sankara rama subramanian
07 Nov 2026

மூலம்: என்.ராம்
தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சோனியா காந்தியின் சுயசரிதையான Belonging: A Journey of Love வெளிவந்துள்ளது. ராஜீவ் காந்தியிடம் தொடங்கிய காதல் உறவு தொடங்கி, இந்திரா காந்தி குடும்பத்தினர், இந்தியா என அவரது உறவும், அடையாளமும் விரிந்திருக்கும் கதையைப் பேசுகிறது இந்த நூல். ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பின், பெரும் தயக்கத்துக்குப் பிறகு பொது வாழ்க்கைக்கு வந்தது முதல் பா.ஜ.க.வின் வளர்ச்சி வரை என, இந்து என். ராம் அவர்களிடம் இந்த நேர்காணலில் சோனியா காந்தி விரிவாகப் பகிர்ந்திருக்கிறார்.
நீங்கள் உங்கள் சுயசரிதையை எழுதுவதற்கு முன்னால், உங்களைப் பற்றி எழுதப்பட்ட நூல்களைப் படித்தீர்களா?
என்னைப் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டிருக்குமா என்றெனக்குத் தெரியவில்லை. நீண்ட காலத்துக்கு முன்னரே ராஜீவும் நானும் நம்மைப் பற்றி என்ன எழுதப்படுகிறதென்று கவனித்துக்கொண்டிருப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். ஆனால், இந்த சுயசரிதையில் சொல்லியிருப்பதைப் போலவே, எனது சரிதத்தை நான் எழுதியே ஆகவேண்டுமென்ற நிச்சயம் உருவானது உண்மை.
இதை எழுதுவதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட காலம் குறித்துச் சொல்லுங்கள்?
சின்னதாக ஒரு குறிப்பை எழுத ஆரம்பித்து அது ஒரு தசாப்தம் ஆகிவிட்டது. ஆனால், குறிப்பிட்ட ஒழுங்குடன் எழுதத்தொடங்கியது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான். தடையே இல்லாமல் நடந்த வேலை என்று சொல்லமாட்டேன். சில வேளைகளில் வார்த்தைகளும் எண்ணங்களும் ஆற்றொழுக்காக வந்தன. சில வேளைகளில் எதுவுமே வராமல், விரக்தியில் கைவிட்டதும் உண்டு.
உங்கள் சுயசரிதை நூலை அந்தரங்கமான நினைவுநூல் என்றே விவரிக்கிறீர்கள். அரசியல் அதற்கு ஒரு பின்னணியையோ அல்லது ஒருவகை சட்டகத்தையோ வழங்குகிறது. ஆனால், மையமாக ஒரு காதல் கதை உள்ளது. அப்படித்தான் நான் அதை வாசித்தேன். ராஜீவுக்கும் சோனியாவுக்குமான நேசம் உடனடியான காந்த ஈர்ப்பாக உருவாகிறது. அது வளர்ந்து, அதிகாரத்தின் பெரிய வட்டங்களுக்குள் வந்து சேரும் கதையைப் படிக்கமுடிகிறது. பொது வாழ்க்கைக்கோ அரசியலுக்கோ நீங்கள் தயங்கியே நுழைகிறீர்கள். இந்தியாவின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் மாறுகிறீர்கள்…?
அந்தரங்கமாக இருப்பதாலேயே, நான் அதைப்பற்றி அதிக நாள்கள் பேசுவதற்கு விருப்பமில்லாமல் இருந்தேன். அது எங்கள் இருவருக்கிடையிலான காதல் கதை மட்டுமல்ல. ராஜீவின் குடும்பத்தின் மீது எனக்கு பிரியம் எப்படி விரிந்தது என்பதையும் அவர்கள் இருக்கும் நாட்டை நோக்கிய நேசமாக அது வளர்ந்து, அதில் நானும் ஒரு பகுதியுமாக சேர்ந்துகொண்ட கதையும்கூட. அவர்கள் செய்த தியாகங்கள் கேள்விக்குள்ளாக்கப்படும்போதும், கட்சி பலவீனமாகும்போதும் நான் ஏதாவது செய்யவேண்டும் என்பதை உணர்ந்தேன்.
