

Ravi Buby
என் தந்தை விடைபெற்றபோது அவர் வாசித்துக் கொண்டிருந்தது ‘வேதங்களின் நாடு’ என்ற அவரது நூலே.
கே.ஏ.எஸ் எழுதிய தாயகத்தின் ஆசிரிய தலையங்கங்களை வெளியிட்டபோது , அவை இன்றைய அரசியல், சமூகக் காலகட்டத்துடன் பொருந்திப் போயிருந்தது.
இ.எம்.எஸ் என்ன சொல்லியிருப்பார் என வாசிக்க ஆரம்பித்தேன். அது இணையப்பதிவு எதிலும் காணமுடியவில்லை. கோமலும், சுபமங்களாவும் என் மலையக வாழ்வுடன் பிணைந்தது.பல மறக்கமுடியா நினைவுகள்.

அந்த நேர்காணலைப் பகிர்கிறேன். இனி உங்கள் பார்வைக்கு,
ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூரிப்பாடு (Elamkulam Manakkal Sankaran Namboodiripad),
(13 சூன் 1909 – 19 மார்ச் 1998), பரவலாக ஈ.எம்.எஸ் (EMS) என அறியப்படுபவர், இந்திய பொதுவுடமைத் தலைவரும், முதல் கேரள முதலமைச்சரும் ஆவார். இளவயதிலேயே தமது நம்பூதிரிப்பாடு இனத்தில் நிலவிய சாதி மற்றும் பழமைவாதங்களுக்கு எதிராக போராடினார். இவரே விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் காங்கிரசல்லாத முதலமைச்சர். இவரது சோசலிசக் கொள்கைகளுக்காகவும் மார்க்சிய கொள்கைகளுக்காகவும் இன்றுவரை பெரும் உதாரணத் தலைவராக இருக்கிறார்.
இ.எம்.எஸ்.நம்பூதரிபாட் அவர்களுடன் ஒரு நேர்காணல்
இலக்கியம் என்பது சமூக விமரிசனமே …..
************************************
கோமல் : டெல்லியில் அது எனக்கு சிரமமாக இல்லை. இ.எம்.எஸ். நம்பூதரிபாட் அவர்களுடன் ஒரு நேர்காணல் ஏற்பாடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அலுவலகத்தில் கேட்டுக் கொண்டவுடன், அவர்கள் அடுத்த நாளே நான் சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். ஜனபாத்தில் அவர் இல்லத்தில் அவரை சந்தித்தேன். நிகழ்ச்சியில் ‘பிறவி’ பட இயக்குனர் ஷாஜி.என் கருணும் உடன் இருந்தார்.
இ.எம்.எஸ்.என்பதைத் தாண்டியவர் இருப்பினும் மிக உற்சாகத்துடன் பேட்டியளித்தார். எனது கேள்விகள் கலை இலக்கியம் சம்பந்தப் பட்டதாகவே இருந்தது.
01. கலை இலக்கிய உலகில் குறிப்பாகக் கேரளத்தில் இடதுசாரி இயக்கங்களின் பங்கு என்ன?
இ.எம்.எஸ் : இடதுசாரி இயக்கங்களின் பங்களிப்பினைப் பற்றிக் கூறுவதற்கு முன் அதற்கு முன்னோடியான சமூக சீர்திருத்த இயக்கம் பற்றியும் கூறியாக வேண்டும். கேரளத்தில் இந்த சமூக சீர்திருத்த இயக்கத்தின் பிதாவாக ஸ்ரீ நாராயண குருவைச் சொல்லலாம். அவர் கேரளத்தில் பல படைப்பாளிகளுக்கு ஊக்க சக்தியாக இருந்தார். சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தி, இலக்கியம் படைக்க அவர் செல்வாக்கே காரணம். குமரன் ஆசான் நாராயண குருவைப் பின் பற்றியவர். இசைநயம் மிகுந்த கவிதைகளை எழுதுவதில் அவரை மிஞ்சக் கூடியவர் எவரும் இல்லை. அவைகளை நவீனத்துவம் என்று கூற முடியாவிட்டாலும் பாரம்பரிய கவிதை மரபில் அழகான காதல் கவிதைகளை அவர் எழுதினார். ஆனால் ஒருசில கவிதைகளை புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்ட வைகளை இருந்தன.
