அனைத்திற்கும் ஸ்டாலின் மீது பழி போடுவது வரலாற்றிரீதியாக மிகு எளிமைப்படுத்தல் ஆகும்

P k Rajan
2 December 1916

ஃபிடல் காஸ்ட்ரோ 90 வயதில் உலகெங்கும் இளைஞர்களின் ஆதர்சமாக இருந்து மறைந்துள்ளார். அவரது தாடி, அவரது ராணுவ உடை – மிலிட்டரி ஃபெட்டீக், தோற்றப் பொலிவு, அவரது துணிவு, உணர்ச்சிகரமான பேச்சு, அவரது சாகச வாழ்வு, உலகப் போலிஸ் சாம் மாமாவிற்கு எதிரான அவரது யுத்ததந்திரங்கள் எல்லாம் இணைந்து அவருக்கு இந்த நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தன. ஆனால் இவை எல்லாம் உண்மைதான் என்றாலும், அவர் இவற்றுக்கு மேலானவர். அவரது வெளிப்படையானதும் எதார்த்தமானதுமான கருத்துகள் அவர் குறித்த நன்மதிப்பைக் கட்டியமைத்தில் முக்கியமான பங்கு வகித்தது. அதற்கும் மேலாக அவரது மார்க்சிய-லெனினிய நோக்குநிலை. புரட்சிக்குப் பிறகு தாமதமாக சே, ரால் ஆகியோரின் செல்வாக்கால் கம்யூஸ்ட்டாக மாறியவர்தான். ஆனால் தாராளவாதமோ அல்லது வரட்டுவாதமோ அண்டாத ஓர் சர்வதேசப் பார்வையைக் கொண்டிருந்தார். அவரது  இந்தத் தெளிவு மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோரைத் தவிர அவரளவிற்கு வேறு உலகத் தலைவர் யாரிடமும் இல்லையெனலாம். அவர் 1992 இல் அளித்த நேர்காணலைக் கவனியுங்கள்.
—————————————————————————–
அனைத்திற்கும் ஸ்டாலின் மீது பழி போடுவது வரலாற்றிரீதியாக மிகு எளிமைப்படுத்தல் ஆகும்

எல் நியூவோ டையரியோ என்ற நிகரகுவா இதழுக்கு ஃபிடல் காஸ்ட்ரோ அளித்த நேற்காணல். 1992 ஜூன் 3 அன்று முதலில் வெளியாகியது.
—————————————————————————–

நேர்காணல் : தாமஸ் போர்ஹே
—————————————————————————–
தாமஸ் : சில நிகழ்வுகளைக் குறித்த ஓசைதான் வரலாறு என்றார் மாண்டேஸ்கு. ஆனால் சோசலிச நாடுகளின் வீழ்ச்சி, கியூபப் புரட்சியின் தொடர்வாழ்வு போன்ற சில வரலாற்று நிகழ்வுகள் வெறும் ஓசை அல்ல. ஆனால் நீங்கள் வரலாற்றில் வீழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள் எனச் சொல்லலாமா?

ஃபிடல் : எளிமையாக சொன்னால், சோசலிச முகாம் வீழ்ச்சியுற்ற போதும் நாங்கள் எங்கள் பாதையில் பயணத்தைத் தொடர முடிவுசெய்தோம். இப்போது நாங்கள் ஏகாதிபத்தியத்திய தாக்குதலின் ஒரே இலக்காக ஆகியுள்ளோம் என்பது ஒரு முக்கியமான வரலாற்று நிலை. சோசலிச முகாமின் வீழ்ச்சி, சோவியத் யூனியனின் தகர்வு ஆகியவற்றை தொடர்ந்தும் கியூபா தனது பாதையில் பயணத்தைத் தொடரவும் அதனால் ஏற்படும் அபாயங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள முடிவெடுத்தது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வுதான்.
நாங்கள் இதுவரை என்ன செய்தோம் எந்த அளவு தாங்கி நிற்கும் திறன் கொண்டவர்கள் என்பது முக்கியமில்லை, தாமஸ். இதுவரை நாங்கள் செய்ததன் முக்கியத்துவம் இனி வரும் காலத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படும்.

