
யமுனா ராஜேந்திரன்
28 Aug 2026 — 2 min read

முற்றிலும் புறநிலை சார்ந்த உண்மைகள் என்று எதுவும் இல்லை என்றும், ஒரு தனிநபரின் தனித்துவமான அனுபவங்களாலும், அர்த்தத்தைத் தேடும் அவரது தனிப்பட்ட முயற்சியாலும் உருவாகும் விளக்கங்களே உள்ளன என்றும் பிரடெரிக் நீட்சே கருதினார்.
கார்ல் மார்க்ஸின் கூற்றுப்படி புறநிலை யதார்த்தம் என்பது ஒரு நிலையான முற்றிலும் இயற்கையான நிகழ்வு அல்ல. மாறாக அது மனித உழைப்பாலும் வரலாற்றுப் பழக்க வழக்கங்களாலும் வடிவமைக்கப்பட்டு இயங்குகின்ற, சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு பௌதிக உலகு எனக் கருதினார். அவர் கருத்தியல் இலட்சியவாதத்தையும் செயலற்ற பொருள்முதல்வாதத்தையும் நிராகரித்து உண்மையும் யதார்த்தமும் வெறும் சிந்தனையால் மட்டுமல்ல செயலூக்கமான யதார்த்த உலக ஈடுபாட்டின் மூலமே நிரூபிக்கப்படுகின்றன என்று கருதினார்.
இவ்வாறான இருபெரும் தத்துவவாதிகளின் சிந்தனையில் இருந்து அணுகும்போது ஒரு தனிமனிதனின் வாழ்ந்துபட்ட அனுபவமும் அது சார்ந்த செயல்பாடுகளும் இல்லாமல் அவரது வாழ்க்கைத் தேர்வு என்பது அமைவதில்லை. இது ஒருவரது மொழிபெயர்ப்பு சார்ந்த தேர்வுக்கும் பொருந்தும். கவிதை என்பதிலிருந்து ஒருவர் தேர்ந்துகொள்ளும் புனைவல்லாத எழுத்துக்கும் இதனை நீட்டிக்கலாம். தொழில்முறை மொழிபெயர்ப்பாளருக்கு இது பொருந்தாது என்பதையும் இங்கு வலியுறுத்திச் சொல்லிவிடுகிறேன்.
அபுனைவுகளை நான் மொழிபெயர்த்திருந்தாலும் என் அனுபவத்திலும் ஈடுபாட்டிலும் தேர்விலும் கவிதை மொழிபெயர்ப்பு தொடர்பாக எனது கருத்துக்களை மட்டுமே இங்கு பதிவு செய்கிறேன். பாலஸ்தீனக் கவி மஹ்மூத் தர்வீஷ் (உயிர்மை), ஏழு உலகப் பெண் கவிகள் (உயிர்) எனும் இரு பெருந்தொகுப்புகள் இப்போது வெளியாகியுள்ளன.
இலத்தீனமெரிக் கவிதைகள் (தாமரைச் செல்வி), ஆப்ரிக்கக் கவிதைகள் (வெளிச்சம்) குர்திஸ் கவிதைகள்(கறுப்பு), தர்வீஷின் தேர்ந்தெடுத்த அரசியல் கவிதைகள் என நிலப்பரப்பை முன்னிறுத்திய கவிதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன.
மொழிபெயர்ப்பில் எனது ஈடுபாடும், பிற மொழி வாசிப்பிலான எனது அறுதித் தேர்வுகளும், எனது மொழிபெயர்ப்பு அனுபவங்களும் குறித்துப் பின் திரும்பிப் பார்த்துக் கொள்ள இது ஒரு பொருத்தமான தருணம் என நினைக்கிறேன்.

எழுபதுகளின் இறுதி என்று ஞாபகம், மனுஷ்யபுத்திரன் தான் கொண்டுவந்து கொண்டிருந்த ஒரு கவிதையிதழுக்கு தர்வீஷ் கவிதைகளின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் சிலவற்றைக் கேட்டு எனக்கு எழுதிய கடிதமே அவருடனான எனது நட்பின் துவக்கம். முப்பது ஆண்டுகளின் பின் அவரே தனது உயிர்மை பதிப்பகத்தின் மூலம் தர்வீஷ் கவிதைகளின் பெரும் தொகுப்பைக் கொணர்ந்தார். எம் இருவரினுள்ளும் புதையுண்டிருந்த ஒரு நீண்ட கால இரகசியத் திட்டத்தின் பகுதிபோல எனக்குத் தோன்றியது.
தற்கொலை செய்து கொண்டு மரணமுற்ற யுகப் புரட்சிக் கவிஞன் மயக்கோவ்ஸ்க்கிக்கு தமிழில் ஒரு பெருந்தொகுப்பு இல்லை என்பதனை நினைக்கிறபோது, மனுஷ்யபுத்திரன் இல்லாதிருந்தால் தமிழில் தர்வீஷின் இந்தப் பெருந்தொகுப்பும் சாத்தியமாகியிருக்காது என்றே நான் நினைக்கிறேன்.

பாலஸ்தீன விடுதலைப் போராட்டம், இலத்தீனமெரிக்க விடுதலை இயக்கங்கள், ஈழ விடுதலையின் எழுச்சி போன்றனவே எமது அடிமனப் பிரக்ஞையாக இருந்து எமது மொழிபெயர்ப்புத் தேர்வுகளாக எம்முள் செயல்பட்டிருக்கின்றன என்பதை இப்போது எம்மால் ஸ்தூலப்படுத்திக் கொள்ள முடிகிறது.
பிற்பாடு தொண்ணூறுகள் முதல் தர்வீஷ் கவிதைகளின் பெருந்தொகுப்பு வரையிலான எனது தேர்வுகள் என்னவாக இருந்தன என்பதைத் திரும்பிப் பார்க்கிறேன். தஸ்லீமா, சுஜாதா பட், கீஸ்வர் நஹீத் போன்ற ஆசியப் பெண் கவிகள், ஜூமனா ஹத்தாத், விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா போன்ற ஐரோப்பியப் பெண்கவிகளின் எழுத்துக்களை நான் தேர்ந்து கொண்டிருந்திருக்கிறேன். பிற தொகுப்புகள் எனும் அளவில் சே குவேரா, ரோக் டால்டன், ஆரியல் டோர்ப்மென் போன்றவர்களின் இலத்தீனமெரிக்கக் கவிதைகள், செர்கே பேகஸ் மற்றும் சோமன் ஹார்தி போன்றவர்களின் சமகால குர்திஸ் கவிதைகள், இறுதியாக தர்வீஷின் மறைவையொட்டிய அவரது கவிதைகளின் பெருந்தொகுதி என எனது தேர்வுகள் அமைந்திருக்கின்றன.
இதுவன்றி பாப்லோ நெருதா (குறிப்பாக பாப்லோ நெருதா மரணமுற்ற அடுத்த மாதம், அவருடைய நீள் கவிதையான நான் தண்டனை கோருகிறேன் சமகாலத்தில் தாமரை, செம்மலர் என இரு இடதுசாரி இதழ்களிலும் வெளியானது), இங்கிலாந்தில் வாழும் ஆப்ரிக்கக் கவியான பெஞ்ஜமின் ஜாப்னாயா, நைஜீரியக் கவியான பென் ஓக்ரி, நீரவ் பட்டேல, நாமதேவ் தசல் போன்ற மராத்திய தலித் கவிகள் என்பதாகவே எனது மொழிபெயர்ப்புப் பயணம் அமைந்திருக்கிறது.
பின் திரும்பிப் பார்க்கிறபோது போலந்து நாட்டின் நோபல் பரிசுக் கவியான விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா நீங்கலாக, அறியப்பட்ட பிரபலமான ஐரோப்பியக் கவிகள் அல்லது உலகின் பிரபலமான செவ்வியல் மையக்கவிகள் எவரும் எனது அக்கறைக்கு உரியவர்களாக இருக்கவில்லை.

விஸ்லாவா சிம்போர்ஸ்க்காவின் கவிதைகள் அதிகாரவர்க்கமாக நிலவிய சோசலிச அமைப்பின் அனுபவங்களைப் பேசுகிற அதேவேளை, வியட்நாம் உள்ளிட்ட தேசிய விடுதலைப் போராட்டங்களின் பாலான ஆதரவும், உலகின் ஒடுக்கப்பட்ட மனிதரின் மனித உரிமை குறித்த கூக்குரலும் பதிவாகி இருந்தது எனது தேர்வுக்கான காரணம்.
பாப்போ நெருதா, விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா போன்ற நோபல் பரிசுபெற்ற பிரபலமான இருவரைத் தவிர எனது தேர்வுகள் அனைத்தும் விளிம்பு நிலைக் கவிஞர்களுடையதாகவும், மூன்றாம் உலகின் கவிஞர்களுடையதாகவுமே இருந்திருக்கின்றன. மூன்றாம் உலக நிலப்பரப்பு சார்ந்த மக்களின் விடுதலையில் அக்கறை கொண்ட வாசகர்களுடனான ஒரு கவித்துவ உரையாடலாகவே எனது மொழியாக்கத் தேர்வுகள் அமைந்திருக்கின்றன.
பெண் விடுதலை உணர்வு, பிரபஞ்சமளாவி தன்னை விரித்துக் கொண்டிருந்த தேசிய விடுதலை உணர்வு எனும் மிகப் பெரும் இரு விமோசன உணர்வுகளே எனது தேர்வுகளின் பின்னிருந்த அடிமனப் பிரக்ஞையாக இருந்திருக்கின்றன.
இதுவரையிலான அரசியல் அதிகாரம் ஆண்மைய நோக்கிலானது என்பது பெண்ணியப் பார்வை. தத்துவத்தில் லிங்கமையவாதம் பற்றி பிரெஞ்சுப் பெண்ணிலைவாதிகள் பேசுகிறார்கள். இலக்கியப் படைப்பிலும் இந்நோக்கு செயல்படுகிறது. வன்முறை ஒரு அரசியலாகத் தத்துவ நோக்காக இலக்கிய உள்ளுறையாக இருக்க லிங்கமைய நோக்கு காரணமாக இருக்கிறது என்பதும் பெண்நிலைவாத விமர்சனம்தான்.
என்றாலும் வன்முறையிலிருந்து விடுபடுவது என்பது சாத்தியமாகவா இருக்கிறது? மனித விமோசன அரசியலில் வன்முறையின் பாத்திரம் என்ன? சே குவேராவும் பிற மார்க்சியரும் புரட்சிகர வன்முறை என்று பேசுவதிலுள்ள அறம் சார்ந்த நம்பிக்கைகள் பொய்யா? பாலுறவுத் தோய்வும் வன்முறையும் ஆண்பெண் உறவில் முயக்கத்தின் உச்சநிலையாகக் பெரும்பாலுமான கலைஞர்களால் சித்திரிக்கப்படுதலில் உள்ள சூட்சமம்தான் என்ன? அழகும் மிருகத்தனமும் இணையும் புள்ளி எவ்வாறு காலம்தோறும் கலைப்படைப்பில் இடம்பெறுகிறது? இது போன்ற கேள்விகளை நான் அறிய நேர்ந்த புரட்சியாளர்களும், கலைஞர்களும் இன்னும் இன்னுமாக, பெரு நெருப்பாக எனக்குள் மூட்டினார்கள்.

