
மாந்திரிக எதார்த்தவாதம், தமிழ் இலக்கியம், தமிழ் சினிமா —————————————————————— மாந்திரிக எதார்த்தவாதம் லத்தின் அமெரிக்க இலக்கியங்களால் 1960-80 களில் புகழடைந்தது. 90 களில் தமிழகத்தையும் புயல் எனத் தாக்கியது. லத்தின் அமெரிக்க நாடுகளிலும் சரி இந்தியாவிலும் சரி தனித்துவமான நியாயம் இருந்தது. லத்தின் அமெரிக்க நாடுகள் தங்களது 5 நூற்றாண்டு அடிமைத்தனத்தையும் சுரண்டலையும் கொடுமையையும் தங்கள் சமகால வாழ்வின் பின்புலமாக அதன் சமகால பிரச்சினைகளின் ஊற்று மூலங்களாகக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அத்தோடு இந்தியாவிலெல்லாம் இருந்த அளவு கூட சுதந்திர எழுத்துரிமை இல்லாத நிலை இருந்தது. இந்தியாவைக் காட்டிலும் பரவலான எழுத்தறிவும் கல்வியும் பெற்ற மக்கள். இந்தியாவில் இன்றும் ஆங்கில வாசிப்பு என்பது பெருமளவு மேல்தட்டு, உயர் நடுத்தர உயர் கல்வி கற்றவர்களிடம் மட்டுமே இருக்கும் நிலை. அதிலும் ஆங்கிலத்தில் இலக்கியம் வாசிப்பவர்கள் சிறு கடுகளவுதான் இருக்கும். மாறாக பிரேஸிலில் போர்ச்சுகீஸியமும் ஏனையப் பெரும்பகுதியில் ஸ்பானிஷ் மொழியும் புழங்கு மொழி. எனவே ஐரோப்பிய இலக்கியம், அறிவுலக எழுத்துகள், ஜனநாயகக் கருத்துகள் ஆகியவை எளிதில் பெரும்பகுதி மக்களை அடையும் சாத்தியப்பாடு இருந்தது. வெகு மக்கள் உளவியல் என்பது பெரும்பாலும் இந்தியா, தமிழகம் அறிந்த மார்க்சிய, இடதுசாரி கருத்துகளில் முக்கியத்துவம் பெறாத ஒன்றுதான். இடதுசாரி, மார்க்சியக் கருத்துகள் அதிலும் குறிப்பாக கலை இலக்கியம் குறித்து பரவலாக அறிமுகமாகியுள்ள கருத்துகளை மார்க்சிய கலை இலக்கிய கருத்துகள் என்று சொல்வதே இந்த 21 ஆம் நூற்றாண்டு வெளிச்சத்தில் சற்று சிரமமாகத்தான் உள்ளது. அவை பெருமளவு ஸ்டாலின் – ஜாடனோவ் கருத்துகள்தான். தேசிய இனம் குறித்த தனது விளக்கங்களில் லெனின் தேசிய இனத்தின் சமூக உளவியல் குறித்து வலியுறுத்துவார். அத்தோடு உலகின் மாற்றங்களிலேயே மிகவும் மந்தமான வேகத்தில் நடக்கும் மாற்றம், ’மனோபாவ மாற்றம்’ என்பதையும் வேறு வேறு வார்த்தைகளில் கூறியிருக்கின்றார். இந்த கூறை இலக்கியத்தின் அடிநீரோட்டமாக ஆக்கும் திறன் மாந்திரிக எதார்த்தவாத இலக்கிய எழுத்திற்கு தூய எதார்த்தவாத இலக்கிய எழுத்தைக் காட்டிலும் எளிதாக கை வருவதாக உள்ளது. மேலும் இத்தகைய உளவியல் உருவாவதற்கான புறநிகழ்வுகளோடு இதனை பற்றவைப்பு தெரியாத இணைப்பாக எழுத்தில் கொண்டு வருவது அதனையும் அழகியலோடு சுருங்கச் சொல்லி உணரவைப்பது மாந்திரிக எதார்த்தவாத எழுத்திற்கு கை வந்த காரணத்தால் அது நின்றது. வெகு மக்கள் ஆதரவையும் பெற்றது. தூய எதார்த்தவாத எழுத்தில் இவையெல்லாம் சாத்தியல்ல எனக் கூற இயலாது என்பது உண்மையே. தஸ்தயேவுஸ்கியும், டால்ஸ்டாயும், ஷோலக்கோவும், ஜேம்ஸ் ஜாய்ஸும் இதனை