அம்பேத்கரின் இறுதி கால வேதனைகளை வெளிப்படுத்தும் ஆக்ரா சொற்பொழிவு !

அறிமுகம்: counter currents என்ற இணையத்தில், அம்பேத்கரின் இறுதி கால பேச்சுக்களை, எழுத்துக்களை கொண்டு, அம்பேத்கருக்கு பிற்பாடு செயல்பட்ட, செயல்பட்டு கொண்டிருக்கும் தலித் செயற்பாட்டாளர்கள், அம்பேத்கரிஸ்ட்டுகள் ஆகியோரை விமர்சிக்கும் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பே இக்கட்டுரை. சமூக மாற்றித்திற்காக செயல்படும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ள விவாத்தை உருவாக்கும் என நம்புகிறோம்.

டாக்டர் அம்பேத்கர் (1891-1956) அவரது நினைவு நாளான டிசம்பர் 6 அன்று நாடு முழுவதும் நினைவு கூறப்படுகிறார். அவரை நினைவு கூறும் இந்நிகழ்வு பலருக்கும் பகட்டான சடங்காக மாறிவருகின்றது. குறிப்பாக, அடக்குமுறை செலுத்துபவர்களும், ஏமாற்றுக்காரர்களும் சீரழிந்த ஆட்சியாளர்களும் அன்றைய நாளில் செய்யும் நிகழ்வுகள் ஊடகங்களில் பிறர் நடத்தும் நிகழ்வுகளை விட அதிகமாக இடம் பிடிக்கின்றன. அம்பேத்கர் வாழ்நாள் முழுவதும் என்ன பேசினார், என்ன செய்தார், எதனை ஆய்வு செய்தார் என்பதை விடவும் அம்பேத்கருக்கு கற்சிலைகள் வைப்பதிலேயே இத்தகையோர் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். கற்சிலை வழிபாடு இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியலாக்கப்பட்டு வரும் நிலையில் அம்பேத்கரையும் சிலையாக்குவது என்பது இந்தியாவைப் பொறுத்தவரை, ஒருவேளை இயல்பான ஒரு நடவடிக்கையாக கூட இருக்கலாம். எனினும், இத்தகைய சடங்குகளைக் கடந்து அம்பேத்கரின் இறுதி நாட்களின் அனுபவங்களையும் கருத்துக்களையும் ஆராய்வது நமக்கு பயனுள்ளது.


கடந்த காலத்தை ஆராய்ந்தால் அம்பேத்கரையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் சங்கபரிவாரங்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் மோடி அரசும் எவ்வளவு எதிர்த்து வந்திருக்கின்றன என்பதைக் காண முடியும். மோடி ஆட்சியில் அம்பேத்கரை தவறாக கட்டமைக்கிறார்கள் என்றும் சிலர் கவலைப்படுகின்றார்கள். ஆனால் இவர்கள் கடந்த கால நிகழ்வுகளிலிருந்தே இவ்வாறு கூறுகின்றார்களே தவிர, தற்போதைய நிலவரத்தைப் பொறுத்து அல்ல. எத்தகைய விமர்சனமும், அது எதிரியைப் பற்றியதாக இருந்தாலும் கூட, அறிவுஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்களால் செய்யப்படும் விமர்சனமாக இருந்தாலும்கூட, புறநிலையாக இருக்கும்பொழுதுதான் அது ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். இல்லையெனில் அது பாரபட்சமானதாகத்தான் இருக்கும். தற்போது சிறைப்படுத்தப்பட்டுள்ள அம்பேத்கரிய அறிஞர் ஆனந்த் தெல்தும்டே இது குறித்து முன்வைத்துள்ள விசயங்கள் ஏப்ரல் 21, 2021-ல் வெளியாகியுள்ளது.

“அம்பேத்கரை பயன்படுத்துவதை சங் பரிவாரங்கள் இன்றைக்கு துவங்கவில்லை. 1980-களிலிருந்தே அது துவங்கிவிட்டது. இந்து மதத்தைப் பற்றிய அம்பேத்கரது கூற்றுக்களால், சங் பரிவார அமைப்புகளுக்கு ஆரம்பத்தில் அம்பேத்கரை ஏற்றுக்கொள்வது வெறுப்புக்குரியதாக இருந்தது. ஹெட்கேவர்- முன்ஜே- கோல்வால்கர் காலத்தில் அவர்கள் அம்பேத்கரிடமிருந்து விலகியே இருந்தனர். அம்பேத்கரது பெயரை மட்டும் குறிப்பிடாமல் அம்பேத்கர் ஆதரித்த அனைத்து விசயங்களையும் வெளிப்படையாகவே எதிர்த்து வந்தனர். மேலும், அம்பேத்கரிய தலித்துகளின் ஆதரவு இல்லாமலேயே சாதி இந்துக்களை மட்டும் வைத்துக்கொண்டே தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற எண்ணம் ஆர்எஸ்எஸ்க்கு இருந்து வந்தது. ஆனால் பாலாசாகேப் தியோரஸ் ஆர்எஸ்எஸ் தலைவரான காலத்தில்தான் தெளிவான உத்தியை வகுத்துக் கொடுத்தார். ஆர்எஸ்எஸ்-ன் இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டுமானால் அரசியலமைப்பு சட்டகத்தை தவிர்த்துவிட்டு நிற்க முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

எவ்வளவு சாதிகளை வளைக்க முடியுமோ அவ்வளவு சாதிகளையும் வளைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. தியோரஸின் வழிகாட்டுதலின்படி தான் அதிகாலையில் வணங்கப்பட வேண்டிய தலைவர்களின் பட்டியலில் அம்பேத்கரும் சேர்க்கப்பட்டார். இது மெல்ல மெல்ல அவரை காவிமயமாக்கும் முயற்சிகளோடு சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதற்காகவே சமஜிக் சம்ரஸடா மஞ்ச் என்னும் இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டது. அம்பேத்கரை இந்துத்துவத்தின் ஆதரவாளர் என்று பிரச்சாரம் செய்யவும், அம்பேத்கரும் ஹெட்கேவரும் நண்பர்கள் என்று தலித்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும், அம்பேத்கர் முசுலீம்களுக்கு விரோதி என்று காட்டுவதற்காகவும் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் தயார் செய்யப்பட்டு தலித்துகள் மத்தியில் பரப்பப்பட்டன.


அவர்கள் ஏற்கெனவே பழங்குடி மக்களும் இந்துக்கள்தான் என்று மடைமாற்றம் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அம்பேத்கரியவாதிகள் அல்லாத பிற தலித்துகள் ஏற்கெனவே சங்க பரிவாரங்களோடு சேர்ந்து விட்டனர். இம்முறை எஞ்சியிருப்பது அம்பேத்கரிய தலித்துகள் மட்டுமே!”


******

அம்பேத்கரது பிம்பத்தை கட்டமைப்பதில் அரசின் பங்கு

உண்மையில் இது சங்க பரிவாரங்களின் கொள்கை மாற்றம் மட்டுமல்ல. இது பிற்போக்கான மற்றும் ஒடுக்குமுறை செய்யும் இந்திய அரசின் திட்டமேயாகும். தெல்தும்டே கூறுவதாவது:

“அம்பேத்கரது பிம்பத்தைக் கட்டமைப்பதில் அரசின் பாத்திரம் தவிர்க்கக் கூடாதது. அம்பேத்கரது நினைவுச் சின்னங்களை உருவாக்கும் முயற்சிகளுக்கு அப்பால், அம்பேத்கர் மையங்களை பரவலாக உருவாக்குவதில் இந்திய அரசு கவனம் செலுத்தியது. பல்கலைக்கழகங்கள் அம்பேத்கரைப் பற்றிய ஆய்வுகளில் திடீரென ஆர்வம் காட்டின. மேட்டுக்குடிகளுக்கு இதுநாள்வரை அருவருப்பான நபராக இருந்துவந்த அம்பேத்கர் திடீரென மதிப்பிற்குரிய நபராக மாறினார். அம்பேத்கர் மீது மோடி வெளிப்படுத்தும் பக்தி இதை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.”
அம்பேத்கர் ஆக்ராவில் 18 மார்ச், 1956 அன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார். டிசம்பர் 6-ம் தேதி அவர் மரணமடைவதற்கு முன் அவர் ஆற்றிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உரைகளில் இதுவும் ஒன்று. இந்த உரையானது மற்ற விசயங்களோடு சேர்த்து, அம்பேத்கரது தீராத மன வருத்தத்தையும் வெளிப்படுத்தியது. 1940-களில் உயர் இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் அம்பேத்கருக்கு இருப்பது கண்டறிப்பட்டது. 1955 முதலே அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்து, 1956-ல் தீவிரமடைந்தது. ஒருவேளை அம்பேத்கருக்கு தனது மரணத்தைப் பற்றி தெரிந்திருக்கலாம். ஓய்வு எடுத்துக் கொள்ளாத ஒரு தலைவரது ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள அம்பேத்கரது மனைவியும், மருத்துவர் சவிதாவும், உதவியாளர் ரட்டுவும் கடும் சிரத்தை மேற்கொண்டனர்.

