பெருங்கருணை பேரொளியாக திகழ்ந்தவர், இராமலிங்க அடிகளார்!

ஆயினும் அவர் சனாதனத்திற்கு பலியான சந்நியாசி!

வள்ளலாரை சரியாக புரிந்து கொண்டால் சனாதனம் ஏன் அவரை காவு கொண்டது என உணர முடியும்;
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தவசீலராக பார்க்கப்பட்ட – வள்ளலார் என அழைக்கப்பட்ட – ராமலிங்க அடிகளார் உண்மையில் யார்?

சிவன், முருகன் உள்ளிட்ட தெயவங்கள் குறித்து ஊனுருக, உயிர் உருக பாடியவர் என்ற வகையில் சிறந்த பக்திமான் என்றழைக்கலாமா..?

பசியால் வாடியவர்களுக்கெல்லாம் இடையறாது அன்னம் தந்தவர் என்ற வகையில் தான, தர்மத்தில் சிறந்தோங்கிய வள்ளல் என்பதா?

கொடிய நோயில் உழன்றோருக்கெல்லாம் வைத்தியம் பார்த்து நலமடையச் செய்தவர் என்ற வகையில், சித்த வைத்திய செம்மல் என்பதா?

இறைவனடி சேரும் வகையில் தூய துறவு பற்றி அவர் எழுதிய ஆறாம் திருமுறையக் கொண்டு ஞான வழி காட்டிய ஆசான் என்பதா?

என்று பற்பல கேள்விகள் அவர் வாழ்க்கை குறித்து ஆராயும் போது ஏற்படலாம்.

மேற்குறிப்பிட்டவை எல்லாமே அவரது பன்முக ஆளுமையின் பரிமாணங்கள் எனலாம். ஆனால், தம் வாழ்வின் இறுதிப் பகுதியில் அவர் உறுதியோடு நமக்கு தந்த உபதேசங்களை உள்வாங்கிப் பார்த்தால், பக்தி மார்க்கத்தில் இருந்து முற்றாக விடுபட்டு, மிக உயர்ந்த அன்மீக நிலை அவர் அடைந்ததை திருவருட்பாவின் ஆறாம் திருமுறை பாடல்கள் மூலம் நாம் அறியலாம்.

மிகத் துல்லியமாக ராமலிங்க சுவாமிகளை நாம் கணிக்க வேண்டும் என்றால், அவர் ஒரு சனாதன எதிர்ப்பாளாராகத் திகழ்ந்துள்ளார் என்பதே அவரது பிரதான அடையாளமாகும். , அதன் மூலம் தன் கடைசியாக வாழ்ந்த ஒன்பதாண்டு காலம் ஓயாத பெரும் எதிர்ப்புகளை எதிர் கொண்டவர் என்றும் நாம் அறியலாம். ராமலிங்க அடிகளாரின் புரட்சிக் கவிதைகளைத் தான் பெரியார் முதன்முதாலாக தன் பகுத்தறிவு பிரசாரங்களுக்கு பயன்படுத்திக் கொண்டார் என்பது வரலாறு.

தெய்வம் பல பல சிந்தை செய்வாரும்,
சேர்கதி பலபலச் செப்புகின்றாரும்
பொய் வந்த கலை பல புகன்றிடுவாரும்
பொய்சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றிலார்.

என்ற ராமலிங்க அடிகளாரின் பாடலானது
பற்பல தெய்வங்களை கற்பித்து, மோட்சம் அடைவதற்காக பற்பல வழிகளை சொல்வோரும், இதை நம்பச் செய்ய பொய்யான கதைகளை உருவாக்கி அவற்றை பல்வேறு கதாகலாட்சேபங்கள், ஆடல்,பாடல் வழியே போதிப்பவர்களும், பொய்யான மதங்களை புகழ்ந்துரைப்பவர்களும், மெய்யான திருவருளின் விளக்கம் ஒன்றைக் கூட அறியாதவர்கள் எனச் சாடுகிறார்,ராமலிங்க அடிகள்!