வேறு வகையில் செய்துள்ளனர் என்றேக் கூற வேண்டியுள்ளது. ஆனால் மார்கோஸின் ஒரு பக்க எழுத்தில் ஒரே சமயத்தில் நம்மை வந்தடையும் ஒரு காட்சியின், நிகழ்வின், உணர்வின் அத்தனை பரிமாணங்களையும் அடக்கிய, அத்தனை வண்ணங்களையும் கொண்டிருக்கின்ற அத்தனை அடர்த்தியைக் கொண்டுவர அவர்கள் வால்யூம்கள் எழுதவேண்டியுள்ளது என்றே படுகிறது. இத்தகைய வளம் மாந்திரிக எதார்த்த எழுத்திற்கு நியாயத்தையும் வரவேற்பையும் அளிக்கின்றது. அதுவும் இந்த 20, 21 ஆம் நூற்றாண்டின் சிக்கலான புறச் சூழலையும் அக உணர்வுகளையும் இணைக்கும் பணியைச் செய்யும் திறன், அதன் இடத்தை இன்னும் திடமாக்குகின்றது எனலாம். தமிழகத்தில் இது அறிமுகம் ஆன காலங்களில் இடதுசாரி இலக்கிய வட்டங்களில் சந்தேகக் கண்கொண்டுதான் (அதேதான்… அந்த ஸ்டாலினிய-ஜாடனோவிச் கண்கொண்டேப் பார்க்கப்பட்டது). யாருக்கு எழுதுகிறீர்கள் தோழர்? யாருக்குப் புரியும் தோழர்? என்பது முதல் அது ஒரு பின் நவீனத்துவக் கோளாறாகப் பார்ப்பது என்பதே பெரிதும் அனுகுமுறையாக இருந்தது. பின் நவீனத்துவம் பற்றிய பார்வையுமே கோளாறாகத்தான் இருந்தது என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. பின் நவீனத்துவ நிலை என்பதையும் அந்த நிலை குறித்த கோட்பாடுகளையும் பிரித்து வேறு படுத்திப் பார்க்க தமிழக இடதுசாரி வட்டாரங்கள் கற்றுகொள்ளவில்லை. முதலாளித்துவத்தின் முற்போக்குக் கட்டமான நவீனத்துவம் குறித்து மார்க்ஸ் அளவிற்கு விதந்தோதியவர் எவரும் இல்லை. பின்னர் முதலாளித்துவம் வளர்ச்சி-மேம்பாடு நின்று அழுகல் நிலைக்கு வந்த பின்நவீணத்துவ கட்டம் குறித்து அவர் அளவிற்கு விளக்கி விமர்சித்தவர் எவரும் இல்லை. ஆனால் அந்த வேறுபாடுகளையும் உண்மையிலேயே காத்திரமான விமர்சனங்களையும் தமிழகத்தில் பின்நவீனத்துவத்தை விதந்தோதியவர்களும் சரி அதனை என்னவென்றே புரியாமல் தங்களுக்கு புரியாத, பிடிக்காத, உவப்பில்லாத கருத்துகள் அனைத்தின் மீதும் குத்தும் முத்திரையாகப் பயன்படுத்தியவர்களும் சரி புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் அவர்களைத் தவறு சொல்லுவது நியாயமில்லை. இங்கு சோவியத் சீர்குலைவு நடக்கும்வரை சோவியத் மார்க்சியம் தாண்டிய மார்க்சிய சிந்தனை ஏதும் அறிமுகமாகவில்லை. மேற்குலகில் சோவியத்தில் போல மார்க்சியம் தேங்கி நின்றுவிடவில்லை. அல்லது ஸ்டாலின் ஜாடனோவிச் திரிபுகளுக்கு ஆட்படாத புகாரின், லூனாசார்ஸ்க்கி, ஜார்ஜ் லூக்காஸ், எனர்ஸ்ட் ஃபிஷ்ஷர் போன்றோரின் பாரம்பரியம் இருட்டடிப்பு செய்யப்படவில்லை. அவை தொடராமல் மேலும் செழிப்பும் செரிவும் ஆழமும் அடையாமல் போய்விடவில்லை. ஃபிரெடரிக் ஜேம்ஸன், பெரி ஆண்டர்ஸன், டேவிட் ஹார்வி, அலெக்ஸ் காலிநிக்கோஸ் போன்றோர் எழுத்துகள் மார்க்சிய கலை இலக்கிய