சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் ‘என் முதல் ஆசிரியர்’ பற்றிய சிந்தனைகள்! – ஜோதிகுமார் –

 – ஜோதிகுமார் – ஜோதிகுமார் 08 பிப்ரவரி 2025

                                 –  எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் –

ஒரு ஓவியனின், புதிய சித்திரத்திற்கான தயாரிப்புகளுடன் சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் ‘என் முதல் ஆசிரியர்‘ நாவல்  ஆரம்பமாகின்றது. ஓவியன் பின்வரும் பொருள்படக் கூறுவான் :

“பொழுது புலர்கின்றது… ஜன்னல்களை அகலத் திறக்கின்றேன்… கிரகிக்க முடியாத, எதிரொலிகளை உள்ளத்தில் உருவாக்கும், இந்த இளம் கோடையின், உதயம் போன்றதன், முக்கியத்துவத்தை இன்னும் நான் பெறவே இல்லை. எனது சித்திரம் வெறும் எண்ணக்குவியலாய் மாத்திரமே இருக்கின்றது. எத்தனையோ கோட்டுருவங்களை இந்தச் சித்திரத்திற்காய், இதுவரை கீறிவிட்டேன். ஆனால், என் ஆன்மாவிலிருந்து, பிறப்பெடுக்கக்கூடிய அந்த மர்மமான, வஸ்து, அகப்படாமல் கைநழுவிச் செல்லும் அந்தப் பொருள், இன்னமும் என் கைக்கு வந்து சேர்ந்ததாய் இல்லை. வசப்பட்டதாயில்லை”.

“முடிவுப்பெறாத எனது சித்திரம் குறித்த எண்ணப்பாடுகளைப் பொதுவில் நான் எனது நண்பர்கள் மத்தியில்கூட பிரஸ்தாபிப்பதில்லை. ஆனால், இம்முறை ஓர் விதிவிலக்கை பின்பற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். முழுமையுறா என் சித்திரத்தை, இன்று பகிரங்கமாய் ஏனையோருடன் பகிர்ந்துகொள்ளும் போக்கொன்றைக் கடைப்பிடிக்கப் போகின்றேன். இது வெறும் சபலம் அல்ல. தூரிகையை, இப்போது கையில் எடுக்க எனைத் தூண்டிய இக்கதை மிகப்பெரியது…”

“இக்கதையை பாழ்படுத்தி விடுவேனோ என்று அஞ்சுகிறேன். இப்போதுகூட அந்த நடுக்கத்துடனேயே என் தூரிகையை நான் கையில் ஏந்தவும் செய்கின்றேன்”.


கிட்டத்தட்ட ஒரு நேர்மையான கலைஞனின் உண்மை வாக்குமூலம் என இதனை நாம் கொள்ளலாம். மாபெரும் கலைஞர்கள் இக்கேள்வியைக் கடந்து அடியெடுத்து வைத்ததாகவும் சரிதம் இல்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் இக்கேள்வியானது அவர்களைத் துன்புறுத்தி வாட்டி வதைக்கவே செய்திருக்கும்.

துன்புறுத்தல்? ஆம், இது, மிகப்பெரிய சொல்தான். ஆனால், இக்கேள்வியை வெறும் ஒரு யதார்த்தமாகக் கொண்ட மகாபுருடர்களும் இவ்வுலகில் ஜீவிக்கத்தான் செய்திருக்கின்றார்கள்.

வான்கோவை எடுத்துக்கொண்டால் விவசாயி அல்லது விவசாயிகளின் வாழ்வு என்பதனைத் தீட்டுவது, குறித்த காலகட்டத்தில், அவனது குறிக்கோள்களில் ஒன்றாகிறது.

ஆனால், அதிலுள்ள சிரமங்களை அவன் ஆழ அறிந்தவனாகவே இருக்கின்றான் – கார்க்கி போன்றே.

வான்கோவுக்கு முன்னதாக Millet (1814-1866), Lhermitte (1844-1925), Meunier (1831-1905) ஆகியோர் விவசாயிகளின் வாழ்வை நாடி பிடித்துப்பார்க்கத் தவறவில்லை. ஆனால், அவர்களது சித்திரம், விவசாயிகளின் வாழ்வை எட்டிப்பார்க்கவே செய்தது எனலாம்.

1866ல் Millet> நாள் முடிவில் களைத்துப்போன விவசாயியையும் அவனது மனைவியையும் தன் சித்திரத்தில் உள்ளடக்கி இருந்தார்.


ஆனால், இதனையே வான்கோ 24 ஆண்டுகள் கழிந்தபின் 1890ல், மீண்டும் தீட்ட முற்பட்டார். இதே காட்சியை அவர் காண்பதும், காட்சிப்படுத்துவதும், அதற்காய் அவரது தூரிகை அசைந்த விதமும் வேறுவிதமாகயிருந்தது.


இதே போன்று 1850ல், Millet ‘விதைப்பவன் (Sower)’ குறித்த ஓவியத்தை வரைந்தார்.

இதனையே சரியாக ஒரு 33வருடங்கள் கழிந்த நிலையில், 1888ல், வான்கோ இதனை வரைய நேரிட்டது.

வான்கோவின் ஓவியத்தில், ஓர் இளம் சூரியன், பிரகாசமாய் முழுமைப்பெற்று உலகின் அனைத்து அவதரிப்புகளுக்கும் அடித்தளமாய் அமைகின்றது எனக் காட்டப்படுகின்றது.

அதாவது, விவசாயின் வாழ்வு, இந்த விதைப்பவனின் வாழ்வு, எப்படி உலகுக்கு அடித்தளமாய் அமைகின்றது என்ற புரிதல் இவ்ஓவியத்தில் ரம்மியமாய் வெளிப்படுவதாக உள்ளது.

கிட்டத்தட்ட, இவ்விதைப்பவன் குறித்த, தலா பத்து ஓவியங்களை வான்கோவும் இதனைப்போன்றே மிலேயும் தீட்டியுள்ளனர்.

வான்கோவின் கூற்று :

“மிலே (Millet), விவசாயியினது சாரத்தைத் தர முயற்சிக்கின்றார்… பின்னர் Lhermitte… Block… மேலும், இன்னும் சிலரும் இருக்கவே செய்கின்றனர்… பின் Meunier…ஆக விடயம் இதுதான் எனில், பொதுவில் விவசாயியை நாம் பார்த்தறிய கற்றுவிட்டோமா என்றால், இல்லை… கிடையவே கிடையாது… இவ்விடயத்தை வெற்றிக்கொள்வது எப்படி என்பது யாருக்குமே பிடிபடாத விடயமாய்த்தான் இருக்கின்றது…

“Lhermitte… Block… இவர்கள் பொதுவில் எதைத்தான் பார்க்க விழைகின்றார்கள்? சூட்டின் வெம்மையைத் தவிர?…”

“சரி, நான் இப்போது ஓரளவிற்கு விடயங்களைச் சிறிதளவு தெளிவாகப் பார்க்கக் கற்றுக்கொண்டுள்ளேன். என்றாலும் இது நீண்ட நாட்கள் எடுக்கக்கூடிய சங்கதித்தான்”.

“Gauguin இச்சிக்கலை வெற்றிக்கொள்ளவில்லை என்றால், நானாகத்தான் இதனைச் சமாளித்தாக வேண்டும் என்றாகின்றது… நல்லது. விடயம் அதுவாகத்தான் இருக்க வேண்டுமென்றால், அது அப்படியே இருந்தாகட்டும். ஆனால், அதற்காய், நான் இங்கே, விவசாயிகளின் மத்தியில் இருந்தாக வேண்டி உள்ளது.”

இது, இவ் ஓவியங்கள், விவசாயிகள் பொருத்து முன்னெடுக்கப்பட்ட தேடல்களை வகைப்படுத்துவதாக இருக்கின்றது.

இதேபோன்று கார்க்கி பின்வரும் பொருள்பட கூறுவார் :

“ஓர் ஐம்பது ஆண்டுகால இடையறா முயற்சிகள், ரஷ்ய விவசாயின் தூக்கத்தைக் கலைத்து, விழிப்பு நிலையை, எட்டச்செய்துள்ளது. இனி விழித்துள்ள இவனின் ஆன்மாவின் நிலைதான் என்ன?”

ஆன்மாவின் விழிப்புநிலை குறித்து டால்ஸ்டாயின் கூற்று :

“மனநிம்மதி – இது ஆன்மாவின் இழிநிலை. வதைப்படுத்தலும், குழம்ப்பிக் கலங்குதலும், தூக்கி எறிதலும், எந்நேரமும் போராடுதலும், இழப்புக்கு உள்ளாகுதலும் இன்றி அமையாதவை. மனநிம்மதி… அது…”

ஆக, ஆன்ம விழிப்புநிலை என்பது ஒரு விடயமாகிறது. இரண்டாவது விடயம், இம்முதலாவதைப் போன்றே, கார்க்கியையும் வான்கோவையும் கதைக்க விட்டிருக்கின்றது.

“பொதுவில் நாம் விவசாயிகளைப் பார்க்கக்  கற்றுவிட்டோமா… கிடையவே  கிடையாது… இவ்விடயத்தை வெற்றிக்கொள்வது எப்படி என்பது யாருக்குமே பிடிபடாத  ஒரு விடயமாக இருக்கின்றது. இது நீண்ட நாள் எடுக்கக்கூடிய சங்கதிதான்… ஆனால் அதற்காய் நான் இங்கே, விவசாயிகளின் மத்தியில் வாழ்ந்தாக வேண்டியுள்ளது”.

எனவே, ‘ஆன்ம விழிப்பு நிலை’ என்பது ஒன்று. ‘மத்தியில் வாழ்வது’ என்பது மற்றொன்று. ஆன்ம விழிப்பு நிலை என்பது ன் ஒரு பெருந்துறை சார்ந்ததாய் கொள்ள இடமுண்டு. IGNITED MIND எனக் கலாமும்‘தன்னை வென்றாளும் போதினிலே’ எனப் பாரதியும் கதைத்துள்ளதும் நினைவில் கொள்ளத்தக்கதே. ஆனால், ஆன்ம விழிப்புநிலை என்பது மாத்திரம் இவர்களுக்குப் போதவில்லை என்பது புலனாகின்றது. சம்பந்தப்பட்ட விடயங்களை உள்வாங்கும் மனிதன், உருவெடுத்ததிலும், அவன் இந்த விவசாயிகளின் மத்தியில் வாழ்ந்தாக வேண்டியுள்ளது என்பதே வான்கோவின் வாதமாகின்றது. அதாவது தூரிகை மாத்திரம் அல்ல. அது போதாதது. அதற்கும் மேலாக இவர்களின் வாழ்வைக் கைப்பற்ற வேண்டியுள்ளது. இவ்விரு காரணிகளும் இணைகையிலேயே, ஒருவேளை அந்த ரத்தமும் சதையும் ஒன்றிணைந்த கலைப்படைப்பு உருவாக்குவதாயும் இருக்கலாம். ஒருவேளை, சில சமயங்களில், ஒன்றை ஒன்று கலந்ததாய், அல்லது ஒன்றை ஒன்று கோருவதாயும் இருக்கலாம்.

