GenZ போராட்டமும், அரசின் அடக்குமுறையும்! – அருந்ததி ராய் நேர்காணல்

Hardline Desk

03 Aug 2026 — 1 min read

GenZ போராட்டமும், அரசின் அடக்குமுறையும்! – அருந்ததி ராய் நேர்காணல்

ஒருவரின் முதல் புத்தகமே உலகளவில் பெரும் பேசுபொருளானது மட்டுமின்றி, புக்கர் பரிசையும் வென்றது. அந்தப் புத்தகம் ‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்’, அதன் எழுத்தாளர் அருந்ததி ராய்.

எழுத்தாளரும் சமூக ஆர்வலரும் திரைக்கலைஞருமான அருந்ததி ராய், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்தப்படும் வன்முறைகள், பா.ஜ.க.வின் தீவிர இந்துத்துவ அரசியல் கொள்கைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து தீவிரமாக எதிர்த்து எழுதியும் பேசியும் வருகிறார்.

இந்த நிலையில், பா.ஜ.க.வை எதிர்த்துக் கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டம் அவருக்குப் பெரும் நம்பிக்கை கொடுத்திருப்பதாகக் கூறுகிறார். குறிப்பாக, இந்த மாற்றம் தரும் நம்பிக்கையில், இப்போது நிம்மதியாகச் சாவதற்கும் தயார் என்றும் கூறியிருக்கிறார்.

இப்படியான ஆழமான வார்த்தையை உதிர்க்கும் அளவுக்கு சி.ஜே.பி.யும் நாட்டின் இளைஞர் எழுச்சியும் அருந்ததி ராயிக்கு உணர்த்தியது என்ன என்பதை ‘தி ஸ்க்ரோல்’ தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் விரிவாகப் பேசியிருக்கிறார். அதன் தமிழ் வடிவம் இதோ…

மாணவர்களின் போராட்டக்களத்துக்குச் சென்றபோது சூழல் எப்படி இருந்தது?

என்னால் முதன்மைப் பகுதிக்குள்ளேயே செல்ல முடியவில்லை. ஏனெனில், அங்கு மிக நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது. அதனால் நான் வெளிப்பகுதியிலேயே சுற்றிக்கொண்டிருந்தேன். அப்போது நான் முகமூடி அணிந்துதான் வந்திருந்தேன். அது மிகவும் சுவாரசியமான, கிண்டலும் கேலியும் நிறைந்த சூழலாக இருந்தது. அரசியல் என்பதன் அதிநுட்பமான வடிவமே நகைச்சுவையும் பகடியும்தான் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. என்னைப்போன்ற ஆட்களுக்கு பிரதமரை பற்றி இப்படிப்பட்ட பகடிகளையும் கேலிகளையும் கேட்பது மனதிற்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.

இதையெல்லாம் என் ஆயுள் காலத்தில் காண்பேன் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அது மிகவும் அற்புதமாக இருந்தது. ஆனால், இப்போது நிலவும் அமைதியைப் பார்க்கும்போது கொஞ்சம் அச்சமாக இருக்கிறது; எதுவுமே நடக்காதது போல ஒரு மௌனம் நிலவுகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எல்லாமே ஒரே வாரத்தில் நடந்துவிட்டது போல மிகவும் நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது. அதற்கு முன்பிருந்தே இதற்கான சூழல் உருவாகி வந்தாலும், கடந்த வாரத்தில்தான் அது உச்சத்தை எட்டியது. நீங்கள் ஆரம்ப நாட்களிலிருந்தே இங்கு வந்துகொண்டிருக்கிறீர்களா?

இல்லை, நான் தொடக்க நாட்களில் வந்தேன். பிறகு கொஞ்ச காலம் வரவில்லை. ஏனென்றால், அது எனக்குச் சற்று சிக்கலானது. மிகக் குறைந்த, குறிப்பிட்ட கோரிக்கைகளுக்காகத் தொடங்கி, மேலோட்டமாகப் பரந்த தளத்தில் இயங்கும் ஓர் இயக்கத்தின் மீது, என்னுடைய தீவிரமான சித்தாந்த எழுத்துக்களின் சாயல் விழுந்துவிடக் கூடாது என்று நினைத்தேன். அதனால்தான் இந்த இயக்கத்தோடு என் பெயர் நேரடியாக இணைக்கப்படுவதைத் தவிர்ப்பதில் கவனமாக இருந்தேன்.