நாம் ஒரு காலகட்டத்தைக் கடந்து வளரும்போது, உடல்ரீதியாக வயோதிகம் அடையும்போதும், உள்ளே இருக்கும் சிறுவன் அப்படியேதான் இருக்கிறான் என்று எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் கூறியிருக்கிறார். நீட்டிக்கும் சுய உணர்வை அவர் இதன்மூலம் காட்டுகிறார். நீங்கள் இத்தாலியின் ஒரு சிறுகிராமத்தில் வளர்ந்தவர். உங்கள் குடும்பமும் சமூகச்சூழலும் வேறு. நீங்கள் குடிபுகுந்த உலகம் வேறு. இந்தியாவில் நீங்கள் வாழ்ந்த ஆறு தசாப்தங்களைப் பார்க்கும்போது, ஒரு இத்தாலியச் சிறுமியாக இருந்தவர் இப்போது எப்படி இருக்கிறார்?
நான் வளரும்போது கற்றுக்கொண்ட மதிப்பீடுகள் இன்னும் அப்படியே தொடர்கின்றன. அவற்றுக்கு உண்மையாக இருக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்; அது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், மற்றவர்களின் உணர்வுகளுக்கும் விசுவாசமாகவும் உண்மையாகவும் இருப்பது. நான் சந்தித்த எல்லா சூழ்நிலைகளிலும், 60 ஆண்டுகளுக்கு முன்னர் நான் ராஜீவைச் சந்தித்த அதே நபராகவே நீடிக்கிறேன். ஆனால், இப்போதைவிட அப்போது கூடுதலாகப் புன்னகைத்தேன். சிரித்தேன்.
உங்களின் வாழ்க்கை மற்றும் பார்வைகளை வரையறுத்த ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தியின் முக்கியமான பண்புகளைக் குறிப்பிடுங்கள்?
இளம் மணப்பெண்ணாக நான் இந்தியாவுக்கு வந்தபோது, இந்தியா பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. எனக்கு இந்தியா பற்றி இப்போது தெரிந்தவை அனைத்தையும் கற்றுக்கொடுத்தது அவர்கள்தான். துணிச்சல், பரிவு, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகரீதியிலான இந்தியாவுக்கான கடப்பாடு மற்றும் பிறவற்றை அவர்களிடம்தான் கற்றுக்கொண்டேன். தேசத்துக்கான கடமை எல்லாவற்றையும்விட மகத்தானது என்ற அவர்களது உணர்வால் நான் தூண்டப்பட்டேன். சிக்கலும், சந்தேகமும் மிகுந்த காலத்தில், உறுதியாக இருப்பதை நான் அவர்களிடமிருந்தே கற்றுக்கொண்டேன்.
சஞ்சய் காந்தியின் பெயர் அவசரநிலை காலத்துடன் பிணைக்கப்பட்டுவிட்டதாகவும், ராஜீவ் காந்தி தான் கேள்விப்பட்ட புகார்களையும் கருத்துகளையும் தனது தாயாரிடம் தெரிவித்தபோதிலும், அவரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் நீங்கள் எழுதியுள்ளீர்கள். இந்திரா காந்தி, ராஜீவுடைய பேச்சையும், மற்றவர்களின் கருத்துகளையும் கவனித்திருந்தால், அவசரநிலை காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அந்தத் தவறான செயல்களைத் தவிர்த்திருக்க முடியுமா என்று நினைக்கிறீர்களா?
பொதுமக்கள் மத்தியில் சஞ்சய் காந்திதான் அவசரநிலை காலத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார், ஆனால் அவர் மட்டுமே அதற்குக் காரணமல்ல. இந்திரா காந்தியின் மூத்த சகாக்கள் சிலரிடமிருந்து பெரும் அழுத்தம் இருந்தது. ராஜீவ் காந்தியைப் போல, மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தவர்கள் அவரைச்சுற்றி மிகச் சிலரே இருந்தனர் என்று நினைக்கிறேன். காலப்போக்கில், எனது மாமியார் தனது சொந்த விவேகத்தின் மூலம் நிலைமையைப் புரிந்துகொண்டு, அதைச் சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்று கருதுகிறேன்.