சிங்கிஸ்  ஐத்மாத்தவ் பின்வருமாறு முடிக்கின்றார் :

“எனது விருப்பு வெறுப்புக்களை எப்படித்தான் என் சித்திரத்தில் உள்ளடக்கப் போகின்றானோ தெரியவில்லை. ஆனால் அதை வீணாக்கி பாழ்படுத்திவிட அஞ்சுகின்றேன்… முதலில் அது ஓர் சித்திரமாக உருப்பெற வேண்டும்… என்னால் ஒன்றுமே வரையமுடியாது என்ற சிந்தனையும் அவ்வப்போது என்னுள் தோன்றாமலில்லை. நினைத்துக் கொள்வேன். விதி என் கரங்களில் ஏன்தான் தூரிகையைத் திணித்தது? சில சமயங்களில் ஒரு மலையை புரட்டும் அளவுக்குச் சக்தி மிக்கவனாய் என்னை நான் உணர்ந்துகொள்வேன். ஆனாலும், ஏனோ, எல்லாமும், எப்போதும் சரிப்பட்டு வருவதில்லை. இருந்தாலும், என் சித்திரத்தை நான் தீட்டத்தான் போகின்றேன். என் உறுதியான தேடலை நான் தொடரத்தான் போகின்றேன்.”

கலையின் உருவாக்கத்தில் உள்ள மர்மங்களை, மேற்படி பகுதி தொட்டு விசாரணை நடத்துவதாய் உள்ளது. அதாவது கலை என்பது வெறும் எண்ணக்குவியல் மாத்திரமல்ல. ஆனால் அதற்கும் மேலாய்… அதற்கும் மேலாய்…!

lux.jothikumar@gmail.com

[தொடரும்]

சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் ‘என் முதல் ஆசிரியர்’ பற்றிய சிந்தனைகள் (2) – ஜோதிகுமார் –

 – ஜோதிகுமார் – ஜோதிகுமார் 10 பிப்ரவரி 2025


இவ் ஓவியனின் தேடலை, தூண்டிவிட்டிருக்கும் கதைவருமாறு:

ஓவியன் சிறுவனாய் இருந்தபோது, பறவைகளின் கூடுகளைக் கலைப்பதற்காகக் குன்றின்மேல் இருக்கும் பாப்ளர் மரங்களின் உச்சிக்கு ஏறுகின்றான். மரங்களின் உச்சியை அடையும் சிறுவர்களின் முன் இயற்கை அப்படியே விரிந்து கிடக்கும். ‘பூமியின் மகத்துவம் எங்களை வியப்பில் ஆழ்த்தும். மங்கிய, சூடேறிய ஸ்டெப்பியின் காற்றில், கன்னிநிலம் ஒய்யாரமாய் படுத்துக்கிடக்கும் – ‘கண் பார்வை எட்டும் வரை ஒரே நீல பூமி… வார்த்தைகளுக்கு அகப்படாத பெரும் நிலப்பரப்பு’ ஆறுகள், தொடுவானத்தருகே மெல்லிய நூலிழையாகி மறையும். மரக்கிளைகளில் நாம் ஒன்றி படுத்தவாறே விண்ணுலகத்து காற்றின் ஓசைகளையும் ரகசியங்களையும் செவிமடுப்போம். இலைகள், அந்த ரகசியங்களை எல்லாம் எம்மிடம் அன்போடு முணுமுணுத்தன.

இப்படியாக, இயற்கையை அன்போடு விசாரிக்கும், இதே சிறுவர்களில் ஒருவன் மரங்களை நட்டவன் குறித்தும் கேள்விகளை எழுப்பிக்கொள்கின்றான்:

‘யார் இந்தமரங்களை, இக்குன்றுகளில் நட்டிருப்பவர்? நட்டவரின் நம்பிக்கை என்ன? அவரது கனவுதான் யாது?’

சிறுவனின் தேடல்கள் சிலவிடயங்களை எமக்குப் புகட்டுவதாய் உள்ளன.

பொட்டல் காடாய் இருந்த இக்குன்றில்தான், ‘தூய்ஷேன்’ பள்ளிக்கூடம் என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தூய்ஷேன், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை, இந்தப் பின்னடைந்த லம்பாடி கிராமத்தினரிடையை (அசோக மித்திரனின் பாஷையில்) பிரதிநிதித்துவம் செய்தவர் என்றும் கூறினர்.

தூய்ஷேன்தான் இந்தப் பள்ளிக்கூடத்தை இங்கு ஆரம்பித்தவராம். இப்போது சாந்தமான தாடிகார தபால்காரராய் இருக்கின்றார் இவர். 1924 இல், இக்கதையின் நாயகிக்கு. 14 வயதாய் இருக்கும்போது ஓர் இளைஞன் போர்வீரனின் மேல்கோட்டோடு, இந்தப் பின்தங்கிய கிராமத்திற்கு வந்துசேர்கின்றான்.

குட்டிப்போட்டால், அக்குட்டிகளையும் குதிரைகளையும், குளிர்காலத்தில் அடைத்துவைக்கும், வசதிபடைத்தோரின் இந்தக் களிமண் குதிரைக் கொட்டிலை, இவர்தான் ஆரம்பப் பள்ளியாக மாற்றியவர். சுற்றிலும் முட்புதர்கள். களைகள். சுவர்கள் மலையில் நனைந்து, நனைந்து கரைந்து இடிந்துபோய் நின்றன. கதவு ஆடிக்கொண்டிருந்தது.

ஆகவே, இவ் இளைஞன் முன் இரண்டு பொறுப்புகள் கிடந்தன. ஒன்று சீரழிந்து போன இம்மண் கொட்டகையை, சின்னஞ்சிறுசுகள் படிக்கக்கூடிய இடமாக எப்படி மாற்றுவது என்பது முதலாவது. அடுத்ததாய், இப்பள்ளிக்கான, சிறுபிள்ளைகள் கூட்டத்தை, இப்பின்னடைந்த கிராம மக்களிடையே இருந்து எப்படி இழுத்து வந்து சேர்ப்பது என்பது இரண்டாவது.

‘முல்லாதான் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருபவர்கள்…’

‘நான் முல்லா அல்ல. படிப்பு சொல்லித்தர, கம்யூனிஸ்ட் கட்சிதான் என்னை அனுப்பி வைத்திருக்கின்றது…’

‘சரி, சரி. உனக்கு விருப்பம் என்றால் படிப்பைச் சொல்லிக்கொடு… எங்களுக்கென்ன…’

‘ஆற்றின் குறுக்கே சிறுபாலம் போட்டாகவேண்டும்…’

எச்சிலைக் காறிப் பல்லிடுக்கு வழியாகத் துப்பிய ஒருவன் கண்ணைச் சுருக்கியப்படி கூறினான்: ‘ரொம்பதான் கத்துகிறாய்… உனக்கு, மென்மயிரில் கோட்டும் இல்லை. குதிரையும் இல்லை. துண்டுநிலமும் இல்லை ஆடோமாடோ ஒன்றுமே இல்லை… ஜீவனமே உனக்கு ஓர் பிரச்சினைதான்…’

‘சம்பளம் தருவார்கள். சிறிதுதான். ஆனால் அதைக் கொண்டு எப்படியாவது வாழ்ந்திடுவேன்…

‘ஓ…ஹோ…சம்பளம் வேறுகிடைக்கின்றதா’ அப்படியென்றால் ஆளை விடு. தலைக்குமேல் வேலை இருக்கு.’

பரட்டைத் தலைப்பெண்ணே! என்ன வாய்ப் பிளந்து நிற்கின்றாய்? ஓடு. வீட்டிற்கு ஓடு…’

இந்தப் பரட்டைத்தலை, பெண்தான் பிற்காலத்தில், உலகம் போற்றும் பேராசிரியர் அல்தினாய் சுலைமானாக, ஒரு பேரவை உறுப்பினராக, ஒரு பல்கலைக்கழகத்தின், தத்துவத்துறையின் தலைவராக மாறி, ஒரு 40 வருடங்கள் கழிந்தநிலையில், இதே பின்னடைந்த பாழும் கிராமத்திற்கு, அதன் புதிய பள்ளித் திறப்புவிழாவிற்கு தலைமைதாங்கும் சிறப்புவிருந்தினராக வருகை தருகின்றார்.

இச்சந்தர்ப்பத்திலேயே, எங்காவது, தனது சித்திரத்திற்கான, உந்துதல், கிடைக்குமா என ஓவியன் தேடித் தேடி அலைகின்றான்.

மண் கொட்டகையிலிருந்து, மேலெல்லாம் மண் ஒட்டியப்படி, தூய்ஷேன் உள்ளிருந்து வந்தான்.

‘சிறுமிகளே’ எங்கிருந்துவருகின்றீர்கள்’

நாங்கள் பொறுக்கி, சுமந்துவந்த, சாணமூட்டைகளின் அருகே, வெட்கத்துடன் தலைகுனிந்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்’

‘உள்ளே கணப்பு அடுப்பொன்றை வைத்துள்ளேன்;’ இதைப் பார்த்தீர்களா புகைப் போக்கி… குளிர்காலத்திற்குத் தேவைப்படும் விறகையும் சேகரிப்பதுதான் பாக்கி… தரையில் வைக்கோலைப் பரப்பி, படிப்பை ஆரம்பித்துவிடலாம். உங்கள் எல்லோருக்கும் படிக்கவிருப்பம்தானே? வருவீர்கள்தானே…?’

‘மற்ற குழந்தைகளையும் நீ அழைத்துவருவாயா?…’

அரிவாலையும், கயிறையும் எடுத்துக்கொண்டு தூய்ஷேன் வயலுக்குக் கிளம்பி விட்டார், வைக்கோல் எடுத்துவர. நாங்கள் மூட்டைகளை முதுகில் ஏற்றிக்கொண்டு கிராமத்திற்குப் புறப்பட்டுவிட்டோம்.

‘நில்லுங்கடி. இந்தச் சாணத்தை எல்லாம் பள்ளியிலேயே கொட்டிரலாமா?. குளிர்காலத்தில் எரிக்கலாம்…’

சூரியன் மலைகளுக்குப்பின் மறைந்துகொண்டிருந்தது… என் பாதைக்கு அது இன்று மெருகூட்டுவதாய் இருந்தது. என் காலடி பூமியில்… பூமி, இவ் இலையுதிர் காலத்தில் பழுப்பு, சிவப்பு, ஊதா நிறங்களில் எல்லாம் மின்னத் தொடங்கிவிட்டது. ஓரமாய் இருந்த மலர் கொத்துகள் கூடத் தீச்சுவாலைகள் போல் ஆடிக் கண்சிமிட்டன… என் கந்தல் ஆடையின் வெள்ளைப் பொத்தான்கள் சூரிய ஒளிப்பட்டுப் பிரகாசித்தன. நான் பூமியையும் வானத்தையும் பார்த்துச் சொன்னேன்: ‘நான் படிக்கப் போகின்றேன்’

இது, பேராசிரியர் அல்தினாயின் இளம்பிராயம்.

மூச்சுத்திணறி, புழுதியிலும் வேர்வையிலும் நனைந்தபடி வீட்டிற்கு ஓடிவந்து சேரும் இவளிடம், சித்தி கையிலிருந்த மூட்டையை பிடுங்கிக் கவிழ்த்தவாறே எரிந்துவிடுகின்றாள்: ‘நாள் முழுவதும் நீ பொறுக்கியது இவ்வளவுதானா?’