அம்பேத்கர் தனது எழுத்துக்களை முடிப்பதில் குறியாக இருந்தார். உடல்நலக்குறைவு இருந்தபோதிலும், அம்பேத்கர் தனது இறுதி நூலான “புத்தரும் அவரது தம்மமும்” என்னும் மிக முக்கியமான, பெரிய நூலை எழுதுவதில் அதிக கவனம் செலுத்தினார். இப்புத்தகம் அம்பேத்கரது மறைவிற்குப் பிறகு 1957-ல் வெளியிடப்பட்டது. மார்ச் 15-ல் அந்த நூலின் முன்னுரையை எழுதி முடித்தபிறகு, மூன்று நாட்கள் கழித்து, உடல்நலக்குறைவோடு ஆக்ராவில் உரையாற்றினார். அந்த உரையைப் பற்றித்தான் இங்கு நாம் பார்க்கப்போகிறோம்.

பத்தாண்டுகள் தீவிர அரசியலுக்குப் பிறகு ஒரு அரசியல் தலைவர் எடுத்துக் கொள்ளும் சுய விமர்சனமாகவே இந்த உரையைப் பார்க்க வேண்டும். இந்தியர்களுக்கு இது காண்பதற்கு மிகவும் அரிய ஒன்றாகும். தற்போதைய தலைமுறைக்கு விசயங்களை துல்லியமாக புரிந்துகொள்ளவும் அதற்கேற்ப செயல்படவும் இந்த உரை பயன்பட வேண்டும். எதற்குமே பலனளிக்காத குருட்டுத்தனமான துதிபாடலில் தனது தொண்டர்கள் ஈடுபடக்கூடாது என்று அம்பேத்கர் எதிர்பார்த்தார். அம்பேத்கர் தற்போது வெறும் கற்சிலையாக சுருக்கப்படுகின்றார். சங்க பரிவாரங்களை உள்ளடக்கிய ஆளும் வர்க்கங்கள் ஊடகங்களின் ஆதரவோடு செய்யும் இந்தச் செயல்களை, இன்றைய சூழ்நிலையில் நாம் மிகவும் கவனமாக அணுக வேண்டியுள்ளது.

Countercurrents.org-ல் தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதுபவரான தலித் சமூகத்தை சார்ந்த அம்பேத்கரியவாதி மற்றும் செயற்பாட்டாளர் SR Darapuri I.P.S. (Retd.) ஆகஸ்ட் 26, 2016 அன்று Countercurrentss.org-ல் வெளியிட்ட கட்டுரையில், இதுவரை இந்தியில் மட்டுமே இருந்து வந்த அம்பேத்கரின் ஆக்ரா உரையை தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த கட்டுரையில் அந்த உரை முழுவதுமாக இல்லையென்றாலும், அவரது உரையின் சாராம்சம் சில முக்கியமான அம்சங்களோடு விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த உரையை அம்பேத்கர் நிகழ்த்திய காலத்தில் அரசியலின் மீதும் இந்து மதத்தின் மீதும் அம்பேத்கர் கொண்டிருந்த விரக்தியானது உச்சத்தில் இருந்தது. அவரது கசப்பான அனுபவங்களே இதற்கு சான்றுகளாகும். இந்த கட்டுரை அவரது உரையிலிருக்கும் ஒரு சில விசயங்களை மட்டும் சுருக்கமாக விவாதிக்கின்றது. அரசியல் விரக்தி பற்றி அவரது உரையில் இல்லையென்றாலும், அவரது மனதில் அது இருந்தது என்பது பாராளுமன்றத்தில் வெளிப்பட்டது. அது பின்வருமாறு:

“நான் ஒரு பணியாள்… இந்த அரசியலமைப்புச் சட்டம் யாருக்குமே பொருந்தாது” : அம்பேத்கர்

அரசியலமைப்பையும் அம்பேத்கரையும் பற்றிப் புகழ்ந்து பேசும்போது பலரும் அம்பேத்கரை அரசியலமைப்பின் சிற்பி என்று இல்லாத ஒன்றை மிகையாக கூறுகின்றனர். இரண்டுமே தவறான தகவல்கள், இவை ஆளும் வர்க்கங்கள் மக்களை ஏமாற்றுவதற்காகவே பரப்பி வருபவை ஆகும். அம்பேத்கர் ஒரு அரசியலமைப்பு வரைவுக்குழுவின் உறுப்பினர் மற்றும் அதன் தலைவர் மட்டுமே. அம்பேத்கர் தனது எண்ணங்களை கசப்பான வார்த்தைகளில் பாராளுமன்றத்திலே கூறியிருக்கின்றார்.

செப்டம்பர் 12, 1953 இல் பாராளுமன்றத்தில் நடந்த ஒரு விவாதத்தின் போது, அம்பேத்கர் கூறியது: “மக்கள் எப்போதுமே என்னிடம் கூறுவது: ‘ஓ, நீங்கள்தானே அரசியலமைப்பின் சிற்பி’. “எனது பதில் நான் ஒரு பணியாளாக மட்டுமே இருந்தேன். எனக்கு சொல்லப்பட்ட வேலையை, எனது விருப்பத்திற்கு எதிராக நிறைய செய்தேன்.” (ஆங்கிலத்தில்: My answer is I was a hack. What I was asked to do, I did much against my will.”)

இராஜஸ்தானைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அம்பேத்கரிடம் “நீங்கள் அரசியலமைப்பை ஆதரித்து பேசியிருக்கிறீர்களே” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அம்பேத்கர் “வழக்கறிஞர்களாகிய நாம் நிறைய விசயங்களை ஆதரித்து வாதிடுகின்றோம்” என்று பதிலளித்துள்ளார். அன்றைய உள்துறை அமைச்சர் கட்ஜூ அரசியலமைப்பை உருவாக்கியதற்கு அம்பேத்கரே பொறுப்பு என்று கூறினார். அதற்கு அம்பேத்கர், “நீங்கள் உங்களது தவறுகளுக்காக என்னை குற்றஞ்சாட்ட விரும்புகிறீர்களா?” என்று கேள்வியெழுப்பினார். மேலும், “எனது நண்பர்கள் அரசியலமைப்பை நான்தான் உருவாக்கினேன் என்று என்னிடம் கூறுகின்றார்கள். ஆனால், அதனை எரிக்கும் முதல் ஆளாக நான்தான் இருப்பேன் என்று நான் சொல்வேன், எனக்கு அது தேவையற்றது. அது யாருக்கும் பொருந்தாது.”

பின்னாட்களில் இதனை நீர்த்துப்போகும்படி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், இது அம்பேத்கரினது மனதை வெளிப்படுத்துகின்றது என்பதனை ஆனந்த் தெல்தும்டேவைப் போன்ற அம்பேத்கரிய அறிஞர்கள் ஏற்றுக் கொண்டனர். அவரது பிரபல வாழ்க்கை வரலாற்றாசிரியர் தனஜெய் கீர் 1954-ல் அம்பேத்கரை நிறைய ஆழமான நேர்காணல்கள் கண்டு, பல விளக்கங்கள் கேட்டுக் கொண்ட பின்பே அதனை வெளியிட்டார்.

மிகவும் பொதுவாக, நாடு முழுவதிலும் உள்ள அம்பேத்கரது சிலைகள் அவர் நிராகரித்த ஒரு புத்தகத்தை அவர் கையில் வைத்திருப்பதாகவே உள்ளன.

அந்தப் புத்தகத்தை அவர்கள்தான் அம்பேத்கரின் கையில் திணித்தார்கள்.

அவர்கள் அந்தப் புத்தகத்தை நவீன பகவத் கீதை என்று தெய்வமாக்குகின்றார்கள். மேலும், அவர்கள் விரும்பியபோதெல்லாம், தண்டனையின்றி அதனை மீறுகின்றார்கள்.

