
யமுனா ராஜேந்திரன்
19 Sep 2026— 2 min read

மூலம்: அமி கோட்மேன்/ யுவான் கொன்சலஸ்
அறிமுகமும் மொழியாக்கமும்: யமுனா ராஜேந்திரன்
2026 ஆகஸ்ட் மாதம் பின்னிரண்டு வாரங்களிலும், செப்டம்பர் முதல் வாரத்திலும் என்னால் மூன்று காணொளிகளைக் காண நேர்ந்தது. முதலாவது ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி டிபேட் கிளப் நடத்திய ‘இஸ்ரேலுக்குச் சமாதானத்தில் நாட்டமில்லை’ எனும் விவாதம். விவாதத்தின் இறுதியில் பார்வையாளர்கள் வாக்களிக்க வேண்டும். இருதரப்பிலும் தலா ஐந்துபேர்கள் பேசிமுடித்த பின் ‘இஸ்ரேலுக்குச் சமாதானத்தில் நாட்டமில்லை’ எனும் வாதத் தரப்பினருக்குப் பெரும்பான்மை வாக்குகள் அளிக்கப்பட்டன.
இரண்டாவது காணொளியில் ‘விண்வெளியில் அமெரிக்கா ஆயுதங்களை நிறுவியிருக்கிறது’ என்கிற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிவிப்பினையடுத்து, சீனா, ரஸ்யா இரண்டும் அமெரிக்காவுக்கு விண்வெளியைப் போர்க்களமாக ஆக்கவேண்டாம் எனும் எச்சரிக்கையை விடுத்திருந்தன.
மூன்றாவது காணொளி ‘நோ அதர் லேண்ட்’ எனும் பாலஸ்தீனப் படத்தின் இஸ்ரேலிய இயக்குனர் யுவால் ஆப்ரஹாம் உருவாக்கிய காசா பேரழிவு குறித்த ‘நாசா’ எனும் ஆவணப்படம் தொடர்பான சர்ச்சை. இந்த ஆவணப்படத்தில் காசா குண்டுவீச்சில் ஈடுபட்ட 25 இஸ்ரேலிய ராணுவத்தினரின் – உளவுத்துறையினரின் நேர்காணல்கள் தொகுக்கப்பட்டிருந்தன. படத்தின் மையமான விசயம் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு காசா மக்களின் மீது குண்டுவீசிக் கொல்லப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த இஸ்ரேலிய ராணுவத்தினரின் வாக்குமூலங்கள்.
இந்தப் படத்தின் இயக்குனர் இதை வெளியில் சொன்னது தேசவிரோதம் எனவும், இதற்காக அவரது இஸ்ரேலியக் குடியுரிமை இல்லாது செய்யப்படும் எனவும் இஸ்ரேலியக் கலாச்சார அமைச்சர் இயக்குனரை மிரட்டியிருந்தார். ஆதாரத்தில் இந்தப் படத்தில் வெளியாகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு யுத்தத்தில் பாவிக்கப்பட்ட விசயங்கள் அனைத்தும் ஏலவே 982 எனும் பாலஸ்தீன – இஸ்ரேலிய ஊடகவியலாளர்கள் இணைந்து நடத்தும் புலனாய்வுத் தளத்தில் வெளியாகியிருந்தன.
இந்தக் கொலை நிகழ்த்தும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கியவர் ‘பாலன்டைர்’ நிறுவனத்தின் உரிமையாளரான பீட்டர் தீல் என்பது அப்புலனாய்வாளர்கள் கண்டறிந்த உண்மை. சந்தேகத்திற்குரிய ஒருவரைக் கொல்ல 500 பாலஸ்தீன வெகுமக்களைக் கொல்லலாம் என்பது இவரது கருதுகோள். இவர்தான் இன்று அமெரிக்க ராணுவமும் செயற்கை நுண்ணறிவும் இணைந்து செயல்படவேண்டும் எனும் முனைப்பைக் கொண்டிருப்பவர்.

சமகாலத்தில் அமெரிக்காவின் ‘டெமாக்ரஸி நவ்’ இணையதளத்தில் அமெரிக்க – இஸ்ரேலியத் செயற்கை நுண்ணறிவுத் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் குறித்த கோட்பாட்டாளர்களான நவோமி கிளைன், அஸ்ட்ரா டெய்லர் இரட்டையரின் உரையாடலைக் காண நேர்ந்தது.
யூத – கிறித்தவத் தீவிரவாதிகளின் மதப்பனுவல் கனவு, தொழில்நுட்பத் தீவிரவாதிகளின் கட்டற்ற பேராசை, தூய இனத்தேசியவாதிகளின் (அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் நதானியேவு, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, பிரேசிலின் பல்சனாரோ) இணைவு எவ்வாறு இறுதிக்காலத்தின் பாசிசமாக வடிவெடுத்திருக்கிறது என்பதை இந்த உரையாடல் விவரிக்கிறது. நவோமி கிளைனும் அஸ்ட்ரா டெய்லரும் மூன்றுவிதமான இறுதிக்காலப் பாசிஸ்ட்டுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்:
- பெருகிவரும் உலகளாவிய பேரழிவுகள், போர்கள், காலநிலை நெருக்கடிகளை, இறுதிக்காலம் – வரவிருக்கும் பரலோகப் பிரவேசத்தின் வரவேற்கத்தக்க, விவிலிய அறிகுறிகளாகக் கருதும் அடிப்படைவாதிகள் – இறையாட்சியாளர்கள்.
- சிலிக்கான் பள்ளத்தாக்கின் பெரும் பணக்காரர்கள், தொழில்நுட்ப தலைமைச் செயல் அதிகாரிகள், துணிகர முதலீட்டாளர்கள். இவர்கள் செயற்கை நுண்ணறிவு, காலநிலை சீர்குலைவு போன்ற தொழில்நுட்பங்கள் உலகை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாலும் நேரத்தில் அதிலிருந்து லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்துகின்றனர். இவர்கள் ஆடம்பரமான பதுங்குகுழிகளைக் கட்டுவதன் மூலமோ, தனியார் தீவுகளை வாங்குவதன் மூலமோ, விண்வெளித் தப்பித்தல்களைத் திட்டமிடுவதன் மூலமோ ஒரு மதச்சார்பற்ற செல்வப் பிரவேசத்திற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள்.
- வலதுசாரித் தலைவர்கள். அரசியல் பிழைப்புவாதிகள். இவர்கள் காலநிலை மாற்றம், வளப் பற்றாக்குறைக்கு மிகப்பெரிய ஆயத்தவாதத்தை அமல்படுத்துவதன் மூலம் இவர்கள் அகதிகளையும் வெளியாட்களையும் உள்ளே வராமல் தடுப்பதற்காக, பலமாக அரணமைக்கப்பட்ட எல்லைகளுடன் கூடிய ஒரு பதுங்குகுழி அரசை ஆதரிக்கின்றனர்.
உலகின் முடிவு எனும் யூத-கிறித்தவ மதநம்பிக்கை, தமது நாகரீகத்தின் மேன்மை எனும் காலனிய – ஏகாதிபத்தியவாதிகள் – செயற்கை நுண்ணறிவுத் தீவிரவாதிகளின் கனவு, பேரழிவின் பின் தூய உலகு இருக்கும் – தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பேரானந்தம் நிலவும் எனும் அவர்களது உட்கிடக்கை போன்றவற்றை முன்வைத்து இந்த உரையாடல் நகர்கிறது.
கட்டுப்பாடற்ற, எல்லைகளற்ற, தாம் அல்லாதவர்களின் அழிவை விழையும் செயற்கை நுண்ணறிவு ஆதரவாளர்களின் கூட்டு எவ்வாறு நாம் எதிர்கொள்ளும் இறுதிக்காலப் பாசிசமாக ஆகியிருக்கிறது என்பதை நவோமியும், அஸ்ட்ரா டெய்லரும் இந்த உரையாடலில் முன்வைக்கிறார்கள்.
எலான் மாஸ்க், ஸ்டீவ்ஜாப், ஜூக்கர் பெக்கர், பீட்டர் தீல், ஜென்சன் ஹூவாங், சந்தர் பிச்சை போன்றவர்களின் செயற்கை நுண்ணறிவுத் தீவிரவாதம் எவ்வாறு டிரம்ப்பினதும் அவரது ஆதரவாளர்களான ஜே.டி. வான்ஸ், ஜாரெட் குஷ்னர், ஸ்டீவ் விட்கோப் ஆகியோரதும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு வேட்கையுடன் இணைகிறது என்பதை இந்த உரையாடல் முன்வைக்கிறது.
மூல உரையாடலை ‘டெமாக்ரசி நவ்’ இணையத்தின் இயக்குனர் அமி கோட்மேனும், இணை இயக்குனரான யுவான் கொன்சலஸூம் நிகழ்த்தியிருக்கிறார்கள். இன்றைய நாளின் முக்கியத்துவம் கருதி இதை நான் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.

*
அமி குட்மேன்: நவோமி கிளைன், அஸ்ட்ரா டெய்லர் ஆகியோர் எழுதிய, ‘இறுதிக்கால பாசிசம்: உயிர்ப்புள்ள உலகத்திற்கான போராட்டம் (End Times Fascism: And the Fight for the Living World)’ என்ற தங்கள் புதிய புத்தகத்தை நம்மிடம் இங்கே அறிமுகப்படுத்துகிறார்கள். வளர்ந்து வரும் சமத்துவமின்மை, அரசியல் ஸ்திரமின்மை, பருவநிலை நெருக்கடி ஆகியவற்றிற்குப் பங்களிக்கும் அதே வேளையில், செல்வந்த உயரடுக்கினர் உலகின் முடிவை எதிர்கொள்ள எவ்வாறு தயாராகி வருகிறார்கள் என்பதையும் இந்நூல் ஆராய்கிறது. நவீன கால பாசிசத்தின் எழுச்சி என்பது வெறும் கடந்தகால நிகழ்வின் மறுபதிப்பு அல்ல என்பதை கிளைன் விளக்குகிறார்.
