கல்விப்புலத்துக்கு அப்பால் வரலாற்றை எடுத்துச் சென்ற சுமித் சர்க்கார் – ராமச்சந்திர குஹா

sankara rama subramanian

06 Sep 2026 — 1 min read

கல்விப்புலத்துக்கு அப்பால் வரலாற்றை எடுத்துச் சென்ற சுமித் சர்க்கார் -	ராமச்சந்திர குஹா

தமிழில் ஷங்கர்ராமசுப்ரமணியன்

டெல்லி பல்கலைக் கழகத்தில் இன்னும் அருமையான அறிஞர்களும் ஆசிரியர்களும் இருந்தாலும் அதிகாரத்துவத்தின் ஆக்கிரமிப்பும், அறிவார்த்தத்துக்கு எதிரான காவிமயமாதல் போக்குகளும் இப்பல்கலைக்கழகத்தின் கல்வித்துவப் புகழைக் கடுமையாக சேதமாக்கியுள்ளதும் உண்மை.

சுமித் சர்க்கார் தனது அறிவார்த்தமான பயணம் குறித்து, முன்பு எழுதிய கட்டுரை ஒன்றில், “இதுவரையில் வரலாற்றாய்வாளர்களான நாம் எழுத விரும்பியதை எழுதினோம். அதற்கு வெளியிலிருந்து எந்தச் செயல்திட்டமும் நம்மிடம் இருந்ததில்லை. ஆனால் அந்தச் சௌகரியத்தை வேகமாக இழந்து வருகிறோம்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சுமித் சர்க்கார் தனது நெடிய, படைப்பூக்கமிக்க வாழ்க்கையை வாழ்ந்தவர். கொல்கத்தாவில் 1939ல் பிறந்து, டெல்லியில் இந்த மாதம் இறந்துபோன சர்க்கார் தனது வாழ்க்கையில் பிறரால் திணிக்கப்பட்ட மூன்று செயல்திட்டங்களுடன் மோதலை நடத்த வேண்டியிருந்தது.

  1. வைதீக மார்க்சியத்தின் வழியிலானது. அது வரலாற்றைக் குறுகிய பொருளாதாரக் கண்ணாடி வழியாகப் பார்த்தது. சர்க்கார் பிறந்த ஊரில் மார்க்சியம் மிகவும் செல்வாக்குச் செலுத்தியது. அவரது தந்தை வரலாற்றியலாளராகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் இருந்தார்.
  2. இறந்தகாலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவங்களைக் கண்டுகொள்ளாமல், புத்தகங்கள் மற்றும் சொல்லாடல்களின் மீது கவனம் செலுத்தி, வரலாற்றைச் சிதறலானதாகவும் பண்பாட்டுக்கு நெருக்கமாகவும் பார்த்த பின் நவீனத்துவம் மற்றும் பின் காலனியப் பார்வைகளோடு சேர்ந்த அணுகுமுறை.
  3. சங் பரிவாரங்களின் மதப் பெரும்பான்மை வாதம். இந்துக்களைப் புனிதப்படுத்தி முஸ்லிம்களை வில்லன்களாக்கிய பார்வை. 1990களுக்குப் பிறகு, கருத்தியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அந்தப் பார்வைகள் மேலாதிக்கத்தையும் பெற்றன.

சுமித் சர்க்கார் பின் நவீனத்துவ, பின் காலனியத்துவச் சிந்தனைகள் தரும் மயக்கத்துக்குள் ஆட்படுவதைத் தவிர்த்தார். விளிம்புநிலை ஆய்வுகளைச் செய்த அவரது சகாக்களால் அவர் தாக்கமுறவில்லை.

ஏனெனில் பொருளாதாரம், சமூக மோதல் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகள் அனுபவிக்கும் பற்றாக்குறை மீது கவனம் செலுத்துவதைத் தவிர்க்கும் இந்துத்துவத்தை முழுமையாகவே அவர் புறக்கணித்தார். நிகழ்காலத்தில் உள்ள ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மைக்கு, இறந்த காலத்தைத் தவறாகப் புரிந்துகொள்வது எத்தனை அபாயமானது என்று அவருக்குத் தெரிந்திருந்தது.

ராமச்சந்திர குஹா

மார்க்சியத்துடனான அவரது உறவோ மிகவும் சிக்கலானது. மிக ஆரம்பகட்டத்திலேயே அதன் பொருளாதார அடிப்படையிலான நிர்ணயவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. வர்க்கத்தன்மை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த்தோ, அதேபோலத்தான் சமத்துவமின்மைக் கொண்டுள்ள சாதியும், பாலினமும் முக்கியமான அச்சுகளாக இந்தியாவில் இருக்கின்றன என்பதை அவர் அங்கீகரித்திருந்தார்.