******

பௌத்தத்தின் மீது தவறாக நம்பிக்கை

அம்பேத்கர் பௌத்தத்தைப் பற்றிய நூலின் முன்னுரையை எழுதி முடித்த பிறகு ஆக்ரா கூட்டம் நடந்ததால் அக்கூட்டத்திலும் பௌத்தம் முக்கியமான பேசுபொருளாக இருந்தது. பௌத்தமும் இந்து மதத்திலிருந்து வெளியேறி பௌத்தத்திற்கு மாறுவதும் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்று பலரும் கருதுகின்றார்கள். இவர்களில் அம்பேத்கரியர்களும், இடதுசாரி அறிவுஜீவிகளும்கூட உள்ளடக்கம். சாதியத்திற்கு எதிராகவும், மனுவாதிகள் மற்றும் இந்துத்துவவாதிகளுக்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கான தீர்வாக பெளத்தத்தை அவர்கள் நம்புகிறார்கள்.

அனைத்து மதங்களும் நல்ல விசயங்களை போதித்தாலும், அவையெல்லாம் ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்வதற்கே நம்மை இட்டுச் செல்கின்றன. பௌத்தமும் அதற்கு விதிவிலக்கல்ல. உதாரணத்திற்கு திபெத்திய பௌத்தத்தை எடுத்துக் கொண்டால், 1950களில் சீனப் புரட்சியால் வீழ்த்தப்படுவதற்கு முன்பு வரையிலும் திபெத்திய பௌத்தம்தான் கடும் வன்முறையிலான அடிமை ஒடுக்குமுறையின் பீடமாகத்தான் இருந்து வந்தது. இப்போது இருக்கும் தலாய் லாமா கடந்த அறுபது ஆண்டுகளாக அமெரிக்காவையும் அதன் வன்முறைப் போர்களையும் ஆதரித்துள்ளார்.

மேற்கத்திய காலனியாதிக்க நாடுகள் எப்படி ஒருபுறம் கிறித்தவ மதத்தைப் பரப்பிக் கொண்டே மறுபுறம் தேசங்களையும் நாடுகளையும் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கியும் அடிமைப்படுத்தியும் வந்தன என்பது நமக்குத் தெரியும். நாஜி பாசிசத்தின் கூட்டாளியான ஜப்பானிய இராணுவ ஆட்சியும் கூட ஒருபுறம் பௌத்தத்துடன் இணக்கமாக இருந்தாலும் அந்த வழியை மிகவும் குறைவாகவே கடைபிடித்துள்ளது. இலங்கை மற்றும் மியான்மரிலுள்ள பௌத்த ஆட்சியாளர்கள் அவர்களது ஒடுக்குமுறை வன்முறைக் கொள்கைகளுக்காகவே இழிபுகழ் அடைந்ததும் நமக்குத் தெரியும். மிகவும் குறைவாகவே அறியப்பட்டுள்ள, இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கின்ற சாதியத்திற்கும் கூட இதுவே உண்மை. எக்கனாமிக்கல் அன்ட் பொலிட்டிகல் வீக்லியின் 1964-ம் ஆண்டு வருடாந்திரப் பதிப்பில் ஜப்பானில் சாதிகள் என்னும் கட்டுரையில் பௌத்தம் நிலைத்திருக்கும் ஜப்பான், கொரியா மற்றும் திபெத்தில் சாதியம் நன்கு வளர்ந்திருப்பதும் இன்னும் சாதியம் நிலவி வருவதையும் பற்றி வெளியாகியிருந்தது. இனி நமக்கு மிகவும் குறைவாக தெரிந்த, மிகவும் அருகாமையிலுள்ள இலங்கையின் நிலையைப் பற்றியும் நாம் பார்த்தாக வேண்டும்.

நினைவுச் சின்னங்களாக வழிபடப்படும் புத்தரின் முடிபற்கள் மற்றும் சாம்பல்!

புத்தர் பயன்படுத்திய பொருட்களை கைப்பற்றுவதற்காக முதலாம் நூற்றாண்டில் பல குலங்களுக்கிடையே போர்கள் நடந்துள்ளன. பேரரசர் அசோகர் தனது ஆட்சிக்காலத்தில் அந்த பொருட்களை தோண்டியெடுத்து, அவற்றை 84000 ஸ்தூபிகளுக்கும் பிரித்து அனுப்பி வைத்தார். கலிபோர்னியாவிற்கு அருகே கூட, புத்தரின் இரண்டு பற்கள் மற்றும் ஒரே ஒரு தலை முடிக்காக கோவில் ஒன்று உள்ளது.

இவற்றில் பகுத்தறிவு என்பது என்ன இருக்கிறது? இந்துத்துவத்தின் மூடத்தனத்திற்கும் இவற்றிற்கும் என்ன வேறுபாடு? எத்தனை பௌத்தர்களும் பகுத்தறிவாளர்களும் இவற்றை எதிர்த்து பேசுகிறார்கள்?

அம்பேத்கரும் மயங்கி விடவில்லை. அவருக்கும் இத்தகைய பிரச்சினைகள் பற்றியும், பௌத்தத்திலுள்ள பல்வேறு பிரிவுகள் பற்றியும், அவற்றின் வகுப்புவாதத்தைப் பற்றியும் தெரிந்திருந்தது. அவர் இந்தியாவில் பௌத்தத்தின் அதன் வீழ்ச்சியை, ஏறத்தாழ, அதன் மறைவைப் பற்றிப் படித்தார். அவர் தனது தொண்டர்களிடம் பௌத்தத்திலுள்ள ஹீனயானம், மஹாயானம் போன்ற பிளவுகளை புறக்கணிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலாக அவர் புதிய வகை பௌத்தத்தை அதாவது, நவயான பௌத்தத்தை உருவாக்கினார். அவர் வார்த்தைகளை மறைக்காமல், நேரடியாகவே ஆக்ராவில் கூறினார்:

“பௌத்த பிக்குகளுக்கு: பௌத்தம் என்பது மாபெரும் மதம். தத்தாகட் இம்மதத்தை தோற்றுவித்ததோடு அதனை மக்களுக்கும் உபதேசித்தார். இம்மதம் அதன் சிறப்பினால் பரவலாக சென்று சேர்ந்தது. ஆனால், அதன் புகழ்மிக்க வளர்ச்சிக்குப் பிறகு, 1293-களில் சுத்தமாக வீழ்ச்சியடைந்து மறைந்து போனது. அதற்கான காரணங்கள் பல உண்டு. அவற்றில் ஒரு காரணம் பௌத்த பிக்குகள் சுகபோக வாழ்க்கைக்கு அடிமைகள் ஆகிவிட்டது. மதத்தைப் பரப்புவதற்கு ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்ந்துகொண்டே இருக்கவேண்டிய பௌத்த பிக்குகள் பௌத்த விஹாரங்களில் ஓய்வெடுப்பதும், பிரபுக்களை பாராட்டி புத்தகங்கள் எழுதுவதுமாக வாழத் துவங்கிவிட்டனர். இனி, இம்மதத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், அவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். அவர்கள் அதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றாக வேண்டும். நான் மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் பௌத்த பிக்குகளை நமது சமுகத்தில் காண்கிறேன். எனவே, சமூகத்திலுள்ள நல்ல மனிதர்கள் இம்மதத்தை பரப்புவதற்கு முன்வர வேண்டும்.”

எனவே, அம்பேத்கர் ஏறக்குறைய மரணப்படுக்கையில் கிடந்த பௌத்த மதத்தில் இணைத்துக் கொண்டார். “இனி இம்மதத்தை உயிர்ப்பிப்பதற்கு அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்….” என்றார். ஆனால் அம்பேத்கர் நேர்மையாக கூறினார், “என்னால் மிகவும் குறைவான பௌத்த பிக்குகளையே சமூகத்தில் பார்க்க முடிகின்றது.”

நவ- அரசியல் பௌத்தர்கள் அதிகார மற்றும் சொகுசு கலாச்சாரத்திற்கு அடிமையாகிவிட்டார்கள், அம்பேத்கரின் வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் சொகுசு வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டார்கள்…. அவர்கள் விஹாரங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள், (விருந்தினர் மாளிகைகளிலும், கல்விக்கூடங்களிலும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் டஜன் கணக்கிலுள்ள அம்பேத்கர் இருக்கைகளிலும்) மாயாவதியைப் போல அவர்கள் (நவீன) அரசர்களை பாராட்டி எழுதுவதிலும், ஏமாற்றுத்திட்டங்களை ஆதரிப்பதிலும், தேனொழுக வாய்கிழிய பேசுவதைத் தாண்டி ஒடுக்கப்படும் மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமலும் உலா வருகின்றனர்…. இவர்களில் எத்தனை பேர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வீடு வீடாக செல்கின்றனர்? வெகு சிலரே அம்மக்கள் கொடிய வன்முறைக்கு உள்ளாக்கப்படும்போது கண்டிக்கவோ வெளியே பேசவோ செய்கின்றனர்.

உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த தலித் செயற்பாட்டாளர் தாராபுரி, மாயாவதியின் ஆட்சிக்கும் மற்ற கட்சிகளின் ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கள நிலவரங்களோடு, அம்பலப்படுத்தியுள்ளார்.

“இந்தக் கட்சிகளில் மிச்சமிருப்பது ஆளும் வர்க்கக் கட்சிகளின் வேறொரு சாயல் மட்டுமே, அவர்கள் அவர்களின் தலைவர்களை மட்டும் செழிக்க வைத்துவிட்டு, அவர்களது தொகுதி மக்களை இன்னும் அவலமான நிலைகளிலேயே வைத்துள்ளனர்” என்று ஆனந்த் தெல்தும்டே அழுத்தமாக பதிவு செய்கிறார்.

“நாம் இத்தகைய பெயர்களில் காண்பதெல்லாம் அடையாளங்களின் கண்காட்சிதானே தவிர வேறு எதுமில்லை, அம்பேத்கரும் கூட அத்தகைய அடையாளத்தை வழங்கும் செயலற்றவராக அவர்களுக்கு மாறிவிட்டார். பரவலான சந்தர்ப்பவாதம், ஒவ்வொருவரும் அம்பேத்கர் மீதான பக்தியினைப் பயன்படுத்தி அரசியல் லாபங்களுக்காக காய்நகர்த்தி இலாபம் சம்பாதிக்கும் தரகர்களாக இருப்பது; சித்தாந்த ஓட்டாண்டித்தனம், அதிகார ருசிக்காக வெளிப்படையாக எதிரிகளோடு கூட்டு சேர்ந்து கொள்வது, ஆனால் அம்பேத்கரின் இலட்சியங்களுக்காக பாடுபடுவதாக கதையளப்பது, அம்பேத்கர் எழுதியவற்றையே திரும்பவும் எழுதிக் கொண்டிருக்கும் அறிவாளிகள் அதிகரிப்பது, அல்லது வெற்று புகழுரைகளை அம்பேத்கர் மீது பொழிவது, அதிகாரத்திற்கு அடிவருடித்தனம் செய்து சுயலாபம் சம்பாதித்துக் கொள்வது, மற்றும், அம்பேத்கர் எதற்காகவெல்லாம் பேசினாரோ அவற்றின் அடிநாதத்தையே இடையறாது கருவறுப்பது….”

“அம்பேத்கரிய இயக்கத்தில் இன்று எஞ்சியிருப்பது அம்பேத்கர் சிலைகளும், பௌத்த விஹாரங்களும், அவரது நினைவு சபைகளும், பாடல்களும், அடையாள வெறியும்தான்….” என்கிறார் ஆனந்த் தெல்தும்டே.***

பௌத்தம் ஒருபோதும் தனியாக தலித்களின் ஒற்றுமையை சாதிக்க உதவாது – உதவவும் முடியாது.

பாரதிய ஜனதா கட்சியானது, இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இருப்பது போலவே, தலித்களுக்குள் இருக்கும் உட்சாதிகளையும், உட்பிரிவுகளையும் சுரண்டலுக்காகவும், அந்தப் பிளவுகளை மேலும் வலுப்படுத்தி ஆழமாக்குவதற்காகவும் பயன்படுத்திக் கொள்வதை நாம் உத்திரபிரதேசத்திலும் பீகாரிலும் மிகவும் சாதாரணமாகக் காண்கிறோம்.

இந்துத்துவமானது புத்தரை உள்வாங்கிக் கொண்டு, அவரை விஷ்ணுவின் அவதாரம் என்று சுருக்கி விழுங்கிவிட்டது. அம்பேத்கருக்கும் இதே கதிதான். வெளியிலிருக்கும் அம்பேத்கரியவாதிகளை விட பாரதிய ஜனதா கட்சி தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமாகியிருக்கும் அம்பேத்கரியவாதிகள் அதிகம்.

இந்தத் தலைவர்களிலும் சரி, அவர்களது தொண்டர்களிலும் சரி, எத்தனை பேர் இந்துத்துவ பழக்கவழக்கங்களைத் துறந்துள்ளனர்? பௌத்தம் தீர்வைத் தராது என்ற போதிலும்கூட, எத்தனை பேர் உண்மையாகவே பௌத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்?

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 73 இலட்சம் நவயான பௌத்தர்கள் உட்பட, மொத்தம் 84 இலட்சம் பௌத்தர்கள் உள்ளனர். அவர்களில் ஏறத்தாழ 90 சதவிகிதம் பேர் (65 இலட்சம் பேர்) மகாராஷ்ட்ராவில் வாழ்கின்றனர். நவயான – நவ பௌத்த இயக்கம் அம்பேத்கரினால் தோற்றுவிக்கப்பட்டது. அதனை பெரும்பான்மையாக பின்பற்றுபவர்களாக தலித்கள், அவர்களிலும் முதன்மையாக – அம்பேத்கரது பிறப்பு சாதியான மஹர்கள் தான் உள்ளனர். அவர்களது மக்கள்தொகை 1961 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 27.8 இலட்சம் ஆகும். கடந்த ஐம்பதாண்டுகளாக இயல்பான மக்கள்தொகைப் பெருக்கத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், மிகவும் குறைந்த அளவில்தான் புதிய நபர்கள் இந்த மதத்தைத் தழுவியுள்ளனர்.

உண்மையில், கடந்த பத்தாண்டுகளில் பௌத்தம் புதிய நபர்களை அதிகம் கவரவேயில்லை. உத்திரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி சில பத்தாண்டுகளாக வலுவாக இருந்தேபோதிலும் கூட, மகாராஷ்ட்ராவிற்கு வெளியே குறைவானவர்களே பௌத்தத்திற்கு மாறியுள்ளனர். மேலும், களநிலவரம் தெரிந்தவர்களின் கணக்கின்படி, அம்பேத்கர் பிறந்த சாதியான, தலித்களின் உட்சாதியான மகர் சாதியினரே பெரும்பாலும் பௌத்ததிற்கு மாறியுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் மாயாவதி ஆகியோர் சார்ந்துள்ள சமார் சாதியும் தலித்களில் ஒரு உட்சாதியே. ஆனாலும் இந்த இரண்டு உட்சாதிகளுக்கு இடையே தீண்டாமை உட்பட அனைத்திலுமே ஒரு மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருந்து வருகின்றது.

அரசியல் அதிகாரம் மற்றும் மிகப்பெரிய அளவு நிதி மற்றும் பல்வேறு திட்டங்களோடு பாரதிய ஜனதா கட்சி தொடுக்கும் தாக்குதல்களை எதிர்கொள்ள அம்பேத்கரியத்தாலோ அல்லது நவயான பௌத்தத்தாலோ முடியவில்லை என்பது வெளிப்படை. பாரதிய ஜனதா கட்சியானது இந்த இரண்டு பெரிய மாநிலங்களிலும் மிகப்பெரிய அடித்தளத்தை கொண்டுள்ளது.

இது ஒரு தவறான நம்பிக்கை என்பதனைக் கீழே காணலாம்.

1935-களிலேயே அம்பேத்கர் யேலா மாநாட்டில் நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன் என்று அறிவித்ததோடு இந்து மதத்தை துறப்பேன் என்றும் குறிப்பிட்டார். அவரை சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் இசுலாமிய மதகுருமார்கள் அவர்களது மதத்தில் இணையும்படி அழைப்பு விடுத்தனர். ஆனால் அம்பேத்கர் அவர்களது மதத்தில் இணைய மறுத்துவிட்டார். 1950-களின் துவக்கத்தில் மீண்டும் அம்பேத்கர் தனது திட்டத்தினைப் பற்றி யோசித்தார். அரசியல் நகர்வுகளும் அங்கே இருக்கவே செய்தன. இறுதியாக அவர் பௌத்த மதத்தைத் தழுவுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டாலும், தான் இறப்பதற்கு சிறிது காலம் முன்பு பௌத்த மதத்திற்கு மாறி, ஒரு இந்துவாக மரணமடைவதை தடுத்துக் கொண்டார்.