கோட்பாடுகளுக்கும் புரிதலுக்கும் கொண்டுவந்த முன்னேற்றங்கள் இங்கு அதிகம் அறிமுகம் ஆகவில்லை. எனவே அவை இடதுசாரி வாட்டாரங்களில் முன்னெடுக்கப்படவில்லை. மற்றவர்களைக் கேட்கவே வேண்டாம். அவை அந்த ‘தாம்பரத்தைத் தாண்டாத நாடகங்கண்க்கள்’ போல அழுகுணிச் சித்தர் எழுத்துகளாக மட்டுமே இருந்தன. இந்திய, தமிழக சூழலுக்கு லத்தின் அமெரிக்கா அளவிற்கு மந்திரிக எதார்த்தவாத எழுத்துகளுக்கான தேவைகள் இருக்கவேச் செய்கின்றன. ஐந்தாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட நாகரிகமும் இதில் வந்து போன கலாச்சாரங்களும் பண்பாடுகளும் அவை விட்டுச் சென்றுள்ள உளவியலும் இன்றும் நம்மிடம் தொழில் பட்டுக்கோண்டிருக்கின்ற நம் உள்ளத்தின் பின்புலம்தான். சிந்துசமவெளி நாகரிகப் பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட மாட்டு வண்டி பொம்மையின் அதே வடிவமைப்பில் இன்றைக்கும் மாட்டு வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கும் சாலைகள் நம் சாலைகள். அதே சமயம் வேறு ஒரு மூளையில் ஒரே சமயத்தில் 100 துணைக் கோள்களை பூமியிலிருந்து 36 ஆயிரம் கி.மீ தொலைவில் அவற்றுக்குண்டான தானத்தில் நிலைநிறுத்தும் விதமாக ராக்கெட்டுகள் ஏவப்பட்டுக் கொண்டிருக்கும் நாடு. ஒரு புறத்தில் இன்னும் விவசாயத்திற்கே வந்துசேராத தனியுடமையே இல்லாத வேட்டையும் மீன்பிடிப்பும் காய் கணி சேகரிப்பும் கொண்டு வாழும் ஜாரவா, செண்டினல் பழங்குடியினர் வாழும் நாடு. மறு புறத்தில் இங்கிலாந்தின் கார் கம்பெனிகளை, இங்கிலாந்து, உக்ரேன், இந்தோனேசியாவின் இரும்பு எஃகுத் தொழிற்சாலைகளை, ஆஸ்த்திரேலியாவின் நிலக்கரிச் சுரங்கங்களை வாங்க மூலதனத்தை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் உள்ள நாடு. உலகமெங்கும் ஆதிக்கம் வெறுமனே ஆள் அம்பு படைகளை மட்டுமே வைத்துக் கட்டிக் காக்கப்படுவது இல்லை. எல்ல இடங்களிலும் இருக்கும் ஏற்றத்தாழ்வையும் ஆதிக்கங்களையும் கட்டிக் காப்பதில் கருத்தியலுக்கு முக்கிய இடமுண்டு. ஆனால் உலகில் மற்ற இடங்களெல்லாம் ஆதிக்கத்தை குறிப்பாக நிலவுடமை ஆதிக்கம் ஏராளமான ரத்த சேதாரத்தோடும் கொடும் வன்முறையோடுமே கட்டிக் காப்பற்றப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் குறைவான வன்முறை, ரத்த சேதாரத்தோடு கட்டிக் காக்கப்பட்டுள்ளது. இங்கு கருத்தியலின் பங்கு அதிகம் என்பது பர்ட்டன் ஸ்டையின், ஆர்.