‘கறுப்பு ஜென்மமே… எதற்காகப் பள்ளிக்கூடம் பக்கம் போனாய்…’

காதைப் பிடித்துத் திருகி, தலையில் குட்ட ஆரம்பித்துவிட்டாள்…சித்தி.

‘நான் அழ முயன்றேன்… பின் அடுப்பில் விறகுகளை வைத்தப்படியே, சத்தமின்றி, ரகசியமாக என்னுடைய சாம்பல் நிறப் பூனையைத் தடவிக்கொடுத்தப்படி அழுதேன். அந்தப் பூனைக்கு நான் எப்போது அழுதாலும் தெரிந்துவிடும். நான் அழும்போது என் முழங்கால் மீது ஏறி மடியில் அமர்ந்து கொள்ளும்… சித்தி என்னைப் பள்ளிக்கூடத்திற்குப் போகவிடமாட்டாள். அதற்காகத்தான் அழுதேன்…’

‘இறுதியில், பள்ளியில் சேர்க்கும் நாளில், சித்தப்பா, சித்திக்கு ஈவி ரக்கமின்றி அடி கொடுத்தார். அவளது வாய் கொழுப்பிற்காகக் கொடுக்கப்பட்ட அடி, இறுதியில் என்னைப் பள்ளியில் சேர்ப்பதில் முடிவடைந்தது.

‘பலகையை முழங்காலின் மீதுவைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் எழுத வசதியாக இருக்கும்’

‘பென்சிலை எப்படிப் பிடிப்பது என்பதைக் கூட அவர் சொல்லித் தந்தார்.’

ஒருநாள் நாங்கள் எவ்வித உட்பொருளுமின்றிக் கேட்டோம்: ‘லெனின் கையைப்பற்றி நீங்கள் குலுக்கியிருக்கின்றீர்களா?

அவர் குற்றஉணர்வோடு பெருமூச்சொன்றை விட்டார்.

‘இல்லை குழந்தைகளே… நான் லெனினைப் பார்த்ததும் கிடையாது’

அந்நாட்களில் நாங்கள் அவருக்காக உண்மையிலேயே ஏங்கத் தொடங்கி விட்டோம். ரகசியமாக, சித்திக்குத் தெரியாதபடி வேலி ஓரமாய்ச் சென்று நீண்ட நேரம், அவருக்காக ஸ்டெப்பி வழியில் அவர் தனித்து வருவதை உற்றுப் பார்த்தவாறு இருப்பேன்…

குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

முதல் வெண்பனிவிழும் வரை, நாங்கள், ஆற்றைக் குறுக்காகக் கடந்தோம். சில்லிட்டு போன நீர், கால்களை உறையச் செய்தது. கண்களில் நீர்கூட வந்துவிட்டது. அப்போது தூய்ஷன், எங்களைத் தனது முதுகில் ஏற்றியும், கையில் தூக்கியும் ஆற்றைக் கடப்பார்.

சிவப்பு நரியின் மென்மயிர் தொப்பியும், விலையுயர்ந்த ஆட்டுரோம மேல்கோட்டையும் அணிந்தபடி, கொழுத்தக் கருப்பு குதிரைகளின்மீது, மலைகளிலிருந்துவந்த செல்வந்தர்கள் சத்தம்போட்டுக் கூவினர்: ‘பார். ஒருவன் முதுகில். மற்றொருவன் கையில்… ஆ… ஹா… ஹ’…

கண்ணைச் சிமிட்டியபடி சொல்வார்கள்: ‘இரண்டாவது கல்யாணம் செய்திருக்கலாம் என…’

தூஷ்யனோ வசைச் சொற்கள் எதும் கேளாதபடி செல்வார்.

தூய்ஷேன் எவ்வளவோ முயன்றும், ஆற்றின் குறுக்கே அவரால் பாலம் அமைக்க முடியவில்லை. பின் நானும், அவரும் சிறுகற்களைக் கொண்டுபாலம் ஒன்றை அமைக்க முடிவு செய்தோம். நாங்கள் ஆற்றின் குறுக்காகக் கற்களைப் போட்டபோது, தண்ணீர் மிகவும் சில்லிட்டுப்போய் இருந்தது. வெண்பனி வேறு பெய்யத் தொடங்கி இருந்தது. ஆனால் தூய்ஷேன் வெறுங்காலுடன் மூச்சுவிடாமல் வேலை செய்தார். எரியும் கரித்துண்டுகளின்மீது நடப்பது போல் நான் நடந்துசென்றேன். ஆனால், ஆற்றின் நடுவில் சென்றபோது, திடீரென காலில் தோன்றிய வலியால் நான் அப்படியே சரியத்தொடங்கினேன். கத்தவோ நிமிரவோ என்னால் முடியவில்லை. மெதுவாகத் தண்ணீரில் கவிழ ஆரம்பித்தேன். தூய்ஷன், கையிலிருந்த கற்களைப் போட்டுவிட்டு என்னை நோக்கி ஓடிவந்தார். கைகளினால் என்னைத் தூக்கி, கரைக்கு ஓடி, தன் மேற்கோட்டைக் கழட்டி, விரித்து, என் நீலம் பாரித்துப் போன கால்களை தன் கைகளால் தேய்த்துவிட்டார். உறைந்து போன என் கால்களைத் தனது வாயறுகே அழுத்திக்கொண்டு சூடான மூச்சுக்காற்றால் சூடேற்றினார். அதன் பின் அவர் என்னை பங்கேற்க விடவில்லை.

ஆற்றைக் கடக்கும் பாதை தயாரானதும், தூய்ஷேன் காலணிகளை அணிந்துகொண்டு, என்னைப் பார்த்து புன்முறுவல் செய்தார்.

‘குளிர் குறைந்ததா? அன்று பள்ளியில் சாணத்தை விட்டுச் சென்றது நீயா?’

அந்தத் தருணத்தில் என் கன்னங்கள் நெருப்பில் வாட்டியதைப்போல சூடாகின. மகிழ்ச்சி கரை புரண்டோடியது. நான் ஆகாயத்தில் மிதந்தேன்.

‘நீ படித்தால்…’

‘ஓ… கடவுளே… இவரை என் சகோதரனாகத் தான் மாற்றேன்…’

காற்றில், மூச்சுத் திணறி, வெண்பனி குவியல்களின் மேல் தட்டுத் தடுமாறி, செங்குத்தான, அக்குன்றின்மீது ஏறி, தினந்தோறும் நாம் பள்ளிக்குச் சென்றோம். குளிர்காலத்தில், ஒருவர் மாறி ஒருவராய், கணப்பின் அருகே சூடு காய்ந்தோம். அப்படிப்பட்ட குளிர் நாட்கள் ஒன்றில் தூய்ஷேன், கழுகின் இறக்கைகளைப் போன்ற அவரது புருவங்களைச் சுருக்கியப்படி நடந்தார். அவரது முகம் இருண்டு பாறைபோல் இறுகியிருந்தது. ‘லெனின் இறந்துவிட்டார்’.

பள்ளியை, பனிச்சரிவு மூடியதுபோல் ஓர் நிசப்தம். ஓட்டைகளின் வழியே காற்று வீசியடிப்பதுகூட கேட்டது. வெண்பனி, வைக்கோல் கூரை மீது வாரி, வாரி இறைத்தது.

‘குழந்தைகளே. எவ்வளவு அற்புதமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கின்றது தெரியுமா?’ கை கட்டுப்போட்ட நிலையில், லெனின், சுவரிலிருந்து எம்மைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தூய்ஷேன் கண்ணைத் துடைத்தவாறே மெல்லச் சொன்னார்: ‘மாவட்டத் தலைநகருக்கு செல்கின்றேன். வர மூன்று நாட்களாகும்.’

இயற்கை நிம்மதியிழந்து தவித்தது. பூமி புரண்டு அலை மோதியது. பனிப்புயல் சற்றும் குறையாமல் வீசியடித்தது.

நான் அழுதேன். என்னுடைய மௌனக் கூவலை ஸ்டெப்பி செவிமடுக்கவில்லை.

 நூல் நூற்கும்போது கூட, கைகள் சரியாக வேலை செய்ய மறுத்துவிட்டன.  நூல்கள் அறுப்பட்டன.

‘என்ன ஆச்சு? உன் கை என்ன மரக் கட்டையா?’ அவளுக்கு மேலும் மேலும் ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. பொறுமை எல்லை கடந்தது. ஈற்றில் வெடித்துச் சிதறியது. ‘ஒழிந்து போ சனியனே. சைக்கால் பாட்டியின் சாக்குப் பையையாவது கொண்டுபோய் கொடுத்துவிட்டுவா…’.

நான் சந்தோஷத்தில் துள்ளிகுதித்தேன். ஏனெனில் சைக்கால் பாட்டியின் வீட்டில்தான் தூய்ஷேன் வசித்து வந்தார். அவர்கள், ஒருமுறையில், எங்களுக்குத் தூரத்துச் சொந்தம். அவ்வப்போது அங்கு நான் தங்கி விடுவதுமுண்டு.’

‘எவ்வளவு சலிப்பேற்றுகிறாய் நீ. போ… போய் ராத்திரி அங்கேயே தங்கு. என் கண்ணில் படாமல் இருந்தால் போதும். ஓடு…’

சந்தோஷத்தில் நான் துள்ளிக் குதித்தேன் வீட்டைவிட்டு வெளியே பாய்தேன். காற்று ஓர் மந்திரவாதியைப் போல் மூர்க்கம் கொண்டு வீசியடித்தது. முள்ளைப் போல் முகத்தில் குத்தியது. வெண்பனியை வாரி இறைத்தது. நான் சாக்குப்பையை அக்குளில் இடுக்கிவாறு, குதிரைகளின் காலடியில், புதிதாய் ஏற்படுத்தியிருந்த தடத்தின் வழியாக, கிராமத்தின் மறுகோடியை நோக்கி ஓடினேன்.

‘ஆசிரியர் இன்றுவந்திருக்கமாட்டாரா?’ என்ற எதிர்பார்ப்பு ஒன்றே என்னுள் தேங்கியிருந்தது.

பாட்டிப் பயந்து விட்டாள்.

‘ஏன் இப்படி ஓடிவந்தாய்… ஏதும் நடந்துவிட்டதா…’

‘இன்று இரவு இங்கேயே தங்கட்டுமா? சாக்குப் பையைக் கொடுத்துவிட்டு வரச் சொன்னார்கள்.’

‘தங்கு கண்ணே. அடிபாவி. பாட்டியைப் பய முறுத்திவிட்டாயே. நெருப்புப் பக்கத்தில் வந்து உட்கார். இறைச்சியை எடு…’

‘தூய்ஷனும் இப்போது வந்துவிடுவான்’ குளிர்கால காலணியைத் தைத்து பழுதுபார்த்துக் கொண்டிருந்த கர்தன்பாய் கூறினார்.

நள்ளிரவானது. கர்தான்பாய் சோர்வோடு கூறினார்: ‘ஏய் கிழவி படுக்கையை போடு… ஏதேனும் தாமதமாயிருக்கும்…’

‘பனிப்புயல் வீசப் போகிறது’ பாட்டி முணுமுணுத்தாள்.