இது அப்பட்டமான ஒரு கலகக் குரல், போலி சாமியார்கள், போலி சமயவாதிகளுக்கு எதிரான கடும் தாக்குதலாகும்.

உண்மையான ஆன்மீகம் கை கூடியதும் இராமலிங்க அடிகள் எழுதினார்;

மதித்த சமய வழக்கெல்லாம் மாய்ந்தது
வருணாச்சரம் எனும் மயக்கமும் சாய்ந்தது!- கொதித்த
லோகாச்சார கொதிப்பெல்லாம் ஒழிந்தது
கொலையும், களவுமற்றைப் புலையும் அழிந்தது
குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
குதித்த மனமிருட்டு குரங்கு முடங்கிற்று
பொய்யை ஒழித்து புறப்பட்டேன் மன்றாடும்
ஐயரைக் கண்டேனடி – அக்கச்சி
ஐயரைக் கண்டேனடி ‘’

என்றார், ராமலிங்க அடிகளார்.

புராணங்கள், இதிகாசங்கள் இவை யாவும் சுவையான கற்பனைகளே. ஆனால், மனிதர்களோ அதில் வரும் கதாபாத்திரங்களையே உண்மையென்று நம்பி கும்பிடுவதும், பூஜை,புனஸ்காரங்கள் செய்து, செல்வங்களை வீணடிப்பதையும் நேர்பட எதிர்த்தார், ராமலிங்க அடிகள்.

’’கலையுறைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக!’’

என்று அறம் பாடினார், அருட் பிரகாச வள்ளலார்.

விடுவார்களா? அந்தணர்கள்!

அவரால் உருவாக்கப்பட்ட சத்திய ஞான சபைக்குள்ளே உள்ளே நுழைந்து காமாட்சி அம்மன் உருவச் சிலையை ஸ்தாபித்து பூஜை, புனஸ்காரங்கள் என அமர்க்களப்படுத்தி ஊர் பெரியோர்களையும், அதிகாரமிக்கவர்களையும் அங்கே அழைத்து வந்து மரியாதை செய்து தம்வசப்படுத்திக் கொண்டனர்.

மேட்டுகுப்பம் எனும் மலை முடுக்கில் நாளும், பொழுதும் தவம் செய்து அருள் ஞான மார்க்கத்தில் பயணித்து வந்த அடிகளாரை தீடீரென ஒரு நாள் தேடி வந்த ஊர் மக்களில் சிலர் வடலூர் சத்திய ஞான சபையில் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை அவருக்கு சொல்லி மனம் வருந்தினர்.

ராமலிங்க அடிகள் தாம் நம்பி அனைத்தையும் ஒப்படைத்து வந்தவர்கள், தம்மை ஏமாற்றி வஞ்சித்துவிட்டனர் என மனம் குமுறினார். சத்திய தருமச் சாலையை நிர்வகித்தோரின் சில அத்துமீறல்கள் அவர் மனதை பெரிதும் வாட்டின.

எவ்வளவோ பேசியும் அவரிடத்தை ஆக்கிரமித்த அந்தணர்களின் மனம் மாறவில்லை. மென்மையான, இளகிய மனம் வாய்க்கப் பெற்ற ராமலிங்க சுவாமியால் சத்திய ஞானசபையை சதி செய்து அபகரித்தோரை எதிர்த்து எதுவும் செய்ய இயலவில்லை.

இரண்டாண்டு போராட்டங்களுக்கு அப்பால் அவரே சித்தி வளாகத்தில் இருந்து சீற்றத்துடன் வடலூர் வந்து தாம் உருவாக்கிய சத்திய தருமச் சாலை, சத்திய ஞான சபை ஆகியவற்றை ஆக்கிரமித்தவர்கள் வெளியேற வேண்டும் என வந்து நின்றார். அப்போது அவருக்கு சொல்லொண்ணா அவமானங்கள் ஏற்படுகின்றன… மனம் உடைந்து போகிறார்…!

இப்போது தான் அவர் ஓர் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டதாகவும், அதன் பிறகு அவர் ஜோதியில் கலந்ததாகவுமான புனைவுகள் கட்டமைக்கப்படுகின்றன.