இறப்பதற்கு 6-7 மாதங்களுக்கு முன்பாக, தனது வாழ்வின் இறுதிக்காலத்தில், ஆர்எஸ்எஸ்இன் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் 1956-ம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் நடந்த ஒரு பொது நிகழ்வில் அம்பேத்கர் தனது தொண்டர்கள் 4-5 லட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். அதன்பிறகு 7-8 வாரங்களில் அம்பேத்கர் மறைந்தார். பிறந்த மதத்தை விட்டு வெளியேறுவது மக்களுக்கு எளிமையானதல்ல என்பதனை அம்பேத்கர் நன்றாகவே உணர்ந்திருந்தார். எனவேதான், “நான் உங்களை என்னுடன் பௌத்தத்திற்கு மாறும்படி சொல்ல மாட்டேன். யாரெல்லாம் இந்த சிறந்த மதத்தின் அடைக்கலத்தை நாடி வருகிறார்களோ, அவர்கள் மட்டும் பௌத்தத்தை தழுவிக் கொள்ளலாம் … அதன் நடத்தை விதிகளை பின்பற்றலாம்” என்று கூறினார்.

அம்பேத்கர் இவற்றையெல்லாம் உணர்ந்துதான் கூறினார்.

“கூடிய விரைவில் நான் பௌத்தத்தினை தழுவப் போகின்றேன். பௌத்தம் ஒரு முற்போக்கான மதம். பௌத்த மதமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. பல ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு நான் இம்மதத்தைக் கண்டடைந்தேன். வெகு விரைவில் நான் பௌத்தனாக மாறுவேன்” என்று அம்பேத்கர் தனது ஆதரவாளர்களிடம் கூறினார்.

அம்பேத்கர் நல்லதொரு நோக்கத்திற்காகத்தான் இந்து மதத்தை விட்டு வெளியேறினார், அதைப்பற்றி அவர் கூறியது: “என்னால் உங்களோடு ஒரு தீண்டத்தகாதவனாக வாழ முடியாது. ஆனால் ஒரு உண்மையான பௌத்தனாக உங்களுடைய மேம்பாட்டிற்காக கடைசி வரை போராடுவேன்.” இதனைக்கூறி ஏழு வாரங்களுக்குப் பிறகு அம்பேத்கர் உயிரோடு இல்லை.

அது பலவிதமாக கருதப்பட்டது. அவர் தனது எண்ணத்தை வெளிப்படுத்திய போது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை அரசியலை விட்டு வெளியேறும் அவரது முடிவை வருத்தமானது என்று கூறியது. ஷங்கர் என்ற வார இதழ் தனது நையாண்டி பதிவில் ஒரு இந்தியனுக்கு வேலையும் அதிகாரமும் தருவதை விட மேலானதை அவரது மதமாற்றம் தந்ததை அம்பேத்கர் நிரூபித்ததாக எழுதியது.

அம்பேத்கரின் அரசியல் ஏமாற்றம்அவர் தனது முயற்சியால் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒருமுறைகூட அனுமதிக்கப்பவில்லை

அம்பேத்கர் இந்த உரையாற்றும்பொழுது அவருக்கு வயது 65. அரசியலில் ஏற்பட்ட விரக்தியும் ஏமாற்றமும் அவரது பேச்சில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசியலில் அவர் பல பரீட்சைகளை நடத்தியிருக்கிறார்.

அம்பேத்கர் ஆகஸ்ட் 1936-ம் ஆண்டில் வர்க்க அடிப்படையிலான சுதந்திர தொழிலாளர் கட்சியை (Independent Labour Party- ILP) துவங்கினார். அது உண்மையில் பட்டியலினத்தவருக்கு மட்டுமானதல்ல. அவரது கட்சியானது 1937-ம் ஆண்டில் பாம்பே மாகாணத் தேர்தலில் போட்டியிட்டு 17 இடங்களில் 14 இடங்களைக் கைப்பற்றியது. அதில் 3 பொதுத் தொகுதிகளும் அடக்கம். அவரது கட்சி கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து தொழிலாளர் விரோத சட்ட மசோதாவை (தொழில் தகராறு சட்டம், 1938) எதிர்த்து வேலை நிறுத்தங்களை நடத்தியது. காங்கிரஸ் சோசலிசக் கட்சியுடன் சேர்ந்து குத்தகை விவசாயிகளுக்காக பெரிய இயக்கங்களை நடத்தியது. அவர் குத்தகைதாரர்களின் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார் (Khoti Abolition Bill, 1937).

அவர் சுதந்திர தொழிலாளர் கட்சியை கலைத்துவிட்டு, 19 ஜூலை 1942 இல் சாதி அடிப்படையிலான அனைத்திந்திய பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு (AISCF) என்ற கட்சியைத் தோற்றுவித்தார். போர் காலகட்டத்தில் அவர் பிரிட்டிஷ் வைசிராயின் செயற்குழுவில் தொழிலாளர் உறுப்பினராக சேர்ந்தார். கம்யூனிஸ்டுகளைப் போலவே அவரும் காங்கிரசின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்ததோடு, அதனை விமர்சிக்கவும் செய்தார்.

அனைத்திந்திய பட்டியல் சாதிகள் கூட்டமைப்பின் பெயரில் தேர்தலில் போட்டியிட்டு அதனால் தோற்கடிக்கப்பட்டார். இந்தக் கட்டத்தில் அவர் சுயமாக தேர்ந்தெடுக்கப்பட அனுமதிக்கப்படவேயில்லை. அவரது சொந்த ஊரான மகாராஷ்ட்ராவிலிருந்து கூட அவர் அரசியலமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை (1946ல்). அன்று இருந்த ஆளும் வர்க்கங்களால் அவர் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்தச் சூழ்நிலைமைகளில், அம்பேத்கர் 1952-ல் நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டார். அவர் அதற்காக யாரிடமும் ஒத்துழைப்பையோ பரிந்துரையையோ விரும்பவில்லை. பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலேயே, யாரால் “அரசியலமைப்பின் சிற்பி” என்று அழைக்கப்பட்டாரோ அம்மக்களாலேயே அம்பேத்கர் தோற்கடிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கஜ்ரோல்கர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில், 14000 வாக்குகள் வித்தியாசத்தில் அம்பேத்கரை தோற்கடித்தார். இந்தத் தோல்வி அம்பேத்கரை மனதளவிலும் நம்பிக்கை அடிப்படையிலும் பெரிதும் பாதித்தது. அது அவரது உடல்நிலையையும் பாதித்ததால் அவரது மனைவியும் அவரது சக நண்பர்களும் பயந்தனர். எனவே, அம்பேத்கருக்காக அவர்கள் காங்கிரஸின் பெரிய தலைவர்களிடம் லாபி செய்து பார்த்தனர். அதனால், காங்கிரஸின் தலைவர்களின் ஆதரவுடனோ அல்லது அனுமதியுடனோ, மறைமுகத் தேர்தல் வழியாக அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954-ல் நடந்த மக்களவைக்கான இடைத்தேர்தலிலும் அம்பேத்கர் போட்டியிட்டு, மீண்டும் காங்கிரஸால் தோற்கடிக்கப்பட்டார்.

அம்பேத்கர், தனது சொந்த பலத்தால் ஒரு முறை கூட வெற்றி பெற அனுமதிக்கப்படவில்லை. எனவே அவர் ஒரு ஆதரவாளராக மட்டும் இருக்க அனுமதிக்கப்பட்டார். இது ஏற்படுத்திய அவமானத்தையும் அம்பேத்கர் தாங்கிக் கொண்டார். அவரது படிப்பாளி தொண்டர்களோ அல்லது பணியாளர்களோ போதிய அளவு கடினமான உழைப்பை செலுத்தவில்லை.

“எனக்கு பிறரிடமிருந்தெல்லாம் அச்சுறுத்தல் இல்லை, ஆனால் நான் எனது சொந்த மக்களால்தான் அச்சுறுத்தப்படுகிறேன்.”

அம்பேத்கர் தன்னைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை அறிந்திருந்தார், அது அவருடைய ஆக்ரா உரையிலும் வேதனையாக எதிரொலித்தது.

தலைவர்களுக்கு: “யாரேனும் உங்களை அவரது மாளிகைக்கு அழைத்தால், நீங்கள் தாராளமாக செல்லலாம், ஆனால் உங்களுடைய குடிசைக்கு தீ வைக்காதீர்கள். ஒருவேளை நாளைக்கே அந்த மாளிகைக்காரர் உங்களை வெளியே தூக்கி எறிந்தால் நீங்கள் எங்கே போவீர்கள்? நீங்கள் உங்களை விற்றுவிட முடிவெடுத்துவிட்டீர்கள் என்றால், அதற்கு உங்களுக்கு முழு சுதந்திரமும் உண்டு, ஆனால், அதற்காக உங்களது நிறுவனத்தை எந்த வகையிலும் குறை கூறாதீர்கள். எனக்கு மற்றவர்களிடம் இருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை. எனக்கு என் சொந்த மக்களால்தான் அச்சுறுத்தலே.”

