
1975 ஆகஸ்ட் மாதத்தின் ஓர் இரவு. இந்திரா காந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்து இரண்டுமாதங்களே ஆகியிருந்தன. வடக்கு தில்லி கமலா நகரில், பிர்லாபருத்தி ஆலைக்குச் சற்று தொலைவில்ஒருசிறிய அறை. முன்கதவு இறுக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. அறையின் நடுவே விட்டுவிட்டு எரிந்த ஓர் எண்ணெய் விளக்குமட்டுமே வெளிச்சம். நாற்காலிகளுக்கு இடமில்லை; தரையில் அமர்ந்திருந்த பதினான்கு பேரில் பதின்மூன்று பேர் ஆலைத்தொழிலாளர்கள். நடு ஷிப்ட் இரவு 9.30 மணிக்குத்தான் முடியும் என்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த ஆலைக்கிளைக் கூட்டம் இரவில்தான் கூட முடிந்தது.பதினான்காவது நபர் ஓர் இளம்பெண். லண்டனில் கை நிறையச் சம்பளம் தந்த வேலையைத் துறந்து, கல்கத்தாவில் ஐந்தாண்டுகள் கட்சிப் பணியாற்றிவிட்டுத் தில்லிக்கு வந்திருந்தவர். தொழிலாளர்களோடு தோளோடு தோள் நிற்கும் இந்தநாளுக்காகப் பல ஆண்டுகள் காத்திருந்தவர். அவர்தான் பிருந்தா.அவசரநிலையைச் சாக்காக வைத்து நிர்வாகம் சுமத்திய கூடுதல் பணிச்சுமையை எப்படி எதிர்ப்பது என்று விவாதம் நடந்துகொண்டிருந்தது. தொழிற்சங்கப் பணிககாக வேலைநீக்கம் செய்யப்பட்டிருந்தஸ்ரீராம் கூட்டத்தை வழிநடத்திக்கொண்டிருந்தார். திடீரென அவர் பிருந்தாவின் பக்கம் திரும்பினார்: “கல்கத்தாவில் உங்கள் அறையின் பூட்டை உடைத்துச்சோதனை நடத்தியிருக்கிறார்கள். இந்தச் செய்தியை அனுப்பியிருப்பவர் தோழர் சுர்ஜித். இனி இங்கே நீங்கள் புதிய பெயரில்தான் வேலை செய்ய வேண்டும் என்கிறார்.”கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அவர்களின் அந்தச் செய்தியோடு, அன்றிரவு அந்த மங்கிய விளக்கொளியில் பிருந்தா ‘மறைந்தார்’; “ரீட்டா” பிறந்தார். அடுத்தபத்தாண்டுகள் அவர் அந்தப் பெயரிலேயே அறியப்பட்டார்.
லண்டன் வீதிகளில் விழித்த மனம்
கல்கத்தாவில் பிறந்த பிருந்தாவின் அரசியல் விழிப்பு தொடங்கியது லண்டனில். ஏர் இந்தியாவின் லண்டன் அலுவலகத்தில் பணியாற்றிய மூன்று ஆண்டுகள்அவரது வாழ்க்கையையே தலைகீழாக்கின. உலகின் மிகப் பெரிய ஏகாதிபத்திய வல்லரசை ஒரு சிறிய நாடு எதிர்த்து நின்ற வியட்நாம் விடுதலைப் போர் அவரை ஆட்கொண்டது. விடுப்பு எடுத்துக்கொண்டு போர் எதிர்ப்பு ஊர்வலங்களில் கலந்துகொண்டார். 1968 மார்ச்சில் நடந்த புகழ்பெற்ற கிராஸ்வெனர் சதுக்கப் போராட்டத்திலும், போலீஸ் தடியடி நடத்திய அக்டோபர் ஊர்வலத்திலும் அவர் இருந்தார். அவரது பால்ய கால நண்பர்களான மாலா, சுனீத், மது, நீனா ஆகியோரும் அதே நாட்களில் சோசலிசக் கனவால் உந்தப்பட்டு, மேம்பட்ட உலகுக்கான போராட்டத்தில் கைகோர்த்திருந்தனர்.ஒரு சிறிய தேசத்தின் தலைவர்களுக்கு இத்தனை மன உறுதியைத் தந்த அந்தச்சித்தாந்தம் எது என்ற கேள்வி அவரைமார்க்சிய நூல்களை நோக்கித் தள்ளியது.அந்த வாசிப்பு அவரது பார்வையைத் தாயகத்தின் பக்கம் திருப்பியது. ஒரு நாள் தாமதமாக வந்து சேரும் “தி ஸ்டேட்ஸ்மேன்” நாளிதழின் பக்கங்களில், மேற்குவங்கத்தில் உணவு, நிலம், கூலிக்காக நடந்த போராட்டச் செய்திகளைத் தேடித்தேடிப் படித்தார். கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நிலைகொண்ட ஏடுகளால்கூட மறைக்க முடியாதஅளவுக்கு அந்தப் போராட்டங்களில் மக்கள் திரண்டிருந்தனர். சட்டமன்றத்திலும் வீதியிலும் அச்சமின்றி முழங்கிய ஜோதிபாசு அவருக்கு ஆதர்சமானார்.தன் வேலைக்குள்ளேயே சிறைப்பட்டிருப்பதாக உணரத் தொடங்கினார் பிருந்தா.1970-ல் ஏர் இந்தியா வேலையை ராஜினாமாசெய்துவிட்டு கல்கத்தா திரும்பினார்.
