இரா.முருகன் நேர்காணல் – எம்.டி.வாசுதேவன் நாயர் – டிசம்பர் 2009

மலையாள இலக்கியத்தில் ஆறு பத்தாண்டுகளாக மிகப் பெரும் ஆளுமையாக விளங்கி வரும் திரு. எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் டிசம்பர் 2009-இல் சென்னை வந்திருந்தபோது நான் சந்தித்தேன்.

குமுதம் தீராநதி, அமுதசுரபி (குறுகிய வடிவம்) மற்றும் என் மின்நூல் ‘இதுவும் அதுவும் உதுவும்’ ஆகியவற்றில் இடம் பெற்ற நேர்காணலில் இருந்து –

———————————————————————

எம்.டி.வாசுதேவன் நாயரோடு ஒரு நேர்காணல்                 இரா.முருகன்

எம்.டி.வாசுதேவன் நாயர். மலையாளிகளின் மனம் கவர்ந்த கதைக்காரர். நீட்டி முழக்கி அவர் பெயரை முழுமையாகச் சொல்லாமல் சும்மா, ‘எம்.டி’ என்று சுருக்கி அவர்கள் விளிப்பதில் அபிமானமும், ‘எங்க ஆளாக்கும்’ என்ற பெருமையும் புரியும்.  ஐம்பது வருடமாக நாவல், நாடகம், சிறுகதை என எழுதி மலையாள இலக்கியத்தில் முக்கிய ஆளுமையாகத் திகழ்கிறவர். திரைக்கதை என்ற கலை – இலக்கிய வடிவத்தில் இவர் அளவு தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறவர்கள் இல்லை. மத்திய, மாநில சாகித்ய அகாதமி, ஞானபீடம், இன்னும் மலையாள மண்ணின் முக்கியமான இலக்கிய விருதுகள் அனைத்தையும் பெற்ற இலக்கியவாதி. இத்தனை சிறப்போடு, மாத்ருபூமி என்ற பாரம்பரியம் மிக்க தினசரியின் ஆசிரியராக இருந்த ஆற்றல் மிக்க பத்திரிகையாளரும் கூட. எம்.டி என்ற ஆளுமையின் பன்முகப் பரிமாணம் பிரமிக்க வைக்கிற ஒன்று.

எம்.டி. அண்மையில் பாரதி விருது பெற சென்னை வந்திருந்தார். ‘தி.நகரில் இருக்கேன்’ என்று தொலைபேசியில் விலாசம் சொன்னபோது ஒரு அற்ப சந்தோஷம். எங்க பேட்டை ஆளாக்கும்! பொடிநடையாக எம்.டி இருந்த குப்புசாமி தெருவுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அடுக்குமாடிக் கட்டிடம். அடுத்த வீட்டுக்காரர் பெயரே தெரியாத கான்கிரீட் காடுகளில் ஒன்று. அடுத்த மாநில எழுத்தாளரை இங்கே எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்?

வாசலில் மர ஸ்டூலில் ஆரோகணித்திருந்த காவல் தெய்வத்திடம் அடையாளங்களைக் குறிப்பிட்டு விலாவாரியாக விசாரிக்க ஆரம்பிக்கும் முன் ‘வாசுதேவன் நாயர் சாரா?’ என்று பளிச்சென்று கேட்டார் அவர். ஆச்சரியம் அடங்கும் முன், வாசலுக்கு வந்த ஓர் இளைஞரைக் காட்டி ‘இவங்க மாமனாரு தான்’ என்று குறு அறிமுகம் வேறே செய்து வைத்தார்.

நான் மலையாளத்தில் அந்த இளைஞரிடம் குலமுறை கிளர்த்தி, வந்த காரியத்தைத் தெரியப்படுத்தியபோது அவர் கொஞ்சம் மிரண்டார். ‘சார், நான் தமிழ்தான். வீட்டுலே அவங்க தான் மலையாளம்’ என்றார் சிரித்தபடி.