சே குவேரா, அல்தூஸர், எங்கெல்ஸ் போன்ற புரட்சியாளர்கள் பாலுறவுக் களியாட்டத்தில் திளைத்தவர்களாக இருந்தார்கள். புரட்சிகர வன்முறையை ஆராதித்தவர்களாக இருந்தார்கள். மனைவியை அதீதமாகக் காதலித்த அல்தூஸர் அவரது மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்றார் என்கிற பார்வைக்கு மாறாக, அவர் அதற்கான பொறுப்பேற்கும் மனநிலையில் இல்லை என்கிறது பிரெஞ்சு நீதிமன்றம். எல்ஸால்வடார் கவியான ரோக் டால்டன் கவிதைகளில் பாலியல் கொண்டாட்டம் இடம்பெறும் அளவில் இரத்தத்தின் கவிச்சையும் இடம்பெறுகிறது. அவர் எதிர்பார்த்தபடியே அவரது இயக்கத்தின் சக தோழர்களால் அவர் கொலை செய்யப்படுகிறார். சே குவேரா பிடிக்கப்பட்டு சித்திரவதையின் பின் சுட்டுக்கொல்லப்படுகிறார்.
பெண்களின் உடல்களில் சதா புரண்டெழுந்த பாப்லோ நெருதா தான் தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க வேண்டும் என்கிறான். என்னளவில் மகத்தான கலைஞர்கள் மற்றும் புரட்சியாளர்கள் அனைவருக்குமே பாலுறவு தரும் இன்பம், தாம் தவிர்க்கவியலாது என ஆராதிக்கிற வன்முறையிலிருந்து தப்பித்தலுக்கான அடைக்கல வெளியாகவே இருந்திருக்கிறது.
பிரெஞ்சு நாவலாசிரியன் மார்க்கிஸ் டீசேடின் படைப்புகளில் வன்முறையும் சித்திரவதையும் பாலுறவு உச்சமும் இணைந்த மனிதச் செயல்பாடு கொண்டாடப்படுகிறது. யூத மற்றும் ஜிப்ஸி மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் ஆண்பெண் உடல்களைச் சுடலையில் கொளுத்திய இட்லர் திண்மையான ஜெர்மானிய ஆண் பெண் உடல்களின் அம்மணத்தைக் கொண்டாடுகிறான்.
எனதும் எனது நண்பர்கள் இருவரதும் மொழியாக்கத்தில் நாங்கள் கொணர்ந்த பெருந்தொகுதியான தர்வீஷின் கவிதைகளுக்கு நாங்கள் அருஞ்சொல் விளக்கப் பட்டியல் தயாரித்தோம். கவிதைகள் குறித்த அவரது நேர்காணல்களைத் தொகுத்தோம். அவரையும் அவரது கவிதைகளையும் குறிப்பிட்ட வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து விரிவான முன்னுரை ஒன்றினையும் நான் எழுதினேன். இத்தனைக்குப் பின்பும் எமது மொழிபெயர்ப்புதான் செம்மையானது என்றோ அறுதியானது என்றோ சொல்கிற அகந்தையை நாம் நிராகரிக்கிறோம்.
ஒரு குறிப்பிட்ட படைப்பை இன்னும் இன்னுமான குறிப்பிட்ட தன்மையில் வைத்துப் பார்க்கிற சாத்தியம் என்றும் உண்டு என்பதால்தான் தாஸ்தியாவ்ஸ்க்கியின் படைப்புக்கள் மறுபடி மறுபடி மொழியாக்கம் காண்கின்றன. தர்வீஷின் சுவரோவியம் – மியூரல் – நீள் கவிதைக்கு மட்டும் அவரது மரணத்தின் பின் நான்கு வேறு வேறு மொழியாக்கங்கள் வெளியாகி இருக்கின்றன.

எனது கவிதைத் தேர்வில், எனது மொழிபெயர்ப்பு அனுபவத்தில் என்னை மிக மிகப் பாதித்த கவிஞன் எல்ஸால்வடார் நாட்டின் ரோக் டால்டன். எதிர்பார்த்தபடி மரணத்தைத் துரத்தியவனாக, மரணம் தன்னைத் துரத்த கவியாத்து தமது சொந்தத் தோழர்களால் துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்ட கவிஞன் அவன். பின்னாளில் அவனைக் கொன்ற அதே விடுதலை இயக்கம் முழு எல்ஸால்வடார் மக்களிடமும் அந்த மகத்தான மக்கள் கவிஞனைக் கொன்றதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. என்றாலும் அவன் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட இடம் இன்னும் அடையாளம் காணப்படாமலே இருப்பது அவனது நினைவுகளுக்கு ஒரு மாந்திரீகத் தன்மையையும் வழங்குவதாவே இருக்கிறது.
நாடுகளுக்கிடையில் அலைந்து திரிதல், கட்டற்ற காதல், பாலுறவின் சந்தோஷம், புரட்சிகர அரசியல் கடப்பாடு, இடம்பெயர்வின் சுமை அல்லது விடுபடல் என, வேறு வேறு விதமான அனுபவங்களின் கலவையாக எழுந்தவை அவனது கவிதைகள். தீவிரமான தத்துவ மற்றும் அரசியல் ஈடுபாடுகள், அனுபவங்கள் மற்றும் தேடல்கள் அற்றவர்களால் அவனது கவிதைகளைத் தொடர்வது சாத்தியமில்லை.
நெருதா, தர்வீஷ், சிம்போர்ஸ்க்கா, பிரெக்ட் போன்றவர்களின் பல கவிதைகள் ஜனரஞ்ஜக அளவில் கவிதைகளை வாசிப்பவர்களுக்கும் ஆனவை. ரோக் டால்டனின் கவிதைகள், கொண்டாட்டம் தரும் உடலுறவையும் வன்முறையின் இடையிலான அரசியல் தீவிரத்தையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாத அளவிலான கவிதைகள். பாலினம் சார்ந்தத் தடைகளைத் தகர்க்கும் காதல் கவிதைகள் அவருடையவை. மயக்கோவ்ஸ்க்கியின் தற்கொலைக்கும், சே குவேராவின் படுகொலைக்கும் இடையிலானது ரோக் டால்டனின் அனுபவ உலகம்.
சிறையுண்ட உடலிலிருந்தும் சுரண்டல் உலகின் வன்முறையிலிருந்தும் மீறிச் சென்று கவிதைகளுக்குள் விமோசன உணர்வை அடைய நினைப்பவர்களுக்கான கவிதைகள் ரோக்டால்டனுடையவை. வேறு வேறு மட்டங்களில் அதனது கருத்தியல் தளத்திலாயினும், ஈழத்துக் கவிகளான சிவரமணியின் தற்கொலையையும், கொல்லப்பட்ட செல்வியின் ஆளுமையையும், வேட்டையாடிக் கொல்லப்பட்ட நாவலாசிரியன் கோவிந்தனின் பதற்றத்தையும் நான் இந்த அடிப்படையிலேயே புரிந்து கொள்ள விழைகிறேன்.
கவிதை சார்ந்த எனது வாசிப்புச் செயல்பாடு மற்றும் கவிதைத் தேர்வுகள் என்பனவும் எனது தத்துவம் மட்டும் அரசியல் சார்ந்த ஈடுபாடுகளின் பகுதியாக யதேச்சையாகவே எனக்குத் தட்டுப்பட்டன.
எழுபதுகளின் மத்தியில் திருச்சியில் நடைபெற்ற அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநாட்டுக்கு வந்திருந்த ஈரானிய மாணவர்களிடமிருந்து பெற்ற பாலஸ்தீனக் கவிதைகள் எனும் குறுநூல் பாலஸ்தீன் கவிதைகளின் மீதான எனது ஈடுபாட்டுக்கான காரணமாக அமைந்தன.
தென் ஆப்ரிக்க விடுதலை இயக்கமான ஆப்ரிக்க தேசிய காங்கிரசின் பெண்கள் பிரிவு வெளியிட்ட ஆப்ரிக்கப் பெண்களின் கவிதைத் தொகுப்பு மூன்றாம் உலகப் பெண் கவிதைகள் தொகுப்புக்கான உந்துதலாக அமைந்தது. இந்தியத் தலைநகர் தில்லியிருந்து சாருநிவேதிதாவின் தொடர்பில் கிடைக்கப்பெற்ற கியூப அரசினது செய்தியிதழான கிரான்மாவில் வெளியாகின சே குவேராவின் எட்டுக் கவிதைகள் இலத்தீனமெரிக்கக் கவிதைகளின் மீதான எனது ஈர்ப்புக்கான கரணமாக அமைந்தன.
இந்தியாவிலிருந்து இயங்கிக் கொண்டிருந்த பாலஸ்தீன, தென் ஆப்ரிக்க, கியூப விடுதலை இயக்கத்தினரின் வெளியீடுகளை தேடிக் கற்கும் இடதுசாரிகளுக்குக் கடிதம் எழுதினால் இலவசமாகவே அவர்கள் அனுப்பி வைத்தார்கள். ரஸ்யா சென்று திரும்பிய எனது ஆசான் க.பழனிசாமி மயக்கோவஸ்க்கியின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பொன்றினை அங்கிருந்து எனக்கு வாங்கி வந்தார்.