“நான் கம்யூனிஸ்ட் ஆகிவிட்டேன்!”
அதற்கு முன்பே, 1969 இலையுதிர்காலத்தில், லண்டன் ஏர் இந்தியா வரவேற்பறையில் ஒரு நெகிழ்ச்சியான காட்சி அரங்கேறியது. அமெரிக்காவில் படித்துவிட்டு இந்தியா திரும்பிக்கொண்டிருந்த பால்ய காலத் தோழி சுபாஷினி செகால் அங்கு வந்தார். இருவருக்கும்வயது இருபத்திரண்டு. “உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்”என்றார் பிருந்தா. “எனக்கும்தான்” என்றார்சுபாஷினி. யார் முதலில் சொன்னார்கள் என்பது இன்று நினைவில் இல்லை; ஆனால் இருவரிடமிருந்தும் வந்தது ஒரேவாக்கியம்: “நான் கம்யூனிஸ்ட் ஆகிவிட்டேன்!” வரவேற்பறை என்பதையும் மறந்து இருவரும் இறுகத் தழுவிக்கொண்டனர். அன்று இணைந்த அந்த நட்பு, பின்னாளில் சுபாஷினி அலியாக மகளிர் இயக்கத்தின் முன்னணித் தலைவரானஅவரோடு ஐம்பதாண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது.1971-ல், இருபத்து மூன்றாவது வயதில்,மாணவர் பிரிவின் பரிந்துரையோடு கட்சி உறுப்பினரானார் பிருந்தா. மேற்குவங்கக் கட்சி வரலாற்றின் கொந்தளிப்பானகாலம் அது. அங்குதான் ஜோதிபாசுவை நேரில் சந்தித்தார். மக்களின் பேரன்பைப் பெற்ற தலைவர்; ஆனால் இளம்ஊழியர்களிடம் துளியும் ஆணவமில்லாதவர். கண்கள் மின்ன ஒருமுறை அவர் சொன்னார்: “உன் அப்பா உனக்கென்றுதிட்டமிட்டு வைத்திருந்த கல்வியிலிருந்து இது ரொம்பவே வேறுபட்டதுதான்!”
