என் குடும்பம் நீங்கலாக நான் அறிந்த முதல் உறவினர் எங்கள் பாரதியே.! அதன் பின்னரே மார்க்ஸ், லெனின்.. என அறிந்துகொண்டேன். அம்மாவின் வேலை நிமித்தம் பல வாடகை வீடு அலைந்த போது , இப் படம் தவறி உடைந்தது. அன்றைய தினம் நானும் தம்பியும் அழுதோம். இன்றும் அந்த நாள் நினைவில் உள்ளது.
கடந்த மாதம் நூலகத்தில் பாரதியை “எங்கள் பாரதி” என்ற தலைப்புடனும், அதற்க்கு முதல் மாதம் “வள்ளுவம்” என திருவள்ளுவரை, இசையாகவும், பொருளும் குறளும் ஆகவும் சொல்ல வைத்து நிகழ்வை நடத்தி இருந்தோம். பங்கு கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், நூலும் கொடுக்க நினைத்த போது , ” ஏன் நாங்களே பாரதியையும், வள்ளுவரையும் ஒப்பு நோக்கினால் என்ன ?”என்று தோன்றியது.
நான் அறிந்த சில ஒப்பீடுகளும் தாமதிக்காது பாய்ந்து ஓடி வந்தது.
வான்புகழ் கொண்ட வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என எல்லாத் துறைகளையும் பாடியுள்ளார். சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உக்கிரமாக இருந்தால் அமைதி அருகிவிடும் என்ற கோட்பாடு பொது உடமை சிந்தனையின் அடிப்படை.திருவள்ளுவர் இரவச்சம் என்ற அதிகாரத்தில் எழுதியது ,
‘‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்’’ குறள் – 1062
அறச்சீற்றத்துடன் எழுதி இருப்பார்..பிறரிடம் கேட்டு அதை உண்டு வாழக்கூடிய அவலநிலையில் யாரும் இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட அவல நிலை உருவானால், ‘உலகியற்றியான் பரந்து கெடுக’ என்று வள்ளுவர் ஆத்திரமடைந்து வேறு எந்த இடத்திலும்எழுதியதில்லை.
அதே போல
மகாகவி பாரதியார் கவிதையின் உச்சத்தைத் தொட்டபோதிலும் வறுமையிலேயே உழன்று கொண்டிருந்தார். சமுதாயத்தில் வறியோர் என்ற பெயரில் யாரும் நடமாடாத உன்னத நிலை உருவாகவேண்டும் என்று அவர் கனவு கண்டார். இந்த நற்கனவு நனவாக வேண்டும் என்ற துடிப்பு அவரது கவிதைகளில் வெளிப்பட்டது. உலகியற்றியானை திருவள்ளுவர் சபித்தார் எனில் உலகையே ஒழிப்போம் என மகாகவி பாரதியார் சூளுரைத்தார்.
“தனியொருவனுக்கு உணவு இல்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்..” என்ற பாரதியாரின் கோபக்குமுறல் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அனல் பிழம்பாக தணல்கிறது..
இந்த விடயமே இந்த ஒப்பு நோக்கலைச் செய்யக் காரணம் ஆனது. தொடர் தேடலும், வாசிப்பும் என்னை அதில் அமிழ்த்தி விட்டது .
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.- குறள் 972
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை
“பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே – வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே”
என்று அரசியல் தளத்தில் சாதி எதிர்ப்பு, காலனிய எதிர்ப்பு என்கிற இரட்டைத் தேசியத்தைத் தெளிவாக முன்னெடுத்த பாரதி சமூக விடுதலையின் ஆதாரமான அடிப்படைத் தேவையாகப் பெண் விடுதலையை முன்வைத்தவர்.
இப்படி ஒவ்வொன்றையும் படித்து ஒப்பு நோக்க அது கடலுக்குள் முத்தைத் தேடும் கதை போல பரந்து விரிந்து சென்றது. கண் உறுத்தலுடன் சிரமம்ப் பட்டு இதனை செய்தேன் பாட சாலை மாணவருக்கான ஆரம்ப நூலகர் இதனை முதலில் வெளிக் கொண்டுவர முடிவு செய்தோம்.
இதனைச் செய்ய உதவிய நூலகவியலாளர்கள் ,லக்சிகா ,தஸ்மினி விற்கும் அதனை நூல் வடிவமைத்த லக்சிகாவிற்கும் அன்பும் நன்றிகளும். இதன் மூலம் இவ் உலகத்தின் தவிர்க்க முடிய இரு ஆளுமைகளை அவர்களும் உள்வாங்கிக் கொண்ட திருப்தி எனக்கு.
புதிய சந்ததி மேலும் இத்தகைய ஒப்பீடுகளைச் செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
நன்றியுடன் பபி இரவி


Leave a comment