‘வரலாறு ஒரே சுழற்சியில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என்று நாங்கள் நம்பவில்லை. மாறாக இது ஒரு தொடர்ச்சியைப் போன்றது என்று நாங்கள் கருதுகிறோம். இதில் பாசிசத்தின் தர்க்கங்களின் மனிதத்தன்மையற்றதாக மாற்றுதல், பிறரை அந்நியப்படுத்துதல், இன மேலாதிக்கம், படிநிலை மனப்பான்மை ஆகியவை, இப்போது உலகளாவிய இருத்தலியல் நெருக்கடி, வாழ்வா-சாவா எனும் போராட்டம் நிலவும் காலத்தில் செயல்படுத்தப்படுகின்றன. இத்தகைய விதியை மாற்றியமைக்க முடியாதது என்ற கண்ணோட்டத்தை எதிர்க்கும்-வளர்ந்து வரும் இயக்கம், அடிப்படையில் பூமியில் நிலைத்திருப்பதற்கான விருப்பத்திலும், இந்த இடத்தின் மீதான அர்ப்பணிப்பிலும் வேரூன்றியிருக்க வேண்டும்’ என்று நூலின் இணையாசிரியர் அஸ்ட்ரா டெய்லர் கூறுகிறார்.
செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவர்கள் இந்தத் தசாப்தத்தின் முடிவுக்குள் அது நம்மை அழித்துவிடக்கூடும் என்று தீவிரமாக நம்புகிறார்கள். கடந்த வாரம் ஆந்தரோபிக் நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் ஜேக்கப் காக்சன் விடுத்த எச்சரிக்கை இது. இது நாளுக்கு நாள் சக்திவாய்ந்ததாகி வரும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பது குறித்த தீவிர விவாதத்தைத் தூண்டியது. காக்சன் இது குறித்து பிபிசியிடம் பேசினார். அவர் சொல்கிறார்:
‘இந்த நிறுவனங்களை நிறுவுவதிலும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் ஈடுபட்டவர்கள் மனித இனம் அழிந்துபோக வாய்ப்புள்ளது என்று நம்புகிறார்கள் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்டதல்ல. உண்மையில் அதற்கான நிரலாக்கத்தை மேற்கொள்ளும் பணியில் ஆழமாக ஈடுபட்டுள்ள பலரும் மனிதர்கள் இறப்பதற்கான வாய்ப்பு 10 சதவீத்திற்கும் அதிகமாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ இருப்பதாக நம்புகிறார்கள். சிலர் குறைவான சதவீதத்தைக் கூறினாலும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு மதிப்பீடுகள் உள்ளன. தொழில்நுட்பத்தில் பணிபுரியும் போது அவர்கள் அனைவரும் இந்த விஷயத்தை தினமும் தங்கள் மனதில் கொண்டுள்ளனர்.’
ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடியும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மாதிரிகளின் உருவாக்க வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அவரது ஒரு கட்டுரையில் ஆறு முதல் பன்னிரண்டு மாதங்களுக்குள் ஒரு பெரும் செயற்கை நுண்ணறிவு முகவர்கள் கூட்டம் முழு இணையத்தையும் கைப்பற்றி நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எழுதியிருந்தார்.
தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு மேலும் சக்திவாய்ந்ததாக மாறினால் சேதத்தின் அளவு அங்கிருந்து தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் எழுதியிருந்தார். அதிபர் டிரம்ப் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒழுங்குமுறை, பாதுகாப்பு வழிமுறைகளை விதிக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை நிராகரித்ததோடு, செயற்கை நுண்ணறிவு குறித்த கவலைகளை ஒரு மோசடி என்றும் கூறியுள்ளார். திங்களன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கணினி சிப் தயாரிக்கும் என்விடியா (Envidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹூவாங் பேசிக்கொண்டிருந்தபோது டிரம்ப் அவரை அழைத்து இதனைச் சொல்கிறார்.
செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதம் தீவிரமடைந்து வரும் நிலையில் விருது பெற்ற பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களுமான நவோமி க்ளீன், ஆஸ்ட்ரா டெய்லர் ஆகியோர் இன்று ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். அது இவை அனைத்துடனும் தொடர்புடையது. அதன் தலைப்பு ‘இறுதிக்கால பாசிசம்: வாழும் உலகத்திற்கான போராட்டம்’. தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் உட்பட செல்வந்த உயரடுக்குகள், அதிகரித்து வரும் சமத்துவமின்மை, அரசியல் ஸ்திரமின்மை, போர்கள், காலநிலை நெருக்கடிக்கு பங்களிக்கும் அதே வேளையில், உலகின் முடிவிற்காக எவ்வாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை இது ஆராய்கிறது.
நவோமி கிளைன் விருது பெற்ற பத்திரிகையாளர். ஆவணப்படத் தயாரிப்பாளர். Doppelganger, No Logo, The Shock Doctrine உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியவர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் காலநிலை நீதிக்கான மையத்தின் இணைப் பேராசிரியராகவும் இணை இயக்குநராகவும் உள்ளார். அஸ்ட்ரா டெய்லர் ஒரு விருது பெற்ற எழுத்தாளர். சமூக ஆர்வலரும் ஆவணப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இவர் Things Fall Apart, The People’s Platform: Taking Back Power, Culture in the Digital Age உள்ளிட்ட பல புத்தகங்களின் ஆசிரியர் ஆவார்.

நவோமி, நீங்கள் ‘இறுதிக்கால பாசிசம்’ நூலின் தலைப்பிலிருந்து தொடங்குங்கள். இந்தத் தலைப்பை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
நவோமி கிளைன்: முதலாவதாக எங்களை இங்கு அழைத்ததற்கு நன்றி அமி. உங்கள் நிகழ்ச்சியில் இந்த நூலை வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் குறிப்பிட்டது போல இது இன்று காலைதான் வெளியானது. நாங்கள் இணைந்து நூல்களை வெளியிடும் நீண்டதொரு மரபைக் கொண்டிருக்கிறோம். இந்த நூலுக்கு ‘இறுதிக்கால பாசிசம்’ என்று பெயரிட நாங்கள் இருவரும் இணைந்தே முடிவு செய்தோம்.
தற்போதைய தீவிர வலதுசாரி தீவிரவாதச் சூழலில் கடந்த காலத்திற்கும் இதற்கும் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள நாங்கள் முயற்சிக்கிறோம். 20 ஆம் நூற்றாண்டின் பாசிஸ்டுகளுடன் தொடர்புடைய தீவிர வலதுசாரி கட்சிகள் உலகம் முழுவதும் அதிகாரத்திற்கு வருவதை நாம் அறிவோம்.
ஜெர்மனியின் ஒரு மாநிலத்தில் நடந்த மிக முக்கியமான தேர்தலை நாம் இப்போதுதான் பார்த்தோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அங்கு தீவிர வலதுசாரிகள் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. பிரான்சில் மிகவும் கவலைக்குரிய கருத்துக்கணிப்பு முடிவுகளை நாம் காண்கிறோம். அமெரிக்காவில் அரசாங்கம் தொழில்நுட்பத் துறையில் உள்ள மிக சக்திவாய்ந்த நபர்களிடமிருந்து வெளிப்படையான பாசிச வெளிப்பாடுகள் அதிகரிப்பதையும் நாம் பார்க்கிறோம்.
இது வெறும் பழைய நிகழ்வுகளின் மறுபதிப்பு என்று நாங்கள் கருதவில்லை. வரலாறு ஒரே சுழற்சியில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என்று நாங்கள் நம்பவில்லை. இது ஒரு தொடர்ச்சியைப் போன்றது என்று நாங்கள் நம்புகிறோம். இதில் பாசிசத்தின் தர்க்கங்கள், மனிதத்தன்மையற்றதாக நடத்துதல், மற்றவர்கள் எனப் பிரித்து ஒதுக்குதல், இன மேலாதிக்கம், படிநிலை மனப்பான்மை போன்றவை உலகளாவிய இருத்தலியல் நெருக்கடி நிலவும் இந்தக் காலகட்டத்தில் செயல்படுத்தப்படுகின்றன.
காலநிலைச் சீர்குலைவு சரிவு ஏற்படும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதும்புதிய செய்தி அல்ல. ஹிட்லர், முசோலினிக்குத் தெரியாத அணு ஆயுதங்கள் போன்ற கருவிகள் நம்மிடம் உள்ளன. இவை அவர்கள் எட்ட முடியாத அளவிலான பேரழிவை ஏற்படுத்தும் வன்முறையை நிகழ்த்தும் திறன் கொண்டவை.
அமைப்புரீதியான நெருக்கடிகளின்போதுதான் பாசிசம் எப்போதும் உருவாகிறது. உண்மையில் அமைப்புரீதியான மாற்றங்களிலிருந்து முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் ஒரு வழியாகவே அது தோன்றுகிறது. முதல் உலகப் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் நிலவிய 20-ஆம் நூற்றாண்டு பாசிசத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தால், போரினால் ஏற்பட்ட பேரழிவிற்கும் அதைத் தொடர்ந்து வந்த பெரும் பொருளாதார மந்தநிலைக்கும் எதிராக வளர்ந்து வந்த சோசலிசப் போக்கு ஒரு காரணமாக இருந்தது. அப்போது பாசிசம் தலைதூக்கியது. இதை நாங்கள் முதலாளித்துவத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கான எதிர்வினை அல்லது கோர முகம் காட்டும் முதலாளித்துவம் என்று அழைக்கிறோம்.