ஆனால், தூய்ஷன் நடு இரவில், ஓநாய்களிடமிருந்து தப்பி வந்து சேர்ந்தார். அவரது குதிரையை ஓநாய்கள் கிழித்து தின்றிருக்கின்றன. இக்காரணத்தினாலேயே, அவரும் தப்பி வரக்கூடியதாக இருந்தது. மயிரிழையில் தப்பி வந்தவர் துப்பாக்கியைக் கேட்டார்.

எல்லாம் கனவுபோல் இருந்தது. தூய்ஷன் உயிரோடு பாதிப்பின்றி வந்ததே பெரும் பாக்கியம். நீண்ட நேரம் என்னால் பேசவே முடியவில்லை. பதட்டம் தணியும் வரை நான் அழுதேன். தேம்பித் தேம்பி அழுதேன். அக்கணத்தில் அக்குடிசை, அவ் இரவுகள், ஓநாய்கள் குதறிய அவர்களது ஒரே குதிரை, யாவும், ஒன்றும் என் நினைவில் இல்லை. ஒளியைபோல், முடிவற்ற, அளவற்ற அச்சாதாரண மகிழ்ச்சி என் உடல் முழுவதும் விரவி ஓடியது. விசும்புவது கேட்கக் கூடாதென்பதற்காக என் தலையை போர்த்தி மூடி, வாயை இறுக மூடிக்கொண்டேன்.

இருந்தும், தூய்ஷன் கேட்டார்: ‘யார் அங்கே கணப்பின் பின் விசும்புவது…?

அவர் முழங்காலிட்டு, என்னருகே அமர்ந்து, என் தோள்களைத் தொட்டார்: ‘அல்தினாய், ஏன் விசும்புகிறாய்? என்ன ஆயிற்று உனக்கு…?

நானோ அவரை நோக்கி திரும்பி, முன்னைவிட அதிகமாகக் கண்ணீர் விடதொடங்கிவிட்டேன்.

‘என்னைப் பாரு’

நான் தூய்ஷேனை, இறுகக் கட்டிபிடித்து, அவரது தோள்களில், என் ஈரமான முகத்தைப் புதைத்துத் தேம்பி அழத் தொடங்கிவிட்டேன்.

‘ஏய் கிழவி… எதையாவது மந்திரி… அவளுக்கு நெஞ்சு வலித்து விடபோகிறது.

சைக்கால் பாட்டி, ஏதோ மந்திரம் சொல்லி, என் முகத்தில். குளிர் நீரையும், வெந்நீரையும் மாற்றி மாற்றி அடித்தாள்.

மகிழ்ச்சியால் என் நெஞ்சு வலித்தது என்ற உண்மை மாத்திரம் அவர்களுக்கு தெரிந்திருந்தால்…

பனிக்காலம் மறைந்து கொண்டிருந்தது… அநேகமாக இதுவே என் பதின் பருவத்தின் முதல் வசந்தமாயிருக்க வேண்டும்… மலைகளிலிருந்து ஏதோ கைகளை விரித்தப்படி பூமியானவள் ஓடி வருவதைப் போல் இருந்தது… சூரியனும், புகைமூட்டமும், ஸ்டெப்பியும் தொடுவானமும்… பனி உருகியதால், நீல நிறத்தில் மின்னும் சிறு ஏரிகளும், தொலை தூரத்தில் கணைக்கும் குதிரைகளும், வானத்தில் பறக்கும் நாரை கூட்டமும், எம் இதயங்களை எங்கு அழைக்கின்றன?

காரணமின்றிச் சிரித்தோம். சித்திக்கு இம்மகிழ்ச்சி சிறிதும் பிடித்ததாயில்லை. திட்டினாள்: ‘என்னடி முட்டாளே… கும்மாளம் அடிக்கின்றாய். உன் வயதில் எப்போவோ எனக்குத் திருமணமும் முடிந்துவிட்டது. குழந்தை குட்டிகளுடன்… நீயோ பள்ளிக்குப் போவதாய் வேடிக்கை காட்டுகிறாய்… இரு இரு. உன்னை ஒரு வழி பண்ணாவிட்டால் என் மனம் சாந்தியடையாது.

ஆனால், இப்போதெல்லாம், இதை நான் மதித்தேனில்லை. அந்த வசந்த காலத்தில், நான் மேலும் சற்று வளர்ந்து விட்டேன்.

‘பரட்டைத்தலைச் சிறுமி’: தூய்ஷன் கூட சிரித்தார். பெரியவளாகி, மணப்பெண்ணானதும் இப்படியா நானிருப்பேன்-பரட்டைத்தலையோடு? அப்போது சித்தி பார்ப்பாள் – நான் எவ்வளவு அழகாய் இருக்கின்றேன் என.

ஆனால், ஒருநாள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முற்றத்தில் இரண்டு கொழுத்த குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. சேனங்களைப் பார்த்தால், மலையில் இருந்து வந்தவர்களாய் இருக்கவேண்டும்.

வாசலில் நுழையும் போதே சித்தி நமுட்டுச்சிரிப்புடன் கூறிக்கொண்டிருந்தாள்: ‘ரொம்பதான் சங்கடப்படாதே மருமகனே. இந்தப் பறவை உனக்குத்தான்… என்ன கண்ணே வந்துவிட்டாயா? வாம்மா! உள்ளேவா!’

அவர்கள் வோட்கா பாணம் அருந்தினர். இறைச்சி சாப்பிட்டனர். சீட்டு விளையாடினர். என்னுடைய சாம்பல் நிறப்பூனை மெத்தை விரிப்பின் மீது ஏறப்பார்த்தபோது, அந்தச் சிவப்பு முகத்தான் தன் கை விரல்களைப் பொத்தி, அதன் தலையில் ஓங்கி ஒரு அடி விட்டான். அது பயங்கரமாய்க் கத்திக் கொண்டு, துள்ளிக்குதித்து, மூலையில் பதுங்கிக்கொண்டது.

‘மகளே, பாத்திரத்தில் சாப்பாடு வைத்திருக்கின்றேன். சூடு ஆறுவதற்குள், போய் சாப்பிடும்மா…’

சித்தியின் நடத்தை பெரும் செயற்கையாக இருந்தது. நிம்மதியற்று என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. என்னை அறியாமல் நான் எச்சரிக்கையானேன். இரண்டு மணிநேரம் கழித்து, குதிரைகளில் ஏறி, அவர்கள் மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்,

ஒருநாள், சைக்கால் பாட்டி, சித்தியின் வீட்டிற்குவந்தாள். இருவரும் காராசாரமாக எதைப் பற்றியோ சண்டைபோட்டனர்: ‘நீ அவளை அழிச்சுடுவே…’

மறுநாள், தூய்ஷேனின் முகம் இருண்டு கிடந்ததையும், அவர் ஆழ்ந்த சிந்தனையுடனும், கவலையுடனும் இருப்பதையும் அவதானித்தேன். புறப்படும்போது கூறினார்: ‘அல்தினாய் நில்… வீட்டிற்குப் போக வேண்டாம்… இப்போதைக்கு எங்களுடனேயே இங்கே தங்கு…’ எனது முகமும் இருண்டிருக்க வேண்டும். ‘பயப்படாதே’. சிரித்துக்கொண்டே சொன்னார். ‘நீண்டதூரம் தனியாகப் போகாதே… பள்ளிக்கு வழமைப் போல் வா… படி…’

ஆனால், என் சித்தி எப்போது வேண்டுமானாலும் வலுக் கட்டாயமாக என்னைத் தூக்கிச் செல்ல முடியும். இதுவும் எனக்குத் தெரிந்த ஒன்றே. தூய்ஷேனுக்கும் இது புரிந்திருக்கும்,

மறுநாள் இரண்டு மரக்கன்றுகளைப் பள்ளிக்கு எடுத்து வந்தார். இந்த பப்ளர் மரகன்றுகளை இங்கே நாம் நடலாம்… நீ வளர்ந்து முடிக்கையில், இவையும் பெரிய மரங்களாகி விடும்… நீ படிக்கும் விதத்தைப் பார்த்தால் ஓர் விஞ்ஞானியாய் உருவெடுப்பாய் என என் உள்மனம் கூறுகின்றது… நன்றாய் படி…’

மலையடிவாரத்தில் காற்று வீசியடித்தது. சின்னஞ்சிறு பப்ளர் மரக்கன்றுகள் அக்காற்றில் நடுநடுங்கி ஆடின. ஒரு புதிய உணர்வு என்னுள் பீரிட்டுக் கிளம்பியது. ‘அன்புள்ள ஆசிரியரே… உங்களுக்கு நன்றி… உங்களைப் கட்டிப்பிடித்து முத்தமிட விரும்புகிறேன்…’ ஆனால், அப்படி நான் சொல்வதென்பது எனக்கு அப்போது வெட்கமாய் இருந்தது. ஒருவேளை வெட்கத்தைவிட்டு அப்படி நான் சொல்லியிருக்க வேண்டுமோ… தெரியவில்லை…’

திடீரெனக் காதில் விழுந்த குதிரைகளின் குளம்படிசத்தம் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. கதவு படார் எனத் திறந்தது. பள்ளிவாசலில் சித்தி நின்றாள். ‘உனக்கு என்ன வேண்டும்’. ‘உனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. என்னுடைய பெண்ணை நான் திருமணம் செய்துதரப் போகின்றேன். ஏய் அநாதையே…’ சித்தி எனை நோக்கி வர, தூய்ஷேன் குறுக்கிட்டார்: ‘இது பள்ளிக்கூடச் சிறுமிகள் இருக்குமிடம். யாருக்கும் இங்கே திருமண வயது வந்து விடவில்லை…’

இருந்தும் சித்தி, அல்தினாவை, மலையிலிருந்து வரும் கரும்படை செல்வந்தர்களிடம் ஒப்படைத்தாள். அவர்கள் தூய்ஷேனைக் காயப்படுத்தி, அவரது கையையும் உடைத்து அவரை ஒரு குட்டையில் தள்ளியபின், அல்தினாவைக் குதிரைகளில் கடத்திச்சென்று, மலையில், ஓரு கூடாரத்தில் அடைத்து வைக்கின்றனர்.

அங்கிருக்கும் அடிமை போன்ற ஒரு கருப்புப் பெண்மணி, அல்தினாவின் தோள்களை உலுக்கி, அவளை எழுப்புகின்றாள். அந்தக் கருப்புப் பெண்மணியின் உயிரற்ற கண்கள் அல்தினாவிற்குக் கல்லறையை மாத்திரமே நினைவுப்படுத்தின. அன்றிறவு, அவளது பதினைந்தாவது வயதில் அல்தினா தன் கற்பைப்பறி கொடுக்கின்றாள். எது நடந்தாலும் சரி என மூன்றாம் இரவில் கூடாரத்திலிருந்து தப்பிப்போகும் எண்ணத்துடன், கூடாரத்தை ஒட்டியிருக்கும் நிலத்தைத் தோண்ட ஆரம்பிக்கின்றாள். நகங்கள் விரல்கள் யாவும், மரத்து இரத்தம் வடிய வடிய…

ஆனால் எங்கிருந்தோ குதிரைகளில், மூவர் அக்கூடாரத்தை அணுகுகின்றனர். அதில் ஒருவனுக்குத் தலையில் கட்டு. தூய்ஷேன். மற்ற இருவரும் சிகப்புப் கோடுகள் இட்ட மேல்கோட்டுகளை அணிந்திருக்கின்றனர்.

