sankara rama subramanian
08 Oct 2026

–ஷங்கர்ராமசுப்ரமணியன், The Hardline தளத்திற்காக
“நாம் எல்லோரும் ஒரு நாள் இங்கிருந்து கிளம்பத்தான் வேண்டும். நான் நாளைக்கு இங்கே இருப்பேனா, இல்லாமல் போவேனா என்று தெரியாது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அப்படிப்பட்ட புள்ளியை அடையும். ஆனால், அது நடப்பதற்கு முன்னால் என்னிடம் ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்ள வேண்டும். நான் எதை விரும்பினேனோ அதைச் செய்தேனா? என்ற கேள்வியே அது.”
-நானா படேகர்
கருப்பு உருவம், கரகரத்த குரல், நடித்த கதாபாத்திரங்களுக்கு அனாயசமாய் உயிர்கொடுத்த துடிக்கும் முகம் – இதுதான் எனக்கு நானா படேகர் குறித்து உடனடியாகத் தோன்றும் சித்திரம். அனுபவங்களின் உக்கிரமும் கசப்பும் ஏறி, எதையோ அலட்சியத்துடன் நோக்கும் கூர்மையான அவரது கண்கள் நிரந்தரமாக மூடிவிட்டன.
ரஜினிக்கு வில்லனாக ‘காலா’வில் மிரட்டிய ஹரி தாதாவாகவே, தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும்பாலானவர்களுக்கு ஞாபகத்தில் நின்றாலும், பாரதிராஜாவின் அதிகம்பேர் காணாத ‘பொம்மலாட்டம்’ மூலமாக, நானா படேகரின் அசாத்தியமான நடிப்பைத் தமிழ் சினிமாவும் பயன்படுத்திக் கொண்டிருப்பது இந்த துக்கத்திலும் நினைவுகொள்ள வேண்டிய செய்தி.
பாரதிராஜாவின் படைப்பூக்கம் குறைந்த காலத்தில் வந்த திரைப்படம் அது. ஆனாலும், அவரது நல்ல படைப்புகளில் ஒன்றாக ‘பொம்மலாட்டம்’ நினைவில் நிற்பதற்குக் காரணம், நாயகனா வில்லனா என்று கடைசி வரை அறிய இயலாத சினிமா இயக்குனர் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்த நானா படேகர்தான் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம்.
‘பொம்மலாட்டம்’ படத்தைப் பற்றிப் பேசும்போது, முன்கோபம், முரட்டுப் பிடிவாதத்தோடு, நாள்தோறும் கோபம், தாபம், சண்டைகளுடன்தான் நானா படேகர் நடித்துக்கொடுத்ததாக இயக்குனர் பாரதிராஜா சொல்கிறார்.
அதேநேரத்தில், முரட்டுத்தனம் ஒரு நல்ல இதயமுள்ள கலைஞன், வெளியே போட்டிருந்த திரைதான் என்றும் பாராட்டுகிறார். எனக்கு தனிப்பட்ட வகையில் பிடித்த நானா படேகரின் படங்களில் ஒன்று ‘அப் தக் சப்பன்’.
நானா படேகருக்குப் பெரும் புகழைக் கொடுத்த அவரது ஆரம்பகாலப் படங்களில் ஒன்றான ‘பரிந்தா’ படத்தின் இயக்குனர் விது வினோத் சோப்ராவுக்கும் பாரதிராஜாவுக்குக் கொடுத்த அதே சோதனையை நானா படேகர் கொடுத்திருக்கிறார். இரண்டு பேரும் படப்பிடிப்புத் தளத்திலேயே கட்டிப்புரண்டு சட்டை கிழியும் அளவுக்குச் சண்டை போட்டுத்தான் படத்தை நிறைவு செய்திருக்கின்றனர்.