புரட்சி நாளில் ஒரு புரட்சித் திருமணம்
கல்கத்தாவில்தான் பிருந்தா முதன்முதலில் பிரகாஷ் காரத்தைச் சந்தித்தார். அப்போது பிரகாஷ் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர். இளம்இலட்சியவாதிகளாக, முழுநேர ஊழியர்களாக இருவரும் தில்லியில் மீண்டும் சந்தித்தனர். இலட்சியம் பிணைத்த அந்த உறவு மெல்ல மலர்ந்தது.ஆனால் அது அவசரநிலைக் காலம். உடன் பணியாற்றியவர்களில் பலர் சிறையில் இருந்தனர். திருமணம் செய்ய இதுஏற்ற நேரமா என்ற குழப்பம் இருவருக்கும். பிரகாஷ் சுர்ஜித்திடம் ஆலோசனைகேட்டார். சுர்ஜித் சிரித்தார்: “அவசரநிலை எத்தனை நாள் நீடிக்கும் என்று யாருக்குத் தெரியும்? அதுவரை காத்திருந்தால் திருமணத்தையே மறந்துவிட வேண்டியதுதான்.” கூடவே ஓர் எச்சரிக்கையும் தந்தார்: அழையா விருந்தாளிகளாகப் போலீசும் வரக்கூடும்! இருவரும் நாள்குறித்தனர்– நவம்பர் 7, ரஷ்யப் புரட்சி தினம்.மணமகன் பாதித் தலைமறைவு வாழ்க்கையில்; மணமக்கள் இருவருக்கும் மாற்றுப் பெயர்கள் – பிரகாஷ் “சுதீர்”,பிருந்தா “ரீட்டா”. இப்படியொரு திருமணத்துக்கு இடம் தர யார் முன்வருவார்கள்? பரந்த மனதோடு தன் வீட்டுக் கதவுகளைத் திறந்தார் டாக்டர் வீணா மஜூம்தார். பின்னாளில் இந்திய மகளிர்ஆய்வுத் துறையின் முன்னோடியாகப் போற்றப்பட்டவர் அவர். ஜே.என்.யு. மாணவிகளான அவரது மகள்கள் இந்திராணி, ஷாஷ்வதி வழியாகத்தான் பிரகாஷ் அவரை அறிந்திருந்தார். போலீஸ் வரக்கூடும்என்று எச்சரித்தபோது, எதற்கும் அஞ்சாத வீணா, போலீசைச் சமாளிப்பது தனக்குப் புதிதல்ல என்று நகைச்சுவையாகச் சொன்னார். பிருந்தாவின் வாழ்வில் பின்னாளில் ஆழமானதாக்கம் செலுத்தப்போகும் ஆளுமையுடனான முதல் சந்திப்பு அது.
மாலை மாற்றி, உறுதிமொழி ஏற்று…
பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.ஜி. என்றழைக்கப்பட்ட ஏ.கே. கோபாலனும், அவரது இணையரும் தொழிற்சங்க – மகளிர் இயக்கத் தலைவருமான சுசீலா கோபாலனும் அப்போது தில்லியில் இருந்தது மணமக்களின் நல்வாய்ப்பு. சுர்ஜித்துடன் அவர்களும் திருமணத்துக்குத் தலைமை தாங்கினர். தரையில் விரிக்கப்பட்ட கம்பளங்களில் விருந்தினர்கள் அமர்ந்திருந்தனர். ஒருவருக்கொருவர், புரட்சியின் இலட்சியத்துக்காகவும் – தனித்தனியே எழுதி வைத்திருந்த உறுதிமொழிகளை வாசித்து, இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். புரோகிதர் இல்லை; சடங்குகள் இல்லை; இலட்சியமே சாட்சி.வாழ்த்துரையின்போது ஏ.கே.ஜி. மணமகளின் தோளில் கை போட்டுக்கொண்டு, “இந்த இளைஞன் எப்போதாவது உனக்குத்தொல்லை கொடுத்தால் என்னிடம் வந்து சொல்!” என்றார். அரங்கம் ஆரவாரத்தில் அதிர்ந்தது. சுர்ஜித், காரல் மார்க்ஸின் மனைவியும் வறுமையிலும் நாடுகடத்தலிலும் அவரோடு துணை நின்றவருமான ஜென்னி மார்க்ஸ் பற்றிப் பேசினார். தொழிலாளி வர்க்கத்தின் இலட்சியத்துக்காக அந்தத் தம்பதி செய்த
தியாகங்களை நினைவுகூர்ந்து, “ஜென்னிதான் சரியான கம்யூனிஸ்ட் மனைவி” என்றார். பிருந்தா பிரகாஷை ஒரு ரகசியப் பார்வை பார்த்தார்!அன்று எடுத்த உறுதிமொழியை இருவரும் இன்றுவரை காத்து வருகின்றனர். பிருந்தாவின் பணிகளில் எந்த வகையிலும் தலையிடாமல், அவரது இன்ப துன்பங்கள் அனைத்திலும் ஒரு பாறையைப்போல உறுதுணையாக நின்றிருக்கிறார் பிரகாஷ்.