குடி போதையில் தூங்கும் சிகப்பு முகத்தானை எழுப்பி, திமிரும் அவனைக் குண்டுகட்டாகக் கட்டிக் கைது செய்கின்றனர். தூய்ஷேன், அல்தினாவைக் கிராமத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றார்.

சல சலவென்று ஓடிக் கொண்டிருந்த ஓர் தெளிந்த சிற்றாறின் அருகே தூய்ஷேன் கூறினார்: ‘அல்தினாய் குதிரையில் இருந்து இறங்கு. இதோ சவர்க்காரம். தாராளமாய் போட்டுக்கொள். நான் அப்பக்கமாய் சென்று குதிரையைப் புல் மேய்க்க விடுவேன். ஆடையைக் கழற்றி விட்டு, நீ ஆற்றில் குளிக்கலாம்… பாரம் குறையும்’.

நான் தலையை ஆட்டினேன். ஆடைகளை மெதுவாக கழற்றிவிட்டு, கவனமாக ஆற்றில் இறங்கினேன். எனது கால்களில் நீல நிற நீரலைகள் வந்து வந்து மோதின. படிகம் போன்ற, நிர்மலமான அந்நீரலைகளை ஏந்தி மார்பின் மீது அள்ளிதெளித்துக் கொண்டேன். குளிர் நீர் என்னைச் சில்லிட்டுச் சிலிர்க்கச் செய்தது. மீண்டும் மீண்டும் மெதுவாய் தண்ணீரை வாரி அடித்த பின், ஆற்றின் ஆழத்தை நோக்கி படிபடியாக சென்றேன். மூழ்கினேன்: ‘நதியே, இந்நாளின் மொத்த அழுக்குகளையும் அடித்து செல்வாய். என்னைத் தூய்மையானவளாக ஆக்கு. நீ நிர்மலமாய் இருப்பது போலவே…’ இப்படியாய் ஏதேதோவெல்லாம் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டேன். ‘இந்தபூமிக்கு, இந்தச் சூரியனுக்கு நன்றி’ இருநாள் கழித்து தூய்ஷேன் என்னைப் புகை வண்டி நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்: ‘படி, படி நன்றாகப் படி’ தூய்ஷேன் கூறிக்கொண்டே ரயிலுடன் ஓடிவந்தார்… ‘நீ பெரியவளாகி இங்கே வரும் போது…’

புகைவண்டி சுரங்க வழியைக் கடந்து, நேராக திரும்பி, ஸ்டெப்பி சமவெளியைக் கடந்து, என் புதிய வாழ்க்கையை நோக்கி அழைத்துச் சென்றது.

நான் தொழில் துறையில் படித்தபோது, அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் அவரை நான் நேசிப்பதையும், காலம் முழுவதும் அவருக்காகக் காத்திருக்கப் போவதாகவும் நேரடியாகவே அதில் நான் குறிப்பிட்டேன். ஆனால் அவர் அக்கடிதத்திற்குப் பதில் கடிதம் எழுதினாரில்லை. ஒருவேளை, எனது படிப்புக்கு அது இடையூறாக இருக்கலாம் என்ற கருத்தில், அவர் தொடர்பைத் தவிர்த்துக் கொண்டாரா என்பதும் தெரியவில்லை. என் முதல் ஆய்வுரையை மாஸ்கோவில் சமர்ப்பித்தேன். ஃபுரூன்ஸே நகரத்திற்கு இடம்மாறி சென்றபோது, என் சொந்த கிராமத்திற்கு ஒருமுறை சென்றேன். அனைத்துமே மாறியிருந்தன. புதிய கிராமங்கள், புதிய வயல்கள், புதிய சாலைகள். புதிய பாலங்கள்…

எத்தனை வருடங்கள். கிராமம் நெருங்க நெருங்க நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். நான் அறியாமலேயே, பள்ளி இருந்த குன்றை நோக்கி என் பார்வைத் திரும்பியது. மூச்சே நின்றுவிடும்போல் இருந்தது. இரண்டு பாப்ளர் மரங்கள் இப்போது காற்றில் மெதுவாக அசைந்தாடிக் கொண்டிருந்தன. என் கண்ணீரைப் பார்த்த வண்டியோட்டி கவலையுடன் கேட்டார்: ‘என்ன ஆச்சு?’

நீண்ட நேரம் அங்கேயே நின்று, இலையுதிர்கால இலைகளின் ஓசையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். கால்வாய் முழுவதும் தெளிந்த நீர் சலசலத்துக் கொண்டிருந்தது. அதில் பப்ளர் மரங்களின் பழுப்புநிற இலைகள் மிதந்து வந்துக் கொண்டிருந்தன.

ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. நான் என் கிராமத்திலிருந்து, பள்ளித் திறப்பு விழா முடிந்ததும், திடீரென ஏன் புறப்பட்டுச் சென்றேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்காது. வெட்கம்தான். என் மனநிலை பெரிதும் பாதிப்புற்றிருந்தது. முதலாவதாகப் புதிய பள்ளித் திறப்பு விழாவில் என்னைவிட தூய்ஷேனுக்கே அதிக உரிமை உண்டு என எண்ணினேன். இந்தப் பள்ளிக்குக்கூட ‘தூய்ஷேன் பள்ளி’ எனப் பெயர் சூட்டுவதே பொருந்தும் என்பேன்.

ஜன்னல்களை நான் அகலத் திறக்கின்றேன். தூய காற்று உள்ளே நுழைகின்றது. என் சித்திரத்தில் முதல் நிலை மாதிரிகளைப் பார்வையிடுகின்றேன். முக்கியமானதை, இப்போது நான் கண்டுபிடித்துவிட்டேனா? சிந்தனையில் ஆழ்கின்றேன். ஆனாலும் என் சித்திரத்தை நான் தீட்டத்தான் போகின்றேன். எதை? எப்படி?? தேடத்தான் போகின்றேன்-ஆரம்பத்திலிருந்தே. ஆனால் இக்கதையை நான் பாழ்படுத்தி விடக்கூடாது. அதற்கான உரிமை என்றுமே எனக்கில்லை என்பதும் எனக்கு தெளிவான ஒன்றே.

இதுவே ஐத்மாத்தாவின் கதையாக இருக்கின்றது. அதாவது, அவரது ஓவியனும் சரி, அல்லது, ஓவியனின் சித்திரமும் சரி, அல்லது அவ்ஓவியனை ஊக்குவிக்கும் இந்த கதையும் சரி-இவையனைத்துமே மனிதன் தனது வரலாற்றில், படைத்த, ஒரு காலகட்டத்தின் கதையாகவே இருக்கின்றன. இக்காரணம் தொட்டோ என்னவோ, இக்கதையானது, எமது தமிழ் இலக்கியங்கள் சிலவற்றுடன் ஒப்புநோக்கும் சாத்தியங்களையும் உட்கொண்டு இயங்கத் தலைப்படுகின்றன எனலாம்.

[தொடரும்]

lux.jothikumar@gmail.com


தேடுக …

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-7991655495136787&output=html&h=280&adk=3719208069&adf=2523620981&pi=t.aa~a.4033815752~rp.4&w=1140&abgtt=9&fwrn=4&fwrnh=100&lmt=1741055760&rafmt=1&to=qs&pwprc=5689402745&format=1140×280&url=https%3A%2F%2Fwww.geotamil.com%2Findex.php%2F2021-02-13-00-58-35%2F2021-12-04-18-55-58%2F8984-3-3&fwr=0&pra=3&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=40&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTMzLjAuNjk0My4xNDIiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siTm90KEE6QnJhbmQiLCI5OS4wLjAuMCJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjEzMy4wLjY5NDMuMTQyIl0sWyJDaHJvbWl1bSIsIjEzMy4wLjY5NDMuMTQyIl1dLDBd&dt=1741055745065&bpp=2&bdt=653&idt=57&shv=r20250303&mjsv=m202502250101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D0935c68272c1b04f%3AT%3D1733083392%3ART%3D1741055335%3AS%3DALNI_MZXwkNVShCGSsJ5GUa_zrIvJ13jGQ&gpic=UID%3D00000f6f3e2c2c2f%3AT%3D1733083392%3ART%3D1741055335%3AS%3DALNI_MZiafSa_gQZoay-hWiMb69RIkByIg&eo_id_str=ID%3D0ff2f3a13af39c61%3AT%3D1733083392%3ART%3D1741055335%3AS%3DAA-AfjZ5ZiE1gDqx6KtgrJoEx-8x&prev_fmts=0x0&nras=2&correlator=6099848907130&frm=20&pv=1&u_tz=-480&u_his=1&u_h=720&u_w=1280&u_ah=680&u_aw=1280&u_cd=24&u_sd=1.5&dmc=8&adx=62&ady=476&biw=1263&bih=593&scr_x=0&scr_y=0&eid=31090698%2C95354313%2C95354325%2C95354336%2C95350015%2C95353783&oid=2&pvsid=4340742803364028&tmod=1834195402&uas=0&nvt=1&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1280%2C0%2C1280%2C680%2C1280%2C593&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=2&uci=a!2&fsb=1&dtd=62

ஜோதிகுமார்

சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் ‘என் முதல் ஆசிரியர்’ பற்றிய சிந்தனைகள் (3) – ஜோதிகுமார் –

 – ஜோதிகுமார் – ஜோதிகுமார் 17 பிப்ரவரி 2025



ஜெயகாந்தனின், சில நேரங்களின் சில மனிதர்களின், ‘கங்காவின்’ முகமே இறுதியில் மாறிவிடுகின்றது. குடிக்கின்றாள், சிகரெட் பிடிக்கின்றாள். அவளது உதடுகள் கூட, மனுவலின் உதடுகள் போலவே கருமைத் தட்டி போகின்றது.

முன்னுரையில், ஜெயகாந்தன், பின்வரும் பொருள்பட எழுதுவார்: “இப்படியெல்லாம் நடக்குமா? இப்படியெல்லபம் நடக்கிறதா? இப்படியெல்லாம் நடக்கலாமா? இக்கேள்விக்கெல்லாம், வாழ்க்கையானது ‘ஆம் ஆம்’ என பதில் கூறுகிறது.

இதே கேள்வியை, ஐத்மாத்தாவும், கையில் எடுத்துள்ளார் எனலாம்.

மனுக்குலத்தின் காலம் முழுவதிலும், மனிதர்கள், வாழ்க்கைத் தொடர்பில், ஜெயகாந்தன் எழுப்பிய இதே கேள்வியை கையில் எடுத்து பதில் வழங்கியுள்ளனர்.

ஐத்மாத்தாவும், தன் பங்குக்கு இதே கேள்வியை பரிசீலித்துள்ளார். ‘வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்குமா? இது சாத்தியமா? வாழ்க்கை இப்படியும் மாறுமா? அல்லது மாறி அமையுமா’-இதுவெல்லாம் ஐத்மாத்தா எழுப்பிய கேள்விகளின் சாரமாகின்றது.