சம்பகலக்ச்சுமி போன்ற ஆய்வாளர்களின் ஆய்வு முடிவு. எனவே இவை உருவாக்கும் புறச் சூழலும் அது உருவாக்கும் அகசூழலும் நீண்ட வரலாறும் நாகரிகமும் உருவாக்கியுள்ள பலவகையான உளவியல்களும் இணைந்து உருவாக்கும் பல் வண்ணச் சிந்திரங்களை ஒற்றைக் கேன்வாஸில் வரைவதற்கு மாந்திரீக எதார்த்த எழுத்து இயற்கையான நியாயமானத் தேர்வாக இருக்கின்றது. ஆனால் அதில் பயணிக்க முயல்பவர்களுக்கு ஏற்கனவே லட்சனக்கானவர் பல தலைமுறைகளாக நடந்தவர்களின் காலடி பதிந்து உருவான ஆயத்தப் பாதை இல்லை. இலக்கியத்தில் அந்த வகைபாட்டிற்கு நல்ல எடுத்துக்காட்டு என்றால் அது காபிரியல் கார்ஸியா மார்க்கஸின் ‘ ஒரு நூற்றாண்டுத் தனிமை’. இந்திய எழுத்தாளர் அல்லது இந்தியப் பின்புலம கொண்டு எழுதப்பட்டது என்றால் சால்மன் ருஷ்டியின் ‘நள்ளிரவுக் குழந்தைகள்’ நாவலைக் கூறலாம். முன்னதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வண்ணக் கலவைத் தட்டு கொண்டு மாறுபட்ட தூரிகை தீற்றல்களால் உருவானது என்றாலும் அதனைக் கூறலாம். அவை அளவு இல்லையென்றாலும் பொருட்படுத்திக் கூற முடிந்த படைப்புகள் என இந்திய தமிழ் படைகள் எதனையும் கூற முடியவில்லை. நிலமை இப்படி இருக்க திரைப்படம் என்றால் கேட்கவே வேண்டாம். சர்வதேச அளவிலேயே இலக்கியங்களில் தொழில்பட்ட நேர்த்தியோடு வந்த திரைப்படங்கள் என எதனையும் கேள்விப்பட்டதில்லை. தமிழில் அது போன்ற முயற்சிகள் என்றால் அது முன்னுதாரணம் அல்லாத முயற்சிகள்தான். முன்பு வந்த செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, இப்போது வந்துள்ள பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ ஆகியவை முன்னுதாரணங்கள் இல்லாத படைப்புகள்தான். இத்தகைய படைப்புகளுக்கு மிக ஆழமான வரலாற்றுப் புரிதலும் சமகால எதார்த்தம் பற்றிய புரிதலும் இன்றியமையாதவை. எதார்த்தம் என்பது கண்ணில் தெரிவது மட்டுமல்ல. அது காத்திரமான ஆய்வில் தெரிவதுதான். நம்முடையப் பார்வைப் புலம் மிகவும் குறுகிய வரம்புகளுக்குட்பட்டது. ஒரு கலைஞனின் சொந்த அனுபவங்கள் முக்கியமான இடுபொருள்தான்; அது ஒரு தூய எதார்த்தவாத கலைப் படைப்பிற்குப் போதுமானதாக இருக்கலாம். ஆனால் மாய எதேர்த்தப் படைப்பின் நியாயமே ஒரு பன்மைத்துவ அனுபவத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் நோக்கமே. அதற்கான முன் தயாரிப்போடு கலைஞன் இருக்க வேண்டும். அத்தோடு சமகாலச் சூழலில் இயங்கும் விசைகள் பற்றிய ஞானமும் அவற்றை கலையில் கொண்டுவரும் திறமையும் அவற்றை ஒரு கான்வாஸில், முழுமை என்பது பகுதிகளின் கூட்டல்களைக் காட்டிலும் மேலானது என்பதை நிறுவும் விதமாக கொண்டுவரும் அழகியல் திறனும் வேண்டும். ’ஆயிரத்தில் ஒருவன்’, ‘தங்கலான்’ இரண்டுமே சில கூறுகளில் மிகத் திறம்பட செய்துள்ளன; பல கூறுகளில் உள்ள போதாமை முழுமையை அதன் சாத்தியப்பாடுகளையும் சத்தியத்தையும் அடையவிடவில்லை. ஆயிரத்தில் ஒருவனை விட்டு விடுவோம். தங்கலானின் பிரச்சினை அதன் இயக்குநர் பா.ரஞ்சத்தின் வரலாற்று ஞானத்தின் போதாமை, அரசியல் புரிதலின் போதாமை ஆகியவற்றிலேயே தொடங்குகின்றது. திரைப்படப் பார்வையாளர்களின் உளவியலுக்கு முன்பே உருவாக்குபவர்களின் உளவியல் தொழில்பட ஆரம்பித்து விடுகின்றது.