தாமஸ் : உங்களுக்கு அதில் மிகவும் நம்பிக்கை உள்ளது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. எனக்கும் அதில் நம்பிக்கை உள்ளது. அப்படியென்றால் கியூபப் புரட்சி உலக அளவில் சோசலிசத்தின் புத்துயிர்ப்பிற்கு ஒரு தொடக்கமாக இருக்குமா?

ஃபிடல் :  உலகில் குழப்பம் நிலவும் இன்றைய சூழலில் மிகவும் மதிப்பு வாய்ந்த சில விழுமியங்களைக் காத்து நிற்கும் அசாதாரனமான போராட்டத்தில் இருக்கின்றோம் என நான் நம்புகின்றேன். இது சந்தர்ப்பவாதிகளுக்கு நல்ல நேரம். பல அரசியல்வாதிகளும் தங்களை இந்த சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டுள்ள நேரம். இது ஏகாதிபத்தியத்தின் அரசியல் மற்றும் ராணுவ அதிகாரம் உச்சத்தில் உள்ள காலம்,
மானுடம் எந்தவோரு காலத்திலும் இந்த அளவு பிற்போக்குத்தனமும் சாம்ராஜ்ய விரிவாக்கத்தையும் சந்திக்காத காலம். ஆனால் இதற்கு இது இப்படியே முடிவின்றி தொடரும் என்று அர்த்தமில்லை.அந்த சாம்ராஜ்யம் அதன் அணைத்துவிதமான முரண்பாடுகளால் அரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் நிகழ்காலத்தில் வாழ்பவர்களாக இருக்கின்றோம். மானுடத்தின் நலனில் அக்கரைகொண்ட எல்லா மனிதருக்கும் மிகவும் முக்கியமான விழுமியங்களை நாங்கள் காத்து நிற்கிறோம் என நான் நம்புகின்றேன். அடையாளங்கள், கொடி போன்றவை மிகவும் முக்கியமென நாம் நம்புகின்றேன்; எப்போதும் நம்பி வந்துள்ளேன். நாங்கள் ஒரு தனித்து விடப்பட்ட தீவாக ஆனாலும் அவை மிகவும் பெருமதியுடையவையாகத்தான் இருக்கும். எங்கள் நாட்டை ஆக்கிரமிக்க முற்படும்போது நாங்கள் அதனை கடைசி வரை எதிர்த்து நின்றால் அது மிகவும் பெருமதி உடையதாகவே இருக்கும். நாங்கள் தாங்கி நிற்க இயலுமென்றால்- நாங்கள் தாங்கி நிற்போம் என்றுதான் நம்புகின்றேன். ஏனென்றால் போராடும் உறுதியுடன் நிற்கும் லட்சக் கணக்கான மக்களை யாரும் அழித்துவிட முடியாது. அப்படி தாங்கி நின்றால் அதுவும் பெருமதி உடையதாக இருக்கும்.

தாமஸ் : சமீபத்தில் நீங்கள் சோசலிசம் பற்றி பேசும்போது – பொதுவாக சோசலிசம் பற்றி அல்ல, சோவியத் சோசலிசம் பற்றிப் பேசும்போது, சோசலிசம் படுகொலை செய்யப்பட்டது; முதுகில் குத்தப்பட்டது என்று கூறியுள்ளீர்கள். கொலைக் கத்திகள் மூலம் நடந்த படுகொலையில் கோப்பசேவும் ஒரு கொலைகாரரா?

ஃபிடல் : இல்லை. கோர்பசேவ் குறித்து நான் அப்படிக் கூற இயலாது. கோர்ப்பசேவ் குறித்து எனக்கு ஒரு பார்வை உள்ளது. ஆனால் அது கோர்ப்பசேவை சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்காகத் திட்டமிட்ட ஒரு கொலைகாரர் என்பதாக இல்லை.

சோவியத் யூனியன் நம்பமுடியாத வகையில் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டது. அப்படித் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டதன் பொறுப்பு சந்தேகத்திற்கிடமில்லாமல் அதன் தலைவர்களை குறிப்பாக நாட்டை வழிநடத்திய தலைவர்களையேச் சாரும். சிலருக்கு தாங்கள் நாட்டை அழித்துக்கொண்டிருக்கின்றோம் என்பது தெரியும். சிலருக்குத் தெரியாது. கிட்டத்தட்ட இதனைத்தான் நான் கூறினேன். இதனை எல்லாம் நாங்கள் ஆரம்பத்திலேயே கவனித்து விட்டோம்.