அம்பேத்கரியவாதிகள் தலித்களிடம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பற்றி நோய் தீர்க்கும் மருந்தைப்போல முக்கியம் கொடுத்துப் பேசுவதை நாம் பார்க்கிறோம். ஆனால், அம்பேத்கர் தனது கசப்பான அனுபவங்களை வைத்துக் கூறுவது:

அரசு ஊழியர்களுக்கு: “கல்வியை வைத்து நமது சமூகம் கொஞ்சமாக முன்னேறியிருக்கிறது. சில நபர்கள் கல்வி பெற்றவுடன் உயர் பதவிகளையும் அடைந்துள்ளார்கள். ஆனால் இந்த படித்த நபர்கள்தான் என்னை காட்டிக் கொடுத்தனர். கல்வி பெற்ற பின் அவர்கள் சமூக சேவை செய்வார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் நான் பார்ப்பதெல்லாம் தனது வயிற்றை நிரப்புவதிலேயே குறியாக இருக்கும் சிறிய மற்றும் பெரிய குமாஸ்தாக்களின் கூட்டத்தினைத்தான். அரசு பதவிகளில் இருக்கும் நபர்கள் தங்களது வருமானத்தில் 20-ல் ஒரு பங்கை சமூகத்திற்காக ஒதுக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால்தான் சமுகம் முன்னேறும். இல்லையெனில் ஒரேயொரு குடும்பம் மட்டுமே பயன்பெறும். கிராமத்திலிருந்து கல்வி கற்கச் செல்லும் சிறுவனை நம்பியே ஒட்டுமொத்த சமூகத்தின் நம்பிக்கையும் இருக்கின்றது. ஒரு கற்ற சமூக சேவகர் சமூகத்திற்கு கிடைத்த வரம் என்பதை அவர்களால் நிரூபிக்க முடியும்.”

இந்த வார்த்தைகள் கவனிக்கப்படவில்லை. தலித் அரசு அலுவலர்களின் பதவிக்காகவும் பதவி உயர்வுக்காகவும்தான் அம்பேத்கர் ஒரு அடையாளமாகப் பயன்படுத்தப்படுகின்றார். எனவேதான் அம்பேத்கர் மாணவர்களுக்கு பின்வருமாறு அறிவுரை கூறுகின்றார்:

மாணவர்களுக்கு: “மாணவர்கள் கல்வி கற்ற பின்பு எங்கோ ஓர் இடத்தில் ஒரு குமாஸ்தாவாக இருப்பதைவிட, தங்கள் ஊருக்கும் தங்களை சுற்றியுள்ள மக்களுக்கும் சேவை செய்தால், அறியாமையினால் காரணமாக நிகழ்த்தப்படும் சுரண்டலும் அநீதியும் குறையலாம். உங்களது வளர்ச்சி என்பது சமூகத்தின் வளர்ச்சியோடு இணைந்ததே.”

பல்வேறு பிரிவினரைப் பற்றிய மேற்கண்ட விவாதத்திற்கு பிறகு, அம்பேத்கர் தனது தோல்விகள் பற்றிய சுய விமர்சனத்தையும் முன்வைக்கின்றார்.

***

அவர் ஊர்ப்புறங்களில் இருக்கும் ஏழைகளுக்காக ஏதும் செய்யவில்லையே என்று வருந்தினார்.

நிலமற்ற கூலிகளுக்கு: “நிலமற்ற கூலித் தொழிலாளர்களை நினைத்து நான் மிகவும் கவலைப்படுகின்றேன். அவர்களுக்காக என்னால் போதிய அளவு எதுவும் செய்ய முடியவில்லை. அவர்களது துயரங்களையும் கஷ்டங்களையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களது அவலங்களுக்கெல்லாம் காரணம் அவர்களிடம் சொந்தமாக நிலம் இல்லாததே. எனவேதான் அவர்கள் அவமானங்களுக்கும் வன்முறைகளுக்கும் இலக்காகி இருக்கின்றனர். அவர்களால் தங்களை சுயமாக முன்னேற்றிக் கொள்ள முடியாது. நான் அவர்களுக்காக போராடுவேன். ஒருவேளை அரசு எதாவது தடைக்கல்லை ஏற்படுத்தினால் நான் அவர்களுக்கு தலைமை கொடுத்து அவர்களது சட்டப் போராட்டத்தை நடத்துவேன். ஆனாலும், அவர்கள் நிலவுடைமையாளர்களாக ஆவதற்கு நான் என்னாலான எல்லா முயற்சிகளையும் செய்வேன்”

எனினும் அவர்களுக்கு அம்பேத்கரால் எதுவும் செய்ய முடியவில்லை. 7 வாரங்களில் அவர் இறந்துவிட்டார்.

உண்மையில், இந்த யதார்த்தம் அம்பேத்கரை ஏற்கெனவே மிகவும் பாதித்திருந்தது. ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றாலும்கூட, அதற்கு ஊரகப்பகுதிகளில் அடித்தளம் இன்றியமையாதது. 1952-ம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பிறகு அம்பேத்கர் இதனை உணர்ந்திருந்தார். அரசியலமைப்பை உருவாக்கிய பாத்திரம் அம்பேத்கருக்கு உதவவில்லை.

ஆனந்த் தெல்தும்டே கூறுகிறார்: “அம்பேத்கர் வாழ்நாள் முழுதும் செய்த பணிகள் எதிர்பார்த்த பலனை அளிக்காததன் காரணமாக, வாழ்வின் இறுதி நாட்களில் அவரது ஏமாற்றம் அதிகமாகிக் கொண்டே வந்தது. அதன் ஒரு சம்பவமாக, 1953-ம் ஆண்டு தில்லியில் உள்ள அவரது வசிப்பிடத்திற்குச் சென்ற பட்டியல் சாதிகள் கூட்டமைப்பின் மராத்வாடா பிரிவினரிடம், அவர் என்ன செய்தாலும், நகர்ப்புறத்திலுள்ள படித்த தலித்துகளில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பலன் கிடைப்பதாகவும், கிராமப்புறங்களிலுள்ள பெரும்பான்மையான தலித்துகளுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் அம்பேத்கர் வருந்தினார்.”
***

பல பத்தாண்டுகள் பணிக்கு பிறகும் கூட, தனக்குப் பிறகு தனது பணிகளைத் தொடர்ந்து எடுத்துச் செல்வார்கள் என்று அம்பேத்கர் யாரை நம்பினாரோ, அத்தகைய நபரை அம்பேத்கரால் கண்டறிய முடியவில்லை.

எதிர்காலக் கவலை: “இன்று நான் பெரிய கூடாரங்களைத் தாங்கி நிற்கும் ஒரு தூணைப் போல் இருக்கிறேன். இந்த தூண் இங்கு இல்லாமல் போகும்போது என்னவாகும் என்பதை நினைத்து நான் கவலை கொள்கிறேன். நான் சரியாக உடல் ஆரோக்கியத்தினை பராமரிக்கவில்லை. மக்களாகிய உங்களை நான் எப்போது முழுவதுமாக விட்டுப்போவேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த பல இலட்சக்கணக்கான ஆதரவற்ற, மனமுடைந்த மக்களின் நலனைப் பாதுகாக்கும் ஒரு இளைஞனை என்னால் கண்டறிய முடியவில்லை. ஒருவேளை யாராவதொரு இளைஞன் இந்தப் பணிகளை பொறுப்பேற்றுக் கொள்ள முன்வந்தால் நான் நிம்மதியாக இறப்பேன்.”

உண்மையில் அவரது அரசியல் பார்வையும் சோதனைகளும் காலப்போக்கில் மாறவும், வலுவிழக்கவும் செய்தன. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் கூட்டமைப்பு (Depressed Classes Federation, 1930), சுதந்திர தொழிலாளர் கட்சி (Independent Labour Party, 1935), பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு (Scheduled Castes Federation, 1942) என அம்பேத்கரது வர்க்கத்திற்கும் சாதிக்குமான அரசியல் நிலைப்பாடு மாறுதல் அவரது ஆக்ரா பேச்சிலும் தாக்கம் செலுத்தியது. அங்கே அவர் அவற்றை நினைவுகூர்ந்து, அதன் கசப்பான அனுபவங்களுக்காக வருந்தினார்.