மடிக் கணினியைப் பிரித்து எடுத்து வைத்துக் கொண்டு அறையை நோட்டமிட்டேன். தமிழ் மத்தியதர வர்க்க வீட்டு வரவேற்பரை. இல்லை, இது வித்தியாசமானது என்று அடுத்த வினாடி புரிந்தது. திரை விலக, பலமாகக் கவிந்த பீடிப்புகையோடு, உள்ளே இருந்து மெல்ல நடந்து வந்தார் எம்.டி. நெடிய உருவம். டபிள் முண்டு (எட்டு முழ வேட்டி), ஸ்லாக் ஷர்ட், பட்டை ப்ரேம் மூக்குக்கண்ணாடி. கேரள அரசியல்வாதிகளையும், எழுத்தாளர்களையும் ஒரேபடிக்குச் சேர்த்து நான் மனதில் வைத்திருக்கும் ஒற்றை பிம்பத்துக்குக் கொஞ்சம் நெருங்கிய பெர்சனாலிடி.

எம்.டி பீடிக்கட்டை மேஜை மேல் வைத்தார். ‘அப்புறம்?’ என்று விசாரிக்கிற  பார்வை. நான் விட்ட இடத்திலிருந்து பேச்சை ஆரம்பிக்கிறது போல் சுபாவமாக ஆரம்பித்தேன். அந்த நேர்காணல் இதோ –

(எம்.டி எழுதிய முதல் நாவல் ‘நாலு கெட்டு’. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முந்திய காலகட்டத்தில் கேரளத்தின் பசுமை கொழிக்கும் வள்ளுவநாட்டுப் பகுதியில் ஒரு பழைய நாலு கெட்டு மனையின் – நாலு பிரிவு கொண்ட வீடு –  நிகழும் கதை அது. வயதான நம்பூத்ரிக்கு வாழ்க்கைப்பட்டு அந்த நாலுகட்டு வீட்டில் வாழப் புகுந்த யசோதராவின் கதையைச் சொல்கிற நாவலில் அப்புண்ணி ஒரு முக்கிய கதாபாத்திரம். அப்புண்ணியின் பார்வையில்தான் கதை நகர்கிறது.)

எம்.டி: அது உண்மையில்லை. அவர் எந்த யசோதராவை சந்தித்தார் என்று தெரியவில்லை. நாலு கெட்டு ஒரு நாவல். நான் பிறந்த வள்ளுவநாட்டுப் பிரதேசத்தின், என் வீட்டுச் சூழலின், என் இளமைப் பிராயத்தின் நினைவுகளைத் தொட்டுத் தொடர்ந்து செல்லும் புதினம். அதில் எல்லா பாத்திரமாகவும் நான் என்னை உணர்கிறேன். அப்புண்ணியும் நான் தான்.  யசோதராவும் நான் தான். மற்றவர்கள் எல்லாரும் கூட நான் தான். அவர்கள் யாருமே நான் இல்லை என்பதும் உண்மைதான். நிறையக் கற்பனையும் ஓர் இழை நிஜமும், இழை பிரித்து அறிய முடியாதபடி பின்னிப் பிணைந்த  அற்புத உலகம் இல்லையா கதையும் காவியமும்?

எம்.டி: அப்படியா? பார்த்த நினைவு இல்லையே. வந்திருந்தாலும் அது சரியான வார்த்தை இல்லை. யசோதரா என் மற்ற கதாபாத்திரங்களைப் போல் அந்தக் கதையில் மட்டும் உலவிப் போன ஒரு பெண்மணி. அவள் வயதான நம்பூதிரியை மணந்து இளம் பெண்ணாக அடி எடுத்து வைத்த வீட்டில் இத்தனை வருடம் தனியாக இருந்தாள், இடிந்து சிதிலமடைந்து இனியும் இருக்கத் தகுதியில்லை என்ற நிலை ஏற்பட்டதும் அந்தப் பழைய மனையை விட்டுக் குடி பெயர்ந்தாள் என்பதெல்லாம் எனக்கு சுவாரசியம் தரும் செய்திகள் இல்லை. நாலுகெட்டு கதாபாத்திரங்களை ஆழமாக நேசிக்கிறவர்கள் இன்னும்  இருப்பதாகவே நான் இதிலிருந்து புரிந்து கொள்கிறேன்.