எழுபதுகளும் எண்பதுகளும் தேசிய விடுதலையின், பெண்நிலைவாதத்தின், தொழிலாளர் மாணவர் எழுச்சியின் காலம். 1968 மாணவர் எழுச்சியைத் தொடர்ந்து உத்வேகம் பெற்ற பிரெஞ்சக் கோட்பாட்டினதும், விமர்சன மார்க்சியத்தினது காலமும் அதுதான்.
ஆயிரத்திப் தொள்ளாயிரத்து எழுபத்தி ஒன்பதாம் ஆண்டு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் தமிழகத்தின் பஞ்சாலைகள் நிறைந்த தென்னகத்தின் மான்செஸ்ட்டரும, அரசியல் அர்த்தத்தில் தமிழகத்தின் பெத்ரோகிராட் நகருமான கோயமுத்தூருக்கு வருகை தந்தார்கள். கோவை நகரத்தின் கம்யூனிஸ்ட்டுகளும் பாலஸ்தீன விடுதலை இயக்க ஆதரவு இஸ்லாமியர்களும் அந்தத் தோழர்களுக்கென அப்போது ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள். அந்த நிகழ்ச்சியை ஒட்டி பதினாறு பக்கத்தில் எமது மூவரதும் மொழிபெயர்ப்பில் பாலஸ்தீனக் கவிதைகள் எனும் தலைப்புடன் சின்னஞ்சிறிய தொகுப்பு நூல் ஒன்றினை நாங்கள் கொண்டு வந்தோம்.
முப்பது ஆண்டுகளின் பின்பு தர்வீஷின் பெருந்தொகுப்பைக் கொண்டு வந்தோம். தர்வீஷின் கவிதைகள் மிக எளிமையான சொற்களில் சகமனிதனுடனான உரையாடலாகத் துவங்குகின்றன. இந்தப் பண்பினாலேயே உடடினயாக அவரது கவிதைகளின் வாசகனைத் தனது உடன்பயணியாகத் தர்வீஷ் தனக்குள் எடுத்துக் கொள்கிறார். அலங்காரமான படிமங்கள, சிக்கலான வார்த்தைப் பிரயோகங்கள் இல்லாமலேயே அவரது கவிதைகள் உச்சபட்சமான கவித்துவச் சாத்தியங்களைக் கொண்டதாகவும், உன்னதமான கவித்துவ அனுபவங்களை எழுப்புவதாகவும் அமைந்துவிடுகிறது.
தர்வீஷின் எண்பதுகளின் இறுதி வரையிலான அதிகமான அவரது ‘எதிர்ப்புக் கவிதைகளின்’ காலத்தினோடு ஒப்பிட, அவரது பிற்காலத்திய கவிதைகள் அதிகமும் மரணம் குறித்ததாகவும் காதலின் பிரிவு குறித்ததாகவும் அதனது வேட்கை குறித்ததாகவுமே இருக்கிறது. தனது இறுதி நாட்களில் அவர் அரசியலிருந்து தான் முற்றிலும் வெளியேறிவிட்டதாகவும் கூட அறிவித்திருக்கிறார்.
கவிதையின் அளவில் அவரது அரசியல் வெளியேற்றம் கூட பாலஸ்தீன இயக்க அரசியலின் மீதான விமர்சன்ததின்பாற்பட்டதெனவும், குழுக்களுக்கிடையிலான மோதல்கள் மற்றும் முரண்பாடுகளால் விரக்தியுற்ற மனநிலையின்பாற்பட்டதெனவும் எம்மால் புரிந்து கொள்ள முடியும். அவரால் தனது தாயகத்தின் சுதந்திர வேட்கையிலிருந்தும் அரசியலிலிருந்தும் வெளியேற முடியாது என்பதற்கான சாட்சியமாக ஹமாஸ்-பாதா குழக்களுக்கு இடையிலான ஆயுத மோதலால் கோபமுற்று, 2007 ஆம் ஆண்டு அவர் எழுதிய உக்கிரமான அரசியல் கவிதை ‘இப்போது முதல் நீ உன்னிலிருந்து வேறானவன்’ நமக்கு முன் மெய்மையாக நிற்கிறது.
பாலஸ்தீன அரசியலிலும் இலக்கியத்திலும் ஈடுபாடுள்ள தனிநபர்களினாலும் அரசியல் இயக்கங்களாலும்தான் அந்தக் கவிதைகள் மொழியாக்கப்பட்டு வெளியிடப் பட்டிருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் ‘வந்து போகும் சொற்களினிடையில் வந்து போகிறவர்கள்’ கவிதையைச் சொல்ல வேண்டும். இக்கவிதைகளை நீண்ட தேடலின் பின்னும் சிரமத்தின் பின்னும்தான் எம்மால் பெறமுடிந்தது.

தர்வீஷை ஆகர்ஷித்த உலக அளவிலான ஆளுமைகளில் பாலஸ்தீனப் போராளிப் புனை கலைஞனான காஸன் கனாபானியும், துருக்கியக் கவிஞனான நசீம் இக்மத்தும், ரஸ்யக் கவிஞனான மயக்காவஸ்க்கியும், சிலி நாட்டின் மக்கள் கவிஞனான பாப்லோ நெருதாவும், இங்கிலாந்தின் யுகக் கவிஞனான எலியட்டும் இருக்கிறார்கள். இந்த ஆளுமைகளின் படைப்பாளுமையை ஒருங்குதிரட்டிக் கொண்ட கவிஞனான மஹ்மூத் தர்வீஷ் தனது கவிதைகளில் தான் வாழ நேர்ந்த இரண்டு நூற்றாண்டுகளையும் கடந்து செல்கிறான்.
பாப்லோ நெருதாவின் கவிதைகளில் எவ்வாறு அரசியலையும் காதலையும் பிரித்துப் பார்க்க முடியாதோ, அதே அளவில் தர்வீஷின் கவிதைகளிலும் இவை இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. தர்வீஷின் அரசியல் கவிதைகள் அவரது பாலஸ்தீன மக்களின் விடுதலை வேட்கையின் மீதான பேரன்பில் விளைந்த கவிதைகள். பாப்லோ நெருதாவின் அரசியல் கவிதைகள் கம்யூனிஸம் எனும் அவரது தொல்மானுடக் கனவில் விளைந்தவை.
தான் கொண்ட காதலுக்காகக் கைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மரணமுற்ற ரஸ்யக் கவிஞன் மயக்காவ்ஸ்க்கியின் கவிதைகளை எவ்வாறு அரசியல் நீக்கம் செய்ய முடியாதோ, அதே அடிப்படையில்தான் பாப்லோ நெருதாவினதும் தர்வீஷினதும் கவிதைகளை அரசியல் நீக்கம் செய்வது என்பதும் சாத்தியமேயில்லை.