இவ் அடிப்படையிலேயே அவர் தனது ஓவியத்தையும் தீட்ட முனைந்துள்ளார்

அதாவது, அவரது இந்த ஓவியத்திற்கும், தமிழ் இலக்கியம், இதுவரை முன்னிறுத்தி இருக்கக்கூடிய ஓவியத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் எம்மை சிந்திக்கவே செய்கின்றன.

அக்கினி பிரவேசத்தின் முடிவை மாற்றி எழுதிப்பார்த்தேன். இப்படி நடக்குமா? ஆம்,ஆம் என பதில் கூறியது வாழ்க்கை.

கேள்வி: அப்படியெனில், இவ்வாழ்க்கையை கட்டுவித்தது யார்? இதே மனிதன் தான். விடை இதுவெனில், இதனை மாற்றி அமைக்க வேண்டியதும் அவனது கடமையாகின்றது.

இதனையே ஐத்மாத்தாவும், இக்கால கட்டத்தில், தனது எழுத்துக்களில் படம் பிடித்து காட்ட முயன்றுள்ளார்.

அவரது பார்வையில், இம்மாற்றங்களுக்கு எதிரான சக்திகள், இம்மாற்றங்களை தடுக்க முனைவதும், தடுக்க போராடுவதும் இயல்பானதாகின்றது. எனவேதான். இச்சக்திகளுக்கு எதிராகவும் போராட மனிதன் விதிக்கப்படுகின்றான். ‘புதிய ஆத்திச்சூடியை’ பாரதி படைத்தது அவனது விருப்பம் என்பதிலும் அவன் எதிர்கொண்ட கட்டாயம் என காண்பதே அறிவு. ஐத்மாத்தாவின் நாயகியும், அக்கினி பிரவேசத்தின், நாயகி போன்றே, தன் பதினைந்தாவது வயதில், தன் கன்னி தன்மையை பறிகொடுக்க நேரிட்டது, ஆனால் அவளை தூக்கி நிறுத்தி, ஆற்றுப்படுத்தி, ஒரு குழந்;தைகள் இல்லத்தில் சேர்ப்பித்து, அவளை ஈற்றில் உலகம் போற்றும் ஒரு பேராசிரியராக, மாற்றக்கூடிய அரசியல் சுவாத்தியத்தை, ஜெயகாந்தன் காலத்து மனிதர்கள் உருவாக்கியதாக இல்லை. அவரது எழுத்துக்களும் கூட அத்திசையை நோக்கி நகர்ந்தனவாகவும் இல்லை. ஆனால் ஐத்மாத்தாவின் காலத்து மனிதர்கள் வித்தியாசம் கொள்கின்றனர். வாழ்க்கையின் விதிகளை மாற்ற திடம் கொள்கின்றனர். இங்கேயே, ஜெயகாந்தனின் நாயகி, கங்காவும், ஐத்மாத்தாவின் நாயகி அல்தினாயும் வித்தியாசமான முடிவுகளை பெறுகின்றனர். இதற்கமையவே, இவ்விரு எழுத்தாளர்களும் தமது பரஸ்பர சித்திரங்கனை தீட்ட முனைந்துள்ளனர் எனலாம்.

அக்கினி பிரவேசம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் வரிசையில் மூன்றாவதாய் ‘கங்கை எங்கே போகின்றாள்’ என்பதனையும் ஜெயகாந்தன் எழுத நேரி;ட்டது. முடிவு: ‘ஐயோ! இதென்ன?… யாரோ என்னை ஜலத்துள்ளே இழுக்கறாளே… நான் ஜலத்துள்ளே, நதியிலே, கங்கைக்குள்ளே போயிண்டேயிருக்கேனே… Gulp… முழுங்கு, கொழந்தே, முழுங்கு… பேரின்பமான மரணம் மகளே…’

காலத்தின் அலைகளால், ஏற்றுண்டு, ஓய்ந்து போன‘  ஓர் ஆத்மாவாக எண்ணித் திருப்தியடையாதா, ஐத்மாத்தாவின் காலத்து மனிதர்கள், பிரிதொரு முடிவை அவர் வடித்து தர அவருக்கான அடித்தளத்தை இடுகின்றார்கள்.

ஜெயகாந்தன், தனது ‘அக்கினி பிரவேசத்தை’ முதன்முதலாய் 1970 களில் எழுதினார். ஒரு பிராமண்ய பதின்வயது பாலகி, தன் அறியாதனத்தால், ஒரு மழை நாளில், தன் கன்னி தன்மையை சூதுவாது அற்று பறிகொடுத்தவளாகின்றாள்,

ஐத்மாத்தாவின் கதையிலும், இதனை போன்று நிகழ்வுகள் இட்பெற்றாலும், இங்கே அவளது கன்னி தன்மை பலாத்காரமாய் சூறையாடப்படுகின்றது.

ஜெயகாந்தனது கதையிலும், இதே பதின் வயது பெண்ணின் வாழ்வானது, அஸ்தமிக்கும் போகும் வண்ணம், இவ்வெறி கொண்ட சமூகம் காறி உமிழ்ந்து அவளை ஒதுக்கி வைத்திருக்ககூடிய நிலையில், அவளது கனவுகள், ஆசாபாசங்கள் ஓரங்கட்டப்பட்டு, அஸ்தமிக்கப்படகூடிய ஒரு சூழலில் அவளது அன்னை ஒரு குடத்து நீருடன் வருகின்றாள். அதனை மகளின் தலையில் வார்க்கின்றாள்: ‘மறந்து போ’ என

இவ் அசரீரீயானது, புரட்சிகரமானது-ஜெயகாந்தன் இந்தளவு எழுதியதே, இவ்வெறிகொண்ட சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட பெரும் புரட்சி என வர்ணிக்கப்பட்டது.

பாரதியின் எழுத்துக்களை ஒரு கணம் மறப்போம் எனில், இதனை நாம் கொண்டாடலாம் தான்.

ஆனால், மறுபுறத்தில், ஐத்மாத்தாவின் நாயகிக்கு, அன்னையுமில்லை, தந்தையுமில்லை. முற்று முழுதான ஒரு அனாதை அவள். அதைவிட, ஓர் கொடுமைக்கார சித்தியின் வீட்டில் வளர்பவள். உண்மையில் இக்கொடும் நிகழ்வுக்கு, அச்சித்தியே ஒரு பங்குதாரியாகவும் இருப்பவள்.

இத்தகைய யதார்த்தங்களின் மத்தியிலேயே, அதாவது, அன்றைய சீரழிவுற்ற ரஷ்யாவில்தான், காளி, தன் கடைகண் கொண்டு பார்க்க துணிந்துள்ளாள். ‘குழந்தைகளே, எப்படிப்பட்ட எதிர்காலம் உங்களுக்கு உண்டு’ என கட்டுடனிருக்கும் லெனின், சுவரிலிருந்து கூறுவதும், இதனுடன் காந்தி தனது பொக்கை வாயை திறந்து, புன்சிரிப்புடன், இந்திய பொலிஸ்நிலைய சுவரில் காட்சியளிப்பதும் தகுந்த ஒப்பீடுகளே ஆகும்.

ஒரு குடத்துடன் வருவதை போல வந்து, அல்தினாவை தூக்கி நிறுத்தி, அவளையும் ஓர் ரஷ்ய கங்கையில் மூழ்கி எழ செய்து, தெரிந்தோ தெரியாமலோ, அச்சொட்டாக இதே வார்த்தைகளை கூறி, ‘அதாவது மறந்துபோ’ என்று உபதேசித்து, அவளை ஓர் புகைவண்டியில் ஏற்றி, ஓர் அனாதை இல்லத்தில் சேர்ப்பித்து, படிபித்து, அவளை ஓர் பேராசிரியராக தரம் உயர்த்திய இந்த இளைஞன் அல்லது மனிதன் யார்? ஓர் பின்னடைந்த லம்பாடி கூட்டத்தை சேர்ந்த அபலை பெண்ணை, ஒரு வெறும் போக பொருளாய் மாத்திரமே அல்லது கூடிபோனால் தமது வைப்பாட்டியாக மாத்திரமே வைத்துக் கொள்ள துடிக்கும் ஓர் சமூகத்தில், இல் இளைஞன் யார்-இப்புதிய யுகத்தின் நாயகன் யார் என்ற கேள்வியானது இலகுவில் கடந்து செல்ல முடியாத ஒன்றே ஆகும்.

வ.ந.கிரிதரனின், ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ தொகுதியில் இடம்பெற்றுள்ள  ‘வீடற்றவன்‘ கதையில் இதே எண்ணக்கரு வந்து போகாமலில்லை. வீடற்ற ஒரு நபர், தனது பையில் கிடக்கும், ஓர் இருபத்தைந்து சத நாணய குற்றியை நீட்டி பிடிக்கின்றாள்  ‘ வைத்துக்கொள். உன் பெண் குழந்தைகளுக்காக… அவர்களுக்கு,.. ஓர் அவசர நிலை ஏற்படுமானால்… உன்னை தொலைபேசியில் அழைக்க…’

ஆக, ஓர் ஆணாதிக்க சமூகத்தில், குரல்கள் அவ்வப்போது நசிக்கப்படாமல் இல்லை. ஆனால் வெறும் ஒரு குடத்து நீர் மாத்திரம் விடயங்களை சீர்படுத்தவும் போவதில்லை. இதற்கு முசிறந்த உதாரணம் ஜெயகாந்தனின் கங்காவாகவும் இருததல் கூடும். குடியும், சிகரெட் புகைத்தலும் அல்லது கங்கையில் மூழ்கி ‘பேரின்பத்தை’ எய்துவதுமே தீர்வு என்ற உலகத்திலிருந்து, இந்த புதிய இளைஞனின் வருகையை ஐத்மாத்தா படம் பிடித்தது தற்செயலானதல்ல. கம்யூனிஸ்ட் கட்சிதான் என்னை அனுப்பி வைத்தது என்பான் அவன். இவனது, ‘அக்கினி பிரவேசத்து’ குடத்து நீர், பின்வருமாறு உருகொள்கின்றது: ‘குதிரையிலிருந்து இறங்கு அல்தினாய்… நான் குதிரையை அப்புறமாய் புல் மேய விடுகின்றேன்… நீ குளி… நடந்ததை மற…’

நீல நீரலைகள் என் மீது வந்து வந்து மோதின… கைகளில் நீரை அள்ளி அள்ளி தெளித்துக் கொண்டேன்… குளிர்ந்த நீர் என்னை சிலிர்க்க செய்தது. தெளிந்த நீரின், ஆழத்திற்கு மெது மெதுவாய் செல்ல தொடங்கினேன். நீரலையே… இந்நாளின் மாசுகளையெல்லாம் எடுத்துக்கொள்வாய்… நீ எப்படி தூய்மையாக இருக்கின்றாயோ… அதே போல் என்னையும் தூய்மையானவளாய் ஆக்கிவிடு… என்னையறியாது இப்படியாய் ஏதேதோ எல்லாம் முணுமுணுத்தவாறே நீராட துவங்கினேன்…

புகைவண்டி புறப்பட்டது. தூய்ஷேன் வண்டியோடு ஓடி வந்தார்… படி, அல்தினாய் படி… அவர் குரலெடுத்து கூவினார்.