இத்தகைய அனுபவங்களின் பின்னணியில் தான் அனைத்திந்திய பட்டியல் சாதிகள் கூட்டமைப்பை 1956-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 14-ம் நாள் கலைத்தார். அதே நாளில் எந்த நாட்டின் அரசியலமைப்பை எழுதினாரோ அந்த நாட்டிலேயே இந்திய குடியரசுக் கட்சி (Republican Party of India) என்ற கட்சியை துவங்குவதற்கான அறிவிப்பை நாக்பூரில் வெளியிட்டார். ஆனால், இந்திய குடியரசு கட்சியானது, அம்பேத்கர் 1956-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் நாள் இறந்து ஒரு வருடம் கழித்து, 3 அக்டோபர் 1957-ல் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் அம்பேத்கருக்கு இது மிகவும் தாமதமான முயற்சியாகும்.

உருவான ஆரம்பம் முதலே இந்திய குடியரசுக் கட்சியில் பல்வேறு பிரிவுகளும் பிளவுகளும் வேறுபாடுகளும் தலைதூக்கத் துவங்கின. அம்பேத்கரியமோ நவயான பௌத்தமோ அவர்களை ஒன்றிணைக்க முடியவில்லை.

தெல்தும்டே கூறுகிறார்: “துவக்கம் முதலே இந்திய குடியரசு கட்சி சிதைக்கப்பட்டு விட்டது. அதன் எண்ணற்ற பிரிவுகளில் அதன் பெயர் இருப்பதனால் மட்டுமே அது நீடித்திருக்க முடியாது….”

அது உண்மையில் ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு சேவை செய்வதற்காகத்தான் நீடித்திருந்தது. சில அம்பேத்கரியவாதிகள் – இந்திய குடியரசு கட்சியின் தலைவர்கள் மற்றும் அதன் பிரிவுகள் உட்பட – சமூக ரீதியில் எப்போதும் காங்கிரஸ் போன்ற ஆளும் வர்க்க கட்சிகளுடன் கூட்டணியிலோ அல்லது இணைந்தோ தான் இருக்கின்றன. பின்னாட்களில் அவை வெறியூட்டும் இந்துத்துவவாதிகளான பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனா போன்றவற்றோடு கூட்டணி சேர்வதற்குக் கூட தயங்கவில்லை. மற்றவர்களைப் பற்றி பேசுவதேயில்லை.

தெல்தும்டே கூறுவது: “தலித்துகளின் இயக்கத்தை தலித்துகளால் மட்டுமே வழிநடத்த முடியும் என்றும் அவ்வாறுதான் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய பாபாசாகேப் அம்பேத்கர் கூட, தலித்துகள் மத்தியில் கணிசமான செல்வாக்கைப் பெற்றிருந்த வித்தா ராம்ஜி ஷிண்டேவை நிரந்தரமாக வெளியேற்றினார். மேலும், பொது சமூகம் சீர்திருத்தப் பணிகளை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார். அவரது சுதந்திர தொழிலாளர் கட்சி என்னும் உத்தியையும் இந்திய குடியரசு கட்சி என்னும் உத்தியையும் வைத்து இவையெல்லாம் கறாரான தலித் தலைமை என்னும் அடையாளத்தை இல்லாமல் செய்வன என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் அமபேத்கரியவாதிகள் எங்கிருந்து இந்த அடையாள வெறியைப் பெறுகின்றார்கள் என்பது புரிந்துகொள்ள கடினமான ஒன்று.”
***

அடையாள வெறியும் அம்பேத்கரது ஆய்வறிக்கையும்

இந்த அடையாள வெறிதான் அவர்கள் தினம் தினம் சாதியின் தோற்றுவாயைப் பற்றி அம்பேத்கர் கூறியதை மறுக்கவும், புறக்கணிக்கவும், சிதைக்கவும் காரணமாக இருக்கின்றது. அம்பேத்கர் எழுதியது:

“(34) இந்தியாவின் சட்டத்தை வழங்கியவரான, மனு, ஒருவேளை உண்மையில் இருந்திருந்தால், அவர் ஒரு தைரியமான நபராகத்தான் இருந்திருப்பார். சாதி சட்டத்தை அவர்தான் உருவாக்கினார் என்ற கதைகள் உண்மையென்றால், மனு ஒரு துணிச்சலான நபராகத்தான் இருந்திருக்க முடியும்….”

“நான் உங்களிடம் ஒரு விசயத்தை வலியுறுத்த விரும்புகின்றேன். சாதி சட்டத்தை மனு உருவாக்கித் தரவில்லை. சாதி என்பது மனுவிற்கு வெகுகாலம் முன்பிருந்தே இருக்கின்றது. அவர் சாதியினை உயர்த்திப் பிடித்தவர், அதற்கு தத்துவ முலாம் பூசியவர் மட்டுமே. ஆனால் அவர் உண்மையில் இன்று இருக்கும் இந்து சமூகத்தின் ஒழுங்கமைப்பினை உருவாக்கவில்லை. உருவாக்கியிருக்கவும் முடியாது. அவரது பணி என்பது ஏற்கெனவே நிலவி வந்த சாதி விதிகளை தொகுத்து தந்ததும், சாதி தர்மத்தினை பிரச்சாரம் செய்ததுமே ஆகும்.”

அம்பேத்கர் பார்ப்பனர்களது பாத்திரத்தைப் பற்றிப் பேசும்போதும் இதே வாதத்தைத்தான் முன்வைக்கிறார். உண்மையில் அவர் “மேற்கூறிய கருத்தானது சிந்தனை ரீதியில் தவறானதும், தீய எண்ணங்கொண்டதும் ஆகும்” என்கிறார்.

“சாதியின் வளர்ச்சியும் பரவலும் பிரம்மாண்டமான ஒரு பணியாகும். அதனை அதிகாரத்தைக் கொண்டோ அல்லது ஒரு தனிநபரின் சூழ்ச்சி தந்திரத்தாலோ அல்லது ஒரு வர்க்கத்தினாலோ தான் செய்திருக்க முடியும். பார்ப்பனர்கள் சாதியைத் தோற்றுவித்தார்கள் என்று கூறப்படும் வாதத்திற்கும் இதுவே பதில். அத்தகைய எண்ணம் தவறானது மற்றும் தீங்கான நோக்கம் கொண்டது என்பதைத் தவிர நான் எதுவும் கூறுவதற்கில்லை. பார்ப்பனர்கள் பல குற்றங்களை புரிந்திருக்கலாம். ஆனால், பார்ப்பனர் அல்லாத சாதி மக்களின் மீது சாதி அமைப்பை சுமத்துவது என்பது பார்ப்பனர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாகும் என்பதை நான் தைரியமாக சொல்வேன். அவர்கள் கேடான ஒரு தத்துவத்தைக் கொண்டு சாதி அமைப்பு நிறுவப்படுவதற்கு உதவியிருக்கலாம். ஆனால், அவர்களின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டு, சாதி அமைப்பு பற்றிய திட்டத்தினை மக்கள் மீது திணிப்பதற்கு அவர்களால் முடிந்திருக்காது. ஒருவரின் தனது சொந்த முறையை உருவாக்கிய பிறகு அந்த சமூகத்தை அதற்கேற்ப நாகரீகப்படுத்துங்கள்! அது எவ்வளவு மகத்தானது! எவ்வளவு கடினமானது!”

1927 டிசம்பர் 25-ம் நாள், ஒரு அடையாளப் போராட்டமாக, அம்பேத்கரும் அவரது நண்பர்களும் மனுஸ்மிருதி புத்தகத்தை பொதுவெளியில் சந்தனக்கட்டைகளோடு போட்டு எரித்தது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் குறைவாக சொல்லப்பட்டதும், அதனால் பரவலாக அனைவரும் அறிந்திராததும் இருக்கின்றது. அது அன்றிரவு 9 மணிக்கு மனுஸ்மிருதி புத்தகமானது, பண்டலுக்கு முன்பு, அதற்கெனத் தோண்டப்பட்ட சவக்குழிக்குள் சமாதி மீது கிடத்தப்பட்டு, சம்பிரதாயப்படி, அம்பேத்கரின் பார்ப்பன நண்பரான சஹாஸ்ரபுத்தரின் கைகளால் கொளுத்தப்பட்டது.

உண்மையில் இது ஒரு அடையாளச் செயலே, போராட்டமே. ஆனால் இது குடிப்பதற்கான தண்ணீருக்கான போராட்டத்தில் ஒரு பகுதியே. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் கூட, குடிதண்ணீருக்கான போராட்டத்தை நாம் காண்கிறோம். அம்பேத்கர் வலியுறுத்தியது: “பிரச்சாரம் ஒருபோதும் சாதி அமைப்பை உருவாக்காது; அதனை அழிக்கவும் செய்யாது.”

