இந்த வாரம் நடைபெற்று இருக்கும் தேவநாயகி மாநாட்டைப் பற்றி சில விஷயங்களைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
இந்த நிகழ்வை நான் ஒரு தெளிவான அரசியல் நிகழ்வாகப் பார்க்கவில்லை. மாறாக, அரசியல் இருக்கிறதா, இல்லையா என்பதே சில நேரங்களில் புரியாத ஒரு நிகழ்வாகத் தோன்றுகிறது. இதில் பல மேல்சாதியினரும், குறிப்பாக பிராமணர்களும், இந்த வரலாற்றை ஒரு கொண்டாட்ட மனநிலையில் பேசுகிறார்கள். சிலர் அரசியல் மற்றும் பெண்ணியம் குறித்தும் பேசினாலும், இந்த வரலாற்றை போதுமான அளவு விமர்சனமாகவும் அரசியலாகவும் அணுகவில்லை என்பது என்னுடைய கவலை. குறிப்பாக, இந்த வரலாறு ஒரு குறிப்பிட்ட இந்துத்துவ தேசியவாத அல்லது வலதுசாரி இந்து உணர்வுக்குள் மீண்டும் முன்வைக்கப்படுவது எனக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.
“தேவதாசி”, “தேவரடியார்” போன்ற சொற்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன; சதிர் மீண்டும் ஆடப்படுகிறது. இதை ஒரு மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுப்பதாக பலர் பார்க்கிறார்கள். ஆனால் நான் இதை அப்படிப் பார்க்கவில்லை.
“தேவதாசி” என்பது இன்று பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பெண்களை ஒரே வகைக்குள் கொண்டு வரும் பொதுச் சொல்லாகிவிட்டது. ஆனால் அவர்களுடைய சாதி வரலாறுகள், வாழ்வாதாரங்கள், சமூக நிலைகள் மற்றும் lived realities ஒன்றல்ல. குறிப்பாக, என்னைப் போன்ற பாரம்பரிய சூத்திர நாட்டியச் சமூகங்களின் வரலாற்றை தலித் சமூகங்களின் வரலாறுகளுடன் இணைக்க முடியாது; அவற்றை ஒரே கதையாகக் கலக்கவும் முடியாது. அவர்களுடைய சாதி வரலாறுகள், வாழ்வாதாரங்கள், சமூக நிலைகள் மற்றும் வாழ்ந்த அனுபவங்கள் வெவ்வேறானவை. அந்த வேறுபாடுகளை அழித்துவிட்டு, அனைவருக்கும் ஒரே வரலாறு இருந்ததாகச் சொல்வது மீண்டும் ஒரு வகையான வரலாற்று வன்முறையாகிவிடும்.
இந்த வரலாற்றுக்குள் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையும் பெண்களின் மீது நிகழ்ந்த வன்முறையும் இருந்தன என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், சில பெண்களுக்கு திருமண அமைப்புக்கு வெளியே உறவுகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு அளவு உடல் மற்றும் பாலியல் சுதந்திரம், வருமானம் மற்றும் சொத்தின் மீது பொருளாதார உரிமை, பொது வெளியில் கலைஞர்களாக வாழும் சமூக சுதந்திரம் ஆகியவையும் இருந்தன. இவை முழுமையான சுதந்திரங்கள் அல்ல; சாதி, ஆணாதிக்கம் மற்றும் அதிகார உறவுகளால் கட்டுப்படுத்தப்பட்டவையே. ஆனால் அந்த agency-யை அழித்துவிட்டு, இந்தப் பெண்களை வெறும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது “வேசிகள்” என்ற ஒரே வகைக்குள் அடக்குவதும் வரலாற்றைச் சுருக்கிவிடும்.
இந்தப் புரிதல் எனக்கு வெறும் கல்விசார் புரிதல் அல்ல. இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாக என்னுடைய lived experience-ம் இதன் ஒரு பகுதியாகும். அதே நேரத்தில் Davesh Soneji -யுடனான என்னுடைய நட்பும், அவருடன் செய்த பணிகளும், அவருடைய Unfinished Gestures புத்தகமும் எனக்கு மிகவும் உதவியிருக்கின்றன. அவருடைய scholarship-ஐ அணுகியதன் மூலம், என்னுடைய lived experience-ஐ ஒரு பெரிய வரலாற்று மற்றும் அரசியல் சட்டகத்துக்குள் வைத்து புரிந்துகொள்ள முடிந்தது.