எலிகளின் கண்களில் பூனைதான் உலகிலேயே மிகக் கொடுமையான விலங்கு. புற்களின் கண்களில் முயல்களும் மான்களும்தான் உலகிலேயே மிகக் கொடுமையான விலங்கு. அந்த உலகப் பார்வையிலிருந்து அவரும் விடுபட இயலவில்லை. ரஞ்சித் சில கூட்டங்களில் ராஜராஜ சோழன் பறையர்கள் நிலங்களைப் பிடுங்கி பிராமணர்களுக்கு குடுத்துவிட்டான் என்ற வரலாற்றுக்கு புறம்பான புகார்களோடு இருப்பவர் என்பதை வெளிப்படுத்தியவர்தான். தமிழகத்தில் நிலத்தில் தனியுடமை என்பது 10, 11 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு உருவானதுதான்; அது போல சாதி என்பது இன்றுள்ளமாதிரியான வடிவங்கொண்டது 12, 13 ஆம் நூற்றாண்டிலிருந்தான் என்பதை அறியவில்லை. பிராமனர்களுக்கும் அவர்கள் அளவு இல்லையென்றாலும் ஓரளவு ஏனைய சிலருக்கும் (குறிப்பாக சைவ வெள்ளாளர்களுக்கு – தொண்டை மண்டல முதலியார், காருகாத்த வெள்ளாளர் என்ற சாதிகளாக ஆன இரு சிறு எண்ணிக்கைகொண்ட சாதிகளுக்கு – மற்ற சிலருக்கு பிற்காலத்தில் முகலாய, நாயக்கர் அரசுகளில் அளிக்கப்பட்டது) என்பதே வரலாறு. இதில் நிலத்தை பிறரிடமிருந்து பிடுங்கிக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமிருந்ததில்லை. அளிக்கப்பட்டது உற்பத்தியில் அரசுக்கு அளிக்க வேண்டிய பங்கே; அல்லது அதில் ஒரு பகுதியே. நிலபிரபுத்துவம் என்பதே பல்லடுக்கு உடமை,உரிமை என்பதை ஒரு முக்கியமானக் கூறாகக் கொண்டதே. குடி நீங்கிய நிலதானம் என்பது சில இடங்களில் நடந்துள்ளது. ஆனால் உழுகுடிகள் வேறு இடங்களில் குடியேற்றப்பட்டு விவாசாய விரிவாக்கங்கள் என்பதோடுதான் இதனைப் பார்க்க வேண்டும். நொபுரு கரஷிமா, யா.சுப்பராயலு, ஆர்.சம்பகலட்சுமி, மே.து.ராசுக்குமார் போன்றோர் கல்வெட்டு, தாமிரப் பட்டயங்கள், இலக்கியச் சான்றுகளைக் கொண்டு இவற்றை நிருவியுள்ளனர். அதுபோல பௌத்தம் குறித்து இருக்கும் ஒரு முரட்டு நம்பிக்கை. சுய உரிமைக் கோரல்களுக்கு வெளியே எந்தவித சான்றும் இல்லாத பூர்வபௌத்தர் கருத்து. உபரி என்பது உருவான காலத்திலிருந்தே இருப்போர் இல்லாதார் நிலை உருவாகத் தொடங்கிய ஒன்றுதான் என்பதே தமிழக வரலாறு. இந்திய அளவில் டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.ஸர்மா போன்றோர் காட்டும் படம். இதில் தாங்கள் எல்லா வளமும் பெற்று எல்லா ஞானமும் பெற்று உண்மையான ஸுத்த பிராமனர்களாக இருந்ததவர்கள்; வேஷ பிராமணர், சூத்திரர் சூழ்ச்சியால் ஆண்ட சாதியினரான தாங்கள் பௌத்தத்தை ஒழிக்க வேண்டுமென்ற காரணத்தால் இழி நிலைக்குத் தள்ளப்பட்வர்கள் என்ற சதிக் கோட்பாட்டு நம்பிக்கைகள். அதற்கெல்லாம் சான்றில்லை என்று சொல்பவர்கள் எல்லாம் சாதி வெறியர்கள்; புற வரலாற்று, அக வரலாறு என்ற மும்போ ஜும்போவைக் கூறி அதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்பது போன்ற வரையறுப்புகள் கொண்டதாகத்தான் வரலாற்றுப் புரிதல் இருக்கின்றது. தமிழகத்தில் பிரச்சினைகள் உள்ளன. இந்தியாவில் எந்த இயக்கமும் சாதியத்தில் இருந்து முழுக்க விடுபட்டதெனச் சொல்ல இயலவில்லை என்பதெல்லாம் உண்மையே. ஆனால் எந்த விதத்தில் பார்த்தாலும் தமிழக நிலை அகில இந்திய நிலையைக் காட்டிலும் மேலானதுதான் எனும் எதார்த்தத்தை எற்க இயலாத உளவியல் மறுபுறம். படத்தின் மையமாக