“நீங்கள் சந்தோஷமாக இருந்தால் போதும்”
திருமணமான சில வாரங்களில், மாடல் டவுனில் இரண்டு அறைகள் கொண்டஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தனர்.அவசரநிலையால் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதியான வி.பி. ஹவுஸில் தனிமையில் வாழ நேர்ந்த பிரகாஷின் தாயாரை அங்கு அழைத்து வந்தனர்.மாமியாருடனான முதல் சந்திப்பு பிருந்தாவின் நெஞ்சில் இன்றும் பசுமையாக இருக்கிறது. அழகான சிரிப்போடு கைகளை நீட்டி அணைத்துக்கொண்டார் அம்மா. “அம்மா, உங்கள் மருமகள்கேரளத்துப் பெண் இல்லை, மலையாளம் பேசத் தெரியாது என்பது உங்களுக்கு ஏமாற்றமாக இருக்கும்” என்றார் பிருந்தா.அம்மா சிரித்தார்: “அது எனக்குக் கவலையே இல்லை. நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தால் போதும்.” முடக்குவாதத்தின் கடும் வலியைக்கூட மாதக்கணக்கில் வெளிக்காட்டாமல் புன்னகையோடு வாழ்ந்தவர் அவர்.அந்தப் புன்னகைக்குப் பின்னால் பெரும் துயரங்கள் இருந்தன. பர்மாவில் ரயில்வேயில் பணியாற்றிய கணவரோடுவாழ்ந்தபோது, பதின்மூன்று வயது மகள்கமலாவை டெட்டனஸ் நோய்க்குப் பறிகொடுத்தார். நான்கு ஆண்டுகளில் கணவரும் மாரடைப்பால் மறைந்தார்; அப்போது பிரகாசுக்கு வயது பன்னிரண்டு. அந்த ஆண்டுகளை எப்படிக் கடந்தீர்கள் என்றுபிருந்தா கேட்டபோது அம்மா சொன்னார்: “வேறென்ன செய்ய முடியும்? நடக்க வேண்டியதைக் கவனித்தால்தான் நானும்பிரகாசும் பிழைக்க முடியும்.”
கதவைத் தட்டிய சுந்தரய்யா
1976 மார்ச்சில் அம்மா மறைந்தார். சில நாட்களில் ஒரு காலை வேளை, வீட்டுக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்த இரு
வரும் மலைத்து நின்றனர். வாசலில் நட்புப்புன்னகையோடு நின்றவர் பி. சுந்தரய்யா – நிஜாமின் நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிராக 1946 முதல் 1951 வரை நடந்ததெலுங்கானா விவசாயிகள் ஆயுதப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்; கிராம ராஜ்யங்கள் அமைத்து ஏழைவிவசாயிகளுக்கு நிலத்தைப் பகிர்ந்தளித்த புரட்சியின் சிற்பி. தாயை இழந்த பிரகாஷ் துயரத்தில் இருப்பார் என்று தெரிந்தே வந்திருந்தார்.ஒருநாள் மாலைபிருந்தா வீடு திரும்பியபோது ஓர் அற்புதக் காட்சி. சமையலறைத் தரையில் பிரகாஷோடு அமர்ந்து காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தார்பி.சுந்தரய்யா. குறும்புச் சிரிப்போடு அவர் சொன்னார்: “தெலுங்கானா காடுகளில் இதைவிட ருசியான சாப்பாடு கிடைத்தது.உங்கள் இருவருக்கும் சமைக்கக் கற்றுத் தரப்போகிறேன்!” சுவையான ஆந்திரக் கறி சமைக்கப் பிருந்தா கற்றது அந்தஆசானிடம்தான். சமையலறையில் பாடம் கற்ற பிரகாஷ், வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.சுந்தரய்யா ஒருமுறை சொன்ன வார்த்தைகள் பிருந்தாவின் மனதில் பதிந்தன: “கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தனிநபரின் பங்கு முக்கியம்தான். ஆனால் ஒரு தலைவரின் உயரம் அவரது கட்சியின் உயரமே. கட்சி வளராமல் தனிநபரின் அந்தஸ்து மட்டும் வளர்வதில் பயனில்லை.” தனிநபர் வழிபாடே அரசியலாகிவிட்ட இன்றைய காலத்தில் இந்த வார்த்தைகள் கூடுதல் பொருள் பெறுகின்றன.
