நேற்றில் கரைந்தோடும் இன்றிலிருந்து – ந. இரவீந்திரன்

ஏதோ நிறையச் சாதித்த ஒருவர் தான் தனது அனுபவங்களை எழுத வேண்டும் என்ற எண்ணம் எதுவும் என்னிடம் இருந்ததில்லை. சின்ன வயதில் இருந்தே மற்றவரகள் சொல்லித் தீர்த்த கதைகளைக் கேட்டு வளர்ந்த பழக்க தோசம் என்னையும் வாய் ஓயாமல் பேச வைத்திருக்கிறது. அதிலும், மற்றவர்களுக்குப் பழக்கமில்லாத களம் சார்ந்த சங்கதிகளைக் கதைக்கத் தொடங்கினால் சபை களைகட்டும் என்று தெரிய வந்ததும் அவற்றை முன்னுரிமைப்படுத்திப் பேசி வந்திருக்கிறேன். நுவரெலிய மாவட்டத்தின் பூண்டுலோயா மகா வித்தியாசாலைக்கு ஆசிரிய நியமனம் கிடைத்துப் போய்ப்பெற்ற அனுபவங்களை மாதமொரு தடவை ஊருக்கு வந்து மன்ற நண்பர்களுக்குச் சொல்லத் தொடங்கியதும் கிடைக்கப்பெற்ற இரசிகர் கூட்டம் இதனை உணர வைத்தது. “ரவி பூண்டுலோயாப் புழுகு அவிட்டுவிடத் தொடங்கிவிட்டான்” என்று மன்றத்தவர் ஒருவர் சொன்னால் காத தூரத்தில் வெவ்வேறு பிராக்குகளுடன் இருந்தவர்களும் ஓடி வந்து வட்டமாகக் குந்திவிடுவார்கள், கதை கேட்பதற்கு.

கனடாவுக்கான முதல் பயணத்தை 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கொண்டபோது அங்கே காலையடி மறுமலர்ச்சி மன்றக் கனடா கிளையினர் வரவேற்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்; அதற்கான நன்றியுரையாக நான் பேசியிருந்த விடயம் அங்கிருந்த நண்பர்களால் கவனிப்பபட்டு அவர்கள் அதற்கு வெளிப்படுத்திய கருத்துகள், அதனை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்திருந்தது. முதல் தடவையாகக் குடும்பத்துடன் நான் சென்றபோது குலேந்திரனும் தனது இணையருடன் வந்திருந்தார். முதல்தடவையாகக் கனடா வரும் அங்கத்தவர் தனியாளென்றாலே வரவேற்புக் கூட்டம் வைத்துவிடுகிற கனடா கிளையினர் மன்றத்தின் இருவர் குடும்ப சமேதர்களாக வந்தால் ஒன்றுகூடலை எவ்வளவு கனதியாகச் செய்வார்கள் என்பதை நேரில் கண்டேன். நீண்ட காலத்தின் பின்னர் சந்தித்த நண்பர்கள் மத்தியில் நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஒன்று கூடி, காலையடி மறுமலர்ச்சி மன்றத்தை ஆரம்பித்து இயங்கியதன் நினைவலைகள்!