நான் நேரில் கண்ட, எதிர்த்த அந்த அவசரநிலை காலம், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் சந்தேகத்துக்கிடமின்றி ஒரு இருண்ட அத்தியாயமாகும். பல காரணங்களால், அதிர்ஷ்டவசமாக அது குறுகிய காலமே நீடித்தது. உங்கள் புத்தகத்தில் அவசரநிலை காலம் குறித்து சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்; அந்த காலகட்டத்தில் நடந்த பல விஷயங்களை ராஜீவ் காந்தியைப் போலவே நீங்களும் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. இந்த காலக்கட்டத்தை ‘தவறான செயல்கள்’ (excesses) நிறைந்த, அதிகப்படியான அதிகாரக் குவிப்பு கொண்ட ஆட்சிக்காலமாக மட்டும் பார்க்காமல், ஜனநாயகத்திற்கு எதிரான, சர்வாதிகாரப் போக்கு கொண்ட ஒரு காலகட்டமாக அங்கீகரிப்பது சரியாக இருக்காதா?
அவசரநிலை காலம் முடிந்த பிறகுதான், என்னவெல்லாம் நடந்தது என்பதன் தீவிரத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆம், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன. ஆட்கொணர்வு மனு உரிமைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இவை அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே செய்யப்பட்டன. இருப்பினும், அந்தக் காலகட்டத்துக்குச் சென்று, இந்திரா காந்தியின் பார்வையில் இருந்து பார்த்தால், அவர் மிகவும் மோசமடைந்து வந்த சூழலைச் சமாளிக்கப் போராடியதைக் காண முடிகிறது. வன்முறைப் போராட்டங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவங்கள், பரவலான திட்டமிட்ட குழப்பங்கள், ஏன், அரசு அதிகாரிகளும் ஆயுதப் படைகளும் உத்தரவுகளை மீறவேண்டும் என்ற அறைகூவல் கூட விடுக்கப்பட்டது. பின்னோக்கிப் பார்க்கும்போதுதான் விஷயங்களைச் சரியான கோணத்தில் புரிந்துகொள்ள முடிகிறது. இந்திரா காந்திதான் நிலைமையைப் புரிந்துகொண்டு, 1977ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தலை நடத்த முன்வந்தார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மேலும், அவசரநிலைக் காலத்தில் நடந்த தவறுகளுக்காக அவர் பிற்காலத்தில் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து, மன்னிப்பும் கேட்டார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.
உங்கள் புத்தகம், ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் சங் பரிவார் குறித்தும், அவை இந்தியச் சமூகம் மற்றும் அரசியலுக்கு, குறிப்பாக ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சகோதரத்துவம் போன்ற அரசியலமைப்பு விழுமியங்களுக்கு ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்துப் பேசுகின்றன. இந்த அடிப்படை விவகாரங்களில், காங்கிரஸ் கட்சி, வரலாற்று ரீதியாகவும், உறுதியாகவும், பயனுள்ள வகையிலும் வேறுபடுத்திக் காட்டியுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?
நிச்சயமாக! மதச்சார்பின்மை விவகாரத்தில் நாம் இவ்வளவு திட்டவட்டமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாது என்று கருதியவர்கள் கட்சிக்குள் இருந்திருக்கலாம். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல. எங்கள் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளில், மக்கள் எவ்வித அச்சமுமின்றித் தங்கள் மதத்தைப் பின்பற்றவும், வழிபடவும், அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைக் காப்பதில் நாங்கள் உறுதியாகவே இருந்து வருகிறோம் என்று நம்புகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரை, நீங்களும் அவரும் வெவ்வேறு சித்தாந்தப் பின்னணிகளைக் கொண்டவர்கள்; இந்தியாவைப் பற்றிய உங்கள் பார்வைகள் முற்றிலும் வேறானவை என்றும் எழுதியுள்ளீர்கள். அதே சமயம், ஆளும் வர்க்க மேல்தட்டு மக்கள் மீது அவருக்கு இருக்கும் ஒருவித அதிருப்தியையும் நீங்கள் கவனிக்கிறீர்கள். புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிடத்தக்க பகுதியில், டெல்லியின் உயர்தர வட்டாரங்களில் (drawing rooms) இருக்கும்போது உங்களுக்கு ஒருவித அசௌகரியம் ஏற்பட்டதை விவரிக்கிறீர்கள்; அங்கு நிலவும் அரசியல் கருத்துகள், “இந்தியாவின் எதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில்” இருப்பதாகத் தோன்றின. உங்கள் தொகுதியிலும், நாடு முழுவதிலும் நீங்கள் நேரில் கண்ட மக்களின் துயரங்களும், வாழ்க்கைக்கான போராட்டங்களும், இந்தச் சலுகை பெற்ற வர்க்கத்தினருக்கு கற்பனை செய்யமுடியாத ஒன்றாகவே இருந்தன. மேலும், மோடியின் எளிமையான பின்னணி அவரது மக்கள் தொடர்பு (PR) குழுவால் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றாலும், அவர் “மிகவும் பின்தங்கிய சூழலிலிருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குள் தனது உழைப்பால் முன்னேறி அதிகாரத்திற்கு வந்தார்” என்பதையும் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். இதிலிருந்து காங்கிரஸ் கட்சி என்ன அரசியல் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
அவர் முற்றிலும் மாறுபட்ட சித்தாந்தப் பின்னணியைக் கொண்டவர் என்பது உண்மைதான். ஆனால், அரசியலில் ஒருவர் வெற்றி பெறுவதற்குப் பல வழிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே டாக்டர்.மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை உதாரணமாகக் கொள்ளலாம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏதுமில்லை என்றே நான் கருதுகிறேன்.
