சிறிய மற்றும் சுதந்திர ஊடகங்கள்தான் மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன – சீனிவாசன் ஜெயின் நேர்காணல்

Hardline

Hardline

27 Aug 2026 — 1 min read

சிறிய மற்றும் சுதந்திர ஊடகங்கள்தான் மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன – சீனிவாசன் ஜெயின் நேர்காணல்

–தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

பிரணாய் ராய் துவங்கிய என்.டிவி தொலைக்காட்சியில் முப்பது ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் பத்திரிகையாளர் சீனிவாசன் ஜெயின். 2022 ஆம் ஆண்டு, என்டிடிவி தொலைக்காட்சியைத் தொழிலதிபரும், இந்தியப் பிரதமர் மோடியின் நெருங்கிய சகாவுமான அதானி விலைக்கு வாங்கினார். இந்த நடவடிக்கையையடுத்து சீனிவாசன் ஜெயினும் அவரது சகாக்களும் தங்கள் பதவிகளிலிருந்து விலகி, சுதந்திர ஊடகமான நியூஸ்லாண்டரியில் இணைந்து பணிசெய்யத் தொடங்கினர்.

பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசையும் வலதுசாரி அரசியலையும் தொடர்ந்து அச்சமின்றி எதிர்க்கும் ஊடகம் இது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘மெஹ்தி அன்பில்டர்ட்’ நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில், இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் ஊடகங்கள் சுதந்திரமாக இருக்கும் நிலைக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து உரையாடுகிறார் சீனிவாசன் ஜெயின். டிரம்பின் காலத்தில் அமெரிக்க ஊடகங்களும் ஏவல் நாய் ஊடகங்களாக மாறிவருகிறதா என்பது குறித்து இந்த நேர்காணல் பேசுகிறது.

உலகின் பெரிய ஜனநாயகம் என்று சொல்லப்படும் இந்தியாவில் வெறுமனே செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சிறையில் இருக்கிறார். துன்புறுத்தவும் கொல்லப்படும் சூழலும் நிலவுகிறது. மெஹ்தியும் ஜெயினும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக ‘கோடி’ ஊடகங்கள் பரப்பும் செய்திகளையும் பேசுகின்றனர்.

சமீபத்தில் அமெரிக்காவில் கௌதம் அதானி மீது இருந்த வழக்கை, டிரம்ப் அரசு திரும்பப் பெற்றது பற்றியும் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது குறித்தும் இந்த உரையாடல் நீள்கிறது.

கேள்வி: முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் மைய நீரோட்ட ஊடகங்கள் அரசு கைவசம் உள்ளன. அமெரிக்காவிலும் பாக்ஸ் நியூஸ் அரசுக்கு ஆதரவான நிலைக்குச் சென்றுவிட்டது.

சீனிவாசன் ஜெயின்: அமெரிக்காவைப் பொறுத்தவரை இன்னும் நம்பிக்கை மிச்சமிருக்கிறது. டிரம்ப் அரசுக்கு எதிராக நீதியை நிலைநிறுத்துவதற்கான அமைப்புகள் இன்னும் அங்கே உயிர்ப்புடன் உள்ளன. இந்தியாவிலோ நிலைமை வேறு. இந்தியாவில் 400 செய்தி சேனல்கள் உள்ளன; ஒரு லட்சம் செய்தித்தாள் நிறுவனங்கள்; டிஜிட்டல் ஊடகங்கள் எண்ணற்றவை. பெரும்பாலான ஊடகங்களை மோடி அரசு காலில் விழச்செய்ததுதான் அதன் முக்கியமான சாதனை.

கேள்வி: அத்தனை செய்தி சேனல்களையும் மோடி அரசு எப்படி அடிபணிய வைக்க முடியும் என்பது மோடி ஆதரவாளர்களின் வாதமாய் உள்ளதே?