ஏற்புரையாக இரண்டு பேரும் எங்களுடைய நன்றி உரைகளை முன்வைத்தோம். புலம்பெயர்ந்து வாழ்கிற மன்ற உறவுகள் ஊரிலிருந்து வந்துள்ள எங்களது வருகையை இவ்வளவு பெரிய குதூகலத்துடன் கொண்டாட உந்தப்படுவதற்கான அடிப்படைக் காரணங்கள் பற்றி எனது நன்றி உரையில் நான் பேசியிருந்தேன். எழுபதாம் ஆண்டுகள் இலங்கையின் பல கிராமங்கள் புத்தெழுச்சி பெற்ற இளந்தலைமுறையினரை வெளிப்படுத்தி இருந்தன. சுய பொருளாதாரக் கொள்கையை அன்றைய இடதுசாரிக் கூட்டரசாங்கம் முன்னெடுத்து வந்தது. ஏகாதிபத்தியத்தின் நவகாலனித்துவச் சுரண்டலை முறியடிப்பதற்கு அன்னு முன்னுரிமை வழங்கப்பட்டது; சுயபொருளாதார முன்னெடுப்பின் மூலமாக எமது தேச வளங்களைக் கண்டறிந்து அவற்றை உற்பத்தித் திறனுடன் வாழ்வாதார விருத்திக்கானவையாக மாற்றுவதன் வாயிலாக எமக்கான வளப்பெருக்கத்தை நாமே ஏற்படுத்துவதற்கு உரியதாக அந்தக் கொள்கை அமைந்திருந்தது. அதன் உச்சப் பயனை யாழ்ப்பாண விவசாயிகள் பெற இயலுமாக இருந்தது. நாமே உற்பத்தி செய்யக்கூடியவற்றை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்குக் கட்டுப்பாடுகள் அல்லது முற்றாகவே தடைகள் விதிக்கப்பட்ட காலம் அது; இறக்குமதித் தடைக்கு உரிய பொருட்களுக்குள் வெங்காயம், மிளகாய் என்பனவும் அடங்கியிருந்தன. அவற்றை உற்பத்தி செய்து இலங்கை பூராவுக்கும் விநியோகிக்கும் வாய்ப்பு அப்போது யாழ்ப்பாணத்துக்கே இருந்தது. யாழ்ப்பாணக் கிராமங்கள் புத்தெழுச்சியைக் கண்ட காலம் அந்த எழுபதாம் ஆண்டுகள். அந்த உத்வேகம் பொருளாதார எழுச்சியுடன் பண்பாட்டு விசாலிப்புக்கும் களம் அமைத்துத் தந்தது. எமக்கான கலை – இலக்கியம் – விளையாட்டுகள் என்ற ஆர்வத்துடிப்புடன் கிராம இளைஞர்கள் சமூக ஊடாட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். அப்போது சிங்களக் கிராமங்களும் புதிய முயற்சிகள் பலவற்றில் ஆர்வம் கொள்ளத் தலைப்படன; தம்புள்ளை என்ற இலங்கையின் மையப்பகுதி வெங்காயம், மிளகாய் போன்ற பணப் பயிர்களைப் பயிரிடுவதற்குக் கற்கத் தொடங்கியது. அன்று ஏற்பட்டிருந்த கிராமிய எழுச்சியின் வெளிப்பாடாக எமது ஊரைப் புதிய பண்பாட்டுத் தளத்துக்கு வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முனைப்பு உந்துதல் எங்களையும் ஆட்கொண்டிருந்தது. ஐந்தாறு வயது வேறுபாடுகளுடன் இருந்த இளைஞர்கள் பலரும் இணைந்து, 1972 ஆம்ஆண்டில் காலையடி மறுமலர்ச்சி மன்றம் எனும் அமைப்பைத் தோற்றுவித்தோம்.

யாழ்ப்பாணத்தின் அநேகமான கிராமங்களில் இது போன்ற ஊரமைப்புகள் அப்போது ஆரம்பிக்கப்பட்டன, அல்லது ஏற்கனவே இருந்து தமக்குள்ளான தொய்வுகளால் செயலிழந்திருந்தவை புத்தூக்கமடைந்து ஆர்வத்துடன் இயங்கின என்பது மெய். பேசப்படுகிற இந்த எழுபதாம் ஆண்டுகளுக்கு முன்னராக ஐம்பதாம் ஆண்டுகளிலும் முதலாவது கிராமிய எழுச்சி ஒன்று ஏற்பட்டு பலவேறு ஊர்களுக்குமான சனசமூகநிலையங்கள் உதயமாகி இருந்தன. பண்டத்தரிப்பு – சுழிபுரம் எனுமிரு கிராமசபைகளுக்கு இடைப்பட்ட எமது பனிப்புலம் எனும் கிராமத்தில் மன்றத்தை உருவாக்கியவர்களான எங்களது தந்தையர்கள் இளைஞர்களாக இருந்தபோது ஊருக்கான அத்தகைய முதலாவது அமைப்பை ஏற்படுத்தி இருந்தனர். ஊரின் மையத்தில், பனிப்புலம் அம்மன் கோவில் அருகே உருவான அந்தச் சனசமூக நிலையம் அபிவிருத்திச் சங்கம், வாசகசாலை என்பவற்றையும் உள்ளடக்கி இருந்தது. எமதூரின் முதல் படித்த தலைமுறையினரான அவர்கள் ஊரின் கல்வி விருத்தியை வளப்படுத்தும் நோக்குடன் தொடங்கியிருந்த அந்த அமைப்பு எங்களுக்கு முன்மாதிரியாக அமைந்து எங்களை வழிப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. சனசமூகநிலையத்தால் பயிற்றப்பட்ட நாங்கள், அதற்குக் கிழக்கே ஊரின் விளிம்பிலுள்ள காலையடியில் மன்றத்தை தொடக்கி இருந்தோம். எமது வீடுகளுக்கு அருகில் அது அமைந்திருந்தது!