கோர்ப்பசேவ் சோவியத் யூனியனின் அழிவு குறித்து தெரிந்து தனது பணியை ஆற்றினார் என நான் கூறமாட்டேன். கோர்ப்பசேவ் சோசலிசத்தை மேம்படுத்த போராட முனைந்தார் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை.

சோவித் யூனியனின் சோசலிசத்தை மேம்படுத்துவதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகளை நாங்கள் அங்கீகரிக்கவே செய்தோம். ஆனால் நாங்கள் ஒரு போதும் சோவியத் சோசலிசத்தை மட்டுமல்லாது சோவியத் யூனியனையே அழிப்பதற்கு ஆதரவு தர முடியாது ஆதரவு தரவில்லை. அது உலகின் சகல பகுதி மக்களின் மீதும் மோசமான விளைவுகளைச் சுமத்தியுள்ளது. குறிப்பாக மூன்றாம் உலக மக்களுக்கு பெரும் பாதகங்களை ஏற்படுத்தியுள்ளது.

சோவியத் யூனியன் தனைத்தானே மாய்த்துகொள்ளும் செயலில் ஈடுபடவில்லையென்றால், நாட்டின் அரசியல், அரசாங்கக் கொள்கைகளுக்கான யுக்திகளை வகுக்கும் பொறுப்பாய் இருந்தவர்கள் அதனை அழிக்கும் செயலில் ஈடுபடவில்லையென்றால் ஏகாதிபத்தியம் அதனை அழித்திருக்க முடியாது. வேறுவிதமாகச் சொன்னால் சோசலிசம் இயற்கை மரணம் அடையவில்லை; அது தற்கொலை செய்துகொண்டது; அது கொலை செய்யப்பட்டது. அதனைத்தான் நான் கூறினேன்.

தாமஸ் : ஃபிடல், பெரும்பான்மையான லத்தீன் அமெரிக்கப் புரட்சியாளார்களைப் பொருத்தவரை, சோசலிசத்தின் தற்போதைய நெருக்கடிக்கு மூலகாரணம் ஒருவர்தான்; அது ஜோசப் ஸ்டாலின்.

ஃபிடல் : ஸ்டாலின் பெரும் தவறுகளை இழைத்துள்ளார். ஆனால் அதே சமயம் மிகுந்த ஞாணத்துடனும் செயல்பட்டுள்ளார் என நான் நம்புகின்றேன்.

சோவியத் யூனியனில் நடந்த அனைத்திற்கும் ஸ்டாலினைக் குற்றஞ்சாட்டுவது வரலாற்றுரீதியாக மிகு எளிமைவாதம். ஏனென்றால் ஒரு மனிதன் தான்மட்டும் தனியாக சில சூழல்களை உருவாக்க முடியாது. இது ஒருகாலத்தில் சோவியத் யூனியன் சாதித்த அனைத்திற்கும் ஸ்டாலின்தான் காரணம் என்று சொல்வதுபோலத்தான். அது சாத்தியமில்லை. லட்சோப லட்சம் மக்களின் கடும் முனைப்புதான் சோவியத்தின் வளர்ச்சிக்குக் காரணம்; உலகின் கோடானு கோடி மக்களின் மக்களின் நலனுக்கு ஆதரவாக சோவியத் யூனியன் பங்காற்றியதற்கு காரணம்.

நான் ஸ்டாலினை பல்வேறு அம்சங்களில் விமர்சித்துள்ளேன். முதன்மையாக சோசலிச நீதிமுறையை துச்சமாக மீறியதற்காக நான் விமர்சித்துள்ளேன்.

ஸ்டாலின் மிக மோசமான அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளார் என நான் நம்புகின்றேன். ஆரம்பத்திலிருந்தே நான் உறுதியாக இந்தக் கருத்தைக் கொண்டிருந்தேன்.