கடந்த வாரம் நீங்கள் எழுதிய கட்டுரையில் கூட, கரப்பான் பூச்சி கட்சி இயக்கத்தைக் கண்டு தொடக்கத்தில் தயங்கியதாகவும், பிறகு ஏதோ ஒன்று உங்களை மாற்றியதாகவும் குறிப்பிட்டிருந்தீர்களே…

ஆம், அன்னா ஹசாரே போராட்டத்தை வலதுசாரிகள் எப்படித் தங்களுக்குள் இழுத்துக் கொண்டார்கள் என்பதைப் பார்த்த அனுபவம் எனக்கு இருந்ததால் நான் எச்சரிக்கையாக இருந்தேன்.

இந்த இயக்கத்தில் இருக்கும் சில இளைஞர்களுக்கும் அந்தப் பின்னணி இருந்ததை நான் அறிந்திருந்தேன். எனவே, என்ன மாதிரியான முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன; என்ன குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்க விரும்பினேன்.

அவர்கள் ‘சப் யாத் ரக்கா ஜெயகா’ (எல்லாமே நினைவில் கொள்ளப்படும்) என்று முழக்கமிட்டதைக் கேட்டபோதுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. அது மிகவும் எளிமையான, அதே சமயம் ஆழமான வரிகள். நாம் அனைவரும் மூழ்கியிருக்கும் இந்த மோசமான இந்துத்துவ தேசியவாத அரசியலை அவர்கள் நேரடியாகவே கேள்வி கேட்டார்கள். அது எனக்கு நம்பிக்கையளித்தது, அதன்பிறகே இங்கு வரத் தீர்மானித்தேன்.

எல்லாமே ஒரு பகடியிலிருந்து தொடங்கியது என்பதுதான் இதை மேலும் நம்ப முடியாததாக மாற்றுகிறது. சமூக வலைதளங்களில் சன்கிளாஸ் அணிந்த கரப்பான் பூச்சியின் AI உருவப் படத்துடன் தொடங்கிய ஒரு கிண்டல் பதிவுதானே இது?

ஆமாம். இந்த விவாதங்களில் எங்கோ ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டிருந்த அல்லது முதன்மை ஊடகங்களால் ஒடுக்கப்பட்டு, வில்லன்களாகச் சித்தரிக்கப்பட்ட நம்மைப் போன்ற அனைவருக்கும் இது புதிய ஒன்றாக இருந்தது. இது ஒருங்கிணைக்கப்பட்ட விதமும் புதியது. இதிலிருந்து மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

அவர்கள் நமக்கு ஒரு பெரிய கொடையை அளித்திருக்கிறார்கள். இனி இது என்னவாக மாறும் என்று தெரியாது; ஆனால் அது இலக்கு வைத்ததை விட அதிகமாகவே சாதித்துவிட்டது. கல்வி அமைச்சரின் ராஜினாமா என்பது அவர்களின் அதிகாரப்பூர்வக் கோரிக்கையாக இருந்தது, அதை அவர்கள் வென்றுவிட்டார்கள்.

நமக்குத் தெரிந்தபடி, புதிதாகப் பொறுப்பேற்ற கல்வி அமைச்சரின் வீடியோ ஒன்றை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவருக்கு ‘நீங்கள்தான் புதிய கல்வி அமைச்சர்’ என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இப்படித்தான் அவர்கள் இயங்குகிறார்கள். ஒரு பெரிய சாக்கடை மலையின் மீது அமர்ந்திருந்த ஒரு சிறிய பொம்மை தட்டி விடப்பட்டு, வேறொரு பொம்மை அங்கே வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சாக்கடை மலை அப்படியேதான் இருக்கிறது.

கல்வித்துறையை மட்டுமே எடுத்துக்கொண்டாலும் தனியார் மயமாக்கல், வினாத்தாள் கசிவுகள்… நீட் என்பது உயர் மட்டத் தேர்வுதான், ஆனால் கல்வியைத் தனியார்மயமாக்குவதால் ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்களும் தலித் சமூகத்தினரும் மெல்ல மெல்ல வெளியில் தள்ளப்படுகிறார்கள். பாடத்திட்டம் முழுவதுமே ஏதோ ஒரு முட்டாள்தனமான அமைப்பாக மாற்றப்பட்டுவிட்டது. அறிவில்லாத ஒரு தலைமுறையை உருவாக்க நினைக்கிறார்கள், ஆனால் அது சாத்தியப்படவில்லை என்பதைத்தான் இந்த இளம் தலைமுறை தங்களின் கூர்மையான பகடிகளாலும் நகைச்சுவையாலும் ஆற்றலாலும் நிரூபித்துள்ளது.