தர்வீஷின் கவிதைகள் வெறும் அரசியல் சாக்குரல்கள் அடங்கியவை அல்ல. தம்முடைய இறுதி நாட்களில் மரணம் குறித்த ஆழமான சிந்தனை அவரிடம் காணப்பட்டுள்ளது. மரணம் ஏற்பட்டுப் பின் மீண்டு வந்த அனுபவம் என்பது பற்றி அவர் குறிப்பிடுகிறார். அது வலியற்றதாக இயற்கையின் ஒரு மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளாதாக அதனை அவர் கண்டிருக்கிறார். வாழ்வின் புலங்களிலிருந்து மிரட்டப்படுதல் போன்ற வலி அதில் காணாத ஒன்று. ரோஜா மலர்களின் பரிசுத்தத்தையும் மரணம் அவரிடம் காட்டிச் சென்றிருக்கிறது என்றால், நாம் மரணமடையும் போது ஏன் அழ வேண்டும்?.
இக் கவிதைகளில் வலுவான படிமங்கள் அராபிய, இஸ்லாமிய பொருட்கள், சூழல் போன்றவை தொடர் படிமங்களாகக் காணப்படுகின்றவை குதிரைகள், ஒட்டகங்கள், ஆடுகள் ஆகிய விலங்குகள், கற்கள், மலைகள், மரங்கள், அழுத்தமான காபி ஆகியவை தொடர் படிமங்களாக உள்ளன. பொருட்கள் படிமங்களாகக் காணப்படுவதில்லை. விலங்குகளும் மனிதர்களும் மலைகளும் நிறைந்த ஒரு அழகிய பாலை நிலத்தால் கட்டப்பட்ட சிறு கோளம் ஒன்று அண்ட வெளியில் தூக்கியெறியப்பட்டது போன்ற தனிமை இக்கவிதைகளின் மையம்.
மொழியையும் நிலம் சார்ந்த வரையறைகளையும் இராமையையும் நித்தியத்துவத்தையும் ஊடறுத்துப் பயணிக்கும் கூட்டுணர்வின் கவித்துவ வடிவமான தர்வீஷை முன்வைத்து, எமக்கிடையிலான பொதுத் தன்மைகளை இப்போது நாங்கள் யோசித்துப் பார்க்கையில், எமது பெற்றோர்கள் அனைவரும் பஞ்சாலைத் தொழிலாளர்களாக இருந்தார்கள் என்பதனைப் பெருமிதத்துடன் நாங்கள் நினைவு கூர்கிறோம். எமது வாழ்நிலை அனுபவங்களிலிருந்து கிளர்ந்து, தொழிலாளி வர்க்க வேர்களிலிருந்து உருவாகி வந்த கோவையின் அந்தத் தலைமுறையின் அறிவுசார்ந்த வாரிசுகளாகவே எம்மை நாங்கள் இன்று அடையாளம் காண்கிறோம்.
ஐரோப்பிய அமெரிக்கப் பெண்கவிகளின் மொழிபெயர்ப்புகள் தமிழில் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில் எழுபதுகளின் முற்பகுதியில் இருபத்து நான்கு பக்கங்களில் நானும் நண்பர்களும் ‘மூன்றாம் உலகப் பெண்விடுதலைக் கவிதைகள்’ என ஒரு தொகுதியைக் கொண்டுவந்தோம். தொண்ணூறுகளில் எனது மொழிபெயர்ப்பில் தென்னாசியா பெண்களின் கவிதைகளது தொகுதி ‘எனக்குள் பெய்யும் மழை’ எனும் பெயரில் வெளியானது. ஐம்பது ஆண்டுகளின் முன்பு பெருகிய மூன்றாம் உலகின் பெண் படைப்புகளின் மீதான இந்தத் தாகம் இன்று ‘ஏழு உலகப் பெண் கவிகள்’ தொகுதியாக உருவாகி நிற்கிறது.
ஏழு பெண்கவிகளில் இருவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள். ஒருவர் முன்னாள் கிழக்கு ஐரோப்பாவின் கம்யூனிச நாடான போலந்து நாட்டின் கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா. பிறிதொருவர் ஆப்ரோ-அமெரிக்கக் கவிஞரான டோனி மோரிசன். இரண்டு கவிஞர்களான கிஸ்வர் நஹீத்தும் தஸ்லீமா நஸ்ரினும் இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் சேர்ந்தவர்கள். ஜோமானா ஹத்தாத் இஸ்லாமிய-கிறித்தவக் கலப்பு மதத்தவர்கள் வாழும் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.

சுஜாதா பட் ஜெர்மனியில் வாழும் கலப்பு மணம் புரிந்துகொண்ட இந்தியர். எவ்ஜனியா மரியா பிரேவோ பாசிசத்திற்குத் தப்பி இங்கிலாந்தில் அரசியல் அடைக்கலம் பெற்ற இலத்தீன் அமெரிக்க நாடான சிலியைச் சேர்ந்தவர்.
முன்னாள் கம்யூனிச நாடுகளைச் சேர்ந்த கிழக்கு ஐரோப்பியர்களும் இன்று மேற்கு ஐரோப்பியக் குடியேற்றச் சட்டங்களால் ஒதுக்கப்படுகிறார்கள். இவர்கள் அமெரிக்காவிலும் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் செய்யும் உடல் உழைப்பு சார்ந்த அதே பணிகளைச் செய்ய விதிக்கப்பட்டவர்கள்.
ஆசிய, ஆப்ரிக்க, மத்தியக் கிழக்கு, இலத்தீனமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் இக்கவிகள். காலனியம், நிறவாதக் கொடுமைகளின் கீழ் வாழ்ந்த அனுபவம் கொண்டவர்கள். இந்த வகையில் இந்தத் தொகுதியின் கவிதைகள் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் வேறுபட்ட இனம், கலாச்சாரம், நிறம், மதம், காலனியம், உடலின் மீதான சுரண்டல் போன்றவற்றினால் திரளும் பெண்களின் பிரக்ஞையை வெளியிடுகின்றன.
இவர்கள் உலகின் நெடிய வரலாற்றின் பகுதியாக இருப்பதுபோலவே பரந்த உலகின் பகுதியாகவும் இருக்கிறார்கள். இந்த வகையில் நாம் வாழும் உலகின் பெண் பிரக்ஞையை வெளியிடுபவைகளாக இக்கவிதைகள் இருக்கின்றன.
ஐரோப்பிய மையப் பெண்ணியம் என்பது முதன்மையாக ஐரோப்பிய அமெரிக்கப் பெண்களின் அனுபவங்கள். முன்னோக்குகள், கலாச்சாரச் சூழல்களில் வேரூன்றிய பெண்ணிய சிந்தனை. இவர்தம் சிந்தனை உலகளாவிய தெற்கில் நிகழும் பெண்களின் மாறுபட்ட போராட்டங்களைப் புறக்கணிக்கிறது. இவர்களது சிந்தனை காலனித்துவம், இனவாதம், ஏகாதிபத்தியம் போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்க்கத் தவறிவிட்டது எனும் விமர்சனம் இருக்கிறது. மேற்கத்தியக் கட்டமைப்புகளுக்குள் வேலையிடச் சமத்துவம், இனப்பெருக்க உரிமைகள் போன்ற பிரச்சினைகளை மட்டுமே இவர்களது சிந்தனை வலியுறுத்துகிறது.