எம்.டி: மலையாள மொழியில் சிறுகதை, நாவல், நாடகம் என்று ஏகப்பட்ட விருதுகள் ஆண்டு தோறும் படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. நவீன இலக்கியத்துக்கான நிறைய விருதுகள் கேரளத்தில் இருக்கின்றன என்பது உண்மைதான். எழுத்தை ஊக்குவிக்க அங்கங்கே தனித்தும் குழுவாக அமைத்தும் செய்யப்படும் முயற்சிகள் இவை. ஒவ்வொரு விருதும் ஒவ்வொரு மாதிரி.

நானே மூன்று முறை கேரள சாகித்ய அகாதமி விருது வாங்கியிருக்கிறேன்.  ஆனாலும் ஒவ்வொரு விதமான இலக்கியப் படைப்பாக்கத்துக்காக என்பதை மகிழ்ச்சியோடு திரும்பிப் பார்க்கிறேன். பரிசு பெற்ற ‘நாலுகெட்டு’ நாவல். ‘சுவர்க்கம் துறக்குன்னு’ சிறுகதைத் தொகுப்பு. அதேபோல, இன்னொரு சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ‘ கோபுர நடையில்’, நான் எழுதிய நாடகம்.

இதில் நாலுகெட்டு எனக்கு விசேஷமானது. கிட்டத்தட்ட ஐம்பது வருடம் முன்னால் எழுதிய என் முதல் நாவல். முதல் படைப்புக்கு அங்கீகாரம் கிடைத்த ஆரம்ப எழுத்தாளனுக்கு ஏற்படும் மகிழ்ச்சிதான் எனக்கும் அப்போது.  அந்த விருது கிடைத்திருக்காவிட்டாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டே தான் இருந்திருப்பேன். மத்திய சாகித்ய அகாதமி, ஞானபீடம் என்று எல்லா விருதுகளையும் பற்றியும் என் நிலைபாடு இதுதான்.

விருதுக்காக எந்த எழுத்தாளரும் எழுதுவதும் இல்லை. எழுதப் போவதுமில்லை. ஆனால் நல்ல இலக்கியம் என்று இனம் கண்டு பாராட்டப்படும் போது ஏற்படும் மகிழ்ச்சி தனியானது. பொருளாதார ரீதியில் இல்லாமல் எழுத்தை இன்னொரு தளத்தில் கௌரவிக்கும் இம்மாதிரி முயற்சிகளை தாராளமாக வரவேற்கலாமே.

எம்.டி: அதென்ன அப்படிக் கேட்டுட்டீங்க? கவிதை எழுதாமல் உரைநடைக்குள் ரைட் ராயலாக நுழைந்த ஒரு எழுத்தாளன் உண்டா இந்த உலகத்தில்? நானும் கவிதை எழுதிப் பழகிவிட்டுத்தான் கதை சொல்ல வந்தவன். என்ன, கல்லூரியில் படிக்கும்போதே எனக்குள் இருந்த கவிஞன் விடைபெற்றுப் போய்விட்டான், அவ்வளவே.