கல்வி அமைப்பிலேயே இன்னும் தீர்க்கப்படாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ராஜினாமா செய்த அமைச்சருக்கு பா.ஜ.க. புகழாரம் சூட்டுவதைப் பாருங்கள். ஏதோ அவர் மாணவர்களுக்காகத் தன்னைத் தியாகம் செய்து தியாகி ஆகிவிட்டது போலப் பேசுகிறார்களே தவிர, அவர் மானபங்கப்பட்டுப் பதவி விலகக் கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், இரண்டு பக்கமும் ஆட்டம் இப்போதுதான் தொடங்குகிறது என்று நினைக்கிறேன்.

ஊடகங்கள், திரைப்படங்கள், ஏன் பாடப்புத்தகங்கள் வரை எங்கும் பிரச்சாரங்களையே நுகர்ந்து வளர்ந்த ஒரு தலைமுறையால், இவற்றையெல்லாம் தாண்டி உண்மையை எப்படிப் பார்க்க முடிகிறது?

முதலாவதாக, அந்தப் பிரச்சாரங்கள் நுட்பமானவை அல்ல. அது மிகவும் மட்டமானதாக இருப்பதால், சாதாரண அறிவு உள்ள ஒருவரால் கூட அதன்பின்னுள்ள உண்மையைப் பார்க்க முடியும். இளைஞர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது என்று பலர் நினைத்தார்கள், ஆனால் அவர்களால் முடிந்தது.

இன்னொன்று, பிரச்சாரங்களுக்கு ஒரு காலாவதி தேதி உண்டு. டெல்லியில் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்படும்போது மக்கள் சொல்வதையும், மறுபுறம் நிஜமான வாழ்க்கையின் நடைமுறைச் சவால்களையும் அவர்கள் பார்க்கிறார்கள்.

மோடியின் பக்தர்கள் கூடத் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டு போவதைப் பார்க்கிறார்கள். 5 ஆண்டுகள் மருத்துவம் அல்லது பொறியியல் படித்து முடித்த பிறகும் வேலைகள் இல்லை. அவர்களின் எதிர்காலம் என்ன?

ஆதிவாசிகள் நிலங்களில் இருந்து விரட்டப்படுவதையும், மக்கள் இடம்பெயர்வதையும் எங்களைப் போன்ற சிலர் எழுதி வருகிறோம். இப்போது அந்தப் பாதிப்பு நடுத்தர வர்க்கத்தின் கதவை வந்து தட்டிவிட்டது. தொழிலதிபர்களை எடுத்துக்கொண்டால் கூட அதானி, அம்பானி மட்டுமே முக்கியம், மற்ற அனைவரும் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்ற நிலை வந்துவிட்டது.

ஒவ்வொரு மட்டத்திலும் மக்கள் இதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். விவசாயிகள் போராட்டத்தில் யாரோ சொன்ன நினைவு ‘விவசாயியின் தட்டில் என்று உணவு இல்லையோ, அன்றுதான் அனைவருக்கும் உண்மை புரியும்’ அது வெறும் உவமை அல்ல, அதுதான் நிஜம்.

அமைப்பின் ஒவ்வொரு அங்கத்திலும் அழுகல் நிறைந்திருக்கிறது. புள்ளிவிவரங்கள் எல்லாமே பொய்கள். அவர்கள் தங்களின் சொந்தப் பொய்களையும் பிரச்சாரங்களையுமே நம்பத் தொடங்கிவிட்டார்கள். என்னைப் பொறுத்தவரை, தனக்கு எதிராக என்ன பேசப்படுகிறது என்பது மோடிக்குத் தெரியுமா, அல்லது அதை அவரிடமிருந்து மறைக்கிறார்களா?

எது மோசமானது. பிரதமராக இருக்கும் உங்களை அனைவரும் எள்ளி நகையாடுவது உங்களுக்குத் தெரியாமல் இருப்பதா, அல்லது தெரிந்துமே அமைதியாக இருப்பதா? எனக்குத் தெரியவில்லை.