எழுபதாம் ஆண்டுகளில் இளைஞர்களாகச் சமூக அக்கறையுடன்ழொன்னிணைந்து இயங்கியவர்களாகிய நாம் நீண்ட காலம் பிரிந்திருந்து, இருபது முப்பது வருடங்களின் பின்னர் கனடாவில் சந்நித்த அந்த வேளையில் ஏனைய தலைமுறையினரை விடத் தனித்துவமான பண்புக் கூறுகள் பலவற்றை எமக்குள்ளே உணர்ந்து கொண்டோம். அதன் பேறாக அந்த வரவேற்புக் கூட்டத்தின் இடையில் என்னுடை ஒரு நூலைத் தாங்கள் வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டதுடன் அமையாது என்னை எழுத வைத்து ஆறு மாதங்களில் (டிசெம்பர், 2013) வெளியிட்டு வைத்தனர்; மட்டுமன்றி, வெளியீட்டு நிகழ்வுக்குக் கட்டாயப்படுத்தி வரவழைத்து அதனையும் கனடா மண்ணிலான ஊர் விழாவாக நடாத்தி வைத்தனர். சமூக எழுச்சியின் உந்துதலுடன் அமைப்பாக இயங்கிய உத்வேகம் அது. அவ்வாறு எழுச்சி உந்தலுடன் உருவானவற்றை இருக்கிறதே என்பதற்காக இயக்கும் அடுத்தடுத்த தலைமுறையினரிடம் இதேயளவு உணர்வுக் களிப்பு இருக்காது. எம்மை உருவாக்கியது போன்ற இன்னொரு எழுச்சியில் இயங்கியிருக்கக்கூடிய எமக்கு முன் – பின்னான தலைமுறையினர், அல்லது எழுபதுகளுக்குரிய எழுச்சியின் வேறு கிராமங்களைச் சேர்ந்த எமது தலைமுறைச் சகாக்களும் இத்தகைய சந்திப்புகளையும் மனவெழுச்சி உணர்வலைகளையும் வெளிப்படுத்துவர்; இதே போன்ற குதூகலிப்புகள் அங்கேயும் இடம்மெறும்!

எங்களுடைய மன்றம் அவற்றின் பகுதியே என்றாலும் வேறெதனை விடவும் தனித்துவம்மிக்கதும் கூட. அவ்வாறு எழுபதுகளின் ஆரம்பத்தில் நாங்கள் உத்வேகம் பெற்றுக் கூட்டுணர்வுடன் இயங்கியது – கடும் விவாதங்களுடன் பொது முடிவுகளுக்கு வந்தது – அந்தப் பொது முடிவுகளை எட்டுவதற்கெனக் கருத்தாடியபோது எதிரெதிராக மாறுபட்டு விவாதித்தோரும் பெறப்பட்ட முடிவு தங்களது விருப்புக்கு விரோதமானது என அசூசை கொள்ளாமல், அதனைச் செயற்படுத்துவதில் முனைப்புடன் ஈடுபட்டது – எந்தக் கருத்துத் தொடர்பில் மோதல் வந்தாலும் அவற்றை மையப்படுத்தியதாகத் தொடர்ச்சியான குழுச் சேர்க்கைக்கு ஆட்படாதிருந்தது – கடும் வார்த்தை ‘வன்முறையுடன்’ கருத்தாடிய போதிலும் அடுத்த கணம் அதனை மறந்து தோளில் கைபோட்டு மன்றத்தவரெனும் நட்புறவுடன் இயங்கியது …

