
தாயில் பிறப்பு
பாயில் இறப்பு .
அடக்கமோ பல விதங்களில்.
ஒருவரது பிறப்பு தாயின் கருவறையில் .அதே அவரது இறப்பு பல இடங்களில் பல விதங்களில் .
அவரின் அடக்கம் :இடுவது விடுவது எரிப்பது என்று பல விதங்களில் செய்யப்படுகிறது .
நீரில் இடுவதும்
நெருப்பில் எரிப்பதும் ,
குழியில் புதைப்பதும் ,
தாழியில் அடைப்பதும்
மலையில் குவிப்பதும்
ஆக எல்லோரின் பிறப்பும் ஒரே விதமாக இருந்த போதும் எல்லோரின் அடக்கம் பல விதங்களில் நடைபெறுகிறது .
ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு நாகரித்துக்கும் தகுந்தவாறு மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது .இதில் பார்சி இன மக்களின் அடக்கம் எப்படி செய்யப்படுகிறது என்பதை துல்லியமாக இந்த கதை சொல்லுகிறது .
லைலா மஜ்னு ,அரசன் ஏழையைக் காதல் கொள்வதும் ஏற்றத்தாழ்வுகளிலேயே அன்று முதல் இன்று வரை நடந்து வருகிறது.
ராஜாவின் மகளை கவிஞன் மகன் காதலிப்பான் ;ஏழையின் மகளை குபேரன் காதலிப்பான்;இங்கிலாந்து அரசன் வேற்றுநாட்டு பெண்ணை காதலித்து
அரச முடியைத் துறப்பான் .
அப்படிப்பட்ட நிலையில் தான் ஒரு ஐதிகமான பிராமண குடும்பத்தை சேர்ந்த ஒருவன் பிணத்தை தூக்கிக்கொண்டு செல்கின்ற இனத்திலேயே பிறந்த ஒருவளைக் காதலிக்க வேண்டி அந்த இனத்திலேயே சென்று அந்த தொழிலை செய்ய முனைப்போடும் துணிவோடும் காதலுக்காக செய்கின்றவனின் கதை தான் இது.
பார்சி சமூகத்தில் புறக்கணிப்பிற்கும், ஒதுக்கலுக்கும் உள்ளான பிணந்தூக்கிகளின் வாழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்நாவல் ஒரு காதல் கதை. இறந்து போனவர்களின் உடல்களைச் சுத்தப்படுத்தி, அமைதி கோபுரம் என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்ட பிணந்தூக்கிகள் ஒதுக்கி வைக்கப்பட்டும், ஏழ்மையிலும் வாழ்பவர்கள்.
செப்பியா என்ற பெண்ணுடன் ஏற்படும் காதலுக்காக அந்த வாழ்க்கையை விரும்பி ஏற்கிறான் பார்சி மத குருக்களின் மகனான ஃபெரோஸ் எல்சிதனா. ஒருவரின் நிஜ வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்டுள்ள நாவல் இது.
சாகித்திய அகாதெமி விருது, தெற்காசிய இலக்கியத்திற்கான Dsc பரிசு என்ற சர்வதேசப் பரிசு ஆகிய புகழ்மிக்க இரு பரிசுகளைப் பெற்ற சைரஸ் மிஸ்திரியின் நாவல் இது.
****”
ஆசிரியர் குறிப்பு:
சைரஸ் மிஸ்திரி : புகழ்பெற்ற நாடகாசிரியர், எழுத்தாளர், பத்திரிகையாளர். ‘பெர்சி’ என்ற அவருடைய சிறுகதை, குஜராத்தி மொழித் திரைப்படமாக எடுக்கப்பட்டு 1989ஆம் ஆண்டு சிறந்த குஜராத்தி படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.
****
தமிழாக்கம் செய்த மாலன் அவர்கள் குறித்த குறிப்பு:
படைப்பிலக்கியத்தில் முழுமை கொண்டவர் என்ற பாரதிய பாஷா பரிஷத்தின் விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற எழுத்தாளர், பத்திரிகையாளர் மாலன் இந்த நாவலை மொழிபெயர்த்துள்ளார்.
எழுத்து இலக்கிய இதழ் மூலம் தமிழ்க் கவிதை உலகிற்கும், தமது கவிதைகள் மூலம் எழுத்துலகிற்கும் அறிமுகமானவர் மாலன்.
இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான “பாரதிய பாஷா பரிஷத்’ விருதை முழுமையான படைப்பாளுமைக்காகப் பெற்றவர். சிங்கப்பூர் வழங்கும் ‘லீ காங் சியான்’ புலமைப் பரிசிலைப் பெற்ற முதல் இந்தியரும் ஒரே தமிழரும் இவரே, 2019ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்று தமிழக அரசால் விருதளித்து கௌரவிக்கப்பட்டவர். கம்பன் விருது, கண்ணதாசன் விருது ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்டவர்.
காமராஜர் தலைமையின் கீழ் நால்வர் பணியாற்றினர் .இளம் தளபதிகளாக குமரி ஆனந்தன் ஆனந்தநாயகி பழ.நெடுமாறன் ஆகியோர்.காமராஜர் ஆட்சிக்கு வந்திருந்தால் அவர்கள் அரியனை ஏறி இருப்பார்கள் மந்திரிகளாக .
அரசியலில் அவர்கள் .
இலக்கியத்தில் அது போலவே சுப்ரமணிய ராஜு, பாலகுமாரன் ,மாலன் என்று பிரகாசம். அரசியலில் அவர்களை எனக்கு பிடிக்கும் அதுபோல இலக்கியத்தில் இவர்களை எனக்கு பிடிக்கும் .இப்பொழுது இருக்கின்றவர்களில் மாலன் கவித்துவமானவர் ;தனித்துவமானவர் எனது பார்வையில்.
****
கதை எழுதப்பட்ட விதம் குறித்து இதன் ஆசிரியர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
பம்பாய் பார்சி சமூகத்தினர் பற்றிய ஆவணப்படம் தயாரிப்பதற்கான திட்டவரைவு ஒன்றை உருவாக்குமாறு, சானல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் 1991 ஆம் ஆண்டு என்னைக் கேட்டுக் கொண்டது.
அதற்கான என் ஆய்வின் போது நான் கேட்ட, ஒரு சிறிய ஒதுக்கப்பட்ட ஜாதி பற்றிய கதை என் நினைவில் நிலைத்துவிட்டது.
அது கடந்த நூற்றாண்டில், பிணந்தூக்கி ஒருவரின் மகளை மணந்து கொண்ட துறைமுகத் தொழிலாளி ஒருவரைப் பற்றியது. அந்தப் பெண்ணை அவர் காதலித்தார். அதற்காக தனது வேலையையும் சமூகத்தில் அவருக்கு இருந்த நிலையையும் கைவிட்டுவிட்டு பிணந்தூக்கியாக வேலை செய்து வாழ முன்வந்தார். அந்தத் துறைமுகத் தொழிலாளியின் குடும்பத்தோடு பழி தீர்த்துக் கொள்ள விரும்பிய (அதற்கு) அவருக்கு உரிய காரணங்கள் இருந்தன) அந்தப் பெண்ணின் தந்தையின் வற்புறுத்தல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்தார்.
எனக்கு இந்தக் கதையைச் சொன்னவர் இந்த சாத்தியமற்ற திருமணத்தில் பிறந்த ஆஸ்பி கூப்பர். சாத்தியமற்ற என்று ஏன் சொல்கிறேன் என்றால் அந்த நாள்களில் பிணந்தூக்கிகளின் பணியோடு பிணைக்கப்பட்டிருந்த அறமற்ற இழிவின் காரணமாக எவரும் விரும்பி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டார்கள் என்பதால்தான். (இந்த இழிவை இன்னமும் இந்து மதத்தைச் சேர்ந்த தீண்டத்தகாதவர்கள் எதிர் கொண்டு வருகிறார்கள் ஒரு காலத்தில் பிணந்தூக்கியாக இருந்த ஆஸ்பி, சமூகத்தில் பின்தங்கிய அந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் வழியைக் கண்டு கொண்டவர். நான் அவரைச் சந்தித்த போது அவர் குதிரைப் பந்தய மைதானத்தில் பந்தயம் கட்டுபவர்களுக்கான வெற்றிகரமான தரகராக இருந்தார், இந்தக் கதையின் நாயகன்,முன்னாள் துறைமுகத் தொழிலாளியாக இருந்த அவரது தந்தை மெஹ்லி.
1942ஆம் ஆண்டு, அப்போது இளைஞராக இருந்த, மெஹ்லி, அதுவரை நடந்திராத, பின் எப்போதும் தொடர்ந்திராத பிணந்தூக்கிகளின் வேலை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்து அதை முன்னின்று நடத்தினார். அவர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இரண்டொருநாளில் வேலை நிறுத்தம் பிசுபிசுத்தது.