காங்கிரஸ் தலைவர்களான சரத் பவார், பி.ஏ. சங்மா மற்றும் தாரிக் அன்வர் ஆகியோர், உங்கள் வெளிநாட்டு வம்சாவளி குறித்த விவகாரத்தை எழுப்பி, நீங்கள் இந்தியாவில் உயர் பதவியை வகிக்க முடியாது என்று வாதிட்டபோது, நீங்கள் அடைந்த மனவேதனையைப் பதிவு செய்துள்ளீர்கள். ‘என் கண்களில் கண்ணீர் திரள, நான் கூட்டத்திலிருந்து வெளியேறினேன். பதவியையும் அதிகாரத்தையும் கைப்பற்றுவதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. என்னுடன் இருந்த சில சக தலைவர்கள்தான் என்னை அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தினார்கள்; அவர்களே இப்போது எனக்கு எதிராகத் திரும்பியிருந்தனர்… உயர் பதவியை வகிக்க முடியாது என்பது எனக்கு வருத்தத்தைத் தரவில்லை. மாறாக, இந்தியாவின் மீதான எனது விசுவாசமே கேள்விக்குள்ளாக்கப்பட்டதுதான் எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது.’ நீங்கள் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முன்வந்தீர்கள். ஆனால் கட்சியின் பிற தலைவர்கள் உங்களைத் தொடர்ந்து நீடிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இந்த நிகழ்வுதான், வாய்ப்பு கிடைத்தால் பிரதமர் பதவியை ஏற்கக்கூடாது என்ற உங்கள் உறுதியை மேலும் பலப்படுத்தியதா?
நிச்சயமாக, நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்கள் என் சகாக்கள். அவர்கள் மீது நான் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால், அவர்களோ என்மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்தது. அவர்கள் என்னை இன்னும் ஒரு ‘வெளிநபர்’ (outsider) போலவே பார்க்கிறார்கள் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்போது திரும்பிப் பார்க்கும்போது, அவர்களுக்கு அதற்கான சொந்தக் காரணங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால், அது எனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கக் கட்டம்; அப்போது பிரதமர் பதவி என்பது என் சிந்தனையிலேயே இல்லை. ஆம், நான் ராஜினாமா செய்ய முன்வந்தேன். ஆனால், ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தபிறகு, எனது தனிப்பட்ட உணர்வுகள் எனது முக்கிய நோக்கத்திலிருந்து என்னைத் திசைதிருப்ப அனுமதிக்கக்கூடாது என்பதை உணர்ந்தேன். நான் தொடர்ந்து பயணிக்க வேண்டியிருந்தது.