மக்களின் அந்த ஒட்டுமொத்தக் கோபத்தையும் ஒரு பலிக்கடாவை நோக்கித் திருப்புவதே இதன் நோக்கமாக இருந்தது. தற்போதைய காலகட்டத்தில் நாம் காணும் இந்த உலகளாவிய நெருக்கடிகள், ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றத்திற்கு வழிவகுக்கலாம் அல்லது எல்லாம் எரிந்து சாம்பலாகட்டும் என்று இறுதிக்கால பாசிச எதிர்வினை என்று நாம் அழைக்கும் ஒரு போக்குக்கும் இட்டுச் செல்லலாம். ஆக, எதிர்காலத்தில் யார் பிழைத்திருக்கப் போகிறார்கள் என்பதற்கான ஒரு போராட்டமாகவே இது மாறியுள்ளது.
இப்போது பிரச்சினை எதை உருவாக்குவது என்பது பற்றியது. சிறந்த திரைப்படக் குழுவினருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்ற அந்தத் திரைப்படங்களில் நீங்கள் பார்த்தது போல நிலத்தடிப் பாதுகாப்பு அறைகள் (bunkers), விண்வெளி கப்பல்கள்(Racket Ships) தப்பிச் செல்வதற்கான வழிகளை உருவாக்குவது பற்றியது இது. மதரீதியாக உலகத்தின் இறுதியை நம்புபவர்களைப் பொறுத்தவரை இது உண்மையில் விண்ணுலகில் உள்ள பாதுகாப்பு அறை அல்லது ‘இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சொர்க்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் பேரானந்த’ (rapture – based on biblical text) நிகழ்வு பற்றியது. மதச்சார்பற்ற சூழலில் சொல்லப்படும் கதைகளுக்கும் இது ஒரு மாதிரியாக அமைகிறது. அங்கேயும் ஒரு வகையான ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சொர்க்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் பேரானந்த’ நிகழ்வு நிகழ்கிறது. அதை நாங்கள் எங்கள் புத்தகத்தில் ‘செல்வத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சொர்க்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் பேரானந்த’ நிகழ்வு என்று அழைக்கிறோம். உங்களிடம் போதுமான வளங்கள் இருந்தால், நம் அனைவரையும் பாதிக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட முடியும். அதனால்தான் இதை இறுதிக்கால பாசிசம் என்று அழைக்கிறோம்.
இது இன்னும் முழுமையாக வெற்றிபெறவில்லை. மக்கள் இதற்கு எதிராகப் போராடிக்கொண்டிருப்பதால்தான் நாங்கள் இந்தப் புத்தகத்தை எழுதினோம். மிகவும் அச்சமூட்டும் இந்த யதார்த்தத்தை நாம் தெளிவான பார்வையுடன் அணுகினால், இது வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டால், இதன் மீதான ஈர்ப்பு குறையும் என்று நாங்கள் கருதுகிறோம். உண்மையில் மக்கள் நம்முடைய ஒரே வீடான இந்தப் பூமியை நேசிக்கிறார்கள.இங்கேயே தங்கி இதைச் சிறந்ததாக மாற்ற விரும்புகிறார்கள்.
யுவான் கொன்சலஸ்: நவோமி இது எப்படி முந்தைய காலங்களிலிருந்து வேறுபடுகிறது? 1950 ஆம் ஆண்டுகள், 1960 ஆம் ஆண்டுகளில் பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது அணு ஆயுதப் போர் வரப்போகிறது என்று நம்பிய அமெரிக்கர்கள், குறிப்பாக அதன் உயர் வர்க்கத்தினர், குண்டுவீச்சுத் தாக்குதலில் இருந்து தப்பிக்க நிலத்தடி அறைகளை கட்டிக்கொண்டிருந்தனர். அதே வேளையில் மற்ற மக்கள் அணு ஆயுத எதிர்ப்பு இயக்கமாகத் திரண்டனர். அந்த இயக்கம் 1980 ஆம் ஆண்டுகளில் உச்சத்தை அடைந்து ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் மூலம் முதலாளித்துவத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையை உருவாக்கியது. அப்போதைய சூழலுக்கும் இப்போதைய சூழலுக்கும் என்ன வித்தியாசம்?
நவோமி கிளைன்: யுவான், இறுதிக்கால பாசிஸ்டுகள் என்று நாங்கள் அழைக்கும் அந்த நபர்கள், அந்த முக்கியமான சர்வதேசக் கட்டமைப்பைத் திட்டமிட்டுச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். மத அடிப்படைவாதிகள், அந்த வீடியோவில் நாம் பார்த்த தொழில்நுட்பத் தீவிரவாதிகள், இனத்தேசியவாதிகள் (Ethno Nationalists) என அந்த மூன்று தரப்பினரும் பல விஷயங்களில் உடன்படாத போதிலும், ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக உடன்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையை ஒழிக்க விரும்புகிறார்கள். அவர்கள் அனைவரும் அதைத் தங்கள் கதையில் வரும் கிறிஸ்துவுக்கு எதிரான தீய சக்தி போன்ற ஒன்றாகவே கருதுகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் அதை வெளிப்படையாகவே கிறித்துவுக்கு எதிரானது(Anti-Christ) என்று அழைக்கிறார்கள். யுவான், எங்களது புத்தகத்தில் நாங்கள் விவரிக்கும் அந்த அத்தியாயம் குறித்துப் பேசும்போது அஸ்ட்ராவையும் இந்த உரையாடலில் இணைத்துக்கொள்ள நான் விரும்புகிறேன்.
அமெரிக்காவில் நிலத்தடிப் பாதுகாப்பகங்கள் அமைக்கப்பட்ட வரலாறு, மக்கள் எவ்வாறு அந்தப் போக்கை மாற்றியமைத்தார்கள் என்பது குறித்த ஆய்வில் அவர் மிக ஆழமாக ஈடுபட்டிருந்தார். அந்த நிகழ்வு மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு கதை என்றும் அதைப் பற்றி நாம் இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம்.

அஸ்ட்ரா டெய்லர்: மிக்க நன்றி கிளைன். அமி, எங்களை அழைத்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. ஆம், சுருக்கமாகச் சொல்வதானால் 1950 ஆம் ஆண்டுகளில் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக மக்கள் தங்கள் வீட்டுத் தோட்டங்களிலேயே சொந்தமாக குண்டுத் தடுப்பு அறைகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது. சுமார் ஒன்று அல்லது இரண்டு சதவீத குடும்பங்கள் மட்டுமே அவ்வாறு செய்தன. தங்களை மட்டும் பாதுகாத்துக்கொண்டு அண்டை வீட்டார் அழிவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் யோசனையை மக்கள் எதிர்த்தனர். அண்டை வீட்டாரைச் சுட்டுக் கொல்வது குறித்த விவாதம் டைம், லைப் போன்ற இதழ்களில் அப்போது தீவிரமாக நடைபெற்றது. ‘நாங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை, துப்பாக்கிகளை வெளியே நீட்டியபடி நிலத்தடியில் உள்ள ஒரு குழியில் ஒளிந்துகொண்டு நாம் நேசிக்கும் மனிதர்களைத் தடுத்து விரட்ட நாங்கள் விரும்பவில்லை’ என்று மக்கள் கூறினர். அணு ஆயுத ஒழிப்பு இயக்கத்தின் தோற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. சாதாரண மக்களே சரியான தீர்வை முன்வைத்தனர். ‘அணு ஆயுதங்களை ஒழிப்போம், ஒருவருக்கொருவர் எதிராகத் திரும்பி பதுங்கிக் கொள்ளாமல் இருப்போம்’ என்பதே அது. இதில் இன்றைய காலத்திற்கு ஏற்ற ஒரு பாடம் உள்ளது.
நவோமி கிளைன்: இது மிகவும் சுவாரஸ்யமானது. அக்காலத்தில் அவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டிருந்தனர். ஒன்று நீங்கள் பதுங்கிக்கொண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மட்டும் பாதுகாத்துக்கொள்ளலாம் அல்லது நெருக்கடியின் மூல காரணத்தை அணுகி உண்மையில் இந்த ஆயுதங்களுடன் நம்மால் வாழ முடியாது என்று கூறலாம். இது மிகவும் ஆபத்தானது என்பதே அதற்குக் காரணம். அமி, யுவான், உங்கள் இருவருக்கும் தெரிந்தபடி அணு ஆயுத ஒழிப்பு இயக்கம் (Movement for Nuclear Disarmament) மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றது. பல வகைகளில் அந்த இயக்கத்தின் வெற்றியே அதற்கு ஒரு சவாலாக அமைந்தது என்று எங்கள் புத்தகத்தில் நாங்கள் வாதிடுகிறோம்.
அணு ஆயுத ஒழிப்பு இயக்கத்தில் இருந்த பலர் தாங்கள் ஏற்கனவே பல வெற்றிகளைப் பெற்றுவிட்டதாகவும், இனி அதிகாரத்தில் இருப்பவர்களே அந்தப் பணியை முழுமையாக முடித்துவிடுவார்கள் என்றும் நம்பினர். ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்கள் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டதால் ஒரு புதிய சகாப்தம் பிறந்துவிட்டதாகத் தோன்றியது. பெரும்பாலான ஆயுதக் கையிருப்பு ஒழிக்கப்பட்டாலும் அது போதுமானதாக இருக்கவில்லை. இப்போது மீண்டும் ஆயுதக் குவிப்பு நடைபெறுகிறது மேலும் அணு ஆயுதக் கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் புகுத்தப்படுகிறது. அதனால்தான் எங்கள் புத்தகத்தின் இறுதியில் முப்பரிமாண ஆயுத ஒழிப்பு இயக்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
உண்மையில் யுவான், உங்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய ஒரு விஷயம் எங்களிடம் உள்ளது. அது அந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டீபன் மில்லர் சோதனை என்ற புதிய சொல்லாடலாகும். சுருக்கமாகச் சொன்னால், நாங்கள் முன்வைக்கும் வாதம் இதுதான்: காலப்போக்கில் மிகவும் சக்திவாய்ந்த கருவிகள், ஆயுதங்கள் உலகின் மிக மோசமான மனிதர்களின் கைகளில் சேரக்கூடும். அத்தகைய கருவிகள் ஸ்டீபன் மில்லரைப் போன்றவர்களின் கைகளுக்குச் செல்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால் அந்தக் கருவிகளே இல்லாமல் இருப்பதே நல்லது. இந்தக் கருத்து அணு ஆயுதங்களுக்கும் பொருந்தும். செயற்கை நுண்ணறிவுக்கும் பொருந்தும். ஏன் செல்வக் குவிப்புக்கும் கூடப் பொருந்தும்.
