அம்பேத்கர் தனது கடைசிக் காலத்தில் புத்த மதத்தைத் தழுவினார் என்பதைப் பலரும் அறிவார்கள். ஆனால் புத்த மதம் பற்றி அவரது பார்வை என்னவாக இருந்தது என்பதைப் பலரும் அறியார்கள். இது பற்றி அவர் பேசியவற்றை எழுதியவற்றை எல்லாம் ஒரே தொகுப்பாகத் தமிழில் கொண்டு வந்தால் ஒரு முழுச் சித்திரம் கிடைக்கும். அதன் வழியாக மூல பவுத்தத்தை எவரும் தரிசிச்கலாம், கூடவே அம்பேத்கரின் பவுத்தம் வழியான ஞான மார்க்கத்தைக் கண்டு வியக்கலாம். 1950 இல் மகாபோதி சங்கத்தின் பத்திரிகையிலே “புத்தரும் அவரது மதத்தின் எதிர்காலமும்” என்றொரு கட்டுரை எழுதினார் அம்பேத்கர். அதே ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற புத்த மாநாடு ஒன்றில் பங்கு கொண்டு “இந்தியாவில் புத்திசத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்பது பற்றி உரையாற்றினார். “நான் ஏன் புத்திசத்தை விரும்புகிறேன்? இன்றைய சூழல்களில் உலகிற்கு அது எவ்வளவு பயனுள்ளது?” என்பது பற்றி லண்டன் பி.பி.சி. நிறுவனத்திற்கு ஓர் உரை நல்கினார் 1956 இல். இதே காலத்தில்தான் “புத்தரும் கார்ல் மார்க்சும்” எனும் நூல் எழுதினார்.இதே காலத்தில் தான் “புத்தரும் அவரது தம்மமும்” என்கிற மகத்தான படைப்பை எழுதி முடித்தார். பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பின் 22 ஆம் தொகுதியாகத் தமிழில் இந்தப் படைப்பு வெளிவந்துள்ளது. அதில் உள்ள விபரத்தின்படி அது முதன் முதலாக 1957 இல் அதாவது அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு வெளிவந்ததாகத் தெரிகிறது. ஆனால், இது அவரது காலத்திலேயே தனிப்பட்ட சுற்றுக்காகவும், விவாதத்திற்காகவும் அச்சுவாகனம் ஏறியது என்கிறார் ஆய்வாளர் சந்திர பரிள். அப்போதே இதிலுள்ள சில கணிப்புகள் புத்த பிக்குகளின் கோபத்தைக் கிளறும் என்பது அம்பேத்கரிடம் சுட்டிக்காட்டப்பட்டபோது அவர் கூறினாராம் “இதற்காகப் புத்த பிக்குகள் என்னைத் திட்டினால் கவலைப்பட வேண்டாம். எவ்வளவு காலத்திற்கு உண்மையை மூடி மறைக்க முடியும்?” அம்பேத்கர் என்ன எதிர்பார்த்தாரோ அது விரைவில் நடந்தது. மாகாபோதி சங்கப் பத்திரிகையில் பிக்கு ஜீவகா இந்த நூலுக்கு விமர்சனம் எழுதினார். அதில் கர்மா கோட்பாட்டை மறுத்ததற்காகவும், அகிம்சை கோட்பாட்டிற்குப் புதிய அர்த்தம் தந்ததற்காகவும், தம்மம் (தருமம்) எனப்பட்டதைத் தனிமனித விடுதலையாகக் கருதாமல் சமூக ஒழுங்கமைப்பாகக் கருதியதற்காகவும், புத்த பிக்குகளுக்கு தீவிர சமூக சேவையை வலியுறுத்தியதற்காகவும் அம்பேத்கர் கண்டிக்கப்பட்டார். முடிவில் “புத்தகத்தின் தலைப்பை புத்தரும் அவரது தம்மமும் என வைத்ததற்குப் பதிலாக அம்பேத்கரும் அவரது தம்மமும் என வைத்திருக்க வேண்டும்” என்று கிண்டலாகவும் சொல்லியிருந்தார். இந்த விமர்சனம் அம்பேத்கர் காலமான பிறகு வெளிவந்தது. இதனால் இதற்கு தக்க பதிலடி கொடுக்க அண்ணலால் முடியாமல் போனது. ஆனால், இந்த விமர்சனத்தின் மூலம், மூல பவுத்தத்தை அம்பேத்கர் எவ்வளவு கச்சிதமாக உள்வாங்கி, அதைத் தனது நூலில் வெளிப்படுத்தியிருந்தார் என்பது நமக்குப் புரிந்து போகிறது. உண்மையில் தனது நூலின் முன்னுரையில் பவுத்தத்தைப் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்களை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். குறிப்பாக நான்கு வியங்களை விவாதத்திற்காகத் தான் முறைப்படுத்தியிருப்பதாகக் கூறியிருந்தார். அவை : 1. புத்தர் துறவு வாழ்வை மேற்கொண்டதற்கான காரணம் 2. துக்கம் பற்றிய அந்த நான்கு கோட்பாடுகள் புத்தர் போதித்தவையா அல்லது பிற்காலச் சேர்க்கையா? 