அவர் மீண்டும்பணியமர்த்தப்பட்ட பின்னர் முற்றிலும் பணிவானவராக, அமைதியானவராக. நாற்பத்திச் சொச்சம் ஆண்டுகளைப் பிணந்தூக்கியாகவே அமைதி கோபுரத்தில் கழித்தார் என்கிறார் அவரது மகன்
அந்த வேலைநிறுத்தம் ஓர் உண்மையான வரலாறாகத்தானிருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றாலும் பார்சி மத அமைப்பை நிர்வகிக்கும் சங்கத்தின் வரலாற்றுப் பதிவுகளில் இந்த வேலைநிறுத்தம் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. அப்போது மிக இளம் வயதில் ஆஸ்பி இருந்ததால், அவராலும் மேலதிகத் தகவல்களைத் தர இயலவில்லை. இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தம் உருவானதற்கான சூழல், அது சென்ற பாதை இவையெல்லாம் முற்றிலும் புனைவே. அதே போல அமைதி கோபுரம் அமைந்துள்ள இடம், அதனுள்ளே உள்ள அமைப்பு இவையும் கற்பனையானவையே. ஏனெனில் இன்றுவரை அதனுள் செல்ல, சொராஸ்டியர்களைத் (பார்சிகளைத்) தவிர மற்றவருக்கு அனுமதி இல்லை.
அடுத்தடுத்து நடந்த முஸ்லீம்களின் படையெடுப்பினால் தங்கள் தாய்நாடான பாரசீகத்திலிருந்து பொதுயுகம் எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்குக் கரையில் வந்திறங்கியவர்கள் பம்பாய் பார்சிகள். பின்னர் பிரிட்டீஷாரின் காலனி ஆதிக்கத்தில் அவர்கள் வளம் பெற்றார்கள். அவர்கள் தங்களது மத சம்பிரதாயங்களையும், வழக்கங்களையும் அண்மைக் காலம் வரை பாதுகாத்து வந்திருக்கிறார்கள். இப்போது எண்ணிக்கையில் மிகக் குறைந்த சமுகமாக ஆகிவிட்ட அவர்கள் மேலும் குறைந்து கொண்டு வருகிறார்கள்
நான் ஒரு போதும் நேரில் சந்தித்திராத மெஹ்லி கூப்பரின் நினைவிற்கு, என் மரியாதையைச் செலுத்தும் பொருட்டு இந்த நாவலை சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
இறந்தவர்களை வழியனுப்ப மரபார்ந்த சொராஸ்டியர்கள் பின்பற்றும் வழிமுறைகளைப் பற்றி, எனக்கு நேரம் ஒதுக்கி, அறிவார்ந்த முறையில் விளக்கியவர் திரு அதி டாக்டர் என்று கூறுகிறார் சைரஸ் மிஸ்திரி அவர்கள்.
****
எனது கிராமத்தில் முதல் வகுப்பு இரண்டு மாதம்தான் படித்தேன் .
எனது கிராமத்தில் எல்லா விதமான மக்களும் வாழ்ந்தார்கள் .அதன் காரணமாக எனக்கு எல்லா விதமான இனங்களிலும் குலங்களிலும் சமூகத்திலும் உள்ள மக்களின் பிள்ளைகள் நண்பர்களாக அமைந்தார்கள் .
பிணம் எரிப்பவனின் மகன் ,
முடி வெட்டுபவனின் மகன் ,
சட்டி பானை செய்பவனின் மகன்,
கணக்கு பிள்ளையின் மகன் ,
தோட்டியின் மகன் ,
மாடு மேய்ப்பவனின் மகன் ஆடு மேய்ப்பவனின் மகன்,
வாத்து மேய்ப்பவனின் மகன் ,
பூணூல் போட்டவர்களின் மகன் பிராமணர்களின் மகன்,
எண்ணெய் செக்கு ஆட்டுபவனின் பிள்ளை,
இப்படி எத்தனை தொழில்கள் இருக்கிறதோ,அத்தனை தொழில்களை செய்கின்றவர்களின் மக்களின் பிள்ளைகளோடு நான் இரண்டு மாதம் படித்தவன்.
