
கடந்த ஒரு தசாப்தத்தில் காந்தியைப் பற்றிய பொது உரையாடலை இளந்தலை முறையிடம் உருவாக்கியதில் ராமச்சந்திர குஹாவின் பங்கு மிக முக்கியமானது. அவர் தொடர்ந்து மிகத் தீவிரமாக எழுதிவருகிறார். அவரது பெரும்பாலான நூல்களை வாசித்திருக்கிறேன். குஹா மிகக் கடுமையான உழைப்பாளி. இந்தியாவின் போக்கை மிகச் சிறப்பாக புரிந்துகொண்டுள்ளார் குஹா.
சமீபத்தில் வெளியாகியுள்ள அவரது நூலை வாசித்துவருகிறேன். அந்த நூல் குறித்து அவர் மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்கள் அனைத்திலும் பேசிவிட்டார். அதைத்தாண்டி சுயாதினமான சில ஊடகங்களிலும் அவர் பேசிவிட்டார்.
ஆங்கில ஊடகங்களில் ஆயிரம் குறைகள் இருந்தாலும், ஒரு நூல் வருகையை ஒட்டி நடக்கும் விவாதம் நம்பிக்கை அளிக்கிறது. தமிழ்நாட்டின் போக்கு தலைகீழ். ஊடகங்களுக்கு வெளியே அறிவுஜீவியே இல்லை என்பது இவர்கள் திடகாத்திரமான நம்பிக்கையாக உள்ளது. அவர்களின் ஊடகப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் உள்ளவரையே வழிபாடு செய்து திருப்திபட்டுக் கொள்கின்றனர். விநாயகரைப் போன்று அம்மை அப்பன் வழிபாட்டு மரபே அவர்களுக்குப் போதக் கூடியதாக உள்ளது.
துறை சார்ந்த வல்லுநர்களை அவர்கள் நெருக்குவதே இல்லை. ஆனால், சினிமா பிரபலம் எனில் வரிசை கட்டி நிற்பர். பின் மக்களிடம் சினிமா மோகம் மண்டிக்கிடப்பதாக சொல்வர்.
குஹாவின் பல நேர்காணகளைக் கண்டேன். மனிதர் அசராமல் பேசுகிறார். ஒரு நூலுக்கு சினிமா வைபவத்திற்கு ஈடான வெளிச்சம் கிடைக்கிறது. அவரது பேட்டி ஒவ்வொன்றும் 2 லட்சம் 3 லட்சம் என பார்வையாளர்களை எட்டுகிறது.
தமிழில் சில வரலாற்று அறிஞர்கள் யூடியூபில் பேசுகின்றனர். கொடுமை என்னவெனில் அவர்களுக்கும் வரலாற்றுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதே. தமிழ் ஊடகங்கள் கனி இருப்ப, காய் கவரவே விரும்புகின்றன. வாழ்க! வாழ்க!
கடற்கரய் மத்தவிலாச அங்கதம் – Facebook


Leave a Reply