
யமுனா ராஜேந்திரன்
08 Oct 2026— 1 min read

இது மிகவும் முக்கியமான விஷயம். ஆராய்ச்சியாளர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் உண்மை சரிபார்ப்பாளர்களின் ஒரு பெரிய குழு என்னிடம் உள்ளது மட்டுமல்லாமல், எனது வீடியோக்களில் நான் சொல்லும் அனைத்தும், ஒவ்வொரு வாதமும், ஒவ்வொரு உண்மையும், அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க மீண்டும் மீண்டும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. அது எவ்வளவு துல்லியமானது என எனது முழு வீடியோவையும் முடித்த பிறகு நான் அதை ஒரு வழக்கறிஞரைக் கொண்டு சரிபார்க்கிறேன். வெளி அழுத்தம் மிக அதிகமாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். என்னால் தவறிழைக்க முடியாது. உலகின் எந்த நாட்டிலும் ஜனநாயகம் பலவீனமடையும் போதெல்லாம், மக்களுக்குத் தைரியம் தேவைப்படும் போதெல்லாம், நமது கதை அவர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கட்டும்.
–துருவ் ரத்தி / பிரான்ஸ் 24 நேர்காணல் (19 ஏப்ரல் 2024)
துருவ் ரத்தியின் சில காணொளிகளை முழுவதுமாகப் பார்த்தேன். முதலில் அதன் வடிவ நேர்த்தி. அதிகமாக ஒரு பிரேமும் இல்லாத படத்தொகுப்பு. 25-30 நிமிடங்கள். தெளிவான, காட்சி உதாரணங்கள் நிறைந்த, வேகமான, தர்க்கப்பூர்வான உரை. அவரது கருத்தியல் எனும் அளவில் கீதையில் இருந்தும் உபநிஷத்துகளில் இருந்தும் மேற்கோள் காட்டும் மதநம்பிக்கை கொண்ட தாராளவாத, செக்யூலர், தேசியவாதி அவர் என்று தெரிகிறது. உறுதியான பி.ஜே.பி. எதிர்ப்பு. அவரிடமிருந்து கற்றுக் கொள்வதை தாராளவாதிகளும் இடதுசாரிகளும் திராவிட மரபினரும் ஒரு பயிற்சியாகவே மேற்கொள்ள முடியும்.
துருவ் ரத்தியின் சமூக ஊடகப்பதிவுகளைப் பின்தொடர்பவர்கள் 10 கோடிப் பேர் என, அவர் தெரிவிக்கிறார். தனது இலக்கு 100 கோடிப்பேரை எட்டுவது எனவும் அவர் தெரிவிக்கிறார். 2024 இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் இந்தியப் பிரதமரையடுத்து உலகில் அதிகம் பேசப்பட்ட இந்தியப் பெயர் ஜெர்மனியில் வாழும் ஜெர்மனி வதிவிட உரிமை பெற்ற, ஜெர்மன் காதலியை மணந்துகொண்ட இருபத்தியொன்பது வயது இளைஞரான துருவ் ரத்தியினுடைய பெயர்தான்.
தேர்தலின் இறுதிக்கட்டத்தில் ரத்தியின் 25 நிமிட ஒளிப்பதிவு வெளியாகிறது. மிகுந்த உணர்ச்சிப் பூர்வமான ஒளிப்பதிவு அது. பாசிசம் இந்தியாவை நெருங்கிக் கொண்டிருக்கிறது எனும் அச்சத்தையும் பதட்டத்தையும் இந்திய மனங்களில் அந்த ஒளிப்பதிவு விதைத்தது. அந்தகார இருளிலிருந்து தப்புவதற்கு முயலும் ஒரு மனிதனின் கடைசிக் கதறலைப் போல அவரது வார்த்தைகள் ஒலித்தன.

