லூலாவின் வெற்றியும் வலதுசாரி ஏகாதிபத்தியத்தின் தோல்வியும் – தாரிக் அலி

Hardline Desk

27 Oct 2026— 1 min read

லூலாவின் வெற்றியும் வலதுசாரி ஏகாதிபத்தியத்தின் தோல்வியும் – தாரிக் அலி

பிரேசிலின் தொழிலாளி வர்க்கத் தலைவரான லூயிஸ் இனாசியோ லூலா தா சில்வா, அந்நாட்டின் ராணுவ சர்வாதிகார ஆட்சி 1985ல் முடிவுக்கு வந்த பிறகு, நான்காவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

தேர்தலின் முதல் இரண்டாம் சுற்றுகளுக்கு இடைப்பட்ட வாரங்களில் எண்ணற்ற கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், பிரேசிலிய  சர்வதேச ஊடகங்களும் அரசியல் பிரமுகர்களும் ‘லூலா தோல்வியடைவார்’ என்று உறுதியாக நம்பினர்.

எண்பது வயதைக் கடந்த தொழிலாளர் கட்சியின் தலைவரான லூலா முதல் சுற்றில் பிளாவியோ போல்சோனாரோ பெற்ற வெற்றியைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர்களையும் பாரம்பரிய ஆதரவாளர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். லூலாவே கூட இந்த முடிவைக் கண்டு நிலைகுலைந்து, ‘இது பிரேசிலிய இடதுசாரி அரசியலின் முடிவாக இருக்குமோ’ என்று அஞ்சினார்.

தாரிக் அலி

தனது கட்சியை விடத் தான் அதிக செல்வாக்கு பெற்றவர் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் வெற்றி பெற்றாலும், மற்ற அனைத்து அரசு நிலைகளிலும் அவரது கட்சி முதல் சுற்றிலேயே பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தது.

பிரேசிலிய இளைஞர்கள் அவருக்கு ஆதரவாகத் திரண்டு முன்னெப்போதும் கண்டிராத வகையில் பிரம்மாண்டமான போராட்டங்களை முன்னெடுத்தது லூலாவின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. அவர்கள் சாவோ பாலோ, ரியோ டி ஜெனிரோ நகரங்களின் வீதிகளில் பெருமளவில் கூடினர்.

பிரேசிலியாவின் அதிபர் மாளிகையில் இளம் பிராங்கென்ஸ்டைன் பிளாவியோ போல்சோனாரோ நான்கு ஆண்டுகள் அமர்ந்திருப்பார் என்ற எண்ணமே பலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. போல்சோனாரோவின் ஆதரவாளர்கள் சிலர் ‘டிரம்ப், தயவுசெய்து எங்களை ஆக்கிரமித்துக் கொள்ளுங்கள்’ என்று முழக்கமிட்டது மக்களை அவருக்கு எதிராக இன்னும் தீவிரமாகச் செயல்படத் தூண்டியிருக்கலாம்.

கிடைத்த மகத்தான ஆதரவால் உத்வேகம் பெற்ற லூலா, ஒரு அற்புதமான பிரச்சாரத்தை மேற்கொண்டார். தனது ஆதரவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட பிரம்மாண்டம், ஆற்றல்,  விசுவாசத்தால் உந்தப்பட்டது போல அவர் தீப்பற்றி எரிந்தார். அது அவர் தோற்ற தனது முதல் பிரச்சாரத்தை நினைவூட்டியது. அவர் தனது உடல் நலனில் அக்கறை காட்டினார். மக்கள் ஆதரவால் புத்துணர்ச்சி பெற்ற அவர், நாடு முழுவதும் பயணம் செய்தார்.