இவை பற்றிக் கனடா மன்றக்கிளையின் முதல் வரவேற்புக் கூட்டத்துக்கான நன்றி உரையில் எடுத்துரைத்து இருந்தேன். இவற்றில் பெரும்பாலானவை சற்று வேறுபட்ட வடிவிலும் அளவுகளிலும் அனைத்து நட்புக் குழாங்களிலும் ஊடாடுவன; இவையனைத்தும் ஒட்டுமொத்தமாக இருந்ததுடன் இன்னும் பல சிறப்பம்சங்கள் மன்றத்திடம் காணப்பட்டமையாலே தான் அதே ஒன்றுபட்ட மன்றமாக நாற்பது வருடங்களின் பின்னரும் – அன்றைய உணர்வு வீச்சில் சிறிய தளர்ச்சியையும் அண்டவிடாமல் உறவாடுகிறோம் என்பதனை அதன்போது சுட்டிக்காட்டிப் பேசினேன். ஏனைய பல நட்புக் குழாங்கள் காலத்தின் கோலமாகக் கன்னை பிரிந்து தமக்குள் உப குழுக்களாகிச் சந்திப்பர்; புதிய உறவுகள் ஏற்படுத்திய வெவ்வேறு குழுச் சங்கமிப்புகளில் கரைந்து பழையதன் முக்கியத்துவத்தை மதிப்பிறக்கம் செய்திருப்பர். அவ்வாறன்றி எமது மன்றம் ஒவ்வொருவரையும் வார்த்தெடுத்த வகையில் ‘தன் நாமம் கெட்டுப் பெற்ற மன்றமெனும் சங்கமப் பொதுச் சொரூபம்’ சுடர் மங்காமல் தொடர்ந்தவாறு அனைவரிலும் உறைந்து இருந்துள்ளது; அதன் அளவுப் பரிமாணம் ஆளாளுக்கு ஒவ்வோரளவில் கூடிக்குறைந்தாலும் எவரிடமும் அற்றுப்போய்விடவில்லை. இத்தகைய பண்பை நான் வெளிப்படுத்தியது பலருக்கும் உடன்பாடாக இருந்தது. ‘எங்களுக்குள் இருந்த கருத்தை இப்படி வடிவப்படுத்த இயலாமல் அல்லாடிக்கொண்டு இருந்தோம், நீ ஒழுங்குபடுத்திச் சொல்லி இருக்கிறாய்’ எனப் பலரும் சொல்லினர். குறிப்பாக, பாலன் அதனை ஒப்பீடு வாயிலாகத் தெளிவுபடுத்தினார். ‘ஐரோப்பா, அவுஸ்திரேலியா என ஏனைய புலம்பெயர் நாடுகளில் இருந்து வந்த நண்பர்களும் கூட மன்ற அனுபவங்களைச் சொல்ல முயன்றார்களே அல்லாமல், மன்றம் என்பது என்னவாக இருந்தது – அது எங்களுக்குள் இன்னமும் இருந்தபடி எப்படி ஆளுமை செலுத்துகிறது என விளக்க முயற்சிக்கவில்லை’ என்ற பாலனின் கூற்று எனக்குள் ஆழப் பதிந்தது!

ஏனைய நண்பர்களுக்கு அவ்வாறு தொகுத்துப் பார்க்க இயலாமல் போனதற்குப் பல காரணங்கள் அடிப்படைகளாக அமைந்திருக்கும்; ஆயினும், வெளிப்படுத்தியவற்றை அனைவருமே உடன்பட்டு வழிமொழிந்தது என்பது எல்லோருக்குள்ளும் இந்த உண்மை ஊடாடியபடி இருந்தது என்பதைத் தானே காட்டுகிறது. இதே உணர்வு ஏனைய நண்பர்களுக்கும் இருக்கும் என்பது நிச்சயம். மன்றத்துக்கான பல அம்சங்களுடன் இயங்கிய பலரும் தத்தமது இளமைக்கால அனுபவங்களைப் பகிர்வதில் வரலாற்றை வெளிப்படுத்துவதோடு அமைதி காண்பர்; உள்ளுறை இயக்கமாகத் தம்மைக் கட்டமைத்த இவ்வகைப்பட்ட அம்சங்களின் ஊடாட்டங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்துத் தமக்குள் உருப்பெற்ற சமூக சக்தியை இனங்காண இயலாமல் போயிருக்கும். இவற்றுக்கப்பால், மன்றத்தின் பண்பென்று அங்கே சொன்னவை வேறு அமைப்புகள் பலவற்றிலும் ஊடாடுவனதாம் எனச் சொன்ன நண்பர்களும் உள்ளனர். மன்றத்தில் வெளிப்பட்டதை விட சிற்சில அம்சங்கள் அதியுச்சமாகக்கூட வேறிடங்களில் அமைந்திருக்க வாய்ப்புண்டு; இன்றுவரை கூட்டுணர்வைப் பிளவின்றிப் பேணத் தூண்டியதற்கு அடிப்படையாக இருந்ததென மேலே சொன்ன அனைத்து அம்சங்களும் அமையப்பெற்ற வேறெந்த அமைப்பையும் அறிய இயலவில்லை. எனது கவனத்துக்கு வராமலே அவ்வகையான அமைப்பு எங்கேனும் இருந்திருக்குமாயின் அது பற்றி வெளிப்படுத்தப்படுவது அவசியம்!