அவர் 1874 , ஜனவரி 30 ஆம் நாள் ஒரு அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டதாகவும், யாரும் திறந்து பார்க்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்ததாகவும் சொல்பவர்கள் அதற்கு பிறகு அவருக்கு நேர்ந்தவற்றை மறைத்துவிட்டனர்.

1974 ஆம் ஆண்டு பிப்ரவரி 12, ஆம் தேதியன்றைக்கு வெளியான ஒரு தினசரி பத்திரிக்கையில் ஒரு சிறிய பத்தி செய்தியாக, வள்ளலாருக்கு நேர்ந்தது பதிவாகி உள்ளது. அதில் இராமலிங்க பரதேசி என அறியப்பட்டவர் இருந்த அறையில் இருந்து பெரும் துர்நாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஊர் மக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து அன்றைய பிரிட்டிஷ் அரசு உத்தியோகஸ்தர்கள் வந்து கதவை உடைத்து பார்த்ததில் சிதைந்த நிலையில் இருந்த தேகம் ஒன்றை அங்கு பார்த்தனர். அதை அப்புறப்படுத்தி அந்த இடத்தை சீல் வைக்க உத்திரவிட்டனர் எனக் குறிப்பிடுகிறது.

உண்மையில் ராமலிங்கர் இறைவனோடு ஜோதியில் ஐக்கியமானதாக கதைகட்டுபவர்கள், அது நிகழ்ந்திருக்கும் பட்சத்தில் அதை அன்று கொண்டாடி இருக்க வேண்டுமல்லவா? ஆனால், நடந்தது என்ன? ராமலிங்கருக்கு ஏற்பட்ட துயர சம்பவத்தை அவருடன் மிக நெருங்கி பழகிய பலரே வெளியில் சொல்ல அஞ்சி ஒடுங்கி போய் அமைதி காத்தனர்.

இதன் பிறகு சத்திய ஞான தர்ம சபை சுமார் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பூட்டியே இருந்துள்ளதும், அதனை சுற்றி செடி,கொடிகள் வளர்ந்து ஆள் அரவமற்ற பிரதேசமாக இருந்ததையும், அதனை பழைய நிலைமைக்கு மாற்ற 10 வருடங்களுக்கு பிறகே அவர் மரணத்திற்கு காரணமான சனாதனிகளே முயன்று கோர்ட்டுக்கு சென்று அவ்விடத்தை உரிமை கோரியதையும் வரலாற்றில் இருந்து வசதியாக மறைக்கிறார்கள்!

வள்ளலார் ஜோதிமயமானதாக சொல்லப்பட்டதை சைவ சித்தாந்தத்தின் பெரும் ஆளுமையாக விளங்கிய மறைமலை அடிகள் ஏற்கவில்லை. அதே போல தமிழ் தென்றல் என அழைக்கப்பட்ட பெயாரான திரு.வி.க அவர்களும் ஏற்கவில்லை. ராமலிங்க அடிகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை இந்த இரு பெரியார்களும் சூசகமாக பல இடங்களில் வெளிப்படுத்தி உள்ளனர்.

மனு நீதிச் சோழன் என்று கொண்டாடப்படும் அரசன் கதை அறிவீர்களா?

தேர் ஓட்டிச் செல்லும் போது பசுவின் கன்றொன்று சாலையில் ஓடி வந்து அவன் தேரில் சிக்கி மாண்டது. கொதித்து எழுந்த பார்ப்பனர்கள், கன்றை இழந்த தாய்ப்பசுவை அழைத்து வந்து நீதி கேட்டனர். சோழ மன்னன் அவர்களின் சீற்றம் தணிய தான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்கிறான். அதற்கு பார்ப்பனர்கள், கன்றை இழந்த தாய்ப் பசுவின் வேதனையை நீ உணர வேண்டும். ஆகவே நீ உன் மகனை தேர் ஏற்றிக் கொன்று மநுநீதி காக்க வேண்டும் என்றனர். அதை சாதிக்கவும் செய்தனர்.