‘மாப்ள கலவரம்’ என்று அழைக்கப்படும் விவசாய போராட்டத்தின் போது ஒரு நம்பூதரிப் பெண் தப்பியோடி ஒரு ஹரிஜன் இல்லத்தில் அடைக்கலம் சேர்கிறான். பின்னர் அந்த இளைஞனையே திருமணம் செய்து கொள்கிறாள். இந்தக் கவிதையை கேரளத்தின் முற்போக்கு இலக்கியத்திற்கு முதற்படி என்று நான் கூறுவேன். எழுபது வருடங்களுக்கு முன்னால் இது எழுதப்பட்டது. “தூரவஸ்த” என்ற அந்தக் காவியத்தின் முன்னுரையில் குமரன் ஆசான் கூறுகிறார் இது முற்றிலும் மாறுபட்ட கவிதை. கேரள சமுதாயம் அங்கீகரித்துள்ள வாழ்க்கை முறைகளுக்கு முரண்பட்டது. ஆனால் வெற்றி என்பது பல தோல்விகளுக்குப் பின்னரே சாத்தியமாகிறது.’’
02. அவர் சமூக இயக்கங்களின் எதிலும் பங்கு கொண்டாரா?
ஆம், ஈழவர்களின் (கேரளத்தின் பிற்படுத்தப்பட்டோர்) சமூக சபைக்கு அவர் பொதுச் செயலாளராக இருந்தார். 1942 -ல் ஒரு படகு விபத்தில் காலமானார்.
03.ஆசானுக்கு முன்பு மலையாள இலக்கியம்…..?
1889-ல் சந்துமேனன் எழுதிய ‘இந்துலேகா’ என்ற நாவலிருந்து மலையாள நவீன இலக்கியம் தோன்றியது எனக் கூறலாம்.
04. கேரளத்தில் தோன்றிய அரசியல் நாடகங்கள் பற்றி?
நம்பூதரி இனத்தின் இடதுசாரி முற்போக்கு இளைஞர்கள் ஒன்றுகூடி பல நாடகங்களை மக்கள் முன் அரங்கேற்றினர். அதில் ஒரு நாடகம் ‘சமையல் கட்டிலிருந்து மேடை வரை’ என்ற நாடகம். அதில் நானும் நடித்துள்ளேன். இந்த இடதுசாரி இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பும் காங்கிரஸ் இயக்கத்தில் நாங்கள் ஈடுபட்டிருந்தபோது அன்னிய ஆட்சியை எதிர்த்து பல நாடகங்கள் மேடையேறின. ஆனால் என்னைப் பொறுத்தவரை தாமோதரன் எழுதிய ‘வாடகை பாக்கி’ என்ற நாடகமே சக்திவாய்ந்த முதல் அரசியல் நாடகம் என நான் கூறுவேன். இந்த நாடகம் கேரள விவசாய இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது. தோழர் கே.ஏ.கோபாலன் கூட இதில் நடித்துள்ளார். தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் பற்றிய அவருடைய ‘ரத்த பானம்’’ என்ற நாடகமும் பிரசித்தி பெற்றது.
05.கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்குக் கலை இலக்கியங்களின் பங்கு என்ன?
1930 -ல் நாங்கள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியைத் துவக்கினோம். அந்தக் கட்சியின் செயற்திட்டங்களில் ஒன்று நூலக இயக்கம். ஒவ்வொரு கிராமங்களிலும் மக்கள் படிப்பதற்கு செய்திப் பத்திரிகைகளும் நல்ல நூல்களும் வாங்கி இந்த நூலகத்தில் வைத்தோம்.