மார்க்சிய பதங்களையும் அவர் தனது எழுத்தில் பயன்படுத்தியதில்லை. எனக்குத் தெரிந்தவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் அவர் சேரவில்லை. இருப்பினும் முழுமையாக தனது இளமைக்கால மார்க்சிய தாக்கத்தைப் புறம்தள்ளவுமில்லை.

விடுதலைக்கான தத்துவமாக மார்க்சியத்தைத் தொடர்ந்து பார்த்தார். சோவியத் யூனியன் போன்ற நாடுகளில் மார்க்சியத்தின் பேரால் ஏற்பட்ட திரிபுகளைப் பார்த்தாலும் சமத்துவம், சம நீதி என்ற அடிப்படையில் மார்க்சியத்தின் பக்கமே நின்றார்.

வங்காளத்தில் சுதேதி இயக்கம் (The Swadeshi Movement in Bengal) என்ற பெயரில் சுமித் சர்க்கார் எழுதிய முதல் புத்தகம் 1973ம் ஆண்டு வெளியானது. ஆங்கிலம் மற்றும் வங்காளத்திலிருந்து முதன்மையான தரவுகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட செழுமையான அரசியல் மற்றும் சமூக வரலாற்று நூல் அது.

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மோதல்களும் பதற்றங்களும் மாகாணத்தைப் பிரிப்பதையொட்டி எழுந்த பின்னணியில் சுதேசி இயக்கத்தின் எழுச்சியைக் குறித்து எழுதப்பட்ட படைப்பு இது.

அதன் மறுபக்கத்தைச் சொல்லும்விதமாக எழுதப்பட்ட ஆழமான பிராந்திய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதியாக, Writing Social History நூல் 1997ம் ஆண்டு வெளியானது. பத்ரலோக் (படித்த உயர்வர்க்க அறிவுஜீவிகள்) ஆளுமைகளான ராமகிருஷ்ணர் மற்றும் வித்யாசாகர், கொல்கத்தாவின் சூழலைச் சுற்றி எழுதப்பட்டவை.

அரசியல் கருத்தியல்களிலூனாடகச் செயல்படும் சாதி மற்றும் வரலாற்றெழுத்து மரபுகள் பற்றி ஆசிரியர் பாராட்டும், புறந்தள்ளும் விஷயங்கள் குறித்த கட்டுரைகள் இந்த நூலில் இருந்தன.

இந்த இரண்டு புத்தகங்களும் திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டிய அளவுக்கு மதிப்பானவை. ஆனால், சுமித் சர்க்காரின் மிக முக்கியமான நூலென்றால் அது சந்தேகத்துக்கிடமின்றி Modern India: 1885-1947 புத்தகமே.

காலனிய ஆட்சி குறித்தும், வெகுமக்கள் தேசிய எழுச்சி குறித்ததுமான தீர்மானமான தரவுகளைக் கொண்ட நூல் இது.

இந்த நூலின் முன்னுரையில் சர்க்கார் இப்படிச் சொல்கிறார். “அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார வரலாறு குறித்து எழுதப்பட்ட பல தனித்தனி நூல்களிலுள்ள தகவல்களையும் தரவுகளையும் பிரமாண்டமாக இணைகிறது. தேசியவாத அடிப்படையிலான வரலாற்றெழுத்துக்கு மாறாகக் கீழேயிருந்து வரலாற்றை எழுதும் சாத்தியங்களைப் பார்க்கும் முயற்சி இது”.

ஆசிரியர் தன் முன்னுரையில் உரைப்பது போல, இரண்டு லட்சியங்களுமே அருமையாக சாதிக்கப்பட்ட நூல் இது. ஒட்டுமொத்த இந்தியாவின் அசலான வரலாறு அழகிய உதாரணங்களோடு இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரதான தேசியக் கட்சி முன்னெடுத்த இயக்கங்களுக்கு ஒப்பாக பழங்குடி மக்கள், குடியானவர்கள் முன்னெடுத்த இயக்கங்களுக்கும் சம அளவு கவனம் தரப்பட்டுள்ளது. இந்து – முஸ்லிம்களுக்கிடையில் வந்த முரண்பாடு, இந்தியச் சுதந்திரம் மற்றும் பிரிவினை சார்ந்த தகவல்கள் முழுமையாக இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன. அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த முழுமையான நூலாக, எழுதப்பட்டு 43 ஆண்டுகளுக்குப் பிறகும் நூலாக இதுவே திகழ்கிறது.

நவீனகால இந்தியாவில் சாதிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் சர்க்காரின் பழமைவாதப் போக்குக்கு எதிரான மார்க்சியம் தற்போது எப்படியாகிவிட்டது என்பதைக் காண்பிக்கிறது. காந்தி என்ற வரலாற்று ஆளுமை குறித்த அவரது முந்தைய நம்பிக்கைகளிலிருந்து அவர் விலகிவந்திருப்பதையும் காட்டுவதாக உள்ளது.