எம்.டி: துஞ்சன் ஸ்மாரகம் (நினைவு இயக்கம்) தலைமைப் பொறுப்பில் நான் இருக்கிறேன். மலையாள இலக்கியத்தை மக்கள் இலக்கியம் ஆக்கிய முதல் படைப்பாளி துஞ்சன். அதுதான்  முக்கியமே தவிர அவர் வட்டெழுத்தில் எழுதினாரா, மலையாள லிபியில் முதல்முறையாகக் காவியம் எழுதினாரா என்பதில்லை. பண்டிதர்கள் மட்டும் படித்து அனுபவிக்கும் கடினமான நடையில் அமைந்தது துஞ்சன் காலத்துக்கு முற்பட்ட அந்த்யந்த ராமாயணம். அதை யார் எழுதியது என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொழி கடினமாக இருந்தாலும் இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் குழந்தை பிராயத்தில் இருந்து அறிந்து அனுபவித்து ஆழ்ந்த ராமாயணக் கதையை மக்கள் இலக்கிய வடிவமான கிளிப்பாட்டு உருவில் படைத்தார் துஞ்சன். வால்மீகியையும் அத்யந்த ராமாயணத்தையும் ஆழ்ந்து கற்ற அவர் அவற்றின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டார். மலையாள மண்ணுக்கே உரிய மணத்தோடும் வனப்போடும் இங்கே முழங்கிய இசை வடிவாக  ராமாயணத்தை எழுதினார் அவர். வால்மீகியை விட்டு நிறையவே விலகிப் போயிருக்கிறார் துஞ்சன். ஆனால் என்ன, மகா காவியத்தை காவியச் சுவை கெடாமல் மேலும் மெருகிட்டு மக்கள் காவியமாக்கும் முயற்சி இல்லையா அது? மகாபாரதத்தையும் கிளிப்பாட்டு ஆக்கியிருக்கிற மகாகவி அவர். கிளிப்பாட்டு கேட்டிருக்கிறீர்களா? கும்மி மாதிரி.

(பாடிக் காட்டுகிறார். 76 வயதிலும் நடுங்காத குரல். நாலு வரி பாடி முடித்ததும் ஏதோ கணக்கு வைத்துக் கொண்டது போல் சட்டென்று நிறுத்தி இன்னொரு பீடி பற்ற வைத்துக் கொள்கிறார்.

கும்மி தமிழாச்சே? ‘கும்மியடி பெண்ணே, தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி’ நான் பாரதியின் விடுதலைக் கும்மியைப் பாட முயற்சி செய்ய ‘அதேதான், கொடுந்தமிழ் தானே மலையாளம். அங்கேயும் கும்மி கும்மி தான்’ என்றபடி பீடிப்புகையை இழுத்து ஒரு வினாடி அந்த சுகத்தை அனுபவிக்கிறார்).

பதினைந்தாம் நூற்றாண்டில் வடமொழியாக்கம் மலையாள மொழியை வெகுவாகப் பாதித்திருக்கலாம். ஆனால், துஞ்சன் போன்ற மக்கள் கவிஞர்கள் மொழியை மீட்டெடுத்து வந்து அதைப் பேசிப் பழகும் பொது மக்களின் நாவிலும் மனதிலும் திரும்ப இருத்தியவர்கள். காலப் போக்கில் மொழிவளர்ச்சியில் இது போன்று பாதிப்புகள் ஏற்பட்டு விலகுவதும் மொழி செம்மைப் படுவதும் இயல்பானதுதான்.

எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியலே. அந்தக் காலத்தில் எழுதியது போல் கதையைக் காட்சிகளாக முழு உருவத்தை மனதில் வரைந்து கொண்டு அதை மெல்ல விரிவாக்கி நகர்த்திப் போகிற திரைக்கதை அமைப்பைத்தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன். எல்லாப் படைப்புக்குமே அடிப்படை அது குறித்த ஆய்வும், அறிவுத் தேடலும். எந்தக் காலத்திலும் இது தேவையில்லாமல் போகாது.

மலையாளப் படங்கள் தொடக்க காலத்தில் அந்தக் காலத் தமிழ்ப் படங்களைப் பின்பற்றி எடுக்கப்பட்டவை. இசையும் உரையாடலுமான பாணி அது. பார்சி நாடக மேடை தமிழ் நாடகமாகி அதன் பின் தமிழ்ப் படங்களில்  புகுந்ததன் பாதிப்பு மலையாளத்திலும் தூக்கலாக இருந்தது. அப்புறம் பழைய திரைப்படங்களில் பக்கம் பக்கமாக வசனம் பேசித் தள்ளினார்கள். ஆனால் நான் முறைப்பெண்ணு திரைக்கதை எழுதும் காலகட்டத்தில் மலையாள சினிமா தமிழ் சினிமா பாதிப்பில் இருந்து விலகி, மெல்ல மெல்ல மலையாள மண்ணின் கலைவடிவமாகிக் கொண்டிருந்தது.   சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் மலையாள சினிமா திரைக்கதை அமைப்பில் உரையாடல் இயல்பாக, குறைச்சலாகத்தான் இருக்கும். இது இன்று புதுசாக ஏற்பட்டதில்லை.

