரவீந்திரன், கலாநிதி என்றோ இ.இராஜேஸ்கண்ணன்,சிரேஷ்ட விரிவுரையாளர் என்றோ பதிவிடாமல் இருப்பதும் சிந்திக்க வைக்கிறது.
பின்னட்டைக் குறிப்பில் ” தேசியம் எனும் புனிதக் கருத்துருவாக்கம் ஏகாதிபத்தியத்துக்கான எதிர்ப்பாக வெளிப்படும் நிலையிலாயினும் சரி, தேச எல்லைக்குள் விடுதலைத் தேசியமாக முனைப்பும் பெற்றாலும் சரி, அதனுள் ஒரு மேலாதிக்கம் உள்ளடங்கிய படியே இருக்கும் எனவும் அது ” ஏகாதிபத்தியச் சுயநிர்ணயமாக” நிலைபெற்று தேசத்துக்கு உட்பட்ட நலன்களைப் பாதிக்கும் என்பதை இந்த நூல் பிரதான ஒரு விவாதமாக கிளர்த்துகின்றது. இந்த ” மேலாதிக்கத் திணையின் சுயநிர்ணயம்” பற்றிய தெளிவான புரிதல் இலங்கைத் தேசத்தின் இன்றைய நிலையில் தர்க்க ரீதியில் சிந்திக்க வேண்டிய விடயமாக உருப்பெற்றுள்ளது.”
“ஏகாதிபத்தியம், சுயநிர்ணய உரிமை தொடர்பில் விவாதங்களைக் கிளர்த்தும் ஒரு நூலில் ‘மக்கள் இலக்கியம்’ பற்றிய கருத்து ஏன் அவசியம்? என்ற கேள்வி எழுவது இயல்பு தான்.’ மக்கள் இலக்கியம்’ எனும் விடயம் இலங்கைத் தமிழ்ச் சூழலைப் பொறுத்தமட்டில் ஒரு பேரியக்கமாக தொழிற் பட்டது.அதற்கு ஓர் அரசியல் கருத்து நிலை இருந்தது.வ.அ.இராசரத்தினம், மஹாகவி ஆகிய இருவரும் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் அடையாளத்தை வரித்துக் கொள்ளாது இருந்தமைக்கான நியாயப்பாட்டை நூலாசிரியர் வலியுறுத்தி விரிவாகப் பேசுகின்றார்.அதன் அரசியலை விளக்கியுரைக்கின்றார் “.
என்று இ.இராஜேஸ்கண்ணன் நூலின் சாராம்சத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
“சமூக – பண்பாட்டுத் தளச் செயற்பாடுகளின் போது அதிக பட்சக் கருத்தியல் உடன்பாட்டு டன் என்னோடு தோள் சேர்ந்து உழைத்தவரான தோழர் ஜெ.லெனின் மதிவானம் நினைவுகளுக்கு…” என்று எழுதி இந்நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார் நூலாசிரியர்.
உள்ளே:
1.) ஏகாதிபத்தியம், சுயநிர்ணய உரிமை, மக்கள் இலக்கியம்
2.)பேசுகளம்
3.)ஏகாதிபத்திய எதிர்ப்பு
4.)ஏகாதிபத்தியம்: மற்றுமொரு வரலாற்றுச் செல்நெறிக்கான தொடக்கம்
5.)சாதியத் தகர்ப்புப் போராட்ட அனுபவமும் பேரினவாத ஒடுக்குமுறையும்
6.)விடுதலைத் தேசியச் சுயநிர்ணய உரிமையும் ஏகாதிபத்தியச் சுயநிர்ணயமும்
7.) தேசிய எழுச்சியும் மக்கள் இலக்கியமும்
8.)புதிய பண்பாட்டு இயக்கம்
9.)முடிவுரை
ஆகிய தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார் நூலாசிரியர்.
இன்றைய எமது நாட்டுப் பிரச்சினைக்கு மட்டுமல்லாமல் சர்வதேச பிரச்சினைகளுக்கும் தீர்வாக மக்கள் இலக்கியம் உருவாக வேண்டும் என்பதை நூலாசிரியர் விரிவாக, விளக்கமாக சர்வதேச தீர்வுகளினூடாக எடுத்துக் காட்டியுள்ளமை பாராட்டுக்குரியது.
நூலாசிரியரின் தேடலும் தர்க்க ரீதியான சிந்தனையும் அனுபவமும் இணைந்து நல்லதொரு நூலை நாம் பெற உதவியுள்ளது.


Leave a comment