
யமுனா ராஜேந்திரன்
17 Jun 2026 — 1 min read

ஒரு திரைப்படத்தை இரு வகைகளில் அணுகலாம். ஒருவர் திரைப்படம் பேசும் பிரச்சினைகளையும் கதைமாந்தர்களையும் தனது அனுபவ மட்டத்திற்குள் கொண்டு தன்வயமாக அதனை அணுகுவது ஒரு வகை. பெரும்பாலான ரசனை விமர்சனங்கள் இவ்வகையில் அமைபவை. பிறிதொரு விமர்சனம் ஒரு படம் ஏன் சமூகத்தில் நிலவும் வெகுமக்கள் இடையிலான வேற்றுமைகளையும் தாண்டி அதனை மேவி அனைத்து மக்களதும் அந்தரங்கத்துடன் உரையாடும் இடத்தை அடைகிறது என அவதானிப்பது. இதனை ஒரு படைப்பு குறித்த புறநிலை சார் விமர்சனம் எனலாம். சந்தேகமில்லாமல் வெகுமக்கள், ஜனரஞ்ஜக சினிமா விமர்சகர்கள், தீவிரமாகச் சினிமாவை நேசிப்பவர்கள் என அனைவராலும் கொண்டாடப்படும் படமாக ஆகியிருக்கிறது ஹபீபி.
உலக அளவிலும் பிராந்திய அளவிலும் இந்திய அளவிலும் தமிழ்ச் சூழலிலும் திரைப்படங்களில் இஸ்லாமிய மக்களின் மீதான ஒரு வெறுப்புணர்வு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் ஹாலிவுட் பாலிவுட் கோலிவுட் எனும் எதுவும் விதிவிலக்கல்ல. உலகின் ஒற்றை அமெரிக்க ஆதிக்கம், இந்தியாவின் ஒற்றை இந்துத்துவா ஆதிக்கம் இதனைத் திட்டமிட்ட அரசியலாகச் செய்கின்றன. இந்தச் சூழலில்தான் அன்பும் மகிழ்வும் துயரும் கொண்ட இரத்தமும் சதையுமான அம்மக்களது வாழ்வு சொல்லப்படும்போது, அவர்களது வாழ்வுக்கும் நமது வாழ்வுக்கும் ஒத்த நிலைமைகளை நாம் அறிந்துகொள்கிறோம். நம் அருகிலேயே இருந்தாலும் உளவியல் பிரச்சாரங்களால் விலக்கி வைக்கப்பட்ட அம்மக்களின் வாழ்வில் உள்ள ஆசாபாசங்கள், துயர்கள் போன்றவற்றை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.

ஹபீபியின் கதை மூன்று தலைமுறைகளின் கதை. கடந்தகாலத்தின் வாழ்முறையை விட்டுவிடாத குடும்பத்தின் தலைவன்; நேர்ந்துகொண்டிருக்கும் பொருளாதார மாற்றங்களால் தம் வாழ்வும் மேம்பட வேண்டும் எனக் கருதும் அவரது தம்பி; கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்துக்கும் இடையில், கனவுக்கும் நனவுக்கும் இடையில் அல்லாடும் மகன். இவர்களோடு பிணைக்கப்பட்ட தாய், மனைவி, மகள்கள் என, மூன்று தலைமுறைப் பெண்கள். இவர்களது பிறப்பும் வாழ்நிலையும் இறப்பும் குறித்தது ஹபீபி திரைப்படம். இதற்கு உள்தான் அனைத்து மனிதரும் உலகில் வாழ்கிறார்கள். இதில் மதம், இனம், நாடு, ஊர், தெரு எனும் பேதங்கள் இல்லை. இந்தப் பிரபஞ்ச உணர்வை ஹபீபி படம் தனது கதைக்குள் கொண்டிருக்கிறது.
பொருளியல் காரணங்களால் குடியேற்றமும் உறவுகளுக்கிடையிலான பிரிவும் இன்று உலக யதார்த்தம். படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பேதமின்றி இன்று செல்வ வளமற்ற நாடுகளின் மக்கள், செல்வ வளம்கொண்ட நாடுகளை நோக்கிச் செல்கிறார்கள். இதில் பெரும் சுரண்டலையும் துயரையும் எதிர்கொள்பவர்கள் உடலுழைப்புத் தொழிலாளர்கள். அவர்கள் பெருமளவு கட்டிடத் தொழிலாளர்களாக, கால்நடை மேய்ப்பவர்களாக, வீட்டு வேலைக்காரர்களாக வளைகுடா நாடுகளுக்குச் செல்கிறார்கள். இதற்குப் பெரும் விலை தருபவர்களாகப் பெண்களே இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை குறித்து மலையாள மற்றும் சிங்கள மொழிகளில் பலபத்துப் படங்கள் உள்ளன என்றாலும், தமிழக இஸ்லாமிய மக்களின் வாழ்வு சார்ந்த இந்த அனுபவங்கள், தமிழ்ப் படங்களில் இதுவரை பேசப்பட்டதில்லை. வேலை நிமித்தமாகப் புலம்பெயர்வது அனைத்து மனிதரதும் பிரபஞ்ச ரீதியிலான பிரச்சினையாக இருக்க, புலம்பெயர்ந்து உடலுழைப்பில் ஈடுபடும் இஸ்லாமிய மக்களின் குறிப்பான பிரச்சினைகளை ஹபீபி படம் முன்வைக்கிறது. இவ்வகையில் இப்படம் இஸ்லாமிய உடலுழைப்புத் தொழிலாளரின் பாடுகளை முதன் முதலில் தமிழ் சினிமாவில் முன்வைத்திருக்கிறது.

