ஆங்கில பதிப்பிற்கான முகவுரை

இந்தக் கட்டுரைகள் (மற்றும் சிறுகதை) இப்போதும்கூட சில வாசகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன என்பதை அவ்வப்போது வரும் கடிதங்கள் காட்டுகின்றன. அவர்களின் வேண்டுகோளின்பேரிலும், தேவை அவர்களோடு மட்டும் அடங்கியதாய் இருக்காது என்னும் நம்பிக்கையின் பேரிலும் இந்த மறுபதிப்பு செய்யப்படுகிறது. எப்படியும் இக்கட்டுரைகளை வெளியிட்ட ஏடுகள் தடையின்றி உடனே கிடைப்பனவாய் இருக்கவில்லை. ஒரு குறைந்தபட்ச அளவுக்கே பாடதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதுவும்கூட பொதுவாக மெய்ப்புகளை கட்டுரை ஆசிரியருக்கு சம்பந்தப்பட்ட ஏடுகள் காட்டவில்லை என்பதால்தான் தேவையாகி உள்ளன. கணிசமான சேர்ப்புகள் சதுர அடைப்புகளுக்குள் தரப்பட்டுள்ளன. இறுதியில் வரும் குறிப்பு மூல வெளியீட்டின் விவரத்தைக் கொண்டுள்ளது. மேலும் தேவையான இடத்தில் தலைப்புப் பொருளை விளக்கப்படுத்தும் துணைக் கூற்றுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பகுப்பாய்வானது காலத்தின் கடும் சோதனைக்கு தாக்குப்பிடித்து நின்றிருக்கவில்லை என்றால், ஆங்காங்கு ஏதாவது ஒரு பகுதியானது வருங்காலத்தில் நடைபெற வாய்ப்பற்ற முன்கணிப்பாக முதலில் தோன்றினாலும், பிறகு நடந்த நிகழ்ச்சிகளால் மெய்ப்பிக்கப்பட்டு இருக்கவில்லை என்றால், இந்த எழுத்துக்களை அவை மறைந்து ஒழிவதில் இருந்தும் தடுத்துப் பிடித்து நிறுத்துவதில் எந்த பொருளும் இருந்திருக்காது. இதில் கையாளப்பட்டிருக்கும் இயங்கியல் பொருள்முதல்வாத முறையே இன்றியமையாததாகும். இம்முறையின் கோட்பாடுகளை முதன்முதலாய் வளர்த்தெடுத்து. இதனை ஒரு கருவியாக முறைப்படி பயன்படுத்திய மேதையின் பெயரால் இது மார்க்சியம் என்றும் வழங்கப்படுகிறது.

