வெறுப்பையும் பிளவையும் விதைக்கும் பா.ஜ.க.வின் அரசியல் வீழ்த்தப்படும்: நேஹா போரா நேர்காணல்

R . BalakrishnanHardline Desk

30 Aug 2026 — 1 min read

வெறுப்பையும் பிளவையும் விதைக்கும் பா.ஜ.க.வின் அரசியல் வீழ்த்தப்படும்: நேஹா போரா நேர்காணல்

அகில இந்திய மாணவர்கள் சங்கத்தின் (AISA) தேசியத் தலைவராக உள்ள நேஹா போரா, சமூகப் பிரச்சினைகளுக்காகக் களத்தில் இறங்கி போராடும் மாணவர்களில் மிகவும் முக்கியமானவர். சமீபத்தில், இந்தியாவின் முக்கியமான வரலாற்றுப் பக்கத்தில் இடம்பிடித்த சி.ஜே.பி.யின் போராட்டத்திலும் இவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

குறிப்பாக ஜந்தர் மாந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்குடன் உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்று, 23 நாட்கள் உண்ணாநிலையில் இருந்தார். தவிர, போட்டித் தேர்வுகளுக்கு எதிராக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட போது இவர் மீது மை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.  ஆனால், ‘‘மற்றவர்களை அவமதிக்கும் கருவியாக மையைப் பார்க்கிறார்கள். நாங்கள் அந்த மையைக் கொண்டு நாட்டின் எதிர்காலத்தையும் வரலாற்றையும் எழுதுவோம்,” என எதிர்வினையாற்றி கவனம் ஈர்த்த இவர், சமீபத்தில் தி ஃப்ரண்ட்லைனுக்கு அளித்த பேட்டியின் தமிழ் வடிவம் இதோ…

நீங்கள் அகில இந்திய மாணவர் அமைப்பான AISA-வின் தேசியச்  செயலாளராக இருப்பதால் பல ஊர்வலங்கள், போராட்டங்களில் பங்கு பெற்ற அனுபவமிக்கவர். எதனால் இந்தப் போராட்டத்தில் ஈடுபட நினைத்தீர்கள்?

சி.ஜே.பி. என்று சொல்லப்படுபவர்கள் யார்? அவர்களது நிலைப்பாடு என்ன? அவர்களில் சிலர் ஆம் ஆத்மி கட்சியில் முன்பு இருந்துள்ளார்கள். இப்போதைய அவர்களது அரசியல் நிலைப்பாடு என்ன? அவர்களின் இலக்கு என்ன? இப்போதைய ஆட்சிக்கு எதிரான எழுச்சியை நீர்த்துப் போகச் செய்வதற்கான ஒரு யுக்தியா? அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வழிநடத்தப்படும் போலியான ஒரு போராட்டமா? என்று கூடச் சிலர் கருதினர்.

எனினும் இதில் உண்மையை நாம் காண வேண்டியுள்ளது. யார், எந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள் என்பதல்ல; அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாக தேர்வு சார்ந்த சிக்கல்கள் இருப்பதைப் பொது ஊடகங்கள் ஒப்புக் கொண்டுவிட்டன. பெற்றோர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். நாடுமுழுக்க மாணவர்கள் மறு பேச்சின்றி இதனை ஏற்றுக்  கொள்கின்றனர்.

நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகளில் மட்டுமல்ல, உத்திரப் பிரதேச லேக்பால் போன்ற இரண்டாம் நிலைப் பணியாளர்கள் தேர்வு உள்ளிட்ட மாநில அளவிலான தேர்வுகளில் கூட குளறுபடிகள் நடக்கின்றன. மருத்துவர், போலீஸ் ஆகியோர்கள் தேர்ந்தெடுப்பதற்குப்  பின்னால் உள்ள எல்லாத் தேர்வுகளிலும் இவ்வாறு நடக்கின்றது.

இப்படி, சீரழிந்து சிதைந்துபோன இந்த அமைப்பால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இம்முறை ஒரு வேறுபாடு இருந்தது; கடந்த சில ஆண்டுகளாகத் திரண்டிருந்த அந்த ஒட்டுமொத்தக் கோபமும், நையாண்டித் தளமாக  தொடங்கப்பட்ட சி.ஜே.பி. வழியாக வெளிவந்துள்ளது.