அதுதவிர முதியோர் கல்வி வகுப்புக்கள் பல இடங்களில் நடத்தினோம். இந்த இயக்கங்கள் ஒரு கலாச்சார இயக்கமாக உருவெடுத்து பின் அரசியல் இயக்கமாக மாறியது. பின்னர் உருவெடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேர்களாக இவை இருந்தன.
06. கேரளத்தில் ‘இப்டா’ வின் பங்கு என்ன?
‘இந்திய மக்கள் நாடகக் கழகமான ‘இப்டா’ (I.P.T.A. Indian People’s Theatre Association) என்பது பெரிய அளவில் இயங்கியதாகக் கூற முடியாது. ஆனால் ‘இப்டா’ என்ற பெயரில் இயங்காவிட்டாலும் அதனுடைய குறிக்கோளையும் அமைப்பு முறைகளையும் கையில் எடுத்துக் கொண்டு பல தனிப்பட்ட அமச்சூர் குழுக்கள் சக்தி வாய்ந்தவைகளாக அந்தக் கால கட்டத்தில் இயங்கின. ஆனால் அவை செழுமைபடுத்தப்பட்ட நாடக மேடை என்ற கூறமுடியாது. அந்த நாடகங்களில் கலை அம்சம் என்பது கவனிக்கப் படாததாக இருந்தது. ஆனால் இந்தக் குறை தோப்பில் பாசியினுடைய கே.பி.ஏ.ஸி. கேரள மக்கள் கலைக்குழுவின் நாடகங்களினால் தீர்க்கப்பட்டது. தோப்பில் பாசியின் ‘நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள்’ என்ற நாடகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அந்த நாடகங்கள் எல்லாம் இடதுசாரி இயக்க வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.
07. நாவல் இலக்கியம் பற்றி … ?
இந்துலேகா எழுதப்பட்ட பின் ஐம்பது வருடங்கள் வரை மலையாள நாவல் இலக்கியம் முளைவிடவில்லை, பெரிய தேக்கம் இருந்தது. 1930-களில் தகழி, கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி பஷீர் போன்ற படைப்பாளிகள் தோன்றினர். மலையாள இலக்கியத்திற்கு ஆதர்சமாக சில நாவல்களை எழுதினர்.ஆனால் அந்த நாவல்கள் இப்போது உள்ளது போல தொடர் கதையாக வெளிவரவில்லை. புத்தகங்களாக வெளிவந்தன. அன்றுதொட்டே நாவல் இலக்கியம் பலமுகங்களாக வளர்ந்து வருகிறது.
08.ஒரு அரசியல் கட்சியின் கட்டளைப்படி இலக்கியங்கள் படைக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?
நிச்சயமாக முடியாது. இலக்கியம் படைப்பது என்பது தனிப்பட்டவர்களின் இயங்கு சக்தி ..எப்படிப் படைக்க வேண்டும், எதை எழுத வேண்டும் என்பதெல்லாம் எழுத்தாளனுடைய தனிப்பட்ட உரிமை; அதுவே அவனுடைய தனித்துவம் கூட! எந்தக் கட்டுப்பாடும் அந்த தனித்துவத்தை அழித்து விடக் கூடாது.
ஆனால் கட்சி சார்புள்ள எழுத்தாளர்களுக்கு கட்சி சில வழிமுறைகளை எடுத்துக்கூறுகிறது. மார்க்சிம் கார்க்கிக்கு லெனின் எழுதினார் “உங்கள் கருத்தை வெளிப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள உருவத்தைப் பற்றி அபிப்பிராயம் கூற எனக்குத் தகுதியில்லை.ஆனால் உங்கள் உள்ளடக்கம் இயக்கத்திற்கு உதவி புரிவதாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். மக்கள் ஊழியனாக உங்கள் ஆளுமை வளர வேண்டும்.
