
யமுனா ராஜேந்திரன்
05 Sep 2026 — 1 min read

அகில இந்திய மாணவர்கள் சங்கத்தின் (AISA) தேசியத் தலைவராக உள்ள நேஹா போரா, சமூகப் பிரச்சினைகளுக்காகக் களத்தில் இறங்கிப் போராடும் மாணவர்களில் மிகவும் முக்கியமானவர். சமீபத்தில், இந்தியாவின் முக்கியமான வரலாற்றுப் பக்கத்தில் இடம்பிடித்த சி.ஜே.பி.யின் போராட்டத்திலும் இவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆனால், அத்துடன் தன் போராட்டத்தை முடித்துக் கொள்ளவில்லை. இன்றும் மாணவர்களின் பிரச்சினை தொடங்கி, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் வரை என, அனைத்திற்கும் களத்துக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கிறார். செய்தியாளர் சந்திப்பு, மேடைப் பேச்சு என அனைத்திலும் கவனம் ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்காக நேஹா போரவுடன் சையத் இல்ஹாம் ஜாப்ரி நடத்திய நேர்காணலின் தமிழ் வடிவம் இதோ!
ஜார்க்கண்டில் உங்கள் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டக்காரர்கள் ஈடுபட்டதாகத் தகவல்கள் வந்தன. 2026 ஆகஸ்ட் 10ம் தேதி ஒரு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீங்கள் ஏன் ஆகஸ்ட் 7ம் தேதியே பேரணியை நடத்தினீர்கள்?
நாடு முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் முற்றிலும் பங்கேற்காமல் இருந்தன என்பது வேடிக்கையானது. ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது திடீரென தாங்கள் மாணவர் ஆதரவாளர்கள் என்று அவர்கள் கூறத் தொடங்கினர்.
நான் ராஞ்சிக்குச் சென்றபோது எனக்கு வரவேற்புக் கிடைத்தது. மக்கள் புன்னகைத்து என்னுடன் கைகுலுக்கினர். ஆர்.எஸ்.எஸ். ஆதரவு வட்டாரங்கள் பரப்ப முயலும் காணொளியை உற்று நோக்கினால், அதில் மேடையிலிருந்து கீழே இறங்குமாறு ஊடகத்தினரே கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதைக் காணலாம், நான் அல்ல.
ஆகஸ்ட் 7ம் தேதியைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 6 அல்லது 8ம் தேதிகளில் போராட்டம் நடத்தலாம் என்ற கருத்துகள் இருந்தன. நாங்கள் அதற்கும் வெகு காலத்திற்கு முன்பே போராட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தோம். ஜார்க்கண்ட் முழுவதும் மக்களைத் திரட்டும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம்.

ஜந்தர் மந்தர் போராட்டத்தின் பின் நீங்கள் மீண்டும் கரப்பான் பூச்சிகள் கட்சியுடன் (CJP) இணைந்து பணியாற்றுவீர்களா
கரப்பான் பூச்சிகள் கட்சியின் அமைப்புரீதியான புரிதல் வளர்ந்து வருகிறது. அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோமா என்பதற்கான என் பதில் இதுதான்: நிச்சயமாக அவர்கள் மக்களுக்காகப் பணியாற்றும் வரை நாங்கள் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம். மாணவர்களையும் இளைஞர்களையும் சார்ந்த விவகாரங்களிலேயே எங்கள் அரசியல் செயல்பாடுகள் கவனம் செலுத்துகின்றன.
ஜந்தர் மந்தர் போராட்டங்களைத் தலைவரற்ற இயக்கம் என்று அழைப்பதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா? அதனால் ஏதேனும் பாதகங்கள் உள்ளனவா?
நாங்கள் ஏதோ ஒரு கொள்கைக்காகவோ, ஒரு தலைவருக்காகவோ இங்கு வரவில்லை. இந்தக் கோரிக்கை எங்கள் மனதிற்கு நெருக்கமானதாக உண்மையானதாகத் தோன்றியதால்தான் இங்கு வந்துள்ளோம் என்று மக்கள் சொல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இப்படிச் சொல்வதே கூட ஒரு வகையான அரசியல்தான்.
ஒரு அரசியல் கட்சிக்காகவோ, தலைவருக்காகவோ அல்லாமல் மக்களுடன் துணை நிற்கவே வந்திருக்கிறோம் என்று சொல்வது மிகவும் அரசியல் சார்ந்த ஒரு விஷயம். அது மிக முக்கியமான அரசியல் வெளிப்பாடுகளில் ஒன்று.