“தேவதாசி” என்ற category-யின் சமீபத்திய வரலாற்றைப் பார்க்கும்போதும், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த social reform, nationalist மற்றும் criminalization விவாதங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. பாரம்பரிய நாட்டியக் கலைஞர்களின் நடனத்தையும், பொட்டுக்கட்டுதல் போன்ற நடைமுறைகளையும் அகற்ற வேண்டும் என்ற விவாதங்களில் பல்வேறு சமூகங்களை ஒரே category-க்குள் கொண்டுவர இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது. முத்துலட்சுமி ரெட்டி போன்ற சீர்திருத்தவாதிகளின் நிலைப்பாடுகளும், காந்திய தேசியவாதச் சூழலும் இதில் முக்கியமானவை.
இதை வெறும் “social reform” என்று மட்டும் சொல்ல முடியாது. பெண்கள் எப்படி வாழ வேண்டும், அவர்களுக்கு எவ்வளவு பொது வெளி இருக்கலாம், அவர்கள் எப்படி தங்கள் உடலை வெளிப்படுத்தலாம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை எப்படி பார்க்க வேண்டும் என்பவற்றை ஒரு குறிப்பிட்ட ஆணாதிக்க மரியாதைக்குரிய ஒழுக்கத்துக்குள் கொண்டு வரும் முயற்சிகளாகவும் இதைப் பார்க்க வேண்டும்.
மேலும், மேல்சாதி இந்து சமூகத்தின் பார்வையில், இந்தப் பெண்களின் பொது வாழ்க்கையும், கலைஞர் அடையாளமும், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளும், அவர்களுடைய உடலின் மீதான agency-யும் ஒரு “அவமானச் சின்னமாக” பார்க்கப்பட்டன. இந்தப் பெண்களை ஒரு வழக்கமான ஆணாதிக்கக் குடும்ப அமைப்புக்குள் கொண்டுவருவதும் இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக இருந்தது.
அதேபோல, “தேவதாசி” என்ற சொல்லை வெறும் “கடவுளின் மனைவி” என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்வதும் மிகவும் பிரச்சினைக்குரியது. அது இந்தப் பெண்களை வெறும் “கோவில் பெண்கள்” என்று மாற்றி, அவர்களுடைய வரலாற்றை கோவில் மையமான ஒரு இந்து வரலாறாகச் சுருக்குகிறது. அதில் இருந்த அரசவை வரலாறு, feudal court history, patronage, நிலம், சொத்து, கலை மற்றும் சமூக உறவுகளின் வரலாறு பின்னுக்குத் தள்ளப்படுகிறது. ஒரு சிக்கலான நாட்டிய சமூகத்தின் வரலாற்றை temple history-ஆக மாற்றுவது, அந்த வரலாற்றை ஒரு குறிப்பிட்ட இந்து தேசியவாதக் கண்ணோட்டத்துக்குள் மீண்டும் அடக்கக்கூடியது என்பதால், இது எனக்கு மிகவும் problematic-ஆகவும் அரசியல்ரீதியாகவும் தோன்றுகிறது.
“தேவரடியார்” என்ற சொல் காலப்போக்கில் “தேவிடியா” போன்ற வசைச்சொற்களாக மாறியதால், “தேவரடியார்” என்ற சொல்லை reclaim செய்யலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் எந்த ஒரு சொல்லும் வரலாற்றில் சேர்த்துக்கொண்ட சாதி, பாலியல் மற்றும் சமூக stigma-விலிருந்து வெறுமனே ஒரு புதிய பெயரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் விடுபட்டுவிடாது. எந்தச் சொல்லையும் “இதுதான் சரியான வார்த்தை” என்று உறுதி செய்ய முடியாது.
நாம் தேவரடியார் என்று அழைத்தாலும், தேவதாசி என்று அழைத்தாலும், வேறு எந்த வரலாற்றுச் சொல்லைப் பயன்படுத்தினாலும், அந்த வரலாற்றுக்குள் இருந்த சாதி அடிப்படையிலான சேவகநிலையையும், சாதி ஒடுக்குமுறையையும், பெண்களின் மீது நிகழ்ந்த வன்முறையையும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் அந்தப் பெண்களுக்கு இருந்த சில உடல், பாலியல், பொருளாதார மற்றும் சமூக சுதந்திரங்களையும் மறுக்க முடியாது.