இயங்கியல் பொருள் முதல்வாதத்தின் கொள்கைப்படி, பொருளே என்றும் உள்ளது. பொருளின் குணங்கள் எண்ணித் தீராதவை. பொருளின் ஒரு அம்சமே மனம்: மூளையின் ஒரு இயங்குமுறையே மனம். எனவே, கருத்துகள் என்பவை முதன்மையான நிகழ்வுகள் அல்ல. மாறாக, பொருள்வகை நிகழ்வுகளின் பிரதிபலிப்பே கருத்துகள்: மனித உணர்வின் மீதான மாற்றங்களே கருத்துகள். மனித உணர்வு என்பதும் ஒரு பொருள்வகை நிகழ்முறையே ஆகும். எனவே, இறுதியில் கருத்துகள் மனித அனுபவங்களில் இருந்தே உருவாகின்றன. பொருள் சடமானது அல்ல; மாறாக ஓயாமல் பரஸ்பரம் வினைபுரிந்தபடியும் நிலை மாறியபடியும் இருப்பது. அது பொருள்களின் வெறும் திரட்டு என்பதைவிட நிகழ்முறைகளின் சிக்கல்மயமான முழுமையாகவே இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் பொருளுக்குள்ளே மாறுதலுக்கான ஒரு உள்ளார்ந்த குணம் – ஒரு ‘அக முரண்பாடு’ உறைகிறது. அது காலப்போக்கில் அந்த கட்டத்தின் அல்லது நிலைமையின் நிலைமறுப்புக்கு இட்டுச் செல்கிறது இது தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நிலை மறுப்பானது வெகு இயல்பாகவே மறுபடியும் நிலைமறுக்கப்படுகிறது. ஆனால், பொருள் முன்பு இருந்த நிலைக்கே வெறுமனே திரும்பி விடுகிறது என்று இதற்கு பொருளில்லை. மாறாக முற்றிலும் வேறு ஒரு மட்டத்துக்கு சென்றிருக்கிறது. இவ்வாறு எதிர்மறைகளுக்கிடையில் ஒரு அடிப்படையான ஒற்றுமை இருக்கிறது. வெறும் அளவு மாற்றமே காலப்போக்கில் கண்டிப்பாக ஒரு பண்பு மாற்றத்துக்கு இட்டுச் செல்கிறது. பெரும்பாலும், அளவானது ஒரு குறிப்பிட்ட முற்றிய நிலை (கூடல்) மதிப்பை அடைந்தபின் ஏற்படும் திடீர் மாற்றமாக இது இருக்கிறது. கடைசியாக உயிர் என்பது குறிப்பிட்ட பொருள் வடிவங்கள் நிலவுகிற முறையாகும் – குறிப்பாக புரதங்களைப் போன்ற அங்ககக் கூட்டுப் பொருள்கள் அடங்கிய வடிவங்களின் இருத்தல் முறையே உயிர் எனப்படுகிறது. அதன் இருத்தல் முறையின் தனிச்சிறப்பான பண்பு என்னவென்றால் உயிருள்ள பொருள் என்னும் தன் சிறப்புக் குணத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக, பொருத்தமான சூழலுடன் திட்டவட்டமான பாணியில் குறிப்பிட்ட குறைந்தபட்ச அளவில் அது பரஸ்பர வினைபுரிய வேண்டியதாயுள்ளது. அடுத்ததாக, தனித்தில்லாத முழு உயிரிகளைப் பொறுத்தவரை, சாதாரணமாக அவற்றில் எண்ணிக்கையில் அதிகரிப்பு அளவு மாற்றம் ஒரு முற்றிய நிலைக்குச் செல்கிறது. அதற்கு மாறாக, உயிரற்ற பொருளானது, சூழலுடன் அது பரஸ்பர வினை புரிவது எந்த அளவுக்கு குறைவாக உள்ளதோ அந்த அளவுக்கு தனது தனிப் பண்புகளை சிறப்பாக தக்கவைத்துக் கொள்கிறது.

மனித சமுதாயத்தைப் பொறுத்தவரை அதற்கான சூழலை பெருமளவுக்கு சமுதாயமே வழங்குகிறது. இயற்கைச் சூழ்நிலைகளுடன் மனிதர் புரியும் பரஸ்பர வினையின் விதமும் அளவும் அவர்கள் கையாளும் உற்பத்திக் கருவிகளையும் உத்தியையும் பொறுத்திருக்கிறது. (உதாரணமாக, உணவு சேகரிப்பு, மேய்ச்சல், விவசாயம், யந்திர ஆக்கம்). உற்பத்தியை சமுதாயத்தின் பல்வேறு உறுப்பினர்களிடையே பங்கிட்டுக் கொள்வது உற்பத்தி உறவுகள் சார்ந்த விசயமாகும். (உதாரணமாக, வா்க்கப் பிரிவினை, உடைமை உரிமைகள் முதலியவை) இதன் காரணமாக, உறவுகளின் வடிவங்கள் வெறும் பொருளியல் மட்டத்தினாலோ நேரடியாக கருவிகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை; மாறாக,  குறிப்பிட்ட மக்கள் குழுவின் முந்தைய சமூக வரலாற்றையும் பொறுத்திருக்கிறது. இருப்பினும் கருவிகளே அடிப்படையானவை: கற்கால மக்களுக்கு ஒரு அணு உலையோ, வகை நுண் கணிதமோ (அடிஃபரன்சியல் கேல்க்குலஸ்) பற்றிய புரிதல் சாத்தியமில்லை என்றால், அதை விட அதிகமாகவே நிலக்கிழமையோ மற்றும் முதலாளியமோ அவர்களுக்கு சாத்தியமில்லை. எனவே, மனித குலத்தின் முன்னேற்றமும் வரலாறும் உற்பத்திச் சாதனங்களையே – அதாவது புழக்கத்தில் இருக்கும் உற்பத்திக் கருவிகளையும் உற்பத்தி உறவுகளையுமே – பொறுத்திருக்கிறது. உற்பத்தியின் பந்தங்களால்தான் சமுதாயம் ஒரு கட்டுக்கோப்பில் சேர்ந்து இருக்கிறது.

மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை எல்லாம் திரும்பவும் விரிவாக விளக்கிக் கொண்டிருப்பது அல்ல இந்நூலின் நோக்கம். மாறாக, சில முக்கியமான நடைமுறைப் பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு அவற்றில் அக்கோட்பாடுகளை பயனுள்ள முறையில் கையாள்வது எப்படி என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குவதே இங்கு நம் நோக்கமாகும். மார்க்சியம் ஒரு உயிருள்ள அறிவுத்துறையாக விளங்குவது இனியும் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் அது (தொல்பொருளியல் உள்ளிட்ட)  அறிவியலின் புதிய புதிய கண்டுபிடிப்புகளுடன் இணைந்து தொடர்ந்தும் வெற்றிகரமாக பணியாற்றியாக வேண்டும். வரலாற்றில் நிலைபெறத் தகுதியான புதுபுது சாதனைகளை புரிந்தாக வேண்டும். கடந்த காலத்தை பெயர்த்துரைப்பதில் மட்டுமல்ல, வருங்கால செயலுக்கு வழித்துறையாகவும் இருப்பதில்தான் மார்க்சியத்தின் முக்கியத்துவம் அமைகிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக மனிதர்கள் தம் சொந்த வரலாற்றைத்  தாமே உணர்வுடன் படைத்துக் கொள்ள முடியும்: வரலாற்றின் உருவாக்கத்தின் கீழ், செயலற்ற பார்வையாளர்களாக துன்புறவோ அல்லது சம்பவம் நடந்து முடிந்த பிறகே வெறுமனே அதனை ஆராயப் புகுவதோ வேண்டி இராது.

மார்க்சியத்தின் எதிரிகளில் சிலர், அதை 19ஆம் நூற்றாண்டின் தப்பெண்ணங்களின் / முன்முடிவுகளின் அடிப்படையில் அமைந்த தேய்ந்துபோன பொருளாதார வறட்டுச் சூத்திரம் என்றுகூறி அதைப் புறக்கணிக்கிறார்கள். மார்க்சியம் ஒருபோதும் வறட்டுச் சூத்திரமாக இருக்கவில்லை. 19ஆம் நூற்றாண்டில் அது வடிவமைக்கப்பட்டது என்பதாலேயே அது காலாவதியானதாக – தவறானதாக ஆகிவிட எந்தக் காரணமும் இல்லை. அறிவியலின் அங்கமாகி உள்ள கவுஸ், பாரடே, டார்வின் ஆகியோரின் கண்டுபிடிப்புகளைவிட அது பழையதாகிவிடவில்லை. 19ஆம் நூற்றாண்டின் வழக்கொழிந்த சரக்கு என அதை எள்ளி நகையோடுவோர்; மில், பர்க், ஷெர்பாட், ஸ்பென்சர் ஆகியோரின் கருத்துகளை ஏற்று மேற்கோள் காட்டக் கூடாது; அல்லது இன்னும் அதிகமாய் பழசானதும், நிச்சயமாக இன்னும் அதிக தெளிவற்றதுமான பகவத் கீதையில் அவர்கள் முழு நம்பிக்கை வைப்பதும் நியாயம் ஆகாது. இதற்கு பொதுவாகத்  தரப்படும் எதிர்வாதம் என்னவென்றால். கீதையும் உபநிடதங்களும் இந்தியாவிற்குரியவை; மார்க்சியம் போன்ற அந்நிய கருத்துகளோ ஆட்சேபணைக்குரியவை என்பதாகும். இந்த வாதமுமே பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் முன்வைக்கப்படுகிறது ஆங்கிலமோ படித்த இந்தியர்களுக்கு பொதுவாயிருக்கிற வெளிநாட்டு மொழிதான். மேலும் அந்நியரால் இந்தியாவுக்குள் பலவந்தமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் உற்பத்தி முறையின்கீழ் (முதலாளிய அமைப்பில்) வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களால்தான் மேற்படி வாதம் முன் வைக்கப்படுகிறது. எனவே மார்க்சியம் தோன்றியது வெளிநாட்டில் என்பதைவிட அதன் கருத்துகளேதான் மேற்படி மறுப்புரைகளுக்கு அதிக உண்மையான காரணமாக இருக்குமென தோன்றுகிறது. ஏனெனில், அது அவர்களின் வர்க்க சிறப்புரிமைகளுக்கு ஆபத்தாக ஆக முடியும். வன்முறையை, வர்க்கப்போரை மார்க்சியம் தன் அடிப்படையாக கொண்டுள்ளதாக சிலர் சொல்கிறார்கள். (இதனை இப்போதெல்லாம் ஆகச்சிறந்த அறிவாளிகள் நம்புவதில்லை.)  அப்படி சொல்பவர்கள் வானிலை முன்னறிவிப்பால்தான் புயல்களே உருவாகின்றன என்பதையும் இனி சேர்த்தே பிரகடனம் செய்யலாம். எந்த மார்க்சியப் படைப்பும் பகவத் கீதையைப்போல் போருக்கு தூபம் போடுவதில்லை; கண்மூடித்தனமாக கொல்லுவதற்கான கபட நியாயங்களை அடுக்குவதில்லை. இந்த குறிப்பிட்ட விசயத்தில் மார்க்சியத்தால் ஒருபோதும் பகவத் கீதையின் பக்கத்தில்கூட வரமுடியாது.

