சே குவேரா
Yamuna Rajendran in Facebook
பயணத்திற்கான ஓர் அழைப்பு
ஹெலினா லெய்வாவுக்கு*
சே குவேரா
—-
சகோதரி, வெற்றியை அடைய இன்னும் நாம்
வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது
பாதை நீண்டது
நிகழ்காலம் நிச்சயமற்றது
நாளைய பொழுது நம்முடையது
பாதை ஓரத்தில் நின்றுவிடாதே
நித்தியமான இந்த மண்ணில்
உன் பாதங்கள் இளைப்பாறட்டும்
உன் சோர்வையும் ஆழ்ந்த விரக்தியையும்
நான் அறிவேன்
போர்க்களத்தில் உன் குருதி
சோர்வுக்கு எதிராக நிற்கும் என்பதையும்
நான் அறிவேன்
அதற்குத் தீங்கு நேர்வதை விட
நீ மரணத்தையே ஏற்பாய்
என்பதையும் நான் அறிவேன்
படுகொலைக்கு அல்ல
மீளக் கைப்பற்றும் போராட்டத்திற்கு
வாவென உன்னை நான் அழைக்கிறேன்
துப்பாக்கியை நீ மறுத்தால்
நம்பிக்கையைக் கையில் ஏந்து
நம்பிக்கை உன்னைக் கைவிட்டால்
ஒரு பெருமூச்சு விடு
அழ முடியாவிட்டால் அழாதே
உன்னிடம் ஆயுதங்கள் இல்லாவிட்டாலும்
வடதிசை உன்னை மறுத்தாலும் சரி
முன்னேறிச் செல் தோழியே
மாயை நிறைந்த உலகங்களுக்கு
உன்னை நான் அழைக்கவில்லை
அங்கே கடவுள்களோ சொர்க்கங்களோ
அரக்கர்களோ இருக்கமாட்டார்கள்
ஒருவேளை அடையாளப்படுத்தும்
சிலுவை ஏதுமற்ற
இருண்ட மரணம் மட்டுமே அங்கே மிஞ்சலாம்
எங்களுக்கு உதவு சகோதரி
பயம் உன்னைத் தடுத்து நிறுத்த அனுமதியாதே
நரகத்தை
நாம் சொர்க்கமாக மாற்றுவோம்
விண்ணில் மேகங்களையோ
பறவைகளையோ காற்றையோ
தேடாதே
நமது கொத்தளங்கள் பூமியில் வேரூன்றியவை
மண்ணைப் பார்
மனித சாரத்திற்கான தாகத்தை
இந்தப் பூமி தன்வசம் கொண்டுள்ளது
இங்கேயுள்ள இந்த நரகமே நமது
நம்பிக்கையாக இருக்கிறது
அந்தக் குன்றின் பின்னால் இருக்கும்
அங்கே
என்று நான் சொல்லவில்லை
தூசி மறையும் தொலைவில் உள்ள
அங்கே
என்றும் நான் சொல்லவில்லை
இன்றிலிருந்து பல நாட்கள் கழித்து வரும்
காலத்தைப் பற்றியும்
நான் சொல்லவில்லை
நான் உனக்குச் சொல்வது இதுதான்
வா என் சகோதரி
உன் கதகதப்பான கையை என்னிடம் கொடு
என் துடைக்கப்பட்ட கண்ணீரை
அறிந்த அதே கை அது
சகோதரி, தாய், துணைவி, தோழி
இந்தப் பாதை போர்க்களத்திற்கு இட்டுச் செல்கிறது
உன் சோர்வை விட்டுவிடு
உன் பயத்தை விட்டுவிடு
உன் அற்பமான
அன்றாடக் கவலைகளை விட்டுவிடு
கடுமையான அந்தத் தூசியால் என்ன பயன்?
தடைகளால் என்ன ஆகிவிடப் போகிறது?
அதனால் என்னதான் ஆகிவிடும்?
—–
* ஹெலினா லெய்வா (1897–1978) புகழ்பெற்ற ஹோண்டுரஸ் நாட்டின் மார்க்சியர். பெண்ணியவாதி. ஹோண்டுரஸின் முன்னாள் ஜனாதிபதி பொன்சியானோ லெய்வாவின் பேத்தி. அவரது இடதுசாரி அரசியல் கருத்துக்களின் காரணமாக அவர் குவாத்தமாலாவிற்கு நாடுகடத்தப்பட்டார். மார்க்சியத்தைக்; கற்பதன் பொருட்டு அவர் சீனாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பயணம் செய்தார், ஐம்பதுகளின் முற்பகுதியில் புரட்சிக்கு முந்தைய இளம் சே குவேரா குவாத்தமாலாவிற்குப் பயணம் செய்து லெய்வாவின் இருப்பிடத்தில் தங்கினார். ஹெலினாவின் அறிவுத்திறனாலும் கொள்கைக்கான அவரது அர்ப்பணிப்பாலும் சேகுவேரா பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1954 ஆம் ஆண்டில் அவர்கள் இருவரும் பகிர்ந்துகொண்ட புரட்சிகர இலட்சியங்களுக்கும் நட்புக்கும் அஞ்சலியாக சே குவேரா இந்தக் கவிதையை எழுதினார். இக்கவிதையில் சே குவேரா லெய்வாவை அன்புடன் ‘சகோதரி’ என்று குறிப்பிடுகிறார்.


Leave a comment