3. ஆன்மா, கர்மம், மறுபிறப்பு பற்றிய சிந்தனைகள். ஆன்மாவை மறுத்துவிட்டு கர்மம் – மறுபிறப்பு பற்றி மட்டும் பேசிய அந்த விசித்திர முரண் 4. பிக்கு எனப்பட்டவர் முழுநிறைத் தனிமனிதனாக இருக்க வேண்டுமா அல்லது சமூகச் சேவகராகச் செயல்பட வேண்டுமா? இந்த முன்னுரையைப் படித்தவுடனேயே நமக்குள் ஒரு பரபரப்பு ஏற்பட்டு விடுகிறது. புத்தரின் வாழ்வு மற்றும் போதனைகள் பற்றி நமது பொதுப் புத்தியில் ஏற்றப்பட்டுள்ள கருத்தியலை இது கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. மிகுந்த ஆர்வத்தோடு நூலைப் படிக்க முடிகிறது. பிணம், நோயாளி, முதியவர் ஆகியோரைப் பார்த்த பிறகுதான் புத்தர் துறவுவாழ்வை மேற்கொள்ள முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. தனது 29 ஆவது வயதில் அப்படிச் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வளவு காலம் வரை அந்த மூன்று காட்சிகளையும் அவர் காணாமலா இருந்திருப்பார்? அது அதிசயக் காட்சிகளாகி, அதனாலேயா துறவியாகி இருப்பார்? இது அறிவுக்குப் பொருந்தவில்லை. உண்மைக் காரணத்தைத் தேடி அம்பேத்கர் பவுத்தத்தின் மூல நூல்களுக்குள் பயணித்தார். “தமிழ்நாட்டில் பவுத்த மறுமலர்ச்சி இயக்கத் தந்தை பண்டித அயோத்திதாசரின் உற்ற நண்பர் பேராசிரியர் இலட்சமி நரசுவின் பவுத்தம் பற்றிய நூல்கள் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் இந்த நூலை எழுதத் தூண்டுவதாக அமைந்தன” என்று தமிழ்நூலின் நிர்வாகப் பதிப்பாசிரியர் எஸ்.பெருமாள் கூறுகிறார். ஆக, பவுத்தம் பற்றிய புதிய ஆய்வுகளையும் கணக்கில் கொண்டு அவர் உண்மையைத் தேடினார். சாக்கியர்களின் நாட்டு எல்லையில் கோலியர்களின் நாடு இருந்தது. இரண்டுக்கும் இடையே ரோகினி ஆறு ஓடியது. அங்கு நதிநீர்ப் பிரச்சினை இருந்தது. அதனால் இரு தேசங்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. நதிநீர்ப் பிரச்சினை இந்தத் துணைக்கண்டத்தில் இன்று நேற்று உருவானதல்ல. அது ஆதிகாலந் தொட்டு நடந்தது. இந்தப் பிரச்சினையில் சாக்கியர்களின் சங்கம் கூடிப், போர் தொடுக்க முடிவு செய்தது. இதன் ஓர் உறுப்பினராகிய சித்தார்த்தர் (புத்தரின் இயற்பெயர்) அந்த முடிவை எதிர்த்தார். “தருமம் என்பது நான் அறிந்த வரையில் பகைமையை பகைமையால் அழிக்க முடியாது என்று அறிவது, அன்பால் மட்டுமே அதை வெல்ல முடியும் என்று உணர்வது” என்று அந்தச்சபையில் பேசினார். கூட்டு முடிவை எதிர்த்த ஒரு தனிமனிதர் என்ற வகையில் அவர் அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அதைக் குடும்பத்தை விட்டு வெளியேறுகிற பரிவ்ராஜகனாக வெளியேறுகிற பாணியில் நடைமுறைப்படுத்தினார். இது அம்பேத்கர் காட்டுகிற உண்மைச் சித்திரம்.


Leave a comment