மார்க்சிய கருத்தியலாளர்களான ஆர்.பி.தத் மற்றும் எம்.என்.ராய் ஆகியோர், மகாத்மாவின் அகிம்சையை, புரட்சிகர நடவடிக்கையிலிருந்து மக்கள்திரளை விலக்கும் தந்திரமான கருவியாகப் பார்த்தனர். வர்க்கப் போராட்டங்களிலிருந்து திசைதிருப்பும் முயற்சியாகக் காந்தியின் சமூக நல்லிணக்க நடவடிக்கைகளை அணுகினர்.

காந்தியின் அரிசயிலில் இருக்கும் ஆழமான அற அம்சத்தைச் சர்க்கார் புரிந்துகொண்டவர். ஆழமாக உணர்ந்து, சோதனை செய்து பார்த்த வெற்றிகரமான வடிவமாக காந்தியின் அகிம்சையையும் சத்தியாகிரக வழிமுறைகளையும் சர்க்கார் பார்த்தார். அத்துடன் காந்தியின் அணுகுமுறை முன்னுதாரணமில்லாதது என்றும் நினைத்தார். காந்தியின் பார்வையில், சத்தியத்துக்கான தேடல் என்பதே மனித வாழ்க்கைக்கான லட்சியம் என்றும் யாரும் அந்த முழுமையான சத்தியத்தை அடையமுடியாதென்பதிலும் நிச்சயமாக இருந்தார். ஒருவர் தன்னுடைய லட்சியத்தை அடைவதற்காக வன்முறையைப் பயன்படுத்துவதென்பது பாவகரமானது என்றும் நினைத்தார்.

மகாத்மாவின் சிறந்த தருணம் என்று தனது புத்தகத்தில் தலைப்பிட்ட அத்தியாயத்தில், 1920கள் காலகட்டத்தைப் பற்றிப் பேசுகிறார். நவோகாளியில் காந்தி, சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நிகழ்த்திய யாத்திரையையும், இந்து-முஸ்லிம் மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து நடத்திய உண்ணாவிரதங்களையும் அவற்றை பின்னர் கல்கத்தாவிலும் டெல்லியிலும் தொடர்ந்ததையும் பற்றி எழுதுகிறார்.

காந்தி வாழ்க்கையின் கடைசி மாதங்களில்தான் எப்போதையும்விட அதிகமாக அவரது தனித்துவமான பண்புகளும், உண்மையான மகத்துவமும் வெளியாகின என்கிறார் சர்க்கார்.

சிறந்த எல்லா வரலாற்றாசிரியர்களையும் போலவே தனது குறிப்புகளுக்காக அவர் ஆவணங்களை எடுத்துக்கொண்டார். முதன்மையான தரவுகள் கிடைக்கும்போது, தான் நம்பியிருந்த கருத்துகளை அப்படியே தூரப்போடுகிறார்.

ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்ட இந்திய வெகுஜனப் போராட்டங்கள் குறித்த ஆய்வுகளையும், இந்தியாவுக்குள் எழுதப்பட்ட பிராந்திய வரலாற்று ஆய்வுகளையும் ஒப்பிடும் பார்வையை அவர் வெளிப்படையாக பின்பற்றியவர். உரைநடையின் தனித்த பாணியையுடையவர். அதனால்தான் அவரது புலமை கல்வித்துவ ஆய்வு தாண்டி அப்பாலும் படிக்கப்பட்டது.

இந்தப் பண்புகள் சேர்ந்து ஒரு ஆசிரியர் இருப்பது அரிதானது. அதனால்தான் சுமித் சர்க்கார் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாற்றாசிரியராக உள்ளார்.

உற்சாகத்தைத் தூண்டும் ஆசிரியர்!

அத்துடன் மாணவர்களிடம் உற்சாகத்தைத் தூண்டும் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். புகழ்பெற்ற ஊடகவியலாளர் ரவீஷ்குமார் அவரது மாணவர். சுமித் சர்க்கார் சொல்லிக்கொடுக்கும் முறை காந்திய வழியிலானதென்றும் ஜனநாயகப்பூர்வமானது என்றும் குறிப்பிடுகிறார். தனது மாணவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதைக் குறிப்பிட்டவர் சர்க்கார்.

தனது வாழ்க்கைத் துணைவரான பெண்ணிய வரலாற்றாசிரியர் தனிகா சர்க்காரின் தாக்கத்தையும் பிற்காலப் படைப்புகளில் பெற்றுக்கொண்டவர்.

