ஹவானா இவ்வாறு இருப்பினும்

விஜய் பிராசாத்

நூற்றாண்டின் அந்தியில் ஃபிடல் அமர்ந்திருக்கிறார்;
அந்தி தனது செங்கொடியை
வளைகுடாவின் மீது தாழ்த்துகிறது.

நினைவில் பதிந்த சுருட்டொன்று
இனி எரியாமல் அணைகிறது;
சாம்பலான ஒரு மெலிந்த கண்டம்
மெல்ல வழிவிடுகிறது.

அறிவிப்பின்றியே சாம்பல் தரையில் விழுகிறது—
சாம்பல் நிற மாகாணம்,
பாழடைந்த கோபுரம்,
எடையற்ற அரசு.

அதே வேளையில்,
தடையுத்தரவுகளின் செழிப்பான எழுத்தர்கள்
இரும்புக் கதவில்
இன்னொரு பூட்டைச் சேர்க்கிறார்கள்.

மாலெகோன் கரையோரம்
இளைஞர்கள் கூடுகிறார்கள்;
அங்கே அலைகள்
காயப்பட்ட கல்லிடம் கேள்வி கேட்கின்றன.

கடல் மேலும் உயர்கிறது;
வீடுகள் நடுங்குகின்றன;
ஒவ்வொரு பால்கனியும்
தனக்குத் தெரிந்தவற்றைக் காத்துக்கொள்கிறது.

பாதரசம் உயர்கிறது.
ரொட்டியின் பங்கு குறைகிறது.
காய்ச்சல் சூழ்ந்த அறையில்
சுழன்றுகொண்டிருந்த மின்விசிறி
திடீரென நின்றுவிடுகிறது.

தீவைச் சுற்றிய சுவர்கள்
ஒன்றன்பின் ஒன்றாக உயர்கின்றன—
சட்டங்களாலும், கையொப்பங்களாலும்,
அழிவினாலும் கட்டப்பட்ட சுவர்கள்.

நீருக்கு அப்பால்
கோபுரங்கள் பதில்களைப் போல ஒளிர்கின்றன;
இங்கே, நீலப்பச்சைச் செதில்களாக
சுவர்களிலிருந்து வண்ணம் உரிந்து விழுகிறது.

ஒரு மருத்துவர்
சோர்வுற்ற ஜன்னல்களுக்குக் கீழே நடக்கிறார்;
ஒரு மீனவர்
பரம்பரையாகக் கிடைத்த பாய்மரங்களைப் பழுதுபார்க்கிறார்.

தேவை கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கும்போது
‘சுதந்திரம்’ என்பது
முழுமையாக உச்சரிக்கப்படும் ஒரு சொல்.

ஆனால் இங்கே—
சுதந்திரம் பயிர்களைக் கணக்கிடுகிறது;
மருத்துவமனையைப் பழுதுபார்க்கிறது;
மங்கிவரும் மாலை ஒளியில்
எல்லாவற்றையும் ஆய்ந்து பார்க்கிறது.

ஃபிடல் கேட்பது முருங்கையைப் பற்றி;
நினைவுச்சின்னங்களைப் பற்றி அல்ல—
ஒரு முறுக்கிய காய்,
ஒரு பச்சை மருந்து,
ஒரு சாதாரண ரொட்டி.

மாபெரும் வடிவமைப்புகள் வாடிப்போன இடங்களில்
சிறிய இலைகள் இன்னும் நிலைத்திருக்கின்றன;
அவை வாழ்பவர்களுக்கு உணவளித்து,
இறந்தவர்களைக் கேலி செய்கின்றன.

உப்புக் காற்றில்
ஒரு நூற்றாண்டு மெதுவாகத் தளர்கிறது.
ஒரு யுகத்தைத் தாங்கிய கை
நடுங்கத் தொடங்குகிறது.

நாடித்துடிப்பு
உடலுக்குள் ஓர் வதந்திபோல் மட்டுமே உள்ளது.
ஒரு தீவு என்பது
கடல் எடுத்துச் செல்லக்கூடிய
ஒரு மூச்சு மட்டுமே.

வெப்பம் உயரும்.
காக்கப்பட்ட சுவர்களும் உயரும்.
சந்தைகள் தமது கவனமான ‘இல்லை’யை
மேலும் செம்மைப்படுத்தும்.

உடல் தளர்கிறது;
கல் உடைந்து விழுகிறது;
கடற்கரை
நாம் நெடுங்காலம் செதுக்கிய பெயர்களை
மறந்துவிடுகிறது.

ஆயினும்,
ஒரு செவிலித்தாய் நள்ளிரவிலும்
நகரத்தைக் கடந்து செல்கிறாள்;
ஒரு ஆசிரியர்
பள்ளிக் கதவைத் திறக்கிறார்.

உலகம் ஏராளமாகப் பறித்த கரங்கள்
சிறிதளவையேனும் பகிர்ந்துகொண்டு,
அதையே பெரிதாக மாற்றிக் காட்டுகின்றன.

மாலெகோன் நெடுகிலும்
அந்திப் பொழுது பின்வாங்குகிறது.
கடிகாரம்
தன் சிறிய தீங்கைச் செய்துகொண்டிருக்கிறது.

சாம்பல் விழுகிறது;
விடியலுக்கு முன்பே
ஒரு கை மீண்டும் கட்டியெழுப்புகிறது.

கடல்
தன் இருண்ட கரங்களில்
கியூபாவைத் தூக்கிச் செல்கிறது.

தமிழில் – அ.பகீரதன்

Leave a comment