Hardline Desk
04 Nov 2026— 2 min read

சீனாவிடம் இருந்து எப்படி மலிவான விலையில் பொம்மைகளை மொத்தமாக இறக்குமதி செய்கிறார்களோ, அதேபோல உலகின் எந்தவொரு நாடாக இருந்தாலும் அங்கு நடக்கும் தேர்தல்களை மிகக் குறைந்த செலவில், இந்தியாவிலிருந்து இயக்கித் திசைதிருப்ப முடியும் என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது. அந்தப் பணியில் ஈடுபடுவோர், எவ்வளவுக்கு எவ்வளவு மோசமான தந்திரங்களையும் கீழ்த்தரமான வழிகளையும் கையாள்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களுக்குப் பணமும் புதிய வாய்ப்புகளும் குவிகின்றன. அதுவே இந்த நிழல் உலகின் எழுதப்படாத விதி. இது, உலகளாவிய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள அகமதாபாத் நகரின் அடையாளம் தெரியாத ஒரு சாதாரண பகுதியில் அமைந்துள்ள, எளிய – அடிப்படை வசதிகள் கூட இல்லாத – ஒரு சிறிய வாடகை வீடுதான் உலகளாவிய பல நாடுகளின் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் மையமாக இயங்கி வந்துள்ளது. அங்கே 22 வயது நிரம்பிய இளம் கன்டென்ட் கிரியேட்டர் ஒருவர், இரவு பகலாகத் தூங்காமல் உழைத்துக்கொண்டு இருந்தார். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடைபெற்ற கென்யா நாட்டின் அதிபர் தேர்தலுக்காக வில்லியம் ரூட்டோவின் பிரச்சாரப் பணிகளுக்காக அவர் சுவரொட்டிகளையும் காணொளிகளையும் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

ராஜன் குமார் என்ற அந்த இளைஞர் உருவாக்கிய எந்தவொரு சமூக ஊடகப் பதிவும் வில்லியம் ரூட்டோவின் அதிகாரப்பூர்வப் பிரச்சாரக் கணக்கிலிருந்து பகிரப்படவில்லை. மாறாக, அவரது தனித்துவமான அடையாளத்தை முற்றிலும் மறைத்து, முற்றிலும் சுதந்திரமான இயக்கங்கள் போலச் செயல்படும் ‘பினாமிக் கணக்குகள்’ எனப்படும் நிழல் சமூக ஊடகக் கணக்குகள் மூலமாக அந்தப் பதிவுகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டன. ஒரு நாளைக்கு ஏழு டாலர் கூலிக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட சமூக ஊடகப் பதிவுகளை அவர் உருவாக்கித் தந்துள்ளார்.
திசை திருப்பலாம்… திரித்துக் கூறலாம்!
எதிர்க்கட்சித் தலைவர்களின் நீண்ட உரைகளைக் கத்தரித்து, அவர்களின் கருத்துகளைத் திசைதிருப்பும் வகையிலும், திரித்துக் கூறும் வகையிலும் அந்த இளம் கலைஞர் காணொளிகளைத் தொகுத்துக் கொடுப்பார்.
கென்யா தேர்தலில் வில்லியம் ரூட்டோவின் செல்வாக்கையும் வெற்றியையும் மிகைப்படுத்தி பேசும் பொய்யான தகவல்களுடன் கூடிய சுவரொட்டிகளையும் அவர் தயாரித்துள்ளார்.

‘பெண் அரசியல்வாதிகள் யாரேனும் தேர்தலில் போட்டியிட்டால், அவர்களின் நற்பெயரைக் குலைப்பதற்காகத் திட்டமிட்டுத் தவறான வதந்திகளையும் தேவையற்ற இணைப்புகளையும் உருவாக்குவதே அவர்களை மட்டம் தட்டுவதற்கான எளிய வழிமுறை’ என்று அவர் ஊடகங்களிடம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இது போன்ற சர்ச்சைக்குரிய மற்றும் வன்மமான அனைத்து உள்ளடக்கங்களும் பொதுவெளியில் நேரடியாகப் பகிரப்படாது. நிழல் பக்கங்கள் வழியாகப் பெருமளவில் பரப்பப்படும்.