இந்த இயக்கத்தின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், 2002 முதல் கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக மிகவும் கவனமாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பத்தை, ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூடச் சந்திக்காத ஒரு நபரை, டெலிபிராம்ப்டரையோ அல்லது கையில் உள்ள குறிப்புச் சீட்டையோ பார்த்துப் பேசிவிட்டு ‘விஷ்வகுரு’ என்றும் ‘விஷ்ணுவின் அவதாரம்’ என்றும் தங்களை அழைத்துக் கொள்ளும் ஒருவரை, இந்த இளைஞர்கள் வெறும் இரண்டு வாரங்களில் நிர்வாணப்படுத்தி இருப்பதுதான்.

மனித வரலாற்றிலேயே, ஒரு நாட்டின் தலைவரை இந்த அளவிற்கு எள்ளி நகையாடிய வேறு எந்தச் சம்பவமும் இருந்திருக்காது என்று நினைக்கிறேன். இதற்குப் பிறகு அவர் எப்படி வெளியில் வந்து மீண்டும் அதே பழைய கருத்துகளைப் பேசப் போகிறார்? ஏனெனில், அவரின் பழைய உரைகளைக் கூடத் தோண்டி எடுத்து இளைஞர்கள் கேலி செய்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம், அது முந்தைய தலைமுறையினரையும் முட்டாள்கள் போலக் காட்டுகிறது. ‘இதைத்தானா நீங்கள் இத்தனை காலம் நம்பி ஏமாந்தீர்கள்? உங்கள் மூளை சரியாகத்தானே இருக்கிறது?’ என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் என்னைச் கேட்டால், ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதை விட இது மிகப்பெரிய விஷயம்.

சாதாரண அறிவு கூட இல்லாத, நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவரைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பொய்களின் சுவரைத் தகர்த்தெறிந்து இருக்கிறார்கள்.

மோடி இப்போது இளைஞர்களுடன் தொடர்புகொள்ள முயற்சிக்கிறார். அவருடைய இன்ஸ்டாகிராம் வீடியோக்களையும் ரீல்ஸ்களையும் பார்த்திருப்பீர்கள்?

அது வேடிக்கையாக இருந்தது மட்டுமல்லாமல், அதற்கு எத்தனை கோடிக் பார்வைகள் கிடைத்தன என்று உலக சாதனை பேசத் தொடங்கினார்கள். ‘ஹேட்-வாட்சிங்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மிகச் சிறிய கேமராவை வைத்துக்கொண்டு அவர்களுக்குச் சூழலின் தீவிரமே புரியவில்லை.

எனக்குப் பிடித்த வாசிலி குரோஸ்மேன் என்ற ரஷ்ய எழுத்தாளர் ‘ஸ்டாலின்கிராட்’ என்ற நாவலில் எழுதியிருப்பார்: ரஷ்ய எல்லைக்கு அனுப்பப்படும் ஜெர்மன் தளபதி ஒருவன், ரஷ்யா மீது படையெடுப்பது ஜெர்மனிக்கே அழிவாக முடியும் என்பதை உணர்வான். இதை ஹிட்லரிடம் சொல்ல பெர்லின் வருவான். ஆனால் ஹிட்லரைச் சந்திக்கும் போது, அவரின் பிம்பத்தைக் கண்டு அஞ்சி, அந்தச் கெட்ட செய்தியைச் சொல்லாமலே திரும்பி விடுவான். பிறகு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும்.

இங்கேயும் அதேபோலத்தான் நடக்கிறது. உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் சூழல் மாறிவிட்டது என்பதை இந்த மனிதரிடம் சொல்ல யாருமே இல்லையா?

ஆஸ்திரேலியாவிலும் இந்தோனேசியாவிலும் மக்கள் சிரிக்கிறார்கள். பிரதமர் உங்களை ஒரு குழியில் தள்ளிவிட்டார்; நீங்கள் இந்தியாவை அவமானப்படுத்துகிறீர்கள், அதுமட்டுமல்லாமல் அனைத்து ஒப்பந்தங்கள் மூலம் விவசாயிகளையும் வஞ்சித்து விட்டீர்கள்.