இந்தக் காரணங்களால் எமது மன்றம் பற்றி எழுதியாக வேண்டும் என்ற உந்துதல் பின்னர் எனக்குள் வேரோடி இருந்தது. நான்கு வருடங்களின் முன்னர் அதன் நாவலாக எழுதும் உத்தேசத்துடன் எழுத ஆரம்மித்த போது “ஒருத்தனாக உணர இயலாத ஒரு மன்றம்” எனத் தலைப்பிட்டு இருந்தேன். இங்கே இறுதியாக ‘ஒரு மன்றம்’ எனக் கூறப்பட்டு இருப்பது என்னையே. அப்போதெல்லாம் ஊருக்குள் எங்களில் ஒருவரை எங்காவது கண்டால் எங்களது மூத்த உறவினர்கள் எவரும் எங்களது பெயரைச் சொல்லாமல் ‘மன்றம் வந்திருக்கு’ என்பதாகத் தான் சொல்வர். அந்தவகையிலே தான் மன்றம் ஊருக்குள் தனக்குரியதான விசுவரூப விசாலிப்பை உருவாக்கி இருந்தது. இவ்வாறு தன்னை வலிமையுடன் கட்டமைத்ததோடு ஊரின் முகத்தையும் மன்றம் மாற்றிப் புதுக்கியது. அதன் பொருட்டு நாம் ஒவ்வொருவரும் ‘தன் நாமம் கெட்டு’ ஒருமித்து மன்றத்தான் என்ற அத்வைத சங்கமிப்பில் ஊடாடினோம். மன்றமும் ஒவ்வொருவரான ‘நான்’களும் வேறுவேறல்ல!

இவ்வகையில் அமைந்த பரம்பொருளாக இருந்தபடி என்னை மன்றம் கட்டமைத்தவாறினை நாவலாக எழுதும்போது மூலப் பொருளான மன்றத்தையோ, இன்னொருவரான ‘மன்றத்தையோ’ பிழையாகச் சித்திரித்ததாகக் குறைப்பட இடமிராது; எனக்குளான மன்றம் தானே பேசுபொருள் ஆகிறது? ஒவ்வொரு மன்றமும் தன்னளவில் மன்றமாகத் தான் கட்டமைக்கப்பட்ட தோற்றப் பொலிவை இன்னொரு வகையில் புரிந்திருக்கலாம்; நான் விளங்கிக்கொண்டு வெளிப்படுத்தியது போல இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் தன்னை உணர்ந்தவாறு வெளிப்படுத்தத் தவறிவிட்டேன் என்று குறைவிளங்கப்படுவதனை தவிர்ப்பதற்கு ‘நாவலுக்கு உரிய புனைவாக இதனைக் கருத வேண்டும் என்று சமாதானம் சொல்லித் தப்ப இயலுமா?’ என்ற எண்ணம் ஏற்பட்டு, குற்ற உணர்வாக அது வளர்ந்தவாறு இருந்தது; அதன் உறுத்தலினால் தொடர்ந்து நாவலை வளர்க்க இயலாமலாகியது. நாவல் வடிவில் ஏற்கனவே எழுதியவற்றை முகநூலில் பதிவிட்டு வந்தேன். அவற்றைப் படித்த நண்பர்கள் முன்வைத்த ஆலோசனைகளும் பயனுள்ளவையாக அமைந்தன. அனுபவங்களை நாவலாக்கும்போது புனைவுக்குரிய வடிவப்பாங்கும் மொழிநடையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற அவர்களது வலியுறுத்தல் சிந்திக்கத் தூண்டியது. நாவலுக்கான சுவாரசியத்தை விடவும் மன்றத்தின் அடிப்படைக் குணாம்சத்தை வெளிப்படுத்தும் ‘கதை தான்’ எனது வெளிப்பாடாக அமைய வேண்டும் எனத் திட்டமிட்டு இருந்தேன். நாவல், மன்றக்கதை எனும் இரண்டுக்கும் நியாயம் செய்ய இயலாதெனத் தெரிந்து கொண்டதன் பேரில் அந்த எழுத்து முயற்சி தேக்கம் அடைந்தது!

முன்னதாக, ஆசிரியர் சஞ்சிகை ஒன்றுக்கென லெனின் மதிவானம் ஒரு கட்டுரை கேட்டபோது பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாசாலை எனக்குக் கற்றுத் தந்த பாடங்களை எழுதி இருந்தேன். முதன்முதலில் ஆசிரியராக இயங்க ஆரம்பித்ததன் வாயிலாக ஆசிரியத்துவத்தை, பாடசாலையை, அவற்றைப் ‘பெற்றுள்ள’ சமூகத்தை கற்றுக்கொண்ட கதை சொல்லலாக அந்தக் கட்டுரை அமைக்கப்பட்டு இருந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் எழுதிய அந்தக் கட்டுரையையும் முகநூலில் பதிவிட்டிருந்தேன். என்னுடைய எழுத்தாக்கங்களில் மிகச் சிறப்பானதாக அதுவே அமைந்தது எனக் கூறிய ஆசிரிய நண்பர் சிவப்பிரகாசம், தொடர்ந்து கல்விப்புல அனுபவங்களை எழுதச் சொன்னார்.