இந்தத் திட்டமிட்ட டிஜிட்டல் உத்திகளின் பலனாக, கென்யா நாட்டின் ஐந்தாவது அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்று பதவியேற்றார்.
இந்தச் சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையில், அமெரிக்கா தனது இடைத்தேர்தலைச் சந்தித்திருக்கும் இந்தத் தருணத்தில், இந்தியாவைச் சேர்ந்த சமூக ஊடகப் போலி கணக்குகளும் கூலிப்படை பக்கங்களும் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நிழல் முறையில் காணொளிகளைப் பதிவேற்றி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற்ற செனட் முதனிலைத் தேர்தலுக்கு முன்பு, ஜனநாயகக் கட்சியின் அரசியல்வாதியான ஹேலி ஸ்டீவன்ஸுக்கு ஆதரவாக இது போன்ற இந்தியக் கணக்குகள் செயல்பட்டுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் முதன்முதலில் செய்தி வெளியிட்டது. அந்தத் தேர்தலில் ஹேலி ஸ்டீவன்ஸ் அப்துல் எல்-சயீத்திடம் தோல்வியடைந்த போதிலும், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் தேர்தல் களங்களில்கூட இந்திய சமூக ஊடக கூலிப்படைகளின் ஆதிக்கம் எத்தகைய ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இது ஒரு தெளிவான சான்றாகும்.
தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தேர்தல்களில் திரைமறைவில் நின்று தங்களது கைவரிசையைக் காட்டியுள்ள இந்த இந்திய அரசியல் ஆலோசகர்கள், தற்போது அமெரிக்கத் தேர்தல் களத்திலும் வெற்றிகரமாக நுழைந்துள்ளனர்.
இந்தியாவில் இயங்கி வரும் பல அரசியல் ஆலோசகர்கள் ஊடகங்களுக்கு அளித்த தகவல்களின்படி, இந்த நிழல் பிரச்சார உலகத்தில் எந்தவிதமான வரம்புகளோ, நெறிமுறைகளோ கிடையாது என்பது தெளிவாகிறது. தேர்தல் களத்தை முற்றிலும் தாங்கள் விரும்பிய திசைக்கு மாற்றுவதாகவும், இதில் வேறு எந்த விதமான மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது என்றும் டெல்லியைச் சேர்ந்த அரசியல் ஆலோசகர் துஷார் கிரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ‘ஜனநாயக முறைப்படி நடைபெறும் தேர்தல்களின் மீது மக்கள் கொண்டுள்ள கோட்பாடும் நம்பிக்கையும் மிகைப்படுத்தப்பட்டவை. வாக்காளர்களுக்குச் சுதந்திரமான சிந்தனை கிடையாது. அனைத்துமே முழுமையாகத் திட்டமிடப்பட்டுத் திணிக்கப்படுவது தான்’ எனவும் அவர் வாதிட்டுள்ளார்.
அமெரிக்காவில் தான் தொடங்கின!
அரசியல்வாதிகளுக்குத் தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி, பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவது எப்படி என்பது குறித்து ஆலோசனை வழங்கும் சிறப்புப் பணியகங்கள் முதன்முதலில் 1930களில் அமெரிக்காவில்தான் உருவெடுத்தன.
சமூக ஊடகங்களின் அசுர வளர்ச்சியால், நேர்மையற்ற தந்திரங்களும் மோசமான சதி வேலைகளும் ஆன்லைன் தளங்களுக்கு நகர்ந்துவிட்டன. குறிப்பாக, ‘மெட்டா மற்றும் கூகுள் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தளங்களில், குறி நிர்ணயிக்கப்பட்ட விளம்பர பிரச்சாரங்களை மேற்கொள்வதன் மூலம் கோடிக்கணக்கான வாக்காளர்களை எளிதில் சென்றடைய முடியும்’ என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அமெரிக்கத் தேர்தல்களில் வாக்காளர்களின் மனநிலையைத் தாக்கம் செய்ய ரஷ்யா இது போன்ற உத்திகளைப் பயன்படுத்தியதாகப் பல்வேறு முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
தேர்தல் காலங்களில் பிரதான அதிகாரப்பூர்வ கணக்குகள் மூலம் வெளியிட்டால் விவாதங்களை உண்டாக்கக்கூடிய சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை வெளிப்படையாகப் பகிராமல் இருப்பதற்காகப் பல்வேறு மாற்று உத்திகள் கையாளப்படுகின்றன.