அதனால்தான் நான் பாரம்பரிய நாட்டியக் கலைஞர்கள், பாரம்பரிய நடனச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அரசவையில் நடனமணிகளாக இருந்தவர்கள், நடனமாடியவர்கள், நடனமாடிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போன்ற குறிப்பிட்ட சொற்களைப் பயன்படுத்த விரும்புகிறேன்.
இது ஒரு ஒற்றை வரலாறு அல்ல. இது ஒரு universal history அல்ல. “அவர்கள் முதலில் மிகவும் மதிக்கப்பட்ட பெண்கள்; பின்னர் காலம் கெட்டு அவர்கள் வேசிகளாக மாறினார்கள்” என்பதும் தவறு. “அவர்கள் அனைவரும் தூய்மையானவர்கள்; காலனியர்கள் வந்ததால் மட்டுமே எல்லாம் அழிந்தது” என்பதும் அதே அளவு எளிமைப்படுத்தப்பட்ட கதை.
ஒரு சிக்கலான வரலாற்றை சில எளிய tropes-களுக்குள் அடக்கும்போது, அந்த வரலாற்றில் வாழ்ந்த பெண்களின் agency-யும் அவர்களுக்குள் இருந்த வேறுபாடுகளும் மறைந்துவிடுகின்றன.
அதே சமயத்தில், Abolition-ஐ முழுமையாக நல்லதாகவும் வெற்றிகரமான திட்டமாகவும் பார்க்க முடியாது. அது ஒரு anti-patriarchal அரசியலிலிருந்து மட்டும் வந்ததல்ல; மாறாக, இந்தச் சாதி நிலைக்குள் ஒரு குறிப்பிட்ட ஆணாதிக்க குடும்ப அமைப்பையும், endogamy-யையும் கொண்டு வந்த அரசியலாகவும் அது செயல்பட்டது. என்னைப் போன்ற இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவராக நான் பார்க்கும்போது, அதன் தாக்கம் இன்றும் என்னுடைய வாழ்க்கையில் இருக்கிறது. மற்ற anti-caste, Self-Respect அரசியல்கள் சில பெண்களுக்கு சாதிக்கு வெளியே திருமணம் செய்வதற்கான வாய்ப்புகளைத் திறந்தபோது, எங்களுக்குள் நடந்த மாற்றங்கள் பெண்களை மீண்டும் சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளவும், domesticity-க்குள் செல்லவும் கட்டாயப்படுத்தின. எனவே இந்த அரசியல் எனக்கு வெறும் வரலாறு அல்ல. இந்தச் சாதி மற்றும் குடும்ப அமைப்புகளுக்கு வெளியே ஒரு சுயாதீனமான வாழ்க்கையை உருவாக்குவதற்காக நான் என் குடும்பத்துடனேயே போராடவும், அதற்கு எதிராக rebel செய்யவும் வேண்டியிருந்தது.
அதேபோல, “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என்று எழுதுவதும் ஒரு வன்முறை. ஏனென்றால் இழப்புகள் இருந்தன. கலாச்சார மூலதனத்தின் இழப்பு, சமூக மூலதனத்தின் இழப்பு, இருட்டடிப்பு, cultural appropriation, சமூக stigma — இவை அனைத்தும் இந்த நாட்டிய சமூகத்தின் வெவ்வேறு இழப்புகள். யார் எதை இழந்தார்கள் என்பதை அவர்களுடைய lived experience-இலிருந்துதான் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்களே ஒரு சமூகமாக criminalize செய்யப்பட்டார்கள். அவர்களுடைய உடல்கள், தொழில்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் அடையாளங்கள் stigma-வுடன் இணைக்கப்பட்டன. இந்த வரலாற்றை வெறும் “நடனம் criminalize செய்யப்பட்டதா?” என்ற கேள்விக்குள் அடக்கிவிட முடியாது.
இந்த வரலாற்றிலிருந்து social மற்றும் cultural capital உருவாக்குகிறவர்கள், மாநாடுகள் நடத்துகிறவர்கள், பேசுகிறவர்கள், சதிரை reclaim அல்லது reinvent செய்கிறவர்கள் தங்களையும் ஒரு கேள்விக்குள் கொண்டுவர வேண்டும். “தேவதாசி”, “sexual slavery” போன்ற சொற்களை மட்டும் முன்னிறுத்தும்போது, ஒரு சமூகத்தின் முழு வரலாற்றைப் பார்க்காமல், அதன் பாலியல் வரலாற்றை sensationalize செய்து அந்தச் சமூகத்தையே கீழ்த்தரமாகவும் இழிவாகவும் பார்க்கும் ஒரு பார்வையை உருவாக்குகிறோமா? எவ்வளவு இது உண்மையான வரலாற்றுப் புரிதல், எவ்வளவு sensationalism? இதையும் நாம் கேட்க வேண்டும்.
