காலத்தை வென்ற

கையூர்த் தோழர்கள்

காதலுக்காகத் தியாகம் செய்த காவிய நாயகர்களுண்டு. போரில் எதிரிகளைக் கொன்றொழித்து மாண்ட வீரர்களுமுண்டு. மதத்தைக் காப்பதற்குத் தீப்புகுந்து மாண்ட துறவியர்கள் உண்டு. தாய்நாட்டை, தாய்மொழியைக் காக்கும் விடுதலைப் போரில் ஈடுபட்டு, சிறைசென்று தூக்குமேடை ஏறிய வீரத்தியாகிகளுண்டு. ஆனால் ‘அடிமைப்பட்ட பாரதத்தின் இருளடைந்த கேரளத்தில் உழவர்களின் உரிமைகளுக்காக உழைக்கும் மக்களை அணிதிரட்டிப் போராடிப் பச்சிளம் வயதிலேயே தூக்குமேடை ஏறிய மடத்தில் அப்பு, அபுபக்கர், சிருகண்டன், குஞ்ஞம்பு நாயர் ஆகிய நால்வரின் தியாகம் முற்றிலும் வேறுபட்டது. அவர்களின் தியாகத்தின் பின்னே ஏழை எளிய மக்களின் ஏக்கங்கள் நிரம்பியிருந்தன. அபிலாசைகள் நிறைந்திருந்தன. உரிமை முழக்கங்கள் அடங்கியிருந்தன. உழைப்பாளிகளின் ஜனநாயக வேட்கைகள் ததும்பி வழிந்தன.

பசிப்பிணியும், வறுமைத்துயரமும் மொழி கடந்து, நாடுகள் கடந்து, அது உலகமெங்கும் நிறைந்திருக்கின்ற இருளாகும். அந்த இருளை விரட்ட இந்நால்வரும் தங்கள் தலைகளை விலைகளாகத் தந்தனர். தூக்குமேடையேறிய இவர்களின் தியாகம் இலக்கியமாகி,

மொழி கடந்த பயணத்தையும் மேற்கொண்டு காலத்தையும் வென்று நிற்கிறது.

இன்றைய கேரள மாநிலம் (அன்றைய ‘சென்னை ராஜதானி) காசர்கோடு வட்டத்தில் 1938-1941ஆம் ஆண்டுகளில் எழுச்சிபெற்ற உழவர் போராட்டத்தில் பூத்துச் செழித்தவர்கள் தான் மடத்தில் அப்பு, அபுபக்கர், சிருகண்டன், குஞ்ஞம்பு நாயர் ஆகிய இளந்தளிர்கள், 1941ஆம் ஆண்டு மார்ச் மாதம், 28அம் தேதியன்று நடைபெற்ற விவசாயிகள் ஊர்வலத்தை இவர்கள் வழிநடத்திச் சென்றபோது ‘ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்திய போலீஸ் கான்ஸ்டபிளோடு அந்த ஊர்வலம் கைகலந்தது. அதன் விளைவாக அந்தப் போலீஸ்காரன் உயிர் துறந்தாள்.

அந்தப் போலீஸ்காரனை அடித்துக் கொன்றவர்கள் இந்தக் கோர்ட்டின் முன் இல்லாமல் இருக்கலாம். ஆயினும் அவனுடைய மரணத்திற்கு இவர்களும்தான் பொறுப்பாளிகள் என்று கூறி செஷன்ஸ் ஜட்ஜ், அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்தார். சென்னை ஹைக்கோர்ட்டும் அந்தத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தது (13.143 ஜனசக்தி, பக்கம்-8).