ஒவ்வொரு பேச்சிலும் ‘தந்தை ஜெய்ர் மெசியாஸ் போல்சோனாரோ,  மகன் பிளாவியோ போல்சோனாரோ இருவரும் பணம், பேரரசின் குருட்டுத்தனமான வழிபாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்’ என்று அவர் விளக்கினார். ‘தங்களுக்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தங்கள் கூட்டாளிகளுக்கும் பயனளிக்கும் வகையில் அமேசான் பள்ளத்தாக்கு போன்ற நாட்டின் உயிர்நாடிகளை அவர்கள் அழித்துவிடுவார்கள்’ என்று அவர் விளக்கினார்.

பிழையான ஊழல் குற்றச்சாட்டுக்களின் மீது (இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பிழையானவை எனப் பின்னர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது) இரு ஆண்டுகள் (2017-2018) லூலா சிறையில் இருந்த தருணத்தில், ‘சிறைகளில் இவ்வளவு ஆதரவைப் பெற்றதற்காக’ இளம் பிராங்கண்ஸ்டைன் பிளாவியோ போல்சோனாரோ அவரைக் கேலி செய்தபோது லூலா பதிலளித்தார்: ‘‘இது போதாது. எனக்கு இன்னும் வேண்டும். கவலைப்படாதே மகனே, நான் விரைவில் உன் தந்தையையும் என் பக்கம் வென்றுவிடுவேன்,’’ என்றார் லூலா.

மூத்த பிராங்கண்ஸ்டைன் ஜெய்ர் மெசியாஸ் போல்சோனாரோ லூலாவுக்கு எதிராக ஒரு ஆட்சிக்கவிழ்ப்பைத் தூண்டியது உள்ளிட்ட பிற குற்றங்களுக்காகசுஅ சிறையில் இருக்கிறார். ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் தனது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாகத் தனது தந்தையை விடுவிக்க அங்கீகாரம் அளிக்கும் டிரம்ப் பாணியிலான பொது மன்னிப்பை வழங்குவதாக அவரது மகன் உறுதியளித்திருந்தார்.

நீதிமன்றங்கள் ஆட்சேபனை தெரிவித்தால் என்ன செய்வது? பின்னர் தேவைப்பட்டால் அவர் பலவந்தமாக அவர்களை அடக்குவார்.

லூலாவின் வெற்றி அரசியல் ரீதியானது. இந்தக் காலங்களில் குறிப்பாகத் தென் அமெரிக்காவில் முற்போக்கு அரசியலுக்குக் கிடைத்த ஒரு அரிய வெற்றியாக இது அமைந்துள்ளது. அர்ஜென்டினா, சிலி, கொலம்பியா, பொலிவியா, வெனிசுலாவில் வலதுசாரி ஏகாதிபத்திய வெற்றிகளின் அண்மைய போக்கிற்கு மாறாக, அமெரிக்க இடைத்தேர்தலுக்குச் சற்று முன்பு நர்கோ ரூபியோவுக்கும் அவரது முதலாளிக்கும் இது ஒரு பலமான அடியாக அமைந்துள்ளது.

நாடு முழுவதும் லூலாவின் மறுதேர்தல் வெற்றிச் செய்தி பெரும் ஆரவாரத்துடனும் தெருக்களில் கொண்டாட்டங்களுடனும் வரவேற்கப்பட்டது. இதில் மினாஸ் ஜெரைஸும் அடங்கும், அங்கு லூலா முதல் இரண்டாம் சுற்றுக்கு இடையில் 5,90,000 வாக்குகள் பின்தங்கியிருந்ததை 99,000 வாக்குகள் முன்னிலையாக மாற்றினார்.

இதைக் கொண்டாடவில்லை என்று நாம் உறுதியாகக் கருதக்கூடிய ஒரு நபர் பிரேசிலின் தனித்துவமான தாராளவாதியான ராபர்டோ உங்கர். ஹார்வர்டில் படித்த தத்துவஞானியும் ஒருகாலத்தில் வெர்சோ இடதுசாரிப் பதிப்பக நூலாசிரியருமான இவர் இரண்டாம் சுற்றுக்கு முந்தைய நாட்களில் பிளாவியோ போல்சனாரோவுக்கு பகிரங்கமாக ஆதரவளித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அவசரத்தில் இருக்கும் ஒரு வயதான முட்டாள். லூலா தோற்றுவிடுவார் என்று அவர் மிகவும் உறுதியாக நம்பியிருக்க வேண்டும். அவர் மட்டும் தனியாக இல்லை. இருப்பினும் அவரைப் போலல்லாமல் மூழ்கும் கப்பலை விட்டுப் பலரும் வெளியேறவில்லை.

