சினிமா கொட்டகை

” சினிமா கொட்டகை “.
 தமிழ்த்திரை சார்ந்த கட்டுரைகள் . சு.தியடோர் பாஸ்கரன் .காலச்சுவடு பதிப்பகம் .முதல் பதிப்பு 2018 . மொத்த பக்கங்கள் 150. விலை ரூபாய் 180.

இது ஒரு கட்டுரை புத்தகம் தமிழ் திரை சார்ந்த கட்டுரைகள் அடங்கிய புத்தகம் மொத்தம் கீழ்க்கண்ட தலைப்புகளில் 11 கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது.

1.தேவதாசிப் பாரம்பரியமும் ஆரம்பகாலத் தமிழ் சினிமாவும்

2. அசையும் படத்தின் ஆரம்பங்கள்

3. திரையரங்கும் சினிமாவும்

4. நினைவேக்கம்: தமிழ்ச்சினிமாவின் ஒரு பரிமாணம்

5. தமிழ்ச் சினிமா: ஒரு கதைச்சுருக்கம்

6. தமிழ்த் திரையில் ஷேக்ஸ்பியர்

7. சினிமா அழகியலும் ஆய்வும்

8. ராஜா தேசிங்கும் பாரதியும்: தமிழ்த்திரையில் வரலாறு

9. தமிழரும் அவர்தம் சினிமாவும்

10. சினிமாவின் ஆதாரசுருதி காட்சிப் பிம்பம்தான்: நேர்காணல்

11. தமிழ்த்திரையும் தணிக்கையும் .

இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு .சு. தியடோர் பாஸ்கரன் (பி. 1940)

     தாராபுரத்தில் பிறந்த பாஸ்கரன் உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger நூலைக் ‘கானுறை வேங்கை’ (காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். ஜோப் தாமஸின் The Chola Bronzes நூலை சோழர் காலச் செப்புப் படிமங்கள்’ (காலச்சுவடு 2021) என்றும் ராஜ் கௌதமனின் எட்டுத் தமிழ்க் கட்டுரைகளை The Dark Interiors (2022 சேஜ் & சமயா) என்ற தலைப்பிலும் மொழி பெயர்த்துள்ளார். வாழ்நாள் இலக்கியச் சேவைக்கான கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதை 2014ஆம் ஆண்டு பெற்றவர்.

     இசை, நடனம், நாடகம் போன்ற பாரம்பரிய நிகழ்கலைகள் போலல்லாமல், சினிமா முற்றிலும் தொழில்நுட்பத்தைச் சார்ந்த ஒன்று.
         அதுமட்டுமல்ல, இவற்றுள் மிகவும் இளையதும் சினிமாதான். ஆனால் ஆரம்பம்முதல் அரசும் அறிவுலகமும் கல்விப்புலமும் இதை உதாசீனம் செய்ததால் அதன் சிறப்பு இயல்புகள் சரியாகக் கவனிக்கப்படவில்லை. ஒரு சீரிய கலை வடிவம் ஒரு பொழுதுபோக்குச் சாதனமாக உறைந்துவிட்டது.

         இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தமிழ்சினிமாவின் சில பரிமாணங்களை அவதானிக்கின்றன. அத்துடன் மௌன யுகத்தின் நிர்ப்பந்தங்கள் எவ்வாறு தமிழ்த்திரையின் அம்சங்களை உருவாக்கின, பாட்டு – நடனம் நம் திரைப்படங்களில் பிரதானமாக இடம்பெற்றது எப்படி, இந்திய – தமிழக வரலாறு ஒரு திரைக்கதைச் சுரங்கம் போன்றிருந்தாலும் வெகுசில வரலாற்றுப்படங்களே தமிழில் உருவாக்கம் பெற்றிருப்பது ஏன் போன்ற கேள்விகளையும் இந்நூல் எழுப்புகின்றது.

      இன்று அழகியலிலும் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தமிழ் சினிமாவில் புத்தாக்கம் தெரிகின்றது. சில இயக்குநர்கள் சினிமா மொழியைக் கையாளுவதிலும், கதை சொல்லல் முறையிலும் ஒரு மேம்பாட்டைப் பதிவு செய்துள்ளனர். ஆயினும் ஒரு சமூகத்தின் சினிமாவிற்கு இயக்குநர்,தயாரிப்பாளர் மட்டும் பொறுப்பல்லர். திரைபற்றி எழுதுபவர்கள், படிப்பவர்கள், சிந்திப்பவர்கள் இவர்களுக்கும் பொறுப்பிருக்கின்றது என்பது இந்நூலாசிரியரின் நம்பிக்கை.