இரும்பு நெஞ்சங்களின் ஜே.என்.யு.
அவசரநிலைக் காலத்தில் ஜவஹர்லால் பல்கலைக்கழக (ஜே.என்.யு.) மாணவர்களும் ஆசிரியர்களும் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தினர். மாணவர் பேரவைத் தலைவர் டி.பி. திரிபாதி (பின்னாளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்முக்கியத் தலைவர்) அவசரநிலை அறிவிக்கப்பட்டதுமே கைது செய்யப்பட்டார். மற்றொரு மாணவர் தலைவர் பிரபீர் புர்காயஸ்தாவும் சிறைக்குச் சென்றார்.விடுதிகளில் சோதனை நடத்தி அச்சுறுத்தியது போலீஸ். ஆனால் “அசோகா” என்றுஅன்போடு அழைக்கப்பட்ட அசோகலதா என்ற இரும்பு நெஞ்சம் கொண்ட இளம்பெண்ணின் தலைமையில் மாணவர்கள் தலைநிமிர்ந்து நின்றனர்.
அவர்களில் ஒருவர்தான் சீத்தாராம் யெச்சூரி. அவசரநிலைக்குப் பின் நடந்த முதல் தேர்தலில் மாணவர் பேரவைத் தலைவரானார். 1977 செப்டம்பரில் இந்திரா காந்தியின் இல்லம் நோக்கி மாணவர் பேரணிக்குத் தலைமை தாங்கினார்.போராட்டக்காரர்களைக் காண இந்திரா வெளியே வந்தார். அவர் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றகோரிக்கையை, இந்திரா கைகட்டி நின்று கேட்க, சீத்தாராம் உரக்க வாசித்தார்.அந்தக் காட்சியைப் பதிவு செய்தபுகைப்படம் இன்றும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அந்த மாணவர்தான்பின்னாளில் கட்சியின் பொதுச்செயலாளராக உயர்ந்த மறைந்த சீத்தாராம் யெச்சூரி.
மேடையேறிய “அவுரத்”
1979-ல் உழைக்கும் பெண்களைத் தொழிற்சங்கங்களுக்குள் பெருமளவில் கொண்டுவர, சிஐடியு தனி ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்தது. இந்தமுன்னெடுப்பின் நாயகர் பி.டி. ரணதிவே. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுகூடுங்கள் என்று மார்க்ஸ் சொன்னபோது, அவர் ஆண் தொழிலாளர்களை மட்டும் குறிப்பிடவில்லை” என்றார் அவர். பணியிடப் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரானமுழக்கம் முதன்முறையாகக் கோரிக்கைப் பட்டியலில் இடம்பெற்றது; தொழிற்சங்கப் பணி புதிய பரிமாணம் பெற்றது.மாநாட்டுக்கான தயாரிப்புகள் நடந்தபோது, ஜன நாட்டிய மன்ச் (ஜனம்) நாடகக்குழுவின் இளம் கலைஞர் சப்தர் ஹஷ்மி பிருந்தாவைத் தேடி வந்தார். உழைக்கும் பெண்கள் குறித்து ஒரு நாடகம் நடத்தலாம் என்றார். முதலாளித்துவமும் ஆணாதிக்கமும் இணைந்து தொழிலாளி வர்க்கப் பெண்களை எப்படி நசுக்குகின்றன என்று நீண்ட நேரம் பேசினர். கல்வி,வரதட்சணை எனப் புதிய கோணங்களை சப்தர் தொட்டார். அப்படிப் பிறந்ததுதான் “அவுரத்” (பெண்). இருபத்தைந்து நிமிடநாடகம். ஒரு பெண் குழந்தையாக, படித்தநடுத்தர வர்க்கப் பெண்ணாக, தொழிலாளியாகச் சந்திக்கும் ஒடுக்குமுறைகளை அது உயிரோட்டமாகச் சித்தரித்தது. நாயகியாக நடித்த மலயஸ்ரீ ராயின் நடிப்பு பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தது. அதே ஆண்டு அவரும் சப்தரும்மணம் புரிந்தனர். 1979 மார்ச்சில் வடதில்லி ரூப் நகரில் நடந்த உழைக்கும் மகளிர் மாநாட்டில்தான் இந்திய வீதி நாடக வரலாற்றின் அந்த மைல்கல் முதன்முதலில்அரங்கேறியது.