இருக்கும் கோலார் தங்கச் சுரங்கத்தின் தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் தமிழ் பேசும் தலித்துகள் என்பது உண்மைதான். அவர்களின் பிரச்சினை அது மட்டும்தானா? அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க யார் போராடினர்? அவர்கள் மத்தியில் செயல்பட்ட அந்த விசை எது? பௌத்தம் மட்டும்தானா? இந்த மாட்ரிக்ஸ் சட்டகத்தில் கதை மாந்தர்களை, நிகழ்வுகளை பொருத்தி ஒரு கலைப்படைப்பை உருவாக்கும் போது அதன் முழுமை சிதிலமானதாக பின்னமானதாக வந்துள்ளது. வாராது வந்த மாமணிதான் என்பதால் சுயசாதி அன்பர்களும் தமிழகத்தின் திராவிட இயக்க கருத்தியலின் எதிரிகளும் இதனையெல்லாம் கண்டும் காணாது புகழுரைகளை அள்ளி வீசலாம். அவை உண்மையை மறைக்க இயலாது. ரஞ்சித் உட்பட படத்தில் சம்பந்தப் பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் மிகவும் திறப்படச் செயல்பட்டுள்ளார்கள் என்பது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகின்றது. 100 கோடிக்கு மேலான பட்ஜெட் என்று சொல்லப்படுகின்றது. நடித்த கலைஞர்கள் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகன் எல்லோரும் கைகொடுத்துள்ளார்கள். விக்ரம் ஏற்கனவே நன்கு நிறுவப்பட்ட திறமைதான். புதிதாக என்றால் எல்லோரையும் கோலார் அழைத்துக் கொண்டு சென்றபின் அங்கு ஏமாற்றத்தை உணர்ந்தும் மற்றவர்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்கச் செய்யும் முயற்சிகளின் போது இதுவரை பார்க்காத விக்ரமைப் பார்க்கின்றோம். விக்ரம் இருக்கும் காட்சியில் தங்கள் திரை இருப்பை நிறுவது என்பதே பெரிய சவால்தான். பார்வதி, பசுபதிக்கு அது சாத்தியப்படுவது படத்திற்கு கூடுதல் பரிமாணங்களை அளிக்கின்றது என்றாலும் ஆச்சரியம் அளிக்கவில்லை,. ஆனால் மிகச் சிலக் காட்சிகளில் வந்தாலும் உக்கிரம், வலி, கம்பீரம் ஆகியவற்றில் மாளவிகா மோகன் விக்கிரமிற்கு போட்டியாக நின்றது எதிர்பார்க்காத சிறப்பு. இது போன்று பல சொல்லலாம். இன்று இத்தகைய சிறப்புகளுடன் தமிழ்த் திரைப்படங்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. பிரச்சினை அவற்றின் இறைச்சிப் பொருள்தான்; கதை, திரைக்கதை மற்றும் அவற்றின் அரசியல்தான். ஒரு மைய நீரோட்டத் திரைப் படத்தில் எந்த அளவு காத்திரமான அரசியல் இருக்க முடியுமென காட்டியவரை படம் தமிழ்த் திரை வரலாற்றில் பாய்ச்சல்தான். இந்தப் படத்தை அவர் ஒரு நேர்கோட்டுப் படமாக எடுத்திருக்க முடியாது. காரணங்கள் பல. ஒன்று அந்த பெரும் அரசியல் வரலாற்றுப் பின்புலத்தை அதில் சிறைபிடிக்க இயலாது. அவரது தவறான அரசியலை அதுபோன்ற நேர்கோட்டுப் படமாக எடுத்திருந்தால் அதற்கு ‘கவுண்டம்பாளையம்’ படத்திற்கு கிடைத்த மரியாதைதான் கிடைத்திருக்கும். மோசமான அரசியல் கருத்துக் கொண்டவர்கள் என்று நான் கருதினாலும் தங்கள் கலையில் அதனை வென்றவர்கள் இருக்கின்றார்கள். இங்கே அசோகமித்திரன், ஓரளவிற்கு ஜெயமோகன், லத்தின் அமெரிக்க இலக்கியத்தில் அக்டோவியா பாஸ், மரியா வர்கஸ் லோசா ஆகியோரைக் கூறலாம். தங்கள் அரசியலால் தங்கள் கலையைத் தோற்கடித்தவர்கள் என்றும் சிலரைக் கூறலாம். ஒரு விதத்தில் ஷங்கர், மணிரத்தினம் வேறொருவிதத்தில் இந்தப் படத்தில் பா.ரஞ்சித்.




Leave a comment