        முதல் கட்டுரையை படித்த உடனேயே ஒரு சந்தேகத்தோடு தான் படிக்க ஆரம்பித்தேன் .அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்துக் கொண்டே படித்தேன் .ஆனால் படிக்க படிக்க அவர் தந்த ஆச்சரியங்கள் ஏராளமானவை. நிறைய தரவுகளோடு நிறைய ஆராய்ச்சி மனப்பான்மையோடு சாட்சிகளோடு இந்த கட்டுரையை பதிவு செய்திருக்கிறார். தேவதாசி பரம்பரை அவர்களின் அர்ப்பணிப்பு அவர்களின் கலை பரிமாணங்களோடு அவர்கள் பிணைந்து இருந்த வாழ்வு எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கும் பொழுது ஆசிரியரின் கூற்று உண்மை என்றே தெரிகிறது .தேவதாசி பரம்பரை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்த பிறகு அவர்கள் பிழைப்புக்காக வேறு வழி நாடும்போதுதான் இந்த வழி அவர்களுக்கு தென்பட்டது .அவர்கள் இல்லை என்றால் பேசாப்படமோ அல்லது பேசும் படமோ இவ்வளவு சிறப்பாக அந்த காலத்தில் வேரூன்றுதல் செய்து இருக்க முடியாது என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளலாம் .எம் ஆர் சந்தான லட்சுமி, எம் எஸ் சுப்புலட்சுமி பெரிய மேளம் சின்ன மேளம் இசை வேளாளர்களின் புலப்பெயர்வு அந்த காலத்தில் ஏற்பட்ட விடுதலை இயக்க வரலாறு கலைஞர்கள் இசை வேளாளர்களாக ஆகி அரசியலுக்கும் நுழைந்த வரலாற்றையும் இந்த கட்டுரையில் வாசிக்க காணலாம் .காஞ்சிபுரம் எல்லப்பன் நட்டுவனார்,சி எஸ் ஜெயராமன் இவர்களின் உதாரணங்களோடு இந்த கட்டுரை சிறப்பு எய்துகிறது.

நட்டுவனார்களில் புலப்பெயர்வு

சினிமாவில் நடனம் இடம் பெற்றதால் பயிற்சியளிக்க ஆசிரியர்களின் தேவைபட்டது. இசைவேளாள நட்டுவனார்கள் கோவில் பணியிலிருந்த போது தங்கள் வீட்டிலேயே சிலம்புக்கூடம் என்றறியப்பட்ட நாட்டியப்பள்ளிகளை நடத்தி வந்தனர். இவர்கள் ஒரு சங்கம் போன்ற நட்டுவமேளா என்ற அமைப்பில் இணைந்திருந்தார்கள். ஆண்டுக்கு ஒருமுறை தஞ்சாவூரிலுள்ள நட்டுவன் சாவடி என்ற இடத்தில் நட்டுவனார்கள் கூடி தங்கள் கலை பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். கம்பெனி நாடகங்களில் நடனம் மிகக் குறைவு என்பதால் தேவதாசி ஒழிப்புச்சட்டம் வந்த பின் நட்டுவனார்கள் நாடகத்துறைக்குள் போகவில்லை. ஆனால் பேசும்படம் தோன்றிய பின் இவர்களுக்கு ஸ்டுடியோக்களில் வேலை கிடைத்தது. அது மட்டுமல்லாது, இந்தக் காலகட்டத்தில்தான் தேவதாசிகளின் சதிராட்டம், பரதநாட்டியமாகப் புதிய அவதாரம் எடுத்திருந்தது. இதைப்பற்றி ஒரு ஆய்வாளர் “தங்கள் எதிர்காலத்தைப்பற்றிக் கவலைப்பட்ட பல நட்டுவனார்கள் பட்டணத்துக்குப் புறப்பட்டனர். அங்கு பல மேல்தட்டுப் பெண்கள் நடனம் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டினர். அது மட்டுமல்ல வெள்ளித்திரை அவர்களை ஈர்த்தது. உள்ளே செல்ல முடிந்தவர்களுக்குச் செல்வம் கொட்டியது” என்று எழுதினார். நட்டுவனார்கள் கொண்டு வந்த நடனப் பாரம்பரியம் தமிழ்ச் சினிமாவில் இடம் பெற்றது. பலர் நட்டுவனார்களாக ஸ்டுடியோக்களில் பணியிலமர்ந்தனர்.