சீனிவாசன் ஜெயின்: இதற்குப் பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. மோடி அரசுக்கு எதிராக நின்ற ஒரே செய்தி சேனல்தான் என்டிடிவி. 2002 ஆம் ஆண்டு என்டிடிவியை வாங்கிய அதானி நிறுவனத்தினர், எங்களையெல்லாம் அழைத்து எங்களது படைப்புச் சுதந்திரத்தில் தலையிடமாட்டேன் என்று உறுதிதந்தார்கள். ஆனால் ஒரே மாதம்தான். அவர்கள் எல்லாவற்றிலும் ஆக்கிரமிப்பு செய்தார்கள்.

கேள்வி: ‘கோடி’ மீடியா என்ற பெயர் எப்படி உருவானது?

சீனிவாசன் ஜெயின்: எங்களது சகாவான ரவீஷ் குமார் தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்த தொடங்கினார். கோடி என்றால் மடி என்று அர்த்தம். அரசின் மடியில் இருந்து அதன் விருப்பத்துக்கேற்ப செய்திகள் சொல்வது. 24 மணிநேரமும் முஸ்லிம் மக்களுக்கெதிரான செய்திகளைச் சொல்வது போன்றவற்றை செய்வதுதான் கோடி ஊடகங்களின் முழுநேரப் பணி.

தேர்தல் நேரம் வந்தபோது, பிரதமர் அலுவலகத்திலிருந்தே அவரது நேர்காணல்கள் தயாரித்து அதை தொலைக்காட்சி செய்தி சேனல்கள் வெளியிடத் தொடங்கின. அதில் பிரதமரிடம் எங்கிருந்து உங்களுக்கான ஆற்றலைப் பெறுகிறீர்கள்? என்னவிதமான மாம்பழங்கள் சாப்பிடப் பிடிக்கும் போன்ற கேள்விகளை செய்தியாளர்கள் சுற்றிக்கேட்டு அதை ஒளிபரப்பத் தொடங்கினார்கள்.

கேள்வி: ஜனநாயகம் மிகவும் உயிர்ப்புள்ள, விவாதங்களும், முரண்பாடுகளும் ஆரோக்கியமாக இருக்கும் பன்மைத்துவம் கொண்ட இந்தியாவில், இந்த மாதிரியான ஊடகப் போக்குகள் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டன?

சீனிவாசன் ஜெயின்: குறைகள் இருந்தாலும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆனால், இதுபோன்ற அரசு ஆதரவு பரப்புரைக்கும் சர்வாதிகாரத்தன்மை நோக்கி இந்தியா செல்வதையும் மக்கள் ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அதே வேளையில் காலப்போக்கில் மையநீரோட்ட ஊடகங்களுக்கு எதிராக மக்கள் சலிப்படைவது சமீபத்தில் இந்தியாவில் தொடங்கியுள்ளது.

மைய நீரோட்ட ஊடகங்களை சாதாரண பொதுமக்களே ‘கோடி’ மீடியா என்று விமர்சிக்கும் நிலை சமீபத்தில் ஏற்பட்டது. டெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் அது எதிரொலித்தது. இந்தச் சூழலில்தான் சமூக ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்களுக்கு வெகுஜன மக்களிடையே ஆதரவும் வரவேற்பும் நம்பகத்தன்மையும் அதிகரிக்கத் தொடங்கின.

கேள்வி: இந்தியாவில் கூகுள், முகநூல், எக்ஸ் தளம் ஆகியவற்றின் மேல் மோடி அரசாங்கம் தொடர்ந்து அச்சுறுத்தல் நடவடிக்கைகளை எடுப்பதாகச் செய்திகள் வருவது பற்றி?

சீனிவாசன் ஜெயின்: உதாரணத்துக்கு, எக்ஸ் வலைத்தளம் தொடர்ந்து இந்திய அரசுடன் சுதந்திரமாகச் செய்திகளை வெளியிடப் போராடிக்கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு மட்டும் 8,000 செய்திகளை எடுக்கச்சொல்லி இந்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் நியூஸ் க்ளிக் போன்ற சிறிய ஊடகங்கள் மீது ஏவப்படுகின்றன. இனி சம்பிரதாயமான மைய நீரோட்ட ஊடங்கள் அல்ல, டிஜிட்டல் ஊடகங்கள்தான் போர்க்களங்களாக இருக்கப்போகிறது என்ற முடிவெடுத்துச் செயல்படுகின்றன.