இந்த இளைஞர்களின் போராட்டம் எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்யாமல் போயிருக்கலாம்; ஆனால் இந்த அமைப்பின் உச்சியில் இருந்தவரைத் தட்டித் தூக்கியதே நாட்டிற்குச் செய்த மிகப்பெரிய சேவைதான்.

ஜந்தர் மந்தரில் நாம் பார்த்த இந்தப் போராட்டத்தில் கோபத்தை விட வேறு ஏதோ ஒன்று பிரதான உணர்வாக இருந்தது அல்லவா?

கோபத்திற்கும் அரசியல் பகடிக்கும் இடையே பெரிய இடைவெளி இல்லை. பகடி என்பது அரசியலின் அதிநுட்பமான வடிவம். நிச்சயமாக அங்கே கோபம் இருந்தது, ஆனால் அது சிரிப்பாகவும், அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளாகவும் வெளிப்பட்டது. அதைப் பார்த்து நாங்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே இருந்தோம். சிரித்துச் சிரித்தே என் கன்னங்கள் வலித்தன.

நாம் மனதில் நினைத்ததை, உரக்கச் சொல்லத் தயங்கியதை அவர்கள் பகிரங்கமாகச் சொன்னார்கள். தனிநபராகச் சொல்ல முடியாததை, ஒரு கூட்டமாகச் சேரும்போது யாரால் தடுக்க முடியும்? இருப்பினும், எனக்கு அச்சமாகவும் இருக்கிறது.

இங்கிருந்த முஸ்லிம்களைக் காவல் துறை தனியாகக் குறிவைத்துச் கைது செய்வதாகக் கேள்விப்படுகிறேன். மக்களுக்கு உணவு வழங்கிய முகமது ஜூனைத் என்பவரின் குடும்பத்தைக் கைது செய்திருக்கிறார்கள். அதேபோல பீகாரிலும் அதிகளவில் கைதுகள் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். இது மிகவும் பழிவாங்கும் நடவடிக்கை.

பிரதான் ராஜினாமா செய்தபோது, அரசு அவருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியதே தவிர, இந்த தேர்வு முறைகேடுகளுக்காக யாருமே மன்னிப்புக் கேட்கவில்லை, பொறுப்பேற்கவும் இல்லை. அதனால் விளையாட்டு இன்னும் முடியவில்லை.

எதிர்க்கட்சிகளும் இந்த இளைஞர்கள் செய்த சாதனையைப் பாராட்டும் தாராள மனப்பான்மையைக் காட்டவில்லை. வெறும் மேலோட்டமான அங்கீகாரத்தையே தருகின்றன.

அமைப்பைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி அமைத்துவிட்டோம் என்ற மமதையிலிருந்தே அவர்களின் இந்த ஆணவம் வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் ஊடகம் என்பது உண்மையான ஊடகமே அல்ல; அது பாசிச தேசியவாதக் கருத்துகளைப் பரப்புவதையே வேலையாகக் கொண்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரையில், இந்தியா மெல்ல மெல்ல காஷ்மீரைப் போல மாறும் என்று எழுதியிருந்தேன். ஸ்ரீநகரில் பயன்படுத்தப்பட்ட பெல்லட் துப்பாக்கிகள் இப்போது இங்கேயும் வந்துவிட்டன. அவர்கள் இயல்புநிலையைத் திரும்பக் கொண்டுவர விரும்புவதாகக் கூறுகிறார்கள்.

காஷ்மீரில் எப்போதுமே இயல்புநிலை திரும்பிவிட்டது என்று அவர்களாகவே அறிவித்துக் கொள்வார்கள். அதன் ஒரு பகுதியாக, சுவர்களில் இருந்த போராட்டச் சித்திரங்கள் அனைத்தையும் ஒரே நாளில் அழித்துச் சாயம் பூசிவிட்டார்கள்.

குருதித் கறைகளை அகற்றுவதும், சுவர்களுக்குச் சாயம் பூசுவதும் அவர்களுக்கு ஒரு நொடிப் பொழுது வேலை. ஆனால், அந்த முழக்கங்கள் இன்னமும் காற்றில் எதிரொலிப்பதைக் கேட்க முடிகிறது அல்லவா?