மோடி தனது பாரதிய ஜனதா கட்சி மொத்தப் பாராளுமன்ற இடங்களில் 400 இடங்களைப் பெறும் எனச் சூளுரைத்தார். இந்து ராஜயத்தின் பிரகடனமாக அரசியலமைப்பை மாற்றுவது என்பதற்கான அகந்தையிலிருந்து மோடி பேசிக் கொண்டிருந்தார். முஸ்லீம்களும் சிறுபான்மை மக்களும் அச்சத்தில் ஆழ்ந்த நாள் அது. அந்தப் பதட்டமான நாளில் இந்திய ஜனநாயகத்தின் மீதான தனது நம்பிக்கையைத் துருவ் ரத்தி வெளிப்படுத்தினார்.
2014 முதல் 2024 வரையிலான இந்தியக் கருத்துச் சுதந்திரத்தின் நிலையை நினைத்துப் பார்ப்போம். கலைஞர்களும் எழுத்தாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மனித உரிமையாளர்கள் அர்பன் நக்சல்கள் எனும் பெயரில் வழக்கு விசாரணையின்றி சிறையில் தள்ளப்பட்டார்கள். பாடப்புத்தகங்கள் மாற்றி எழுதப்பட்டன. பிரதான ஊடகங்கள், குறிப்பாகத் தொலைக்காட்சிகள் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகள் அச்சுறுத்தல்களால் பெரிதும் சமரசம் செய்யப்பட்ட நிலையில் டிவிட்டர், இனஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில்தான் சுயாதீன ஊடகவியலாளர்கள் தமது கருத்தை வெளிபடுத்தக் கூடியதாக இருந்தன.
உலகின் அதிக எண்ணிக்கையிலான யூடியூப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்கள் என, 80 கோடிகளுக்கும் அதிகமான இணையப் பயனர்களுடன் இந்தியா டிஜிட்டல் வழி தொடர்பாடலுக்கான விரிந்த களமாக இருக்கிறது. இந்தக் கருத்துச் சுதந்திர வெளியை டிஜிட்டல் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதன் வழியில் மூடிக்கட்டுகிற முயற்சியை பிஜேபி அரசு முயற்சித்துக் கொண்டிருந்தது.
போலி செய்திகளைச் சமாளிக்க இந்த நடவடிக்கைகள் அவசியம் என்று அரசாங்கம் கூறி வந்தது. தேர்தல்கள் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இந்தியாவின் உச்ச நீதிமன்றம், பிஜேபி அரசும் அரசு நிறுவனங்களும் குறித்த ஆட்சேபனையான செய்திகளை அடையாளம் காண்பதற்கான அரசின் உத்தியோகப்பூர்வ முன்முயற்சியை நிறுத்தி வைத்தது. அரசும் அதன் நிறுவனங்களும் தொடர்பான தவறான தகவல்களைக் குறித்த உண்மை சரிபார்ப்பு அமைப்பை நிறுவுவதற்கான அறிவிப்பை இந்தியாவின் மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட ஒரு நாள் கழித்து நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளியானது.
மோடியின் இரண்டாவது பதவிக்காலத்தின் கடைசி ஆண்டில் 2023 தொலைத்தொடர்பு மசோதா, 2023 ஆம் ஆண்டின் வரைவு ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை மசோதா, 2023 ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் மூலம் சமூக ஊடகங்களை முற்றிலும் முடக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தது. 400 இடங்களைப் பெறுவோம் என்பது பொய்த்து மோடி வெறும் 240 இடங்கள் பெற்று சிறுபான்மை அரசாகப் புதிய சகாப்தத்தில் நுழைகிறார். இந்தப் புதிய நிலைமை சமூக ஊடகச்சுதந்திரத்தின் மீதான அழுத்தம் மட்டுப்படுவதற்கான வாப்பைத் திறந்திருக்கிறது.
இணையம் கண்டுபிடிக்கப்பட்ட 1983 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கடந்த 40 ஆண்டுகளில் சமூக ஊடகங்கள் பல வடிவங்களில் உருவாகி இருக்கின்றன. சுயாதீன இணையதளங்கள், வலைப்பூக்கள், டிவிட்டர், இன்ஸ்டாகிராம். யூடியூப் சேனல்கள் என்பதற்கு அப்பால், விஞ்ஞானம முதல் தத்துவம், அரசியல் ஈராக அன்றாட வாழ்வு அனுபவங்கள் வரை சமூக ஊடகத்தளங்கள் சாதாரண மனிதனின் பிரக்ஞையை உருவாக்குவதில் பெரும் பாத்திரம் வகிக்கின்றன.