சில social activists என்னுடைய இந்த நிலைப்பாட்டை, “தேவதாசி முறையை glorify செய்கிறேன்” அல்லது “ uphold செய்கிறேன்” என்று குற்றம்சாட்டலாம். ஆனால் நான் இங்கே தெளிவாக எழுதுவது அதற்கு நேர்மாறானது. சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையையும், பெண்களின் மீது நிகழ்ந்த வன்முறையையும் மறுப்பதோ, romanticize செய்வதோ என்னுடைய நிலைப்பாடு அல்ல; அதே நேரத்தில் அந்த வரலாற்றை ஒரே ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்ற சட்டகத்திற்குள் சுருக்குவதையும் நான் ஏற்கவில்லை.
இந்த மாநாட்டுக்கு என்னையும் பேச அழைத்திருந்தார்கள். ஆனால் பயன்படுத்தப்படும் மொழி மற்றும் இந்த வரலாற்றை அணுகும் விதம் குறித்து எனக்கு அடிப்படையான கேள்விகள் இருந்ததால் நான் கலந்துகொள்ளவில்லை. “தேவதாசி”, “தேவரடியார்” போன்ற சொற்களிலேயே எனக்கு பிரச்சினை இருப்பதாக ஏற்பாட்டாளர்களிடம் கூறியிருந்தேன். அதன் பிறகு, என் புரிதலின்படி, பெயர் “தேவநாயகி” என்று மாறியிருக்கலாம்.
ஆனால் “தேவநாயகி” என்ற பெயரிலும் எனக்கு கேள்வி இருக்கிறது. பிராமணியமயமாக்கப்பட்ட பரதநாட்டிய உலகில் “நாயகி” என்பது நாயகன்–நாயகி, சிருங்கார பாவம், ரசம் போன்ற ஒரு குறிப்பிட்ட அழகியல் மற்றும் பக்திசார் சட்டகத்துக்குள் வருகிறது. “தேவநாயகி” என்பது மீண்டும் “தேவனின் நாயகி” அல்லது “கடவுளின் மனைவி” என்ற புரிதலை முன்னிறுத்துகிறதா? அந்தப் புரிதலே ஒரு சிக்கலான சமூக வரலாற்றை ஒரு மத அடையாளத்துக்குள் சுருக்கிவிடக்கூடியது.
என்னுடைய மிகப்பெரிய கவலை இதுதான்: ஒரு சமூகத்தைப் பற்றி “அவர்களுக்காக” பேசுபவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க, அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் குரல்கள் கேட்கப்படாமல் போகின்றன.
எங்களுடைய உடலின் மீது ஏற்கனவே சுமத்தப்பட்ட சாதிவன்முறையை, வரலாற்றை எழுதும் மற்றும் பேசும் மொழியின் வழியாக மீண்டும் மீண்டும் எங்களுடைய உடலின் மீது திணிக்கிறார்கள்.
எங்களுடைய மனக்காயத்தை மீண்டும் உயிர்ப்பிக்கிறார்கள். எங்களுடைய குரலையே மீண்டும் மௌனப்படுத்துகிறார்கள்.
எனவே எனக்கு முக்கியமான கேள்வி: ஒரு வரலாற்றை நினைவுகூர்வது என்றால், அந்த வரலாற்றின் காயங்களை மீண்டும் அந்த சமூகத்தின் பெண்களின் உடல்களில் எழுதுவதா? அல்லது அந்த வரலாற்றைப் பற்றி நாம் பயன்படுத்தும் மொழியையே முதலில் கேள்விக்குள்ளாக்குவதா?
எனக்கு இரண்டாவது பாதைதான் முக்கியம்.
இந்த வரலாறு ஒரே ஒரு வரலாறு அல்ல. ஒரே ஒரு குரலும் அல்ல. பல்வேறு பெண்களின் பல்வேறு வாழ்க்கைகள், பல்வேறு class locations, பல்வேறு அனுபவங்கள், தேர்வுகள் மற்றும் காயங்களால் உருவான ஒரு சிக்கலான வரலாறு. அந்தச் சிக்கலை எளிமைப்படுத்தாமல் வைத்திருப்பதே, எனக்குப் பொறுப்பான வரலாற்றுப் பணியின் முதல் படி.


Leave a comment