தலைமை இல்லாத இந்தப் போராட்டத்தை மாறுபட்ட போராட்டம் என சொல்ல முடியுமா?

ஆம், மாணவர்கள் தலைமை பற்றி உண்மையில் கவலைப்படவில்லை. ஆனால், சில காரணங்களுக்காக அனைவரும் ஒன்று சேர்ந்தார்கள்.

  1. தலைமை நீதிபதி இளைஞர்களைக் ‘கரப்பான் பூச்சிகள்’ என்று அழைத்தது தூண்டுதலாக ஆனது. ​​’கரப்பான் பூச்சிகள்’ என்ற சொல், வரலாற்றில் விரும்பப்படாத ஒரு மக்கள் பிரிவினரைக் குறிக்கத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையை எதிர்கொண்ட இனக்குழுக்களுக்கு எதிராக இன அழிப்பின் போதும், நீண்ட காலமாக உழைக்கும் மக்களையும், ஏழை மக்களைக் குறிக்கவும், முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளைக் குறிக்கவும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  2. 2024ம் ஆண்டு வினாத்தாள் கசிவைக் கண்டித்து நாங்கள் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டோம். நாங்கள் நான்கு நாட்கள் ஜந்தர் மந்தரை ஆக்கிரமித்திருந்தோம். அப்போதும் தர்மேந்திர பிரதான் மீது அழுத்தம் அதிகரித்திருப்பதாகவும் விரைவில் அவர் ராஜினாமா செய்யப் போகிறார் என்ற தகவல் எங்கள் காதுகளை எட்டியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது.
  3. கல்வி அமைச்சகத்தின் மீது இந்த வினாத்தாள் புகார் மட்டுமல்ல. முன்பு, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு நடந்தது. அவர்கள் திரையில் மதிப்பிடும் (On-Screen Marking – OSM) ஒரு புதிய மதிப்பீட்டு முறையைக் கொண்டு வந்தனர். இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களைக் காட்டி, “பாருங்கள், இந்தக் கையெழுத்தும் எனது மற்ற எல்லா விடைத்தாள்களிலும் உள்ள கையெழுத்தும் பொருந்தவில்லை. நான் எழுதாத ஒரு விடைத்தாளுக்கு எனக்கு மதிப்பெண் இடப்பட்டுள்ளது” என்று சமூக ஊடகங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஆனால், அவர்களின் பிரச்சினை சரிசெய்யப்படுவதற்குப் பதிலாக, அந்த மாணவர்கள் பாகிஸ்தானியர்கள் என்றும் தேசவிரோதிகள் என்றும் முத்திரை குத்தப்பட்டனர்.
  4. இதுதவிர, இளங்கலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வின்போது (CUET-UG)  சர்வர் செயலிழப்பு, யுஜிசி நெட்  விவாத்தாள் கசிவு என இப்படி ஒன்றிய அரசாங்கத்தின் நிர்வாகத் திறன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு எதிராகத்தான் போராட்டங்களில் இளைஞர்கள் தன்னெழுச்சியால் பங்கேற்றனர். இதனால், பாதிக்கப்பட்ட பலரும் கலந்துகொண்டதால் தலைமை இல்லாமலே போராட்டத்தின் வலுக் கூடியது.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. முன்வைக்கும் அரசியல் என்ன?

ஆர்.எஸ்.எஸ்., தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே ஒரு தீவிரப் பிளவுவாத அரசியலை பேசும் அமைப்பாகவே இருந்து வந்துள்ளது. இந்திய மக்கள் எதை உயர்த்திப் பிடித்தார்களோ அதற்கு அது துரோகம் இழைத்துள்ளது. இதை நாம் கவனிக்க வேண்டும். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் கூட ஆர்.எஸ்.எஸ்., துரோகம் இழைத்தது. சுதந்திரம் கோரிப் போராடிய இந்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பிரிட்டிஷ் படைகளில் இருந்த இந்தியக் காவலர்களும் பாதுகாப்புப் பணியாளர்களும் மறுப்புத் தெரிவித்தனர். இந்தியா இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஆர்.எஸ்.எஸ் அமைப்போ, இளைஞர்கள் தங்கள் சொந்த நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்கக் கூடாது என்றும் கூறித் தொடர்ந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வந்தது.

மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் அதன் பல நிர்வாகிகளும் பொறுப்பு என்ற உண்மையை யாராலும் மாற்ற முடியாது. வரலாற்றைப் படித்தவர்கள், அறிந்தவர்கள் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொண்டு அது மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புபவர்கள் ஒரு உண்மையை மறுக்க முடியாது: சுதந்திரப் போராட்டத்தின் உச்சகட்டத்தில், ஒட்டுமொத்த நாடும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு வலிமையான சக்தியாகத் திரண்டிருந்த அந்த வேளையிலும், ஆர்.எஸ்.எஸ்., தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளையே பரப்பிக் கொண்டிருந்தது.

பா.ஜ.க. அரசின் தேர்வுத்தாள் கசிவு உள்ளிட்டவை அப்பட்டமான நிர்வாகச் சீர்குலைவா அல்லது அலட்சியமா?

நிர்வாகச் சீர்குலைவு  மட்டுமல்ல. தேர்வுத்தாள் கசிவுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்குத் தேசியத் தேர்வு முகமை என்னும்  அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். இந்த அமைப்பே இவ்வாறு கசிவுகள் நடப்பதற்கான காரணமாக உள்ளது. தேர்வுகளை நடத்துவதில் இவ்வமைப்பின் இயலாமையை உங்களால் உணர முடிகிறதா? ஆண்டுதோறும் நடத்தும் தேர்வை அவர்களால் சரியாக நடத்த முடியவில்லை.

முன்பு, ஆளும் பா.ஜ.க. அரசை எதிர்த்தால் தேசவிரோதி என்றும் அமெரிக்க ஏஜெண்டுகள், சீன ஏஜெண்டுகள் அல்லது பாகிஸ்தானிய ஏஜெண்டுகள் என்றும் மோசமான அவதூறுகளைப் பரப்பி முத்திரை குத்துவார்கள். இதனால், மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தாமல் இருந்தனர். ஆனால், தற்போது இந்தப் பயத்தை மாணவர்களின் போராட்டம் தகர்ந்துள்ளது.

‘கோடி மீடியா’ உட்பட அனைத்து மீடியாக்களும் உங்களிடம் பேச முயற்சிக்கிறார்களா?

‘கோடி மீடியா’க்கள் தான் அதிகம் உள்ளன; அவர்கள் போராட்டத்திற்கு வருவார்கள். ஆனால், எங்களது ஒன்றிய அரசுக்கு எதிரான பேச்சுக்கள் அவர்களது செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகாது. தர்மேந்திர பிரதான் எங்களைப் ‘பயங்கரவாதிகள்’ என்பார்; நிதின் நபீன் எங்களை ‘வைரஸ்கள்’ என்பார். அதைத் தான் செய்தி ஆக்குவார்கள். எனவே, அவர்களிடமிருந்து எங்களுக்கு எதிர்மறை விளம்பரம் மட்டும்தான் கிடைத்தது. 

போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் எங்களை அவர்களின் செய்தி சேனல்களில் நேர்காணல் வேண்டும் என அழைப்பது வேடிக்கையாக உள்ளது. எங்களைத் தவறாக சித்தரிக்க முயற்சித்தால், ஒட்டுமொத்த இளம் தலைமுறையினர்கள் எதிர்ப்பார்கள். எனவே, அவர்கள் நம்மிடம் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கோடி மீடியாவைச் சேர்ந்த நிருபர் ஒருவர், ‘‘பா.ஜ.க.விடமும் ஜென்சி அமைப்பு இருக்கிறது; அவர்கள் சி.ஜே.பி.க்கு எதிராக இருக்கிறார்கள்,’’ என்று எங்களிடம் விவாதித்தார். சி.ஜே.பி.க்கு எதிராக மாணவர் அமைப்புகளை நிறுத்த முயன்றார்.