இதற்கு மாற்றாகத் தங்களுக்காகப் பேசுவதற்கு அதிகாரம் அளிப்பதை விட, குரலற்ற பெண்களுக்காகப் பேசுவது என்பதுடன் பின் காலனித்துவ யதார்த்தங்களை மையம் கொண்டதாகப்பின் காலனித்துவப் பெண்ணியம் இருக்கிறது. காலனித்துவ நாடுகளில் பெண்களின் அனுபவங்களை மையப்படுத்துவதன் மூலமும் பெண்களின் வாழ்க்கையில் காலனித்துவத்தின் தாக்கத்தை விசாரிப்பதன் மூலமும் மேற்கத்தியப் பெண்ணியத்தைப் பின்காலனியப் பெண்ணியம் விமர்சிக்கிறது.
இனம், வர்க்கம் காலனித்துவம் போன்ற பிற காரணிகளுடன் பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வை இது வலியுறுத்துகிறது. காலனித்துவச் சக்திகளின் ஆதிக்கம், தேசிய ஆணாதிக்கம் ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலை அடைவதை இச்சிந்தனை முன்னிலைப்படுத்துகிறது.
இதனது கோட்பாட்டு விளைவாகத் தோன்றிய மூன்றாம் உலகப் பெண்ணியம் மேற்கத்திய பெண்ணியத்தை விமர்சிக்கிறது. பெரும்பாலும் வெள்ளை, நடுத்தர வர்க்கப் பெண்களின் அனுபவங்களை ஐரோப்பியப் பெண்ணியம் உலகளாவிய தாக்குகிறது என்கிறார்கள் இவர்கள்.
காலனித்துவம், ஏகாதிபத்தியம், இனவெறியின் தாக்கத்தை ஐரோப்பியப் பெண்ணியர்கள் புறக்கணிக்கிறார்கள் என மூன்றாம் உலகப் பெண்ணியம் வாதிடுகிறது. பெண்களின் ஒடுக்குமுறை பாலினம், இனம், வர்க்கம், தேசியம் போன்ற ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பல காரணிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை இது வலியுறுத்துகிறது.
விளிம்புநிலைப் பெண்ணியம் எனப்படும் சபால்டன் பெண்ணியம் ஒதுக்கப்படும் நிறப் பிரக்ஞை கொண்ட பெண்கள், தொழிலாளி வர்க்கம், காலனித்துவம் போன்ற விளிம்புநிலைப் பெண்களின் அனுபவங்களை மையப்படுத்துவதன் மூலம் நிலவும் பிரதானப் பெண்ணியச் சிந்தனைக்குச் சவால் விடுக்கிறது.
காலனித்துவம், இனவாதம், வர்க்க வாதம் போன்ற அதிகார அமைப்புகளில் வேரூன்றிய குறிப்பிட்ட ஒடுக்குமுறைகளை ஆதிக்கம் செலுத்தும் பெண்ணிய விவரிப்புகள் பெரும்பாலும் எவ்வாறு விளிம்புநிலைப் பெண்களை ஒதுக்குகிறது என்பதை இவர்கள் அம்பலப்படுத்துகிறார்கள்.
இவ்வாறு படிநிலைகளில் உலகளாவி வளர்ந்து வந்திருக்கும் பெண்ணிய உணர்வு இன்று பாலினச் சமத்துவமின்மை பற்றிய பன்முக விழிப்புணர்வு, ஆழமான தனிப்பட்ட புரிதலுக்காகப் பாரம்பரிய நினைவை விமர்சனத்துடன் அணுகுதல், பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகளில் குறுக்கிடுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. ஊதிய வித்தியாசம், இனப்பெருக்க உரிமைகள், கருப்பு மற்றும் சாதி மறுப்புப் பெண்ணியம், பாலின-விமர்சனக் கண்ணோட்டங்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் ஆணாதிக்க விதிமுறைகளை இந்தப் புதிய பெண் பிரக்ஞை விமர்சனம் செய்கிறது.
இதனின்று முகிழ்க்கும் விமர்சனப் பெண்மொழி என்பது ஒரு இலக்கிய அணுகுமுறை. பெண்நிலைக் கண்ணோட்டத்தில் இது கவிதையைப் பகுப்பாய்வு செய்கிறது. பெண்களின் அனுபவங்களில் இது கவனம் செலுத்துகிறது. ஆணாதிக்க மொழியை இது நிராகரிக்கிறது. பெண் அடையாளத்தை இது
தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்துகிறது. பெரும்பாலும் விளிம்புநிலைக் குரல்களை பிரதிநிதித்துவப்படுத்தி புதிய வடிவங்கள், கருப்பொருள்களை இந்த நோக்கு பரிந்துரைக்கிறது. இலக்கிய வரலாற்றை மீண்டும் எழுதுவதன் மூலம் புராதனப் பெண்களை எழுத்தாளர்களாக இந்த நோக்குக் கொண்டாடுகிறது. தனித்துவமான பெண் படைப்பாற்றல், வரலாற்று ரீதியில் மொழியை ஆராய்வது ஆகிய இரண் டு பண்புகளையும் உள்ளடக்கியதாக இன்று பெண் கவிதைமொழி உருவாகியிருக்கிறது.
பெண்ணியத்தில் உடல் அரசியல் என்பது உடலின் மீதான பெண்களின் கட்டுப்பாடு, அதனது அர்த்தம் குறித்த சமூக, அரசியல், கலாச்சார நோக்குகள் மீதான அவர்களது போராட்டங்களைக் குறிக்கிறது, பாலினம், இனம், வர்க்கம் மற்றும் பாலியல் ஆகியவற்றின் அடிப்படையில் உடல்களை அதிகாரக் கட்டமைப்புகள் எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பதையும், தனிநபர்கள், குழுக்கள் போன்றவர்கள் தங்கள் சொந்த உடல் அனுபவங்களின் மீது கட்டுப்பாட்டைக் கோர எவ்வாறு பின்வாங்குகின்றனர் என்பதையும் இது பகுப்பாய்வு செய்கிறது. இனப்பெருக்க உரிமைகள், அழகை வரையறுத்தல், உடல் வெளிப்பாட்டை ஒழுங்குபடுத்துதல் போன்ற பிரச்சினைகளும் இதில் அடங்குகிறது.
பெண்ணியமும் மதமும் குறித்த பிரச்சினை ஒரு சிக்கலான, பெரும்பாலும் பதற்றமான உறவைக் கொண்டுள்ளன. பெண்ணியவாதிகள் ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தை ஆணாதிக்கமாகப் பார்க்கிறார்கள். கோட்பாடுகள், கட்டமைப்புகள், சடங்குகள் மூலம் ஆண் ஆதிக்கம் பெண்களின் கீழ்ப்படிதலை வலுப்படுத்துகிறது என்பதை இவர்கள் சொல்கிறார்கள். ஆணாதிக்கச் சமூகங்கள் அசலான மானுட நம்பிக்கைகளைச் சிதைத்துள்ளன. இது மத ஆதிக்கப் பெண்ணியத்திற்கு வழிவகுக்கிறது. இது நூல்களை மறுவிளக்கம் செய்து பெண் ஆன்மீகத்தைத் தழுவக் கோருகிறது. இந்த நெருக்கடிகள் பெண்களிடம் பாரம்பரிய நிறுவனங்களுக்குள் வெளியே சமத்துவத்திற்கான புதிய வெளிகளைக் கண்டடையச் செய்கிறது.
மேற்கண்ட பல்வேறு பெண்ணிய நோக்குகளில் இருந்து இன்று பல்துறை – பன்முக நிலைப்பாட்டு, ஊடறுப்புப் பெண்ணிய அணுகுமுறை எழுந்திருக்கிறது. இது பாரம்பரியமான கல்வி சார்ந்த எல்லைகளை உடைக்கிறது.
சமூகவியல், வரலாறு, அறிவியல், கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்து பாலினம், சமத்துவமின்மை, சமூக நீதியை இந்த அணுகுமுறை முழுமையாகப் புரிந்துகொள்கிறது, பாலினத்தின் பிரச்சினைகள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கின்றன என இப்பார்வை கருதுகிறது. கூட்டு, பன்முகத் தீர்வுகள், ஆய்வின் தேவை என்பதை இது அங்கீகரிக்கிறது. பல்வேறு ஆய்வு முறைகள், அறிவு அமைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலமும், இணைந்த செயல்பாட்டை வளர்ப்பதன் மூலமும், சமூக மாற்றத்திற்கான மிகவும் வலுவான கோட்பாடுகள், நடைமுறைகளை உருவாக்குவதன் மூலமும், குறுகிய ஒழுக்க முன்னோக்குகளை இப்பார்வை தகர்க்கிறது.
இத்தகைய உலகளாவிய சமகாலப் பெண் பிரக்ஞையில் இருந்து ‘மிகச்சரியான கறாரான வஞ்சப் புகழ்ச்சி நடையில், வரலாற்று ரீதியானதும் உடலியல் ரீதியானதுமான உள்ளடக்கத்துடன், மனித யதார்த்தத்தின் செறிந்த பகுதிகளை வெளிச்சத்திற்குக் கொணர்கிறார்’ விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா.
‘பெண்களின் அனுபவங்களைப் பற்றிய கவிதைகளை – மாதவிடாய், பிரசவம் போன்றவை எனக்கொரு காரணம் என்று சொல்வேன் – நான் என் சொந்த வாழ்க்கையிலிருந்து எழுத முனைகிறேன். இதன்வழி என் வாழ்க்கையே நான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். எனது கவிதைகளில் நான் அனுபவித்த பல விஷயங்களைப் பெயர்த்துவிட்டேன் அல்லது அந்த இடத்தில் நிறையப் புனைகதைகளை வைத்துள்ளேன். நான் ஒரு பெண் பிரதிமையைக் கொண்டிருக்கிறேன், நான் அல்ல, அவள் ஒரு கற்பனையான பெண். அவள் வேறு நேரத்திலும் வேறு இடத்திலும் இருக்கிறாள். இந்தக் கற்பனைப் பெண் என்னுடன் இணைக்கப்பட்டுள்ளார். என் கருத்துப்படி பெண்களின் அனுபவங்கள் உலகளாவிய பாடங்கள். மக்கள் தொகையில் பாதிப் பெண்கள் என்பதையும், கர்ப்பம் மற்றும் பிரசவம் என்பது ஆண்களையும் பாதிக்கும் அனுபவங்கள் என்பதையும் மக்கள் மறந்துவிடலாம். அது பெண்கதையுடனும் பெண்குரலுடனும் நிறைய இணைக்கப்பட்டுள்ளது. அந்த மனத்துடன் நான் வளர்ந்திருக்கிறேன்’ என்று சொல்லும் சுஜாதா பட் நாடுகளின் எல்லைகள் கடந்து பறந்தலைவது தனக்கு அதிகச் சுதந்திரத்தை, உலகு குறித்த புரிதலைத் தருகிறது என்கிறார்.

‘என் பெயர் எவ்ஜனியா மரியா பிரேவோ. நான் நாடுகடத்தப்பட்ட சிலி நாட்டின் எழுத்தாளர். எனது எழுத்தின் மூலம் என் இதயத்திற்கு நெருக்கமான கருப்பொருள்களை நான் ஆராய்கிறேன். சிலி சர்வாதிகாரத்தின் வன்முறை, நாடுகடத்தலின் வலி, காதல், மனித அனுபவத்தின் ஆழமான தனிமையே எனது கவிதைகளின் மையம். கடந்த காலத்தில் நான் தீவிர வன்முறையையும் அரசியல் துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டிருந்தாலும் அன்பு, மனித ஒற்றுமையின் வழி நான் மீட்பைக் கண்டேன். எனது பணி இறுதியில் மானுடம் தழுவிய வாழ்க்கையின், மீட்சியின், நம்பிக்கையின், கொண்டாட்டத்தின் பகுதியாக நான் ஆகிவிடுவதுதான்.’ என சிலி நாட்டின் ராணுவ பாசிசத்திலிருந்து உயிர் தப்பிய எவ்ஜனியா மரியா பிரேவோ சொல்லும் போது, இத்தகைய புதிய பிரக்ஞையை இவர்தம் கூட்டுப் பிரகடனம் போல முன்வைக்கிறார் டோனி டோனி மோரிசன்:
‘மொழியினால் அடிமைத்தனம், இனப்படுகொலை, போர் ஆகியவற்றை ஒருபோதும் வரையறுக்க முடியாது. அவ்வாறு செய்ய முடியும் என்ற ஆணவத்திற்காகவும் அது ஏங்கக்கூடாது. அதன் சக்தி, அதன் மகிழ்ச்சி விவரிக்க முடியாததை நோக்கிச் செல்கிறது. அது பிரமாண்டமாக இருந்தாலும் சரி, மெல்லியதாக இருந்தாலும் சரி, புதைத்து வைத்தாலும் சரி, வெடித்துச் சிதறினாலும் சரி, புனிதப்படுத்த மறுத்தாலும் சரி, அது சப்தமாகச் சிரிக்கிறதாக இல்லாமல் எழுத்துக்கள் இல்லாத அழுகையாக இருந்தாலும் சரி, தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை, தேர்ந்தெடுக்கப்பட்ட மௌனம், துன்புறுத்தப்படாத மொழி அறிவை நோக்கி அல்ல, அதன் அழிவை நோக்கி எழுகிறது. இலக்கியம் கேள்விக்குரியதாக இருப்பதால் தடைசெய்யப்பட்டது, விமர்சன ரீதியாக இருப்பதால் மதிப்பிழந்தது, மாற்றாக இருப்பதால் அழிக்கப்பட்டது என்பது யாருக்குத் தெரியாது? சுயம் அழிவுபட்ட நாவின் சிந்தனையால் எத்தனை பேர் கோபப்படுகிறார்கள்? சொல்-பணிசெய்தல் உன்னதமானது என அது கருதுகிறது. அது உருவாக்கக்கூடியது என்பதால், மொழி நமது வித்தியாசத்தை, நமது மனித வேறுபாட்டை, வேறு எந்த வாழ்க்கையையும் போல இல்லாத வாழ்வின் விதத்தைப் பாதுகாக்கும் அர்த்தத்தை உருவாக்குகிறது’.