ஸ்டாலினின் விவசாயக் கொள்கை நிலத்தை படிப்படியாக சமூக உடமையாக்கும் நிகழ்வுப் போக்காக வளரவில்லை. நிலத்தை சமூகஉடமையாக்கும் திட்டம் முன்னரே ஆரம்பிக்கப்பட்டு நிதானமாக மெல்ல மெல்ல நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். அது மிகவும் வன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டதால் சோவியத் யூனியன் மிகக் குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான பொருளாதார, மானுடஉயிர் விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது.

மேலும் ஸ்டாலின் உலகப் போருக்கு முன்பு கடைப்பிடித்த கொள்கைகள் முழுக்க முழுக்கத் தவறானவை என்று நான் கருதுகின்றேன். ஒரு பேரழிவு சக்தியாக மாறும்வரை, உண்மையிலே ஒரு பெரும் அபாயமாக மாறும்வரை ஹிட்லரை மேலை நாடுகள் வளர்த்துவிட்டன என்பதை யாரும் மறுக்க இயலாது. ஹிட்லருக்கு எதிராக பலமான நடவடிக்கைகளை எடுக்காமல் நின்றன என்பதை யாரும் மறுக்க இயலாது.இது ஹிட்லரின் நாடு பிடிக்கும் முயற்சிகளை ஊக்குவித்தது. அதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை நாம் என் வாழ்நாள் எல்லாம் விமர்சிப்பேன். ஏனென்றால் அது மிக மோசமான வகையில் கொள்கைகளை மீறுவதாகும்: அதாவது எந்த விலைகொடுத்தாவது ஹிட்லருடன் சமாதானத்தை வாங்குவது அதன் மூலம் சிறிது காலத்திற்கு ஹிட்லரை தடுத்து நிறுவது எனும் எண்ணம்.

எங்களுடைய புரட்சிகாலத்தில், கியூபப் புரட்சியின் நீண்ட வரலாற்றில் நாங்கள் ஒருபோதும் காலத்தை வாங்குவதற்காக கொளகைகளை விட்டிக் கொடுத்தது இல்லை. ஒரு கள வசதிக்காக கொள்கையை விட்டுக் கொடுத்தது இல்லை. ஜெர்மன் அரசு டான்ஸிக் பகுதியைக் கோரிக்கொண்டு இருந்தபோது ஸ்டாலின் அந்த புகழ் பெற்ற மோலட்டோவ்- ரிப்பண்டிராப் ஒப்பந்தத்திற்காக கீழிறங்கினார்.

ஆனால் (போர் தயாரிப்புகளுக்காக சோவியத் யூனியனுக்கு மொ-பெ)காலத்தைப் பெற்றுத் தருவதற்குப் பதிலாக அந்த ஒப்பந்தம் போர்க் காலத்தைச் விரைவு படுத்தியது. ஏனென்றால் போர் எப்படியும் மூண்டுவிட்டது என்று நான் கருதுகின்றேன். ஸ்டாலின் மேலும் ஒரு பெறும் தவறை போலந்தில் இழைத்தார். போலந்து ஹிட்லரின் படைகளால் தாக்கப்பட்டபோது அவர் போலந்தில் உக்ரேனியர்களோ அல்லது ரசியர்களோ – யாரென எனக்கு சரியா நினைவில்லை இல்லை- வாழ்ந்த பகுதியை ஆக்கிரமிக்க படைகளை அனுப்பினார்.

மேலும் ஃபின்லாந்திற்கெதிரான யுத்தமும் ஒரு மோசமான தவறாகும். ஏனெனில் சர்வேதச சட்டம் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் அது தவறான நடவடிக்கை ஆகும்.

ஸ்டாலின் இழைத்த தொடர் தவறுகள் உலகின் பெரும்பகுதியால் விமர்சிக்கப்பட்டன. ஆனால் இது சோவியத் யூனியனின் நண்பர்களான கம்யூனிஸ்ட்டுகளை மிகவும் தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளியது. ஏனெனில் அவர்கள் தங்களது நண்பனான சோவியத் யூனியன் செய்யும் அனைத்தையும் ஆதரிக்க வேண்டியிருந்தது.

இவற்றை நாம் விவாதிப்பதால் நான் உங்களிடம் கூறவேண்டியுள்ளது. நான் இது குறித்து இதுவரையில் எந்தவோரு பத்திரிக்கையாளருடனும் விவாதித்தது இல்லை.