‘பள்ளிவாளும் கால்சிலங்கையும்’ எழுதிய எம்.டி. கிராமத்து மனிதன். கிராமத்து மனிதர்களை, கிராம தேவதைகளை, கோவில்களை, கோவில் பணிக்காரனான வெளிச்சப்பாட்டை (சாமியாடி) பார்த்துப் பழகியவன். சாமியாடியை கோவில் உற்சவ காலத்தில் மட்டும் உயர்ந்த பீடத்தில் இருத்தி ஊரே வழிபடும். வருடத்தில் நாலு நாள் இப்படிக் கும்பிட்டு விழுந்து வணங்கி காணிக்கை கொடுத்து விட்டு மற்ற நாட்களில் அவனை ஏறெடுத்தும் கூடப் பார்க்காது போவது வழக்கம். இருந்தானா, செத்தானா, அவனுடைய குடும்பம் வறுமையில் வாடியதா, குழந்தைகளின் பசியைப் போக்க அந்த அப்பாவி என்ன செய்கிறான் என்பவற்றைப் பற்றிக் கவலைப்பட தேவி பகவதி இருக்கிறாளே. ஊர் மக்களுக்கு ஆயிரம் கவலை. இதுவும் கூடி என்னத்துக்கு அவர்களுக்கு? அப்படித்தான் பொதுவான மனநிலை.

சாமியாடியும் கடவுளை மனசார நம்புகிறவன். பகவதியை தனக்காக வழிபடுவதை விட ஊருக்காக வழிபடுகிறவன். விரதம் இருந்து சந்நதம் வந்து வாள் எடுத்துக் கையில் பிடித்துச் சலங்கை ஒலிக்க ஆடி, நாடும் வீடும் சிறக்க, தோஷம் தீரப் பரிகாரம் சொல்வான். அதில் நிறைய சந்தோஷமும் காணிக்கையாகக் கொஞ்சம் வருமானமும் பெறுகிறவன் அவன். வெளிச்சப்பாட்டின் வாழ்க்கை நசித்துப் போகிறபோது அவன் நம்பி வணங்கி வாழ்த்திப் பாடிய பகவதி அம்மை மேல் அவனுக்குக் கோபம் வருகிறது. இது தான் எம்.டி என்ற எழுத்தாளன் எழுதியது. அதை இயக்கிய எம்.டி என்ற திரைப்பட இயக்குனர் அந்த சாமியாடியைத் தேடி அலைந்து அற்புதமான நடிகரான பி.ஜே.ஆண்டனியில் அவனைக் கண்டார். கவியூர் பொன்னம்மா வெளிச்சப்பாட்டின் மனைவியாக, குழந்தைகளின் பட்டினியைக் காணச் சகிக்காமல் நெறி தவறி அவர்களின் பசி போக்குகிற அன்னையாக நடிக்க வந்தார். எம்.டி எழுதிய படிக்கு, எம்.டி பார்த்த படிக்கு, கற்பனை செய்தபடிக்கு நிர்மால்யம் அமைய அந்த அற்புதமான நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் முக்கிய காரணம். எழுத்தின் நீட்சியாக அதன் திரையாக்கம் அமைந்ததாகவே எனக்குப் படுகிறது.

எம்.டி: அப்படி இல்லை. தான் மலை போல நம்பிய ஒருத்தர் தன்னைக் கைவிட்ட கோபம் அது. எங்கள் ஊரில் ஒரு சாமியாடி இருந்ததாகச் சொன்னேனே. அவன் சாதாரணமாகப் பேசும்போது ‘ஆத்தா கிட்டே கேட்டேன் வாசு. அவளுக்குக் கோபம் போல இருக்கு. எதுக்கும் நீ அந்தப் பக்கம் போனா அந்தப் பொம்பளைக்கு ஒரு கும்பிடு போட்டுட்டுப் போ. பாவம் அதுக்கும் யாரு இருக்கா?’ என்று என்னிடம் சொல்லியிருக்கிறான். பகவதி அம்மன் பெயரைச் சொல்லி ஒரு கைப்பிடி நீரை மேலே அள்ளித் தெளித்தால் நோய் எல்லாம் போய்விடும் என்று உள்ளபடிக்கே நம்பியவன் அவன். சக மனிதர்கள் போல தினசரி நெருங்கி உறவாடி உரையாடும் பகவதி அம்மையும் அவனுக்கு வாழ்க்கையில் ஒரு அம்சம். தெய்வாம்சம் எல்லாம் அதுக்கு அப்புறம்.

