மாயாவும் மைத்ரேயியும் அடையாளத் தேடலும்!

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்

24 Sep 2026— 1 min read

மாயாவும் மைத்ரேயியும் அடையாளத் தேடலும்!

-யமுனா ராஜேந்திரன்

பிரபலமான ஈழத் தமிழ்க் கலைஞர்களான பாடகி மாயாவும் (மாதங்கி அருள்பிரகாசம்) நடிகையான மைத்ரேயியும் அவர்கள் தமது அடையாளமாக வரித்த தமிழீழத்தவர் எனும் சொல்லுக்காக நிறவாதிகள் – இனவாதிகள் – பயங்கரவாதிகள் என, வசைபாடப்படுகிறார்கள். இது அரசியல் வன்மமாகி மைத்ரேயி மையக் கதாபாத்திரமாக நடித்த  ‘பெஸ்ட் ஆப் த பெஸ்ட்’ திரைப்படத்தின் ரேட்டிங்கைக் குறைக்கச் சிங்கள இனவாதிகளால் எதிர்ப்பிரச்சாரம் செய்யப்படுகிறது.

தமிழீழம் என்ற சொல் பயங்கரவாதம் எனப் பொருள்படும் என்பது வாதம். ஈழ விடுதலை இயக்கங்களில் மார்க்சியத் தாக்கம் பெற்ற பிளாட், என்.எல்.எப்.டி. போன்ற இயக்கங்களும் தமது அரசியல் இலட்சியங்களாகத் தமிழீழத்தையே முன்வைத்தன. விடுதலைப் புலிகள், டெலோ போன்ற இயக்கங்கள் மட்டுமே அதனை முழுமையாகத் தமிழ் இனத் தேசியமாக முன்வைத்தன. அது ஒரு அரசியல் இலட்சியம். அது ஒரு அரசியல் கனவு. பாலஸ்தீனக் கவிஞன் தர்வீஸ் சொல்வது போல, தேசிய விடுதலைப் போராட்டங்களில் இத்தகைய கனவை அவர்கள் நாடுகள் எங்கெங்கிலும் கொண்டு திரிகிறார்கள்.

அரசியல் பிழைகள், மரணங்கள், தோல்விகள் தாண்டி ஈழத்தில் நடைபெற்றது சிங்களப் பெருந்தேசிய ராணுவ ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு ஆயுதப் போராட்டம். செப்டம்பர் பதினொன்று நியூயார்க் தாக்குதலின் பின், தேசிய விடுதலைப் போராட்டங்கள் அனைத்தையும் பயங்கரவாதமாக நிரல்படுத்தியது ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல் திட்டம்.

தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பயங்கரவாதம் அல்ல. அது குறிப்பிட்ட புவியியலில் வாழும் மக்கள் திரளின் அரசியல் – கலாச்சார – பொருளியல் இறையாண்மை – சுயாதீனம் தொடர்பானது. 
தமிழீழம் என்றாலே அது விடுதலைப் புலிகள்தான் என அடையாளப்படுத்துவதே தவறு. அது ஒருபோது ஒரு புவிப்பரப்பில் தோற்றம் பெற்று நிலவிய ஒரு அரசியல் கருத்தாக்கம். குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களின் விடுதலை அவா. இந்த வகையில் சிங்களவர்கள் தரப்பில் இருந்து எழும் நிறவாத – இனவாத – பயங்கரவாத ஆட்சேபங்கள் நிராகரிக்கத்தக்கன.

பாடகி மாயாவும் நடிகையான மைத்ரேயியும் முறையே இங்கிலாந்திலும் கனடாவிலும் பிறந்தவர்கள். மாயாவின் தந்தை ஈழ விடுதலை இயக்கமான ஈரோஸ் அமைப்பின் தலைவரான அருளர். மைத்ரேயியின் பெற்றோர் தமிழ் இனப் பிரச்சினையின் விளைவால் கனடாவுக்குக் குடிபெயர்ந்தவர்கள்.

புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளரும் மேற்கல்லாதவர்களின் குழந்தைகள் இருவிதமான இருத்தலியல் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தமது பெற்றோர் போல இயல்பான தமிழ் மொழி – கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் ஆங்கிலம் வழி படிக்கிறார்கள். வீடு – வெளி என, இருவேறு கலாச்சார வெளிகளில் வளர்கிறார்கள். குழந்தைப் பருவத்தில் அவர்கள் எதிர்கொள்ளாத ஒரு கேள்வியை பிரக்ஞை பூர்வமாக அவர்கள் தமது யுவநாட்களில் எதிர்கொள்கிறார்கள்.

நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? உங்கள் மொழி – மதம் – கலாச்சாரம் என்ன? உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் எழும் இக்கேள்விக்கான பதில்களை அவர்கள் தமது பெற்றோரது மரபிலும் வரலாற்றிலும் தேடுகிறார்கள்.

மேற்கு நாடுகளில் வாழும் மேற்கல்லாத பெற்றோர்களின் குழந்தைகள் ஓரளவேனும் தமது சுயபிரக்ஞையை, அடையாளத்தை இவ்வாறுதான் கண்டடைகிறார்கள். மாயாவும் மைத்ரேயியும் இப்படித்தான் தமது பெற்றோரது மரபை அறிகிறார்கள். தமது தொடர்ச்சியை இவ்வாறுதான் அறிகிறார்கள்.

தமிழீழம் எனும் சொல் அவர்களது மரபின் தொடர்ச்சி. மாயாவும் இதனைப் பலமுறை தனது பொதுநிகழ்வுகளில் வெளிப்படுத்துகிறார். மைத்ரேயியும் இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.

தேசிய விடுதலைப் போராட்ட சமூகங்களில் இருந்து வந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் தம்மையொத்த சமூகத்தவருடன் தம்மை இனம் காண்கிறார்கள். அவர்களது அடையாளம் ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிறவாத எதிர்ப்பும் தேசியவிடுதலை ஆதரவும் கொண்டதாகப் பரிமாணம் பெறுகிறது. மாயாவும் மைத்ரேயியும் இந்த அடையாளத்தை வரித்துக் கொள்கிறார்கள். அதைத் தருணங்களில் பொதுவெளியில் வெளிப்படுத்தவும் செய்கிறார்கள்.

இது ஏன் சர்வதேசியப் பிரச்சினை ஆகிறது? இவர்கள் இருவரும் வெகுசனக் கலாச்சார ஊடக வகையினங்களான மேடையில் நிகழ்த்தும் நடன நிகழ்வுகளில் பாடகியாகவும், தொலைக் காட்சிகளில் அன்றாடம் மக்கள் காணும் தொடர்களின் நாயகியாகவும் இருக்கிறார்கள்.

மைத்ரேயியின் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ நெட்பிளிக்ஸ் தொலைக் காட்சித் தொடரும், இன்றைய ‘பெஸ்ட் ஆப் த பெஸ்ட்’ நெட்பிளிக்ஸ் திரைப்படமும் பெரும் பார்வையாளர் பரப்பை ஈர்த்த தொடர் மற்றும் படம். உலகறிந்த இவர்களின் சொற்கள் உலக அரசியலில் கவனம் ஈர்க்கிறது. விவாதம் இதனது தொடர்ச்சி.

மற்றபடி தமிழீழம் என்பதே நிற – இன – பயங்கரவாதம் என, சிங்களப் பெருந்தேசிய இனவாதிகள் சொல்வதும், தனிப்பட்ட வகையில் மைத்ரேயியின் சொந்த வாழ்வை இழுத்து வசவுவதும் பொருட்படுத்தத் தக்க வாதமாக இல்லை.

Leave a comment