வீட்டுக்குள் அணிந்துள்ள சட்டை துணிகளை கழட்டி போட்டுவிட்டு அம்மணமாக மாட்டு தொழுவத்திற்கு சென்று அங்கு வைத்திருக்கும் டிரஸ் போட்டுக் கொண்டு பள்ளிக்குச் செல்ல வேண்டும் .பிறகு திரும்பி வந்து மாட்டு தொழுவத்தில் அந்த டிரஸ் கழட்டி மாட்டிவிட்டு அம்மணமாக வீட்டுக்குள் வந்து வேறு டிரஸ் போட்டுக் கொள்ள வேண்டும் .இது பிடிக்காமல் நான் குடியாத்தம் நகருக்கு குடி வந்து டிரஸ் மாற்றப்படாமல் மாட்டிக் கொள்ளாமல் செல்கின்ற வகையிலே படிக்கச் சென்றேன்.
இதை எதற்காக சொல்லுகிறேன் என்றால் எனது நண்பர்களின் வலிகளை மன உணர்வுகளை அன்றைய தினமே எனது ஐந்து வயதிலேயே முழுமையாக புரிந்து கொண்டவன் நான் .
காதலுக்காக உயர் குடி பிறப்பை மறந்து தொழிலை மறந்து இனத்தை மறந்து குலத்தை மறந்து ஒருவன் காதலுக்காக செல்கிறான் என்றால் அவனது மன உறுதியை பாராட்டத்தான் வேண்டும்.
இந்த கதையை படிக்கும் பொழுது எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது.
பறை மேளம் அடிக்கவும் தெரியும் ;அடிக்கப்படும் பறை மேளத்திற்கு ஏற்ப தாளத்திற்கு ஏற்ப என்னால் நடனம் ஆடவும் தெரியும் .பறை நடனம் ஆடுகின்ற மக்களின் வாழ்வு நீளம் longitivity
அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது .
காரணம் இரண்டாம் இதயம் துடிக்க வைப்பதினால்.
நமது சமூகத்தில் பறை மேளம் அடிப்பதோடு சரி சவக்குழி வெட்டி புதைப்பதோடு சரி அவர்களது பணி .
ஆனால் அந்தந்த சமூகத்திற்கு ஏற்றவாறு சவத்தை குளிப்பாட்டுவதும் அழகு படுத்துவதும் வேறுபடுகிறது .இங்கு பார்சி இனத்தில் செய்யப்படுகிற விதம் கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது.
சொன்னால் நம்ப மாட்டீர்கள் .இந்த வேலைக்குத் தெம்பும் தைரியமும் வேண்டும்.
செத்தவனோட, நெற்றி, மார்பு, கை, உள்ளங்கால் இங்கெல்லாம் காளை மாட்டு மூத்திரத்தால் தேய்க்க வேண்டும். அது கடுமையான நாற்றம் வீசும். பிறகு உடம்பில் இருக்கிற எல்லா துவாரத்திலும் அதைத் தெளிக்க வேண்டும். பின்னர் புதிய துணி அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அதன் இடுப்பில் புனித நூலைக் கட்ட வேண்டும். இதற்கிடையில் பாடை வைக்கிற பெட்டிக்குள் இருக்கும் ஊதுவத்தி மூச்சடைக்காம புகைகிறதா, இரவு முழுவதும் விளக்கு அவிந்துவிடாமல் இருக்கிறதா என்று ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும் இவற்றையெல்லாம் முடித்துவிட்டுப் போய் கட்டையைச் சாய்க்க நடுச் சாமம் ஆகிவிடும் .
செப்பியா என்ற பெண்ணுடன் ஏற்படும் காதலுக்காக
கதாநாயகன் பார்சி மத குருக்களின் மகனான ஃபெரோஸ் எல்சிதனா
என்னவெல்லாம் செய்யத் துணிகிறான் எப்படி எல்லாம் அவஸ்தை படுகிறான் எப்படி எல்லாம் அவனை அந்த பார்சி சமூகம் மேல்குடி மக்கள் நடத்துகிறார்கள் என்பது தான் கதையின் ஒட்டுமொத்த வீரியம்.
சிறப்பான மொழிபெயர்ப்பு .
மொழிபெயர்ப்பு சங்கடமின்றி என்னால் படிக்க முடிந்தது. பள்ளிக்கூட பருவத்தில் நிறைய ரஷ்ய மொழிபெயர்ப்பு கதைகளை படித்திருக்கிறேன் .அப்போதெல்லாம் சங்கடமாகத்தான் இருக்கும் .
எனக்கு அந்த சங்கடம் இந்த மொழிபெயர்ப்பில் தெரியவில்லை .காரணம் உள்வாங்கிக் கொண்டு தெள்ளிய தன் நடையில்
தன் பாங்கில் மாலன் அவர்கள் எழுதிய நடை என்னை கவர்கிறது.
Karunamurthy


Leave a comment