இந்தியாவின் இளம் பெண்களுக்கு மன்னிப்பு தேவையில்லை. அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

உங்கள் விசுவாசம் மதம், சாதி, பிராந்தியம் போன்றவற்றால் பிளவுபடவில்லை. பொதுவான நோக்கங்களுக்காக நீங்கள் ஒன்றிணைந்துள்ளீர்கள். ஒரு கொள்கையைக் கொண்டிருப்பதும் அரசியலைக் கொண்டிருப்பதும் என்பது உலகில் உங்கள் இடத்தைத் தெரிந்துகொள்வதாகும். அது யாரையாவது பின்பற்றுவதோ, கேள்விக்கு இடமின்றி விசுவாசமாக இருப்பதோ அல்ல. எந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகிறோம் என்பதை அறிவதே அரசியல்.
இத்தகைய புரிதலில் உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால், போராட்டங்கள் முடிந்த பிறகு மக்கள் அதைத் தங்கள் மனதில் முழுமையாக உள்வாங்கிக்கொள்வதில்லை.
மக்கள் இதை ஒரு தனித்துவமான தருணமாகக் கருதுகிறார்கள். தாங்கள் அதனுடன் இணைந்திருந்த ஒரு தருணம். இது மீண்டும் ஒருபோதும் வராது என்று நினைக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் காணும் ஊழல் காரணமாக அரசியல என்பதை ஏதோ எதிர்மறையான விஷயமாகக் குழப்பிக்கொள்கிறார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்தது அரசியல்தான்.
ஜந்தர் மந்தர் போராட்டம் என்பது குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான போராட்டம், விவசாயிகள் போராட்டம் போன்ற முந்தைய இயக்கங்களின் ஒரு மேம்பட்ட வடிவமா அல்லது இவற்றினின்று வேறுபட்டதா?
நாம் ஒரு வெற்றிடத்தில் இயங்கவில்லை. அனைத்துப் போராட்டங்களுக்கும் ஒரு வரலாறு உண்டு. மக்கள் இயக்கங்கள் முந்தைய இயக்கங்களிலிருந்து படிப்பினைகளைப் பெறுகின்றன. 2019ம் ஆண்டில் மாணவர்கள் மக்கள் இயக்கங்களை வழிநடத்துவதை நாம் பார்த்திருக்காவிட்டால், நம்மில் பலர் ஒருபோதும் மாணவர் செயற்பாட்டாளர்களாக மாறியிருக்க மாட்டோம்.
குடியுரிமைக்கான போராட்டங்கள் ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை கற்பனை செய்து பார்க்க உதவின. விவசாயிகளின் இயக்கமும் மக்களின் போராட்டங்களை ஒன்றிணைத்தது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் முஸ்லிம் போராட்டங்கள் என்றும், விவசாயிகள் போராட்டங்கள் காலிஸ்தான் ஆதரவுப் போராட்டங்கள் என்றும், முத்திரை குத்தப்பட்டன. அந்த வகையில் மாணவர்கள் போராட்டம் வேறுபட்டிருந்து. இந்தப் போராட்டத்திலும் அரசினர் அதைச் செய்ய முயன்றார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பயங்கரவாதிகள் என்று அவர்கள் அழைத்தனர். தர்மேந்திர பிரதான் எங்களை பயங்கரவாதிகள் என்றும், நிதின் நபின் எங்களை வைரஸ்கள் என்றும் அழைத்தனர்.
ராஜினாமாவுக்குப் பிந்தைய தனது முதல் எதிர்வினையில் சிலர் ஜென்சி தலைமுறைப் போராட்டக்காரர்களைத் தவறாக வழிநடத்தினார்கள் என்று தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
முதலில் யாரும் வரப்போவதில்லை என்றார்கள். பிறகு அங்கே பாருங்கள் ஏராளமான முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்றார்கள். அடுத்து அவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் என்றார்கள். ஜார்ஜ் சோரோஸ் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கிறார் என்றும் கூறினார்கள். அவர்கள் பலவாறு முயன்றனர். இம்முறை அது பலனளிக்கவில்லை.
வேலையின்மைக்கு விடை இல்லை. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விடை இல்லை. கல்வித்தரச் சரிவுக்கும் விடை இல்லை. அதற்குப் பதிலாகக் கிடைப்பது என்ன? முத்திரைகள் குத்தப்படுகின்றன. அரசின் ஒடுக்குமுறை ஏவப்படுகிறது. ஒரே மாதிரியான பழைய உத்திகளைக் கண்டு மக்கள் தங்கள் நீண்டகாலக் கோபத்தை வெளிப்படுத்தினர். இம்முறை அவர்கள் வீடுகளுக்குள் அமைதியாக முடங்கிக்கிடக்கவோ, அச்சப்படவோ மறுத்துவிட்டனர்.

தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். உங்கள் அரசியல் இலட்சியம், தொலைநோக்குப் பார்வை எந்த அளவுக்கு விரிவானது?
எனது அரசியல் தொலைநோக்குப் பார்வையில் எனக்கு இலட்சியம் உண்டு. அது தேர்தல் சார்ந்த இலட்சியங்களுக்குள் மட்டும் அடங்கிவிடுவதில்லை. நான் சார்ந்திருக்கும் கட்சியான சிபிஐ-எம்எல்-லிபரேஷன் (CPI-ML-Liberation) களத்தில் எங்கள் போராட்டங்களை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழியாகத் தேர்தலைக் கருதினால் மட்டுமே நான் அதில் போட்டியிடுவேன். அதைத் தவிர வேறு வழியில்லை.
மாணவர் அரசியல் என்பது அரசியல் வாழ்விற்கான ஒரு பயிற்சி களம் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதேவேளையில் இடதுசாரிகள் தேர்தல் களத்தில் செல்வாக்கை இழந்து தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள வெறும் மாணவர் அரசியலை மட்டுமே சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?
அரசியலைப் பார்க்கும் விதத்தில் தனிநபர் மீதான அதீத ஈர்ப்பு அல்லது பிம்பமயமாக்கல் நிலவுகிறது. நாம் தொடர்ந்து கன்னையா குமாரைப் பற்றியே பேசுகிறோம்.
அதே மக்களுக்கு ஜவஹர்லால் நேரு யூனிவர்சிடி ஸ்டூடன்ட் யூனியன் (JNUSU) தலைவராக இருந்த சுசேதா தேவையும் தெரியும். அவர் இப்போது எங்கே இருக்கிறார்? அவர் சிபிஐ-எம்எல்-லிபரேசனில் ஒரு தொழிற்சங்கச் செயல்பாட்டாளராக இருக்கிறார். அதே மக்களுக்கு ஜவஹர்லால் நேரு யூனிவர்சிடி ஸ்டூடன்ட் யூனியன் நிர்வாகியாக இருந்து தற்போது சிபிஐ-எம்எல்-லிபரேசனின் பிரதிநிதியாக இருக்கும் சந்தீப் சௌராவ் பற்றியும் தெரியும் என்று நினைக்கிறேன்.
இங்கு கவனம் செலுத்துதல் என்பது ஒரு குறிப்பிட்ட தரப்பினரை மட்டும் சார்ந்ததாக இருக்கிறது. சந்தர்ப்பவாதிகளைப் பற்றிப் பேச விரும்பும் நீங்கள் தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புகளில் செயல்படும் மாணவர் செயல்பாட்டாளர்களைப் பற்றிப் பேசுவதில்லை. ஒருவித மயக்க நிலையும் இங்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது.
இது அறிவுஜீவிகளிடமிருந்தும் வருகிறது என்பதை நான் அறிவேன். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்கக்கூடிய ஒரு தூய தலைவரைக் கண்டடைய விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் யாரும் இல்லை. உண்மையில் அப்படி யாரும் இல்லை.
மக்கள் தங்கள் சொந்தப் பாதைகளைத் தேர்ந்தெடுப்பார்கள். மக்கள், மக்கள் இயக்கங்களை விட்டுவிட்டு முதலாளித்துவ ஆளும் கட்சியுடன் இணையலாம் அல்லது வெகுஜன இயக்கங்களைக் கைவிட்டு பாஜகவுடன் இணையலாம். அதே வேளையில், மக்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் இந்த மக்கள் இயக்கத்திற்காக அர்ப்பணிக்கவும் செய்வார்கள்.
நாங்கள் 1990ம் ஆண்டிலிருந்தே மாணவர் அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். பிறபடுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ஜேஎன்யூ (Jawaharlal Nehru University)வில் பின்தங்கிய நிலையைக் கருத்தில் கொள்ளும் புள்ளிகள்-கல்வி உதவித்தொகைகள் குறித்து யூனிவர்சிடி கிரான்ட்ஸ் கமிசனைக் கைப்பற்றுங்கள் (Ocxcupy University Grants Commision) போராட்டம், நிர்பயா விவகாரம, கட்டண உயர்வு எதிர்ப்பு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், பாஜக-ஆர்எஸ்எஸ் ரத யாத்திரை நடத்திய காலங்களிலும் கூட நாங்கள் முன்னணியில் இருந்தோம்.