அரசும் தவறுகள் செய்யும் அதிகார வர்க்கமும் இந்த அறிவுப் பரவலாக்கத்தைக் கண்டு அஞ்சுகின்றன. இதனால் உலகின் அனைத்து நாடுகளின் அரசுகளும் சமூக ஊடகங்களின் செல்வாக்கை மட்டுப்படுத்த, ஒடுக்க முயலும் அதே வேளையில், சமூக மாற்றத்தை விளைபவர்கள் இந்த ஊடகங்களை மக்களுக்கு அறிவுறுத்தப் பயன்படுத்துகிறார்கள்.
மெக்சிக்கோவின் பழங்குடியின மக்களின் எழுச்சியான ஜபடிஸ்டா புரட்சி முதன் முதலில் தனது விடுதலைப் பிரகடனத்தை இணையத்தில்தான் வெளியிட்டது. இக்காரணத்தால் அப்புரட்சி இன்டர்னெட் புரட்சி எனவே அறியப்படுகிறது. அரபுநாடுகளில் மன்னராட்சிகளுக்கு எதிராக ஜனநாயகம் வேண்டி அரபு மக்களின் எழுச்சி உருவானபோது கிளர்ச்சியாளர்கள் இணையத்தின் வழிதான் தமது போராட்டத்தை ஒருங்கிணைத்தார்கள்.
ஸ்பெயின் ஆட்சியதிகாரத்தில் இடம்பெற்றிருக்கும் இடதுசாரிக் கடசியான பெடோமாஸ் தனது கட்சித் தந்திரோபாயத்தின் பகுதியாகச் சமூக ஊடகங்களை முழுமையாகப் பயன்படுத்துவது என்பதைக் கடைப்பிடித்து வருகிறது.
விடுதலை நோக்கிய சொற்களையும் கருத்தாக்கங்களையும் கையப்படுத்துவது இன்று உலகெங்கிலும் வலதுசாரிகளுக்குக் கைவந்த கலை. அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் முதல் பிரேசிலின் பொல்சனாரோ ஈராக இந்திய மோடி வரை இதனைக் கல்வித்துறை முதல் சமூக ஊடகங்கள் வரை தமது கட்டுப்பாடுக்குள் கொண்டுவருவதன் வழி சாதிக்க முனைகிறார்கள்.
முதலாளித்துவமும் பாசிசமும் வலதுசாரி இயக்கங்களும் இன்று எவ்வாறு வெற்றி பெறுகின்றன? இவை முதலில் தமக்கான கருத்திணக்கத்தை மக்களிடம் உற்பத்தி செய்கின்றன. எல்லோரையும் உணர்ச்சிநிலையில் வைத்திருந்து அதனை அவர்கள் செய்து முடிக்கிறார்கள் சமூக அமைப்புக்கும் பிரக்ஞைக்குமான உறவுதான் விடுதலைக் கோட்பாட்டின் முக்கியமானதும் அடிப்படையானதுமான விஷயம்.
ஹங்கேரியரான லுக்காக்ஸ், இத்தாலியரான கிராம்சி, பிரெஞ்சுக்காரரான அல்தூசர், அமெரிக்கரான நோம் சாம்ஸ்க்கி என, அனைவரும் பிரக்ஞை – கருத்துருவாக்கம் – மேலான்மை, இணக்கம் உருவாக்குதல் பற்றிப் பேசுவதில் நிலவும் அமைப்பை ஆய்வு செய்வதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
சமூக அமைப்புக்கும் தனி மனிதனது பிரக்ஞைக்குமான உறவு இயங்கியல் உறவு. எல்லாவகைத் தத்துவ நோக்குகளும், கோட்பாட்டுப் பார்வைகளும், அறிவுத்துறைகளும் தீர்க்கவேண்டிய அடிப்படைப் பிரச்சினை இதுதான். நாம் வாழும் நிலவும் அமைப்பு பிரச்சினையாக, சிக்கலானதாக, வலிதருவதாக, நெருக்கடி மிக்கதாக, பாசிசமாக, மாற்றவேண்டியதாக இருக்கிறதா? அதற்குப் பிரக்ஞையின் பங்கு என்ன? அதனை மாற்ற வேண்டியதில் மனிதனின் பங்கு என்ன?