சில நேரங்களில், அரசியல் கட்சிகளுக்காக ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் நிழல் பக்கங்களை இந்தக் consultancy நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றன; அல்லது புதிய பக்கங்களை உருவாக்குகின்றன; அல்லது ஏற்கனவே இருக்கும் பழைய பக்கங்களை மறுபெயரிட்டுத் தங்களது பிரச்சாரத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கின்றன; சில சமயங்களில் வாடகைக்கு விடப்படும் பக்கங்களையும் இவர்கள் பயன்படுத்துகின்றன. (தமிழ்நாட்டின் தற்போது முதல்வராகவுள்ள நடிகர் விஜய்க்காகப் பாகிஸ்தானிய ஃபேஸ்புக் கணக்குகள் இயங்கியது நினைவுக்கு வரலாம்.)

இந்தியாவின் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற மெட்டா மற்றும் கூகுள் தயாரிப்புப் பொருட்களின் கீழ் செயல்படும் இது போன்ற நூற்றுக்கணக்கான நிழல் பக்கங்கள் விற்பனைக்கு இருப்பதை ஓர் ஊடக விசாரணை வெளிச்சம்போட்டுக் காட்டியது.
வாக்காளர்களின் முடிவுகளைத் திசைதிருப்பும் நோக்கோடு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்களை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் பெரு நிறுவனங்களின் கொள்கைக் கோட்பாடுகளை இந்த முகவர் நிறுவனங்கள் எவ்வாறு எளிதாகக் கடந்து செல்கின்றன என்பதையும் இது காட்டியது.
ரஷ்யாவுடன் தொடர்புடைய ஒருங்கிணைந்த ஆன்லைன் செல்வாக்கு நடவடிக்கைகளை ஆராய்ந்து அம்பலப்படுத்தும் ‘Antibot4Navalny’ என்ற ரகசியக் குழுவினர், அமெரிக்காவின் மிச்சிகன் தேர்தலில் ஹேலி ஸ்டீவன்ஸுக்கு ஆதரவாகப் பதிவிடப்பட்ட காணொளிகளைப் பரப்பிய குறைந்தது 28 கணக்குகளை எக்ஸ் தளத்தில் கண்டறிந்துள்ளனர். இந்தத் தனித்துவமான கணக்குகள் 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட கணக்குகளில் குறைந்தபட்சம் பதினைந்து கணக்குகள் இந்தியாவில் இருந்துதான் இயக்கப்பட்டுப் பதிவிடப்பட்டுள்ளன என்பதை ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
கிளம்சன் பல்கலைக்கழகத்தின் ஊடக தடயவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்களும் கூட, அப்துல் எல்-சயீத்துக்கு எதிராக ஹேலி ஸ்டீவன்ஸின் வெற்றிக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட இந்தியக் கணக்குகளும் பக்கங்களும் இதே போன்ற மோசமான தந்திரங்களைப் பயன்படுத்தி வருவதைக் கண்டறிந்துள்ளனர்.

அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான அமாக் தர் சர்மா இது குறித்துக் கூறுகையில், ‘‘தேர்தல்கள் நெருங்கும் வேளையில் பொதுமக்களின் ஒட்டுமொத்தக் கவனமும் வெளிப்படையாகத் தெரிகிற விஷயங்களின் மீதே நிலைநிறுத்தப்பட வேண்டும் என அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள். ஆனால், உண்மையான அதிகாரமும் செல்வாக்கும் மக்களின் கண்களுக்குத் தெரியாத திரைமறைவில் முழுமையாக இயக்கப்படுகின்றன. ஒரு ஜனநாயக நாட்டில், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் மறைமுக அதிகார மையங்கள் உருவாக்கப்படுவதே நெறிமுறை சார்ந்த கவலையாக மாறுகிறது,’’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் உள்ள அரசியல் ஆலோசனைக் குழுக்கள் தற்போது ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின் முதுகெலும்பாக மாறிவிட்டன. மேலும் இவர்களின் கடந்த காலச் செயல்பாடுகளே பிற நாடுகளின் அரசியல்வாதிகளையும் ஈர்க்கும் விளம்பரப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

‘‘இந்தியாவில் மிகவும் சிக்கலான மற்றும் பரந்த ஜனநாயகக் களம் அமைந்துள்ளது. அதில், இந்திய அரசியல் ஆலோசனைக் குழுக்கள் நிழல் பிரச்சாரங்களைப் பயன்படுத்தி, அரசியல்வாதிகள் விரும்பிய தேர்தல் முடிவுகளை வெற்றிகரமாகப் பெற்றுத் தந்த அனுபவத்தையும் நற்பெயரையும் பெற்றுள்ளன. அதுவே தற்போது, வெளிநாட்டுத் தேர்தல் பிரச்சாரங்களை அவர்களின் பக்கம் ஈர்க்கும் காந்தமாக மாறியுள்ளன,’’ என, அரசியல் ஆலோசகர் துஷார் கிரி குறிப்பிட்டுள்ளார்.
மெட்டாவின் விதிமுறை!
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் விதிமுறைகளின்படி, எவரும் தங்களது கணக்குகளை விற்கவோ, வாங்கவோ அல்லது பரஸ்பரம் மாற்றிக்கொள்ளவோ முயல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பொய்யான அல்லது திருடப்பட்ட அடையாளங்களின் கீழ் செயல்படுவதும் அனுமதிக்கப்படுவதில்லை.
பொதுவாக மெட்டா மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களின் கொள்கைகளின்படி, ‘அரசியல் விளம்பரதாரர்கள் தங்கள் அடையாளங்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். விளம்பரத்திற்காகப் பணம் செலுத்துபவர்கள் யார் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்’ என்ற விதிகள் உள்ளன. இருப்பினும் இந்த விதிகள் நாசூக்காக நாடுகளுக்கு நாடு மாறுபடுகின்றன.

இந்தியாவைச் சேர்ந்த ஆலோசகர்கள் இந்த சமூக ஊடக பிளாட்ஃபார்ம்களின் சமூக நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்தும் அன்றாடம் மிக எளிதாக மீறப்படுவதாக அல்ஜசீராவிடம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிறுவனங்கள் தடை விதிகள் அடங்கிய நீண்ட பட்டியல்களை வைத்திருந்தாலும், அந்த வரம்புகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளையும் ஓட்டைகளையும் எப்படிப் பயன்படுத்தித் தப்பிக்க வேண்டும் என்பதில் தாங்கள் நிபுணர்கள் என்று துஷார் கிரி கூறியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது, அதிநவீன ப்ரீமியம் VPN சேவைகளே இந்த ஆலோசகர்களின் முதன்மைக் கருவிகளாகப் பயன்படுகின்றன. சில நேரங்களில் ஒரு கணக்கின் இருப்பிடத்தை மாற்றுவது மட்டுமே அந்த வேலையை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்கிறது.
வெளிநாட்டில் அமர்ந்துகொண்டு ஒரு நபர் எந்தத் தடையும் இல்லாமல் குறிப்பிட்ட இலக்கு வாக்காளர்களை மையமாகக் கொண்ட அரசியல் விளம்பரங்களை இயக்க முடிகிறது.