இதற்கு மறுதரப்பில் இருக்கிற இந்திய அதிகார (பூர்வ) மார்க்சியர்கள் (அஃபிசியல் மார்க்சிஸ்ட்ஸ் – இனி இவர்களை அ.மா.கள் என்போம்) தம்மை

விமர்சிக்கிற கருத்துகளின்மீது தமக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்தத் தவறியதில்லை. இவர்கள் வேறு வழியின்றி ஒரு கதம்ப பிரிவினராகவே இருக்கிறார்கள். துரிதமாக மாற்றிக்கொள்ளும் நிலைபாடுகளையும் அதைவிடவும் துரிதமாக மாற்றிக் கொள்ளும் அரசியல் வரிசைக் கிரமங்களையும் அணிசேர்க்கைகளையும் இவர்கள் கொண்டுள்ளதால் இவர்களை இன்னார் என வரையறுத்து வகைப்படுத்தல் கடினமே. அ.மா.களில் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு கட்சிகள் சிபிஐ, காங்கிரஸ் சோசலிஸ்டுகள், ராயிஸ்டுகள் மற்றும் ஏராளமான இடதுசாரி சிதறல் குழுக்கள் அடங்குகின்றன. அவர்களின் மாறாத மறுப்புரை என்னவென்றால், தம்மை விமர்சிக்கும் படைப்புகள் “சர்ச்சைக்குரியவை” என்பதாகும். அவற்றில் மார்க்ஸ்-எங்கல்ஸ்-லெனின் ஆகியோரின் முதன்மையான படைப்புகளும் ஸ்டாலின், மாசேதுங் ஆகியோரின் மிகச்சிறந்த படைப்புகளும்கூட அடங்கும் என அந்த நிலைபாடு எப்போதும் ஒரே விதமாகக் கூறுகிறது. முழுமையான நல்லெண்ணத்துடன் முன் வைக்கப்படும் மாற்றுக் கருத்துகளை அணுகுவதற்கான/ கையாளுவதற்கான வெற்றிகரமான ஒரே வழி அவற்றுக்கு கவனமான-விரிவான உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையிலான விடையை வழங்குவதாகும். ஆனால்,  நடப்பு கட்சித் திட்டத்தின் மீற முடியாத புனிதத்துவத்துக்கோ அல்லது செவ்விலக்கியங்களில் இருந்து எடுத்தாளப்படும் பொருத்தமற்ற மேற்கோள்களுக்கோ மதக்கோட்பாட்டுக்கே உரியதான மீறின முக்கியத்துவத்தை அளிப்பதில்தான் அ.மா.களின் மார்க்சியம் மிகப்பெரும்பாலும் அடங்கி உள்ளது.