ஜெயகாந்தனின் நாயகியும், ஒரு நதியில் மூழ்குகின்றாள்தான், ஆனால், அங்கு… ‘முழுங்கு கொழந்தே… மரணம் பேரின்பம்… என்றே கூறப்படுகின்றது. இங்கோ,’ படி அல்தினாய்’ என்று கூறப்படுகின்றது.

ஒருவேளை, இவ்வேறுபாடானது, அதிகமாக காளி கடைக்கண் வைத்ததன் விளைவாக இருக்கலாம். புதிய பாலங்கள், புதிய சாலைகள், புதிய பள்ளிகள், புதிய வயல்கள்…

இனி, ஐமாத்தாவும் குழம்பிபோவது இயற்கைதான். மாறும் இந்த சமூகத்தில் எதனை அவர் சித்திரமாக வடிப்பது.

தெளிவத்தை ஜோசப் போன்றோருக்கு கற்பு பறிபோவது என்பதே ஒரு முழு நாவலுக்கான விடயதானத்தை தந்திருக்ககூடும். (பார்க்க: காலங்கள் சாவதில்லை, 1924)

ஆனால், இங்கோ குறித்த விடயமானது இரண்டே இரண்டு வரிகளால் மாத்திரம் கூறப்படுகின்றது: “என் பதினைந்தாவது வயதில் என் கன்னி தன்மை பறிக்கப்பட்டது.’ ஆங்கில மொழிபெயர்ப்பிலும் கூட இந்த இரண்டு வரிகளாலேயே விடயம் கூறப்படுவதாய் உள்ளது.

ஆக, ஜெயகாந்தன் (1970), தெளிவத்தை (1974), எனத் தொடரகூடிய தழிழ் இலக்கியப்பரப்பில், ஐத்மாத்தாவின் வருகை ஒரு புது ஏற்பாடாக பார்க்கப்படலாம்.

ஆகவே, கேள்வியானது பின்வருமாறு வடிவம் பெறல்கூடும்: இலக்கிய வாதிகளில் இவ்வணுகு முறையை வேறு பிரிப்பது எது? இவ்வித்தியாசங்களை ஏற்படுத்துவது எது?

[தொடரும்]

lux.jothikumar@gmail.com

சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் ‘என் முதல் ஆசிரியர்’ பற்றிய சிந்தனைகள் (4) – ஜோதிகுமார் –

 – ஜோதிகுமார் – ஜோதிகுமார் 25 பிப்ரவரி 2025

1

“என்ன நீங்கள்… … அப்படியெல்லாம் நீங்கள் யோசிக்க கூட வேண்டாம்… யார் மீதுதான் எனக்கு கோபம் வர முடியும்…? என் மீது வேண்டுமனால், நான் கோபம் அடையலாம்…!”

இது, ரயிலில் ஏறும் போது அல்தினாய் கூறுவது.

“உங்களை ஏதோ ஒரு வகையில் புண்படுத்திவிட்டோமோ -இப்படி நீங்கள் எம்மிடமிருந்து உடனடியாக பிரிந்து செல்ல” என்பதே கேள்வி. கிட்டதட்ட ஒரு வாரம் அளவில், கிராமத்தில் தங்கி இருக்கப்போவதாக வாக்களித்திருந்த அப்பேராசிரியர், இப்போது, சடுதியாக, 11 மணி நள்ளிரவில் மஸ்கோவிற்கு பயணமாகின்றார் என்ற முடிவு எதிர்பாராததுதான்.

இந்த திடீர் முடிவுக்கு வரும் முன்னர், அல்தினா அவ்விரு பாப்ளர் மரங்களை உற்று பார்த்த வண்ணம் இருந்தார்.

கண்களை சுற்றி, சுருக்கங்கள் விழுந்துவிட்ட இன்றைய வாடிய முகத்துடன், அவர், அந்த பாப்ளர் மரங்களை பார்ப்பதும், தன்னை மறந்து நிற்கும் தருவாயில்தான், அவ்ஓவியன் அவளிடம் கேட்பான்: “அல்தினா அம்மையாரே… இது இலையுதிர் காலம். இலைகள் இப்போது உதிர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நீங்கள் வசந்தத்தில்; இந்த மரங்களை வந்து பார்க்க வேண்டும். அப்படி பூத்துக்குலுங்கும்”

“ஆம். உயிருள்ள எல்லாவற்றிற்கும் அதனதன் வசந்தமும், அதனதன் உதிர்காலமும் வந்து போவது இயற்கை தான் போலும்…”

இதன் பின்னரே அவள் தனது நீண்ட கடிதத்தை அவ்ஓவியனுக்கு அனுப்பி வைக்கின்றாள்.

கடிதத்தை கவனத்துடன் படிக்கும் அவன், அவளது வாழ்வையும் சமூகமானது அன்றைய தினத்தில் வாழ்ந்த முறைமையையும் தன் ஓவியத்துள் அடக்கப் பார்க்கின்றான். ஆனால், அதுவோ மாறுகின்ற ஒரு சமூகம்.

“பொழுது புலர்கின்றது. என் ஜன்னல்களை அகலத்திறக்கின்றேன். தூய காற்று உள் நுழைகின்றது. என் சித்திரத்தை இப்போதாவது நான் கண்டுபிடித்து விட்டேனா…”

“சிக்கலான-மிகசிக்கலான வாழ்க்கை இது. இவ்வாழ்க்கை தோற்றுவித்திருக்க கூடிய-பன்முக மானுட விருப்பு வெறுப்புகளை எல்லாம் நான் என் சித்திரத்தில் உள்ளடக்குவது… என்பது…”

சோவியத் இலக்கியம் முன்வைத்த கேள்வி இது. இதன் பல்வகை பரிமாணங்களை யார்தான் உள்ளடக்ககூடும்? யார் இதனை எடுத்தியம்பகூடும்?

2

இவ் வரலாற்று தொடர்புபட்ட வினாவைதான் இவ்ஆசிரியர்-அதிலும் சிறப்பாக, அந்த  முதல் ஆசிரியரும்-அந்தப் பிஞ்சி மனங்களிடையே எழுப்புகின்றார். அவர், அவர்களிடை எதை விதைத்திருக்க கூடும்-அன்று அவரது பாத்திரம் அல்லது பங்களிப்பு யாதாய் இருந்திருக்க கூடும் என்பதெல்லாம் வாசகரிடம் மாத்திரமல்லாமல்-ஆனால் வரலாற்றின் கேள்வியும் ஆகின்றது.

கதையின் பிரகாரம், இந்த பேராசிரியர் அல்தினாவிற்கும், ஒரு முதல் ஆசிரியர், என்பவர் அமையவே செய்கின்றார்.

கலாம் கூட, தன் முதல் ஆசிரியரான சிவசுப்பிரமணிய ஐயரை, தனது பிற்காலத்திலும் மறந்தாரில்லை. தானொரு அணு விஞ்ஞானியாக, விண்வெளி ஆய்வாளாராக, ஏவுகணை நிபுணராக, பிற்காலத்தில் வளர்ந்து விட்டிருந்தாலும் தனது சிவசுப்பிரமணிய ஐயரை அவர் மறந்தாரில்லை.

எமது வகுப்பறைக்குள் அவர் நுழையும் போதே அவரது அறிவும் தூய்மையும் அவரில் ஒளிவீச கண்டோம். அவரே எமது வாழ்வினதும் அறிவினதும் திறவுகோல் ஆனார். எமது கனவு உலகையும், அறிவுலகையும் ஒன்றுசேர அவர் அகல திறந்துவிட்டார். அவர் படிபித்த அனைத்துமே, எம் இள நெஞ்சில் அறையப்பட்ட பசு மரத்தாணிகள் ஆயின. …”

ஐத்மாத்தாவின், அல்தினாவும் இப்படி கூறுவாள்: “இந்த விஞ்ஞானத்தை எல்லாம் எப்படி கிரகிப்பது? இதையெல்லாம் எங்களால் கிரகிக்க முடியாதுபோகும் என்ற முடிவுக்கு வந்து சேர்ந்திருந்தேன். ஆனால், ஒவ்வொரு முறையும், இவ்வாறான கடிமான நேரங்களிளெல்லாம், என் மனதில் என் முதல் ஆசிரியர் தோன்றுவார். அவர் என்னுள் விதைத்துள்ள நம்பிக்கை விதைகளையெல்லாம் நான் பொய்யாக்க முடியாது… ஒருமுறை கூட நான் பின்வாங்க போவதில்லை என்று அவரிடம் நான் உளமாற கூறிக்கொள்வேன்..”

நாவலின் பிரகாரம் அவளது முதல் ஆசிரியிர் தூய்ஷன் ஆவார்.

எழுத்துப் பலகையை, எமது சின்னஞ்சிறு முழங்கால்களின் மேல் வைத்துக்கொண்டு எப்படி எழுதுவது என்பது முதல், பென்சில்களை எப்படி பிடிப்பது என்பது வரை அவர் சொல்லி தந்தார்…

விறகு கட்டுகளையும் வைக்கோல் போர்களையும் தன் முதுகில் சுமந்து வந்ததல்லாமல் கிராமத்தினுள் நுழைந்து அனைத்து சின்னஞ் சிறுசுகளையும் பள்ளிக்குத் திரட்டி வந்து… பின்னர் நாடு அன்று போரில் விழுந்த போது போர் முனைக்கும் சென்று…

அவரது மாணவர்களில் பலரும் யுத்தத்தில் மாண்டு போயினர்… ஆனால் அவர்கள், இறுதி வரை சோவியத்தின் உண்மை வீரர்களாக, உண்மைப் புதல்வர்களாக இருந்தனர்.

இன்று யுத்தம் நிறைவடைந்த நிலையில், யுத்த முனையிலிருந்து திரும்பி, இன்று கிராமத்தின் கூட்டு பண்ணையின் ஒரு முதிய தபால்காரராக முற்றுப் பெற்றுள்ளார் எனலாம்.

இப்பள்ளிக்கு, ‘தூய்ஷன் பள்ளி’ என பெயர் சூட்டியிருக்கலாம் தானே… நான் இம்முன்மொழிவை செய்யத்தான் போகின்றேன்… உங்களின் ஆதரவும்… …”

திரு. கனி அவர்கள் மொழிபெயர்த்த, மகாகவி இக்பாலின் வரிகள் வருமாறு:

எம் இதய கிரணங்கள்
சூரியனுடன் சம்பாஷிக்கின்றன…
உடைந்த ஓர் கண்ணாடி துண்டு,
இன்று,
உலகையே பிரதிபலிக்க முயல்கின்றது…
கருணை மேகம்
தன் மேலாக்கை
தோட்டத்திலிருந்து இழுத்தெடுத்து
மறைகையில்
என் ஆன்மாவின்
ஆசை அரும்புகளில்
சிற்சில துளிகளையும்
கொட்டியப்படி சென்று
மறைந்தது…” (இக்பால்: மொழிபெயர்ப்பு: சு.P.ஆ. கனி)

இவ்வரிகள், கலாமின் கூற்றுகளுடனும் ஐத்மாத்தாவின் வார்த்தைகளுடனும் ஓப்பு நோக்கத்தக்கவையே.  ஒரு முதலாசிரியன், சின்னஞ்சிறு உள்ளங்களில் எதைத்தான் எழுதுவது? அவர்களின் நெஞ்சக்கதவுகளையும் எப்படிதான் திறக்ககூடும்-திறந்து….