இடதுசாரிகளிடையே பழைய விமர்சனங்கள் மீண்டும் எழுந்தன. அரசுக்கு எதிரானவர்கள் முதல் சுற்றுத் தோல்வியைத் தொழிலாளர் கட்சியின் பலவீனங்களின் பிரதிபலிப்பாகக் கண்டனர். அடிமட்ட அமைப்புப் பணிகள், சமூக – அரசியல் இயக்கங்களைக் கட்டியெழுப்புவது எப்போதுமே பயனுள்ளதுதான். அது மட்டுமே ஒரு மாற்றை உருவாக்கிவிடாது.

தேர்தலின் இரண்டு சுற்றுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், லூலாவின் மறுமலர்ச்சி என்பது அரசியலின் விளைவாகும். அவரது பிரச்சாரம் அந்த பிராங்கென்ஸ்டைன்களை அவர்களின் உண்மையான முகத்தோடு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அவர்களுக்கு வாக்களித்த பிரேசில் மக்கள் ஏன் ஒரு தற்கொலைக்குச் சமமான பாதையைத் தேர்ந்தெடுத்தனர் என்பதையும் விளக்கியது.

கெதுலியோ வர்காஸ்

தற்கொலை என்ற சொல் அந்த நாட்டின் ஆழமான வரலாற்று நினைவுகளைத் தட்டி எழுப்புகிறது. போருக்கு முன்னும் பின்னும் பிரேசிலின் அதிபராக இருந்த கெதுலியோ வர்காஸ் தனது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் ஒரு பலவீனமான பாரம்பரிய பழமைவாதத் தலைவராகவே இருந்தார். காலப்போக்கில் அவர் இடதுசாரி சமூக ஜனநாயகக் கொள்கைகளை ஏற்கும் தலைவராக உருவெடுத்தார். அவரது இந்த மாற்றம் ராணுவத்திற்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாகத் தனது இறுதித் தேர்தல் முயற்சியின் போது அவர் முன்வைத்த சமூக ஜனநாயகம், தொழிலாளர் ஆதரவு முழக்கங்களை ராணுவம் கடுமையாக எதிர்த்தது. அது பனிப்போரின் உச்சக்கட்ட காலம். அப்போது அமெரிக்கா தென் அமெரிக்க நாடுகளில் உள்ள வலிமைமிக்க ராணுவ அமைப்புகளை ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தும் தந்திரத்தில் மிகவும் தேர்ந்திருந்தது.

வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராணுவத் தளபதிகளின் கண்காணிப்பில் இருந்த வர்காஸ் ஒரு கட்டத்தில் செயலிழந்து போனார். 1954ம் ஆண்டில் அவரது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜோவா கோலார்ட் அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தொழிற்சங்கங்களைத் திரட்ட முயன்றபோது, ராணுவம் தலையிட்டு வர்காஸைப் பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தியது. அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்து ஜனநாயகத்தைக் காப்பதற்காகத் தனது உயிரையே மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுத்தார்.

இந்தச் செயல் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலருக்கு அவர் ஒரு தியாகியாகத் தெரிந்தார். ஜனநாயகத்தை இன்னும் சில காலத்திற்காவது காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தவர் என்று அவர் போற்றப்பட்டார்.