இந்நால்வர் தூக்குமேடை ஏறக் காரணமாக இருந்த விவசாய இயக்கக் கதையைக் கன்னடத்தின் புகழ்மிக்க எழுத்தாளர் நிரஞ்சனா கன்னட மொழியில் 1955இல் ‘சிரஸ்மரணா’ எனும் பெயரில் புதின இலக்கியத்தில் பதியம் செய்தார். மலையாள மண்ணில் மலையான மொழியில் நடந்த கதை முதன் முதலாக மொழி கடந்து கன்னடத்தைப் பற்றி உலுக்கியது. கதைக்களமான கையூர், கேரளத்தின் வடமேற்குக் கடைக்கோடியிலும், கர்நாடகத்தின் தெற்கு எல்லையிலும் அமைந்த ஊர். எனவே மண்ணின் மொழியான மலையாளத்தை முந்திக்கொண்டு கன்னட மொழி கைப்பற்றிக்கொண்டது. கன்னடத்திலிருந்து மலையானத்திற்குப் போய் மலையாளத்திலிருந்து தமிழில் இந்திராவின் `நெருக்கடி நிலைப் பிரகடனத் தலைமறைவு’ நாட்களில் பி.ஆர்.பரமேசுவரன் மொழிபெயர்த்தார். ‘நினைவுகள் அழிவதில்லை’ எனும் பெயரில் 1977 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக தமிழில் வெளிவந்தது.

1938 முதல் 1943 வரை நடந்த எழுச்சிமிக்கத் தியாகம் 1955 ஆம் ஆண்டு கன்னடத்தில் புதிவுசெய்யப்பட்டு 22 ஆண்டுகள் கழித்துத் தமிழில் வந்திருப்பதிலிருந்தே கையூர்த் தியாகிகளின் தியாகம்

பொழியைக் கடந்து காலத்தை மீறி நிற்பதைப் புரிந்துகொள்ளலாம்.

கையூர் இளைஞர்களான மடத்தில் அப்பு, அபுபக்கர், சிருசுண்டன், குற்றும்பு நாயர் ஆகிய நால்வருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை பிரிட்டனின் பிரிவிகவுன்சிலும் உறுதி செய்தது. இந்திய மந்திரி மிஸ்டர் அமெரி, பிரிட்டிấy நாடாளுமன்றத்தில் பேசும்போது “பலபேர்கள் சேர்ந்து ஒரே எண்ணத்துடன் ஒருவரைக் கொன்றதாக நிரூபிக்கப்படுகிறது. அவர்களில் குறிப்பாக இவர்தான் உயிரைப் போக்கினாரென்று தெரியவில்லை. இருந்தபோதிலும் அவர்கள் கொலைக்குற்றம் செய்தவர்கள் ஆவார்கள்” என்று குறிப்பிட்டார். கையூர்த் தோழர்களுக்குத் தூக்குத் தண்டனை உறுதி என்பதை அமெரியின் நாடாளுமன்றப் பேச்சு உறுதிப்படுத்தியது. இருபத்தைந்து வயதுக்குட்பட்ட அந்த நால்வரின் தூக்குத்தண்டனையை எதிர்த்து நாடு முழுக்க எதிர்ப்பியக்கத்தை இந்தியப் பொதுவுடைமை இயக்கம் நடத்தியது.

உலகத்தையே உலுக்கிக் கொண்டிருந்த உலகயுத்தம் நடைபெற்ற 1939 – 1945 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் விடுதலை இயக்கமும் உக்கிரம் பெற்றது. காந்தி தலைமையில் காங்கிரஸ் போராடிக்கொண்டிருந்தபோது, நேத்தாஜி தலைமை யிலான இந்திய தேசிய ராணுவம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் போர்த் தயாரிப்பில் இருந்தது. இதே காலகட்டத்தில் உள்ளடங்கிய 1938-1943இல்தான் கையூர் விவசாயிகள் போராட்டமும் நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் உழைப்பாளிகள், உழவர்கள் ஆகியோரின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம், உலக அளவில் பாசிச எதிர்ப்புக்கான போராட்டம், இந்திய விடுதலைப் போராட்டம் ஆகிய மும்முனைகளில் கடுமையான போராட்டத்தை பொதுவுடைமை இயக்கம் முன்னெடுத்தது. மேலும் கிராமப்புறங்களில் ஆதிக்கமிக்க நிலவுடைமையாளர்கள் தொடுத்த கொடூரத் தாக்குதலுக்கும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இராணுவம் மற்றும் காவல்துறையின் கொடிய ஒடுக்குமுறைக்கும் முகம் கொடுத்து போராடிய போது ஆங்காங்கே மோதல்கள் நிகழ்ந்தன. இவை போராட்டப் போக்கின் இயல்பில் நிகழ்ந்தவை. இதற்கே தூக்குமேடை ஏற்றப்பட்டோர் பலநூறு பேராவர். இந்த வரிசையில் கையூர்த் தோழர்கள் முக்கிய தியாகப் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பின்பு கையூர்த் தோழர்கள்,