சி.ஜே.பி.க்கு எதிராக மாணவர்கள் இருக்கிறார்ள் என்பதை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம். இந்த இயக்கம் சி.ஜே.பி.க்கள், மாணவர் அமைப்புகள் உட்பட பலரின் கடின உழைப்பால் உருவானது. எனவே, இந்த வெற்றி அனைத்தும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெற்ற வெற்றியாகும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், இப்போது எங்களைப்  பிரிக்க முடியாது. நாங்கள் அனைவரும் ஜந்தர் மந்தரில் இரவு பகலாக உண்ணாநிலை போராட்டத்தில் அமர்ந்து வெற்றி பெற்றோம். நான் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுவது, இந்தப் போராட்டம் மற்றவற்றிலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்பதைத்தான்.

முந்தைய போராட்டங்களில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது?

இந்தப் போராட்டங்கள் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதற்காக மட்டுமே நடத்தப்படவில்லை. நிச்சயமாக, பல ஆண்டுகளாகவே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், இந்தப் போராட்டம் இந்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும் இருந்தது. அதாவது, அரசாங்கம் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் தங்கள் அதிகாரத்தில் உள்ள அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயலும்.

குறிப்பாகக், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை முஸ்லிம்களின் போராட்டங்கள் என்று அவர்கள் கூறினர்; விவசாயிகளின் போராட்டங்களைக் காலிஸ்தானிகளின் போராட்டங்கள் என்றனர்; தொழிலாளர்களின் போராட்டங்களைச் சமூக விரோத சக்திகளின் போராட்டங்கள் என்று முத்திரை குத்தினர். போராட்டக்காரர்களுக்குத் தொடர்ந்து பெயர்களையும் முத்திரைகளையும் சூட்டிக்கொண்டே இருந்தனர். ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இழிவுபடுத்தவும், சமூகத்தின் பெரும்பகுதியினரிடம், “பாருங்கள், இதற்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; இது ஒரு சில தீய சக்திகளின் பிரச்சனை மட்டுமே; அவர்கள் கத்தட்டும், கூச்சலிடட்டும்; நீங்கள் விலகியே இருங்கள்” என்று கூற ஆளும் பா.ஜ.க., அரசு தொடர்ந்து முயற்சித்தது.

பிற போராட்டங்கள் எதிர்கொண்ட கடுமையான அரசு ஒடுக்குமுறையின் வாயிலாக மக்கள் விலகியே இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். சிஏஏ சட்டத்திருத்தப் போராட்டங்களில் மாணவர்கள் எதிர்கொண்ட வழக்குகள், மற்றும் வேளாண் சட்டத்திருத்தப் போராட்டத்தில் விவசாயிகள் எதிர்கொண்ட சட்ட நடவடிக்கைகள் போன்றவை இதற்கு உதாரணம்.

ஆனால், மாணவர் போராட்டங்களைப் பொறுத்தவரை, அவற்றை இடதுசாரிப் போராட்டங்கள் என்றோ, தலித் மாணவர், அம்பேத்கரியப் போராட்டங்கள் என்றோ, அல்லது முஸ்லிம் போராட்டங்கள் என்றோ முத்திரை குத்துவது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், அப்போராட்டங்களில் பெண்கள், விளிம்புநிலை பாலின அடையாளங்களைக் கொண்டவர்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் பெருமளவில் பங்கேற்றிருந்தனர். எனவே, அது இயங்குவதற்கு மிகச் சிறந்ததொரு களமாக அமைந்திருந்தது.

மாணவர் அமைப்புகளாக, குறிப்பாக AISA அமைப்பாக, எங்களுக்குப் பேச வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் நாங்கள் ஒன்றைத் தொடர்ந்து வலியுறுத்தினோம்: அதிகார வர்க்கம் எவ்வளவுதான் ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டாலும், அதை எதிர்த்துப் போராட முடியும் என்பதை மட்டுமல்லாமல், இந்த ஆட்சிக்கு எதிராக ஒற்றுமையுடன் போராடினால், நம்மால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என்பதையும் பேசினோம்.