3

ஒரு சோவியத் முதல் ஆசிரியரின் முன், இரண்டு கடமைகள் இருந்தன.

ஒன்று, இளம் நெஞ்சங்களின் கதவுகளை திறப்பதென்பது. பின், அவற்றிடை சோவியத் கலாச்சாரத்தை எப்படி விதைப்பது என்பதே இரண்டாவதாகும்.

இவற்றின் முதல் கடமை குறித்து அப்துல் கலாம், இக்பால் போன்றவர்கள், மேலே கதைக்க முற்பட்டிருந்ததை பார்த்தோம். இளம் நெஞ்கங்களில் அறிவுலகை கட்டுவிப்பதும், அவர்களின் கற்பனை-கனவுகளை திறந்து விடுவதும் கடமைகளின் ஒரு கூறாகின்றது. இதற்காக, இம்முதல் ஆசிரியர்கள் கொடுக்கும் விலை அசாதாரமானது. தன்னலம் தாண்டிய இவர்களது பங்களிப்புகளால், இவர்களை விட இவர்களது மாணார்கள் உயர்வது சகஜமானது. இவர்கள் ஏணி படிகள் என சமயங்களில் வர்ணிக்கப்படுவதும் வாஸ்துவமே. ஒரு நாகரிகத்தை ஒரு தலைமுறையினரிடமிருந்து மறு தலைமுறையினருக்கு இவர்கள் கட்டி வளர்த்து, உயர்த்தி ஆராவாரமின்றி ஆற்றும் பணி முக்கியமானது. சிவசுப்பிரமணிய ஐயர் வகுப்பறையில் நுழையும் போதே ஒளி வீசியது, தூய்மை பெருக்கெடுத்தது என்றெல்லாம் கலாம் கூறுவதன் பின்னால், இதற்காக இம்மனிதர்கள் கொடுத்த விலை என்ன என்பதே கேள்வியாகின்றது.

ஆனால் இரண்டாவது கடமையானது மனுக்குல வரலாற்றுடன் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் இது தனித்து வாதிக்கப் பட வேண்டியதாகின்றது.

4

ஜெயகாந்தன், தனது ‘அக்கினி பிரவேசம்’ அல்லது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, அல்லது கங்கை எங்கே போகினறாள்’ போன்ற நாவல்களை எழுதியபோது அவர்முன் விரிந்து கிடந்த வாழ்க்கையானது பொதுவானது. ஆனால் ஐத்மாத்தா, தனது “முதல் ஆசிரியர்” என்ற குறுநாவலை தீட்டியபோது அவ்வாழ்வு மாறிப்போயிருந்தது.

ஒரு குடத்து நீருடன்’ விடயங்களை சமாளிப்பது இப்போதைக்கு முடியாததாகின்றது. இனி கங்கா குடிகாரியாக (சில நேரங்களில் சில மனிதர்கள்’) அல்லது ‘மரணமே பேரின்பம்’ என போதித்து கங்கையில் மூழ்குபவளாய் இருப்பதற்கு வாழ்வும் சரி சமூகமும் சரி சம்மதிப்பதில்லை.

அதாவது, காலம் வித்தியாசப்படுகின்றது. மனிதர்கள்  ஒரு புதிய சமூகத்தை சமைக்க முடிவு செய்துள்ளார்கள். பணம், மேலும் ஒரு பொருட்டாக இருக்கப்போவதில்லை. பணம், மனித வாழ்வை ஆட்டி வைக்கவும் போவதில்லை. மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்புக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது.

வேறுவார்த்தையில் கூறின், பாரதியின் மானுட கலகப் பூச்சிகள், இப்படித்தான் தமது காலத்தில் செயற்பட்டுள்ளனர். இவர்கள் புதிய பள்ளியை மாத்திரமல்ல, புதிய பண்ணைகளை மாத்திரமல்ல, ஆனால், இவற்றை ஆக்கும் புதிய மனிதர்களையும் உருவாக்கி விடுகின்றனர்.

காலம் காலமாக மனிதர்களும், மதங்களும் ஆர்வப்பட்ட சுயநலம் கடந்த மனிதர்களை இவர்கள் உருவாக்கி விடுகின்றன. இவர்களின் ஒரு துளியே அல்தினாவும் முதல் ஆசிரியரான தூய்ஷேனும். ஐத்மாத்தா கூறுகின்றார்: ‘தூய்ஷனின் மாணவர்கள் பலர்  யுத்தத்தில் மாண்டு போயினர். ஆனால் அவர்கள் ரஷ்யாவின் உண்மை புதல்வர்களாயிருந்தனர’.

இதனுடனே நாம் ‘ஒரு குடத்து நீரின்’ தார்ப்பரியத்தையும் புரிந்தாக வேண்டியுள்ளது.

5

குடத்து நீரில்’ தேங்கக்கூடிய தார்மீக கோபங்களை கண்டுணரும் அதே வேளை, அதன் எல்லைபாடுகளை காண்பதும் தேவையானதாகின்றது.

இவ்அடிப்படையிலேயே ஒரு தேசியத்தின் கோரிக்கையை (பிரிந்து போகும் உரிமைகள் உள்ளடங்களாக) அல்லது ஒரு ரஷ்ய விவசாயியின் கோரிக்கையை (உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்) அல்லது எமது பெண்ணிலைவாதிகளின் பல்லேறு நிலைப்பாடுகளை வேறுபடுத்தி அல்லது, தனிமைப்படுத்திப் பாராமல் இவற்றையும் ஒன்றிணைத்து ஒரே கலாச்சாரமாகக் கட்டியெழுப்பும் தேவைப்பாடு முன்னிலைக்கு நகர்கின்றது. இக்கோரிக்கைகளில் மிக ஆழமாக ஓடும் மன உணர்வுகளை குறிப்பிடத்தக்க அளவில் உள்வாங்கியவர்களில் தலையானவர் லெனின் என குறிப்பிடலாம். அதாவது ‘பிரம்ம தேவனின் கலை’ என்று கூற வருகையிலேயே பெண் விடுதலை அல்லது தேசிய விடுதலை அல்லது சாதிய விடுதலை, இவை யாவற்றையும் ஒருங்கிணைக்கும் உள்ளம் கொண்ட மனிதர்கள், காலத்தில் உதிக்கவே செய்தனர்.

அதாவது, ஜெயகாந்தன் ஆதங்கப்படும் ‘காலத்தால் எற்றுண்டு எதிர்நீச்சல் போட்ட பெண்கள்’ இனியும் கங்கையில் மூழ்கவோ அல்லது மதுவில் மூழ்கவோ அனுமதிக்க படபோவதில்லை. அதாவது, ‘விட்டுபிரியும்’ மனிதர்களும் இங்கே தோற்றம் கண்டுவிட்டனர். எழுத்தும் இங்கு மாற்றியமைக்க வேண்டிய தேவைப்பாட்டை எதிர்நோக்குகின்றது. இதுவே, ஐத்மாத்தாவின் எழுத்துக்களின் அத்திவாரமுமாகின்றது.

வாழ்வை நம்பிக்கையுடன் பார்ப்பது, இயற்கை அல்லது மனிதனை நேசிக்க ஆரம்பிப்பது இங்கே இயல்பாக நடந்தேறுவதாய் உள்ளது. இதுவே, ஏனைய பல இலக்கிய போக்குகளில் இருந்து இதனை வேறுப்படுத்துவதாகவும் உள்ளது-எமது போர்கால இலக்கியம் உட்பட.

6

மாக்சிம் கார்க்கியின் சோவியத் இலக்கியங்கள், ஐத்மாத்தாவின் சோவியத் இலக்கியங்களிலிருந்து இரண்டு விதங்களில் வேறுபடுகின்றன. ஒன்று, கார்க்கி தன் நாவலான ‘தாயை’ப் படைத்தளித்த போது, நாளை மாற்றத்தை உண்டுபண்ண கூடிய மனிதர்களையும் அதற்காக அவர்கள் தமது ஸ்தாபனத்தை கட்டியெழுப்பும் போக்கினை ஒரு கோர்வையாக கோர்த்துப் படைத்தளித்தார். அம்மனிதர்கள், வியர்வையினையும், ரத்தத்தினையும் ஆறாக சிந்தி, ஓர் சமூகத்தை உருவாக்கிய பின் அதனை உறுதிப்படுத்தும் வகையில், அதற்கெதிராகச் செயற்படகூடிய சக்திகளை தோலுரித்து காட்ட தமது பிற்காலத்தைய எழுத்துக்களை படைக்கத் துவங்கினார். தனது இறுதி நூலான ‘கிளிம்மின் வரலாறு’ உட்பட.

ஆனால் ஐத்மாத்தாவின் எழுத்துக்கள் இவற்றிலிருந்து வேறுபடுகின்றன. ஒரு சின்னாப்பின்னப்படுத்தப்பட்ட சமூகம், தன்னையும் தனது நாகரிகத்தையும் மீண்டும் கட்டியெழுப்பும் பொருட்டு இவரது எழுத்துக்கள் அரணாகின.

மறுபுறம் கார்க்கியின் எழுத்துக்களை உருவாக்கித்தருவதில் ரஷ்ய இலக்கியம் (டால்ஸ்டாய் முதல் புஷ்கின் வரை) என்ன பாத்திரத்தை வகித்திருக்க முடியுமோ அதற்கு சற்றும் குறையாமல் ஐத்மாத்தாவை உருவாக்குவதிலும் இவ்வகை இலக்கியங்கள் ஆழமான பங்குகளை ஆற்றியிருக்கக் கூடும். இதனாலோ என்னவோ எம்மிடம் உள்ள ஒரே செல்வம் எமது இலக்கியம்தான்-எமது, கோயில்கள் அவை என்பதாக கார்க்கி கூறுவார். தமிழ் இலக்கியங்களும் இவ்வகை பங்களிப்புகளை வித்தியாசமான அளவுகளில் ஆற்றாமலில்லை என்பதனையும் இங்கே நாம் சுட்டிகாட்ட வேண்டிய கடப்பாடுடன் இருக்கின்றோம். மகாபாரதம், இராமாயணம், பாரதி என விரிய கூடிய ஒரு பாரம்பரியத்தில் இக்கூற்றுக்கான இடம் இல்லாமல் போகவில்லை. இப்பின்னணியிலேயே நாம் ஐத்மாத்தாவையும் எமது போர்கால இலக்கியத்தையும் ஒப்பிட்டு அணுக வேண்டியுள்ளது. பணி கடினமானதுதான் இருப்பினும் போற்றத்தக்க ஒன்று என்பதில் ஐயமில்லை.

ஐத்மாத்தாவின் ஓவியன் பின்வருமாறு கூறுவான்: ‘எனது சித்திரத்தில் எதைதான் நான் உள்ளடக்குவது… ஜன்னல்களை அகலத்திறக்கின்றேன். புதிய காற்று உள் நுழைகின்றது’. முதல் ஆசிரியனும் இத்தகைய கேள்வியை எம்முள் விட்டுச்செல்வதாக நாம் கொள்ளலாம். இக்கேள்விகள் எம்மையும் ஜன்னல்களை அகலத்திறக்க கோருவதாகவும் இருக்கக்கூடும்.

முற்றும்

lux.jothikumar@gmail.com


Leave a comment