தோழர் மோகன் குமார மங்கலத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்,

அக்கடிதத்தில் “நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. விவரம்

அறிந்தோம். சந்தோஷித்தோம். தைரியத்தோடும் இருந்த வருகிறோம். எங்களுடைய கானத்தைப் பாடிக்கொண்டு சஞ்சலமில்லாத சமாதானத்தோடும் உற்சாகத்தோடும் இருக்கிறோம். அடிக்கடி பகத்சிங் போன்ற வீரர்களுடைய சரித்திரம் நினைவில் தோன்றுகிறது. இந்திய சர்க்கார் எங்களைப் பற்றி ஒன்றும் செய்யவில்லை என்பதையும் பிரிவிகவுன்சில் மனுச் செய்திருப்பதையும் அறிந்தோம். நாங்கள் சாகவேண்டி நேருமானால் அது நமது மாத்ருபூமிக்காகத்தான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இக்கடிதம் 18.11.42 ஜனசக்தி இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது

கையூர்த் தோழர்கள் நாட்டு மக்களுக்காக ஒரு பகிரங்கக் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். ஒன்றுபட்டுத் தேசத்தைப் பாதுகாருங்கள்” என்று தலைப்பிட்டு 13.1.1943 அன்று ஜனசக்தி அக்கடிதத்தை வெளியிட்டிருக்கிறது. அக்கடிதம் வருமாறு:

எங்களுடைய மனுவை வைசிராய் நிராகரித்து விட்டதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தச் செய்தியைக் கேட்டு எங்களுக்குப் பரம சந்தோஷம், பிரிவிகவுன்சில் அப்பீலைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களது உடல் எங்களைச் சேர்ந்ததல்ல. எங்கள் உடல், பொருள், ஆவியெல்லாம் உலக மக்கள் சொத்து என்றே நாங்கள் கருதுகிறோம். தாய் நாட்டின் சேவையில் உயிரை அர்ப்பணம் செய்யும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதைக் கண்டு நாங்கள் பெருமையடைகிறோம்.

…சிறையில் ஒவ்வொரு நிமிஷமும் தேசிய கீதங்களைப் பாடிக்கொண்டே கழித்து வருகிறோம். பகத்சிங்கைப் போன்ற தேச பக்தர்களின் வீரம் எங்களுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது. ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சியைப் புரட்சியின் மூலம் நிர்மூலம் ஆக்குவதற்கு முன்னே தோழர் லெனின் அனுபவித்த கஷ்டங்களையும் நாங்கள் மறக்கவில்லை.

இந்திய மக்களை ஒன்று திரட்டி ஐக்கிய நாட்டு மக்களோடு சேர்ந்து பாஸிஸத்தை வீழ்த்தி உலக மக்களை ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றுவதற்கான நமது தோழர்கள் தங்கள் முழுச் சக்தியைக் கொண்டு முயற்சி செய்து வருவதைக் கேட்க நாங்கள் அளவிலா மகிழ்ச்சி அடைகிறோம். தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகவும் ஜப்பானிய வெறியர்களை எதிர்த்தும் நடக்கும் போராட்டத்தில் நாங்கள் பங்கெடுத்துக்கொள்ள முடியாமலிருப்பதற்காக நாங்கள்

வருத்துகிறோம்.

நமது தோழர்கள் தங்களது சலியா உழைப்பினாலும், உண்மைச்சேவையினாலும் ஜனங்களுக்கு உதாரணமாய் விளங்க வேண்டும். அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தைரியத்தையும் ஊட்டி தேசச் சுதந்திரத்திற்காகச் சகலத்தையும் தியாகம் செய்ய மக்கள் அனைவரையும் நம் தோழர்கள் ஒன்று திரட்டவேண்டும்.