கடந்த 12 ஆண்டுகளாக அவர்கள் பரப்பி வரும் வெறுப்பு அரசியல் அம்பலப்படுத்தப்படுவதும், தோற்கடிக்கப்படுவதும் நாம் ஒருவருக்கொருவர் உறுதுணையாக நின்றால் மட்டுமே சாத்தியமாகும். அந்த வகையில், இந்த இயக்கத்தின் மையக் கருத்து அல்லது முன்னெடுத்த நிலைப்பாட்டின் அடிப்படையில் இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகயே நான் பார்க்கிறேன்.

குறிப்பாக,  போராட்டங்கள் முடிவை நெருங்கிக் கொண்டிருந்தபோதும், அரசு தனிநபர்களைக் குறிவைத்துக் கைது செய்யத் தொடங்கியது. முகமது ஜுனைத் தொடர்பான பிரச்சினையில் இதுதான் நடந்தது; ஆனால், தனக்கு ஏதேனும் நேர்ந்தால், மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும். எனவே, இந்த ஒருங்கிணைப்பையும் ஒற்றுமையையும் இந்தப் போராட்டம் வலுப்படுத்தியுள்ளது.

பல மாநிலங்களில் மாணவர்கள் கைது இன்றும் தொடர்கின்றனவா?

அரசு முஸ்லீம் மாணவர்கள் அல்லது போராட்டக்காரகளைத் தனிமைப்படுத்துதல் மூலமாக அவர்களைப் பிளவுபடுத்த நினைக்கிறது. தலித் போராட்டக்காரர்கள் என்று சிலரை வகைப்படுத்துகின்றது. இவ்வாறாக, அரசு பிரிவினை உரையாடலை முன்னெடுக்கிறது. போலீஸ் மாணவர்களை அவர்களது பெயர்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்ததெடுத்துக் கைது செய்கின்றனர். முஸ்லீம் மாணவர்களை ‘என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்படுவார்கள்’ என்று மிரட்டுகிறது. தலித் மாணவர்கள் அவர்கள் பெயர் அடையாளத்தை மையமாகக் கொண்டு கைதுக்குள்ளாகிப் பின் அவர்கள் இழிவுப்படுத்தப்படுகின்றனர். வன்முறைக்கும் ஆளாகின்றனர். எனினும், இப்போது அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், போராட்டங்களுக்குப் பிறகு நாங்கள் கொடுத்த அழுத்தம் பலனளிப்பதாகவே தோன்றுகிறது.

மேலும், “ஒருவரைக் கூட நாங்கள் கைவிடமாட்டோம்” என்ற முழக்கம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்தகைய கருத்துகள் பரவலாகச் சென்றடைந்துள்ளன. மாணவர்கள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக நிற்கின்றனர். இதன் காரணமாகவே அரசாங்கம் பணிந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன்.

அரசியல் ஈடுபாடற்றவர்கள் என்று நாம் கருதியிருந்த ஒரு தரப்பினர் நடத்திய போராட்டம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என நினைக்கிறீர்கள்?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போராட்டக் களத்தில் எங்களைச் சந்தித்தனர். அவர்கள் எங்களிடம் மன்னிப்புக் கோரினர். அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், ‘என் குடும்பத்தினர் அனைவரையும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கச் செய்தேன். ஆனால் இப்போது என் மகனை இந்த உலகில் எதனாலும் திரும்பக் கொண்டுவர முடியாது’ என்று கூறினார்.

இதுபோல ஆளும் அரசு மீது அதிருப்தி கொண்டவர்கள் தங்கள் சொந்தக் குழந்தைகளை முதன்முறையாகப் போராட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர். இன்று அவர்கள் உடலில் தடியடித் தழும்புகள் உள்ளன. கண்ணீர்ப்புகைக் குண்டுகளாலும் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். முன்பு பா.ஜ.க.வுக்கு வாக்களித்த அதே பெற்றோர்கள்தான், இப்போது இந்தப் போராட்டத்தில் எங்களுடன் தோளோடு தோள் நின்றார்கள். பா.ஜ.க. அரசாங்கத்தை மிகவும் அச்சுறுத்தியது இதுதான் என்று நான் நினைக்கிறேன்.