ஒரு திரைப்படம் என்பது காட்சியினாலும் ஒலியினாலும் ஆனது. ஆதியில் அது காட்சியாக மட்டுமே இருந்தது. அப்போதும் அது மக்களுடன் தொடர்பு கொண்டது. பிற்பாடு இசைக்கருவிகளால் ஆன ஒலி சேர்ந்துகொண்டது. மனிதர்கள் பேசும் வசனங்கள் இல்லாமலும் அது மக்களுடன் தொடர்புகொண்டது. பிற்பாடு மனிதர்களின் உதடுகளின் வழி வெளிப்படும் வசனங்கள் அதில் சேர்ந்துகொண்டது. இப்போது காட்சி – இசை – கதைவசனம் என மூன்றும் இயைந்து ஒன்றிணையும் படங்களே பெரும் திரைப்பிரதியின்பத்தை பார்வையாளனுக்குத் தருகிறது. ஹபீபி திரைப்படத்தை இயக்குனர் மீரா கதிரவன், ஒளிப்பதிவாளர் மகேஸ் முத்துச்சுவாமி, இசையமைப்பாளர் சாம் என, மூன்று ஆளுமைகளதும் படம் என்றே சொல்லவேண்டும்.
இந்தி சினிமாவில் இருந்துமட்டுமல்ல, தென் ஆசியச் சூழலில் இஸ்லாமியக் கலாச்சாரத்திலிருந்து கஸல் காதல் கவிதைகளையும், கவாலி இறையமைதிப் பாடல்களையும் பிரிக்க முடியாது. கஸல் காதலுக்கு உருகும் மறுகும் கவிதைகளால் ஆனது. கவாலி இறையினோடு சங்கமிக்கும் ஆத்மாவின் மன்றாட்டத்திற்கும் ஆனது. இரண்டினதும் அடிப்படையாக இருப்பது அன்புதான். ஒன்று மானுட அன்பு; பிறிதொன்று இறை அன்பு. மானுட அன்பே இறை அன்பாகப் பரிமாணம் பெறுவதுதான் இஸ்லாமிய மக்களின் வாழ்வு. இந்தப் படத்தின் பின்னணியிசை, நெசவாளிகளின் அன்றாட வாழ்நிலை ஒலியான தறிச்சத்தத்துடன் இணைந்து, அன்பு கனிந்த பாடல்கள் என, காட்சிகள் அனைத்திலும் இந்த உணர்வு படத்தின் மீது கவிந்திருக்கிறது.
ஒருவரது வீடு என்பது நான்கு சுவர்களால் ஆனது அல்ல. அது தெருக்களில் ஒன்றாக, ஊரின் அடங்கலாக, பரந்த வயல்வெளிகளின், மலைகளின், தார்ச்சாலைகளின், ரயில்கள் வந்துபோகும் பாலத்தினாலும் ஆனது. மகேஸ் முத்துச்சுவாமியின் காமெரா வீட்டைப் பிரிந்துச்செல்லும் மனிதர்களின் வருகையை, பிரிவை அகண்ட வானத்தை ஊடுருவி மேலிருந்து நமக்குக் காட்டுகிறது. அதிலும் அந்த இறுதிக் கட்சி சொல்லில் வடிக்க முடியாத காட்சி இன்பத்தை நமக்குத் தருகிறது. அபுதாஹிர் ஜீப்பில் ஏறி திருவனந்தபுரம் விமானநிலையம் நோக்கிச் செல்லும் இலக்கிலிருந்து அவர் நிலோஃபரை யதேச்சையாகச் சாலையில் சந்திக்கும் வரை, மகேஸ் நிகழ்த்தியிருப்பது மலைகளில் சமவெளிகளில் ஏறி இறங்கி நடத்தும் இயற்கையூடான ஒரு புனித யாத்திரை.
மீரா கதிரவன் உருவாக்கியிருக்கும் பாத்திரங்களில் தலையாயது யூசிப்பின் பாத்திரம். கஸ்தூரி ராஜா இஸ்லாமியராகவே வாழ்ந்திருக்கிறார். அடுத்து பர்வீன். எந்தச் சமூகத்திலும் மாறிவரும் பெண் பிரக்ஞையின் சித்திரம் அவர். இன்குலாப், பெரியார், மார்ட்டின் லூதர் கிங், இக்பால், தாகூர் என, அழகுணர்வும் சுயமரியாதை உணர்வும் கொண்ட ஒரு பாத்திரப்படைப்பு. சில காட்சிகள் மிகக் கூர்மையானவை. தம்பி அண்ணனுக்குக் கைக்கடிகாரம் தருவதையடுத்து அவர் கடிகாரம் கட்டுவது ஒரு அருகாமைக் காட்சி. காட்சி அங்கு முடிவதில்லை. காமெரா அவரது மனைவியின் மகிழ்ச்சி பொங்கும் முகத்தில் சென்று நிலைக்கிறது. உண்மையில் இக்காட்சியில் தாளமுடியாது நான் அழுது விட்டேன். அந்த ஒரு காட்சியில் இருப்பது வறுமையினதும் காதலினதும் வரலாறு. படம் முழுக்க இப்படியான நுண்ணுணர்வு அனைத்துக் காட்சிகளிலும் வெளிப்படுகிறது. மனிதர்க்கிடையிலான உரையாடல்கள் முடிந்தும் காட்சி சில நொடிகள் மௌனமாக நீள்கிறது. இந்த மௌனம் நாம் அந்த மனிதர்கள் குறித்துச் சிந்திப்பதற்கான இடைவெளி. இவை இயக்குனர் மீரா கதிரவனின் நுண்ணுணர்வில் இருந்து வருவது.