நம் நாட்டிலுள்ள எவ்வளவோ வீரர்களின் சரித்திரம் நமக்குத் தைரியத்தை அளிக்கிறது. உலக மக்கள் இந்த யுத்தத்தில் நிச்சயம் வெற்றிபெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். வருங்காலத்தில் புது உலகம் சிருஷ்டிக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு. தேசிய ஒற்றுமையை நிலைநாட்டுங்கள். அது ஒன்றுதான் தேச விமோசனத்திற்கான ஒரே மார்க்கம்.

கம்யூனிஸ்ட் சட்சி நீடூழி வாழ்க!

புரட்சி நீடுழி வாழ்க!

-மடத்தில் அப்பு, சிருகண்டன், அபுபக்கர், குஞ்ளும்பு நாயர்.

கையூர்த் தோழர்கள் தங்கள் இன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாது கட்சித் தோழர்களின் சலியா உழைப்பையும், உண்மைச் சேவையையும் ஜனங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய அவசியத்தையும் வலயுறுத்துவதோடு அரசியல் பாதையையும் தெளிவுபடுத்துவது நினைவிற்கொள்ளத் தக்கதாகும்.

கையூர்த் தோழர்கள் மடத்தில் அப்பு, அபூபக்கர், சிறுகண்டன், குஞ்ஞம்பு நாயர் ஆகிய நால்வருக்கும் கண்ணூர் சிறையில் 293.1943 அன்று உலக மக்களின் வேண்டுகோள் அனைத்தையும் புறக்கணித்து ஒதுக்கித் தள்ளிவிட்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு தூக்குத் தண்டனையை நிறைவேற்றியது. தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல்நாள் தூக்குமேடைக்கு அஞ்சாத கையூர்த் தோழர்களை இந்தியக் கட்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பி.ஸிஜோஷி சந்தித்தார். அந்தச் சந்திப்பை உணர்ச்சி ததும்ப 31.3.1943 அன்று வெளிவந்த ஜனசக்தி விவரிக்கிறது.

அந்தச் சித்திரிப்பை அப்படியே தருகிறோம்.

கண்ணணூர் சிறைக்கூடம், மறுநாள் விடிந்தால் மறையப்போகும் நாலு தியாகிகள், வாழைக்குருத்து போன்ற வாலிப மணிகள்,

தேசபத்திச் சுடர்கள், கம்யூனிஸ்ட் தளிர்கள் அவர்களின் முன்னே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் காரியதரிசி தோழர் பிஸிஜோஷி மயிர்க்கூச்செரியும் காட்சி. அவர்களது வீர மொழிகள் எங்கும் எதிரொலிக்கின்றன. இந்தக் காட்சியைத் தோழர் ஜோஷி வர்ணித்திருக்கிறார். அதன் சுருக்கத்தைத் தருகிறோம்.

நான்கு கம்யூனிஸ்ட் இளந்தளிர்கள், கிசான் மணிகள் மறைந்து விட்டன. காங்கிரசிலே பிறந்து கிசான் இயக்கத்தில் வளர்ந்து, சுதந்திரப் போராட்ட ராணுவமான கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தனர். இவர்கள் இருபத்தைந்து வயதுகூட நிரம்பப் பெறாத இளைஞர்கள். இமயம் முதல் குமரி வரையில் கையூர்த் தோழர்களைத் தூக்கிலிட வேண்டாம் என்று கிளர்ச்சிப் பொங்கியது. ஏழுகடல் கடந்து இங்கிலாந்து தேசத்திலே பிரிட்டிஷ் பொதுமக்களின் தலைசிறந்த புதல்வர்களான பிரிட்டிஷ் தொழிலாளிகள் தங்கள் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சிமூலம் சர்வ முயற்சிகளும் செய்தார்கள், பயனில்லை.