2004ல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றபோது, நீங்கள் பிரதமர் பதவியை ஏற்பீர்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அதை ஏற்க வேண்டாம் என்று நீங்கள் எடுத்த முடிவு குறித்த புதிய பார்வைகளை இந்த அத்தியாயம் வழங்குகிறது. பொதுத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பே, காங்கிரஸ் வெற்றி பெற்றால் நீங்கள் பிரதமர் பதவியை ஏற்பீர்களா என்று கேட்டபோது, உங்கள் பிள்ளைகளில் ஒருவரிடம், “நிச்சயமாக இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தீர்கள். ராகுலும் பிரியங்காவும் இதற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்தனர்; தங்கள் பாட்டியும் தந்தையும் படுகொலை செய்யப்பட்ட நினைவுகள் அவர்களை வாட்டியதால், இந்தப் பதவி மிகுந்த ஆபத்து நிறைந்தது என்று அவர்கள் உறுதியாக நம்பினர். இருப்பினும், கட்சித் தலைவர்கள் உங்களைப் பதவியை ஏற்குமாறு வற்புறுத்திய அந்த ‘விசித்திரமான சூழலில்’, நீங்கள் ஒரு கட்டத்தில் ‘சரி’ என்று சம்மதித்தீர்கள்; ஆனால், பின்னர் உங்கள் முடிவை மாற்றிக்கொண்டீர்கள். இறுதியில், டாக்டர்.மன்மோகன் சிங் பிரதமரானார். நீங்கள் பதவியேற்றிருந்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கொள்கைகளும் காங்கிரஸின் வியூகமும் எவ்வாறு வேறுபட்டிருக்கும் என்று எப்போதாவது யோசித்ததுண்டா? நான் இதைக் கேட்பதற்குக் காரணம், டாக்டர் சிங் மற்றும் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களைவிட, அப்போதும் இப்போதும் நீங்கள் ஒரு சிறந்த சமூக ஜனநாயகவாதியாகப் பரவலாகக் கருதப்பட்டீர்கள்?
இல்லை, அறவே இல்லை. அப்படி ஒரு எண்ணமே என் மனதில் தோன்றியதில்லை. எங்களது அனுபவம் ஒட்டுமொத்தமாக மிகவும் நேர்மறையான ஒன்றாகவே இருந்தது. நாங்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டோம். அரசாங்கத்தை அவர் வழிநடத்த வேண்டும். கட்சியை வழிநடத்துவது நான் என எங்கள் பொறுப்புகள் தெளிவாகப் பிரிந்திருந்தன.
புத்தகத்தின் இறுதியுரையில், இந்தியாவுக்கு வந்ததிலோ அல்லது இங்கு ஒரு குடும்பத்துடன் இணைந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டதிலோ உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறீர்கள். மேலும், நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் தலைவரானபோது, ‘மனிதர்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல், கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வரும்போது வெளிப்படுகிறது’ என்று ஒரு நம்பிக்கையான கருத்தைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். அதே சமயம், அரசியல் சமரசங்களைச் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டபோது நீங்கள் மிகுந்த மனப்போராட்டத்திற்கு உள்ளானதாகவும் எழுதியிருக்கிறீர்கள். ‘அந்தச் சமரசங்கள் உண்மையில் தங்களின் நோக்கங்களை நிறைவேற்றினவா என்று இப்போது நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன். எப்போதும் அப்படி நடந்ததில்லை. அவை கட்சிக்குச் சாதகமாகத் தோன்றிய தருணங்களில் கூட, என்னால் மனதார மகிழ்ச்சியடைய முடியவில்லை. இன்றும் அவை என் மனசாட்சிக்கு ஒரு பாரமாகவே இருக்கின்றன’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அந்தச் சமரசங்கள் எத்தகையவை? சில உதாரணங்களைத் தர முடியுமா?
எதார்த்தமாகச் சொல்லப்போனால், அரசியலில் சில சமயங்களில் சமரசங்களைத் தவிர்க்க முடியாது. சில நேரங்களில், எங்களது அரசியல் கொள்கைகளைப் பகிராதவர்களுடன் கைகோர்க்க வேண்டிய கடினமான சூழல்கள் ஏற்பட்டன. இது எனக்கு ஒருபோதும் மன அமைதியைத் தரவில்லை. ஆனால், ஒரு விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொண்டதில்லை, இனியும் செய்யப்போவதில்லை.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, நாடாளுமன்ற அரசியலிலும் பொதுவாழ்விலும் கண்ணியமும் நாகரிகமும் மறைந்து போனதை நீங்கள் வருத்தத்துடன் குறிப்பிடுகிறீர்கள், ‘தங்களுக்கு மாறுபட்ட கருத்து கொண்டவர்களை இழிவுபடுத்தவும் துன்புறுத்தவும் முனையும் சர்வாதிகார ஆட்சிகளுக்கு உரிய அந்த உணர்வற்ற போக்கை’ நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள். 2029 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை விட்டு அகற்றப்பட்டால், நிலைமை மாறுமென்று, நீங்கள் நம்புகிறீர்களா?