கேள்வி: மோடி ஆட்சிக்கு வந்தபிறகு 12 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனரே… உங்களுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதா?

சீனிவாசன் ஜெயின்: நான் மிகப்பெரிய ஊடக நிறுவனமான என்டிடிவியில் பணியாற்றியவன். மேல்தட்டைச் சேர்ந்த ஒரு இந்து என்ற அனுகூலம் எனக்கு இருக்கிறது. அத்துடன் நான் ஒரு ஆண். ஆங்கில ஊடகச்சூழலில் பணியாற்றும் பெருநகரத்தவன். முஸ்லிம் பத்திரிகையாளனாகவோ, பிராந்திய மொழியில் வேலை செய்பவனாகவோ, பெண் பத்திரிகையாளராகவோ இருந்தால் நிலைமை வேறு. என்னைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு செய்திக்கான தொடர்புகளைத் துண்டிப்பார்கள். அசிங்கமாகப் பேசுவார்கள். ஆனால், மற்ற பத்திரிகையாளர்களோ ஒரு செய்திக் கட்டுரையை எழுதியதற்காக ஆண்டுக்கணக்கில் சிறையில் இந்தியாவில் இருக்கும் நிலை உள்ளது.

கேள்வி: அமெரிக்காவிலும் டிரம்ப் இரண்டாம் முறை அதிபராகப் பதவியேற்ற பின்னர், ஊடகச்சூழியல் மிகவும் மோசமான சூழலை அடைந்துள்ளது. தன்னை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை தேசத்துக்கு எதிரான சதி செய்பவர்களாக அவர் குற்றம்சாட்டுகிறார். அவரது நண்பர்கள் சிபிஎஸ் நியூஸ் பாரமவுண்ட்டை விலைக்கு வாங்கிவிட்டனர். தற்போது வார்னர் ப்ரதர்ஸ் டிஸ்கவரியை வாங்க முயற்சிக்கின்றனர். சிஎன்என் ஐயும் வாங்கிவிடுவார்கள். இது அமெரிக்காவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் இந்திய அனுபவத்திலிருந்து சொல்லுங்கள்…

சீனிவாசன் ஜெயின்: ஊடக முதலாளிகள் வர்த்தகர்களாக இருப்பதால் அவர்களால் அரசாங்கத்துக்கு எதிராக எதுவும் செய்ய இயலாது. வளைந்துகொடுக்கவே செய்வார்கள். அதன்மூலம் செய்தி அறைகளும் அவர்களது ஆதிக்கத்துக்குள் வந்துவிடும்.

இந்தச் சூழலில் சுதந்திரப் பத்திரிகையாளர்களாகத்தான் செயல்பட முடியும். இந்தியாவில் ஐந்து, பத்து, பதினைந்து பேர்களே பணியாற்றும் சிறிய ஊடக நிறுவனங்கள் அரசுக்கு எதிராக எழுதி வழக்குகளைச் சந்திக்கின்றன; போராடிக் கொண்டிருக்கின்றன. அதனால் ஊடகவியலாளர்கள் அரசுக்கு எதிராக முதுகெலும்புடன் செயல்படுங்கள். சேர்ந்து காரியமாற்றுங்கள். தனியாக அரசை எதிர்த்துப் போராட முடியாது. சின்னச் சின்ன செய்தி இணையத்தளங்கள் ஒருங்கிணைந்து வழக்குகளை எதிர்கொள்கின்றன.

மூன்றாவது மிகப்பெரிய கொடுங்கோல் ஆட்சியாளர்களை எதிர்த்துச் செய்திகளைச் சேகரிக்கும்போதும் எழுதும்போதும் கூறும்போதும் துல்லியமான தகவல்களோடு பணியாற்றுங்கள். மோடி ஆட்சியுடன் போராடும்போது மிகவும் துல்லியமான தரவுகளுடன்தான் மோதமுடியும்.