செல்வக் குவிப்பு என்பது ஒரு பேரழிவு ஆயுதமாக பார்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். நமது பொருளாதாரத்தின் உச்சியில் குவிந்துள்ள இந்த அளவிலான செல்வம் ஒரு பேரழிவு ஆயுதமாகவே மாறிவிட்டது. நாம் அந்தச் செல்வக் குவியல்கள் எனும் செல்வக்குண்டுகள், தொழில்நுட்பக் குவியல்கள் எனும் தொழில்நுட்பக்குண்டுகள், வழக்கமான வெடிகுண்டுகள் ஆகிய அனைத்தையும் செயலிழக்கச் செய்ய வேண்டும். மிகவும் ஆபத்தான அறநெறியற்ற மனிதர்கள், பேரழிவைக் கூடச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை கொண்டவர்கள் – டொனால்ட் டிரம்ப்பின் பதிவில் பேரழிவை எதிர்கொள்ளும்போதும் ஒருவித அலட்சியமான தோரணையை நாம் காண்கிறோம் அல்லவா அதுபோல – அவர்கள் ஒருவரையொருவர் காந்தம் போல ஈர்த்துக்கொள்ளும் தன்மையைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் இப்போது காண்கிறோம்.
யுவான் கொன்சலாஸ்: நான் ஒரு கூடுதல் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். உங்களில் யாரேனும் இதற்குப் பதிலளிக்கலாம். கடந்த சில நாட்களாக உங்கள் புத்தகத்தை நான் படித்தேன். அது மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. அதே சமயம் எனக்குச் சில கவலைகளும் இருந்தன. பல துருவங்களைக் கொண்ட உலகத்தின் எழுச்சி பற்றியோ அல்லது கிழக்கு ஆசியாவின் எழுச்சி, குறிப்பாக உலகின் தொழில்துறை சார்ந்த தொழிலாளர் வர்க்கம் சீனா, வியட்நாம், இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்தது பற்றியோ மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. பலரின் பார்வையில் அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கத்திற்கும் முதலாளித்துவச் சந்தைகளின் விரிவாக்கத்திற்கும் இதுவே மிகப்பெரிய தடையாக உள்ளது. நீங்கள் குறிப்பிடும் இறுதிக்காலச் சிந்தனையாளர்கள் பலரும் கவலைப்படும் மிகப்பெரிய அச்சுறுத்தலும் இதுதான். அவர்கள் சீனாவைக் குறித்துக் கவலைப்படுகிறார்கள். அமெரிக்காவின் மேலாதிக்கம், முதலாளித்துவம் ஆகியவற்றின் மீது சீனா ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இந்தப் புத்தகத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை.
நவோமி கிளைன்: கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பரவலுக்கு அவர்களுக்கு சீனாவின் மீதான பயம் மிக முக்கியமான காரணியாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன். அதுதான் அவர்களிடம் உள்ள ஒரே வாதமாகவும் இருக்கிறது. நாங்கள் அதைப் பற்றிப் புத்தகத்தில் எழுதியுள்ளோம். நீங்கள் சொல்வது சரிதான். அது புத்தகத்தின் மையக் கருப்பொருள் அல்ல. நாங்கள் அமெரிக்காவிலும் குறிப்பாக இலத்தீன் அமெரிக்கா. ஐரோப்பாவிலும் இது எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது என்பதிலும் தான் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். இருப்பினும் பல துருவங்களைக் கொண்ட உலகின் பிரச்சினை என்பது மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.
நிறுவனங்களுக்குள்ளிருந்தே எழும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது டொனால்ட் டிரம்ப்பிடம் உள்ள ஒரே வாதம் இதுதான்: ‘சீனா… சீனா… சீனா… நாம் இதை உருவாக்கவில்லை என்றால் அவர்கள் உருவாக்கிவிடுவார்கள். கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இப்போது உருவாக்கப்படும் முறையில்தான் உருவாக்க வேண்டும். இல்லையெனில் சீனா அதை உருவாக்கிவிடும்’ என்பது முற்றிலும் தவறான கருத்து. இத்தொழில்நுட்பங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பலதரப்பு அமைப்புகளின் விதிகளுக்கு உட்படுவதற்கும் சீனா அதிக விருப்பம் காட்டுகிறது. உண்மையில் இந்த ஒப்பந்தங்களைச் சிதைத்து வருவது அமெரிக்காதான்.
இந்த ஆண்டு உலக அழிவுக்கான கடிகாரம் மாற்றியமைக்கப்பட்டபோது – அது எப்போதும் ஒரு பதற்றமான நிகழ்வுதான் – இந்த ஆண்டு அது மிகவும் தீவிரமானதாக இருந்தது. அவர்கள் அதை நான்கு வினாடிகள் முன்னோக்கி நகர்த்தினர். அப்போது உயிரியல் ஆயுதங்கள், அணு ஆயுதங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற அச்சுறுத்தல்களைப் பற்றி மட்டுமல்லாமல், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், சீனா போன்ற நாடுகள் அங்கம் வகித்த சர்வதேச ஒப்பந்தங்களை எவ்வாறு புறக்கணித்து, அவை எங்களுக்குத் தேவையில்லை என்று கூறியது என்பது குறித்தும் அவர்கள் விவரித்தனர். அந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கருவிகளும், அத்தகைய கருவிகளைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் சிதைக்கப்படுவதும் தான் இதற்குக் காரணம் என்று நான் கருதுகிறேன்.
அஸ்ட்ரா டெய்லர்: இது அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்குள்ளேயே சொல்லிக்கொள்ளும் ஒரு கதை அல்லது கண்ணோட்டத்தைப் பற்றியதுமாகும். உலகம் அழியும் காலம் அல்லது இறுதித் தீர்ப்பு நாள் குறித்த ஒருவிதமான நம்பிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்வதை நாங்கள் கவனிக்கிறோம். உலகின் எல்லா அரசாங்கங்களும் அத்தகைய கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதில்லை இல்லையா? அமெரிக்க அரசியல் வர்க்கத்தின் சில பிரிவுகள், இஸ்ரேல், இலத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்தக் கருத்து மிகவும் வலுவாக உள்ளது. இது உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என்று நாங்கள் கூறவில்லை. அதனால்தான் சில சக்திவாய்ந்த சர்வதேசத் தரப்பினர் இந்தக் கோட்பாட்டின் மையப் பகுதியாக இல்லை.
அமி குட்மேன்: அஸ்ட்ரா, நவோமி, நீங்கள் பீட்டர் தீல் பற்றி எழுதும்போது ‘இன்று அவரது முன்னாள் சகாக்கள் ஆதரவாளர்களில் வியக்கத்தக்க எண்ணிக்கையிலானோர் டிரம்ப் நிர்வாகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சக்திவாய்ந்த பதவிகளை வகிக்கின்றனர். அவர்களில் மிக முக்கியமானவர் ஜே.டி. வான்ஸ்’ என்று குறிப்பிடுகிறீர்கள். பீட்டர் தீல் யார் என்பதை விளக்க முடியுமா? அவரது நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவின் அதிகார மையத்தில், உள்வட்டத்தில் இடம்பெறுவது எதைக் குறிக்கிறது? இப்போது செய்திகளில் அதிகம் பேசப்படும் நபர்கள், அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவின்போது அவருக்குப் பின்னால் நின்றவர்கள் முன்பு அவரை எதிர்த்தவர்கள் தங்கள் தளங்களிலிருந்து அவரை நீக்கியவர்கள் – ஜெப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க் போன்றவர்கள் – குறித்தும் பேசுங்கள்.
அஸ்ட்ரா டெய்லர்: ஆம். பீட்டர் தீல் நீண்ட காலமாக சிலிக்கான் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வரும் ஒரு சக்திவாய்ந்த கோடீஸ்வரர், துணிகர முதலீட்டாளர் ஆவார். அவர் பேபால் மாபியா குழுவைச் சேர்ந்தவர். கிரிப்டோ துறைத் தலைவராக இருந்த டேவிட் சாக்ஸூடன் இணைந்து பேபாலை(Babel) அவர் நிறுவினார். எலான் மஸ்க்கும் இதில் அடங்குவார். அவர் இப்போது ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX) நிறுவனத்தின் தலைவராக உள்ளார். அவரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். பீட்டர் தீல் மிகவும் சுவாரஸ்யமானவர். அவர் நீண்ட காலமாகவே தீவிர வலதுசாரி நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை பெருமையுடன் வெளிப்படுத்தி வருகிறார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவராக இருந்தபோதே அவரும் டேவிட் சாக்ஸூம் எதிராக ஒரு புத்தகத்தை எழுதினர். ஜனநாயகத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் அவர் முன்னணியில் இருந்துள்ளார். ஒரு காலத்தில், ஒருவித தனிநபர் சுதந்திர ஆதரவு நிலைப்பாடு போல இருந்தவர். இப்போது வெளிப்படையாகவே சர்வாதிகாரப் போக்குடையவராக மாறியுள்ளார். ஜனநாயகமும் சுதந்திரமும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பது போன்ற கருத்துகளையும் அவர் எழுதியுள்ளார். 2015 ஆம் ஆண்டு டிரம்ப்பிற்கு ஆதரவாக வெளிப்படையாக முன்வந்த சிலிக்கான் பள்ளத்தாக்கு பிரமுகர்களில் இவரும் ஒருவர்.