எம்.டி: கொலைக்கும் துணிந்த சதியன் சந்து பணிக்கர் என்ற கற்பிதம் வடக்கு கேரள பிரதேசத்தில் வழங்கும் வடக்கன்பாட்டு கிராமிய இசை வடிவில் இல்லை. மலையாள மண் இன்னும் போற்றிப் புகழும் ஆரோமல் உண்ணி போல் அவனும் வடக்கன் பாட்டுகளின்படி ஒரு வீரன் தான்.  50-60களின் மலையாள சினிமா சரித்திரப் புனைவுகளைத் தொட்டுப் பார்க்க முயற்சி செய்த போது சந்து சதிகாரன் என்ற பொய் கட்டிச் சமைக்கப்பட்டது. வடக்கன் வீரகாதை படத்தில் நான் சித்தரித்த சந்து   சூழ்நிலையால் குற்றவாளி ஆக்கப்பட்ட ஒரு வீரன். இப்போது பழசிராஜா படத்தில் வரும் பழையம்வீடன் சந்து ஆங்கிலேயருக்குத் துணை போனவன் என்பது தொன்மமில்லை. புனைவுமில்லை. வரலாறு.  ஆவணப்படுத்தப்பட்டது.

ஆமாம். நம்பூத்ரி சமுதாயத்தைச் சேர்ந்த குறியேடத்து தாத்ரிகுட்டியின் வாழ்க்கை சம்பவங்களுடைய பாதிப்பு பரிணயம் படத்தில் உண்டு. போன நூற்றாண்டு தொடக்கத்தில், நம்பூதிரி பிரிவினரை மட்டுமில்லாமல் கேரளத்தில்   பொதுவாகப் பெண்ணை ஆணாதிக்க சமுதாயம் நடத்துவதை மறு பரிசீலனை செய்ய வைத்த நிகழ்வு அது. நம்பூத்ரி இனப் பெண் பிறழ்ந்து போக நேர்ந்த சூழ்நிலையைப் கவனமாகப் பரிசீலனை செய்யும் முயற்சி ‘பரிணயம்’.

எம்.டி: மாடம்பு மனை அடுதிரிப்பாடு விசாரணைக் கமிஷன் உறுப்பினர். அவ்வளவே.

அந்தச் சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. வயதான தம்பதியர் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் ஆழமான காதலை மென்மையாகச் சொல்லும் கதை. அதுபோல் வேறு மொழிக் கதைகள் கிடைத்தால் மலையாளத் திரைப்படமாக்கத் தடையேதும் இல்லை. யார், எந்த மொழி என்பது முக்கியமில்லை, நல்ல கதை எங்கேயும் எப்போதும் நல்ல கதைதான்.

ரெண்டாம் ஊழம், வைசாலி இந்த இரண்டுமே மகாபாரதம் என்ற இதிகாசத்தை சற்றே மாறுபட்ட பார்வையில் நோக்கிய படைப்புகள். ரெண்டாம் ஊழம் பீமனின் பார்வையில் மகாபாரதம். வைசாலி மகாபாரதத்தில் ஒரு கிளைக்கதையை தற்கால சூழலுக்குப் பொருத்திப் பார்ப்பது. எக்காலத்திலும் பெண்ணை போகப் பொருளாக உபயோகப்படுத்தி விட்டு காரியம் முடிந்ததும் தூக்கி எறிகிற போக்கை கோடிட்டுக் காட்டிய திரைக்கதை அது. பெருந்தச்சன் கர்ண பரம்பரைக் கதை. தச்சுக் கலைத் திறமையில் சொந்த மகனையே முந்தவிடாத கலா கர்வமும் பொறாமையும் கொண்ட வித்தியாசமான அந்தக் கலைஞன் உருவாக்கியதென்று பன்றியூர் அம்பலத்தில் (கோவில்) இன்றைக்கும் ஒரு பெரிய மண்டபத்தைக் காட்டுகிறார்கள். அந்த வாய்வழிச் செய்திக்கு காட்சி உருவம் கொடுத்தது பெருந்தச்சன் திரைக்கதை.  புராணத்தில் நம்பிக்கை வைப்பதற்கும் வைக்காததற்கும் இந்தக் கற்பனை நீட்சிகளுக்கும் தொடர்பு இல்லை.