கேள்வி: அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு கௌதம் அதானி லஞ்சம் கொடுத்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கு சில மாதங்களிலேயே அமெரிக்க அரசால் கைவிடப்பட்டது. அந்தச் செய்திக் கட்டுரையை தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டது. ஆனால், இந்தியாவில் இந்த ஊழல் செய்தி பெரியதாக வெளியாகவில்லை…

சீனிவாசன் ஜெயின்: ஆசியாவைப் பொறுத்தவரை அதானியைப் பற்றிய செய்தி பெரிய செய்திதான். அதானி வழக்கை அமெரிக்க அரசு திரும்பப் பெறுவதற்குக் காரணம் அதானியின் வழக்கறிஞராகச் செயல்பட்டது டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் ராபர்ட் ஜஃப்ரா. இந்தச் செய்தி இந்தியாவில் ஊடகங்களில் வெளியானது. எப்படி வெளியானதென்றால், மைய நீரோட்ட ஊடகங்களில் வெளியிடப்படாமல் சிறிய டிஜிட்டல் ஊடகங்களில் விரிவாக வெளியானது.

மைய நீரோட்ட ஊடகங்கள் வெறும் சிறிய செய்தியாகவே வெளியானது. ஏனெனில் பெரிய வழக்குகளைச் சந்திக்க வேண்டிவரும். இந்த சிறிய டிஜிட்டல் ஊடகங்கள், மையநீரோட்ட செய்தி ஊடகங்களை விட அதிகப் பார்வையாளர்களைக் கொண்டவை. பல யூட்யூப் சேனல்கள் பாரம்பரிய டிவி சேனல்களை விட கூடுதலான பார்வையாளர்களைக் கொண்டிருப்பதோடு அரசுக்கு எதிரான செய்திகளையும் தொடர்ந்து வெளியிடுபவையாக உள்ளன. இது கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலேயே பாஜக அரசை கவலைகொள்ளச் செய்தது. தேர்தலில் பாஜகவுக்கு எண்ணிக்கை பலத்தையும் குறைத்தது.

கேள்வி: அமெரிக்காவில் முழுக்க அந்நிலை இல்லை. டிரம்பால் ஹாலிவுட்டை தன் இஷ்டத்துக்கு ஆட்டிவைக்க இயலவில்லை. ராபர்ட் டி நீரோ, டிரம்புக்கு எதிரான பேரணிக்கே அழைப்பு விடுத்தவர்களில் ஒருவர். ஆனால் இந்தியாவில் பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் மோடியில் விரல் சொடுக்குக்காகக் காத்திருக்கிறார்கள்…மோடிக்குத் தேவையான விளம்பரங்களைக் கொடுக்கிறார்கள்.

சீனிவாசன் ஜெயின்: பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாரூக் கான் மகன் போதைப் பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்டார். மோடியை அவர் கீழே புரண்டு பாராட்டாவிட்டாலும், அவர் சற்றே மௌனம் காத்தார். அதுவே அவர் பழிவாங்கப்பட்டதற்குக் காரணமென்று கருதுகிறேன்.

மற்ற நட்சத்திரங்களோ மனதளவில் இந்துத்துவவாதிகள். அதில் பெரும்பாலான பேர் வெளிப்படையாக தங்களை மோடி ஆதரவாக காட்டிக்கொண்டதில் வியப்பில்லை. பாலிவுட் நட்சத்திரங்களை மட்டும் இதில் சேர்க்க இயலாது. கிரிக்கெட் நட்சத்திரங்கள், தடகள வீரர்கள், பெருநிறுவனங்கள் எல்லோருமே அப்படித்தான் மோடியை ஆதரிக்கிறார்கள். அதற்கு இந்தியாவின் சூழலும் காரணம். அவர்கள் ஏதாவது விமர்சனம் செய்தால், அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் உங்கள் மீது ஏவப்படலாம்.

ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் மோடி அரசின் மீது விமர்சனத்தோடு இருந்ததால் அவரது அலுவலகத்தில் பாதி இடிக்கப்பட்டது. இதுபோக, மோடியை ஆதரிப்பதோடு பாலிவுட்டிலிருந்து இந்துத்துவ சார்புள்ள திரைப்படங்கள் தொடர்ந்து வருவது இன்னொரு குறிப்பிட்ட போக்காகும்.

கேள்வி: சினிமா நட்சத்திரங்கள் இந்தியாவில் கடவுளைப் போல மதிக்கப்படுபவர்கள். அவர்களுக்காக அங்கே ரசிகர்கள் ஆலயங்களை எழுப்பும் அளவுக்கு வழிபாட்டுணர்ச்சி உள்ளது. ஆனால், மோடி மீதான அச்சம் அவர்களை நடுங்கவைக்கிறது… இல்லையா?

சீனிவாசன் ஜெயின்: மோடி ஆட்சிக்கு வந்த முதல் ஐந்தாண்டுகளில் பாலிவுட்டின் இன்னொரு உச்சநட்சத்திரமான அமீர்கான், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அச்சுறுத்தல்கள், பசுக்குண்டர்களின் தாக்குதல்கள் குறித்து விமர்சனங்களைச் சொல்லி தானும் தன் மனைவியும் வேறு நாட்டுக்குச் சென்றுவாழலாமென்று எண்ணுவதாகச் சொன்னார். உடனடியாக அவரது சினிமா ஒப்பந்தங்கள் ரத்தாகின. விளம்பர நிறுவனங்களிலிருந்து ஒத்துழைப்பு மறுக்கப்பட்டது. இணையத்தில் வெறுப்புப் பிரசாரம் ஏவிவிடப்பட்டது. தற்போது அமீர்கான் எவ்வளவு அமைதியாக உள்ளார், பாருங்கள்.

ஆனாலும், இந்தியாவிலுள்ள நிலை குறித்து, வெளியிலுள்ளவர்கள் மிகவும் கவலைகொள்ள வேண்டிய அவசியமில்லாத நம்பிக்கையான செய்திகளைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஸ்க்ரோல், தி வயர், அல்ட் நியூஸ், கேரவன், ஆர்ட்டிக்கிள் 14, ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் போன்றவை இந்த இருண்ட சூழலிலும் சுதந்திரமான இதழியல் பணியைச் செய்துகொண்டிருக்கின்றன. என்னிடம் கவலையைப் பகிர்ந்துகொள்ளும் இளம் பத்திரிகையாளர்களுக்குச் சொல்வதை இங்கே பகிர்கிறேன்.

“ஆம், சூழல் மிகவும் அவநம்பிக்கையைத்தான் தருகிறது. ஆனால், மிக அரிதாக எப்போதாவது நடக்கும் ஒரு மாற்றத்தை இந்த நாடு கண்டுகொண்டிருப்பதற்கு சாட்சியாக நீங்கள் இருக்கிறீர்கள். ஒரு சுதந்திரமான ஜனநாயக நாடாக இருந்து படிப்படியாக பின்னுக்குப் போய் சர்வாதிகார நாடாகும் மாற்றம் இது. இந்த மாற்றத்தை ஏதாவது ஒரு வடிவில் நீங்கள் பதிவுசெய்தால், உங்கள் குரலை வெளிப்படுத்துவது முக்கியமான பணி. யூட்யூப் ஆக இருக்கலாம், ட்விட்டராக இருக்கலாம், இன்ஸ்டாகிராமாக எதுவேண்டுமானாலும் இருக்கலாம். இதுபோன்ற இன்னொரு வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவே போவதில்லை. ஒரு செய்தியாளனுக்கான எலும்பைத் திடப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் கூட. உலகில் எந்த இளம் பத்திரிகையாளனுக்கும் இதுதான் செய்தி.’’

Leave a comment