74 வயதான பிரதமருக்கும் இளைஞர்களுக்கும் இடையே ஒரு இடைவெளி இருப்பதாகப் பேசப்படுகிறதே? இது வயதைப் பற்றிய விஷயம் அல்ல. சுதந்திரத்திற்காக ஏங்கும் இளைஞர்களின் உணர்வு, அடக்குமுறை ஆட்சியோடு மோதுகிறது. அந்த ஆட்சி சுதந்திரத்தைப் பறித்தது மட்டுமின்றி பொருளாதார செழிப்பையும் தரவில்லை. ‘பழைய நாட்களை மீட்டுத் தாருங்கள்’ என்ற முழக்கங்களைச் சுவர்களில் பார்க்க முடிந்தது.

தீவிரமான அரசியல் வேலைகள் நடக்காவிட்டால் இந்த ஆற்றல் வீணாகிவிடும் என்று உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமரின் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்திப் போலிஸாரால் இழுத்துச் செல்லப்பட்டார். எதிர்க்கட்சிகளால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசுக்குச் சவால் விடுக்க முடியுமா?

எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. ஏனெனில், பிரிந்து நிற்பதை விட அதிக ஒற்றுமையைக் காட்டியிருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டும், தங்களுக்கு முன்னால் இருக்கும் ஆபத்தைப் புரிந்துகொள்ளாமலும் இருக்கின்றன.

ஆனால் கடந்த சில நாட்களில் இங்கு ஏதோ ஒரு அற்புதம் நடந்துள்ளது. எந்தவொரு தேர்தலாலும் செய்ய முடியாத ஒன்றை இந்த இளைஞர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள்.

சரியாகச் சிந்திக்கத் தெரியாத ஒரு நபர், இத்தனை காலம் இவ்வளவு மக்களை ஏமாற்ற முடிந்தது ஒரு விந்தைதான். விவசாயிகளின் போராட்டத்தையோ, மணிப்பூர் அல்லது காஷ்மீரையோ எடுத்துக்கொண்டால் துப்பாக்கிச் சூடு நடத்த தயங்காத இந்த அரசு, இங்கு அதைச் செய்யவில்லை. ஏனென்றால், இவர்கள் அவர்களின் சொந்த வாக்காளர்களின் பிள்ளைகள்.

இந்த இளைஞர்களின் எழுச்சிக்கு நடுவிலும், மிகவும் புத்திசாலியான உமர் காலித், சர்ஜீல் இமாம் போன்ற இளைஞர்கள் ஐந்து ஆண்டுகளாக விசாரணையின்றிச் சிறையில் வாடுகிறார்கள் என்ற சோகம் மனதிற்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் கூட ‘முஸ்லிம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தப் பயந்து ‘சிறுபான்மையினர்’ என்றே குறிப்பிடுகின்றன.

மக்கள் என்னிடம் ‘உனக்குக் கோபம் இருக்கிறதா?’ என்று கேட்கிறார்கள். ஆமாம், எனக்குக் கடுமையாகக் கோபம் இருக்கிறது. நீண்ட காலமாகவே இந்தக் கோபம் இருக்கிறது. ஆனால் இந்த மாணவர்களைப் போல நானும் கோபத்தோடு சிரிக்கிறேன்.

கடந்த பத்தாண்டுகளில் ஒரு சிறு நகைச்சுவையைப் பகிர்ந்ததற்காகவே பல டஜன் கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் இப்போது எங்கும் நகைச்சுவை மட்டுமே நிறைந்திருக்கிறது. அதைத்தான் நான் மிகவும் நேசித்தேன்.

The Wire இதழில் நான் எழுதிய கட்டுரையில், ‘பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியனாக இருப்பதைக் குறித்துப் பெருமைப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தேன். பெரும்பாலான நேரங்களில் இங்கு நடப்பவற்றைக் கண்டு வெட்கப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு, இந்த மாற்றம் நிம்மதியைத் தருகிறது. என் ஆயுள் காலத்தில் இதைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. இந்த இளைஞர்களுக்கு என் நன்றிகள்.

ஒரு கற்பனையான எழுத்தாளரால் கூட 36 நாட்கள் நடந்த இந்தப் போராட்டத்தைப் போன்றதொரு கதையை எழுத முடியாது. இதைக் கொண்டாட முடியாதவர்களைப் பார்க்கும்போது எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. மகிழ்ச்சி நிரந்தரமில்லைதான், ஆனால் இது நம் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அடி. வருங்காலத்தில் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

Leave a comment