அதே வடிவத்தில் கல்விப்புலத்தில் பெற்ற தொடர் அனுபவங்களையும் அனைத்திலும் ஒரு மன்றமாகத் தொடர்ந்த அனுபவங்களையும் தனித்தனி இரு ஆக்கங்களாக வெளிப்படுத்தும் எண்ணம் இருந்த அதேவேளை இன்னொரு களம் பற்றி எழுதும் அவசியமும் உணர்த்தப்பட்டது. பதிப்புத்துறையில் ஓய்வினை அறிவித்து நண்பர் நீதிராசனுக்கு அதனை வழங்கியதோடு அவருக்கு ஆலோசனை கூறி வழிப்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ள நண்பர் பாலாஜி தனது பதிப்புலக அனுபவங்களை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்; ஆரோக்கியமான படிப்பினைகள் மட்டுமன்றி நம்பிக்கைத் துரோகங்கள் பலவற்றைக் கண்டு வந்த காரணத்தால் அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் ஆவல்கொண்டிருந்தார். என்னுடைய நூல்களில் பெரும்பாலானவற்றை அவரே வெளியிட்டார் என்பதோடு அவருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்திய நூல்களில் அதிகமானவையாக எனது புத்தகங்கள் இருந்துள்ளன. அந்தவகையில் இலக்கிய, சமூக, பண்பாட்டுத் தளங்களில் எனது செயற்பாடுகளும் அதன் பொருட்டான நூலாக்கத்தில் நான் எதிர்கொண்ட பிரச்சினைகள் – அவற்றின் எதிர்வினையாக அடுத்தடுத்த எனது நூல்கள் வெளிவர நேர்ந்தமை என்பவற்றையும் நான் தனியாக எழுத வேண்டும் என்ற கோரிக்கையை நண்பர் பாலாஜி முன்வைத்தார்!

அந்த மும்முனைகளை எழுத்தாக்கும் வடிவம் இறுதிப்படாத அதேவேளை நேரமின்மையும் காரணமாக அவை வெளிப்படுத்தப்படாதனவாக மனதினுள் அடங்கிக் கிடந்தன. இவற்றையாவது அவ்வப்போது நண்பர்கள் மத்தியில் விலாவாரியாக பேசுவதன் வாயிலாக பொச்சம் தீர்க்க முடிந்தது. என் உயிரில் கலந்த அரசியல் கள அனுபவங்கள் பல பேசாப் பொருள்களாகவே உள்ளன; இன்றைய இளம் செயற்பாட்டாளர்கள் எனது அரசியல் அனுபவங்களை எழுத வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவாறுள்ளனர். அரசியல் களச் செயற்பாட்டு அனுபவங்கள் இல்லையெனில் ஏற்கனவே நான் எழுதிய எவையும் சாத்தியப்பட்டு இராது என்பதுடன் வேறு வடிவ ‘எழுத்தாளராக’ நான் வெளிப்பட்டு இருக்கமாட்டேன் என்பதும் சர்வ நிச்சயம். இப்போதும் கூட படிப்பதில் உள்ள ஆர்வம் எழுதுவதில் எனக்கு இல்லை. வெளிப்படுத்தும் கட்டாயம் உள்ளது என்ற அவசியத்தைக் கடந்த எதையும் எழுதி அச்சுத்தாளையும் மையையும் பிறர் உழைப்பையும் வாசிப்பவர் நேரத்தையும் வீணடிக்கக் கூடாது என்ற எண்ணம் என்னிடம் உள்ளது (பஞ்சிப்படலும் தான்). இன்றைய சமூகத்துடன் ஒத்தோட இயலவில்லை என்றவகையில் இதனை மாற்றும் அரசியல் – பண்பாட்டுக் களமே எனக்கு முதன்மையானது என்பதன் பகுதியாகவே, அதன்பொருட்டு எழுத அவசியமானவற்றை எழுதித் தீர்ப்பதும் வந்தமைந்தது!

எனது இயங்குதளங்களாக அமைந்த காலையடி மறுமலர்ச்சி மன்றம், கல்விப் புலம், நூலாக்கம், அரசியல் செயற்பாடு என்ற நான்கு துறைகளைத் தனித்தனியே எழுத்துருக்களாக்கும் எண்ணம் இருந்ததை வைத்து எழுதிவிடுவேன் என்பதாக அவ்வப்போது போக்குக் காட்டியது தான் தேறியிருந்தது; தொட்டம் தொட்டமாக இவற்றின் தூறல் ஆங்காங்கே தூவப்பட்டு இருந்த தோற்றம் அரங்கின்றி வட்டாடுவதனைத் தெளிவுறக் காட்டும். அவற்றைப் பார்த்தாரோ என்னவோ, பரணிதரன் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்; ‘வருகிற (2025) தை மாதம் முதலாக உங்களுடைய அனுபவங்களைப் பதிவு செய்யும் தொடர் ஒன்றை ஜீவநதியில் எழுத வேண்டும்’ என்ற அவரது கோரிக்கை எனக்கான களத்தை இனங்காட்டியது. இவற்றைத் துண்டு துண்டாக வெளியிடுவதை விட, நான்கும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து என்னை இயக்கின, எனக்கான செயற்களங்களாக இயங்கின என்ற வகையில் அவற்றின் இயல்பான போக்கில் அவை ஒன்றுடனொன்று ஊடாடியபடி இணைவுப் பிரகாரம் வெளிப்படுத்தும் தொடரை எழுதினால் மட்டுமே அவற்றுக்கு விமோசனம் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்.