சொல்லப்போனால், போராட்டக்காரர்களை ‘தேசவிரோதிகள்’ அல்லது ‘பாகிஸ்தானியர்கள்’ என்று அழைக்கும்போது தொலைக்காட்சித் திரைகளைப் பார்த்துக்  கைதட்டி ஆரவாரித்த அதே நபர்கள், ஜூலை 20ம் தேதி நடந்த  வன்முறைக்குப் பிறகு அமைதியாகிவிட்டனர். குறிப்பாக, “போராட்டக்காரர்கள் எங்கள் உயிரைப் பறிக்க வருவதாக நாங்கள் அச்சுறுத்தலை உணர்ந்தோம்” என்ற பா.ஜ.க. அமைச்சர்களின் வாதத்தைக் கூட அவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தங்களின் கல்விக்காகவும் எதிர்காலத்துக்காகவும் போராடிய இளைஞர்கள் உயிரைப் பறிக்க முயன்றார்கள் என்ற வாதத்தை நம்ப யாரும் தயாராக இல்லை.

அதனால், ஜூலை 20ம் தேதி வன்முறைக்குப் பிறகு ஜந்தர் மந்தரில் கூடியிருந்த மக்கள், தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை மட்டும் கோரவில்லை. மாறாக, மோடி பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்தச் சூழல்தான் பாஜகவை அச்சமடையச் செய்து, தர்மேந்திர பிரதானைப் பதவி விலகச் செய்யத் தூண்டியது என்று நான் கருதுகிறேன்.

இதில் பெற்றோர்களின் மனநிலை குறித்துப் பேசுனீர்கள். அதுபற்றி விளக்கிக் கூறுங்களே…

இந்திய விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்காகவே தாங்கள் நிற்பதாகப் பா.ஜ.க. கூறியபோது, ​​தங்கள் குழந்தைகளும் தங்களைப் போலவே அந்த மரபுகளுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும், தாங்கள் கேட்ட உரையாடல்களையே அவர்களும் கேட்க வேண்டும் என்றும், தாங்கள் நம்பிய அதே விழுமியங்களை அவர்களும் நம்ப வேண்டும் என்றும் பெற்றோர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அது உண்மையில்லை என்பது இப்போது இளைஞர்களுக்குத் தெரிந்துவிட்டது.

பா.ஜ.க., சொல்வதற்கும், செயல்படுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். இப்போது முந்தைய தலைமுறையினருக்கும் இது இந்தியா பற்றியதோ அல்லது இந்தியக் கலாச்சாரம் பற்றியதோ அல்ல; இது வெறும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றியது மட்டுமே. இந்திய மக்களின் பாதுகாவலராகக் காட்டிக்கொள்ள ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.க., கையாண்ட ஒரு உத்தி மட்டுமே என்பதை உணர்ந்திருக்கின்றனர்.

இப்போதைய இளைஞர்களுக்கு, நீங்கள் முன்வைக்கும் இந்தக் கருத்துகள் புரியும் என்று நினைக்கிறீர்களா?

ஆம். ஏனென்றால், ஜந்தர் மந்தரில் இது சார்ந்த பல போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. குறிப்பாக, ‘நீங்கள் கோட்ஸேவை நம்புகிறீர்கள், நாங்கள் பகத் சிங்கை நம்புகிறோம்; நீங்கள் புறப்படும் நேரம் வந்து விட்டது’ போன்ற போஸ்டர்கள் இடம்பெற்றிருந்தன. அதேபோல்,

‘இது முஸ்லிம்களுக்கான நாடு அல்ல என்றும்; இந்து ராஷ்டிராவையும் இந்துக்களுக்கான ராஜ்ஜியத்தையும் அமைக்க வேண்டும் என்றும் நீங்கள் சொல்லி வருகிறீர்கள். ஆனால், நான் ஒரு இந்து. எனக்கு இந்து ராஷ்டிரம் தேவையற்ற ஒன்று’ இப்படியான வாசகங்களை அங்கு பார்க்க முடிந்தது.