நாங்கள் எங்கள் புத்தகத்தில் எழுதியுள்ளபடியும் நீங்கள் குறிப்பிட்டபடியும், பீட்டர் தீலின் வழிகாட்டுதலில் வளர்ந்த பலரும் இப்போது அதிகாரமிக்க பதவிகளில் உள்ளனர். அவர்களில் மிகவும் செல்வாக்கு மிக்கவர் ஜே.டி. வான்ஸ். பீட்டர் தீல் ஆற்றிய ஒரு சொற்பொழிவைக் கேட்டபோது தனது வாழ்க்கை எவ்வாறு மாறியது என்பது குறித்து வான்ஸ் எழுதியுள்ளார். அந்தச் சொற்பொழிவு சிலிக்கான் வேலிக்குச் சென்று ஒரு துணிகர முதலீட்டாளர்(Venture Capitalist) ஆக வேண்டும் என்ற உத்வேகத்தை வான்ஸூக்கு அளித்தது. அவர் அதில் மிகச் சிறந்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும். அங்குதான் அவர் தனது அரசியல் வளர்ச்சிக்கான நிதியை வழங்கிய முக்கிய நபர்களைச் சந்தித்தார். குறிப்பாக 15 மில்லியன் டாலர் என்ற சாதனை அளவிலான நன்கொடையை அளித்து ஓஹியோ மாநிலத்தின் செனட்டராகும் வான்ஸின் முயற்சிக்கு வித்திட்டவர் தீல் தான். டொனால்ட் ட்ரம்பை ஹிட்லர் என்று விமர்சித்ததற்காக வான்ஸ் மன்னிப்பு கோருவதற்கான மார்-அ-லாகோ (Mar-a-Lago) சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததும் பீட்டர் தீல் தான். வான்ஸ் ஆரம்பத்தில் டிரம்ப் எதிர்ப்பாளராக இருந்தவர்களில் ஒருவர்.
அமி குட்மேன்: அதை விளக்குங்கள்? அதாவது வான்ஸ் சொன்னது…
அஸ்ட்ரா டெய்லர்: ஆம். வான்ஸ் ஒரு காலத்தில் பசுமை ஆற்றலை ஆதரித்தவர். டொனால்ட் டிரம்ப் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகவும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தாத சுவர் கட்டுதல் போன்ற வெற்று வாக்குறுதிகளை அளிப்பதாகவும் கூறி அவரை எதிர்த்தார். அவர் ஒரு சந்தர்ப்பவாதியும் கூட. பீட்டர் தீல் இருவருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தினார் இப்போது வான்ஸை நாம் துணிகர மூலதனம் பின்னணியில் இருந்து வந்த துணை அதிபர் வேட்பாளர் என்று அறிவோம்.
எங்கள் புத்தகத்தில் ஜே.டி. வான்ஸ் மிக முக்கியமான ஒருவராகக் கருதப்படுகிறார். செயற்கை நுண்ணறிவு துறைக்கும் டொனால்ட் டிரம்ப்பிற்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்த உதவியவர் அவர்தான். டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தில் அவர் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக இருந்தார் என்பது நமக்கு நினைவிருக்கிறது. அவர் எப்போதும் அவற்றைக் கடுமையாக விமர்சித்து வந்தார். டேவிட் சாக்ஸின் வீட்டில் வான்ஸ் ஏற்பாடு செய்த ஒரு விருந்து நிகழ்ச்சியின் மூலம் டிரம்ப் செயற்கை நுண்ணறிவுத் துறையை ஆதரிக்கும் நிலைக்கு மாறினார். அது ஒரு நிதி திரட்டும் நிகழ்வாக இருந்தாலும், அதே சமயம் ஒரு கருத்துப் பகிர்வு நிகழ்வாகவும் முன்மொழிவு நிகழ்வாகவும் அது இருந்தது. வான்ஸின் சிலிக்கான் வேலி சகாக்கள் டிரம்ப்பிடம் செயற்கை நுண்ணறிவு, பொருளாதாரத்திற்கு நல்லது என்றும,குறிப்பாக புதைபடிவ எரிபொருள் துறைக்கு மிகவும் பயனளிக்கும் என்றும் கூறினர்.
இப்போது டிரம்ப் நிர்வாகம் செயற்கை நுண்ணறிவில் முழு கவனம் செலுத்துவதையும், மற்ற விஷயங்களில் பெரிய ஈடுபாடு காட்டாததையும் நாம் காண்கிறோம். ட்ரம்பின் இரண்டாவது பதவியேற்பு விழாவின் புகழ்பெற்ற புகைப்படத்தைப் பார்க்கும்போது தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் வரிசையாக முன் வரிசை இருக்கைகளில் அமர்ந்திருப்பதைக் காண்கிறோம். பொருளாதாரத்தை ஆக்கிரமிக்கப்போகும் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு(Generative AI – Capable of creating new content) குறித்த வாக்குறுதிதான் அவர்களை பாசிசப் போக்குடையவர்களாக மாற்றியது என்றும், டிரம்ப் நிர்வாகத்துடன் நாம் காணும் இந்த வியக்கத்தக்க கூட்டணிக்கு அதுவே காரணம் என்றும் நாங்கள் கருதுகிறோம்.
நவோமி கிளைன்: ஆம். அந்தக் கூட்டணி அவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. அது உலகின் முதல் டிரில்லியன் டாலர் மதிப்பிலான நபரை உருவாக்கியது. அமெரிக்காவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் மதிப்பிற்கு இணையான சந்தை மதிப்பைக் கொண்ட நிறுவனங்களை அது உருவாக்கியது. டொனால்ட் டிரம்ப்பிடம் இருந்து அவர்கள் எதிர்பார்த்தது அவர்களுக்குக் கிடைத்தது. அது ஒரு எல்லைப் பகுதி போன்ற சூழல். இப்போது எல்லை செயற்கை நுண்ணறிவு(Frontier AI) என்ற சொற்றொடரை அடிக்கடி கேட்கிறோம். எல்லைப் பகுதி அல்லது பிரான்டியர் என்றால் என்ன என்று யோசித்துப் பார்த்தால், அது கட்டுப்பாடற்ற, சட்டதிட்டங்கள் இல்லாத ஒரு காட்டுமிராண்டித்தனமான சூழலைக் குறிக்கிறது.
அங்கு எந்த விதிகளும் இல்லை. முந்தைய நிர்வாகத்தின் கீழ் அவர்கள் அதிருப்தி அடைந்ததற்குக் காரணம் சில எளிய விதிகள் இருந்ததுதான். தீவிரமான விதிகள் அல்ல. டீப்பேக்(deepfake) உள்ளடக்கங்களை அடையாளம் காட்டுவது, ஆயுத அமைப்புகளுடன் செயற்கை நுண்ணறிவை இணைப்பது, கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு உருவாக்கம் போன்ற ஆபத்தான சூழல்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் போன்றவை. இவை அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே விவாதிக்கப்பட்டவை. ஐக்கிய நாடுகள் சபையிலும் இது குறித்த விவாதங்கள் நடந்தன. எந்த விதிகளும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நியாயப்படுத்த அவர்கள் எப்போதும் சீனாவை ஒரு பூச்சாண்டியாகப் பயன்படுத்துவது சுவாரஸ்யமானது. அமெரிக்காவை விட சீனாவிடம் செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் அதிகம் உள்ளன. குழந்தைகள் செயற்கை நுண்ணறிவுடன்தனிப்பட்ட உறவுகளை வளர்த்துக்கொள்வதைத் தடுப்பதற்கான விதிகள் இதில் அடங்கும். தாங்கள் பேசுவது ஒரு நண்பருடனா ரோபோவுடனா அல்லது சிகிச்சையாளருடனா என்ற குழப்பம் ஏற்படாதவாறு தடுப்பது போன்ற விதிகள்.
முதலாவதாக அமெரிக்கா சொல்வது ஒரு பொய். சீனா என்ன செய்கிறது என்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததே, ஐயோ நாம் இதைச் செய்யாவிட்டால் சீனா செய்துவிடும் என்ற வாதத்தை மக்கள் நம்புவதற்குக் காரணமாகிறது. சீனா இதை எவ்வாறு ஒழுங்குபடுத்துகிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. நான் சிந்திக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த எல்லைப் பகுதி போன்ற சூழலை உருவாக்குவதற்கான முயற்சி எவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதை நாம் உணர வேண்டும்.
இப்போது அந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் முன்வந்து ‘தயவுசெய்து எங்களை ஒழுங்குபடுத்துங்கள். நாங்களே எங்களை ஒழுங்குபடுத்திக்கொள்கிறோம். எங்களுக்கு ஒழுங்குமுறை தேவை என்பதை நாங்கள் அறிவோம். என்று கூறுகிறார்கள். இந்தக் கட்டுப்பாடற்ற சூழலைக் கோரியதும் அதற்கு நிதியளித்ததும் டொனால்ட் டிரம்ப் மூலம் அதைச் சாத்தியமாக்க அவருடன் மூலோபாயக் கூட்டணியை அமைத்ததும் அவர்கள்தான் என்பதை இது மறைக்கிறது. இப்போது அவர்கள் சரி ஒருவேளை நாம் எல்லை மீறிவிட்டோம் இப்போது நம்பகமானவர்களாகத் தெரிய வேண்டும் என்று உணர்கிறார்கள். டொனால்ட் டிரம்ப்போ அதற்கெல்லாம் வழியே இல்லை என்று மறுக்கிறார்.