கடந்த 12 ஆண்டுகளில், நமது நாட்டின் கட்டமைப்பு, ஜனநாயகம் மற்றும் நிறுவனங்களுக்குப் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் மாறிய பிறகும் கூட, நமது அமைப்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர நீண்ட கால அவகாசமும், தீவிர முயற்சியும் தேவைப்படும். மக்கள் இப்போது அதிருப்தியடையத் தொடங்கியுள்ளனர். ஏற்பட்டுள்ள சேதத்தை உணரவும் தொடங்கியுள்ளனர். இருப்பினும், நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்; முறையான நிர்வாகம் மீண்டும் வருவதை, இந்திய மக்கள் வரவேற்பார்கள் என்று எனக்குத் தெரியும்.
இந்தியாவின் ஆதிக்கமிக்க கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி என்பது அரசியல் யதார்த்தம். கடந்த மூன்று தசாப்தங்களாக, இந்துத்துவ சக்திகளின் முன்னேற்றத்தைத் தடுக்கக் காங்கிரஸ் போராடி வருகிறது. 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் அக்கட்சி ஓரளவு மீண்டெழுந்தாலும், அந்த வீழ்ச்சிப் போக்கை முழுமையாக மாற்றியமைக்க அக்கட்சியால் முடியவில்லை என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். உங்கள் புத்தகத்தில் காங்கிரஸ் கட்சி குறித்து விரிவாக எழுதியுள்ளீர்கள். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நான் அவ்வளவு அவநம்பிக்கையுடன் இல்லை. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, காங்கிரஸ் கட்சிக்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கும் சமமான போட்டிச் சூழல் களத்தில் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்து அமைப்புகள், குறிப்பாக தேர்தல் ஆணையம் மீதான அவர்களின் இறுக்கமான பிடி, முதன்மை ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் திறன், பணபலம் மற்றும் மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு ஆகியவற்றைச் சிந்தியுங்கள். இருப்பினும், எங்கள் கட்சி தொடர்ந்து போராடி முன்னேறி வருகிறது. சொல்லப்போனால், இந்தத் தாக்குதல்களைத் தாங்கி நிற்கும் வலிமை கொண்ட ஒரே கட்சி இதுதான். எங்கள் தொண்டர்களும் தலைவர்களும் மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் பல்வேறு வகையான துன்புறுத்தல்களை எதிர்கொண்ட போதிலும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், காங்கிரஸ் கட்சியினர் நமது அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள விழுமியங்களுக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், சமீபத்திய மாதங்களில் பல தேர்தல்கள் முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளன என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் இப்போது அதிக விழிப்புணர்வுடன் உள்ளனர். காங்கிரஸ் கட்சி ஒத்த கருத்துடைய பிற கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது, எங்கள் எதிர்கால வாய்ப்புகள் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகின்றன.
தனிப்பட்ட மற்றும் அரசியல்ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பரவலான வாசகர்களை ஈர்க்கக்கூடிய ஒரு புத்தகம், வெளியீட்டுக்குச் சில மாதங்களுக்கு முன்பு பதிப்பகத்தை மாற்றுவது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று. கடந்த ஆகஸ்ட் இறுதியில், ‘பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’ நிறுவனம் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற புத்தகத்தை வெளியிடப்போவதில்லை என்று தெரியவந்தது. செப்டம்பர் தொடக்கத்தில், ‘ஹார்பர் காலின்ஸ் இந்தியா’ (HarperCollins India) நிறுவனம், அந்தப் புத்தகம் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தது. இந்த மாற்றம் பல ஊகங்களுக்கு வழிவகுத்தது. நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் (RSS), வகுப்புவாதப் பதற்றங்கள், சிறுபான்மையினர் மற்றும் சீனாவுடனான இந்தியாவின் மோதல் (கல்வான் பள்ளத்தாக்கு நிகழ்வு உட்பட) குறித்த பகுதிகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்ததாக ஒரு செய்தித்தாள் குறிப்பிட்டிருந்தது. கையெழுத்துப் பிரதியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, உங்கள் தரப்பு இந்தப் புத்தகத்தை வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்ததாக பென்குயின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் சரியானதா? இது புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்த கருத்து வேறுபாடா, அல்லது ஒரு எழுத்தாளரின் கருத்து சுதந்திரம் தொடர்பான பெரிய கேள்விகள் இதில் அடங்கியுள்ளனவா?
இந்தச் சர்ச்சைகளில் நான் ஈடுபட விரும்பவில்லை.
நன்றி: The Hindu


Leave a Reply