உங்கள் நால்வரை அவர்கள் தூக்கு மேடைக்கு அனுப்பட்டும். அதை இன்று நம்மால் தவிர்க்க முடியவில்லை. ஆனால் உங்கள் ஜீவித மாண்பால் உத்வேகமடைந்து நானூறு பேர்..நாலாயிரம் பேர் நமது கட்சியின் இந்த வழியிலே நாம் சேவை செய்வோம். வெற்றி நிச்சயம் என்று உறுதி கூறுகிறோம். நமது லட்சியம் சிரஞ்சீவியானது. அதனை அடையும் ஆயுதமான நமது கட்சியும் சிரஞ்சீவியானது”

“நான் இதுவரை மக்களுக்குச் சேவை செய்ததெல்லாம் கட்சிதான் செய்ய வைத்தது. நான் எனது கடமையைச் செய்து விட்டேன் என்று கட்சி எண்ணுமானால் அதுவே எனது பேராவல்”

-குஞ்ஞம்பு

“நமது கட்சியின் பலம் வளர்ந்து வருகின்றது என்று மகத்தான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். இந்தக் கூடிய சக்தியுடன் நாங்கள் தூக்குமேடை ஏறுவோம்”

-அப்பு

“நமது தியாகிகளின் வாழ்விலிருந்த பல படிப்பினைகளை

உணர்ந்திருக்கிறோம். தியாகிகளில் ஒன்றாக உயிரை அர்ப்பணம்

செய்யும் கவுரவம் எங்களுக்குக் கிடைக்குமென்று சொப்பனத்திலும்

கூட நினைக்கவில்லை. நாங்கள் தீரத்துடன் தூக்குமேடை ஏறுவோம்

என்று தோழர்களுக்கு சொல்லுங்கள். என் தாய் ரொம்ப

வயதானவள். அவளை உற்சாகப்படுத்துங்கள். எனது சகோதரர்கள்

இளஞ்சிறுவர்கள் கட்சி வேலைக்காகப் பயிற்சி கொடுங்கள். நான்தான் குடும்பத்தில் தலைச்சன். அவர்களைப் பராமரிக்க வேறு யாருமில்லை.

அபுபக்கர் இதுவரைக்கும் பேசாமலிருந்த தோழர் சுந்தரையா கூறினார், நீங்கள் அவர்களுக்கு தைரியமூட்டுவதாக வந்தீர்கள். ஆனால் பதிலாக அவர்கள் உங்களுக்குத் தைரியமூட்டி விட்டார்கள்.

அவர்கள் நமது தியாகிகள். அவர்களுக்குத் தைரியமூட்ட வேண்டுவதில்லை. நான் பின்னால் விடப்பட்டிருக்கம் அவர்களது தோழன் எனக்குத் தைரியம் தேவை. அது எனக்குக் கிடைத்துவிட்டது.” என்று பதில் கூறினேன்.

29ஆம் தேதி காலை நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். முந்தின இரவிலே புரட்சிக் கீதங்களிலே லயித்து இருந்தனர். கம்யூனிஸ்ட் பார்ட்டி ஜிந்தாபாத் என்று கோஷமிட்டனர். அந்த இரவிலே கண்ணணூர் மத்திய சிறையிலே கண் இமைக்கவில்லை யாரும். காலையிலே மூவாயிரம் பொது மக்கள் இவர்களது வீர உடலைத் தரவேண்டினர். அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

(ஜோஷியின் ஆங்கில உரையாடலை மலையாளத்தில் கிருஷ்ணப்பிள்ளை மொழிபெயர்த்துக் கூறினார்)

இச்சந்திப்பு நிகழ்ந்த கணங்கள் வரலாற்றுச் சிறப்புடைய மிக மிக அற்புதமான மகத்துவமிக்க கணங்கள் அல்லவா?

கையூர்த் தோழர்களின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரி எண்ணற்ற பொதுக் கூட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்றன. அவர்களின் வீரமிக்கத் தியாகத்திற்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் வந்து குவிந்தன.

மராட்டிய மாநிலத்திலிருந்து 110 கடிதங்கள் வந்தன. அதே மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் தொழிற்சங்கங்கள் உள்ளடங்கிய ஐந்து அமைப்புகள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தன. ஆந்திராவிலிருந்து 21 விவசாய சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவும் புரட்சி வாழ்த்துக்களைத் தெரிவித்தன. வங்கத்திலிருந்து பல மாவட்டங்களைச் சேர்ந்த 14 அமைப்புகள் செய்திகள் அனுப்பின. தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி

ஹௌரா மாவட்டத்தில் 1500 பெண்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

ஐக்கிய மாகாணத்திலுள்ள டேராடூனில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி மாபெரும் பேரணி நடத்தியது. இப்பகுதியிலிருந்து 8 நல்வாழ்த்துச் செய்திகள் அனுப்பபட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவும், மைசூர் சுரங்கத் தொழிலாளர் நிர்வாகக் குழுவும் பொன்மலை தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கமும் கையூர் தோழர்களுக்குப் புரட்சி வாழ்த்துக்களை அனுப்பி வைத்தன.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழுவின் சார்பாக தோழர் கிருஷ்ணப்பிள்ளை தங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு வீரமிக்க விடைகொடுக்கும் செய்தியை அனுப்பினார். அச்செய்தியில் *கடமையைச் செய்யும் பொழுதுதான் உயிரைத் துரும்பாக நினைத்துச் செய்கிறான் ஒரு போல்ஷ்விக் உயிரிழக்க ஒரு நிமிஷமும் தயங்க மாட்டான். கடமையைச் செய்வதில் ஒரு தோழர் உயிரைப் பறிகொடுத்தால் கண்ணீர் விடுவது போல்ஷ்விக் பழக்கமல்ல. எந்தப் போல்ஷ்விக்கும் அதைச் செய்யமாட்டான். மக்களின் சுதந்திரத்திற்குப் போராடும் கம்யூனிஸ்டுகள் நாட்டின் விடுதலைக்காகப் போராடும் கம்யூனிஸ்டுகள் லட்சியத்திற்காக ஒரு தரமல்ல, அவசியம் ஆனால் ஆயிரம் தரம் ஆனந்தத்துடன் மரிக்கத் தயார். கொஞ்சமும் பதற்றமின்றி எள்ளளவும் தயங்காமல் உங்கள் தியாகமும் வீரமும் நினைவிலிருந்து மறையவே மறையாது. என்றென்றும் எங்களுக்கு உங்கள் நினைவு உணர்ச்சியூட்டும். பூர்த்தியாகாமல் தேசப்பக்தி கொண்ட தேசப்பணியை விட்டுச் செல்கிறீர்கள். எங்கள் உடம்பில் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும்வரை அப்பணியினைப் பூர்த்தி செய்ய உழைப்போம் என்று பிரதிக்ஞை எடுத்துக்கொள்கிறோம். புரட்சி வாழ்த்து” என்று குறிப்பிட்டிருந்தார்.

1943 ஆகஸ்டு மாதம் 20 ஆம் தேதி பம்பாய் சர்க்கார் போலீசார் பம்பாய் கம்யூனிஸ்ட் கட்சிப் பதிப்பக அலுவலகத்தையும் பீப்பிள்ஸ் பப்பிஷிங் ஹவுஸ் அலுவலகத்தையும் சோதனையிட்டனர். மராத்தி மொழியில் வெளியிடப்பட்டிருந்த பிரதிகளையும் கைப்பற்றிச் சென்றனர்.

கையூர்த் தோழர்களின் குடும்பத்திற்காக இங்கிலாந்தில் நிதி

திரட்டப்பட்து. லார்ட் ஸ்டாரா போல்கி, சோரன்ஸன், பி.ஜி.யார்ஸ்டா, டி.என்.பிரீட், லிவிங்ஸ்டன், ரெஜினால்டு பிரிட்ஜ்மேன் ஆகியோர் நிதி திரட்டுவதில் முக்கியப்பங்கு வகித்தனர். இவர்களில் பலர் கம்யூனிஸ்டுகளாகவும் பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள். திரட்டப்படும் நிதியை கையூர்த் தோழர்களின் குடும்பத்தினரிடம் சேர்ப்பதற்கு அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரசின் காரியதரிசி எம்.என்.ஜோஷியையும் தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர் மோகன்குமார மங்கலத்தையும் நியமித்திருந்தனர்.