09. இன்றைக்கு உள்ள பரதநாட்டியம், கதகளி, கர்நாடக இசை போன்ற நுண் கலைகள் நிலவுடைமை சமுதாயத்தில் எழுந்தவை (Feudal Art) இப்போது அது தேவை இல்லை என்ற கருத்து நிலவுகிறதே அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?
இன்றைக்கு நாம் போற்றிக் கொண்டிருக்கும் அற்புதமான கலைகள் அனைத்துமே நில உடமை சமுதாயத்தில் தோன்றியது தான் – கம்பராமாயணம் அந்த சமுதாயத்தில் தோன்றியது தான். இருக்கட்டுமே. இன்றைக்கும் அது நம்முடைய சொத்தாச்சே. கதகளியை எடுத்துக்கொண்டால் இசை – பக்கவாத்தியங்கள், அருமையான அடவுகள், ஜதிகள், கை, கண் போன்ற கொண்டதாகும். ஆனால் அவைகள் புராணக்கதைகளை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்றன. அது அப்படியே இருக்கட்டும். அதை நாம் தொந்தரவு செய்ய வேண்டாம். ஆனால் கதகளி என்ற நாட்டிய அமைப்பில் பல புதிய கருத்துக்களை, நவீன நாடகங்களைக் கொண்டு வர நாம் முயற்சி செய்வோமே! ‘கலா மண்டபம்’ குழுவினரோடு இது பற்றி நான் பேசி இருக்கின்றேன். ‘சமாதான இயக்கத்தை வலியுறுத்தும் ஒரு கதகளி நாடகத்தை அவர்கள் தயாரிக்கின்றார்கள். இப்போது ஷேக்ஸ்பியரின் ‘கிங் லியர்’ கதகளியில் தயாரிக்கப்படுகின்றது. இன்னும் கூட கதகளியின் உடை, மேக்கப் இவைகளை எடுத்துவிட்டு நடன உத்திகளை மட்டும் வைத்துக் கொண்டு புதிய நாவல்களைக் கொண்டு வர முடியும் இது கதகளி இலக்கணத்தை மலினப்படுத்துகிறது என்று தூய்மைவாதிகள் கூறினால் இந்த புதிய முயற்சிக்கு நாம் ‘கேரளாபாலே’ என்று புதிய பெயர் கொடுத்துக் கொள்ளலாம். இம்மாதிரி முயற்சிகள் இப்டா காலத்திலும் நடந்தது. ரஷ்ய பாலே நடனத்திற்கும் இந்த மாதிரி கதக்களி நடனத்திற்க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்.
ஆகவே எந்த புராதன கலை வடிவங்களையும் நாம் புறக்கணிக்கவோ தேவையற்றது என்று கருதுவதோ கூடாது.
10. இசையில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?
என்னைக் கவராத விஷயம் இசை ஒன்றுதான். இசை ஏன் என்னைக் கவரவில்லை என்ற காரணத்தையும் என்னால் அறிய முடியவில்லை.
11.படைப்பு இலக்கியம் எழுத நீங்கள் முயற்சி செய்தது உண்டா…
ஒரு போதும் இல்லை. விமரிசனம் எழுதுவதோடு சரி.
12. எழுத்தாளன் குறிப்பிட்ட ஒரு அரசியல் கோட்பாட்டிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்வது அவசியம் தானா?
அவசியமில்லை. அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் பார்வை இருந்தால் போதும். அதே நேரத்தில் அரசியல் கோட்பாட்டிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள எழுத்தாளனையும் நான் வரவேற்கிறேன்.
13.கலை கலைக்காகவே என்பது பற்றி…!
என்று சொல்லிக் கொண்டே பணம் சம்பாதிப்பதில் அவர்கள் குறியாக இருக்கின்றார்கள்.
14.திரைப்படங்கள் பார்ப்பது உண்டா…?