அரசியல் சந்தர்ப்பம் – சூழ்நிலை அல்லது அமைப்பு ஒற்றுமை, கட்டுப்பாடு என்கிற காரணங்களுக்காகக்கூட மார்க்சியத்தை கணக்குப் பாடத்தில் உள்ளதைப் போன்ற வறட்டுச் சூத்திரங்களாக – வாய்ப்பாடுகளாகக் குறைத்துவிட முடியாது. அவ்வாறே ஒரு தானியங்கிக் கடைசல் பொறியில் செய்யப்படும் வேலை போன்ற மாறாத யந்திரகதியிலான உத்தியாக அதைக் கையாள்வதும் கூடாது. மனித சமுதாயத்துக்கு பிரயோகிக்கப்படும்போது மார்க்சியம் என்னும் இந்தச் சாதனம் எல்லையற்ற சாத்தியப்பாடுகளைக் கொண்டிருக்கிறது. பார்வையாளரும் தான் பார்வையிடும் மக்கள் கூட்டத்தின் பகுதியாகவே இருக்கிறார். அதனுடன் அவர் வன்மையாகவும் சரிக்குச் சரியாகவும் பரஸ்பர வினை புரிந்தபடியே இருக்கிறார். இதிலிருந்து பெறப்படுவது யாதெனின், கோட்பாட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த, பகுப்பாய்வுத் திறனை – அதாவது குறிப்பிட்ட ஒரு சூழ்நிலைமைக்குள் நிலவும் இன்றியமையாத காரணிகளை கண்டுகொள்ளும் திறனை – வளர்த்துக்கொள்வது தேவை என்பதாகும். புத்தகங்களில் இருந்து மட்டுமே இத்திறனை கற்றுக் கொண்டு விட முடியாது. பெரும்பான்மையரான மக்கள் பிரிவினருடன் இடையறாத தொடர்பு கொண்டிருப்பதே அதனைக் கற்பதற்கான ஒரே வழி ஆகும். ஒரு அறிவுஜீவியைப் பொறுத்தவரை இதன் பொருள் குறைந்தது ஆண்டுக்கு சில மாதங்களுக்காவது உடல் உழைப்பில் ஈடுபடுவது என்பதாகும்; ஒரு மகாத்மா என்னும் முறையில் அல்ல, ஒரு சீர்திருத்தக்காரர் என்னும் முறையில் அல்ல, உணர்ச்சிவசப்பட்டு சேரிகளுக்குச் சென்று வரும் ‘முற்போக்கர்’ என்னும் முறையில் அல்ல, மாறாக. உழைக்கும் வர்க்கத்தின் உறுப்பினர்களில் ஒருவராக, தன் பிழைப்புக்கான வருவாயை உடல் உழைப்பில் ஈட்டுதல் என்பதாகும். தொழிலாளியுடனும் விவசாயியுடனும் அவர்களில் ஒருவராக வாழ்ந்து பெறும் அனுபவம். பின் இடையறாது, புதுப்பிக்கப்பட வேண்டும்: படிப்பின் ஒளியில் சீராக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இதைச் செய்ய ஆயத்தமாக இருக்கிறவர்களுக்கு இந்தக் கட்டுரைகள் சற்று உற்சாகமாகவும் சிந்தனைக்கு விருந்தாகவும் அமையக்கூடும்.

மூலமுதல் பதிப்புகளை பதிப்பித்தவர்களுக்கு நன்றி கூறுவதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பதிப்பைக் கொணர்வதில் சிரமம் மேற்கொண்ட திருமதி வி.வி. பகவத், திரு ஆர்.பி. நேனே ஆகியோருக்கும் என் நன்றிகள் உரியன.

டி.டி கோசாம்பி

டெக்கான் குயீன் 

அக்டோபர் 2, 1957

ReplyForwardAdd reaction

Leave a comment