சரிதான். அறுபதுக்களின் சமூகத்தில் அந்தப் பழைய கேரளத் தனிமையை ஆத்மார்த்தமாக அனுபவித்த ஏராளமானவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்ட கதைகள் அவை எல்லாம். இப்போதைய தலைமுறைக்கு இது அந்நியமான சங்கதி.

நாலுகெட்டும் எட்டுக் கெட்டும் எல்லாம் இப்போது கேரளத்தில் அபூர்வம். பழைய கட்டிடங்களை இடித்துப் பொளித்து புதுசு புதுசாக ஏதோ கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கூடலூரில் நான் பிறந்த நாலு கெட்டு மனையில் சுற்றுப் பகுதியை இரண்டு புறமும் இடித்துவிட்டு மத்தியப் பகுதியை மட்டும் அப்படியே விட்டுவிட்டு மாற்றியமைத்துக் கட்டிவிட்டார்கள். என்னமோ போல இருக்கிறது. யாரையும் குறை சொல்ல முடியாது. கூட்டுக் குடும்பக் கலாசாரம் இப்போது கேரளத்தில் மட்டுமில்லை. இந்தியா முழுக்கவே மறைந்து வருகிறது. மாறுதல்தானே நியதி?

(நான் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியில் நகரத்தார் சமூக பெரும் இல்லங்கள் இன்னும் அதே பொலிவுடன் இருப்பதைச் சொல்கிறேன். ஓ, அதை எல்லாம் போய்ப் பார்த்திருக்கிறேனே என்கிறார் எம்.டி. தமிழகம் பற்றி அவருக்கு நுணுக்கமாகத் தெரிந்திருக்கிறது. இந்த மண்ணோடு அறுபது வருடப் பழக்கம் இல்லையா!)

எம்.டி:திரைக்கதை ஆசிரியன் என்ற முறையில் படத்தில் எந்தக் காட்சி எப்படி வரவேண்டும் என்றுதான் நான் எழுதுவேனே தவிர பாடல், இசை என்று சகலமானதிலும் தலையிடுவதில்லை. அது திரைக்கதாசிரியருக்கோ வசனகர்த்தாவுக்கோ தேவையில்லாத ஒன்று. எனக்கு ஒ.என்.வி, இளையராஜா இருவர் மேலும் மதிப்பு உண்டு.

இதற்கு சிரிப்பையே பதிலாகத் தருகிறார் எம்.டி. நான் என் கம்ப்யூட்டர் கான்வாஸ் பையில் இருந்து ஒரு மலையாள தினசரியை எடுத்து அதன் நாலாம் பக்கத்தில் ‘குருவாயூரில் குட்டி கொம்பன் மேல் தெங்கு வீணு; கொம்பிளகி’ (குருவாயூரில் குட்டியானை மேல் தேங்காய் விழுந்து கொம்பு முறிவு)  செய்தியைப் படிக்கிறேன். சிரிக்கிறார்.

தினசரியை மடக்கி தினசரியின் முதல் பக்கத்து செய்தியைக் காட்டுகிறேன். ‘அடடா, மராட்டி கவிஞர் திலீப் சித்ரே இறந்து போய்ட்டாரா?’ எம்.டி பதற்றத்தோடு பத்திரிகையைக் கையில் வாங்கிப் படிக்கிறார். ‘இங்கிலீஷ் பத்திரிகையிலே கூட வரலியே’ என்று முணுமுணுக்கிறார். ‘தமிழிலும் இதெல்லாம் போட மாட்டாங்க சார்’ என்கிறேன். ‘திலீப் எனக்கு நல்ல நண்பர். அருமையான கவிஞர், எழுத்தாளர், அற்புதமான நண்பர்’.