வெகு அபூர்வமாக. ஆனால் நான் அதைப்பற்றிய விவரங்களை அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொள்கின்றேன். முன்பு முற்போக்குத் திரைப்படங்கள் மலையாளத்தில் ஏராளம் வந்தன. பின்னர் இந்த நிலைமை மாறிப்போய் மிகச்சாதாரண வியாபாரப் படங்கள் வந்தன. இப்போது மீண்டும் கலையம்சங்கள் கொண்ட புதுமையான திரைப்படங்கள் வருகின்றன.
15.கலைகளில் சோஷலிஸ யதார்த்த வாதம் என்ற கோட்பாடு இக்காலத்தில் செல்லுபடியாகாத ஒன்று என்ற கருத்து நிலவுகிறதே?
அப்படிக் கூறுவது தவறு. கார்க்கி சொன்ன முறைப்படி சோஷலிச யதார்த்த வாதம் இன்றைக்கும் தேவையானதுதான். ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் போது ஒருவிதமான இறுக்கம் அதில் ஏற்பட்டு அதனுடைய வளர்ச்சியை தடைப்படுத்தியது. ‘ஒரு நாவல் சமூக வாழ்க்கையின் உண்மையான படப்பிடிப்பாக இருக்க வேண்டும். இந்த வகையில் அது சமூகத்தை விமரிசனம் செய்கிறது. எதிர்கால சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று கோடி காட்டுகிறது. நிகழ் காலத்தை விமரிசினம் செய்து சோஷலிச சமுதாயத்தின் எதிர்காலத்தை சுட்டிக்காட்டுவதே அதன் வேலை இது ஏங்கல்ஸ் வாசகம். இந்தக் கோட்பாடு இப்போது இலக்கியத்திற்கு தேவை இல்லை என்று யார் கூறுவார்கள்.
16. டி. வி. யில் காட்டப்பட்ட ராமாயணம், மகாபாரதம் போன்றவைகளால் இந்து வகுப்புவாதம் தலை தூக்கியிருப்பதாக் குற்றச்சாட்டு இருக்கிறதே! அதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?
முழுக்க அதை நான் அப்படி ஏற்றுக் கொள்ளமாட்டேன். அந்த இரண்டு இதிகாசங்களும் நம் பழம் பெருமைகளை பெருமைகளை இளம் தலைமுறையினர் அறிய வாய்ப்புக் கொடுத்தது. இல்லையென்றால் இதிகாசங்களைப் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாமல் போயிருக்கும். அந்த வகையில் அதை நான் வரவேற்கின்றேன். அதே நேரம் நைந்து போன காலத்துக்குத் தேவையற்ற சில கருத்துக்களையும் அவை பரப்பின என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
17.இளம் எழுத்தாளர்களுக்கு…?
அழகுணர்வு மிக்க படைப்பில் அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தமிழிலும் மற்ற மொழிகளிலும் உள்ள ஏராளமான படைப்புக்களைப் படிக்க வேண்டும்.
அடுத்து எழுச்சியுறுகிற மக்கள் போராட்டங்களில் ஒரு முற்போக்கு எழுத்தாளனின் கவனம் எப்போதும் இருக்க வேண்டும். அந்த மக்கள் போராட்டங்களின் உணர்வுபூர்வமான ஒரு சக்தி எழுத்தாளனின் உள்ளடக்கத்திற்கு பெரிதும் உதவும்.
(நான் பேசிக் கொண்டிருந்தது எழுபத்தாண்டு காலம் இந்திய அரசியல் வானில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் ஒரு அரசியல் தலைவரிடம். அதனால் அவரிடம் இரண்டு அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்க என்மனம் தூண்டியது.)
நீங்கள் கனவு காணும் சோஷலிஸ சமுதாயம் 20-ம் நூற்றாண்டு நிறைவுக்குள் இந்திய மண்ணில் ஏற்படுமா?
சாத்தியமில்லை. அது நீண்ட பாதை. பலகாலம் நடந்தாக வேண்டும்.
18.தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கு பெறுமா?
அநேகமாக சாத்தியமில்லை. இன்னொரு தேர்தல் வந்து விட்டது.
#kerala
#communistpartyofindia
#EMS


Leave a comment