கிராம்சி, அல்தூசர், சோம்ஸ்க்கி போன்றவர்கள் கருத்தை உருவாக்குவதில் பகாசுர சக்தி வாய்ந்த ஊடகங்களின் செல்வாக்கை, மரபின் செல்வாக்கை உணர்ந்தவர்கள். கருத்து வன்முறை அரச இயந்திரமாக மாறுவதை உணர்ந்தவர்கள், பாசிசத்தில் இரு கூறுகள் உள்ளன. முதலாளித்துவப் பொருளாதாரம் நெருக்கடி நிலையை எட்டும்போது ஏகபோக மூலதனம் சட்டமுறையிலும் சட்டம் கடந்தும் தனது அதிகாரத்தை நிறுவும் என்பது.
இதற்கு வன்முறையை அது பயன்படுத்தும் என்பது ஒரு பொருளியல் வரையறை. டிமிட்ரோவ், கிராம்சி, ஹோர்க்கைமர் போன்றோர் இந்தப் பொருளாதார வரையறையைத் தாண்டி, கலாச்சார அரசியலை இதில் கொண்டு வருகிறார்கள்.
பாசிசம் சுயாதீனமானது, அது முதலாளித்துவவாதிகளிலுள்ள அதிதீவிரவாதிகளால் முன்னெடுக்கப்படுகிறது. பிற்பாடு முதலாளித்துவ சமூக ஜனநாயகவாதிகளாலும் கட்டுப்படுத்த முடியாத நிலையை அது அடைகிறது.
தனக்கென ஒரு பாரா மிலிட்டரியை அது கொண்டிருக்கிறது. தேசிய ஐதீகங்களைக் கட்டியெழுப்பி அதன்வழி ஒரு வகை தேசியப் பெருமிதத்தை வெகுஜன உளவியலாக்கத்தின் வழி உருவாக்குகிறது. ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தையும் குலைக்கிறது.
கிராம்சியின் கலாச்சார மேலான்மை என்பது இங்கு கவனம் கொள்ளத்தக்கது. இந்தியாவில் பார்ப்பனிய மைய இந்துத்துவமாக இன்று இது நிலவுவது இந்திய வகை பாசிசம்தான். ஜனநாயக நிறுவனங்கள் குலைப்பு, ஆர்.எஸ்.எஸ். எனும் பாரா மிலிட்டரி அமைப்பு, சட்டத்தினுள்ளும் சட்டத்தை மீறியும் வன்முறை, மதத்தேசிய பெரும்பான்மைவாதம் என்பது இந்தியப் பாசிசம்தான்.
சரியான பகுப்பாய்வும் எதிர் அரசியல் திட்டமும், இடதுசாரிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் ஒற்றுமையும் இல்லாமல் இந்த இந்துத்துவப் பாசிசத்தைத் தடுத்து நிறுத்தவே முடியாது. கிராம்சி மேலான்மை என்று சொல்வதும் சோம்ஸ்க்கி இணக்கத்தை உற்பத்தி செய்தல் என்று சொல்வதும் ஒன்றுதான்.

கிராம்சி, அவருக்குப் பின் வந்த அல்தூசர் போன்றவர்கள் சமூகத்தின் மேல் கட்டுமானத்தை வன்முறை வழியிலானது; கருத்தியல் வழியிலானது என இரு கூறாகப் பிரிக்கிறார்கள். கலாச்சார இணக்க உருவாக்கலைக் கருத்தியல் தளத்தில் வைக்கிறார்கள். இதனுள் ஒடுக்குபவன் ஒடுக்கப்படுபவன் இடையிலான மேலான்மைக்கான போராட்டத்தை முன்வைக்கிறார்கள். கருத்தியல் மேலான்மைக்கு எதிரான போராட்டம் என்பது பிருக்ஞையை மாற்றுவதற்கான போராட்டம். இது பாடப்புத்தகங்கள் முதல் சமூக ஊடகங்களின் வடிவங்கள என அனைத்திலும் விரவியிருக்கிறது.