பத்தாண்டுகளுக்குப் பின், 1989 ஜனவரி 1 அன்று, சாஹிபாபாத் அருகே ஜந்தாபூரில் சிஐடியுவுக்காக நாடகம் நடத்திக்கொண்டிருந்தபோது காங்கிரஸ் குண்டர்களால் சப்தர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவர் விதைத்த கலைஇன்றும் வீதிகளில் முழங்குகிறது.
தியாகத்தின் மறுபெயர்
ஒரு கம்யூனிஸ்ட் குடும்பத்தில் பிறப்பதோ, தன் குடும்பத்தினரை இயக்கத்துக்குள் கொண்டுவருவதோ கம்யூனிஸ்டுகளுக்குப் பெருமைக்குரியது. ஆனால் அது ஆளும் வர்க்கக் கட்சிகளின் வாரிசுஅரசியல் அல்ல. குடும்ப அரசியல் குறித்துநரேந்திர மோடி போன்றோர் பேசும்போது, அவர்கள் தங்களைப் போன்றகட்சிகளைப்பற்றியே பேசுகிறார்கள் என்பதை நினைவூட்ட வேண்டும் என்கிறார் பிருந்தா. இந்த இயக்கத்தில் கம்யூனிஸ்ட் குடும்பம்என்பதன் பொருள் – தியாகம், மேலும்தியாகம்.1982 முதல் 1985 வரை பிரகாஷ், கட்சியின் தில்லி மாநிலச் செயலாளராக இருந்தார். அப்போதும் பிருந்தாவின்கருத்துகளும் செயல்பாடுகளும் கணவரின் நிழலில் பார்க்கப்படவில்லை. தொழிற்சங்கம், பகுதிக் குழு, மகளிர் அமைப்புஎனத் தனக்கென ஒரு தனிக் களத்தில் சுதந்திரமாகப் பணியாற்றினார். ஆனால்ஒரு பெண்ணாக, செய்யும் வேலைக்குஅங்கீகாரம் பெறுவது கடினம் என்ற உண்மையை அவர் மறைக்கவில்லை.
அணையாத அந்த விளக்கு
பின்னாளில் பிரகாஷ் காரத் கட்சியின் பொதுச்செயலாளராகப் பத்தாண்டுகள் இயக்கத்தை வழிநடத்தினார். பிருந்தா காரத் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளராக, மாநி
லங்களவை உறுப்பினராக, கட்சியின் அரசியல் தலைமைக்குழுவின் முதல் பெண் உறுப்பினராக உயர்ந்தார். தலை
மறைவு, மாற்றுப் பெயர்கள், போலீஸ் கண்காணிப்பு, தனிப்பட்ட இழப்புகள் – எதுவும் அந்த இணையரின் இலட்சியப்
பயணத்தைத் தடுத்து நிறுத்திவிடவில்லை.இன்று ஜனநாயகக் குடியரசின் எந்தத் தூண் எப்போது தாக்கப்படுமோ என்ற அச்சம் சூழ்ந்த காலத்தில், பிருந்தாவின் அறைகூவல் தெளிவானது: நாம் எங்கிருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தா
லும், இதற்கு எதிராக நிற்க வேண்டும். இந்தியாவை, ஜனநாயகத்தை, சமத்து
வத்தை, அரசியல் சாசனத்தைக் காக்கும் போராட்டம் வலுப்பெறட்டும்! வர்க்கச்சுரண்டலுக்கும் பாலின ஒடுக்குமுறைக்கும் எதிராக, சாதி ஒழிப்புக்காக நடக்கும் போராட்டம் வலுப்பெறட்டும்!புரட்சி நாளில் மாலை மாற்றிக்கொண்ட அந்த இரு இளம்போராளிகளின் உறுதிமொழிக்கு இந்த நவம்பர் 7 அன்று 51 ஆண்டுகள். அன்று எரியத் துவங்கிய அந்த விளக்கு இன்னும் பிரகாசமாக எரிகிறது!(பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள பிருந்தா காரத்தின் சுயசரிதை நூலை அடிப்படையாகக் கொண்டது)
நன்றிதீக்கதிர். 08-11-2026


Leave a Reply