Roberto Schwarz

பிரேசிலைச் சேர்ந்த இடதுசாரி அறிஞர் ராபர்டோ ஸ்வார்ட்ஸ், ‘தந்தை போல்சோனாரோ – மகன் பிளாவியோ போல்சோனாரோ கூட்டணியைச் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் (1964–1985) பிரேசிலை நசுக்கிய அதே ராணுவத்தின் சீருடை அணியாத வடிவம்’ என்று விவரித்துள்ளார்.

2018ல் போல்சோனாரோ பெற்ற வெற்றியும், 1964ல் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பும் பல பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளன. இவ்விரு நிகழ்வுகளிலும் முதலாளித்துவத்திற்கு வெளிப்படையாகச் சாதகமான ஒரு திட்டம், பிரேசிலிய சமூகத்தின் பிற்போக்குத்தனமான, ஆழமான அடுக்குகளைத் திரட்டுவதன் மூலம் தன்னைச் செயல்படுத்திக்கொள்ளும் நிலையை எட்டியது.

நாகரிகத்தின் தாராளவாதப் போக்கினால் அதிருப்தியடைந்திருந்த இந்தச் சமூகப் பிரிவினரின் நவீனத்துவத்திற்கு எதிரான உணர்வுகளுக்கு ஒரு வகையான ஈடுசெயலாக அரசியல் முன்னிலை வழங்கப்பட்டது.

இது முதலாளித்துவத்தின் மூலோபாயவாதிகள் மேற்கொண்ட ஒரு தந்திரமான அபாயகரமான கணக்கீடாகும். இதில் புதிய விஷயம் எதுவுமில்லை. 1930ம் ஆண்டுகளில் ஜெர்மனியில் நிகழ்ந்த அறிவுக்கு எதிரான அந்தத் திசைமாற்றமே இதற்குச் சிறந்த உதாரணம். நாசிசத்தை ஏற்றுக்கொண்டு, அதை வளர்த்துவிட்ட ஜெர்மனியின் பெரும் முதலாளித்துவ வர்க்கம், ஒரு கட்டுக்கடங்காத செயல்முறையைத் தொடங்கி வைத்தது. அதன் இறுதியில் யார் யாரை விழுங்குவார்கள் என்று சொல்ல முடியாத ஒரு சூழல் உருவானது.

லூசினோ விஸ்கோன்டியின் சபிக்கப்பட்டவர்கள் (The Damned:  1969) திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். போல்சோனாரோ அந்த நிலையை அடையாமல் இருக்கலாம். அதற்கான முயற்சியில் அவர் குறையேதும் வைக்கவில்லை. தற்போதைய நிலையில் போல்சோனாரோவின் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த நூற்றாண்டில் வர்காஸைப் போலவே லூலாவின் அதிகாரங்களும் வலதுசாரி நாடாளுமன்றத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதை மீறிச் செயல்படுவது எளிதான காரியமல்ல. இருப்பினும் அவர் பெற்ற வெற்றியின் அளவு – 40 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி – அவருக்குச் சில வாய்ப்புகளை வழங்குகிறது.

உலகிற்கான குரலாக…

பொது நலன் சார்ந்த விவகாரங்களில் பிரேசிலுக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகிற்காகவும் அமேசான் காடுகளைப் பாதுகாப்பது போன்ற விஷயங்களில் அவர் நீதிமன்றங்களின் உதவியைப் பெற முடியும். வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை அவருக்கு அதிக சுதந்திரம் உள்ளது.

பாலஸ்தீனியர்களுடன் அவர் தொடர்ந்து வலுவான ஒற்றுமையைக் காட்ட முடியும். தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசில் தங்களுக்கு ஆதரவாக இருப்பதைக் கண்டு பாலஸ்தீனியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மெக்சிகோவில் லூலாவின் வெற்றி சிறப்பாக வரவேற்கப்படுகிறது. தங்களின் மீதான முற்றுகை நீங்கியதில் மெக்சிக்க அதிபர் ஷெய்ன்பாம் மிகுந்த நிம்மதி அடைந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை

Leave a Reply