ஆசிரியர்: சல்மாதேதி: 2026-08-21மூலம்: இந்தியா டுடே (2015-01-28)

ஒரு படைப்பாளி தனது மரணத்தினைத் தானே அறிவித்துக் கொள்வதும் தனது படைப்புக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சொல்வதும் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரான, மோசமானதொரு முன்னுதாரணத்தை நமக்குக் காட்டியிருக்கிறது. படைப்புச் சுதந்திரம் அதன் எல்லை குறித்து விமர்சனங்களை எதிர்கொள்கிற தருணங்களைக் கடந்துதான் படைப்பாளிகள் தங்களது படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மத அடிப்படைவாதிகளால் மரண அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்ட சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும் அவர்களது படைப்புகளுக்கும் பாதுகாப்பிற்கும் ஆதரவாக, எதிராக நிகழ்ந்த விவாதங்களும் நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் வரலாற்றின் பக்கங்களில் முதல் முறையாக ஒரு படைப்பாளி தனக்குத்தானே மரண அறிவிப்பை வெளியிட்டதும் தனது படைப்புகளைத் திரும்பப் பெறுவதும் இன்று பதிவாகியிருக்கிறது. நாம் அப்பேற்பட்ட ‘அரிய’தொரு தருணத்தில் வாழ்கிற பேறு பெற்றிருக்கிறோம்!
பெருமாள்முருகனுக்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கும் அநீதிகள் ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படையையே தகர்க்கக் கூடியதாக மாறியிருக்கிறது. அப்பகுதியில் தங்களை அரசியல்ரீதியாக நிலைநிறுத்திக்கொள்ளப் போராடும், சாதிய மதவாத அமைப்புகளினால் கையிலெடுக்கப்பட்டிருக்கும் இப்பிரச்சனை, அவர்கள் உண்டாக்கியப் போராட்டங்கள், மிரட்டல்கள், அவமானங்கள், மன உளைச்சல்கள்தான் இம்முடிவை நோக்கிப் பெருமாள்முருகனைத் தள்ளியிருக்கின்றன. பிரான்ஸில் பயங்கரவாதிகளால் பத்திரிகையாளர்களைப் படுகொலைதான் செய்ய முடிந்தது. இங்கோ படைப்பாளியைத் தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறார்கள்.
கடந்த காலங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று மட்டுமே பேசப்பட்டுக் கொண்டிருந்த படைப்பாளிகளுக்கு எதிரான விஷயங்கள் இன்று எல்லா சமூகத்திலும் அதே அளவுகோல், சற்று குறைவாகவோ நிகழமுடியும் என்கிறது போல பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறது. அடிப்படைவாதிகளோடு இங்கு அரசும் கைகோர்த்திருக்கிறது. இச்சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனுக்குமான அடிப்படை உரிமைகளும் பாதுகாப்பும் ஒரு படைப்பாளிக்கு வழங்கப்படவில்லை என்பதை இந்த அரசின் செயல்பாடு கூறுகின்றது. பாதுகாப்பையும் நீதியையும் தரவேண்டிய மாவட்ட நிர்வாகம், மிகத் தரம் தாழ்ந்து தனது கோர முகத்தினைக் காட்டியிருக்கிறது.
தங்களுக்குச் சம்பந்தமற்ற விஷயத்திற்குப் பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டு கடை அடைப்புக்கு நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையும் துணை நின்றிருக்கும் அவலம் நிகழ்ந்திருக்கிறது.
பேச்சுவார்த்தையின் வழியே பெருமாள்முருகன் தனது பிரதியின் ‘சர்ச்சைக்குரிய’ பாகங்களை நீக்கிவிடவும் பிரதிகளைத் திரும்பப் பெறவும் வேண்டுமென்று அரசு ஊழியரான ஆர்டிஓ எழுதி வாங்குவதற்கு என்ன நியாயமும் தகுதியும் இருக்கமுடியும்? அப்படிப்பட்ட அதிகாரம் ஒரு முதலமைச்சருக்கோ அல்லது பிரதமருக்கோகூட இருக்க முடியாது எனும்போது இந்த அராஜகத்தை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
சாதிய மதவாத வன்முறையாளர்களோடு அரச பயங்கரவாதம் இணைந்து கொண்டு செய்த ஆகப் பெரிய வன்முறையான இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள அறிவுலகம் தயாராக வேண்டும்.
கடந்த சில நாட்களாக இந்தச் சமூகத்தின் மீதான பதற்றங்களும் அவநம்பிக்கைகளும் பெருமாள்முருகனுக்கு ஆதரவாக ஒன்றிணைந்த குரல்களால் கரைந்துவிட்டிருக்கின்றன. வழமையாக எழுத்தாளர்களிடம் நிலவும் மௌனங்களைக் கலைத்து, குரல்களை ஒன்றிணைத்திருக்கும் ஒரு சம்பவமாக இது மாறியிருப்பது ஆறுதலைத் தருவதாக இருக்கிறது.
இங்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் எழுத்தாளருக்கு மௌனத்தைக் கற்றுத் தரவும் மரணத்தைப் பரிசளிக்கவும் எண்ணற்ற சமூகக் காரணிகள் உருவாக்கப்படுகின்றன என்றாலும், ஒரு படைப்பாளியின் மௌனம் (மரணம்) அவனது உண்மையான மரணத்திற்குப் பிறகும்கூட சாத்தியமாவதில்லை என்பதே உண்மை.
நன்றி:
ஆசிரியர்:சல்மா
மூலம்:இந்தியா டுடே (2015-01-28)
ஆசிரியர் குறிப்பு:சல்மா, சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான கவிஞர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’, ‘பச்சை தேவதை’, ‘தானுமானவள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், ‘சாபம்’, ‘பால்யம்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’, ‘மனாமியங்கள்’, ‘அடைக்கும் தாழ்’ உள்ளிட்ட நாவல்களையும் எழுதியுள்ளார். ‘கனவுவெளிப் பயணம்’ என்ற பயணநூலும் வெளியாகியுள்ளது. இவருடைய ‘இழப்பு’ என்ற சிறுகதை ‘கதா–காலச்சுவடு’ போட்டியில் பரிசு பெற்றது. இவரது படைப்புகள் பெண்ணியம், சமூகக் கட்டுப்பாடுகள், மதம், பாலின அரசியல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கவனம் பெற்றுள்ளன. சல்மாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, சேனல் 4 தயாரிப்பில், பிரிட்டிஷ் இயக்குநர் கிம் லாங்கினாட்டோ இயக்கிய ‘சல்மா’ என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் 14 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. சல்மாவின் குறிப்பிடத்தக்க நாவலான ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ ஆங்கிலம், மலையாளம், மராத்தி, ஜெர்மன், கத்தலான் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது படைப்புகள் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் பெண்களின் வாழ்வனுபவங்களையும் சமூகத் தடைகளையும் தனித்துவமான குரலில் பதிவு செய்கின்றன.
எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்களின் மாதொருபாகன் நாவல் மீதான விமர்சனங்கள், விவாதங்கள், சமூக-அரசியல் எதிர்வினைகள், நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை இங்குப் பகிரப்பட்டுள்ளது.


Leave a comment