எழுதப்போகும் அந்தப் பேசுபொருட்கள் இனி உங்களுக்குமானதாக மடைமாற்றம் அடையவுள்ள நிலையில் ஐம்பது வருடங்களாகக் களமாடிய அனுபவப் பொதி எந்த வடிவில் பரிமாறப்படலாம் என்ற கேள்வி எழுந்தது. இப்போது ஆறேழு வருடங்களாக உலக இயங்கு தளம் பாரிய நிலைமாறு கட்டத்தினூடாகப் பயணித்தவாறுள்ளது. இந்த மாற்றத்தில் பழைய எங்களது செயல்வீச்சுகள் சாதித்தனவும் செய்யத் தவறியவையும் தோற்றுப்போன இடங்களும் எனப் பலதையும் பத்தையும் அளவளாவுவது இங்கு அவசியம் எனப்பட்டது. கடந்த நூற்றாண்டின் ஐம்பதாம் ஆண்டுகளில் வீறு கொள்ளத் தொடங்கிய இலங்கைத் திருநாட்டின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசிய எழுச்சி – அதன் உச்சக்கட்டமான எழுபதாம் ஆண்டுகள் – அந்த உச்சப் பொழுதில் இளைஞர்களாக நாங்கள் இயங்கத் தொடங்கிய போது நிலவிய சாதக, பாதக அம்சங்கள் என்பவை இந்த உரையாடலின் அடித்தளமாக அமையும். அடுத்து எண்பதாம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலைமாறு கட்டத்தின் தன்மையும் அதன் போதான எங்களது இயங்குமுறைச் சிக்கல்களும்; சென்ற நூற்றாண்டின் இறுதித் தசாப்தம் முதலாக ஐக்கிய அமெரிக்க மேலாதிக்கத் தலைமையில் ஒற்றை மைய உலக நியதி நிலைநிறுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்த பூகோளமயமாக்கலின் பேறான முதலாளித்துவ நுகர்வுப் பண்பாட்டுக் காலமே மனித குலம் இறுதி நிலையில் வந்தடைந்த இருப்பு என்ற மாயைக்குள் பெற்ற பாடங்கள்; ஒற்றை மையத் தகர்ப்புடன் இன்று ஏற்பட்ட வரும் (இன்றைய நிலைமாறு கட்டத்தின்) மாற்றப்போக்கில் எழுபதாம் ஆண்டுகளின் பெறுபேறுகளை மறுவாசிப்புக்கு உள்ளாக்குதல் – இவை தான் நாங்கள் இங்கு ஊடாடி உரையாடவுள்ள பேசு பொருள்களாக அமையவுள்ளன. இடையிட்டு நீங்கள் எழுப்பக்கூடிய விவகாரங்கள் பொறுத்து இந்தக் கதை சொல்லப்படும் போக்கில் சில வளைவு சுழிவுகளும் ஏற்படச் சாத்தியமுள்ளது; ஒருவழிப் பாதையாக நாங்கள் படித்த காலத்தில் போல அல்லாமல் கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டுக்கு உரிய ஆசிரியராகப் பணியாற்றிய காலமே மாற்றம் கண்டுவிட்டது. இன்றைய தகவல் பரிமாற்ற யுகம், அனைத்துக்குள்ளும் ஊடுபுகுந்து மாறுதல்களைத் துரிதப்படுத்த வகைசெய்யவல்லது; கேட்கத் தயாராகவில்லை என்றால் பேசவும் தகுதி கிடையாது என்ற புரிதலுடனேயே நான் வளர்ந்த கதை சொல்ல விழைகிறேன்!

கைகளில் தவழவருகிற இந்தப் பிள்ளையின் பெயர், “நேற்றில் கரைந்தோடும் இன்றிலிருந்து” என்பது பற்றிச் சில வார்த்தைகள். இன்றில் இருந்து நேற்றைய பொழுதை இரைமீட்பது அவசியமா? கடந்ததை எண்ணி மறுகி என்ன பயன்? இனி என்னவாகும் என முடிவு செய்ய இயலுமா?