மனுவைப் பற்றியும் பார்ப்பனர்களைப் பற்றியும் மேற்கண்டவாறு குறிப்பிட்ட பின் அம்பேத்கர் தொடர்ந்து எழுதுவது:

“[47]….. சாதியின் தோற்றுவாயைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அது சமூகத்தின் உச்சபட்ச அதிகாரத்தின் உணர்வுப்பூர்வமான கட்டளையினால் உண்டானதா அல்லது குறிப்பான சூழ்நிலைமைகளின் கீழ் வாழ்ந்த மனித சமூகத்தின் வாழ்வில் ஏற்பட்ட தன்னுணர்வற்ற வளர்ச்சியா என்பதுதான். இந்த ஆய்வறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்பாடு யாரெல்லாம் பிந்தைய கருத்தை ஏற்கிறார்களோ அவர்களின் சிந்தனைக்கு தீனியாக விளங்கும் என நான் நம்புகிறேன்.”

மேற்கண்ட சாரமான கருத்துக்கள் 1916-ம் ஆண்டு மே 9-ம் நாள் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு மானுடவியல் கருத்தரங்கில் “இந்தியாவில் சாதிகள்: இயங்குமுறை, தோற்றம் மற்றும் வளர்ச்சி” எனும் தலைப்பில் அம்பேத்கர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. 47 பத்திகள் மட்டுமே உடைய சுருக்கமான ஆய்வறிக்கையாக இருந்தபோதிலும்கூட, இவை முக்கியத்துவமும், கருத்தாழமும் உடையவையே. இந்த ஆய்வறிக்கையில் உள்ள கருத்துக்களில் சில சமீப காலம் வரையிலும்கூட மேற்கோள் காட்டப்பட்டு வருகின்றன. அம்பேத்கர், 1936-ல் வெளியிடப்பட்ட தனது புகழ்பெற்ற படைப்பான “சாதியை அழித்தொழித்தல்” என்னும் நூலின் மூன்றாவது பதிப்பை 1944-ல் வெளியிட்டபோது 1916-ம் ஆண்டினது இந்த ஆய்வறிக்கையை அதில் சேர்த்துக்கொண்டார்.
***

இட ஒதுக்கீடு கொள்கை அம்பேத்கரோடு துவங்கவும் இல்லைஅம்பேத்கரின் விருப்பப்படி முடிவடையவும் இல்லை

அம்பேத்கரையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்காக வானளாவ புகழும் அம்பேத்கரியவாதிகள், அம்பேத்கரின் மேற்கூறிய அனைத்து வேதனைகளையும் மறந்து விட்டனர். ஆனால் உண்மையில், இட ஒதுக்கீடு என்பது அம்பேத்கரோடு துவங்கவும் இல்லை, அம்பேத்கரின் விருப்பப்படி முடிவடையவும் இல்லை. அரசியலமைப்புச் சட்டம் 1950-ம் ஆண்டில் நிறைவேற்றப்படுவதற்கு குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் முன்பிருந்தே இட ஒதுக்கீடு இருந்து வருகின்றது. திருவனந்தபுரம், மைசூர் போன்ற நிலபிரபுத்துவ சுதேசி மன்னராட்சிகள் கூட வெகு காலத்திற்கு முன்பே இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திவிட்டன.

பாசிசத்தையோ அல்லது இந்துத்துவத்தையோ எதிர்த்துப் போராடுவதற்கு இட ஒதுக்கீடு கொள்கை ஒரு பிரச்சினையாக இருக்க முடியாது

அதிகாரத்திலுள்ள சங் பரிவார் இட ஒதுக்கீட்டை புரிந்து கொண்டு, அதனை ஒரு தந்திரோபாய பிரச்சினையாக அணுகி வருகின்றது. ஆர்எஸ்எஸ்-ஐ வழிகாட்டுவது சாணக்கியரும் மாக்கியவல்லியும் தானே தவிர மனு அல்ல. பரிவாரங்களை எதிர்க்கும் பழைய வழிமுறைகள் மீண்டும் சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும். மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியானது அனைத்து வதந்திகளையும் நிராகரித்துவிட்டு, இட ஒதுக்கீட்டைத் தொடர்வதாக அறிவித்துள்ளது. கர்நாடகாவிலும் மத்திய பிரதேசத்திலும் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அரசுகள் பிற்படுத்தப்பட்ட முசுலீம்களுக்கான இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து வருகின்றன. மகாராஷ்டிராவின் அரசு பிற்படுத்தப்பட்ட முசுலீம்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க அவசர சட்டத்தைப் பிறப்பித்தது, அது பின்பு எதிர்மறையாக மாறியது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கும் கொள்கையையும் ‘தகுந்த காரணங்கள்’ இருப்பதாகக் கூறி ஆதரித்தது. அரசு பதவிகளில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் கொள்கையில் தலையிட்டு, அதனை ஆதரித்து வருகின்றது. ஆர்எஸ்எஸ் தலைவர் இட ஒதுக்கீட்டைப் பற்றிய விவாதத்திற்கு அழைப்பு விடுத்தாலும், இட ஒதுக்கீட்டைத் தேவையென கருதும் காலம் வரை தொடர்வோம் என்று கூறியுள்ளார். எனவே, பாசிசத்தை எதிர்த்து போராடுவதற்கு இட ஒதுக்கீடு ஒரு பிரச்சினையாக இருக்காது எனலாம்.

உண்மையில், இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி 120 ஆண்டுகள் ஆன பிறகும் கூட தலித்கள் இன்னும் புறக்கணிக்கப்பட்டே வருவதை நாம் பார்க்கிறோம். அது தலித்களில் மேட்டுக்குடியினரை உருவாக்கி, அவர்களை அரசில் ஒரு பகுதியாக உள்வாங்கிக் கொள்ளவும், அதற்கு இடமளிக்கவும் செய்திருக்கின்றது. மேட்டுக்குடி அம்பேத்கரியவாதிகள் அம்பேத்கரின் இட ஒதுக்கீட்டைப் பற்றிய தீவிரமான பிரகடனங்களை மூடி மறைக்கின்றனர்.

ஒன்றிய அளவிலும் மாநில அளவிலும் சட்டமியற்றும் அவைகளுக்காக நடத்தப்படும் தேர்தல்களில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கு அழைப்பு விடுத்தார் அம்பேத்கர். வெகுசிலரே இந்த உண்மையைக் குறிப்பிடுகின்றனர். ஏற்கனவே குறிப்பிட்டு வந்தவர்களும்கூட, தற்போது அதனை நிறுத்திக் கொண்டு விட்டனர். 1955-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் நடந்த பட்டியல் சாதிகள் கூட்டமைப்பின் அனைத்திந்திய மாநாட்டில் அம்பேத்கர் இதனைக் கூறினார். உண்மையில், மாநாட்டில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. (இந்தத் தீர்மானத்தின் நகல் எங்களிடம் இல்லை, அது சேகரிக்கப்பட வேண்டும். தகவல் தெரிந்தவர்கள் உதவவும்)

அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, முடிவாக, தாராபௌரி ஆக்ரா உரையின் அறிமுகத்தில் எழுதியதை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்:

“இந்த உரையில் அம்பேத்கர் தனது அனுபவங்களையும் எதிர்காலத்திற்கான தனது திட்டங்களையும் முன்வைத்துள்ளார்… உண்மையில் அது தலித் இயக்கத்தின் எதிர்காலத்திற்கான வழிகாட்டுதலாகும், ஆனால் தலித்துகள் அதனை மறந்துவிட்டார்கள் என்பதனை சொல்வதற்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது. இன்று தலித் சமூகம் அம்பேத்கரின் சாதியை அழித்தொழிப்பதற்கான திட்டத்திலிருந்தும் பௌத்தத்திற்கு மாறுவதிலிருந்தும் வெகுதூரம் விலகிவிட்டது. கொள்கையற்ற, சந்தர்ப்பவாத தலித் அரசியலானது சமூக மற்றும் மத இயக்கத்தினை பின்னுக்குத் தள்ளிவிட்டது.

இன்று தலித் சமூகமானது சாதி பிளவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பாபாசாகேப்பின் குழுவானது முன்னோக்கிச் செல்வதற்கு பதிலாக பின்னோக்கிச் செல்வதாகத் தோன்றுகின்றது. இது அனைத்து அம்பேத்கரியவாதிகளுக்கும் கவலை அளிப்பதாக இருக்க வேண்டும்.”

(Countercurrents.org தளத்தில் இதற்கு முன் வெளியான பல கட்டுரைகள் இந்தக் கட்டுரைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கும் தொகுப்பாளருக்கும் நன்றி)

ராமகிருஷ்ணன்

தமிழில்  கலாநிதி

Leave a comment