கடந்த சில மாதங்களில் சிலர் ஆய்ஸா அமைப்பைக் கண்டறிந்துள்ளனர் என்பதற்காக நாங்கள் இப்போதுதான் எங்கள் பணியைத் தொடங்கியுள்ளோம் என்று அர்த்தமல்ல.
தேர்தல் அரசியலை நாங்கள் அமைப்பு மற்றும் மக்கள் இயக்கங்களை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழியாகவே கருதுகிறோம். இடதுசாரிகள் நாடாளுமன்றத்தை வழிநடத்தும் நாளைக் காணும் வரை நாங்கள் காத்திருக்கப் போவதில்லை. அதை உருவாக்குவதில் நாங்கள் தீவிரமாகப் பங்காற்றுவோம். அரசு நிர்வாகம் முறைப்படுத்தப்படும் களங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இதுவரை பிரதிநிதித்துவம் பெறாத புள்ளிவிவரங்களில் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத மக்கள், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதை நாங்கள் விரும்புகிறோம்.
ஆசாதி-விடுதலை என்ற முழக்கம் ஜேஎன்யூ, இடதுசாரி அரசியலோடு அடையாளப்படுத்தப்பட்டது. இதன் பயன்பாடு குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன? ஜேஎன்யூவின் அரசியல் கலாச்சாரம் மாறியுள்ளதா?
ஆசாதி என்பது முதன்மையாகப் பெண்களின் சுயாட்சி, சுதந்திரம் சார்ந்த ஒரு பெண்ணிய முழக்கமாகவே இருந்தது. பின்னர் அது பிற இயக்கங்களுக்கும் பரவியது. வலதுசாரி தரப்பினர் இம்முழக்கத்தின் மீது ஒருவித அவப்பெயரைச் சுமத்துவதற்காகப் பெருமளவு பணத்தைச் செலவிட்டுள்ளனர்.

மோடி, அமித்ஷாவிடமிருந்து விடுதலை. பாஜகவிடமிருந்து விடுதலை. தேர்வுத்தாள் கசிவிலிருந்து விடுதலை. ஊழலிலிருந்து விடுதலை போன்ற முழக்கங்களை எழுப்புவது தேசவிரோதச் செயல் அல்ல.
ஜேஎன்யூவிற்கு எதிராகத் திட்டமிட்ட பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டில் ஜேஎன்யூவை மூடுங்கள் என்ற பிரச்சாரத்தை அவர்கள் தொடங்கினர். மாணவர்கள் அல்லாதவர்கள் உள்ளே வந்து முழக்கங்களை எழுப்பினர். அதேவேளையில், வேறு சிலர் கைது செய்யப்பட்டனர. அவர்களது காணொளிகள் திரிக்கப்பட்டன. ஜேஎன்யூ வளர்த்தெடுத்த ஜனநாயகக் களங்கள் சுருக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சாரம் தீவிரமான கருத்தியல் ரீதியிலான ஒன்றாக இருந்தது. இதற்காகப் பணம், நேரம், ஆற்றல், வளங்கள் பெருமளவில் செலவிடப்பட்டன.
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களின்போது மக்கள் அந்த முழக்கத்தை மீண்டும் கையில் எடுத்தது எல்லா வகையிலும் புத்துணர்ச்சியூட்டுவதாக அமைந்தது. நாம்தான் இந்நாட்டின் மக்கள். நமக்காகவும் இந்நாட்டிற்காகவும் எந்த முழக்கங்களை மீண்டும் முன்னெடுக்க விரும்புகிறோமோ, அதைச் செய்வதற்கான உரிமை நமக்கு உண்டு. நாம்தான் இந்த தேசத்தை உருவாக்குகிறோம்.
வன்முறை சார்ந்த நக்சலிசம் குறித்து அண்மைய மாதங்கள், கடந்த சில தசாப்தங்களில் நிகழ்ந்தவற்றைக் கருத்தில் கொண்டு ஆய்ஸா (AISA- All India Students Assoc0iation) அமைப்பினதும் உங்களதும் கருத்துக்கள் என்ன?
நக்சல்பாரி என்ற கருத்துருவானது தொடர்ந்து ஏதோ ஒரு வக்கிரமான விஷயமாகவும, நீதி என்ற கோட்பாட்டிற்கே எதிரான வன்முறையாகவும் அடையாளப்படுத்தப்பட்டு வரும் சூழலில், இந்தக் கருத்துருவைப் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றே நான் கூறுவேன்.