படத்தில் மனைவி இறந்துபோகும் காட்சியில் நானா படேகர் அழும்போது விடும் கண்ணீர் நிஜக்கண்ணீர் என்கிறார் விது வினோத் சோப்ரா. குர்தா கிழிய அடிபட்டு பனியனோடு அந்தக் காட்சியில் நடித்து முடித்தபிறகு சண்டையை மறந்து இயக்குனரின் தழுவலையும் பரிசாகப் பெற்றிருக்கிறார் நானா படேகர்.
இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்குமான சண்டையும் அதனூடாக அவர்களுக்கிடையே தொடரும் பந்தமும் ஆதிகாலத்திலிருந்து இருப்பது போல. இயக்குனர் வெர்னர் ஹெர்சாக்குக்கும் நடிகர் கிளாஸ் கின்ஸ்கிக்கும் படப்பிடிப்புத் தளத்தில் கொலையை நெருங்குமளவுக்குச் சண்டை நடந்திருக்கிறது. ஆனால், ஹெர்சாக்கின் சாகசங்கள் அனைத்துக்கும் ஒப்புக்கொடுத்த நடிகனும் கிளாஸ் கின்ஸ்கி என்பதை வரலாறு பதிந்துவைத்துள்ளது.
60 சிகரெட்டுகளை தினசரி குடித்த நானா படேகரால், 56 வயதில் ஒரே நாளில் அந்தப் பழக்கத்தை விட முடிந்தது. ஆனால், தன்னால் முன்கோபத்தைக் கட்டுப்படுத்தவே கடைசிவரை இயலவில்லை என்று ஒரு பேட்டியில் பகிர்கிறார்.
ஆழந்த அவரது கலை மேதைமைக்குள் நிறைவும் அமைதியுமற்ற ஒரு ஆன்மா தவித்து எரிந்தபடி இருந்திருக்கவேண்டும். அந்த அமைதியற்ற ஆன்மாதான், நடிப்பிலும் புகழிலும் செல்வத்திலும் உச்சநிலையை அடைந்தபிறகும், மும்பையை நீத்து வெகுதூரத்துக்கு நகர்ந்து சென்று ஒரு கிராமத்தில் பண்ணைவீடு ஒன்றைக் கட்டிக்கொண்டு ஐந்து நாய்கள், 12 பசுக்கள், இரண்டு காளைகள் சூழ செயற்கை வெளிச்சத்துக்கு வெளியே ஒரு விவசாயியாய் அவரை வாழ்ந்துபார்க்கச் சொல்லியிருக்கிறது.
அந்த அமைதியற்ற ஆன்மாதான், விதர்பாவில் ஏற்பட்ட கொடும் வறட்சியால் கடன், தற்கொலை, வறுமையில் சிக்கிய விவசாயிகளின் நிலையை எண்ணிப் பார்த்து, கார் வாங்க வைத்திருந்த காசை, அவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கச் செய்திருக்கிறது.
எழுத்தாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான அ.முத்துகிருஷ்ணன் தனது முகநூல் அஞ்சலிக் குறிப்பில் இவ்வாறு எழுதுகிறார்…
நானா படேகரின் வாழ்க்கையின் மிக முக்கியமான அத்தியாயம் சினிமா அல்ல சினிமா அல்ல என்று எப்பொழுதும் கூறி வருபவன் நான். மகாராஷ்டிராவின் விதர்பா, பீட் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கடன், வறட்சி, விவசாய நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்ட செய்திகளைப் பார்த்தபோது, அது அவரை ஆழமாக பாதித்தது, கடுமையாகத் தொந்தரவு செய்தது. ஒரு கட்டத்தில், தான் வாங்க நினைத்த காருக்காக வைத்திருந்த பணத்தை விவசாயிகளின் குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார்.

நான் விதர்பா சென்ற நேரத்தில் இதனை பெற்ற ஒரு குடும்பத்தைச் சந்தித்தேன். எனக்கு மட்டும் அல்ல பலருக்கு விதர்பா ஒரு திருப்புமுனை, நானாவின் வாழ்க்கையின் ஒட்டு மொத்த திசையை மாற்றிய தருணம் விதர்பாவில் தான் உருவானது.