பொருளாதார ஆதிக்கத்திற்கு முன்நிபந்தனையாக அதிகாரம் கொண்டவர்கள், பாசிஸ்ட்டுகள் மக்களின் மூளையை மேலான்மை செய்ய, கட்டுப்படுத்த முனைகிறார்கள். மோடி அரசு உத்தேசித்திருக்கும் டிஜிட்டல் ஊடகக் கட்டுப்பாட்டுச் சட்டமசோதாக்கள் அத்தகைய மேலான்மை நோக்கிய நடவடிக்கைகள்.
துருவ் ரத்தி இந்தி பேசும் மாநிலமான ஹரியானாவில் பிறந்தவர். அவரது பார்வையாளர்களில் கோடிக்கணக்கானவர்கள் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஸ்ட்டிரம், டில்லி மாநிலங்களில் வாழ்பவர்கள். இவர்களில் 10 கோடி மக்கள் துருவ் ரதியைப் பின்தொடர்ந்திருக்கிறார்கள். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் தனது பதிவுகளை அவர் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்.
2018 ஆம் ஆண்டு துவக்கம் பயண ஒளிப்பதிவுகளைச் செய்து வந்த துருவ் ரத்தி 2021 ஆம் ஆண்டு அரசியல் ஒளிப்பதிவுகள் செய்ய ஆரம்பிக்கிறார். 2024 தேர்தல் பாசிசத்தைப் பின்தள்ளுவதற்கான தேர்தல் என அவர் கருதுகிறார். பாசிசத்தை அனுமதிக்கக் கூடாது எனும் பதட்டமும் ஆவேசமும் ஆதங்கமும் அவரைச் சூழ்கிறது.
இதற்கு அவசரமாகத் தன்னாள் இயன்றதைச் செய்யக் கருதுகிறார். இந்த அவசரமும் வேகமும் கோபமும் பெரும் உணர்ச்சிகளாக அவரிடம் மோடி அரசுக்கு எதிரான ஒளிப்பதிவுகளாக அவரிடமிருந்து வருகிறது.
இந்தி மொழி பேசும் மாநிலங்களில் தொலைக் காட்சிகள், திரைப்படத்துறை போன்றவற்றை பிஜேபி அரசு கைப்பற்றிய சூழலில் துருவ் ரத்தியின் சமூக ஊடக வடிவங்களின் செயல்பாடுகள் ஒரு காத்திரமான மாற்று ஊடகச் செயல்பாடாக ஆகிறது. பாசிசக் கருத்துமேலான்மைக்கு எதிராக, ஜனநாயகக் கருத்து மேலான்மைக்கு அது பயன்படுகிறது. உத்திரப் பிதேசத்திலும் மகாராஷ்டிரத்திலும் மோடியின் செல்வாக்குச் சரிகிறது. மோடியைச் சிறுபான்மையின அரசின் நிலைக்குத் தள்ளியதில் துருவ் ரத்தியின் பங்கை இந்திய, உலக ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன.
பிஜேபி அரசின் முக்கிய அமைச்சர்கள், ஐடி பிரிவினர் அவரை அச்சுறுத்தியிருக்கிறார்கள். வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். இதனை எதிர்கொள்ளும் ஒரு தொழில்நுட்ப, சட்ட வல்லுநர் அணியை உருவாக்கி இதனை அவர் வென்றிருக்கிறார். ஊடக வெளிப்பாட்டில் நேர்த்தி, ஆய்வின் பின்பான கருத்துத்தெளிவு, ஜனநாயக நெறி மீது பறறுக்கொண்ட சமூகக் கடப்பாடு, இதனை வெளிப்படுத்துவதில் வேகம் என, இதுவே துருவ் ரதியின் ஆளுமை.
‘கருத்து மக்களைப் பற்றிப் பிடிக்கும்போது அது பௌதிக சக்தியாக மாறும்’ என்பார் கார்ல் மார்க்ஸ். இடதுசாரிகளுக்கு 2024 தேர்தலின் பின்பான முக்கியமான செய்தியாகவும் இது ஆகியிருக்கிறது.


Leave a Reply