தங்களது பயிரிடும் நிலத்தின் மீதான அடிப்படை உரிமை கூடப் பெரும்பான்மையான மக்களுக்கு இல்லை என்பதை நக்சல்பாரி இயக்கம் வலியுறுத்தியது. குறைந்தபட்ச ஊதியம், கண்ணியமான நடத்தை, சட்டரீதியான தீர்வு, மனிதர்களாக மதிக்கப்படும் உரிமை என இவைகள்தான் நக்சல்பாரி இயக்கத்தின் சாராம்சமாக இருந்தன.
அது பல்வேறு வடிவங்களை எடுத்தது. பீகாரில் அது நிலப்பிரபுத்துவ நில உரிமையாளர்களுக்கு எதிராக மனித கண்ணியத்தை நிலைநாட்டும் போராட்டமாக மாறியது. தலித், முஸ்லிம் கிராமங்கள் மீதான பெருமளவிலான வன்முறையோ, படுகொலைகளோ பீகாரில் சாதாரணமாகிவிடக் கூடாது என்று அது கருதியது. ஆதிக்க நிலப்பிரபுக்களால் தலித், முஸ்லிம் குடியிருப்புகளைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும் அனுமதிக்கப்படக் கூடாது என அது செயலாற்றியது.
அதன் அடிப்படை நோக்கம் என்னவென்றால், ஏழை மக்களில் மிக ஏழ்மையானவர்கள் தொடர்ந்து மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்படக் கூடாது என்பதே.
போராட்டத்தின் போது உமர் காலித் பெயர் எதிர்மறையாக மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டது. அது குறித்து உங்கள் கருத்து என்ன?
இன்று மக்கள் உமர் காலித் பற்றிப் பேசும்போது அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உண்மையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் அப்படிப் பேசுவதில்லை. இவர் உமர் காலித்தின் ஆதரவாளர், அதனால் இவர் மீது மை வீசப்படலாம் என்பது போன்ற கூச்சல்கள், பரபரப்புகள் நிலவுவதாலேயே அவர்கள் அப்படிப் பேசுகிறார்கள்.

எந்தவொரு நியாயமான காரணமோ விமர்சனப் பார்வையோ முன்வைக்கச் சரியான கருத்துக்களோ, அரசியல் நிலைப்பாடோ இல்லாதவர்களுக்கு ஒருவரை தேசவிரோதி என்று முத்திரை குத்துவது மிக எளிதான ஆயுதமாகிவிட்டது.
போராட்டங்களின் போது கல்வி, தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான முழக்கங்களைத் தாண்டி அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்பது குறித்தும் நாங்கள் பேசினோம்.
மாணவர்களாகிய நாம் உமர் காலித் சிறையில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட இது குறித்த விஷயங்களைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஏன் இது குறித்து நீங்கள் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? நீதித்துறை ஏன் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஏன் முயற்சிக்கக்கூடாது? ஒவ்வொரு குடிமகனுக்கும் நியாயமான விசாரணை கிடைப்பதையும், முறையான சட்ட நடைமுறைகளின் மூலமே குற்றம் தீர்மானிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கே நீதித்துறை உள்ளது. ஊடகங்களோ, ஒரு கும்பலோ ஒரு சாதாரண குடிமகனை விசாரிக்கவோ, ஒரு அரசியல் குழுவோ அரசோ அவரைக் குற்றவாளி என்று அறிவிக்கவோ முடியாது.
உமர் காலித் விவகாரம் என்பது தேசியவாதி அல்லது தேசவிரோதி என்பது சார்ந்த கேள்வி அல்ல. அது நீங்கள் சட்ட நடைமுறைக்கு ஆதரவாக நிற்கிறீர்களா இல்லையா என்பது குறித்த கேள்வி. நாம் எத்தகைய நாட்டை உருவாக்க விரும்புகிறோம் என்பது குறித்த கேள்வி அது.
நானும் எனது அமைப்பும் மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய நாங்கள் அனைவரும் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்ட சிஏஏக்கு எதிரான, சமமான குடியுரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் உட்பட, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மூலம்: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்காக நேஹா போரவுடன் சையத் இல்ஹாம் ஜாப்ரி நடத்திய நேர்காணலின் தமிழ் வடிவம். தமிழில்: யமுனா ராஜேந்திரன்.


Leave a comment