எண்பதாம் ஆண்டுகளில் இயக்கம் கொள்ளத் தொடங்கிப் பின்னரான முப்பது வருடங்கள் நிலைபெற்ற ஒற்றை மைய உலக நியதியை வடிவப்படுத்திய கருத்துநிலை, முந்திய மூன்று தசாப்தங்கள் (ஐம்பதுகள் முதல் எழுபதுகள் வரையான முப்பது ஆண்டுகள்) நிலவிய மக்கள் எழுச்சிக்குரியனவாக வீறுபெற்று வந்த உறுதிப்பாடுகளையும் நம்பிக்கைகளையும் தகர்ப்பதாக அமைந்திருந்தது. அப்போது, மிக விரைவில் இலங்கையில் மட்டுமன்றி உலகநாடுகள் அனைத்திலும் பொதுமை அறம் மேலோங்கும் வகையில் சோசலிசத்தை வெற்றிகொள்வோம் என்ற நம்பிக்கையுடன் அன்றைய இளைஞர்கள் களத்தில் இயங்கியவாறு இருந்தோம். அவ்வாறு உறுதிப்பட்ட நம்பிக்கையுடன் செயற்படுவதன் வாயிலாக சமூக மாற்றத்தை நிலைநாட்டி ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கண்டுவிட இயலும் என்று ஏற்பட்டிருந்த மனவைராக்கியம் தகர்க்கப்படுவது அடுத்து மேலெழுந்த ஒற்றைமையப் பூகோள மயப்படுத்தலுக்கு அவசியப்பட்டது. கடந்த கால வரலாற்று அனுபவங்களைக் கற்றுக்கொண்டு, எதிர்காலப் பொதுமைப் புத்துலகம் படைக்கப்பட இயலும் என்பதெல்லாம் வெறும் கற்பிதங்கள் எனச் சொல்லினர். தத்தமது அபிலாசைகளைக் கடந்த காலத்தில் ஏற்றிப் புனையப்பட்ட கட்டுக்கதைகளே வரலாறு என்றனர். ‘நேற்று அப்படி இருந்தது என்பதும் பொய்யான நம்பிக்கைகள் மட்டுமே, நாளை எதுவெல்லாம் வந்தமையும் என்ற பகல்கனவுகளும் நிச்சயமற்றவை, இந்தக் கணம் மட்டுமே நிதர்சன உண்மை என்ற வகையில் இதனை அனுபவிப்பதே புத்திக்கு உகந்தது’ என்ற ‘வேதாகமம்’ அன்றைய (எண்பதாம் ஆண்டுகளில் மேலெழுந்து வந்த) பூகோள மயமாக்கலின் அடிப்படை மந்திரம்!

எண்பதாம் ஆண்டுகளில் தூண்டப்பட்ட மன உந்துதலுக்கு மாறான எதிர் நிலைப்பட்ட மனவூக்கம் இன்று சாத்தியப்படத் தொடங்கியுள்ளது. ஐந்தாறு வருடங்களாக ஏற்பட்டு வரும் மாற்றச் செல்நெறி நாலைந்து வருடங்களில் இன்னொரு வடிவ உலக நிலவரத்தை அரங்குக்கு அறிமுகப்படுத்த உள்ளது. எழுபதுகள் வரை இருந்த சோவியத் யூனியன் – ஐக்கிய அமெரிக்கா என்ற இருமுனை உலகத்தை நிலைமறுத்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக நிலவிய ஒற்றை மைய உலகம் என்பது இப்போது நிலைமறுக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய அமெரிக்க மேலாதிக்கமெனும் ஒற்றை மையம் அகற்றப்பட்ட பின்னர் இன்னொரு இருமுனை மையங்கள் ஏற்படும் என்றில்லை. மையங்கள் கடந்தவாறு தேசங்கள் இடையே சமத்துவத்தை நிலைநாட்ட முற்படும் அரசியல் – பொருளாதார முன்னெடுப்புகள் முனைப்பாகும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. எழுபதுகளில் தீவிர இயங்ஙாற்றல்கொண்ட மனம் இந்த எதிர்வுகூறலை முன்வைக்கிறது என்ற வகையில் இதன் சரி பிழைகளைத் தொடர்ந்து உரையாடி வரலாற்றுடனும் உரசிப் பார்ப்போம். நேற்றுக் கரைந்தோடி வந்து தான் இன்று அமைவு கொண்டது. இன்றிலிருந்தபடி வெறுமனே நேற்றைய துளாவாரங்களை அசைபோடுவது பயனற்றது. அதன் சத்தான சாறை உள்ளீர்த்துச் செரித்துப் பெறும் பலத்தைக்கொண்டு ஒளிமயமான எதிர்காலத்தைப் படைக்கும் மார்க்கத்தை வகுப்போம்!

Leave a comment