எம்.டியின் கண்கள் தொலைவில் நோக்குகின்றன. மெல்ல அடுத்த பீடியைக் கட்டில் இருந்து உருவி எடுத்துப் பற்ற வைத்துக் கொள்கிறார். சந்தோஷமோ துக்கமோ அவருக்குத் துணையாக பீடி உண்டு.

எம்.டி: நான் சொன்னதைத் தப்பாகப் புரிந்து கொண்டு செய்தியாக்கியதின் விளைவு இது. எனக்கு சங்கீதம் பிடிக்காது அல்லது எம்.டி.ராமநாதனைப் பிடிக்காது என்றா சொன்னேன்? அவர் பாடியது அற்புதமான சங்கீதம் என்று இங்கே இசை ரசிகர்கள் – கேரளத்தில் நிறையப் பேர் அவருக்கு விசிறிகள் – சொல்கிறார்களே, அதைக் கேட்கும்போது, எந்த மாதிரி வித்தியாசமானது அவர் சங்கீதம் என்று தெரிந்து கொள்கிற ஆர்வத்தில் தான் கேட்டேன்.  ஆர்வத்தோடு எதையாவது புரிந்து கொள்ள முயலும்போது அட்டாக் செய்கிறதாக ஏன் நினைக்கணும்? நான் இசை, நடனத்துக்கு விரோதியா என்ன?

(எம்.டி தன் குடும்பம் பற்றிச் சொல்கிறார் – அவர் மனைவி நாட்டியம் பயின்று ஆடி வந்தவர். மகள் மகா கவிஞர் வள்ளத்தோல் நிறுவிய கேரள கலாமண்டலத்தில் நாட்டியம் பயின்று ஆடி வருகிறவர். அவர் காதலித்துக் கைபிடித்த தமிழர் ஸ்ரீகாந்த், பத்மா சுப்ரமண்யத்தின் நாட்டியக்குழுவில் முதன்மையான ஆட்டக் கலைஞர்)

விருதுகள் பற்றிச் சொன்ன பதில் தான் இதுக்கும்.

(சிரிக்கிறார். அடுத்த பீடி கட்டில் இருந்து விடுபடுகிறது)

எம்.டி (சிரித்தபடி): நேற்று தான் தேவனோடு தொலைபேசிக் கொண்டிருந்தேன்.

(நீங்க கூடலூர்காரர் இல்லே? வள்ளுவநாடு பிரதேசத்தில் பிறந்து பாரதப்புழையில் குளித்து, கொடிக்குன்னு பகவதி கோவிலில் தொழுது, குமாரநல்லூர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தப் பருவம் உங்களுக்குத் திரும்பவும் கிடைத்தால்?)

இது ஒரு ஹைபாதெட்டிகல் கேள்வி ஆச்சே. அந்தக் காலம் போனது போனதுதான். இனி ஒரிக்கலும் திரிச்சு வரான் போகுன்னில்ல.

தமிழ் வாசகர்களுக்குத் தமிழ் எழுத்தாளர்களைத் தெரிந்த அளவுக்கு மலையாள இலக்கிய ரசிகர்களுக்குத் தமிழ்ப் படைப்புகள் பரிச்சயம் உண்டு என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

(ஒரு பீடி புகைத்தபடி நானும் அதேபடி தமிழ் இலக்கிய அன்பர்களுக்கு உள்ள மலையாள இலக்கியப் பரிச்சயம் பற்றிச் சொல்வதாகக் கற்பனை செய்தபடி விடைபெறுகிறேன். எம்.டியின் சிரிப்பும் பீடிப் புகையும் வாசல் வரை வந்து வழி அனுப்புகின்றன).

December 11, 2009

  Era Murukan

Leave a comment