அமாக் தர் சர்மா தனது ஆய்வின் போது இந்திய அரசியல் ஆலோசகர்கள் ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் தேர்தல் களங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளார். இதே போன்ற சேவைகளை இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலும் தாங்கள் வெற்றிகரமாக வழங்கி வருவதாக அரசியல் ஆலோசகர்கள் ஊடகங்களிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கென்யா அதிபர் தேர்தலில் வில்லியம் ரூட்டோவுக்காகப் பணியாற்றிய ராஜன் குமார், தனக்கு மாத ஒப்பந்த அடிப்படையில் ஒரு நாளைக்கு ஏழு டாலர்கள் வரை கூலி வழங்கப்பட்டதாகவும், சில நாட்களில் நூறுக்கும் மேற்பட்ட கிரியேட்டிவ் உள்ளடக்கங்களை உருவாக்கித் தருமாறு தன்னிடம் கடுமையான கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
டெலிகிராம் செயலியில் உருவாக்கப்பட்ட பிரத்யேகக் குழுக்கள் மூலமாகவே அனைத்துப் பணிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு வந்துள்ளன.
‘எந்தக் காலத்திலும் வில்லியம் ரூட்டோவின் பிரதிநிதிகளுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்ததில்லை. இது போன்ற உள்ளடக்கங்களை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு உயர் அதிகார மட்டத்தில் இயங்கும் விநியோகச் சங்கிலியில் யார்யார் எங்குள்ளார்கள் என்ற உண்மையான விவரங்கள் எப்போதுமே ரகசியமாகவே வைக்கப்படும். பகிரப்படும் உரையாடல்கள் உடனடியாக அழிக்கப்படும். பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளும் அவ்வப்போது முழுமையாக எரிக்கப்படும்’ என்று அவர் தெளிவுபடுத்தினார்.
நிழல் உலகப் பணிகளின் ரகசியத் தன்மை, நிதிப் பரிமாற்றங்களிலும் மிகத் தெளிவாகப் பின்பற்றப்படுகிறது. அரசியல் ஆலோசனைக் கட்டமைப்பின் மிக முக்கியத் தூண்களில் ஒன்றாகக் கருப்புப் பணம் திகழ்கிறது. அதற்காக வெளிநாடுகளில் போலியான பெயர்களில் நிறுவனங்களைத் தொடங்குவர். முறையான எந்தச் செயல்பாடும் இல்லாத அந்த நிறுவனங்களில் சிலரை ஏட்டளவில் பணியமர்த்தி சட்டவிரோதப் பணத்தைப் பரிமாற்றம் செய்வர்’ என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஆலோசகர் வெளிப்படையாக அல்ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் ‘நிழல் அரசியல் பிரச்சாரங்களை மொத்தமாக ஏற்று நடத்தித் தரும் ஒரு மிகப்பெரிய மொத்த விற்பனைச் சந்தையாக இந்தியா மாறிவிட்டது’ என்று ஆலோசகர் துஷார் கிரி சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவிடம் இருந்து எப்படி மலிவான விலையில் பொம்மைகளை மொத்தமாக இறக்குமதி செய்கிறோமா, அதேபோல உலகின் எங்கு நடக்கும் தேர்தல்களையும் மிகக் குறைந்த செலவில் இந்தியாவிலிருந்து இயக்கித் திசைதிருப்ப முடியும் என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது.
இந்திய அரசியல் ஆலோசகர்களின் இந்தச் செயல்பாடுகளின் தன்மையை, ‘‘2000களில் இந்தியா எவ்வாறு உலகளாவிய தகவல் தொழில்நுட்ப வணிகச் செயலாக்க அவுட்சோர்சிங் மையமாக மாறியதோ, அதே போன்றதொரு தொடர்ச்சியாகத்தான் தற்போது அரசியல் ஆலோசனைக் குழுக்களின் எழுச்சியும் பார்க்கப்பட வேண்டும்’ என, விளக்குகிறார் அமாக் தர் சர்மா.
எவ்வளவுக்கு எவ்வளவு மோசமான தந்திரங்களையும் கீழ்த்தரமான வழிகளையும் கையாள்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களுக்குப் பணமும் புதிய வாய்ப்புகளும் குவியும். இதுவே இந்த நிழல் உலகின் எழுதப்படாத விதி. இது, உலகளாவிய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.


Leave a Reply