2015ல் நடிகர் மகரந்த் அனாஸ்புரேவுடன் இணைந்து NAAM Foundation-ஐ தொடங்கினார். விவசாயிகள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே அதன் முக்கிய நோக்கமாக அமைந்தது. NAAM Foundation-ன் பணிகள் விவசாயிகளுக்கு பண உதவி செய்வதோடு நின்றுவிடவில்லை. நீர் பாதுகாப்பு தொடர்பான பல வேலைகளில் களம் இறங்கினார். ஆறுகள் மற்றும் நீர்நிலைகளைப் புனரமைத்தல், கால்வாய்களைச் சீரமைத்தல், வறட்சிப் பகுதிகளில் நீர் கிடைப்பதை அதிகரித்தல் என பல வழிகளில் வேலைகள் செய்தார்கள். விவசாயிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார வழிகளை எல்லாம் மேம்படுத்த வேண்டும். அவர்கள் கையேந்தும் நிலையிலேயே இருத்தல் கூடாது என்று கருதினார்.
இவை அனைத்தும் அந்த அமைப்பின் பணிகளாக விரிந்தன. NAAM Foundation-ன் வருடாந்தர கணக்குகளின்படி அதன் பணிகள் மகாராஷ்டிராவின் ஆயிரக்கணக்கான கிராமங்களைத் தொட்டுள்ளன.
என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கேரியரின் உச்சத்திலிருந்து மாற்றத்துக்காக அரசியலுக்கு வந்ததாகச் சொல்லி, ஒரு சாமானியன் அனுபவிக்கும் வெயில், புழுதி, பசி, துன்பம், துயரங்கள் எதுவுமே தெரியாமல் ஆட்சிக் கட்டிலிலும் ஏறமுடியும் எதார்த்தம் நம்முடையது. அதே சினிமாத் துறையில், எளிய நாடகக் கலைஞனாக 1970களின் இறுதியில் நுழைந்து, எந்தக் குடும்ப, பெற்றோர் பின்புலமும் இல்லாமல் மெய்யாகவே கலையில் உச்சத்தைக் கண்டவர் நானா படேகர்.
சினிமாவின் ஆடம்பரப் பகட்டுகளிலிருந்து விலகி சாதாரண குர்தா, துண்டுடன் உலவி மறைந்திருக்கும் ஒரு கலைஞனும் இந்திய எதார்த்தத்தில் இருப்பது உண்மையிலேயே ஆறுதலான செய்தி.
புகழ், பணம், பகட்டு எதுவுமே நிலைக்காது; சக மனிதர்களின் மீதான நேசமும் பரிவும் கரிசனமும் நிறைந்த செயல்தான் நிலைக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. சில நாள்களுக்கு முன்னால் கோவாவில் நடந்த ஒரு விழாவில் வாழ்க்கையின் நிலையாமை குறித்து இப்படிப் பேசியுள்ளார்.
“நாம் எல்லோரும் ஒரு நாள் இங்கிருந்து கிளம்பத்தான் வேண்டும். நான் நாளைக்கு இங்கே இருப்பேனா, இல்லாமல் போவேனா என்று தெரியாது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அப்படிப்பட்ட புள்ளியை அடையும். ஆனால், அது நடப்பதற்கு முன்னால் என்னிடம் ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்ள வேண்டும். நான் எதை விரும்பினேனோ அதைச் செய்தேனா? என்ற கேள்வியே அது”
நானா படேகர் அவர்களே, உங்கள் முற்பகுதி வாழ்க்கையை கலைக்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்து நிறைவாக வாழ்ந்திருக்கிறீர்கள். பிற்பகுதி வாழ்க்கையை ஒரு விவசாயியாக மனிதாபிமானப் பணிகளுக்காக அர்ப்பணித்திருக்கிறீர்கள். நீங்கள் விரும்பியபடி வாழ்ந்து சென்றிருக்கிறீர்கள்!


Leave a Reply