ஜோர்ஜ் லூயிஸ் போர்ஹேயின் வழியிலும், கார்சியா மார்க்வஸின் வழியிலும் அல்லது மேஜிக் ரியாலிசத்தின் வழியிலும், இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தைப் பயின்றவர்கள் அறிகிற இலத்தின் அமெரிக்க வாழ்விலிருந்து முற்றிலும் வித்தியாசமான இலத்தீன் அமெரிக்காவை, அதனது மனிதர்களை நாம் சேகுவேராவிடமும், ரோக் டால்டனிடமும், ஆரியல் டோப்மெனிடமும் தரிசிக்க முடியும். இவர்களது எழுத்துக்கள் தணலின் வெப்பமும், குருதியின் வாசமும், வேட்டை நாய்களென இலத்தினமெரிக்க மக்களைத் துரத்தும் மரணத்தின் குரூரத்தையும் நேரடியாக முன்வைக்கும் எழுத்துக்கள். அடுத்த மனிதனை நேரடியாகத் தமக்கு முன்னிறுத்தி முகத்துக்கு நேராகப் பேசும் கவிதைகள் இவை. பிரதி தரும் இன்பத்தையும் அது தரும் கிளர்ச்சியையும் இலக்கியத்தில் தேடித்திரகிறவர்களுக்கு வசீகரமற்றவை இந்தக் கவிதைகள்.
இராணுவ வாகனங்கள் தெருக்களை நிறைத்திருக்க, முதியவர்களையும் குழந்தைகளையும் ரகசியமாகத் தப்புவித்து, நாடு கடந்து அகதியாகத் திரியும் கவிதைகள் டோப்மெனின் கவிதைகள். அவரது படைப்புலகம் இவ்வாறாக விரிகிறது:
உயிருக்குத் தப்பி வருகிறவர்களின் பயங்கரம், உறவுகளைப் பிரிந்த நிராசைகள், அனாதைப் பிணங்களின் மீதான அன்பு, வாழ்தலின் மீதான அர்த்தமற்ற நம்பிக்கை, விதவைகளின் ஓலம், சித்திரவதை புரிந்து உறவுகளின் உயிரைப் பறித்தவர்களின் மீதான பழிவாங்கும் வெஞ்சினம் கொண்ட மனம், அந்நிய நாட்டில் அடைக்கலம் கொடுத்த மனிதரின் மீதான நேசம் என வாழ்வின் கசந்த அல்லது இருண்ட பக்கங்கள் பற்றிய கவிதைகள் டோப்மெனின் கவிதைகள். அவரது கவிதைகளில் உருவாக்கங்களுக்கு அவசியமில்லை. படிமங்கள் அவரது கவிதைகளில் அதிகமும் இடம்பெறுவதில்லை.
கடந்த ஐம்பதாண்டுகளிலான டோப்மெனின் கவிதைகளில் உலகெங்கும் சித்திரவதைக்குள்ளான மனிதர்களின் ஓலம் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. 1973 சிலியிலிருந்து, முப்பதாண்டுகளின் பின்னான ஈராக்கியச் சித்திரவதைகள் வரை, மரணத்திற்கும் தனிமைக்கும் எதிரான உயிர்வாழ்தலின் மகத்துவத்தையும், மனிதனின் அணையாத ஆன்ம விடுதலை நெருப்பையும் கொண்டாடுகிறது டோப்மெனிpன் கவிதைகள். ஆரியில் டோப்மெனின் கவிதைகள் பெரும்பாலும் இரண்டு பேர்களுக்கிடையிலான உரையாடலாகவே பரிமாணம் பெறுகிறது. இந்த உரையாடல் பல சமயங்களில் எதிரேயிருப்பவரின் மறுமொழியை எதிர்பார்க்காத, அவர்மீது கொண்ட அன்பில் விளைந்த உரையாடல். டோப்மென் மேற்கொள்ளும் உரையாடல், இடம் காலம் கடந்த நிலையில், அவர் கவிதைகளை வாசிக்கும் நம்முடனான உரையாடலாகவும் ஆகிவிடுகிறது.
1950களில் அலையடித்து 1959 ஆம் ஆண்டு வெற்றிவாகை சூடிய கியூபப் புரட்சி, இலத்தீனமெரிககக் கண்டம் முழுவதும் விடுதலை நெருப்பை ஊதி வளர்த்தது. நூறு நூறு வியட்நாம்களையும் கியூபாவையும் உலகில் உருவாக்க அலைந்த, அதன் உண்மையான அர்த்தத்தில் ‘சர்வதேசியவாதி’ சேகுவேரா.
சேகுவேரா பேசிய விடுதலை ஒரு குறிப்பிட்ட இனத்திற்கான அல்லது நிறத்திற்கான விடுதலை அல்ல, மாறாக ஒடுக்கப்பட்ட சகல மனிதருக்குமான விடுதலை. மக்கள் விரோதிகளாக ஆகின, சதாம் குசைன் போன்று ஊழலில் திளைத்த இனத்தேசியத் தலைவர்களின் திருஉருக்களைத் ஸ்தாபித்துவிட வேண்டும் எனத் திரிகிற பின்நவீனத்துவவாதிகள், அமெரிக்க உளவுத்துறையின் ஆவணங்களைக் கூடக் கொண்டாடியபடி, புரட்சியாளன் சேகுவேராவின் ‘திருவுருவை’ எப்பாடு பட்டேனும் அழித்துவிடத் துடிக்கிறார்கள்.
குவேராவின் நட்சத்திரம் ஜொலிக்கும் அந்தப் பிம்பம், உலகெங்கிலும் இடதுசாரிப் பெண்களின் படுக்கை அறைகளில் கூட இடம் பெற்றிருக்கிறது என்பது உண்மைதான். அவர் மிக அந்தரங்கமான, ஸார்த்தர் சொல்கிறபடி ‘தன்காலத்தின் முழுமனிதனாக’ மிக நேர்மையான ஒரு மனிதராக வாழ்ந்து மடிந்தார் எனும் காரணம் கருதித்தான், ஆண்களும் nபண்களும் அவரைத் தமது முகம் விழிக்கும் சுவரில் மாட்டி வைத்திருக்கிறார்களேயொழிய, ஒரு நடிகனின் மீதான காமாந்தகார எண்ணத்தில் அவரது படங்கள் கொண்டாடப்படவில்லை.
அவர் நாடோடியாக அலைந்த ஒரு புரட்சிகர சஞ்சாரி. அவர் தனது 23 ஆம் வயதில் மேற்கொண்ட இலத்தீன் அமெரிக்கப் பயணத்தில் தான் சந்தித்த வுறிய மக்களின் மீதான, ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான பேரன்பிலிருந்துதான் புரட்சிகர அரசியலைத் தேர்ந்து கொள்கிறார். பிடல் காஸ்ட்ரோவைத் தனது விடுதலைப் படையின் தளபதியாகவும் வரித்துக் கொள்கிறார். கியூபா முதல் காங்கோவினூடே, பொலிவியக் காடுகள் வரையிலும் தனது ஆஸ்த்துமா உடம்புக் கூட்டைச் சுமந்துகொண்டு திரிந்த அம்மனிதன், மரணம் தன்னை எதிர்கொண்ட வகையிலேயே தீரத்துடன் அதனை எதிர்கொள்கிறார். குவேராவின் கவிதையுலமும் இதுதான்.
நெருதாவின் கவிதைகள் மீது தீராத காதல்கொண்ட அவன், அவரது ‘காண்டோ ஜெனரல்’ கவிதை நூலுக்கு மிகவிரிவான விமர்சனமும் எழுதியிருக்கிறான். பொலிவியன் டைரியும், கவிதைகளுக்கான அவரது குறிப்புப் புத்தகமும் குவேராவின் மரணம் வரையிலும் அவரோடு பயணம் செய்தன. இயற்கையோடும், வறிய மனிதரோடும் கலந்த, அந்தமனிதனின் கனவுலகினைத்தான், அந்த மனிதனின் ஏழு கவிதைகளிலும் நாம் தரிசிக்கிறோம். அவர் கவிதைகள் நம்மை நோக்கித்தான் நேரடியாகப் பேசுகின்றன. கடல் தனது நட்புக் கரத்தால் கட்டளையிடுவது போல, சேகுவேராவின் பேரன்பு நமக்கு அவரது பிரபஞ்சமயமான கனவுலகு நோக்கிச் செயல்படக் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறது.