அவர் ஏன் அதற்கெல்லாம் வழியே இல்லை என்று கூறுகிறார்? அவர் அமெரிக்கப் பொருளாதாரம் முழுவதையும் சீர்குலைத்துவிட்டார். அவருக்குச் சாதகமாக இருக்கும் ஒரே விஷயம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பங்குகளின் விலை ஏற்றம் மட்டுமே. இடைக்காலத் தேர்தல்களுக்கோ, அடுத்த அதிபர் தேர்தலுக்கோ, அதற்கும் முன்பாகவே இந்தக் குமிழி உடைந்து தனக்குச் சிக்கலை ஏற்படுத்துமோ என்று அவர் மிகவும் அஞ்சுகிறார். இதில் அவருக்குத் தனிப்பட்ட முறையிலும் பெரும் முதலீடு உள்ளது. இந்த நிர்வாகத்தின் பரவலான ஊழல் கிரிப்டோ மூலம் ஈட்டிய பணம் அவரும் அவரது குடும்பத்தினரும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் செய்துள்ள பல்வேறு முதலீடுகள் ஆகியவற்றால் அவர் முன்னெப்போதையும் விட அதிக செல்வந்தராகியுள்ளார். அதனால்தான் ஜென்சன் ஹூவாங்கை மேடைக்கு அழைத்து ‘கவலைப்படாதீர்கள். நாங்கள் எதையும் செய்யப்போவதில்லை’ என்று சொல்ல வைப்பது போன்ற பதற்றமான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்கிறார்.
தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்களின் கைகளிலிருந்தே அது நழுவிச் சென்றுவிடுகிறது என்பது போன்ற ஒரு கட்டுக்கதை அல்லது கதை சொல்லப்படுகிறது அல்லவா? சூனியக்காரனின் உதவியாளன், பிராங்கன்ஸ்டீன் கதைகளைப் போல ஒரு அரக்கனை உருவாக்குவது. அவர்கள் அனைவரும் சொல்லும் கதை இதுதான்: ‘ஐயோ நாங்கள் ஒரு சக்திவாய்ந்த அரக்கனை உருவாக்கிவிட்டோம். அது எங்கள் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. இப்போது அது எங்களை அழிக்கப்போகிறது’. நான் என்ன சொல்வேனென்றால், அந்தக் கட்டுக்கதை உண்மையில் நிஜமாகிக்கொண்டிருக்கிறது. அந்த அரக்கன் செயற்கை நுண்ணறிவு அல்ல அமி,அது டொனால்ட் டிரம்ப். அவர்கள் டொனால்ட் டிரம்பை உருவாக்கினார்கள். அவர்தான் அவர்களின் அரக்கன். அவர் கட்டுப்பாட்டை மீறிவிட்டார். அவரால் நிறுத்தவே முடியவில்லை. இப்போது அவர்கள் ‘ஒரு நிமிடம் இருங்கள் ஒருவேளை இது மிக வேகமாகச் செல்கிறதோ?’ என்று யோசிக்கிறார்கள்.
கடுமையான குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்தின் டேவோசில் ஒரு மலை உச்சியில் தங்கள் தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொள்ள விசுவாசமிக்க மனிதர்கள் குழு ஒன்று கூடியது. அவர்கள் பொன்னிற ஒளியில் குளித்தபடி ஜொலிக்கும் ஒரு நகரத்தைக் கண்டிருந்தனர். அந்த நகரம் சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்தது போல பூமிக்கு மேலே மிதப்பது போன்ற தோற்றமளிக்கும் மிக அழகான கட்டிடங்களால் நிறைந்திருக்கும். அவர்களின் அந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்கனவே ஒரு பெயரும் இருந்தது. அந்த மலை உச்சி என்பது டாவோஸ் எனும் உல்லாச விடுதி நகரம். தங்கள் பார்வையை முன்வைத்த அந்த விசுவாசமிக்க மனிதர்கள் அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் ஜாம்பவான்களான ஜாரெட் குஷ்னர், ஸ்டீவ் விட்கோப் ஆகியோர் ஆவர். நேரலையில் ஒளிபரப்பப்பட்ட ஒரு இனப்படுகொலையின் கோரமான சூழலுக்கு மத்தியிலிருந்து ஒரு பிரத்யேக சொர்க்கம் முழுமையாக உருவெடுக்கத் தயாராகிக்கொண்டிருந்தது.
அமி குட்மேன்: இறுதிக்கால பாசிசம்: வாழும் உலகத்திற்கான போராட்டம் என்ற புத்தகத்துடன் வெளியிடப்பட்ட காணொளியின் ஒரு பகுதி இது.
(இறுதிக்காலப் பாசிசம் நூலுக்கு 8 நிமிடத்தில் ஒரு முன்னோட்டக் காணொளி (How Modern Fascism Works | End Times Fascism | Naomi Klein and Astra Taylor) வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் காணொளியில் காசா அழிவுடன் டிரம்ப் உருவாக்கத் திட்டமிட்டிருக்கும் புதிய காசாவின் வானுயர்ந்த கட்டிடங்கள், உல்லாச விடுதிகள், கடற்கரைச் சாலைகள், வண்ண விளக்ககள், செயற்கைத் நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் விளக்கப்படுகின்றன. காசா நகரத்தைக் குண்டுவீசி அழித்து அதிலிருந்து ஒரு அழகிய சொர்க்கத்தை உருவாக்குவதாக டிரம்ப்பும் நதானியேவும் அறிவிக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவுத் தீவிரவாதிகள் இதே கருத்தைச் சொல்கிறார்கள். மதவாதிகள் விவிலியக் கதையின்படி, ‘ஆம் உலகம் அழியப் போகிறது’ என்கிறார்கள். படத்தில் அழிவு, அழிவிலிருந்து புதிய சொர்க்கம, அதன் மேன்மக்களாக அதிமனிதர்கள் தோன்றுவதான கிறித்தவ மத நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் ஹாலிவுட் படங்களான த அபோகலிப்ஸ், டெர்மினேட்டர் 2 : ஜட்ஸ்மென்ட் டே, இன்டிபென்டன்ஸ் டே, டீப் இம்பேக்ட், த நோவாஸ் ஆர்க், 20 டேஸ் லேட்டர், த டே ஆப்டர், ஐ ஆம் லெஜன்ட், சிலோ, எலீசியம் போன்ற படங்களின் பேரழிவுக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. அமெரிக்க-இஸ்ரேலிய அரசியல்வாதிகள், மதவாதிகள், செயற்கை நுண்ணறிவுத் திவீரவாதிகள், ஹாலிவுட் அழிவு சினிமாக்கள் போன்றவற்று இருக்கும் கருத்தியல் இணக்கத்தை நவோமி கிளைனும் அஸ்ட்ரா டெய்லரும் விவரிக்கிறார்கள்.) இதை நவோமி கிளைன், அஸ்ட்ரா டெய்லர் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். நான் இப்போது காசா விவகாரம் குறித்துப் பேச விரும்புகிறேன். வெனிஸில் தற்போது இரண்டு இஸ்ரேலியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் – ரேச்சல் ஸோர், யுவால் ஆபிரகாம் – நாசா என்ற படத்தை வெளியிட்டுள்ளனர். இதற்காக அவர்களின் குடியுரிமையைப் பறிப்பதாக இஸ்ரேலிய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மிரட்டி வருகின்றனர். காசாவில் திட்டமிட்டுக் கொல்லப்படும் நிகழ்வுகள் குறித்துப் பெயர் குறிப்பிட விரும்பாத உயர்மட்ட இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவோமி கிளைன் இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
நவோமி கிளைன்: அதற்காகச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதும் இதில் அடங்கும். நான் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. கண்டிப்பாகப் பார்க்க விரும்புகிறேன். நேரலையில் ஒளிபரப்பப்படும் ஒரு இனப்படுகொலையைப் பதிவு செய்வதற்காகத் தங்கள் சொந்த உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சூழலிலும் செயல்பட்ட பாலஸ்தீனியப் பத்திரிகையாளர்கள் மூலம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்களையே இது உறுதிப்படுத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்களில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
நாங்கள் எமது படத்தில் குறிப்பிடுவது போல டிரம்ப் நிர்வாகம் முன்வைக்கும் கதை இதுதான்: ஒரு பேரழிவிற்குப் பிறகு ஒரு சொர்க்கம் உருவாகும். அவர்கள் புதிய காசா என்று அழைக்கும் ஒன்று அங்கு அமையும். இந்தக் கதையின் சாராம்சத்தை இது மிகத் தீவிரமாக வெளிப்படுத்துவதால் எங்கள் புத்தகத்தை இதைக் கொண்டே தொடங்குகிறோம். இதுவே இதுவரை சொல்லப்பட்ட கதைகளிலேயே மிகவும் ஆபத்தானது என்று நான் நம்புகிறேன். இது ஒரு விவிலியக் கதை. நாம் மத நம்பிக்கை கொண்டவர்களோ இல்லையோ நம் கலாச்சாரத்தில் இது ஆழமாகப் பதிந்துள்ளது. அந்தக் கதையின்படி முதலில் பெருவெள்ளம் வருகிறது. முதலில் பேரழிவு வருகிறது. முதலில் பெருமளவிலான மரணங்கள் நிகழ்கின்றன. அந்தப் பெரும் மரணங்கள், பெரும் தூய்மைப்படுத்தல், இறைவனின் சீற்றம் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கான பொன்னகர் அல்லது சொர்க்கம் உருவாகிறது.