அந்த கையாலாகாத மநுநீதி காத்த சோழ மன்னனின் வேதனையை ராமலிங்க அடிகள் மநு முறை கண்ட வாசகம் என்ற தலைப்பில் கசிந்துருகி எழுதியிருப்பார், வாசகர்கள் தேடி வாசித்துக் கொள்க. ஆனால், வள்ளாருக்கு நேர்ந்த அநீதியை கசிந்துருகி எழுதத் தான் இன்று வரை ஆளில்லை!

நமது காலத்தில் வாழ்ந்த ஆன்மீக ஞானி யான வேதாத்திரி மகரிஷி எழுதியுள்ள கவிதை ஒன்றை மேற்கோள் காட்டி, இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

பக்தியினால் உண்டாகும் மயக்கம் – திரிபுகள் என்ற தலைப்பிலான கவிதை;

பக்தியெனும் முத்திரையின் திரைக்கு பின்னால்
பலர் புரிந்த அநீதிகளை விளக்கப் போமோ?
புத்திமிக்க சமணர்களை கழுவில் கொன்றோர்
புண்ணியர்கள் எனப்பட்டார், அறியாதோரால்!
யுக்தியினால் ராமலிங்கம் உடல் மறைத்து
யோகத்தால் ஜோதியாகிவிட்டார் என்றார்!
சக்திமிகு தில்லை அந்தணர் நந்தன் போய்த்
தானாக தீயில் வீழ்ந்திறக்கச் செய்தார்!

கற்ற அறிவை இழந்து சோழ மன்னன்
கதறக் கதற மகனை தேரால் கொன்றார்!
மற்றவர்கள் மனுநீதி நிலைத்ததென்றார்!
மயக்கத்தால் வல்லாளன் மணந்த நல்லாள்
நற்றவத்தால் ஆண்டியினால் கற்பிழந்தாள்!
நல்ல அறம் இது வென்று சான்று கூறிக்
கொற்றவனை புகழ்ந்தார்கள்- இவற்றைப் போல்
கொடிய பாபச் செயல்கள் பல உணர்வீர்!

தற்கொலைகள், கொலைகள் பல மோட்சமாச்சு!
சாலவித்தை ஏமாற்றுச் செயல்களெல்லாம்
அற்புதங்களாயிற்று – உலகில் பல்லோர்
அறிவு மயக்கச் சேற்றில் ஆழ்ந்துவிட்டார்…

ஆக, சமணர்களுக்கு நேர்ந்தது, ராமலிங்க அடிகளாருக்கு நேர்ந்தது, நந்தனுக்கு நடந்தது, மநுநீதி சோழனுக்கு நடந்தது, போலிச் சாமியாரிடம் வல்லாள மன்னனின் மனைவிக்கு நேர்ந்தது..போன்றன நமக்கு போதிக்கப்பட்டது என்பது வேறு, உண்மை என்பது வேறு. இதில் அறிய வேண்டிய அம்சம், அறிவினால் உண்மையை உய்த்துணருங்கள் என்பதேயாகும்.

சனாதனம் வரலாற்றில் யார், யாரையெல்லாம் பலி கொண்டதோ, அவர்களையே பூஜிக்கத்தக்க அவதார புருஷர்களாக்கிவிடும்! இதன் மூலம் தான் செய்த கொலைகளை புனிதப்படுத்திக் கொள்ளும் என்பதற்கு நந்தன் தொடங்கி ராமலிங்க அடிகள்..எனப் பல சாட்சிகள் உள்ளன…!

என்ன ஒரு ஆச்சரியம் அல்லது ஒற்றுமை! முன்னாளில் சனாதனத்திற்கு பலியான ராமலிங்க அடிகளும், பின்னாளில் சனாதனப் பார்ப்பனர்களின் துப்பாக்கி குண்டுக்கு இரையான மகாத்மா காந்தியும் பலியான நாள், ஜனவரி 30.

ஏன்? ஜனவரி 30 ஆம் நாளை சனாதனத்திற்கான எதிர்ப்பு நாளாக அனுஷ்டிக்கக் கூடாது…?

சாவித்திரி கண்ணன் 

Leave a Reply