XXX

கையூர்த் தோழர்களின் வீரச் செயலை வாழ்த்தி வங்க மொழியில் கவிதை ஒன்று வெளிவந்தது. அக்கவிதையை ‘பீப்பிள்ஸ் வார்’ ஆங்கில இதழ் மொழிபெயர்த்து வெளியிட்டது. ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து 31.3.1943 ஜனசக்தி இதழில் வெளியிட்டார். அந்த உணர்ச்சியெழுச்சி மிக்க கவிதை இதோ:

விறல்வீரத் தோழர்களே வெல்புரட்சி வாழ்த்துமக்கு அறைபட்டு நசுக்குண்டு அலறுமனித குலத்தின் ரத்தச் சிவப்பேற்ற நல்லுலகம் கண்சிவக்க ரத்தச் சிவப்பேற்ற நன்முஷ்டி தானுயர்த்தி வாழ்த்துகின்ற(து) ஆஹாஹா வருகின்ற காலமதை வீழ்த்தவொண்ணா உங்களுடை வீரஉயிர் இவ்வாழ்த்தை போற்றி வளர்க்கும் புத்துருவம் நல்கும்.

ஆற்றல்மிகு தோழர்களே அரும்புரட்சி வாழ்த்துமக்கு வருகிறான் பாஸிஸப் பகைச்சனி வருகிறான் குருதி வெறிகொண்ட கூர்நகக் கழுகுபோல் எதிர்த்து முறியடிக்கும் ஏறுநிகர்ப் பேருணர்ச்சி மதர்த்தெழுந்து கொந்தளித்து மாவீரர்கள் உங்கள் நாடிகளில் ஓடுதுநும் ரத்தக் குழாய்களிலே பீடுயர் சக்திப் பெருகி வழியு(து) உங்கள் ஒவ்வோர் துளிரத்தம் ஒப்பற்ற நல்லுறுதி செவ்வையா யுகங்கள் சீரியநல் உணர்ச்சியும் சக்தியும் உணர்ச்சியும் ஜனங்களின் வாழ்வில்

உத்தம பஷம் ஓங்கி நிற்கின்றன, தீவிர் விட்டகல் வேலையை வீரங்கொள் மக்களெல்லாம் தொட்டுத் தொடர்ந்து துவங்க முடித்திடுவர் என்னும் செய்தியினை எடுத்துரைக்கும் லோசடித்தும் இன்னுயிர்த் தோழர்களே எம்புரட்சி வாழ்த்துமக்கு அச்சமில்லை சந்தேகம் அணுவளவேனும் இல்லை. கொச்சை அபாயம் குலவுகின்ற காலத்தின் சீறுகின்ற பார்வை ‘திருதிருத்திப் போகிறது பேருலகப் பெருமக்கள் நீரிருந்த ஸ்தானத்தில் வந்துவிட்டார். இன்று வன்பகைவர் கோட்டையுள்ளே புன்செருக்கு அழிவின் போக்கைக் குறிக்கிறது சீற்றக் கண்மூர்க்கம் தீத்தோல்வி காட்டுகிறது போற்றரிய உங்கள் பொன்னான தியாகம்தான். வெற்றி – உலகமக்கள் வெற்றிக்கு முன்னுரையை இற்றே எழுதிவிட்ட(து) என்னே நும் பெருமை வெற்றி விறல் தோழர்களே வெல்புரட்சி வாழ்த்துமக்கு XXX

கையூர்த் தோழர்களின் நம்பிக்கைக்குரிய தோழர் பகத்சிங் கடைசியாய், தன் தம்பி குல்விருக்கு எழுதிய கடித வரிகளோடு இதை நிறைவு செய்வது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

‘நாளைக் காலையில் மெழுகுவர்த்தி ஒளி மங்குவதுபோல நானும் காலை ஒளியில் கரைந்து மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள், உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும். அம்மா அப்பாவுக்கு ஆறுதல் கூறு. இன்று போய் நாளை நாங்கள் மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்’ (பகத்சிங்கும் இந்திய அரசியலும் சுபவீரபாண்டியன் – பக்கம். 45)

14.12.2000

சென்னை

வைகறை வாணன்

இக்கட்டுரை எழுதுவதற்கு உறுதுணையாய் நின்ற ஜனசக்தி இதழ்களை பார்வையிட அனுமதி தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஆர் நல்லக்கண்ணு, துணைச் செயலாளர் சி.மகேந்திரன், சிங்காரவேலர் நூலகத்தின் நூலகர், முனைவர் மு.வெங்கடாசலபதி ஆகியோருக்கு நன்றி!

Leave a comment