பழமைவாதச் சாய்வில்லாத மார்க்சியரும், கட்சியில் சேராதவருமான இ.பி.தாம்ஸனை சுமித் சர்க்கார் மிகவும் பாராட்டினார். தாம்சனின் நூல்கள்தான் அரசியல்ரீதியாகவும் வரலாற்று அடிப்படையிலும் பல ஆண்டுகளாக இன்றுவரை தனக்கு உந்துதலைத் தருவதாகக் கூறியிருக்கிறார்.

இ.பி.தாம்சன் 1963 செப்டம்பரில் மறைந்தபோது, சர்க்கார் அவருக்காக நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் மிகவும் நெகிழ்ந்து பேசினார். அந்தக் கூட்டத்தில் பார்த்தசாரதி குப்தா மற்றும் நீலாத்ரி பட்டாச்சார்யா, இலக்கிய அறிஞர் ஹரீஷ் திரிவேதி எல்லோரும் பேசினார்கள். தாம்ஸனை நேசித்தவர்களின் அந்த நினைவு நிகழ்ச்சிக்கான எந்த ஆவணங்களும் நம்மிடம் இப்போது இல்லை.

இந்தியாவில் சமூக அறிவியல் மற்றும் மனிதநேயத் துறைகளில் திறனாளிகளை உருவாக்கும் மையமாக 1960கள் முதல் 2000 வரை ஆக்கியதில் அவருக்கும் முக்கியப் பங்கு உண்டு. நான் ஆய்வுசெய்த பல்கலைக்கழகமும் அதுவே. பொருளாதார நிபுணர்கள் சுக்மாய் சக்ரவர்த்தி, மிருணாள் தத்தா சவுத்ரி, சட்ட நிபுணர் லோகித சர்க்கார், இலக்கிய வரலாற்றாசிரியர் ஆர்.கே.தாஸ் குப்தா மற்றும் சமூகவியலாளர் ஆந்த்ரே பெட்டெய்ல் ஆகியோர் அங்கிருந்து உருவானவர்களே. அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை.

அவர்களது கூட்டுப் பங்களிப்பு டெல்லிப் பல்கலைக்கழகத்தைச் சிறப்பாக்கியது. அவர்கள் கொடுத்த பங்களிப்பு உரிய பலனை அவர்களுக்கு அந்த வளாகம் திரும்பியும் அளித்தது. இவர்கள் எல்லோரும் கல்கத்தாவிலேயே இருந்திருந்தால் இப்படியான நிபுணர்களாக அவர்கள் ஆகியிருக்கவே மாட்டார்கள்.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் பலவிதமான சமூக, பண்பாட்டுத் தன்மைகளோடு பரிச்சயம் கொள்ளும் அனுபவம் அவர்களுக்குக் கிடைத்தது.

டெல்லியில் உள்ள ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் மார்க்சியமே ஆதிக்கம் செலுத்தும் கருத்தியல் நீரோட்டமாக இருந்தது. ஆனால் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் வேறு வேறு சார்புகளைக் கொண்டவர்கள். மார்க்சியர்கள் அல்லாதவர்கள், மார்க்சியத்தை எதிர்ப்பவர்களும் இருந்தனர். அவர்களுக்குள் நடந்த உரையாடல்களும் விவாதங்களும் சர்க்காரைச் செழுமைப்படுத்தியிருக்க வேண்டும்.

வங்காள அறிஞர்களைப் பற்றி நான் சொல்வது எத்தனை உண்மையோ அதே போலவே தமிழ், மராட்டிய, கன்னட, ஒதிஷா, பீகார், பஞ்சாப் அறிஞர்களுக்கும் பொருந்தும். டெல்லிப் பல்கலைக்கழகத்தின் அனைத்திந்தியத் தன்மையும் அதன் மாணவர்களும் அதன் சிறப்பாக இருந்தனர்.

ஒற்றை வளாகத்துக்குள்ளேயே முதல்தரமான இளங்கலைக் கல்லூரிகளும் அறிவியல், மனிதநேயப் படிப்புகள், சட்டம், இசை போன்றவற்றுக்கும் உள்ளன.

டெல்லி பல்கலைக் கழகத்தில் இன்னும் அருமையான அறிஞர்களும் ஆசிரியர்களும் இருந்தாலும் அதிகாரத்துவத்தின் ஆக்கிரமிப்பும், அறிவார்த்தத்துக்கு எதிரான காவிமயமாதல் போக்குகளும் இப்பல்கலைக்கழகத்தின் கல்வித்துவப் புகழைக் கடுமையாக சேதமாக்கியுள்ளதும் உண்மை.

மேற்கு வங்கத்திலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் வந்து, டெல்லி பல்கலைக்கழகத்தை தென் இந்தியாவின் முன்னணி கல்வி நிலையமாக ஆக்கிய ஒரு காலகட்டத்தின் முடிவைச் சொல்வதாகச் சுமித் சர்க்காரின் மரணம் உள்ளது.

நன்றி, scroll.in

Leave a comment