ரோக் டால்டனின் கவிதைகளுக்கான படைப்பு ஆதர்ஷங்களாக இரண்டு கவிஞர்களை அவர் குறிப்பிடுகிறார். முதலாமவர் பெருநாட்டின் கவிஞரான ஸெஸார் வல்லேஜ்ஜோ. இரண்டாமவர் 1984 அம் ஆண்டு பாரிஸில் மரணமற்ற பெல்ஜியக் கவிஞர் ஹென்றி மிச்சாக்ஸ். ஸெஸலார் வல்லேஜ்ஜோ பாரிசில் மரணமுற்ற, சேகுவேராவைக் கவர்ந்த பெரு நாட்டின் கவிஞர். மார்க்சிஸ்ட் புரட்சியாளர். மிச்சாக்ஸ் இந்திய சீனா உள்ளிட்ட கிழக்கத்திய நாடுகளின் தத்துவங்களையும் மாந்திரீகங்களையும் அறிந்தவர். ஸர்ரஜியலிஸ்ட்டுகளுடன் சேர்ந்து செயல்பட்டவர்.
தனது இறுதிக் காலத்தைப் பாரிஸில் கழித்தவர். ஸ்பானிய ஓவியர் ஸால்வடோர் டாலியுடன் உறவுகொண்டு ஓவியத்திலும் ஈடுபாடு காட்டியவர். குறிப்பிட்ட இருவரிடமும் அவர்களது படைப்புகளில் சர்ரியலிஸப் பண்புகள் இருந்தபோதிலும், வல்லேஜ்ஜோ கருத்தியல் எனும் அளவில் ஸர்ரியலிசத்தை மறுத்தவர். அது மட்டுமல்ல ஸர்ரியலிஸ்ட்டுகளை நக்கல் செய்தவர் அவர். ரோக் டால்டன் மிச்சாக்ஸின் ‘படிமங்கள், படிமங்கள் தாணடிய மேலதிக நனவோடைக் கற்பனைகள்’ என்பதைத் தான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன் என்கிறார்.
மிகச்சரியான அரசியல் உணர்வு, அது சார்ந்த கடப்பாட்டுணர்வு, பிரதயேகமான சொந்தப் படிமங்கள் மீதான தேடல், இதுவே தனது படைப்பு நெறி என்கிறார். அழகான கச்சிதமான வார்த்தைகளில் தனது அரசியலைச் சொல்வதற்கே தான் கவிதையைத் தேர்ந்ததாகவும் ரோக் டால்டன் குறிப்பிடுகிறார்.

ரோக் டால்டன் வாழ்நாள் முழுக்கவும் அவருக்கு ஓரடி பின்னால் மரணம் துரத்தத் தப்பித் திரிந்தவன். அரசியல் முரண்பாடுகளும், முரண்பாடுகளைத் துப்பாக்கிகளின் வழியில் தீரத்துக் கொள்வதுமான ஒரு சூழலில், மரணம் எந்நிமிடமும் நேரும் நிச்சயம் எனத் தெரிந்த நிலையில், தான் உறவுகொண்ட பெண்களின் அம்மண உடம்பிலும் முலைக் காம்புகளிலும் அவர்களது யோனிகளிலும் ஆறுதலும் அடைக்கலமும் நித்தியமும் பெற்ற கலைஞன் ரோக் டால்டன். இக்காரணத்தாலேயே அவரது கவிதைகளில் பெண்ணின் உடல் தரும் இன்பம் என்பது மிகமுக்கியமான கூறாக இருக்கிறது.
ரோக் டால்டன் வாழ்ந்த சூழல், ராணுவத்தினதும் போலீசினதும் வேட்டையில் இருந்து தப்பித் திரிந்த சூழல், புரட்சிகர அமைப்புகளினுள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும், விவாதங்களும் கூட துரோகமாக அடையாளம் காணப்படும் சூழல், தனிநபர் அதிகாரப் போட்டிகள் கூட அரசியல் முலாம் பூசப்படும் கூூழல். இதுதான் ரோக் டால்டன் வாழ்ந்த அரசியல் சூழல். மக்களையும் பெண்களையும் நேசிக்கிற ஒரு கலைஞன் இத்தகைய சூழலில் நீண்ட நாட்கள் மரணத்தின் கொடுங்கரங்களிலிருந்து தப்புவது என்பது இயல்பாகவே கடினம். இராணுவக் கொலைத் தண்டனையிலிருந்து அவர் தப்புகிறார்.
அமெரிக்க உளவுத்துறையின் கொலை முயற்சியிலிருந்து அவர் தப்புகிறார். ஆனால் தனது சொந்தப் புரட்சிகரக் கட்சியின் கொலைத் தண்டனையிலிருந்து அவரால் தப்ப முடியவில்லை. மக்களுக்கும் புரட்சிகர அமைப்புக்கும் இடையிலான இன்றியமையாத உறவு குறித்து அவர் பேசினார். கட்சியைப் பிளவுபடுத்த முயல்கிறார், அமெரிக்க உளவாளி எனக் குற்றம் சுமத்தப்பட்டு அவர் சுட்டுக்கொலை செய்யப்படுகிறார். அவரது கவிதைகளின் இறுதி இவ்வாறுதான் மரணத்தைச் சந்திக்கிறது.
ரோக் டால்டன், பெண் உடம்பின் வழி வாழ்வின் மீது தீராத காதலும் மோகமும் கொண்டு வாழ்ந்தவன். மரணத்தின் நித்தியமும் அநித்தியமும் அவனது கவிதைகளின் ஒவ்வொரு எழுத்திலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. தான் வாழும் நொடிதொரும் காதலும் மரணமும் குறித்து, அதனை வாழ்ந்துபட்ட அனுபவத்துடன் பதிந்து வைத்த வகையிலேயே ரோக் டால்டனின் கவிதைகள் அமரத்துவம் பெறுகின்றன. ரோக் டால்டனின் கவிதைகளும் உரையாடல் பண்பு கொண்டவைதான். தான் விரும்பிய அல்லது தன்னை விரும்பிய பெண்களுடனான, தனது சொந்தத் தோழர்களுடனான, மரணத்துடனான அவரது உரையாடல்தான், அவரது கவிதைகளாக ஆகிறது.
ஐந்நூறு ஆண்டுகாலக் காலனியாதிக்க வன்முறை, அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிழலில் கொழுத்த இலத்தீன் அமெரிக்க நாடுகளின் நூறாண்டு ராணுவ சர்வாதிகாரிகளின் வன்முறை என இம்மூன்று கவிகளும் வன்முறையினிடையில் பிறந்து வளர்ந்தவர்கள்.
வன்முறையினிடையில் வாழத் தலைப்பட்ட இம்மனிதர்கள், அந்த வன்முறைக்கு முடிவு கட்டும் தமது செயல்போக்கில், மரணத்திற்கு நேரடியாக முகம் கொடுத்தவர்கள். மரணத்தை வெல்ல முயன்றவர்கள். சேகுவேராவும் ரோக் டோல்டனும், இளம் வயதிலேயே இடை நடுவிலேயே அவர்கள் மீது மரணம் திணிக்கப்பட்டதால், மரணத்தை வெல்ல முடியவில்லையாயினும், அவர்கள் வாழ்வை வென்று நிற்கிறார்கள். ஆரியல் டோப்மன் மட்டும் தனியனாய், மரணத்திற்கு எதிராகச் சதா உரத்துப் பேசியபடியே இருக்கிறார். இவ்வகையில் இந்த மூவருமே மரணத்திற்கு எதிரான நம் காலத்தின் மிகச் சிறந்த உரையாடலாளர்கள் ஆகிறார்கள்.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் கலைஞர்கள் அனைவரும் சந்தித்த மிகப் பெரும் பிரச்சினைகள் இரண்டு. ஒன்று பாலுறவு தொடர்பானது, பிறிதொன்று வன்முறை தொடர்பானது. இவைகள் இரண்டினையும் சுற்றிய அறங்கள் மற்றும் ஒழுக்கங்களின் வீழ்ச்சி தொடர்பான தார்மீகக் கேள்விகள்தான் தான், காம்யூ, ஸார்த்தர், ஜெனே, ஹெரால்ட் பின்ட்டர், ஸிம்போர்ஸ்க்கா, பிக்காஸோ, நெருதா, மயக்காவ்ஸ்க்கி, பிரெக்ட் போன்ற மாபெரும் படைப்பாளிகளிடம் வெளிப்பட்டிருக்கிறது. இலத்தீன் அமெரிக்கக் கலாச்சார அரசியலில் விளைந்த அவ்வாறான படைப்புகளே, ஆரியில் டோப்மெனிடமும் சே குவேராவிடமும் ரோக் டால்டனிடமும் தமக்கேயுரிய விசேஷமான பிரக்ஞையுடன் வெளிப்பட்டிருக்கிறது.
தமிழில் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கும் எவருடையதுமான தேர்வின் பின்னணிகளில் அவரது சொந்த அனுபவமும் அவர் தேர்ந்து கொண்ட அரசியலும் அடிமனப் பிரக்ஞையில் ஒரு சரடாக ஓடிக்கொண்டிருக்கும் எனவே நான் கருதுகிறேன். இதனையே நான் மொழிபெயர்ப்புத் தேர்வின் பின்னிருக்கும் சமூகப் பிரக்ஞை அல்லது அரசியல் பிரக்ஞை எனப் புரிந்துகொள்கிறேன்.
மனிதன் – மனுஷி உயிர் ஜீவிகள் எனும் அடிப்படையில் இவர்கள் எதிர்கொள்ளும் ஆதார உணர்ச்சிகள் என பாலுறவையும் வன்முறையையும் நான் கருதி வந்திருக்கிறேன். இந்த இரு பண்புகளும் மனிதத்தின் உயிர்வாழ்தல் தொடர்பான சூழல்கள் துவங்கி அவர்கள் தம்மை அகலித்துக்கொள்கிற உறவுகள் மற்றும் சிந்தனைத் துறைகள் என அனைத்தும் தழுவித் தொடர்கின்றன. அதனோடு காலத்திற்கும் இடத்துக்கும் அமைய மாற்றம் காண்கின்றன எனவும் நான் கருதி வந்திருக்கிறேன்.
இதிலிருந்து விடுபடுதலைக் குறித்து சமயங்கள் பேசுகின்றன. மதநீக்கம் பெற்ற விடுதலைக் கோட்பாடுகள் இவற்றிலிருந்து விடுபடுதல் என்பதற்கு மாற்றாக இவற்றைத் தகவமைத்துக்கொள்வது அல்லது மனிதாயப்படுத்துவது – இதனை பண்பாடு எனவோ நாகரீகம் எனவோ பெயரிட்டுக் கொள்ளலாம் – என்பதைத் தேர்ந்து கொள்கின்றன. இதனை நீதியான சமூகம் நோக்கிய செயல்பாடு என்றும் வைத்துக் கொள்ளலாம். தத்துவம் கலை இலக்கியம் அரசியல் போன்ற மனித இடையீடு சார்ந்த வெளிகளிலெங்கும் இது குறித்த தேடல்களே விரவியிருக்கிறது என நான் புரிந்திருக்கிறேன்.