அந்தக் கதை (Noah’s Arc) பெருவெள்ளம், பேழை பற்றிய கதை. இது வெளிப்படுத்தின சுவிசேஷம் நூலில் மிகவும் வன்முறைத் தன்மையுடன் இது விவரிக்கப்பட்டுள்ளது. இதை அப்படியே உண்மையான நிகழ்வாக நம்புபவர்களுக்கு, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான வேறுபாடு குழப்பமடைந்துள்ளது. இது ஒருவிதமான தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் உலகில் நிகழும் நிகழ்வுகள், காலநிலைப் பேரிடர்கள், கோவிட் அல்லது கட்டமைப்புச் சிதைவுகள் போன்றவை நமக்கு எச்சரிக்கை விடுத்து, நாம் செயல்பட வேண்டும் என்பதையும், இது ஒரு நெருக்கடி, அவசர நிலை என்பதையும் உணர்த்துகின்றன. அதற்குப் பதிலாக இவை வெறும் அறிகுறிகளாக மட்டுமே பார்க்கப்படுகின்றன.
‘ஐயோ, இதன் பொருள் நாம் இறுதிக்காலத்திற்குள் நுழைகிறோம்’ என்பதுதான் என்று அவர்கள் கருதுகிறார்கள். இது பலருக்கு மோசமானதாகத் தோன்றினாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு இது மிகவும் சாதகமானதாக அமைகிறது. அதனால்தான் அந்தப் புனைவிலிருந்து நாம் தொடங்கினோம். காசாவில் நிகழும் பேரழிவிலிருந்து எந்தவொரு சொர்க்கமும் உருவாகப்போவதில்லை. டிரம்ப் நிர்வாகம் அப்படித்தான் கதை சொல்கிறது. அவர்கள் உருவாக்கத் திட்டமிடுவது ஒரு தனியார்மயமாக்கப்பட்ட சொர்க்கத்தை. அவர்கள் இத்தகைய விவிலியக் கதைகளைப் பயன்படுத்துகிறார்கள். நிச்சயமாக இவை அனைத்தும் இலாப நோக்கத்திற்காகவே. இது டிரம்ப் நிர்வாகம். ஒரு கூட்டுப் புதைகுழியின் மீது ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட அவர்கள் விரும்புகிறார்கள். அது ஒரு நேரடி அர்த்தம் கொண்ட கதை என்பதை நீங்கள் அங்கு பார்த்தீர்கள்.
அரசு செயல்பாடுகள் தனியார்மயமாக்கப்படும் பரிணாம வளர்ச்சியில் அமைதிக்கான வாரியம்(Board of Peace) முக்கியமானது என்று நாங்கள் கருதுகிறோம். டிரம்ப் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் சபையைத் தாக்குவது, அதற்கான நிதியை நிறுத்துவது மட்டுமல்லாமல், அதற்குப் பதிலாக அமைதிக்கான வாரியம் என்ற அமைப்பைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இதில் டிரம்ப் வாழ்நாள் முழுவதும் தலைவராக இருப்பார். அவர்கள் அதைக் கட்டுப்படுத்துவார்கள். அத்துடன் தங்களுக்குத் தாங்களே சட்டப் பாதுகாப்பையும் வழங்கிக்கொள்வார்கள்.
பங்கரிங் அல்லது தப்பித்தல் என்று நாங்கள் குறிப்பிடுவதில் இதுவும் ஒரு பகுதி. அவர்கள் அரசை ஒரு சுரங்கத் தளமாகப் பார்க்கிறார்கள். அமெரிக்காவைத் தங்களுக்குத் தேவையானவற்றைச் சுரண்டி எடுக்கும் இடமாகவே அவர்கள் கருதுகிறார்கள். செல்வம், வளங்களைச் சுரண்டுவது மட்டுமல்ல. அதை அவர்கள் செயல்படுத்துவதை நாம் பார்க்கிறோம். சட்டப் பாதுகாப்பு போன்ற தங்களுக்கு முக்கியமான பிற விஷயங்களையும் அவர்கள் அதிலிருந்து பெறுகிறார்கள் இல்லையா? அமைதிக்கான வாரியம் அவர்களுக்கு அதை வழங்குகிறது.
அதனால்தான் நாம் எமது நூலை அதிலிருந்து தொடங்குகிறோம். இது இந்தக் கூட்டணியில் உள்ள பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைக்கிறது. காசா, ஈரான், விவகாரங்கள் மெசியாவின் வருகையைக் குறிப்பதாக ஆழமாக நம்பும் மதத் தீவிரவாதிகள், கிறிஸ்தவ சியோனிஸ்டுகள், மெசியானிக் யூதர்கள் உட்பட இதில் உள்ளனர். இவர்களைப் பொறுத்தவரை வன்முறை எவ்வளவு தீவிரமாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது.
ஈரானில் பேரழிவை ஏற்படுத்தும் வகையிலான வன்முறையை வரவேற்க வேண்டும் என்று தங்கள் உயர் அதிகாரிகள் கூறுவதாக, அமெரிக்க ராணுவ வீரர்கள் புகார் அளித்ததை உங்கள் நிகழ்ச்சியில் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். இயேசுவின் மறுவருகைக்கு இதுவே அறிகுறி என்பது அவர்களின் வாதம். இதில் மதத் தீவிரவாதிகள் மட்டுமல்ல, மதச்சார்பற்ற கண்ணோட்டம் கொண்டவர்களும் அடங்குவர். பைபிளில் கூறப்பட்டுள்ள இந்த நிகழ்வு குறித்த கதையை டிரம்ப் நம்புகிறார் என்று நாங்கள் கருதவில்லை. செல்வச் செழிப்புடன் கூடிய மேன்மை நிலை போன்ற ஒரு கருத்தாக்கத்தை அவர் நம்புகிறார் என்றே நாங்கள் கருதுகிறோம். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புதிய காசா குறித்த படங்களை டிரம்ப் பகிர்வதைப் பார்க்கும்போது, இத்தகைய கதைகள் அவரது சிந்தனையை எவ்வாறு சிதைத்துள்ளன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
யுவான் கொன்சலாஸ்: மீதமுள்ள குறைந்த நேரத்தில், வளர்ந்து வரும் இந்தப் பாசிசத்திற்கு எதிரான மக்கள் இயக்கங்கள் எதிர்ப்பு இயக்கங்களைப் பற்றி நீங்கள் பேச முடியுமா என்று அறிய விரும்புகிறேன். அதே சமயம் ஜான் பெல்லாமி பாஸ்டர் போன்ற மார்க்சியர்களின் விமர்சனங்களையும் நீங்கள் பரிசீலிக்கலாம். அமெரிக்காவில் பாசிச இயக்கத்தின் மக்கள் தளம் என்பது உண்மையில் நடுத்தர வர்க்கம்தான் என்று அவர் வலியுறுத்துகிறார். அதாவது வால்மார்ட், டார்கெட் போன்ற பெருநிறுவனங்களால் தங்கள் சிறு வணிகங்களை இழந்தவர்கள், ஏகபோக முதலாளிகளின் வளர்ச்சியால் நசுக்கப்பட்ட உரிமையாளர்கள் போன்றோர் தங்கள் மீட்புக்காக இப்போது பாசிச இயக்கத்தை நோக்கித் திரும்பியுள்ளனர்.
அஸ்ட்ரா டெய்லர்: முதலில் இரண்டாவது கேள்விக்கு பதிலளிக்கிறேன். பாசிசம் என்பது எப்போதும் பாதிக்கப்பட்ட அதிகார வர்க்கத்தினரின் ஒரு இயக்கமாகவே இருந்து வருகிறது. இது அரசியல் பெருநிறுவன உயரடுக்கினருக்கும் மிக மோசமான நிலையில் இல்லாத, அதே சமயம் தங்கள் சமூக அந்தஸ்தை இழந்துவிட்டதாக உணரும் மக்களுக்கும் இடையே ஒரு செங்குத்து ஒற்றுமையை (vertical solidarity) உருவாக்குகிறது.
இது அவர்களின் பாதுகாப்பற்ற உணர்வை உண்மையான அதிகார மையங்களான பெரும் செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் மீது திருப்புவதற்குப் பதிலாக குடியேறிகள், திருநங்கையர், திருநம்பிகள், பெண்ணியவாதிகள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதும் பலிகடாக்களாக்கப்படக்கூடியவர்கள் மீதும் திருப்புகிறது. எலான் மஸ்க் எக்ஸ் தளத்தை – முன்பு ட்விட்டர் – வாங்கியதை நாம் அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு ஊடகச் சூழலைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான வழியாக இருந்தது.
இதன் மூலம் மக்கள் தங்கள் கோபத்தைத் தன்னைப் போன்றவர்கள் மீது திருப்புவதற்குப் பதிலாக இடதுசாரிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள் மீது திருப்புவதற்கு அவர் உதவினார். முதலாளித்துவத்தையும் தற்போதைய அதிகார அமைப்பையும் பாதுகாக்க பாசிசம் ஒரு செங்குத்து ஒற்றுமையை உருவாக்குகிறது என்பது சரிதான். இது கடந்த கால பாசிசத்திற்கும் பொருந்தும் இன்றும் பொருந்தும்.
எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்த நாம் செய்ய வேண்டியது கிடைமட்ட ஒற்றுமையை உருவாக்குவதாகும். பாதிக்கப்படக்கூடியவர்களைப் பலிகடாக்களாக்காமல், நமக்கான ஒரு கூட்டணியை உருவாக்கி, வழக்கத்திற்கு மாறான கூட்டாளிகளையும் நாம் கண்டறிய வேண்டும்.
அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் வளர்ந்து வரும் பாசிச எதிர்ப்பு இயக்கங்களில் இதை நீங்கள் காணலாம். ஒரு முக்கியமான விஷயம் – நவோமி இதைக் குறிப்பிட்டிருந்தார் – நாம் கவனித்து வரும் இந்த இறுதிக்கால பாசிசம் என்பது ஒரு சீரான சித்தாந்தம் அல்ல. அது ஒரு ஒற்றைத் தன்மையுள்ள அமைப்பு அல்ல. அது மூன்று குழுக்களின் பிளவுபட்ட கூட்டணியாகும்: மதரீதியான உலக முடிவு நம்பிக்கையாளர்கள், தொழில்நுட்பத்தை மிக வேகமாக வளர்க்க விரும்பும் தீவிரவாதிகள், இனத்தேசியவாதிகள் போன்றோர் இவர்கள். நிலைமை மேலும் மேலும் நிலையற்றதாக மாறப்போகிறது என்ற உணர்வுதான் இவர்களிடையே பொதுவானதாக இருக்கிறது. இவர்கள் மூவரும் தங்கள் பேழைகளைக் கட்டுகிறார்கள் என்றும், இவர்களே வெள்ளப்பெருக்குகளை ஏற்படுத்துகிறார்கள் என்றும் நாம் கூறுகிறோம். அவர்கள் வீழ்ச்சியைத் துரிதப்படுத்துகிறார்கள். பதுங்குக்குழி தேசம், சொர்க்கம் செல்வது, டிஜிட்டல் வர்க்கம் பற்றிய தங்களின் பல்வேறு கற்பனைகளில் மூழ்கி இந்த பொதுவான உலகத்தைக் கைவிட்டு, வீழ்ச்சியை வரவழைத்துக்கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
எமது எதிர்ப்பு என்பது அடிப்படையில் பூமியில் தங்கியிருப்பதற்கான விருப்பத்திலும், இந்த இடத்தின் மீது பற்றுறுதி கொள்வதிலும் வேரூன்றியிருக்க வேண்டும். படைப்புக்கு, இயற்கைக்குத் துரோகம் இழைப்பவர்கள் என்று அவர்களை நாங்கள் புத்தகத்தின் ஒரு பகுதியில் குறிப்பிடுகிறோம். துரோகிகள் என்ற அந்த வார்த்தையை நாங்கள் சாதாரணமாகப் பயன்படுத்தவில்லை. அவர்கள் தேசியக் கொடிக்கோ அல்லது நாட்டிற்கோ துரோகம் இழைப்பவர்கள் அல்ல. மாறாக பூமியில் உள்ள உயிருக்கும், நம்முடைய பொதுவான மனிதநேயத்திற்கும், நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் இந்த கிரகத்திற்கும் துரோகம் இழைப்பவர்கள் என்று நாங்கள் கூறுகிறோம். இங்கிருத்தல், இந்த இடத்துடனான பிணைப்பு மீதான அந்த உறுதிப்பாட்டை நாம் பல போராட்டங்களில் காண்கிறோம். நாடு முழுவதும் பரவி வரும் தரவு மையங்களுக்கு எதிரான இயக்கம், நான் என் சமூகத்தையும் என் அண்டை வீட்டாரையும் பாதுகாப்பேன் என்று மக்கள் கூறும் குடியேற்ற அமலாக்க முகமைக்கு எதிரான எதிர்ப்பு, பாசிஸ்டுகளால் எப்போதும் தாக்கப்படும் தொழிலாளர் உரிமைகளுக்காக மக்கள் எழுந்து நின்று போராடுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தடுப்பு முகாம்களுக்கு எதிரான போராட்டங்கள் எனப் பலவற்றில் இதைக் காணலாம்.
உலகம் முழுவதும் இத்தகைய எதிர்ப்பு வளர்ந்து வருவதை நாம் காண்கிறோம். தரவு மையங்களுக்கு எதிரான கிளர்ச்சிதான் நமக்கு மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. இது புதிய எல்லைக்கோடுகளை வகுத்து மக்களை ஒன்றிணைக்கிறது. ஒரு வருடம், இரண்டு வருடங்களுக்கு முன்பு கலாச்சாரப் போர் சார்ந்த விவகாரங்களில் மோதிக்கொண்டிருந்த மக்களை இது இப்போது ஒன்றிணைக்கிறது. நமக்கு இடையே பல பொதுவான விஷயங்கள் உள்ளன.நம்மை ரோபோக்களைக் கொண்டு இடமாற்றம் செய்ய விரும்பும் ஒரு வர்க்கத்தினர் இருக்கிறார்கள். இயந்திரங்களுக்கு எதிராக நாம் மனிதநேயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று அவர்கள் இப்போது கூறுகிறார்கள்.

நவோமி கிளைன்: யுவான், நீங்கள் குறிப்பிட்ட அந்தச் சிறு தொழில்முனைவோரும் இதில் அடங்குவர். புதிய கூட்டணிகளை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இது உண்மையில் அமைகிறது. முதல் முறை தனக்கு வாக்களித்த பலருக்கு டொனால்ட் டிரம்ப் துரோகம் இழைத்துள்ளார். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், செல்வாக்கு மிக்க பல ஜனநாயகக் கட்சியினரும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து நிதி பெறுகிறார்கள். அந்த நிறுவனங்களுக்கு எதிரான எதிர்ப்பை அவர்கள் செய்யமாட்டார்கள். மடிசன் நகரில் ஒரு நகைச்சுவைக் கலைஞர் குறிப்பிட்டது போல பியர் பானத்திற்குப் பிறகு இரு கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிக முக்கியமான விவகாரம் இது. இதனை ஜனநாயகக் கட்சியினர் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராக இல்லை. இரு கட்சிகளின் ஆதரவையும் கொண்ட அந்தப் பெரும் விவகாரத்திலிருந்து அரசியல் ஆதாயம் பெற வேண்டுமானால், உங்கள் நிதி வழங்குநர்களுக்கு எதிராகச் செயல்பட நீங்கள் தயாராக இருக்க வேண்டும் அல்லது ஆரம்பத்திலேயே அவர்களிடமிருந்து நிதியைப் பெறாமல் இருக்க வேண்டும்.
யுவான் கொன்சலாஸ்: நவோமி இந்தச் செயற்கை நுண்ணறிவு பாசிஸ்டுகளின் வணிக மாதிரி வெற்றிபெற்று லட்சக்கணக்கான மக்களை வேலையிழக்கச் செய்தால் அவர்கள் எப்படிப் பணம் சம்பாதிப்பார்கள்? ஆரம்பகால ஏகபோக முதலாளித்துவக் காலத்தில் ஹென்றி போர்டு ஒரு விஷயத்தை நம்பினார். தொழிலாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்குவதற்கு ஏற்றவாறு அவர்களுக்குப் போதுமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அது.
நவோமி கிளைன்: இது குறித்து அவர்கள் அவ்வளவு ஆழமாகச் சிந்தித்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. குறுகிய காலத்தில் மற்ற வணிக நிறுவனங்களுக்குத் தங்கள் பொருட்களை விற்பதன் மூலமே வருமானம் ஈட்ட முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். அதனால்தான் யுவான், இது ஒரு குமிழி போன்றது, இது ஒரு சுரண்டல் செயல்முறை, இந்தக் குமிழி இப்போது உழைக்கும் மக்கள் அவர்களின் ஓய்வூதியங்கள் மீது வெடித்துச் சிதறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்று கருதுகிறோம்.
அஸ்ட்ரா டெய்லர்: ஆம். அரசாங்கம் ராணுவத்துடன் கைகோர்ப்பதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். பலான்டிர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பீட்டர் தீலின் சக ஊழியரான அலெக்ஸ் கார்ப் கூறிய ஒரு கருத்து உள்ளது. எங்கள் புத்தகத்தில் நாங்கள் அதை மேற்கோள் காட்டியுள்ளோம்: இந்தத் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைவரின் வேலைகளையும் பறித்துக்கொண்டு அதே சமயம் ராணுவத்துடன் இணைந்து செயல்படாமல் இருக்க முடியும் என்று நினைத்தால் அவர்கள் – நவோமிசொன்னதை நான் சற்று மாற்றிச் சொல்கிறேன் – அவர்கள் முட்டாள்கள். அவர் அடிப்படையில் என்ன சொல்கிறார் என்றால், ‘வேலைவாய்ப்புகளை முற்றிலுமாக அழித்தொழிக்கும் ஒரு தொழில்நுட்பத்தை நீங்கள் உருவாக்கத் திட்டமிட்டால் அரசுடன் நீங்கள் இணைய வேண்டியிருக்கும். அத்துடன் வாழ்வாதாரத்தை இழந்த பெருந்திரளான மக்களைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், அடக்கி வைக்கவும் தேவையான வழிமுறைகளை உருவாக்கவும் அரசுக்கு நீங்கள் உதவ வேண்டியிருக்கும்.’
அமி கோல்ட்மேன்: உங்கள் புத்தகத்தின் இறுதிப் பகுதியுடன் இதை முடிக்க விரும்புகிறேன். ‘இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்டச் சூழலில் பிறக்க நாங்கள் விரும்பவில்லை. இப்போது ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். இறுதிக்கால பாசிஸ்டுகளைப் பின்பற்றி அழிவை நோக்கிச் செல்லலாம் அல்லது அவர்கள் மிகவும் அஞ்சும் வகையிலான, கட்டுக்கடங்காத எல்லைகளைத் தாண்டிச் செயல்படும் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்ப உறுதிபூணலாம். அந்த இயக்கம் அவர்களின் ஆயுதங்களைப் பறித்து, அவர்களின் குற்றங்களுக்கு அவர்களைப் பொறுப்பேற்கச் செய்து, இந்தப் பூமியில் உள்ள சொர்க்கத்தைப் பாதுகாக்கும்.’ இவைதான் இன்று வெளியாகியுள்ள இறுதிக்கால பாசிசம்: உயிருள்ள உலகத்திற்கான போராட்டம் என்ற புதிய புத்தகத்தின் இணை ஆசிரியர்களான நவோமி கிளைன், அஸ்ட்ரா டெய்லர் ஆகியோரின் வார்த்தைகள்.
*


Leave a Reply