      தமிழ்த்திரையுலகில் பிரசித்தி பெற்ற நட்டுவனார் வி.ஏ. முத்துசாமிப் பிள்ளை தனது குரு வைத்தீஸ்வரன்கோவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் சென்னை வந்தார். கே. சுப்ரமணியத்தின் நிருத்யோதயா நடனப்பள்ளியில் முத்துசாமிக்கு வேலை கிடைத்தது. பல வகையான நாட்டிய பாரம்பரியங்களுக்கு இந்தப் பள்ளியில் இடமளிக்கப்பட்டது. இந்தக் கலவை நடனத்திற்கு ஓரியண்டல் டான்ஸ் என்று பெயரிடப்பட்டது. இந்தப்பள்ளியில்தான் சந்திரபாபு நடனம் பயின்றார். முத்துசாமிபிள்ளைக்கு ஸ்டுடியோக்களில் வேலை கிடைத்தது. சபாபதி (1941) படத்தில் அவரது பெயர் திரையில் காட்டப்பட்டது.

தமிழ்த் திரையில் ஷேக்ஸ்பியர்…

     நாடக முன்னோடி பம்மல் சம்பந்த முதலியார் மூலமாகத்தான் ஷேக்ஸ்பியர் முதன் முதலில் தமிழ் உலகில் நுழைந்தார். ஹாம்லெட் (தமிழில் இது அமலாதித்தன் ஆனது) போன்ற நாடகங்களை 1906ல் அவர் மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்கள், நாடக, திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மேடை மீதான அவரது வேட்கை, சென்னையில் தொழில்முறையல்லாத நாடகக் குழுவான சுகுண விலாச சபா 1891இல் உருவாகக் காரணமாயிற்று. (அதன் கட்டடம் இன்னும் அண்ணாசாலையிலுள்ள காஸ்மாபாலிட்டன் கிளப்புக்கு அருகில் இருக்கிறது.) வெகுமக்களை ஆதாரமாகக் கொண்ட, வணிகச் சார்புடைய நாடகக் குழுக்களிலிருந்து வேறு பட்டவர்கள் இதில் பங்கேற்றனர். சமூகத்தின் மேல்மட்டத்திலுள்ள வழக்கறிஞர்கள், அதிகாரிகள் கொண்ட குழு இதில் இருந்தது. சுகுண விலாஸ சபா மேடையேற்றிய ஹாம்லெட்டின் தமிழ் அவதாரமான மனோகராவில் நாயகனின் தந்தையான அரசன் வேடத்தில் முதுபெரும் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி நடித்தார்.

ஷேக்ஸ்பியரின் படைப்புகள் தமிழ்த்திரையில், மூன்று வகைகளில் உருவகப்படுத்திக் காட்டப் பட்டிருக்கின்றன. ஒன்று, கதையை முழுமையாகத் தழுவி எடுத்துக்கொள்வது. இரண்டாவது, புகழ்பெற்ற காட்சிகளை மட்டும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்வது. மூன்றாவதோ, நாடகத்தினைச் சுருங்கிய வடிவமாக்கித் திரைப்படத்தினுள் நுழைத்து
வைத்துக் கொள்வது.

1937இல் தமிழ் திரைப்பட முன்னோடி எல்லிஸ் ஆர் கங்கனின் இயக்கத்தில் வெளியான அம்பிகாபதி மூலமாகத்தான் ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கில பாடல் தமிழ் திரையினை எட்டி பார்க்கிறான் என்றெல்லாம் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

       ஒரு மரத்தினை பார்ப்பதற்கு முன்னால் அதன் வேர் இனி பார்க்க வேண்டும் ;வேர் தந்த விதையினை பார்க்க வேண்டும் .அதுபோலத்தான் சினிமா கலைக்குள் நுழைய வேண்டும் என்றால் சினிமா குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும்.

Leave a comment