கவிதை மொழியாக்கத்தின் போக்கில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்வது என்பதும் ஒரு பெருங்கலை. குறிப்பிட்ட கவிஞரின் குறிப்பிட்ட கவிதைக்கான இரு வேறு மொழிபெயர்ப்புகள் வாசகனுக்கு இருவேறு அனுபவங்களைத் தருவதையும், இரு வேறு மொழிபெயர்ப்பாளர்களின் சொல்லாட்சிகள் அவர்களது அனுபவ மட்டத்திற்குத் தக மாறியிருப்பதனையும் அசோகமித்திரன் பதிவு செய்திருக்கிறார்.
எனவே ஒருவரது வாழ்வனுபவமாக இருக்கிற வரலாற்றுணர்வு, வர்க்கம், சாதி, இனம், பால்நிலை தாண்டி அனைவருக்குமான சொல்லாட்சிகள், சொற்சேர்க்கைகள், தேர்வுகள் நிச்சயம் இருக்கமுடியாது.
எனது அனுபவத்தில் மொழிபெயர்ப்பு குறித்ததாக இருவிதமான விமர்சனங்கள் இருக்கின்றன. முதல் விமர்சனம் மூலக் கவிதையில் இல்லாத ஒரு சொல் எனது மொழியாக்கத்தில் அதிகமாக வந்திருக்கிறது என்பது ஒரு விமர்சனமாக முன்வைக்கப்பட்டது.
இரண்டாவது தனது மொழிபெயர்ப்போடு எனது மொழிபெயர்ப்பை ஒப்பிட்டு அதில் இல்லாது போன சில வரிகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம், என்னில் இல்லாத முழுமை இரண்டாமவரது மொழிபெயர்ப்பில் இருப்பதாக அவர் கருதினார். இந்த இரு விமர்சனத்திலும் முக்கியமாகச் சுட்டிக்காட்டப்படாத ஒரு தரவு இது:
விஸ்லாவா அல்லது தர்வீஷின், போலந்து அல்லது அரபு மூலத்தின் எந்த ஆங்கில மொழிபெயர்ப்பாளரின் கவிதைகளை ஆதாரமாக வைத்து இவர்கள் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்கள் என்பதுதான்.
மொழிபெயர்ப்பில் இது ஒரு மிகமுக்கியமான விடயம். நான் அறிந்த வரையில், உலகின் எந்த ஒரு கவிஞனது கவிதைக்கும் ஒரேயொரு மொழிபெயர்ப்பு என்பது இல்லை. தர்வீஷின் ஒவ்வொரு கவிதைக்கும் குறைந்தபட்சம் ஐந்து அல்லது ஆறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் உண்டு. தர்வீஷின் சில கவிதை வரிகள் இரண்டு மூன்று கவிதைகளில் திரும்பவும் வருவதும் உண்டு. தர்வீஷின் ஒரே கவிதை மொழிபெயர்ப்பாளரது தேர்வுக்கு ஒப்பச் சில பத்திகள் தவிர்க்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புக்களும் உண்டு. வேறு வேறு மொழிபெயர்ப்பாளர்கள் வேறு வேறு சொற்கோவைகளைப் பாவிப்பது என்பது இயல்பு. இவ்வகையில் ஆங்கிலத்தில் இல்லாத ஒரு சொல் தமிழில் எப்படி வந்தது எனக் கேட்பதிலுள்ள அனர்த்தம் பற்றி நான் கவலைப்படாது ஒதுங்கினேன்.
விமர்சனம் என்பது இருவகையிலானவை. அரசியல் மற்றும் வேறு வேறு தனிநபர்க் காரணங்களால் வரும் விமர்சனம் முதலாவது. இதில் காழ்ப்பும் பொறாமையும் ஆத்திரமூட்டலும் நிராகரிப்பும் கலந்திருக்கும். சாதாரண மனிதர்களை விடவும் எழுத்தாளர்களிடம் இது அபரிமிதமாக இருக்கிறது என நான் நிச்சயமாகச் சொல்வேன். இதனைப் புறக்கணித்து மேல் செல்வது எனது தேர்வு. சில விமர்சனங்கள் நட்புணர்வுடன் எழுதப்படும், சிலர் நேரிலும் இதனைச் சுட்டிக் காட்டுவார்கள். இத்தகைய விமர்சனங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டு அடுத்தடுத்த பதிப்புகளில் மொழிபெயர்ப்புகளில் மாற்றம் செய்வது எனது வழமை. குர்திஸ் கவிதைகளிலும், இலத்தீனமெரிக்கக் கவிதைகளிலும் அப்படியான இன்னும் பொருத்தமான சொல்லாட்சிகளை முன்னைய மொழிபெயர்ப்பினோடு ஒப்பிட்டுப் பாவித்ததும் உண்டு.
மொழிபெயர்ப்பாளன் ஒரு கவிதையை மொழிபெயர்க்கத் தேர்ந்து கொள்ளும் போது அவன் இரு வேறு எல்லைகளில் ஒன்றைத் தேர்ந்து கொள்ள விழைகிறான். தனது சொந்த அனுபவ மட்டத்தினுள் வரும் கவிதையினை அல்லது தான் வாழும் சமூகத்தின் உணர்வு மட்டத்திற்கு உகந்த கவிதையினை அவன் தேர்ந்து கொள்கிறான். இவ்வாறான தேர்வுகள் ஒரு போதும் ஒரு கவிஞனுக்கு நியாயம் செய்வதாக இருக்க முடியாது. இவ்வாறான தேர்வுகளில் குறிப்பிட்ட கவிஞன் வாழ நேர்ந்த நிலம், கலாச்சாரம், வரலாறு போன்ற குறிப்பான அடையாளங்களின் தன்மைகள் அகற்றப்படுகின்றன.
பிறிதொரு எல்லையிலான தேர்வு இரண்டாவது. ஓரு கவிஞன் வாழ நேர்ந்த நிலம், வரலாறு, அனுபவம், அரசியல் போன்ற குறிப்பான நிலைமைகளில் வைத்து ஒரு கவிஞனைத் தேர்ந்து கொள்வது. இம்மாதிரிக் கவிதைகளே கவிஞனின் தனித்துவத்தை நிலைநாட்டவல்லது. கவிஞன் வாழ நேர்ந்த சூழல், கவிதைகள் எழு நேர்ந்த தருணம் போன்றவற்றை இந்த அணுகுமுறை பற்றிப் பிடிக்க முனைகிறது. ஆரம்ப நிலையில் முதலாவது அணுகுமுறையைக் கொண்டிருந்த நான், காலப் போக்கில் இரண்டாவது அணுகுமுறையையே வரித்துக் கொண்டேன்.
மூலப்பிரதிக்கு விசுவாசமாக இருப்பதையும் மொழிபெயர்ப்பில் சென்று சேரும் மொழியில் வாசிப்பவர்க்குத் தெளிவுடன் இருப்பதையும் சமநிலைப்படுத்துதல் என்பதுதான் மொழிபெயர்ப்பின் அடிப்படைப் பிரச்சினை. முதன்மையாக மொழிபெயர்ப்பின் தேர்வு குறித்த அரசியல் வருகிறது. இந்த அரசியல் என்பது மூலப்பிரதியின் பிரக்ஞையும் உணர்ச்சியும் ஒன்றிணைவதால் உருவாகிறது. மொழிபெயர்ப்பதில் இந்தப் பிரக்ஞையும் உணர்ச்சியும் சென்று சேரும் மொழியில் இவற்றின் அவசியம் என்ன என்பதால் உருவாகிறது.
நான் இறுதியாகக் கொணர்ந்த மொழிபெயர்ப்புக் கவிதை நூல் தர்வீஷின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கவிதைகள் (வேரல் : 2026). காசா பேரழிவின் துயரை ஒட்டி காசாவின் மக்களும் காசா நகரும் குறித்து தரிவீஷ் எழுதிய கிடைத்தற்கரிய – அபூர்வமான கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் வெளியானதையொட்டி, பாலஸ்தீன மக்களின் தொடரும் மரணங்களுக்கான அஞ்சலியாக அக்கவிதைத் தொகுதியை நான் கொணர்ந்தேன். தர்வீஸின் கவிதைகள் தன்னெழுச்சியானவை. ஊற்றுபோல் விடுதலை உணர்ச்சியை, பெரும் துயரினிடையிலும் வாழும் வேட்கையை நமக்குள் பரவச் செய்பவை.
இந்தியச் சூழலில் ஒடுக்கப்பட்டுவரும் இஸ்லாமிய மக்களிடம் இக்கவிதைகள் நேரடியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அவர்தம் சொந்த அனுபவத்தினூடும் தொடர்பு கொள்ளும். மூலமொழிக்கும் சென்று சேரும் மொழிக்கும் இடையிலான எனது உணர்வும் தேர்வும் இவ்வாறுதான் தீர்மானிக்கப்படுகின்றன. இதனையே மொழிபெயர்ப்பின் பின்னுள்ள அரசியல் என்று நான் கருதுகிறேன்


Leave a comment