‘இதை அரசியலாக்காதீர்கள்’ என்று சொல்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இது, ஜந்தர் மந்தரில் நடந்த மிகத் தீவிரமான அரசியல் சார்ந்த போராட்டங்களில் ஒன்றாகவும் எந்தவொரு போராட்டமும் அடையக்கூடிய உச்சகட்ட அரசியல் தன்மையுடன் அமைந்திருந்தது.

இது மக்களுக்குத் துரோகம் செய்த ஆர்.எஸ்.எஸின் வரலாற்றின்  போலித்தன்மையை அம்பலப்படுத்துவதாக இருந்தது. மக்கள் தொடர்ந்து இதுபற்றி போராட்டக் களத்தில் உரையாடிக் கொண்டிருந்தனர். ஆளும் தரப்பிடமிருந்து இந்நாட்டு இளைஞர்கள் இனி எதை விரும்பவில்லை என்பதை இந்தப் போராட்டங்கள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தின என்று நான் கருதுகிறேன்.

பாசிசப் போக்குடையவர்களிடம் இருந்தும் பொறுப்புக்கூறலைக் கோர முடியும் என்பதைத் தாண்டி, இந்தப் போராட்டம் நமக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் மிக முக்கியமானவை. சாதி, மதம், பாலினம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் வெறுப்பையும் பிளவையும் விதைக்கும் பா.ஜ.க.வின் அரசியலைத் தோற்கடிக்க முடியும் என்பதே அந்தப் பாடம். என் வாழ்நாள் முழுவதும் நான் நினைவில் கொள்ளப்போகும் மிக உறுதியான விஷயம் அதுதான்.

ஆனால் இப்போது, ​​குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்கள் போராட்டம் மற்றும் தொழிலாளர் போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டமாக உருவெடுத்துள்ளன; இதில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் துணையாக நின்றோம். இந்நாட்டு இளைஞர்கள் இந்த உணர்வை நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதுதான் இந்தியா; வரும் காலங்களில், இந்த உணர்வை நினைவுகூர வேண்டிய சூழல் மீண்டும் மீண்டும் நமக்கு ஏற்படும்.

இந்தப் போராட்ட வேகம் தொடர்ந்து நீடிக்குமா? இது இளைஞர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறதா?

இது அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதே சமயம், இளம் தலைமுறையினரிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்ற என்னைப் போன்றவர்கள், சி.ஜே.பி. கட்சியினர், மாணவர் அமைப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாட்டாளர்கள் மீது அதீத பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது என்று நான் கருதுகிறேன். இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற மக்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து நாம் பெற்ற ஆதரவு வாயிலாக, தற்போது நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிற போராட்டங்களுக்கு நாம் மிகத் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும்.

உதாரணமாக, மிகவும் அடிப்படையான ஒன்றான ‘சிறப்புத்  தீவிரத்  திருத்த நடைமுறைக்கு (SIR) எதிரான போராட்டத்தைக் குறிப்பிடலாம். இது இந்திய மக்களின் வாழ்வியலின் தன்மையையே மாற்றியமைக்கக்கூடிய ஒன்றாகும். தவிர, தொகுதி மறுவரையறைக்கு (delimitation) எதிரான போராட்டமும் நாம் மேற்கொள்ளும் ஒரு முக்கியமான போராட்டமாகும். தொழிலாளர் உரிமைகள், பெண்களுக்கான இடஒதுக்கீடு என இவை அனைத்தும் நாட்டில் நாம் முன்னெடுக்கும் மிக முக்கியமான போராட்டங்களாகும். இந்த இளம் மாணவர் இயக்கத்தின் மூலம் கிடைத்த உந்துசக்தி அந்தப் போராட்டங்களிலும் எதிரொலிக்க வேண்டும்.  ஏனெனில், நமது இயக்கம் என்பது ஜனநாயகத்திற்காகவும் மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாப்பதற்காகவும் நாட்டில் நடைபெறும் பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்துவந்துள்ளது.

Leave a comment