நான் கூறியுள்ள இவை அனைத்தும் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் எதிரானவை மட்டுமல்ல அவை அரசியல் ரீதியாகவும் புத்திசாலித்தனமான செயல்கள் அல்ல. 1939 ஜூன் முதல் 1941 செப்டம்பர் வரையிலான ஒரு ஆண்டு ஒன்பது மாதங்களில் சோவியத் யூனியன் தன்னை வலுப்படுத்திக் கொள்ள முடிந்தது என்பது உண்மைதான். ஆனால் இந்தக் காலத்தில் ஹிட்லர்தான் அதிகம் வலுப்படுத்திக் கொள்ள முடிந்தது.

1939 ஆம் ஆண்டு ஹிட்லர் சோவியத் யூனியன் மீது போர் தொடுத்திருந்தால் 1941 ஆம் ஆண்டு ஏற்படுத்திய அளவு நாசத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. நெப்போலியனுக்கு நடந்தது ஹிட்லருக்கும் நடந்திருக்கும். முறை சாராப் போரில் சோவியத் யூனியன் ஹிட்லரை வென்றிருக்கும்.

இறுதியாக ஸ்டாலினது உளப்பாங்கு. எல்லோர் மீதும் அவர் கொண்டிருந்த கடும் அவநம்பிக்கை அவரை பல தவறுகளை இழைக்க வைத்தது. அவற்றில் ஒன்று அவர் ஜெர்மனியின் சூழ்ச்சியை நம்பி சோவியத் ராணுவத்தில் நடத்திய குறுதி கொட்டிய களையெடுப்பு நடவடிக்கை. இது போர் மூளும் தருணத்தில் கிட்டத்தட்ட சோவியத் ராணுவத்தின் தலைமை முழுவதையும் கொன்று அழித்தது.

தாமஸ் : ஸ்டாலினது நேர்மறையான அம்சங்கள் என எவற்றைக் கருதுகின்றீர்கள்?

ஃபிடல்: அவர் சோவியத் யூனியனின் ஒற்றுமையைக் கட்டிக் காத்தார். அவர் லெனின் ஆரம்பித்து வைத்த கட்சியின் ஒற்றுமையை திடப்படுத்தினார். அவர் சர்வதேச புரட்சி அமைப்புகளுக்கு ஒரு புதிய உத்வேகம் அளித்தார். சோவியத் யூனியனின் தொழில் மயமாக்கும் நடவடிக்கை ஸ்டாலினது சிறப்பான கொடை. சோவியத் யூனியன் எதிர்த்து நிற்கும் வல்லமை பெற்றது அதன் மூலம்தான் என நான் கருதுகின்றேன்.

ஸ்டாலின் – மற்றும் அவரை ஆதரித்த அவரது சகாக்களின் – ஆகப் பெரும் சாதனை போருக்கு முன்னர் அவர்கள் ராணுவ உற்பத்திச் சாலைகளையும் முக்கியமான தொழிற்
சாலைகளையும் (மேற்கே ஐரோப்பியப் பகுதியிலிருந்து– மொ-பெ) சைபீரியாவிற்கும் சோவியத் யூனியனின் உட்பகுதிக்கும் மாற்றியது ஆகும்.

ஸ்டாலின் போரின்போது சோவியத் யூனியனை திறம்பட வழிநடத்தினார் என்று நம்புகின்றேன். ஜெனரல் ஜூக்கோ உள்ளிட்ட சோவியத் யூனியனின் திறமைமிகு ராணுவத் தளபதிகள் ஸ்டாலின் போரின் போது சோவியத் நாட்டைக் காத்ததிலும் நாஜிப்படைகளைத் தோற்கடித்ததிலும் மிக முக்கியமான பங்கு வகித்தார் என்பதை அங்கீகரித்துள்ளனர்.

ஸ்டாலின் குறித்து ஓர் விருப்பு வெறுப்பற்ற ஆய்வு வேண்டும். நடந்த அனைத்திற்கும் அவர்  மீது குற்றஞ்சாட்டுவது வரலாற்றை மிகு எளிமைப்படுத்துவதாகும்.

First Published: El Nuevo Diario, Managua, 3 June 1992
Source: Castro Speech Database
Markup: John Wagner
Online Version: Castro Internet Archive (marxists.org) 2002
Castro Internet Archive

Leave a comment