இவ்வாறு இயக்கம், இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் இணைந்த, ஒன்றிணைந்த திரை அனுபவத்தை ஹபீபி நமக்குத் தருகிறது. ஹபீபி குறித்த எனது முதற்குறிப்பில் படம் காவியத் தன்மை வாய்ந்தது என்று குறிப்பிட்டிருந்தேன். கதாசிரியர் மொகமத் அமீன் ஒரு குடும்பத்தின் நாற்பது ஆண்டு காலத்தை விவரிக்கிறார் என்றாலும், இதன் வழி நூறு நூறாண்டுகள் வரலாறு கொண்ட ஒரு சமூகத்தின் பிறப்பும் வாழ்வும் மரணமும் அந்தச் சமூகம் எதிர்கொள்ளும் சடங்குகள் ஏற்படுத்தும் சவால்களும் என ஒரு அகண்ட பிரபஞ்சத்தை நமக்குத் திறந்துவிட்டிருக்கிறார். பொதுவாகப் பிற மதங்களின் மரணச் சடங்குகளில் பெண்கள் விலக்கி வைக்கப்படுவதையே பார்த்து வந்திருக்கிற எனக்கு, இஸ்லாமியச் சமூகத்தில் பெண்களும் ஈடுபடுவதைப் பார்த்தது ஒரு புதிய திறப்பு. சுன்னத், சன்னா, குலா, காதல் சின்னமாக வாசனைச் சோப்பு, இரவில் நீர் எடுக்கப்போகும் பெண்கள், ஆண்கள் பாடிக் கூடுமிடம், மதரசாவுக்குக் கிராமமே உணவு தருவது என, குறிப்பான இஸ்லாமிய மக்களின் வாழ்வியலுடன் இடப்பெயர்வு, முதலாளிய உற்பத்தியினால் கைவினைஞர் வாழ்வு தேய்வது எனும் பிரபஞ்சப் பிரச்சினைகளை இந்தக்கதையில் கொண்டு வந்திருக்கிறார். தனித்தனி மனிதர்களை இவ்வாறு ஒன்றிணைப்பதுதான் காவியத்தின் பண்பு. அந்த இறுதிக் காட்சியில், ‘நாம் பேசிக் கொள்வதற்கு இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது’ என நிலோஃபரும் அபுதாஹீரும் சொல்லிக் கொள்வது நிச்சயமாகவே காவிய சோகம்தான்.
தமிழ்ச் சூழலில் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ போன்ற ஒரு படத்தைப் பார்க்கத் தமிழுலகம் ஒரு வாழ்நாள் காலம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. இந்தக் காத்திருப்பு என்பது தமிழ் மக்களின் பகுதியாக இருந்துவரும் கதைக்குள்ளான இஸ்லாமியப் பெண்கள் ஆண்கள் குழந்தைகளின் காத்திருப்பு மட்டுமல்ல, நமது காத்திருப்பும்தான்.


Leave a comment